- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
1999 லண்டன்
சாரதா தெரிசா தன் மகன் மருதுவோடு தங்கி இருக்க லண்டன் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிப் போனது. குளிர்காலம் அதிகக் குளிரோடு மெல்லக் கடந்து போகும் வருஷம் இது. நேற்றைக்கு சாயந்திரம் கூட பனிமனிதன் வந்திருந்தான்.
”அம்மா வெளியே பனி பெய்யுது. வாங்க, பொம்மை பண்ணலாம்”.
நேற்று மருது வாசலில் இருந்து மூச்சுத் திணறச் சொல்லியபடி குழந்தை மாதிரி ஓடி வந்தான். மலையாளத்தில் எழுத்தச்சன் எழுதிய அதியாத்ம ராமாயணத்தை எழுத்துக்கூட்டி மெல்லப் படித்தபடி உட்கார்ந்திருந்தாள் சாரதா. சாயந்திரம் கனமான இருளாக அப்பிக்கொள்ளப் போகிற சூசனைகள். இவ்வளவும் சாயந்திரம் ஐந்து மணி இருக்கக் கூடும். சுவர்க் கடிகாரத்தில் ஐந்து மணியே தான்.
”வாசலுக்கு வாங்க அம்மா, பனி விழறது நின்னு போயிடும். எடின்பரோ மாதிரி ராப்பூறா பனி பெய்யற ஊர் இல்லே லண்டன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?”
”நான் என்னத்தைப்பா கண்டேன்? பிறந்ததிலே இருந்து யார்க்ஷயர், அப்புறம் அம்பலப்புழை. கால்டர்டேல்லேயும் பனிப்பொழிவு அதிகம் தான்”.
அடுத்த வினாடி சாரதாவை இரண்டு கையாலும் இடுப்பில் பிடித்துத் தூக்கி, ஆடை விற்கும் அங்காடியில் மானேக்கின் mannequin பொம்மை போல சுமந்து கொண்டு சிரித்தபடி மாடிப்படி இறங்கினான் மருது. வாசலுக்கு முன்னால் சிறு வட்ட வடிவ ஓய்விடத்தில் சிமெண்ட் பெஞ்சில் பூத்தாற்போல் அமர்த்தினான் அவளை.
பெஞ்சில் விழுந்திருந்த பனியைக் கையால் குவித்து அதற்கு முகமும், உடம்பும் உருட்டி உருட்டி உருவாக்கும்போது மருது தன்னையே மறந்திருந்தான்.
மிளகு விலை ஊக வர்த்தகத்தை விட இது எவ்வளவோ பரவாயில்லை என்று தெரிசாவுக்குத் தோன்றியது. எல்லாம் மருது பற்றித்தான்.
இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்களும், ரத்ன கம்பளங்களும், சிறு சிற்பங்களும் என்று தொடங்கி அனைத்து கலைப் பொருட்களும் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உதவித் தலைமை நிர்வாகி.
இது உத்தியோகம். மற்ற நேர ஈடுபாடு வேறே மாதிரி.
கமோடிட்டீஸ், ஃப்யூச்சர்ஸ், ஃபார்வேர்ட்ஸ், ஆப்ஷன்ஸ் அண்ட் ஸ்வாப்ஸ் (COMMODITY FUTURES, FORWARDS, OPTIONS & SWAPS) வர்த்தகம் அது. தானியங்களுக்கும், வாசனை திரவியங்களுக்கும், முக்கியமாக மிளகுக்கும், அபூர்வமான மலர்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் விலை என்னவாக இருக்கும் என ஊகித்து நடத்தும் வர்த்தகத்தில் வேலை நேரம் தவிர மூழ்கியிருப்பான். மிளகு விலைப் போக்கை கணித்து நடத்தும் ’ஊக கச்சவடம்’ (ஊக வர்த்தகம்) மருது செய்வது.
ஊக வர்த்தகம் என்றால் விளையாட்டு, ஊக விளையாட்டு என்றால் வர்த்தகம். ஒன்று, இரண்டு மாத எதிர்காலத்தில் மிளகு விற்பனையாகப் போகும் விலை ஊகிக்கப்பட்டு, அது சரியாகவோ, தவறாகவோ முடிய, கணிசமான தொகை கைமாறும். ஒரு நிலைக்கு மேல் சூதாட்டம் தான். மற்றொரு நிலைக்கு, பலவிதமான காரணிகளை வைத்துக் கணக்கிட்டு தீர்மானிக்கும் எதிர்கால விலை கணிப்பும் தான் அது.
நேற்று மாலை வந்த பனி மனிதன் நினைவுகளோடு தெரிசா கீழே பார்க்க முன்குடுமி வைத்த ஒரு வயசரும், இருபது வயதில் ஓர் இந்தியப் பெண்ணும் மாடி ஏறிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. மூக்குக் கண்ணாடி அணிந்து வந்து பார்க்கலாமா? அதற்குள் அவர்கள் போயிருக்கலாம். போகட்டும்.
’யாரோ அவர் யாரோ’ என்று கோவில் மாரார் செண்டை வாசித்து காலை சீவேலி நேரத்தில், என்றால், ஸ்ரீபலி என்ற உதய ஆராதனை நேரத்தில், சோபான சங்கீதமாக, என்றால், சந்நிதிக் கதவுக்கு வெளியே நின்று பாடும் பாட்டை முணுமுணுத்தபடி காப்பி சேர்க்கப் போனாள் தெரிசா.
பேராசிரியர் பிஷாரடியும் கல்பாவும் மேலே பார்த்தபோது தெரிசா அங்கே இருந்திருந்தால் உடனே அடையாளம் கண்டிருக்கலாம். அப்படி இல்லை என்று இருக்கிறதே.
”இந்த அபார்ட்மெண்ட் குடித்தனத்திலே தான் நீ தேடிவந்தவர் இருக்கார்”.
சிமெண்ட் கலரில் மெல்லிய நீலக் கோடுகளோடு உயர்ந்திருந்த பலமாடிக் குடியிருப்பைச் சுட்டிக் காட்டியபடி கல்பாவிடம் சொன்னார் பிஷாரடி. அந்தக் கட்டிடம் கருப்புக் குதிரை வீதி வளைந்து வலப் பக்கம் திரும்பும் இடத்தில் நின்றது. புதியதாகவும் இல்லாமல் பழையதாகவும் இல்லாமல், அழகானதாக மிளிர்ந்த, இதமான வண்ணம் அடித்த கட்டிடம் அது.
கல்பாவுக்கு அந்தக் கட்டிடத்தில் நுழையத் தயக்கமாக இருந்தது. காரணம், அங்கே மொட்டைமாடியில் இருந்து யாரோ ஒரு சிறு பச்சை ப்ளாஸ்டிக் வாளியில் வைத்த வர்ணம் கலந்த தண்ணீரை பிளாஸ்டிக் தண்ணீர்த் துப்பாக்கியால் எடுத்து கீழே விசிறி அடித்துக் கொண்டிருந்தார்கள்.
கீழே தெருவில் போகிறவர்கள் எல்லாம் சாடிக் குதித்து ஓடினாலும் வர்ணத் தண்ணீர் அவர்கள் தலை மேலோ பக்கவாட்டிலோ அவர்களை சன்னமாக நனைக்காமல் போகவில்லை.
நடைபாதியில் ஏறி நடக்கலாம் என்று அங்கே பார்த்தாள் கல்பா. பெரிய வேன் ஒன்று பிபிசி சின்னம் எழுதப்பட்டு அங்கே வழியை அடைத்துக்கொண்டு நின்றது.
“ரேடியோ, டிவிக்கு லைசென்ஸ் வாங்குங்கள். வாங்காமல் ரேடியோ கேட்பதும், டெலிவிஷன் பார்ப்பதும் மேன்மைக்குரிய எலிசபெத் சக்கரவர்த்தினிக்கு எதிரான செயலாகும். லைசென்ஸ் பணம் கட்டினால் கலை வளரும். செய்தி நேர்மையாகப் பங்கு கொள்ளப்படும்”.
இப்படி வேனுக்குள் இருந்து தொடர்ந்து விளம்பரம் போல் யாரோ பேசுகிற ஒலி.
”ரேடியோ லைசென்ஸ் கட்டினால் தான் எலிசபெத் மகாராணியின் பக்கிங்ஹாம் அரண்மனையில் வேலைக்கு இருக்கிறவர்கள் வீட்டில் ஒரு பொழுது உண்ண ரொட்டி வாங்கமுடியும். ஒரு கட்டி சவுக்கார சோப்பு வாங்கி அரசியாரின் துணிகளைத் துவைக்க முடியும். டிவி லைசன்ஸ் கட்டினால் தான் அந்தப் பணத்தில் மகாராணி ரெண்டு நாள் காலைப் பசியாற முடியும். எனவே பணம் கட்டுங்கள். அரசியார் ஆசி பெறுங்கள்”
இப்படி அந்த ஒலிபெருக்கி சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் பிஷாரடி. இவ்வளவுக்கும், அவர் லைசென்ஸ் கட்டணம் முதல் ஆளாகக் கட்டி வருகிறார் ஒவ்வொரு வருடமும். இதற்காக போஸ்ட் ஆபீஸுக்கு டெலிவிஷன் லைசென்ஸ் அட்டையோடு போய் நிற்பது தலையாய ராஜாங்கக் கடமை அவருக்கு. அவரிடம் ரேடியோ இல்லை.
தெருவில் இருந்து பிபிசி வேன் நகர்ந்து போக, அதற்காகவே காத்திருந்ததுபோல் ஒரு குழுவாக நடுத்தர வயது ஐரோப்பிய முக ஜாடை உள்ள ஆண்கள் குதித்து ஆடிக்கொண்டு தெற்கு வசத்திலிருந்து நுழைந்தார்கள்.
சிப்ளா கட்டைகளையும், தாளங்களையும் கொட்டி கோவிந்தா கோவிந்தா என்று பாடியபடி வந்த அவர்களிடையே சிறு மிருதங்கங்களையும், டோலக்குகளையும் சுமந்து வாசித்தபடி வந்தவர்களும் உண்டு.
நெட்டையரான ஒருத்தர் ஒரு ஹார்மோனியத்தைச் சுமந்து வாசித்தபடி வந்தார். அந்த வாசிப்பு குளிர்காலக் காலை நேரத்துக்குக் கேட்க ரம்மியமாக இருந்ததை கல்பா பேராசிரியரிடம் சொன்னாள்.
”இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் எத்தனை வளைசல்கள் உண்டோ”.
பிஷாரடி சிரித்தபடி கட்டிட முகப்புக்கு நடந்தார். வாசல் கதவு எங்கே என்று தேடினார். எல்லாக் கதவும் ஜன்னல்களும் அடைத்து சார்த்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடம் அது. மேலே போக லிப்ட் அல்லது மாடிப் படிகள் பின்னால் இருக்கக் கூடுமோ?
அவர் மேலே நிமிர்ந்து பார்த்தார். அங்கே மொட்டைமாடியில் தண்ணீர் விசிறியடித்த பையன்களைக் காணோம். இதுதான் சிறந்த தருணம். உள்ளே புகுந்தால் உடுப்பு நனையாமல் தப்பிக்கலாம்.
சொல்லியபடி பின்னால் வரும்படி கல்பாவைக் கைகாட்டித் தொடர்ந்து வாசல் கதவைத் தேட, மேலே தலைகள் தெரிந்தன. ஒளிந்திருந்த பையன்கள் சிறு பிளாஸ்டிக் வாளியை அப்படியே கவிழ்த்து ஹோலி ஹை என்று சிரிக்க, பிஷாரடி நனைந்த கோழிக்குஞ்சு போல் நடுங்கியபடி ஹோலி ஹை என்றார்.
”ஹோலி ஏப்ரல்லே வரும். இப்போ டிசம்பர்லே அது எப்படி வந்தது?”
அவர் கேள்விக்கு பதிலாக ஹே ஹே என்று கூச்சலும் சிரிப்புமாக சத்தமிட்ட பையன்கள் ஓடினார்கள். பின்னால் நடந்த கல்பா மேல் ஒரு துளி தண்ணீர் கூட நனைக்கவில்லை. வாசல் கதவு திறந்து யாரோ வெளியே போனார்கள். கதவு சார்த்தப்படாமல் பிடித்து நிறுத்தி வா கல்பா போகலாம் என்றார் நனைந்த வைத்தியர்.
”யாரைப் பார்க்கணும்?”
கதவைத் திறந்து வெளியே வந்த பெண் கல்பாவைக் கேட்டாள்.
”மருதுவைப் பார்க்கணும். இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்களும், ரத்ன கம்பளங்களும், சிறு சிற்பங்களும் என்று தொடங்கி அனைத்து கலைப் பொருட்களும் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உதவித் தலைமை நிர்வாகி”. நிறுத்தினாள். வந்தவள் சிரிப்பால் அதுக்கென்ன எனச் சொன்னாள்.
”மொபைல் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கான் கடந்த ரெண்டு மணி நேரமாக”. அவளுக்குத் தேவையில்லாத தகவல். எனினும் கல்பா சொன்னாள்.
“உள்ளே நுழைந்தால் தண்ணீர் கொட்டாவிட்டாலும் சன்னமான தாரையாக மேலே தெளித்துத் தடுக்கிறார்கள் மேலே யாரோ”.
அந்தப் பெண் வெகுவாக ஆட்சேபித்துத் தலையாட்டினாள்.
”சின்னப் பசங்கள் அவங்க எல்லாம். இன்னிக்கு வெறும் அரை டம்ளர் தண்ணியை ஊத்தி ஹோலி கொண்டாடறாங்க. ஆமா, இது டிசம்பர் கடைசி. ஹோலி ஏப்ரல்லே வரும். குழந்தைகளுக்கு அதெல்லாம் அனாவசியமாச்சே. தொந்தரவு கொடுக்கறதா யாராவது போலீஸ்லே புகார் பண்ணினா, உடனே வந்து நிறுத்திட்டுப் போவாங்க. ஆனா இங்கே எல்லாம் இந்தியக் குடும்பம் தான். ஒண்ணுக்குள்ளே ஒன்ணு. கண்டுக்க மாட்டாங்க. துணி நனையறது பெரிய விஷயமே இல்லை. ஐந்து நிமிடத்திலே உலர்ந்தா அப்புறம் எப்பவும் போல ஆகிடும் துணி” என்றாள் அவள்.
”அந்தச் சாயம்?” புகார் சொல்லுகிற குரலில் தொடர்ந்தார் பிஷாரடி.
“உடனே போய்விடும். துணியில் ஒட்டிக் கொள்ளாத சாயம் அது”.
முன்கூட்டியே ஹோலி களிக்கிறவர்களின் பிரதிநிதியாக அந்தப் பெண் மருதுவின் இரண்டாம் மாடி ஃப்ளாட்டுக்கு வழி சொல்லி வெளியே போனாள்.
”இன்னிக்கு உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்திட்டேன் ப்ரபசர். காலை சாப்பாடு, கார் சவாரி, இடத்தைக் கண்டுபிடிக்கற நேரமும் வேலையும் எல்லாத்துக்கும் மேலே சட்டை நனைந்து அதோடு நடக்க வச்சது. ரொம்ப சாரி. நீங்க அடுத்து இந்தியா வர்ற போது எல்லாத்துக்கும் சேர்த்து என்னை படுத்தி எடுக்க ஏற்பாடு பண்ணிக்கறேன்”.
கல்பா ப்ரபசரின் தோளில் சகவயசுக்காரி போல் தட்டி சமாதானம் சொன்னாள். அவரை யாரும் தோளில் தட்டியதில்லை. ஜவஹர்லால் நேரு தவிர. ஒரு பரிசளிப்பு நிகழ்ச்சியில், இளைஞராக இருந்த பிஷாரடிக்கு மலையாளத்தில் இருந்து இங்கிலீஷில் கவிதை நூல் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற நிகழ்ச்சி அது.
”சந்தோஷம். நிறைய மொழிபெயருங்கள். மலையாள மக்களை நாங்கள் இங்கே அறிந்து கொள்ளணும்” என்று பிஷாரடி தோளில் தட்டி ஊக்கப்படுத்தினார் நேரு.
அந்தப் பையன்களுக்கு உச்சிக் குடுமியும் பஞ்ச கச்சமும் மேலே ஜரிகை உத்தரியமுமாக நின்ற நாமக்காரர் பிஷாரடியை துன்பப்படுத்தி அவருடைய முகம் போகிற போக்கைப் பார்க்க என்னமோ இஷ்டமாக இருந்தது.
அடுத்த குவளை சாயத் தண்ணீரை எடுத்து அவர் மேல் போட முற்பட்டு, கீழே இருந்து பஜனை கோஷ்டி கண்டித்து நிறுத்த, சின்னஞ்சிறு பட்டாசுகளை கொளுத்தி பிஷாரடியைச் சுற்றி எறிந்தார்கள் பயல்கள்.
அதில் எதுவும் வெடிக்கவில்லை என்பதோடு எல்லாமும் பஜனை கோஷ்டி மேல் விழுந்தது. வெடிக்கு நடுவே கோவிந்தனைக் கூப்பிட மனமில்லாத அவர்களில் சிலர் மாடிப்படி ஏறி மொட்டை மாடிக்கு விரைந்தார்கள்.
”கல்பா நீ ஓரமா என் பின்னாலே இடம் விட்டு வா. என் மேலே எவ்வளவு தண்ணி விழுந்தாலும் எனக்கு ஒண்ணும் பண்ணாது. அவங்களுக்காச்சு எனக்காச்சு. இன்னிக்கு ஒரு வழி பார்த்துடலாம்”.
பிஷாரடி கச்சம் கட்டிய பெரிய குழந்தையாக கூடுதல் விஷம விளையாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அதிகாலைக் கனவில் அவர் பறந்த மாதிரி இந்தப் பயல்களும் பக்கெட்டோடு பறந்தால் எப்படி இருக்கும் என்று அவர் யோசித்துப் பார்த்தார். நல்லாத்தான் இருக்கும்.
இரண்டு பேரும் உள்ளே நுழைந்ததற்கு அடுத்த வினாடி மேலே இருந்து சாய மழை திரும்பப் பொழிந்தது. தப்பிச்சுட்டாங்கடா என்று நிராசையோடு அந்தப் பையன்கள் அடுத்த வேட்டைக்குத் தயாரானார்கள்.
பலமாடிக் கட்டடத்தின் மெயின் கதவு திறந்த முன்றில் இருண்டு கிடந்தது. அங்கே வலது ஓரமாக மாடிப்படிகள் ஒற்றை மின்சார பல்ப் வெளிச்சத்தில் நீண்டு போனது தெரிந்தது. பக்கத்தில் கதவு மட்டமல்லாக்கத் திறந்து ஒரு லிப்ட் தெரிந்தது. கட்டிடத்தின் புதுமைக்கு சம்பந்தமில்ல்லாத பழைய இழுத்து மூடும் கதவு உள்ள லிஃப்ட் அது. கல்பா கதவை இழுத்துப் பார்த்தாள். அது சார்த்த வாகாக வழுக்கிக்கொண்டு வந்தது.
லிப்ட்லே போகலாமா? கல்பா கண்ணில் குறும்பு மின்ன ப்ரபசரைக் கேட்டாள். போகலாம் தான். ஆனால் அது பாதியிலே நின்னுட்டா?
நின்னுட்டா குதிச்சுடலாம் என்று சர்வ சாதாரணமாகத் தீர்வு கண்டதுபோல் சொல்லி அவரைக் கூர்ந்து நோக்கினாள் கல்பா.
”இல்லேம்மா, எனக்கு அவ்வளவு தைரியம் இல்லே. மேலும், பஞ்ச கச்சத்தோடு மேலே இருந்து சாடினா கால் தடுக்கிட சான்ஸ் இருக்கு. படியேறிப் போயிடலாம்”.
”சரி ப்ரபசர், நீங்க சொன்னா அப்பீல் ஏது”.
”எங்கே போகணும்?”
பிஷாரடி அவளை இன்னொரு தடவை விசாரித்தார்.
”மருது, இரண்டாம் மாடி, கருங்குதிரை அப்பார்ட்மெண்ட் தொகுதி. மருது இந்தியாவின் தென்பகுதியில் அம்பலப்புழை என்ற சிறு நகரத்திலிருந்து வந்திருக்கிறார். வந்திருக்கிறான். போதுமா சார்?”
அப்போதுதான் கல்பா தன் மொபைலைப் பார்த்து விலாசம் சொல்வதைக் கண்டார் பிஷாரடி. அவருக்குப் படபடப்பாக இத்துணூண்டு கோபமும் எட்டிப் பார்த்தது.
”என்ன கல்பா சின்னப் பிள்ளை மாதிரி. மொபைல்லே இருக்குன்னா நேரடியா ஃபோன் பண்ணியிருக்கலாமே. இப்படி இதுவா அதுவான்னு தேட வேணாமே”.
”சொன்னேனே சார், ஈமெயில்லே அரைகுறையா விலாசம் கொடுத்திருக்கான். அவன் ஃபோன் கடந்த ரெண்டு மணி நேரமா ஸ்விட்ச் ஆஃப். ”
”முன்னாடியே விவரம் வாங்கி வச்சிருக்கலாமே?”
”ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணுவான்னு தெரியாதே”.
போதும் என்று கைகாட்டினார் பேராசிரியர். இவளுக்கும் அந்த தண்ணீர் வாளி பசங்களுக்கும் என்ன வித்தியாசம்? சின்னக் குழந்தைகளாக மேலே தண்ணீர் அடித்துத் துன்பப்படுத்தினார்கள் அவர்கள் என்றால், தேவையில்லாமல் அவரை அலைய வைத்து வேடிக்கை பார்க்கிறாள் இவள்.
போகட்டும். வந்தாச்சு. முடிஞ்சு அவளை பத்திரமாக தங்குமிடத்துக்குக் கொண்டு சேர்த்தால் இன்னிக்கு எடுத்துக்கொண்ட வேலை கிரமமாக முடிந்து விடும். அவள் பார்க்க வந்த அந்தப் பையனும் பிஷாரடி வைத்தியர் போல அம்பலப்புழைக்காரன் என்பது அவருக்கு ஆசுவாசமான தகவலாக இருந்தது. உலகின் சகல இண்டு இடுக்கு மூலைகளிலும் அம்பலப்புழை பால்பாயசம் மணம் சதா வீசிக் கொண்டே இருக்கும்.
கல்பா தன்மேல் குற்றம் ஏதும் இல்லை என்பதாக முறையிட்டாள். அதற்குள் அவள் மேல் கோபம் முற்றிலும் வடிந்திருந்தது ப்ரபசருக்கு. அவளை முதுகில் அன்போடு ஆதரவாகத் தட்டி, “அது போறது. வந்து சேர்ந்துட்டோமே அதுதான் முக்கியம்” என்றார்.
இரண்டாம் மாடி. மூச்சு வாங்கச் சொன்னார் பிஷாரடி. இந்த குடித்தனமாக இருக்கக் கூடும். கதவு அடைச்சு வச்சிருக்கு இதுவும். அவர் வாசல் அழைப்பு மணியை உரக்க ஒலித்தார். ஒரு தடவை தான் ஒலிக்க உத்தேசித்தது கை நடுக்கத்திலோ, சர்க்யூட் சரியாக இல்லாமலோ இரண்டு தடவை ஒலித்தது. அதுவும் ராரா ராஜகோப பாலா என்று ரெண்டு தரம் பாடியது.
கதவு திறந்ததும் ஓ என்று சத்தமிட்டுக்கொண்டு இரண்டு பையன்கள் பக்கெட்டில் தண்ணீர் நிறைத்துத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினார்கள். எந்த நிமிடமும் அவர்கள் பிஷாரடி வைத்தியர் மேல் திருமஞ்சனம் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்போடு சுவருக்கு நெருக்கமாக சுவரைப் பார்த்துக்கொண்டு நின்றார் பிஷாரடி.
சுவரில் மகாவீரர் படம் போட்ட பழைய காலண்டர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வெள்ளிமீன் பூச்சி இரண்டு சுவரில் பதித்த அலமாரிக்குள் இருந்து வெளியேறியபடி இருந்தன.
உள்ளே திரை விலக்கி ஒரு உயரமான மனுஷன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வெளியே வந்தான். உயரமென்றால் அப்படி ஒரு உயரம். குறைந்த பட்சம் ஏழு அடியும் ஒரு இரண்டு அங்குலமும் இருப்பார். மெலிந்த தேகவாகு அந்த உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டியது. ஹாலில் மின்விசிறி இருந்தால் தலையில் பட்டு விபத்தாகி விடக்கூடும். அதனாலேயே இல்லை போலிருக்கிறது.
சற்றே நெற்றி வியர்த்து கோபத்தில் விடைத்த மூக்கோடு பிஷாரடி வைத்தியரைத் தாக்க வருவது போல் பக்கத்தில் வந்தார்.
மலையோர உத்தரகாண்ட இந்தியப் பகுதியில் பேசும் கடிபோலி என்ற இந்தியில் அவர் பிஷாரடியை வையத் தொடங்க, அந்த மொழியின் நுட்பத்தை ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்தார் பிஷாரடி.
“ஓய் புரோகிதரே, நீங்க லண்டன்லே கணபதி ஹோமமும் நவக்ரக ஹோமமும் பெரிய அளவிலே நடத்தி நம்ம பசங்களை இன்னும் பக்திமான்கள் ஆக்க வழி செய்யுங்க. நான் இதுக்கு மேலே கனிய முடியாது. வளையவும் முடியாது. திரும்பத் திரும்ப ஹவன் நடத்த நிதி உதவி வேணும், மனு ஸ்மிருதி புஸ்தகம் அச்சுப்போட தன சகாயம் வேணும்னு வந்து நிக்காதேயும். நான் இந்தியா போகிறபோது அங்கே இருக்கப்பட்ட புரோகிதர்களுக்கு தட்சிணை கொடுத்து ஸ்வர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கிக்கறேன். சரியா?”
பிஷாரடி புன்முறுவலோடு இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு நல்ல உச்சரிப்போடு இங்க்லீஷில் சொன்னார்-
”நண்பரே, நான் லண்டன் கல்லூரி ப்ரபசர் எமிரிட்டஸ். இங்கே கிருஷ்ணன் கோவில் வால்தாம்ஸ்டோவ் பகுதி கோவில் நிர்வாகி. உங்களை இது வரைக்கும் நான் சந்திச்சதில்லே. உங்கள் உத்தரகண்ட் இந்தி வெகு இனிமை. திட்டினாலும் தப்பாக திட்டினாலும் அந்த இந்தியைக் கேட்கத்தான் பேசி முடிக்கறவரை காத்திருந்தேன். இது கல்பா. என் சிநேகிதர் மகள். மருது என்கிற இங்கே வசிக்கிற நண்பரைப் பார்க்க வந்திருக்கா. அவர் உள்ளே இருக்காரா?”
நெடியவர் இரண்டு கையும் கூப்பினார்.
“தப்பு நடந்துடுத்து ப்ரபசர் சார். எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்கறேன். மாசம் ஒரு தடவை ஹரேகிருஷ்ணா காரங்க புத்தகம் விற்று நிதி வசூலுக்காக வருவாங்க. அந்த புரோகிதர்னு நினைச்சுட்டேன். மன்னிக்கணும்”.
ப்ரபசரையும் கல்பாவையும் கட்டாயப்படுத்தி சோபாவில் உட்கார வைத்தார். உள்ளே இருக்கும் யாரிடமோ ஏர்ல்ஸ் க்ரே டீ கொண்டு வரச் சொன்னார்.
”நான் அசோக் மேத்தா. மொத்தமா கோழி முட்டை வியாபாரம்”
”சந்தோஷம். மருது?”
”அவர் எனக்கு மேலே மூணாவது மாடி. எப்படியோ ரெண்டாம் மாடின்னு எல்லோருக்கும் தவறுதலாக அல்லது அரைகுறையாக தகவல் கொடுத்திட்டார். சரியான இடத்துக்குப் போக நானே கூட்டிப் போய் விடறேன். மறுபடி மன்னிக்கக் கோருகிறேன்”.
தேநீர் தனியாக வரவில்லை. நல்ல பெரிய சைஸ் தூத்பேடாக்கள் நாலைந்து தட்டில் வைத்து கூடவே உயர்தர ஏர்ல்ஸ் க்ரே வாசனையுமாக அது வந்தது. ஸ்டார் ட்ரக் சின்னத்திரை தொடர்களில் கேப்டன் ழான் லக் பிகார்ட் வேடத்தில் வரும் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் குடிப்பது. முட்டைக்காரரிடம் சொல்ல, மரியாதையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.
டீ குடித்து முடித்து அசோக் மேத்தாவோடு மாடி ஏறும்போது கல்பா சிரித்தாள். ”இன்றைக்கு இத்தனை படி ஏறி ஏறித்தான் பார்த்து வரணும் போல”.
அவள் சொல்லும் போதே, “ஆமா, எனக்காக படி ஏற மாட்டியா?” என்று குரல். மருது ப்ளாட் வாசலில் நின்று இவர்கள் வரக் காத்திருந்தான்.
உள்ளே மூன்று ஆப்ரிக்க இளைஞர்கள் மற்றும் ஓர் ஆப்பிரிக்க இளம்பெண் கூடியிருந்தார்கள்.
மருதுவின் அம்மா சாரதா தெரிசா மாறாத பிரிட்டீஷ் உச்சரிப்பில் பிஷாரடி சார், வாங்க வாங்க என்று வரவேற்றாள். நாம் சந்திச்சு முப்பது வருஷம் ஆகியிருக்குமா என்று அவள் கேட்க, முப்பத்தஞ்சு என்றார் பிஷாரடி. ”அம்பலப்புழைக்கு நீங்க இருக்க வந்தபோது நான் லண்டன் கிளம்பிட்டிருந்தேன்” என்றார் பிஷாரடி.
சாரதா தெரிசா கல்பாவைக் கூர்ந்து பார்த்தாள்.
“நீ கல்பாதானேடீ? மருது ஃப்ரண்ட். திலீப் ராவ்ஜியோட மகள். அமெரிக்காவிலே கலிபோர்னியாவிலே படிக்கப் போயிருந்தே தானே”.
“ஆமா சாரதா ஆண்ட்டி, நல்லா இருக்கீங்களா?” கல்பா கேட்டாள்.
“நல்லா இருக்கியா கல்பா. எல்லா வாழ்த்தும் உனக்கு சேரட்டும்” என்றாள் சாரதா தெரிசா.
அவள் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்து விட்டு எழுந்து நின்ற பெரியவரை கல்பா இது வரை பார்த்ததில்லை.
முசாபர் என்றார் அவர் கல்பாவிடம் சுருக்கமாக.
(தொடரும்)