மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு

1605 ஹொன்னாவர்

லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். வழக்கமாக பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்த வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கே ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம். சாயந்திரம் சூரத்துக்கும்,  அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள்.

இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, மிளகு விழுதில் விழுந்து புரண்டு, மேலெல்லாம்  மிளகுக் காப்பு புரட்டிக்கொண்டு, சுட வைத்த எண்ணெயில் விழுந்து, பொரிந்து கொள்ளவேண்டும். அல்லது மீன்கள் செதில் உதிரக் கல்லில் உரசி உரசித் தேய்த்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் விழுந்து நீந்தி, அந்திம நித்திரை போகவேண்டும். கோழி முட்டைகள், இரும்பு வாணலியில் ஒன்றை  ஒன்று, அடித்து உடைத்துக் கிண்டிக்கொண்டு, மிளகாயும் வெங்காயமும் சேர முட்டைக்கறி ஆக வேண்டும். 

இதெல்லாம் நடக்க முடியுமானால் நூறு பேர் சாப்பிட வரும்போது  அவசரமாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரிமாற வேண்டியிருக்காது. என்ன செய்ய,  ஒஃபிலியா சாப்பாட்டுக்கடை உரிமையாளர் அல்வாரிஸ் காலை பத்து மணிக்கு விருந்து தயாராகி விடும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார்.

கடைகண்ணியில் மாதச் சம்பளத்துக்குப் போய்ச் சேர்ந்தால் இந்த மாதிரி தொந்தரவுகள் எழும்பும் அவ்வப்போது. லூசியா அவற்றைச் சமாளித்தே ஆகவேண்டும். இது சரிப்படாது என்றால் கோவாவில் இருந்து ஹொன்னாவருக்கு வேலை தேடியே வந்திருக்கக் கூடாது. 

கோவாவிலேயே இருந்தால் சதா வெற்றிலை பாக்கை மென்று துப்பிக்கொண்டு, வண்டித் துறையில் தலையில் சும்மாடு வைத்து பிரயாணிகளுடைய மூட்டை முடிச்சுகளைத் தூக்கிச் சுமந்து அரைப் பணமும் ஒரு பணமுமாகக் காசு கூலி வாங்கிக்கொண்டு, வீடு பெருக்கி எச்சில் தட்டு கழுவிக் காசு வாங்கிக்கொண்டுதான் ஆயுசுக்கும் இருக்க வேண்டிவரும். 

அப்படி இருந்தால், இன்னும் பத்து வருடத்தில் பல் காவி பிடித்துவிடும் அல்லது உபத்ரவமில்லாமல் விழுந்துவிடும். மூட்டை தூக்கித் தூக்கிக் குத்திருமல் வந்து யாரும் கூலிகொடுத்துக் கூப்பிட மாட்டார்கள். வீடு பெருக்கி, மெழுகி, துணி துவைத்து, பாத்திரம் கழுவுவது வேணுமானால் நாலைந்து வீட்டுக்கு செய்து கை காய்த்துப் போயிருக்கும். 

ஆனால் பழமை அழுத்தமாகப் பதிந்த கோவாவை விட்டு வெளியே ஹொன்னாவர், பட்கல், உடுப்பி, ஹம்பி என்று போய் உணவுக்கடை உத்தியோகம், துணி, காய்கறி-பழக்கடை, மிட்டாய்க்கடை வேலை என்று சேர்ந்துவிட்டால் பத்து வருடத்தில் அங்கே கிடைத்த அனுபவத்தையும், சேர்த்து வைத்த சம்பளப் பணத்தையும் கொண்டு சிறியதாக சொந்தக்கடை ஒன்று போட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வாய்ப்பு உண்டு. அந்த நம்பிக்கை தான் காலை ஆறுமணிக்கு கோழி சமைக்க வரவழைக்கிறது. 

லூசியாவுக்கு முகலட்சணம் கொஞ்சம் இருந்தால் போர்த்துகீஸ் பிரபுக்களின் மாளிகை நிர்வாகியாகக் கைநிறைய வருமானம் கிடைக்கும். ஆனால் அங்கேயெல்லாம் வேறு மாதிரி சிக்கல். தனியாக இருக்கும் நேரத்தில் வீட்டு ஆண்கள், விருந்துக்கு வந்த காமாந்தகர்கள் என்று அவனவன் கோவாப் பெண் உடம்பு கேட்பான். 

அதிலும், லூசியாவின் ஒன்றுவிட்ட அத்தை மகள் கஸாண்ட்ரா போன்ற ஒரு சிலருக்கு வீட்டையும், வீட்டு எஜமானையும் சேர்த்து நிர்வகிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படியே பணிக்காலம் முடிந்து துரை திரும்ப லிஸ்பன் போகும்போது, பெண் நிர்வாகியும் போகவும், அங்கே ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கவும் சந்தர்ப்பம் நிறைய உண்டு,

எல்லாம் யோசித்தபடி வாசல் கதவை உள்ளே தாழ் போட்டுக்கொண்டு லூசியா மிளகை விழுதாக்க ஆரம்பித்தாள். நேற்றிரவே ஊற வைத்த மிளகு என்பதால் குழைந்து குழைந்து விழுதாகக் கஷ்டமில்லாமல் அரைபட்டுக் கொண்டிருந்தது.

”லூசியா, லூசியா” என்று வாசலில் கதவை அடித்தபடி யாரோ கூப்பிடும் சத்தம். மீன் வாடை பலமாகச் சூழ்ந்தது. வாசலுக்குப் போகாமலேயே லூசியாவுக்கு யார் வந்தது என்று தெரியும்.  மீன்கார அபுசாலி ராவுத்தர். இன்றைக்கு விருந்துக்கு ஆற்றுமீன் வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்ததால் வந்திருக்கிறார்.

லூசியா மிளகு விழுது அரைக்கும் அம்மிக் குழவியைக் கல்மேல் ஏற்றி வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள். 

“அப்போ பிடிச்சு கூவிட்டிருக்கேன் உள்ளே கேட்கலியா?” என்றபடி அபுசாலி ராவுத்தர் பெரிய மீன்கூடையை கதவுக்கு இடையே உள்ளே தள்ள, கூடைக்குள் இருந்து, இன்னும் உயிர் இருந்த ஒரு மீன் துள்ளி வெளியே விழுந்தது. 

எடுத்து உள்ளே போட்டபடி ”எல்லாம் நேத்து ராத்திரி பிடிச்ச மீன் இதுக்கு மேலே புதுசு வேணும்னா சோத்துக் கடையை சமுத்திரத்துக்கு உள்ளே உக்காந்துதான் நடத்தணும்” என்றார்.  

“அபுசாலிக்கா, கை கழுவிட்டு வாங்க. பசும்பால் காய்ச்சி வச்சிருக்கேன்” என்று உபசரித்தாள் லூசியா. மீன் கூடையில் இருந்து ஒரு கை மீனை அள்ளிப் பார்த்துவிட்டு மிளகு அரைக்கத் திரும்ப உள்ளே போனாள். சமையலறை உள்ளே இருந்து, மீன்வாடைக்கு வந்த பூனைக்குட்டி ஒன்று வேகமாக ஓடியது.

அபுசாலி தூணை ஒட்டிப் போட்டிருந்த பலகை இருக்கையில் உட்கார்ந்தபடி பசுவின்பால் அருந்திக் கொண்டிருக்கும்போது சோத்துக்கடை அல்லு என்று பெயர் பெற்ற ராபர்டோ அல்வாரிஸ் கடைக்குள் நுழைந்தார். கூடவே சோத்துக்கடை சமையல்காரர்கள் மூன்று பேரும் வந்தார்கள். 

லூசியாவுக்கு நிம்மதி ஏற்பட்டது. இவர்கள் வந்தால் வேலை முடிந்த மாதிரித்தான். அவசரம் என்றால் அல்வாரிஸும் ஒருகை கொடுப்பார். அவர்  கோவாக்காரராக இருந்தாலும் கள், சாராயம் என்று போகாதவர். உழைக்க அஞ்சாதவர். 

லூசியா விழுது அரைத்து, சுற்றுக்காரியம் கவனித்துக்கொண்டு விருந்தில் பரிமாறி எல்லாம் வெற்றிகரமாக முடித்து விடலாம். சமையல்காரர்கள் வேலையை பங்கு போட்டுக்கொண்டு கோழி அறுக்கவும், ஆட்டுக் கறியைக் கொத்தவும் தொடங்கும்போது லூசியா அபுசாலியின் கூடையிலிருந்து மீன்களை அள்ளியபடி எதிரே அலமாரியில்   எதையோ தேடினாள்.

“மரவை எங்கே நாகு?” 

லூசியா இளைய சமையல்காரரைக் கேட்க அவன் சிவப்பு வண்ணம் பூசிய அகன்ற கும்பா போன்ற மரவையை எடுத்துவந்து கொடுத்தான். மரவையில் ஊற்றியிருந்த கல் உப்பு கரைத்த தண்ணீரில் கையில் இருந்த மீன்களை முழுக்கக் கழுவினாள். 

”ஷராவதி ஆற்று மீன் ரொம்ப வழுக்குதே”   என்றபடி தரையில் விழுந்த ஒரு மீனை மறுபடி கழுவ மறுபடியும் அது விழுந்தது. அபுசாலி ராவுத்தர் சிரித்தபடி சொன்னார் – 

“இதைத்தான் தமிழ்லே சொல்வாங்க, கழுவற மீன்லே நழுவற மீன்னு”. 

தமிழ் பேசும் பிரதேசத்தை விட்டு வந்து ஐம்பது வருடமாகி ஹொன்னாவரில் கன்னடத்தில், கொங்கணியில் பேசி மும்முரமான மீன் வியாபாரத்தில் இருந்தாலும், தாய் மொழியை அதன் சகல அழகுகளோடும் நினைவில் வைத்த ஒருவர் அவர் என்பதில் லூசியாவுக்கு அவரிடம் மரியாதை   உண்டு.

ஒவ்வொரு மீனாக எடுத்து வாலைப் பிடித்துக் கொண்டு செதிலை முழுக்கத் தேய்த்து உதிர்த்தாள். தலை, வால், துடுப்புகளை நீக்கி குடலைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டினாள். 

“இந்தாங்க, உங்க மீன். கமகமன்னு மிளகுப் பொடி போட்டு மீன்குழம்பு உண்டாக்குங்க” என்று இரண்டாம் சமையல்காரர்  வேம்புவிடம் கொடுத்தாள் மீன் துண்டுகள் நிறைந்த பாத்திரத்தை.

“வேம்பு அண்ணாவரே, நேற்றைக்கு கடையிலே காணோம் எங்கே போயிருந்தீங்க?” 

மீன் தலைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் இட்டு வேம்புவிடம் கொடுக்கப் போனபோது அவர் அடுப்பு பக்கம் நகர்ந்திருந்தார். 

“நானா, ஊரே ஓடிக்கிட்டு இருக்கே, நானும் அங்கே தான் போனது. சீக்கிரம் வரலாம்னு பார்த்தேன். ரொம்ப நேரமாயிடுச்சு’ என்றார், தலைகளை வெண்ணெய் விட்டுப் பொறிக்க   கூடுதல் வெப்பம் உண்டாக்க ஒரு விறகைத் அடுப்பில் திணித்தபடி.

”நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக இருக்கறதாலே நாலு பவுன் வாங்கினேன். மத்தவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரெண்டு பவுன் தான் கொடுத்தார். அதுவும் பவன் ஒண்ணு பத்து வராகன் பணத்துக்கு. எனக்கு பவுனுக்கு எட்டு வராகன்லே கொடுத்தார். அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வாங்கணும். வீட்டுலே பீவி போர்ச்சுகீசியப் பணம் ரியல் சேர்த்து வச்சிருக்கு. அதையும் தங்கமாக்கணும்” என்றபடி பால் குவளையை வைத்து விட்டு எழுந்தார் அபுசாலி ராவுத்தர். 

“பிடிக்கற மீனை எல்லாம் தங்கமாக்கி எனக்கும் ரெண்டு நழுவின மீன் கொடுங்களேன் ராவுத்தரவரே” என்றார் அல்வாரிஸ் குறும்பாக. ”வாங்க, நாளைக்கு சேர்ந்தே கடல்லே போவோம்” என்றபடி அபுசாலி நடந்தார்.

லூசியா, வேம்பு சொன்னபடி, மீன் குழம்புக்காக மிளகு விழுதையும் உப்பையும் எடுத்து அடுப்புச் சட்டியில் கொதிக்க வைத்தபோது, பூண்டு போடாதது நினைவு வர, அவசர அவசரமாக அலமாரியைத் திறந்து எடுத்து, சன்னமான துண்டுகளாக வெட்டி, இரும்புச் சட்டிக்குள் போட்டாள்.

“எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு ரெண்டு சவரன் வாங்கினா சரிதான். லட்சுமி பூஜைன்னு ரொம்ப வருஷமா கொண்டாடறதுதானே இப்படி அப்போ அப்போ பொன் வாங்கிச் சேர்த்து வைக்கிறது. ஆனா இப்போ ஏன் திடீர்னு எல்லோருக்கும் தங்கத்துலே ஆசை?” அல்வாரிஸ் அபுசாலியைக் கேட்டார்.

”ஆல்வா,  மிளகு ராணிக்கு உடம்பு சரியில்லே. மனசும் சரியில்லே. நல்லது நினைச்சு செய்யறாங்களோ என்னமோ, ஊரெல்லாம் கோபப்பட வச்சுட்டாங்க. எங்கே பார்த்தாலும் சதுர்முக பசதியைக் கட்டு, கோவிலைக் கட்டுன்னு கிளம்பி தேசத்திலே நடக்கிற ஒரே காரியம் இப்படி கட்டுறதுதான். மிளகு வித்து வர்ற பணம், வரிப் பணம் எல்லாம் இதுக்கே போச்சுன்னா மத்த காரியத்துக்கு என்ன செய்யன்னு அவங்க மகன் ராஜகுமாரர் கேட்கறது சரியாகத்தான் இருக்குமோ” என்றார் அபுசாலி கூடையை எடுத்து கொண்டு.

”அவர் யோக்யதைக்கு அம்மாவை கேள்வி கேக்கறது தப்பு இல்லீங்களா?” அல்வாரிஸ் கேட்டார். ”அம்மா கல்யாணம் செஞ்சுக்கலே. குடும்பம் கிடையாது. ஊரோடு வற்புறுத்தித்தான் அண்ணன் மகனை தத்து எடுத்துக்கிட்டாங்க. அந்த நன்றி கூட வேணாமா? தேசத்துக்காக உழைச்சே ஓடாகறாங்க அம்மா. அவங்களைக் கேட்க இவர் யாரு? வெறும் வளர்ப்பு மகன்”. அல்வாரிஸ் பொரிந்து தள்ளி விட்டார்.

“அவர் கேட்க இல்லேன்னா ஊரில் மத்தவங்க கேட்காமல் இருப்பாங்களா? ஐம்பது வருஷத்துக்கு மேலே ராணியா இருந்தாச்சு. கொஞ்சம் விலகி இளையவங்களுக்கு சந்தர்ப்பம் இப்போ இல்லேன்னா வேறெப்போ தர்றதாம்?’ என்றார் அபுசாலி. ”நான் சொல்லலே, ஊர்லே பேச்சு” என்று ஜாக்கிரதையாக பின்னொட்டு வைத்துப் பேசினார். 

காய்கறி கூடைகளோடு பொன்னையா வந்து நுழைந்தார். ”என்ன ஹொன்னய்யா, ஆறு மணிக்கு வரச் சொன்னா, ஆறரை மணிக்கு காய்கறி கொண்டு வரீங்களே” என்று அல்வாரிஸ் கேட்க, பொன்னையா, ’உறங்கிட்டேன்’ என்றார் அப்பாவியாக. 

“நேத்து பூரா ஹொன்னாவர் நகைக்கடைகள்லே எல்லாம் தேடிப் போய் கடைசியா ஒரு கடையிலே மூணு பவன், பவனுக்கு பதினோரு வராகன் மேனிக்கு வாங்கிட்டு வந்தேன். நெல் விளையற நாலு குண்டு நிலத்தையும் கொடுத்துட்டு தங்கமாக மாற்றிக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். இந்தம்மா சமணக் கோவிலும் இந்து கோவிலும் ஊர் முழுக்க கட்டவும் வேணாம், நாட்டுலே பணத்துக்கு மதிப்பு குறைஞ்சு ஒண்ணுமே இல்லாம போயிடுமான்னு எல்லோரும் பயப்படவும் வேணாம். கோவில் கட்டறது, பசதி கட்டறது எல்லாம் அவசியமா இப்போ?” என்றார் பொன்னையா. 

லூசியாவுக்கு கொஞ்சம் போல் புரிந்தமாதிரி இருந்தது. நிறைய சேமித்து வைக்கிறவர்களுக்கு அந்தக் கவலை எல்லாம் வேணும். பணமாக இருந்தால் என்ன தங்கமாக இருந்தால் என்ன, வீடு நிலமாக இருந்தால் என்ன அதென்ன பிடிவாதம், எல்லாவற்றையும் கொடுத்து தங்க நகை ஏன் வாங்க வேண்டும்?

 கையில் பிடித்திருந்த கடைசி மீன் அதானே என்று சொல்லியபடி தரையில் விழுந்து துள்ளியது. லூசியா அதை எடுத்தபோது கை நழுவி மார்க்கச்சில் நடுவாக விழுந்தது. ”சீ காவாலிப்பய மீனே” என்று அதைத் திட்டியபடி லூசியா சிரிக்க  காலை நேரம் ஏழு மணிக்கு வந்து சேர்ந்தது.

அல்வாரிஸ் கடைக்குப் பின்னால் ஒரு காலத்தில் தோட்டமாக இருந்து இப்போது எருக்கஞ்செடியும், பெயர் தெரியாத வாசனை இல்லாத ஏதோ பூ பூக்கும் பூச்செடியும் மண்டியிருக்கும் புதருமாகக் கிடந்த வெற்றுவெளியை நாலைந்து ஆட்களை வைத்து சீராக்கி பலகை மேசைகளையும் குரிச்சிகளையும் போட்டு வைக்க ஏற்பாடு செய்திருந்தார். 

 அங்கே ஒரு இருபது பேர், கடைக்குள் ஒரு பதினைந்து பேர்,  மூன்று பெலடோ (platoon) ராணுவத்தார். ஒவ்வொரு பெலடோவிலும் முப்பது பேர். மூன்று பந்தியாக விருந்து நடத்தி வைக்கத் திட்டம் போட்டிருந்தார் அல்வரிஸ். 

பரிமாற கொஞ்சம் பளிச்சுன்னு மூணு பெண்ணு வேணும் என்று அவர் தங்கப்பன் செட்டியாரிடம்  தற்காலிக வேலைக்காக ஆட்கள் தேடியபோதே லூசியாவுக்குத் தெரிந்து போனது அவளை சமையல்கட்டில் போட்டு சுந்தரிப் பெண்குட்டிகளை பட்டாம்பூச்சி போல் மேஜை தோறும் சுற்றிவர வைத்து சௌந்தர்ய உபாசனை செய்து விடுவார்கள் என்று.

தெய்வம் அவள் கண்ணையும், மூக்கையும், காதையும், உதட்டையும் இன்னும் கொஞ்சம் திருத்தமாகப் படைத்திருக்கலாம். கன்னத்தில் மகாமாரித் தழும்புகளை அழித்து விட்டிருக்கலாம். அப்படி இருந்தால்,    போர்த்துகீஸ் தூதர் இமானுவேல் பெத்ரோவுக்கு, லூசியா, வீட்டு நிர்வாகியாக இருந்திருக்கக்கூடும். கஸாண்ட்ரா மாதிரி கொங்கணியும், போர்ச்சுகீஸ் மொழியும், கன்னடமும், தமிழும் நொடியில் கற்றுக்கொண்டு பேசியிருப்பாள். 

போகிறது அல்வாரிஸ் சோத்துக்கடையிலும் அலுத்துக்கொள்ள ஒன்றுமில்லை. உழைக்கிறாள். அதற்கான கூலி கிடைக்கிறது. மாரைக் காட்டி, உதட்டை ஈரப்படுத்தி கடித்து, மேலே உரசி, பிருஷ்டத்தில் தட்டிப் போகிறவனுக்கு சிரிப்பை பதிலாகத் தந்து (படுக்கலாம் வர்றியா என்ற மறைமுகக் கேள்விக்கு தரை ஈரமா இருக்கு காயட்டும் என்று பதில் சொல்கிற மாதிரி) பணி  எடுத்திருந்தால் இப்போது கிடைப்பதை விட இன்னும் இரண்டு மடங்கு சம்பளம் கிட்டியிருக்கும். தினசரி தூங்கும் நேரத்தில் கூட அழகாக இருக்க மெனக்கெட வேண்டியுமிருக்கும். முகத்தில் உதடு திறந்து முத்துப்பல் சிரிப்பு அவியாமல் இருக்கவும் தேவையிருக்கும்.

 லூசியாவுக்கு அந்தத் தொந்தரவெல்லாம் இல்லை. முலைகள்   குன்று மாதிரிக் குவியாமல் நெஞ்சகம் தட்டையாக விரிந்த, பின்னால் இருக்கை வற்றிக் கிடக்கிற பெண் என்றால், விஷமம் செய்ய நினைப்பு வந்தால் கூட அலுப்பு ஏற்பட்டு விடும், வந்த மன்மதக் குரங்குக்கு.  

சோத்துக்கடையில் ஒரு தடவை ராத்திரி தங்கியிருந்தபோது ரெண்டாம் மடையன் வேம்பு ராத்திரி இருட்டில் பக்கத்தில் உருண்டு வந்து அவள் கால்களைத் தடவ, உடனே பாதுகாப்பாக படுத்த படிக்குக் கண்மூடி மூத்திரம் போய்விட்டாள் லூசியா. அப்புறம் யாரும் அவளைத் தொந்தரவு செய்வதில்லை. நடுராத்திரி கிணற்றில் நீர் இறைத்து வாளிவாளியாக அடித்து ஊற்றித் தரையை சுத்தம் செய்ய யாரால் முடியும்>?

விருந்துக்கு வருகிறவர்கள்  போர்த்துகீஸ் ராணுவத்துக்கு ஆளெடுக்கப்பட்டு லிஸ்பனுக்கும் மாட்ரிடுக்கும் அனுப்பப்பட்டு அங்கிருந்து எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அனுப்பப் படப்போகிறவர்கள். அவர்களைக் கட்டி மேய்த்துக் கூட்டிப் போகிறவர்கள் போர்த்துகீசிய ராணுவ அதிகாரிகள். 

ஐரோப்பிய ரத்தமும், இந்துஸ்தான ரத்தமும் இப்போதைக்கு சாந்தமும் சௌக்கியமுமாக ஒரே இடத்தில் ஜீவிக்கிறது.

உருளை உருளையாகக் கையும், காலும், வாட்டசாட்டமாக வளர்த்த தேகமுமாக எல்லா நாட்டிலும் எல்லா ஊரிலும் யாராவது வெட்டியாகச் சுற்றி அலைந்து கொண்டிருப்பார்களே, அவர்களை ராணுவத்தில் சேர்த்து சாப்பாடு போட்டு சம்பளம் கொடுத்து பயிற்சியும் கட்டாயமாகக் கொடுத்து போர்முனையில் கொண்டு போய் நிறுத்தினால், உயிர் பயம் எழும்ப ரொம்ப தாமதமாகி விட்டது என்று அவர்களுக்கு அப்போதுதான் உறைக்கும். 

 உயிர் நீத்து, பெயர் அறியாத போர் வீரனின் சமாதி என்று கூட்டமாகப் போட்டுப் புதைத்து அவர்கள் காணாமல் போகிறது வழக்கம். 

லூசியா சாப்பிட வந்து கொண்டு இருக்கும் பட்டாளத்தார்களைப் பார்த்தபோது நினைத்தது இப்படித்தான்.

சின்னப் பையன்கள். மீசை முளைத்ததுமே வெள்ளைக்காரன் வந்து  பட்டாளத்துக்கு வா என்று கூப்பிட்டு நீல, காக்கி கால் சராயும், தடித்த துணியில் ஏகப்பட்ட பொத்தான் வைத்துத் தைத்த சட்டையும், தலையில் தட்டையாக உட்கார்ந்த தொப்பியும் கொடுத்திருப்பான். ஓலைக்கால் சீலைக்கால் என்று எல்லாரும் ஒரே நேரத்தில் வலக் காலும் அடுத்து இடக் காலுமாக  எடுத்து, சேர்ந்து நடக்கச் சொல்லியிருப்பான். காலைத் தரையில் வைத்துத் தேய்த்து சத்தமாக அடித்து நிற்க வைத்திருப்பான். அடிப்படைப் பயிற்சி இதுதான். 

சோத்துக் கடைக்குள் நுழையும்போதும் காலில் முரட்டுக் காலணியைக் கழற்றாமல் தும்தும் என்று காலைத் தரையில் மோதி அந்த சத்தத்தில் அதிகாரம் எல்லாம் கைவரப் பெற்றது போல் மெய்மறந்து போகிற பையன்களோடு, தலை நரைக்க ஆரம்பித்திருக்கும் வெள்ளைக்கார பட்டாள அதிகாரிகள். அதிக சத்தம் இவர்களிடமிருந்துதான் கிளம்பியது.

அதில் ஒருத்தன் வந்ததும் காலணியோடு சமையல்கட்டுக்கு வந்து லூசியாவின் பிருஷ்டத்தை இறுக்கிப் பிடித்து தம்பாக்கு சுருட்டிப் புகைக்கணும். நெருப்பு கொடு பெண்ணே என்று விகாரமாகச் சிரித்தான். 

லூசியாவின் பிருஷ்டத்திலா நெருப்பு இருக்கிறது புழுத்த தேவிடியாள் மகனே? மனதுக்குள் திட்டினாள் அவள்.

லூசியாவுக்கு அவன் தொட்ட இடம் எரிய ஆரம்பித்தது. கடை மட்டும் அவளுடையதாக இருந்திருந்தால், அவனை அடித்து வெளியே துரத்தியிருப்பாள். 

“துரை அவர்களே, நெருப்பு தானே, இதோ கொடுக்கிறேன். தயை கூர்ந்து நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுங்கள்” என்று அடிமை வார்த்தை சொல்லி வணங்க வேண்டியிருந்தது. 

ராணுவ சிப்பாய்ப் பையன்கள் உள்ளூராட்கள் என்பதால் ரொம்பவும் தொந்தரவு செய்யாமல் சமர்த்தாக உட்கார்ந்து சாப்பிட்டுப் போய்விடுவார்கள். இந்த கிழட்டு அதிகாரிப் பன்றிகள் தான் லூசியாவின் குண்டியைத் தடவி, மேலே முன்னேற முடியுமா என்று பார்ப்பார்கள். 

நல்ல வேளை, ராத்திரி விருந்தாக இல்லாமல் போனதே! இருந்தால், சமையல்கட்டுக்குள் அல்லது பின்னால் வெற்றிடத்தில் தள்ளிக்கொண்டு போய் நின்றபடிக்குக் கலவி நடத்தி இருப்பார்கள். கேட்க யாருமில்லை என்ற தைரியம் இந்த நரகல் உருட்டித் தின்னும் புழுத்த பயல்களுக்கு.

”குட்டி, தண்ணீர் கொடு”. 

லூசியா கையைப் பிடித்து கேட்டு ஈயென்று இளித்தான் அந்த போர்த்துகீசிய அதிகாரி. 

“ஐயா குடிக்கத்தானே அல்லது கை கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவா?” மரியாதையோடு வணங்கிக் கேட்டாள் லூசியா. 

“கை எதுக்குக் கழுவணும்? உன் புதருக்கு சவரம் செய்து விட்டுக் கை அலம்பிக் கொள்ளச் சொல்கிறாயா? அதுவும் சரிதான். வந்து மடியில் உட்கார்”. அவன்  லூசியாவின் இடுப்புக்குக் கீழே நோக்கி மறுபடி இளித்தான்.

அல்வாரிஸ் லூசியா காதில் சொன்னார் – 

“காலையிலேயே சாராயம் மாந்தி வந்திருக்கான். அவன் ஏதாவது விபரீதமாகச் நடந்தால்   என்னிடம் வந்து சொல்,   உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவனுக்கு இனி எதையும் நீ பரிமாற வேண்டாம்”. 

”நன்றி சின்ஹோர், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி சமையல்கட்டுக்கு மீன் குழம்பும் சோறும் எடுக்கப் போனாள் லூசியா. இப்படி சிநேகிதமான உரிமையாளரும் நட்பான சக ஊழியர்களும் இருப்பதால் தான் எல்லாத் துன்பமும் சகித்துக் கொள்வதாக நகர்ந்து போகிறது.

மீன் குழம்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது.   லூசியா பரிமாறியபோது அந்த அதிகாரிப் பன்றி கேட்டது–

“உன் காம்புகளை அறுத்துப் போட்டு மீன் குழம்பு வைத்தால் இதைவிட ருசியாக இருக்குமா? அவற்றை நீ குனியும்போது கொஞ்சம் பார்க்க முடிகிறது. போதாது. முழுக்கக் காட்டு. அப்படியே போய் மிளகு விழுது ஒரு கிண்ணத்தில் எடுத்து வா”. 

அவன் பிடியிலிருந்து தப்பி, லூசியா இதோ எடுத்து வருகிறேன் என்று சமையல்கட்டுக்குள் நடந்தாள், அங்கிருந்து அவனை மலமாகப் பார்த்து.

ஆட்டுக்கறியைக் கடித்தபடி இரண்டு அதிகாரிகள், கணிகை வீட்டுக்குப் போன ஒருத்தன் மும்முரமாக எலுமிச்சை ஊறுகாய் தயாரித்த கதையைப் பாட்டாகப் பாடினார்கள். எல்லோரையும் சேர்ந்து பாடச் சொன்னபடி கெட்ட வார்த்தை சொல்லி எல்லாக் குரல்களும் உயர, அல்வாரிஸ் அதெல்லாம் வேறே கிரகத்தில் நடப்பது போல், கவனிக்கத் தலை திருப்பவே இல்லை.

பரிமாற வந்திருக்கும் அழகுப் பெண்களில் ஒருத்தி விசும்பும் ஓசை கேட்டு லூசியா சமையலறை வாசலில் நின்றாள். இதுவரை மூன்று பேர் சாப்பிட்டபடியே அவளோடு சிருங்கார சேஷ்டைகள் செய்ய விருப்பம் தெரிவித்து உடுப்பை விலக்கச் சொன்னார்களாம். அத்தனை பேரும் கிழடு தட்டிக் கொண்டிருக்கும் அதிகாரி சைத்தான்கள் தான். 

லூசியா அவளிடம் தனக்கு வந்த சவரக் கோரிக்கையைச் சொல்லி, ”இதற்கு நான் எங்கே அழலாம் சொல்லு. இதெல்லாம் பொருட்படுத்தவே செய்யாதே. அல்வாரிஸ் கிட்டே, அதான் உடமையாளர்கிட்டே புகார் செய். அது இவங்களோட கேடுகெட்டதனத்தைக் குறைக்காதுதான். இன்னும் அதிகமாக்காமல் நிறுத்தும்” என்றாள் சமாதானமாக. அந்தப் பெண் நன்றி சொல்லிக் கண்ணைத் துடைத்துக்கொண்டு ஆட்டுக்கறியும் சோறும் எடுக்கப் போனாள்.

சிறு பீங்கான் கிண்ணத்தில் மிளகு விழுது வாங்கி கவிச்சியோடு தொட்டுக் கொள்வது இரண்டு தலைமுறை முந்திய போர்த்துகீஸ் ஆண்களின் பழக்கவழக்கத்தில் பட்டது, அவர்களைப் பின்பற்றி கொங்கணி கோவாக்கார கிறிஸ்துவ உள்நாட்டுக்காரர்களும் அப்படி காரமான துணைத் துவையலோடு மாமிசம் உண்டு, கூடவே ஒரு மடக்கு முந்திரி ஃபென்னி குடிப்பது அடுத்து பழக்கமானது. 

ஆனால் இப்போது அவ்வளவு காரமாக யாரும் சாப்பிடுவதில்லை. இந்தக் கடன்காரக் கிழவன் அதில் விதிவிலக்கு.

கிண்ணத்தை அவன் அருகில் வைத்து விட்டுப் போகும் போது பின்னால் இருந்து அவன் கூப்பிட்டான். ”ஏ பொண்ணு கிண்ணத்தை வச்சுட்டுப் போனால் போதுமா. மத்தது எல்லாம் யார் செய்வாங்க? உங்க அம்மை தேவடியாளா?” என்று கேட்டான். 

“மத்தது எது எஜமானே?” என்று விசாரித்தாள் லூசியா. 

“வாய் உபச்சாரம்னு சொன்னா நீ கொடுத்திடுவியா என்ன?” 

அவன் சிரிக்க,  கேவலமான மரியாதை நிமித்தம் அவன் அருகில் எதிரே பின்னால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள். லூசியாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அவள் முகம் போன போக்கு கண்டு அல்வரிஸ் புரிந்து கொண்டு வேகமாக அங்கே வந்தார். 

”சின்ஹோர், மிளகு விழுது வேணும்னா நீங்களே எடுத்து உங்க தட்டுலே போட்டுக்குங்க”. 

லூசியா சொல்லிவிட்டு நடக்க, பொலிகாளை மாதிரி அவள் பின்னால் ஓடி இடுப்பில் கைகொடுத்து அவளைத் திரும்பவும் தன் இருக்கையை நோக்கி இழுத்து வந்தான் ராணுவ அதிகாரி.

”குட்டி, நானே மொளகு விழுது போட்டுக்கணுமா? அதுக்கு முன்னாடி அது ருசியா இருக்கான்னு பார்த்து சொல்லு கொஞ்சம்”. 

சொல்லியபடி லூசியாவின் தலையை விழுதுக் கிண்ணத்துக்குள் அமிழ்த்தினான் அவன். 

ஓவென்று குரல் எடுத்து அலறினாள் லூசியா. 

”ஐயோ கண்ணு எரியுதே.. ஒண்ணும் பார்க்க முடியலியே. குருடாகிட்டேன். இருட்டிட்டு வருது.. நெஞ்செல்லாம் எரியுதே.. கண்ணை கழுவிக்கணுமே தண்ணீ குடுங்க ஆல்வாரிஸ் சின்ஹோர்.. ஐயோ எரியுதே”

 அவள் பக்கத்தில் அல்வாரிஸ் நடந்து மெல்ல அவளை அருகில் ஒரு நாற்காலியில் அமர வைத்தார். யாரோ ஒரு குவளையில் தண்ணீரோடு வந்தார்கள். அதை லூசியாவின் கண்ணில் துடைக்கப் போவதற்கு முன் அல்வாரிஸ் அவரைத் தடுத்து நிறுத்தினார்.  

“மிளகு கண்ணுலே பட்டா தண்ணியை விட்டுக் கழுவக் கூடாது. எரிச்சல் கூடத்தான் கூடும். குறையாது”.

ராணுவத் தடியன் ஒன்றுமே நடக்காதது மாதிரி தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோழிக்கறி ஒரு தட்டு கொண்டு வர ஏன் நேரமானது என்று சத்தம் போட்டான் இங்கிதம் இல்லாமல். பரிமாறும் பெண்கள் பம்பரமாகச் சுழன்று அவனுக்கும் மற்றவர்களுக்கும் பரிமாற, லூசியா படும் துன்பம் உறைக்காமல் அந்தக் கூட்டம் பசியாறிக் கொண்டிருந்தது.

லூசியா இரு கண்ணையும் பொத்தியபடி தரையில் உருண்டாள். அவளை மெதுவாக சமையல்கட்டுக்கு அழைத்துப் போனார்கள் பரிமாற வந்த பெண்கள். 

“நாகு, பால் இருக்கா பாரு”. அல்வாரிஸ் கேட்டார். 

“இருக்கு சின்ஹோர். ரெண்டு படி இருக்கு. பாயசம் காய்ச்ச எடுத்து வச்சது. சர்க்கரை கம்மியா இருக்குன்னு…” 

நாகுவைக் கை காட்டி அமர்த்தினார் அல்வாரிஸ். 

“ஐயோ எரியுதே நான் பொட்டையாகிட்டேனே அல்வாரிஸ் சின்ஹோர். வேலையிலே வச்சுப்பீங்களா?” 

லூசியா கண் எரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் உட்கார்ந்தாள். 

“சரியாயிடும்மா. கொஞ்சம் பொறுத்துக்க.. நாகு, பால், இருக்கா? பிதாவுக்கு நன்றி. பாலை ஒரு குவளையிலே ஊற்று. கொஞ்சம் போதும். பஞ்சு எடுங்க அடுத்து .  மரப்பெட்டியிலே மருந்தோடு மருந்தாக கொஞ்சம் பொதியா வச்சிருக்கு. கிறிஸ்துமஸ் நேரத்துலே தீபத்துக்கு திரி செஞ்சு போட.. எடுத்தியா?” 

நாகு ஓடிப் போய் மரப்பெட்டியில் இருந்து பஞ்சுப் பொதி எடுத்துவந்தான். அதில் இருந்து கொஞ்சம் பிய்த்து ஒரு சிறு பந்தாக்கினார் அல்வாரிஸ்.

“சின்ஹோர் கோவா போயிடறேன் விட்டுடுங்க. ஐயோ கண் போச்சே. எரியுதே”. 

லூசியா இன்னும் பலமாக அழுதாள். அவள் கண் இரண்டும் வீங்கி இருந்தன.

தாய் தந்தை போல லூசியாவைத் தோளில் சார்த்திக் கொண்டு அல்வாரிஸ் பாலில் நனைத்த பஞ்சுப் பொதியை லூசியா கண்ணின் மேல் வைத்து மெல்லத் துடைத்தார். 

ஐந்து நிமிடம் இரு கண்களும் பால் நனைந்து கழுவப்பட, சென்ஹோர், நன்றி எரிச்சல் ரொம்ப  குறைஞ்சுடுச்சு, நன்றி என்று சிரித்தபடி கண்ணைத் திறந்தாள் லூசியா. 

“கண்ணு தெரியுது கண்ணு தெரியுது”. 

அவளை அப்படியே பிடித்து இன்னும் மிச்சமிருந்த பாலை எல்லாம் பஞ்சுப் பந்தில் நனைத்து அவள் கண்களைத் தொடர்ந்து கழுவினார் அல்வாரிஸ்.

முதல் பந்தி விருந்து முடிந்து சாப்பிட்டவர்கள் கைகழுவித் தாம்பூலம் வாங்கித் தரித்து ”சாப்பாடு பிரமாதம்” என்று சொல்லி ஒவ்வொருவராக வெளியே போனார்கள். கிராதக அதிகாரி லூசியா பக்கம் ஒரு வினாடி நின்றான். அப்புறம் நடந்தான். ஒன்றும் சொல்லவில்லை அவன்.

“சின்ஹோர் ஆல்வாரிஸ். தாணாவிலே போய் புகார் பண்ணனும்” என்றான் துணை மடையன் கோபத்தோடு, மெல்ல நடந்து போகும் அதிகாரியின் முதுகுக்குப் பின்னால்.

“எங்கே தாணாவே காலி. பாதி சேவகர்கள் தறிக்காரர் தெருவிலே புது சதுர்முக பசதிக்கு திறப்பு நாள். திகம்பரர் நிர்மல முனி பிரசங்கமாம். ராணியம்மாவுக்கு காவலாக போயிருக்காங்க.”  

மீதி காவலர்கள்? ”அவங்க கோகர்ணத்துலே சதுர்முக பசதி திறப்பு நாள் அங்கேயும். யாரோ மலத்தை சட்டியிலே வச்சு உள்ளே எறிஞ்சுட்டாங்களாம். அங்கே கலவரம். பாதுகாப்புக்கு போயிருக்காங்க” 

அல்வாரிஸ் சொல்லியபடி வாசலுக்கு நடந்தார், 

”ஆக, அரசாங்கம் அம்மண சாமியார்களுக்கு பாதுகாப்பு தரத்தான். மக்களுக்கு இல்லே”. நாகு சொல்கிறான். 

“நிச்சயம் அப்படி இல்லே. மிளகுராணிக்கு தெரிந்தால் நிச்சயம் உடனே தீர்த்து வைப்பாங்க. அவங்க மாதிரி ஒரு மகாராணி வேறே யாருண்டு” அல்வாரிஸ் அழுத்தமாகச் சொன்னார்.

அடுத்த கூட்டம் புதுச் சிப்பாய்கள் உணவு கொள்ள வந்து கொண்டிருந்தார்கள். 

(தொடரும்)

Series Navigation<< மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்றுமிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று  >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.