மிளகு  அத்தியாயம் முப்பது  

1600 ஹொன்னாவர்

ஹொன்னாவர் நகரத்தின் பிரதானமான ரதவீதியில் கொடிக்கம்ப மேடைக்கு அடுத்து உயர்ந்து நிற்பது போர்த்துகீசு அரசப் பிரதிநிதி திருவாளார் இம்மானுவல் பெத்ரோவின் மாளிகை. 

மாளிகைக்கு மேற்கிலோ சமண சத்சங்கம் என்ற சகலரும் வந்திருந்து இறைவன் புகழும் தீர்த்தங்கரர்களின் உன்னதமும் பாடிப் பரவி நற்கதி தேடும் புனிதமான கூடம்.

பெத்ரோவின் மாளிகைக்குக் கிழக்கே நெருக்கமாக  அடுத்த கட்டிடம்   புதிதாகத் தொடங்கியுள்ள மிட்டாய் அங்காடி. ரோகிணி ஜெர்ஸோப்பாவில் நடத்தும் பிரபலமான மிட்டாய் அங்காடி ஹொன்னாவரில் கிளை பரப்பிய இடம் என்று தினசரி வாங்கிப் போகிறவர்கள் சொல்கிறார்கள்.   இனிப்பு வகைகள் ஜெர்ஸோப்பாவில் இருந்து தினம் நீளமான வேகன்  வண்டிகளில் கொண்டு வரப்பட்டு சிறப்பு அடுப்புகளில் சற்று சூடாக்கப்பட்டு புத்தம்புதிதாக விற்கப்படுவதை அங்கே வாங்கிப் போகிறவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். 

அதற்குக் கிழக்கே இரண்டு சிறு தோட்டங்கள் கடந்து வீரப்பா ஷெட்டியாரின் மூன்றடுக்கு மாளிகை. அவர் மொத்தமாகக் கொள்முதல் செய்து அரிசி இதர தானியங்கள் விற்பனை செய்கிறவர்.

 மிட்டாய் அங்காடிக்கு இன்னும் கிழக்கே உள்ள கட்டிடம் அரசப் பிரதானி நஞ்சுண்டய்யாவின்  இரண்டு அடுக்கு மாளிகை. எப்போதும் யாராவது சிவபெருமானின் பெருமைகளை கைத்தாளம் வாசித்துப் பாடிக் கொண்டே இருக்கும் அந்த இல்லத்தில் அதிகாலை, பகல், மாலை நேரங்களில் யாசகர்களுக்கு அவர்கள் குரல் விட்டு யாசிக்காமலேயே சோறும் குழம்பும் கறி அல்லது அப்பளமும் தானம் செய்யப்படுவதால் அந்த வீட்டுக்கு வெளியிலும் மாலை மறையும் வரை கூட்டம் நிறைந்திருப்பதைக் காணலாம். அப்புறம்   உணவு தானம் செய்யக் கூடாது என்று வழிவழியாக வந்த நடப்பு. 

மேற்கில் சமணப் பள்ளிக்கு அடுத்துப்   பழைய சிதிலமான சமணவசதிக் கட்டிடங்கள் இரண்டு நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அதற்கும் மேற்கில் தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பும், நடுவில் பெரிய துரவுக் கிணறும், தொடர்ந்து வேப்ப மரங்களும், மலை வேம்பு, அசோகம், வாதுமை, ஒதியன் ஆகியவை செழித்து வளர்ந்த தோட்டமும் தெருக்கோடி வரை நீள்கின்றது.

மாலை நேரத்தில் ரதவீதி முழுக்க தண்ணீரை வெட்டிவேர் ஊற வைத்துச் சேர்த்து தூசி அடங்க பணியாளர்கள் விசிறி அடித்துப் போய்க் கொண்டிருந்த போது நேமிநாதனின் இரட்டைக் குதிரை வண்டி ரதவீதியில் நுழைந்தது.

  சிதிலமான சமணக் கட்டிடத்தின் முன் நின்ற சாரட்டிலிருந்து யாரும் இறங்கவில்லை. அடுத்த கட்டிடமான சமண சத்சங்கம் வாசலில் நின்ற நாலைந்து பேர் இளவரசர், இளவரசர் என்று பரபரப்பாகச் சத்தம்போட்டபடி தெருவில் போகிறவர்களின் கவனத்தை ஈர்க்க முனைந்தது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. 

அந்த வீதியில் அழகான பெண்கள் நடந்து போனால் மட்டுமே தலைகள் உயரும். பேரழகியர் பல்லக்கில் போனால் ஒரு நிமிடம் செயல் மறந்து, மெய் மறந்து எல்லோரும் பார்ப்பார்கள். அதி சிறப்பான தெய்வீக ஆரணங்குகள் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சூரிய பகவான் போல் கிழக்கிலிருந்து மேற்கே போனால் சாரட்டுக்குப் பின்னே சகல வயதினரும் உன்மத்தம் கொண்டு ஊர்ந்திருக்கலாம். 

ஆனால் நேமிநாதன், அரசியின் வளர்ப்பு மகன், அரசாங்கப் பொறுப்பு எதுவும் இதுவரை அளிக்கப்படாத இளைஞன் ஜெருஸுப்பாவில் கடைவீதி பவனி வந்தாலும், ஹொன்னாவர் ரதவீதியில் சாரட் ஏறி கம்பீரமாக வந்தாலும், இருந்தாலும், சென்றாலும் யாருக்கும் தெரியப் போவதில்லை. 

சத்சங்கத்தின் படியேறி உள்ளே போனான் நேமிநாதன். அங்கே சங்க நாமாவளி இசைக்க அனுசரணையாக டோலக் வாசித்துக் கொண்டிருந்த அடியான்  நொடிக்கொரு தரம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தது நேமிநாதனை எதிர்பார்த்துத்தான்.   அவன் நேமிநாதன் வருவதைப் பார்த்து தேகம் மகிழ்ச்சியில் திளைக்க எழுந்து நின்றான். 

நேமிநாதன் அவனிடமிருந்து டோலக்கை வாங்கி பாட்டுக்கு உறவு இல்லாமல் அவனது தாள சேவையாக ஐந்து நிமிடம் வாசித்து தீர்த்தங்கரம் பஜதே என்று உரக்கச் சொல்லி மறுபடி தன் சகபாடிக்கு டோலக்கைக் கொடுத்து வாசலுக்குப் போனான். போகும்போது பெரியவர்கள் அனைவரையும் கை கூப்பித் தொழுதபடி நடந்தான்.

”பக்தி பெருகிடுத்து போலே இருக்கு”. ஒரு பெரியவர் முணுமுணுத்தார் அடுத்து இருந்தவரிடம். நேமிநாதன் அவர்களைக் கடந்து வாசலுக்குப் போயிருந்தான் அப்போது. 

”பக்தியாவது ஒண்ணாவது. இனிப்பு திங்க வந்திருக்கான்.     ஜெர்ஸோப்பா-லேருந்து சூடா நடந்து வருதாம்” என்றார் இன்னொருத்தர் அடுத்த இரண்டு வரிசை   கவனம் சிதற. 

நேமிநாதன் தெருவின் பரபரப்பை வேடிக்கை பார்த்து கூட்டத்தோடு கூட்டமாக நடந்தபடி சட்டென்று பெத்ரோவின் மாளிகைக்குள் நுழைந்துவிட்டான்.

பெத்ரோ நேமிநாதனின் வருகையை எதிர்பார்த்திருந்தாலும், அந்த வரவில் பெரிதாக ஏதும் மகிழ்ச்சி அடைந்திருக்கவில்லை என்று முகத்தில் வலிய வந்து ஏறியமர்ந்த புன்சிரிப்பு சொன்னது. 

“வீட்டு மாடிக்குப் போய்க் காற்று வாங்கியபடி பேசலாமா? காற்று இங்கே குறைவு என்பதால் மூக்கடைப்பும், உடல் வலியும் இங்கே என்னைப் பாடாகப் படுத்துகிறது ராஜகுமாரரே. எப்போதும் படுத்துக் கிடக்கத் தோன்றும் அலுப்பு” என்றும் கூட்டிச் சேர்த்தார் பெட்ரோ. 

“நீங்கள் ஓய்வெடுங்கள் சென்ஹார் பெத்ரோ”. நேமிநாதன் அவசரமாகச் சொன்னான். ”ஒன்றும் அவசரமில்லை”. 

“ராஜகுமாரரே. உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும் என்று சொல்லுங்கள். இயன்றால் அதை உடனே முடித்துத் தருகிறேன்” என்றார் பெத்ரோ. அவர்கள் படியேறி வீட்டு மாடிக்கு வந்தார்கள்.

”அருமையான கடல்காற்று. உடம்பில் என்ன நோய் கண்டாலும் அது இந்தக் காற்றை சுவாசித்தால் காணாமல் ஓடியே போய்விடும்” என்றான் உற்சாகமாக நேமிநாதன். 

“சொல்லுங்கள் பிரபு அவர்களே, என்ன செய்யணும் நான்?” என்று மறுபடி கேட்டார் பெத்ரோ.

”வேறு ஒன்றுமில்லை இந்த உங்கள் வீட்டு மாடியில் இரண்டு விசாலமான அறைகள்  இருப்பதைப் பார்க்கிறேன். இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவ்வப்போது இங்கே வந்திருந்து கடல்காற்று வாங்கி மனதுக்குப் பிடித்த வைத்திய சாஸ்திர ஏடுகளை ஆராய விரும்புகிறேன். நான் பைத்தியநாத் அரச வைத்தியரிடம் வைத்திய சாஸ்திரம் பயில்வது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம் சென்ஹோர் பெத்ரோ. இரண்டு வீடு கடந்து பிரதானி நஞ்சுண்டையாவோடு சேர்ந்து இந்தியக் கவிதைகளை போர்த்துகீசிய மொழியாக்கம் செய்யவும் செயல்படுகிறேன். எல்லாவற்றையும் கவனிக்க, இந்த இரண்டில் ஒரு மாடி அறையை எனக்கு தற்காலிகமாக கொடுத்து விடக் கோருகிறேன். மாதம் நூறு வராகன் குடக்கூலி தருவேன். அதற்கு மேல் தேவை என்றாலும் தருவேன்”.  

பெத்ரோ ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். கஸாண்ட்ரா இரண்டு கண்ணாடிப் பாத்திரங்களில் குளிர்பானம் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனாள். அவள் அருகில் வரும்வரை கஸாண்ட்ராவின் திடமான மார்பு குதித்து வந்ததையும் உருண்ட தோள்களின் திடத்தையும்  ரசித்திருந்தான் நேமிநாதன்.  

”இது என்ன?” கண்ணாடி தம்ளர்களில் வந்த பானத்தைச் சுட்டிக் கேட்டான் சுட்டி  கஸாண்ட்ராவிடம் கேட்டான். கஸாண்ட்ராவின் மாரிடத்துக்கு அருகே இருந்த அவன் முழங்கையை சற்றே அவளை நோக்கி நீட்டியபடி கேட்டான் அவன். 

”மகாபிரபோ  இது போர்ச்சுகல் காக்டெயில் பானம். எலுமிச்சையும், இஞ்சிச் சாறும், கொடிமுந்திரிச் சாறும், சேர்ந்து பதப்படுத்தப்படாத சர்க்கரை அளவாகக் கலந்து தயார்செய்த குளிர்பானம். குளிரூட்ட பனிக்கட்டி மரச் செப்பு வைத்திருக்கிறது”. 

மிக அருமை என்று பாராட்டினான் நேமிநாதன். அவனை விழுங்குவது போல் பார்த்தபடி கஸாண்ட்ரா  திரும்பப் போனாள். அவளது பிருஷ்டம் குலுங்கி, இடுப்பு துடுப்பிட்டுப் போவதை, வாசலுக்கு அவள் போகும்வரை பார்த்தபடி இருந்தான் நேமிநாதன். பெத்ரோ முகத்தில் இதை அவர் ரசிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிந்தது. 

பத்து நிமிஷம் வந்திருக்கும்போதே பெத்ரோவின் காமக் கிழத்தியை உடுப்பு உரித்து நிற்பதுபோல் பார்த்திருக்கிறானே இவன், நாளைக்கு கேட்டபடி ஒரு அறை கொடுத்தால் கஸாண்ட்ராவை அங்கே அனுப்பச் சொல்வான். ராத்திரி வந்தால் கஸாண்ட்ரா அறைக்குப் போவதோடு கையில் உயர்த்திப் பிடித்துக் கொள்ள விளக்கோடு வாரும் என்று பெத்ரோவையும் வற்புறுத்துவான். வேலியில் போகிற இன்னொரு ஓணான். கழித்துக் கட்டி விட வேண்டியதுதான். 

”பெருமதிப்புக்குரிய ராஜகுமாரரே, உங்களுக்கு இல்லாமல் வேறே யாருக்குத் தரப் போகிறேன். என் வீடு முழுவதையும் கூட உங்களுக்கு வசதிப்படும் போது வந்திருந்து போக, சமையலறை தவிர்த்துக் கொடுக்க விருப்பம் தான்” என்றார். சமையலறை கஸாண்ட்ரா சாம்ராஜ்யம். படுக்கை அறையை நாகரிகம் கருதிச் சொல்லத் தவிர்த்தார். 

என்றாலும் ராஜகுமாரனுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். சந்தோஷம் என்றான் ராஜபுத்திரன். 

’இதோ வந்துட்டேனப்பா. நீ சந்தோஷப்படவா லிஸ்பனிலிருந்து ஒன்பதாயிரம் கடற்கல் கப்பலேறி வந்து ஆப்பிரிக்காவில் நன்னம்பிக்கை முனை கடந்து ஹொன்னாவரும், ஜெரஸுப்பாவும் தொட்டு ஷராவதி தீரத்தில் தங்கியிருக்கிறேன்’ என்றது அவர் மனம்.

தொண்டையைக் கனைத்துக்கொண்டு பெட்ரோ பேச ஆரம்பித்தார்.

”ஒரே ஒரு ஜாக்கிரதையான ஏற்பாடு நான் என் நலம் மற்றும் தங்கள் நலத்தைக் கருதிச் செய்ய வேண்டியுள்ளது. இந்த அறையோ அடுத்த அறையோ விஷயமே இல்லை. வெளிநாட்டுக்காரனான நான் உள்நாட்டில் ஏற்படுத்தும் பந்தம் எதுவும் மாட்சிமை பொருந்திய மகாராணியவர்களின் அரசாங்கத்துக்குத் தெரியாமல் ஏற்படுத்திக்கொள்ள முடியாது. எனவே நான் பேரரசி அவர்களை அடுத்த வாரம் தரிசிக்கும்போது உங்களுக்கு இந்த அல்லது அடுத்த அறையை விட்டுத்தர அனுமதி வாங்கிக் கொள்கிறேன். அதற்கு அப்புறம் அது உங்கள் அறைதான். குடக்கூலி கூட வேண்டாம்”. 

பெத்ரோ சற்றே கண்ணை மூடித் தன் வார்த்தைகளின் பாதிப்பை எதிர்பார்த்திருந்தார். நேமிநாதன் காய் நகர்த்தும் நேரம் இது.

நேமிநாதன் எதுவும் சொல்லவில்லை. ”சரி நான் புறப்படறேன்” என்று ஒரு முழு நிமிடம் கழித்துச் சொன்னான் அவன். 

எழுந்து இருக்கைக்கு அடுத்து நின்றபடி தொடர்ந்தான் – “இவ்வளவு அற்பமான விஷயத்துக்கு நீங்கள் மகாராணியின் அனுமதி வேண்டும் என்று எதிர்பார்ப்பது தங்களுக்கு மூன்று விதமான தவறான எண்ணங்கள் ஏற்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒன்று தாங்கள் அரசியவர்களை நினைக்கிற நேரத்தில் நினைக்கிற காரியத்துக்காக சென்று பார்த்து முடிக்கும் அளவு ஒரு உள்ளூர் பிரமுகர் என்று நினைக்கிறீர்கள். உங்களைப் பற்றி மகா பெரியதாக, போர்ச்சுகீஸியர்கள் தான் உலகில் சகல விதத்திலும் சிறந்தவர்கள், பாரததேசவாசிகள் அற்பப் பதர்கள் என்று நினைக்கிறீர்கள் போல இருக்கிறது. அடுத்து இன்னொரு மாபெரும் தவறு உங்கள் கண்ணோட்டத்தில் வந்து புகுந்திருக்கிறது. என்னை நீங்கள்  எந்த விதமான அதிகாரமும் இன்றோ நாளையோ ஏற்கனவே உள்ளதோ ஏதுமில்லாத வெற்று மனிதன் என்று நினைக்கிறீர்கள். ஒரு பெரிய நாட்டின் அரசி, உலகமே மிளகு வாங்க அவர் முன் மண்டியிட்டு நிற்கிறது, அந்த அரசி அடுத்து அரசு ஆளும் வாரிசு யாரென்று தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களையும் நிச்சயமான வாரிசுரிமை கொண்ட என்னையும் அவமதிக்கிறீர்கள். என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவமானம் இழைத்து விட்டீர்கள். ஒரு அரசர் உங்கள் இல்லத்துக்கு வந்தால் நீங்கள் செய்யக் கூடிய உச்ச பட்ச மரியாதை இதுதானா? உம் நெருக்கமான வேலைக்காரி குளிக்காமல் தலை சீவாமல், மூத்திரத்தை சீனி போட்டு கலந்து எடுத்து வந்தது போல் ஏதோ ஒரு பானத்தை எடுத்து வந்து எனக்குக் கௌரவம் செய்ய நீட்டி விட்டுப் போகிறாள். தூமை வாடை அவள் இடுப்புக்குக் கீழிருந்து எட்டூருக்கு அடிக்கிறது. உமக்கு வேணுமானால் அது லகரி ஏற்றுவதாக இருக்கலாம் நாங்கள் இந்துக்கள் சுத்தம் பார்க்கிறவர்கள். காலையும் மாலையும் குளித்து மடியாக சமணக் கோவிலும் சிவன், விஷ்ணு கோவில்களும் தரிசித்து வந்த பிறகே தண்ணீர் கூடக் குடிப்பவர்கள் என்னிடம் தெருப் பொறுக்கியோடு பேசுவது போல் உதாசீனம் செய்து பேசுகிறீர்கள். ஒன்றும் சரியில்லை உம் நடவடிக்கை”. 

நீளமாகப் பேசி நிறுத்தினான் நேமிநாதன். உணர்ச்சி மிகுந்து பேசும்போது கடைவாயில் வழிந்த எச்சிலை அப்படியே புறங்கையில் துடைத்துக் கொண்டவனாக சுற்றுமுற்றும் பார்க்க கஸாண்ட்ரா ஒரு வெள்ளைத் துவாலையை அவனிடம் நீட்டினாள். அவள் முகத்தில் வசீகரமான புன்னகை இருட்டும் ஒளியும் ஓடிப் பிடித்து விளையாடும் அந்திப் பொழுதில் தவழ்ந்தது. 

இரண்டு அடி நடந்து அலமாரியில் இருந்து மெழுகுவர்த்திகளை எடுத்து ஏற்றி சுவர் மேல் பதித்த மரப் பலகையில், கவழ்ந்துவிடாமல் பொருத்தி வைத்தாள். அவள் அருகே வெல்லத்தை மொய்க்கும் ஈ போல நகர்ந்தான் அவன். பெத்ரோ ஒரு நிமிடம் கண்மூடி இருட்டு இடைவிட்டுப் படிந்த ஒளியை  ரசித்தார்.

நேமிநாதன் புறங்கை துடைத்த துவாலையை கைதவறிக் கீழே போட்டான். அவனுக்கு முன் அதை கஸாண்ட்ரா குனிந்து எடுத்தாள். அவனும் குனிந்தான். இருவரும் இடித்துக் கொண்டார்கள். 

பெத்ரோ கண் திறந்து பார்க்கும்போது கஸாண்ட்ராவின் மார்பை ஒரு வினாடி கையாண்டு விடுவித்தான் நேமிநாதன். அவள் பெத்ரோவைப் பார்த்து சிரிக்க, நேமிநாதன் ”மன்னிக்க வேணும் நான் அவசரப்பட்டிருந்தால்” என்று உள்ளே வந்தான். 

”இந்த அறையை எனக்கு  குடக்கூலிக்குத் தர நீங்கள் ஏன் கோட்டையின் அனுமதி கேட்கிறீர்கள் என்று புரிகிறது. பாதுகாப்பு காரணங்கள் நிச்சயம் உண்டு. ஆகவே அப்படி மெனக்கெட வேண்டாம். நான் சமணவசதிப் பக்கம் இடிந்த புராதனக் கட்டிடத்தை வாங்கி எனக்கான மனையை நிர்மாணிக்க முயல்கிறேன். நன்றி. நீங்கள் என்றும் என் நண்பர்” என்றான் பெத்ரோவின் கரங்களை அன்போடு பிடித்தபடி. 

மறுபடி. விளக்குகளுக்கு நடுவே அவனுக்கு சர்பத் அளிக்க கஸாண்ட்ரா வந்து கொண்டிருந்தாள். அவள் கையிடுக்கில் பூசியிருந்த ஜவ்வாது வாடை அவளுக்கு முன்னால் வந்து சேர்ந்திருந்தது.

(தொடரும்)

Series Navigation<< மிளகு  அத்தியாயம் இருபத்தொன்பதுமிளகு  அத்தியாயம் முப்பத்தொன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.