- ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை
- ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில்
- ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’
- ஊர்வசி காதலில் கண்விழித்தாள்!
- ‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
- இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம்
- அதிர்ஷ்டம் வாய்ந்த சுவர்க்கத்தின் துரதிர்ஷ்டம்!
- தனிமையின் பிடியில் புரூரவஸ்
- புரூரவஸ் செய்த பாவம் – அழகு, காதல்
- மாறாத பேரானந்தம்
- 5. இரவுநேர யாத்திரிகன்
- 4. தெய்வீகப் பணியாளன்
- 3. சரணடைதல்
- நீ இவ்வாறு இருப்பதனால் / ஏனெனில் நீவிர்
- பிறப்பு எனும் அதிசயம்
- 8. கிருஷ்ணா
ஸ்ரீ அரவிந்தரின் ‘Spiritual Sonnets’ எனும் எட்டுக்கவிதைகளில் இது எட்டாவதாகும்.
ஒருவழியாக இந்தக் கொடூரமான இனிய பிரபஞ்சத்தில்
ஆத்மாவின் பிறப்பின் காரணத்தை அறிந்து கொண்டேன்.
பூமியின் தணியாத வேட்கைகொண்ட இதயத்தை அறிந்த நான் அவள்
சுவர்க்கத்தையும் கடந்து
கிருஷ்ணனின் பாதங்களை விழைவதனை அறிவேன்.
அழிவற்ற அக்கண்களின் அழகை நான் கண்டுள்ளேன்.
காதலனின் ஆவல் பொங்கித் ததும்பும் குழலோசையையும் கேட்டுள்ளேன்
இறப்பற்ற பரவசத்தின் வியப்பையும் துயரத்தையும்
எப்போதுமே பேசாமல் இருக்கும் என் இதயத்தில் உணர்ந்தேன்.
அந்த இசை பக்கத்தில் நெருங்கி நெருங்கி வருகிறது.
வினோதமான ஆனந்த உணர்ச்சியால் வாழ்க்கை நடுக்குறுகிறது.
தலைவனின் தொடுதலையும் அணைப்பையும் எதிர்நோக்கி
இயற்கையனைத்துமே பரந்த வசீகரிக்கும் தயக்கத்தில் …
இந்தப் பொழுதிற்காகவே கடந்த காலங்கள் வாழ்ந்திருந்தன
இறுதியாக என்னில் நிறைந்து இவ்வுலகம் துடிக்கின்றது.

கிருஷ்ணன், அவனைப் பற்றிப் பாடாத இந்தியக் கவிஞனில்லை; வியக்காத மனிதனில்லை; ஸ்ரீ அரவிந்தரும் இந்த உலகமே அடையத்துடிக்கும், சொந்தம் கொண்டாடும் அந்த ஒருவனைத் தம் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். இந்த உலகினில் பிறப்பெடுத்ததே அந்தக் கிருஷ்ணனைக் கொண்டாட, அடைய என்கிறார். கிருஷ்ணனின் குழலோசை, சிலருக்கு எல்லையற்ற ஆனந்தத்தையும், மிகையான தாபத்தையும் உண்டுபண்ணுகிறது. அவனுக்காகவே அனைத்தும் நடத்தப்படுகிறது. அனைவரும் உயிர்வாழ்கிறோம். அவனைத் தேடித் தேடி அலைகிறோம். இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தாம் எழுதிய அருமையான நூல் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’வில் கூறுவார்: கோகுலத்து மக்கள் சுவையற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தனர்: மாடுகளைப் பராமரித்தல், மேய்த்தல், பால் கறத்தல், தயிர், வெண்ணை முதலியனவற்றை விற்றல் எனச் சக்கரச் சுழற்சியான வாழ்க்கை; இந்த வாழ்க்கையில் சுவையை, ரஸனையை, களிப்பை, எதிர்பார்ப்பைக் கொண்டுவந்தது கிருஷ்ணனின் வரவு என்பார். எத்தனை உண்மை.
முதலில் எம். பி. பண்டிட் கூறுவதனைப் பார்ப்போம். பின் அழகானதொரு நூலிலிருந்து அதை இயற்றிய கவிஞரின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சுவர்க்கத்தையும் கடந்து கிருஷ்ணனின் பாதங்களை விழைவது
‘சுவர்க்கத்தின் வசீகரிப்பு என்பது உலகில் நாம் உணரக்கூடிய இன்பநுகர்வுகளுக்கு இணையானது எனலாம். விண்ணுலகின் கவர்ச்சிகள் பெரிதாகவும் வெளிப்படையாகவும் நம்மை எவ்வாறு கட்டிப்போடுகின்றன என நாமறிய முடிவதில்லை. ஆனாலும் கூட அவை சிறு தளைகளை ஏற்படுத்தி, சிறிய ‘முன்வினைப் பயன்’ ஒன்று நம்மை நமது பயணத்தின் இறுதி இலக்கை அடையவிடாமல் தடுக்கிறது. ஏனெனில், அலுப்பூட்டும் உலக இன்பங்களுக்கும், வலிகளுக்கும் பின்னால், சுவர்க்கத்தின் வெறியூட்டுகிற கிளர்ச்சிகளின் பின்னால், உலகங்களின் பெரிய கடவுள் தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான். அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் அவனது அடிகளிலிருந்து ‘இருப்பி’ன் உவகையான தாரைகள் ஊற்றெடுக்கின்றன. அங்கு உன் உள்ளம் நிறைகின்றது, அங்கு இந்த பூமி உனது ஆனந்தப் பரவசத்தை நிறைவு செய்கிறது,’ என்கிறார் எம். பி. பண்டிட்.
வினோதமான ஆனந்த உணர்ச்சியால் வாழ்க்கை நடுக்குறுகிறது.
‘உலகாயதமான வாழ்க்கை தரும் நடுக்கங்கள் பொறுக்க இயலாதவை. அவை பயத்தில் நிலைகொண்டு நம்மைக் கலக்கமுறச் செய்து, உறுதியைக் குலைக்கின்றன. நமது சிறிய ஊரான விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், மறுதலித்தல்கள் ஆகியன திரும்பத் திரும்ப அச்சுறுத்தப் படுகின்றன; நாமும் நடுங்குகிறோம்.
ஆனால் வித்தியாசமான நடுக்கம் ஒன்றுண்டு – கடவுள்கள் நம் அருகினில் வரும்போது. அவர்களுடைய விரைவான குதிரைகளின் (நமது கற்பனை) பாய்ச்சல் நம்மிடம் அவர்களின் தொலைதூர சக்தியையும், ஆனந்தத்தையும் நிரப்புகின்றன. நமது கலக்கமுற்ற நிலை இந்தப் புதிய நிலைக்கு நம்மை நிலைப்படுத்திக்கொள்ளத் தவிக்கிறது. நமது மனமும் உள்ளமும் முன்னம் அறியாத தெய்வீகக் களிப்பில் துள்ளுகின்றன.
இப்போது வாழ்க்கை உயரிய வாழ்க்கையை அடையத் தயாராகின்றது.’ எம். பி. பண்டிட்.
இந்தப் பொழுதிற்காகவே கடந்த காலங்கள் வாழ்ந்திருந்தன
‘வாழ்க்கை என்பது ஒழுங்குமுறைக்குட்பட்டது. ஒவ்வெரு நடப்புக்கும், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு பொருள் உண்டு, நம்மால் அதனை அறிந்து அவ்வவற்றுடன் பொருத்திப் பார்க்க முடிந்தால். ஆன்மாவிற்கும் குறிக்கோள் உண்டு, ஆகவே அனைத்தும் இணைந்து அதனை நிறைவு செய்யும். திசை மாற்றங்களும் தோல்விகளும் கூட அவற்றின் வழியில் இந்த முடிவிற்கு நம்மைச் செலுத்தும். பூர்த்தியாகும் தருணம் நெருங்கும் தறுவாயில் எவ்வாறு கடந்தகாலத்தின் நிகழ்வுகள் அனைத்தும் இந்த ஆசிர்வதிக்கப்பட்ட தருணத்திற்கு வழிவகுத்துள்ளன என்பதனைக் காணை இயலும்.’ எம். பி. பண்டிட்.
கிருஷ்ணன் எனும் அன்பனின் தொடுதலுக்காக வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது அதாவது ஒவ்வொரு பிறவியும் காத்துக் கொண்டிருக்கிறது. அவனது இசையோ அல்லது குறும்பு விளையாட்டோ, அவனைப் பற்றிய பாடலோ, கதையோ, ஏதாவது ஒன்று நம்மைத் தொட்டுச் சென்றிருக்கும் அல்லவா?அதுவே போதும் அவனை அறிய, உணர, உரிமை கொள்ள அல்லது அவனுக்கு உடமையாக. இதனைத்தான் நாம் அத்தனை அடியார்களின் வாழ்விலும் கண்டிருக்கிறோம்.
ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் எனும் நூலை இயற்றிய லீலா சுகர் எனும் பில்வமங்களர் இளமையில் சிந்தாமணி எனும் மங்கையிடம் ஆழ்ந்த காதல் வசப்பட்டிருந்தார். அவள் அவரிடம் “நீர் இலக்கியம், இலக்கணம் அனைத்திலும் மிகத் தேர்ச்சி பெற்றவர். ஆனால் என்னிடம் வைத்துள்ள பிரேமையில் ஆயிரத்திலொரு பங்கு அந்தக் கிருஷ்ணனிடம் வைத்தால் கூடப் போதுமே! உம் வாழ்க்கையின் பொருளை உணர்ந்து பலனை அடைய,’ என்கிறாள். அப்போது மனம் மாறியவர்தான் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தை எழுதுகிறார். மிக மிக அழகான ஸ்லோகங்கள் சிலவற்றைக்கூறி இத்தொடரை நிறைவு செய்கிறேன்.
குழந்தை கிருஷ்ணன் ஆயர்பாடியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான் (அவ்வாறு அன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள்). பக்கத்தில் அன்னை யசோதையும் சிறிது கண்ணயர்ந்திருக்கிறாள்.
திடீரென்று கிருஷ்ணன் யாரையெல்லாமோ தடபுடலாக வரவேற்கிறான். பெரிய மஹாராஜா போன்று குழந்தையான அவன் உபசரிப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
“சம்புவே! வருக, வருக! தங்கள் வரவு நல்வரவாகட்டும்; இங்கே வந்து உட்காருங்கள். பிரம்மாவே, வாருங்கள், இப்படி என் இடது பக்கத்தில் உட்காரலாமே! கிரவுஞ்ச மலையை அழித்தவனே (சுப்ரமண்யனே) சௌக்கியமா? தேவேந்திரனே, உம்மைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டனவே,” எனத் தூக்கத்தில் – ஆம், உறக்கத்தில் தான் கிருஷ்ணன் பேசுகிறானாம். இதைக் கேட்ட யசோதை, “குழந்தாய்! தூக்கத்தில் என்ன பிதற்றிக் கொண்டிருக்கிறாய்? உஷ்! பேசாமல் தூங்கு,” என்று அதட்டுகிறாளாம். ‘இந்த அதட்டல் நம்மைக் காக்கட்டும்,’ என்கிறார் லீலா சுகர்.
சம்போ ஸ்வாகத-மாஸ்யதாமித
இதோ வாமேன பத்மாஸன
க்ரௌஞ்சாரே குசலம் சுகம் ஸுரபதே
வித்தேச நோ த்ருச்யஸே
இத்தம் ஸ்வப்னகதஸ்ய கைடப-
ஜித: ச்ருத்வா யசோதா கிர:
கிம் கிம் பாலக ஜல்பசஸீதி ரசிதம்
தூதூக்ருதம் பாது ந: (2.58)
‘சம்புவே வந்திங்கே அமருக மலரயனே
இடப்பக்கம் அமருகவே
வெம்பொறை வென்றவேலா நன்றோநீ கண்டு
நாளயிற் றன்றோ
அமரர்கோ வே’யெனக் கனவிலே கண்ணன்
கூறக்கேட்டா ளசோதை
‘இமைமூடிக் கண்வளராய் பிதற்றாதே
குழந்தாய்’ என்பாள்.
இந்த அதட்டல் நம்மைக் காக்கட்டும- சிறிது சிந்தித்தால் விளங்கும். தாய் குழந்தையை அதட்டுகிறாள். தன் தூக்கம் கலைந்ததாலா? அவன் விழித்துக் கொண்டு பேசுவதாலா? இல்லவே இல்லை. அவளுடைய சிந்தனை முழுவதும் தன் குழந்தை நன்கு உறங்க வேண்டுமென்பதே. அதற்கான இடையூறு எங்கிருந்து வந்தாலும், அவனே செய்து கொண்டாலும் அதனைக் கண்டிக்கும் உரிமை அவளுக்கு உண்டு. அந்தப் பிரபஞ்சத் தாயன்புதான் அனைவரையும் காப்பது. அது கிருஷ்ணனுக்காக எழுந்தது. அனைவருக்கும் பொதுவானது.
——————————————–
தெருவில் காணும் காட்சி காண்பவரை மெய்மறக்க வைக்கின்றது. இடைப்பெண் ஒருத்தி இடை ஒசியத் தெருவில் தயிர், பால் இவற்றைக் கூடையில் நிரப்பிக் கொண்டு விற்கச் செல்கின்றாள். வியாபாரத்தில் கருத்தில்லை – அவளுடைய எண்ணம் எல்லாம் அந்த மாதவனின், மணிவண்ணனின், கிருஷ்ணனின் திருவடிகளில் பதிந்து இருக்கிறது. நேற்று அவளுடைய குடிலில் புகுந்து கோபாலன் தயிர் வெண்ணை திருடித் தின்றானாம். அந்த நினைப்பில், தயிரோ தயிர், தயிர் வாங்கலையோ? பால், வெண்ணெய் வேணுமோ? என்று கூவ மறந்து, கோவிந்தா, தாமோதரா, மாதவா, எனக் கூவுகிறாளாம்.
விக்ரேது-காமா கில கோபகன்யா
முராரி-பாதார்ப்பித-சித்தவ்ருத்தி:
தத்யாதிகம் மோஹவசா-தவோசத்-
கோவிந்த தாமோதர மாதவேதி (2.55)
கண்ணன் திருவடியில்தன் கருத்தினைத் தானிருத்தி
வெண்ணெய் பாலெனவே விற்கநினைப் பின்றியிடைப்
பெண்ணொருத்தி மாதவாதா மோதராகோ விந்தாவெனக்கூவி
கண்ணனையே விலைபேசி விற்பாள்போல் அலைகின்றாள்.
நமது காரியங்கள் அனைத்துமே சில தருணங்களில் அந்தப் பரமாத்மாவோடு இணையும் செய்கையின் வசப்பட்டு, அது தொடர்பான நிகழ்ச்சிகளைச் செய்வதாக அமைகின்றன.
சமீபத்தில் அழகான பாடல் ஒன்றினை கிருஷ்ணனைப் பற்றிய நூலின் தொடர்பாகக் கேட்க நேர்ந்தது. பல நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தேன். இங்கும் அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன். இதைவிட நுட்பமாக, அவனப்பற்றி, அவனுடைய சர்வ வியாபகம் பற்றி யாராலும் கூற முடியுமா என்று தெரியவில்லை. ஸ்ரீ அரவிந்தரின் ‘sonnet’ ன் தமிழ்க்கவிதை வடிவம், இசை வடிவம் என இதனை எண்ணுகிறேன்.
எங்கே துவங்கி எதிலோ முடிவதாக நாம் எண்ணும் பலவும் ஒன்றோடொன்று அழகாகப் பிணைந்தவை. இவையே நம்முடைய வாழ்க்கைத் தேடலில் சுவையூட்டி வருகின்றன. சிறிது தெரிந்தும், பெரிது தெரியாமலும் நாம் அந்த ‘அவனை’, ‘அதனை’த் தேடித்தான் வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இது சிந்திப்பதற்குரியது.
(நிறைந்தது)
பார்வை நூல்கள்;
1. இறப்பற்ற ரோஜா- எம். பி. பண்டிட்
2. கிருஷ்ணா கிருஷ்ணா- இந்திரா பார்த்தசாரதி
3. ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்- லீலாசுகர் [எ] பில்வமங்களர்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
