- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
– ஜெருஸோப்பா, ஹொன்னாவர்
இரா. முருகன்
(ஒரு நாள் 60 நாழிகை – 24 மணி நேரம் – ஒரு நாழிகை 24 நிமிடம்-ஒரு மணி 2.5 நாழிகை)

நள்ளிரவுக்கு அப்புறம் பத்து நாழிகைகள் கழிந்து ஐரோப்பிய கடியாரம் காலை நாலு மணி என்று நாதம் முழக்க, வைத்தியர் துள்ளி எழுந்தார். அவரோடு சகசயனம் செய்திருந்த அவர் மனைவியும், மகாராணி சென்னபைரதேவியின் தாதியுமான, சீனச்சி போல் மூக்கு சற்றே தட்டையான, அதனால் மிங்கு என்ற பகடி சீனப்பெயர் கொண்டவளுமான செண்பகலட்சுமி தன் வழுவழுத்த கனமான கால்களால் வைத்தியரை மடக்கினாள். அவர் முகத்தைத் தன் அடிவயிற்றோடு சிறைப் பிடித்து தலையைத் தடவினாள். ”ஓய் வைத்தியரே உமக்கு என்ன கிறுக்கா? பத்து நாழிகைக்கு எழுந்து என்ன பண்ணப் போகிறீர்? சுகமாக என் உடம்பு வாடை சுவாசித்துக் கொண்டு உறங்கும்” என்று கடைவாயில் எச்சில் வடியத் தூக்கக் கலக்கமும் ஏலம் மணக்கும் உதடுகளுமாக உபதேசம் செய்து மேலும் உறங்க முனைந்தாள்.
வைத்தியர், இனி ஆத்மா உறங்கவா, விழிக்கவா, உறங்குவது போல் விழிக்கவா, விழிப்பது போல் உறங்கவா, எல்லாம் சேர்த்து நிகழவா, எதுவுமே செய்யாமல் சும்மா கிடக்கவா என்ற தத்துவ விசாரத்தில், மிங்குவின் அத்தர் வாசத்துக்கு நடுவே ஒரு நிமிடம் மூழ்கினார்.
ஆத்மா கிடக்கட்டும், அற்ப சங்கைக்குப் போய்க் குத்த வைக்க வேண்டும் என்று நிமிடத்துக்கு நிமிடம் அவசம் கூடிக்கொண்டு போக, கட்டிலை விட்டு இறங்கினார்.
“போங்க ஓய் போங்க. அப்புறம் தேடிக்கொண்டு வருவீர்தானே, ஒன்றும் இவிடம் காட்டித்தரப்பட மாட்டாது”. அவள் சொல்லி விட்டு நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
கழிவறைக்குப் போன காரியம் முடித்து தோட்டத்தில் காற்று வாங்க உட்காரும் கல் பாளம் பதித்த மேடையின் குளிர்ச்சியை அனுபவித்தபடி சற்றே அமர்ந்து கண் மூடிக் கொண்டார்.
நெல்பரலி.
அதைத் தான் இன்று வஸ்திரகாயம் பண்ண வேண்டும். நேற்று சூரிய உதயத்துக்கு முன் கண்டெடுத்தது. கண்டெடுக்காமல் இருந்தால் பிரதானி நஞ்சுண்டையாவின் அம்மா உயிர் விடை பெற்றுப் போயிருக்கலாம். இனி ஆத்மாவும் உடம்பும் ஒன்றாக இருக்க பைத்தியநாத் மட்டும் சிகிச்சையும் சிஷ்ருசையும் செய்யக் கூடிய மருத்துவர். நாற்பது வயது.
இதற்கு முன்பு இன்னொருத்தரும் இருந்தார். அவர் பைத்தியநாத்தின் தந்தையார் அரிந்தம் வைத்தியர். போய்ச் சேர்ந்து பதினைந்து வருடம் ஆகிவிட்டது. பைத்தியநாதைவிட அரிந்தம் வைத்தியர் ஆழ்ந்த அறிவும், நிலைமை அவதானமும், தக்க சமாளிப்பும் கொண்டவர். நெல்பரலி மூலிகையை ஒரு வாரம் முன்பே தேடிக் கண்டு பிடித்திருப்பார். அல்லது தேடிக் கண்டதுதான் நெல்பரலி என்று சாதித்திருப்பார்.
தகப்பனார் நினைவோடு கலுவத்தை சரணாகதி மந்திரம் சொல்லி வணங்கினார் பைத்தியநாத் வைத்தியர். அப்பா வங்காளத்தில் ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் கற்றபோது பிள்ளை பிறந்ததால் வங்காள வழக்கப்படி பைத்யநாத் என்று பெயர் வைத்தது அடிக்கடி களியாக்கப்படுகிறது. வகரம் எல்லாம் பகரமாகப் பார்க்கும், கேட்கும், உச்சரிக்கும் வங்காளிகளோடு பகுதி வங்காளியாகத் தானும் சேர்ந்த காரணம் நோக்கி வியந்துகொண்டிருந்தார் வைத்தியர். கை சுறுசுறுப்பாக நெல்பரலி மூலிகையைக் கலுவத்தில் இட்டு சிறு உலக்கைகளால் நையப் புடைத்துக் கொண்டிருந்தது. வாய் கோவிந்த நாமம் சொல்லியபடி இருந்தது.
நேரம் காலை ஐந்து மணி. கோவிந்த நாமம் சொல்லியபடி மூலிகை இடித்துக் கொண்டிருந்த வைத்தியரின் மிர்ஜான் வீட்டுக்கு அடுத்து காரைக் கட்டிடத்தில் நீளவாக்கில் வளைந்து நீண்டு போகும் குதிரை லாயம் தீபம் ஒளிர இருட்டுக்கு விடைகொடுத்தது. தீபமும் இன்னும் சற்று நேரத்தில் சூரியன் உதயமாக, அமர்த்தி எடுத்து வைக்கப்படும். லாயத்தின் ஊழியர்கள் பல் துலக்கியவாறு வைத்தியரின் வீட்டுத் திண்ணையை நோட்டம் விட்டபடி இருந்தார்கள். அந்த மூன்று பேரும் ஜெருஸோப்பாவின் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, குதிரைகளைப் பராமரிக்கும் வேலை அளிக்கப்பட்டவர்கள்.
“வைத்தியரே, அதென்ன மருந்தை இடிச்சுக்கிட்டே கோவிந்தா கோவிந்தான்னு கூவறீர். கோவிந்தன் வந்தால் மருந்து எதுக்கு?”
அவர்களின் கேள்விக்கு வைத்தியர் பதிலே சொல்லாமல் புன்சிரிப்புடன் உள்ளே போகிறார்.
நேரம் பதினைந்து நாழிகை. காலை ஆறு மணி. மிர்ஜான் கோட்டை குதிரை லாயத்தில் கட்டி இருந்த பதினைந்து குதிரைகளும் ஒவ்வொன்றாகப் பரிசோதிக்கப்பட்டன. பரிசோதனை, குதிரையின் உடலில் கீறல், காயம், சொரி, சிரங்கு எதுவும் உண்டா என்று கவனிப்பது தான். இருந்தால் லாய ஊழியர்கள் ஏன், எப்படி ஏற்பட்டது என்று சொல்ல வேண்டியிருக்கும். கோட்டைக் காவலர்கள் ஏறிவரும் இந்தக் குதிரைகள் தவிர வெளியே வேறு லாயங்களிலும் குதிரைகள் பராமரிக்கப்படுகின்றன. இவை தவிரப் பெரிய அதிகாரிகளின் வாகனக் குதிரைகளும், ஏறிப் போகும் மட்டக் குதிரைகளும் அவரவர்களால் பராமரிக்கப் படுகின்றன. இந்த வகைச் செலவுக்கு அரசு மானியம் உண்டு.
இரும்பு வாளிகளில் மஞ்சள்பொடியும் உப்பும் கலந்த வெதுவெதுப்பான நீர் வைக்கப்பட்டிருக்கின்றது. குதிரைகளின் மேல் பூச்செடிக்குத் தண்ணீர் விடும் பூவாளிகளில் தண்ணீர் விடப்பட்டுக் கழுவப்படுகிறது.
“முனி, குதிரையை சும்மா விடமாட்டியா?”
சிம்மாத்திரி என்ற மூத்த லாய ஊழியர் சிரித்தபடி அடுத்த நிலை ஊழியர் முனியைக் கேட்கக் காரணம் முனி ஒவ்வொரு குதிரையாக பீஜத்தில் பிடித்து இழுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“என்ன செய்ய சிம்மா, இதைப் பிடிச்சுப் பார்க்கத்தான் எனக்கு கூலி. சரியா இல்லேன்னா நான் தான் பதில் சொல்லணும்”. கவனமாக இறுக்கிப் பிடித்தபடி இன்னொரு குதிரையை சோதித்துப் போக விடுகிறார் முனி. ”அத்தனை குதிரைகளுக்கும் என்மேல் மாறாத இச்சை” என்கிறார் அவர்.
பதினேழரை நாழிகை காலை ஏழு மணி ஹொன்னாவர் நகரின் சந்தை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து வந்த காய்கறிகளும், ஷராவதி நதித்தடத்தில் தூண்டிலிட்டுப் பிடித்துப் புதியதாக அனுப்பி வைக்கப்பட்ட மீன்களும் பிரப்பங்கூடைகளில் வைத்து விற்கும் சந்தைக் கடைகளில் சத்தமாக உள்ளது. தினமும் வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவதில் உள்ள சந்தோஷத்துக்காக குடும்பப் பெண்கள் அடுத்த பேரத்தை ஆவலுடன் கண்கள் தேடக் கூடைகளோடு சந்தையில் நடக்கிறார்கள்.
ஒடித்தும் வளைத்தும் மூக்குத் தண்டில் தேய்த்தும் கறிகாய்களை இம்சித்து பேரமும் பேசி வாங்க வந்தவர்கள் இளம் பெண்கள் என்றால் கடைக்காரர்கள் சும்மா சிரிக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் திட்டுகிறார்கள். அநியாயத்தை சரி செய்ய கோட்டைதான் குறுக்கிடணும் என்று கத்தரிக்காய் விற்பனையில் மிளகு ராணியை மத்தியஸ்தம் செய்ய அழைக்கிறார்கள்.
மீன் கடைகளை விலக்கி அவசரமாக நடந்து போகிறார்கள் பிராமணத்திப் பெண்கள். குறைந்த விலையில் மீன் வாங்க வரச்சொல்லி இவர்களை மீன்கடைக்காரர்கள் அழைப்பது தினசரி நடப்பதுதான்.
“நாங்க எல்லாம் மீன் தின்ன ஆரம்பிச்சா இந்தப் பொன்னாவரம் மட்டும் இல்லை, விஜயநகரத்திலேயும் மீன் கிடைக்கத் தட்டுப்பாடு வந்துடும்” என்று சிரித்தபடி பதில் சொல்லும் பார்ப்பனியோடு சந்தையே சிரிக்கிறது. அவள் ஹொன்னாவர் என்ற ஊர்ப் பெயரை நல்ல தமிழில் பொன்னாவரம் என்று உச்சரிப்பதை அந்தக் கூட்டம் ரசிக்கிறது.
வீடுகளில் பால் கறக்க ஏற்படுத்தப்பட்டவர்கள் மாடுகளைக் கறந்து கறந்து பால் வாசனையோடு நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்கேயோ கன்றுக்குட்டி தாய்ப் பசுவை அழைக்கும் குரல்.
”இருடி வரச் சொல்றேன்”.
பால் கறந்து விட்டு வந்தவர்கள் கன்றின் குரலை ஒத்தியெடுத்து ஒலிபரப்ப, எங்கிருந்தோ தாய்ப்பசுவின் ’இதோ வந்துட்டேன்’ குரல் ஓங்கி ஒலிக்கிறது.
இருபது நாழிகை. காலை எட்டு மணி. ஜெருஸோப்பா பிரதானி சந்திரப்பிரபு மாளிகையில் பிரதம மடையர் (மடைப்பள்ளியில் சமைக்கும் ஊழியர்) தாசாச்சாரியார் அடுப்பில் வெங்கலப் பாத்திரம் ஏற்றி ராகி களி கிண்டியபடி மெதுவான குரலில் ’ராகி தந்தீரோ பிக்ஷைக்கு ராகி தந்தீரோ’ என்று புரந்தரதாசர் தேவர்நாமா பாடிக் கொண்டிருக்கிறார்.
இசை நிகழ்ச்சி மாதிரி அவருடைய உதவியாளர்கள் கூடப்பாட, கிண்டப்படும் களியில் மிளகைக் காணோம். ஒரு மாறுதலுக்கு பச்சை மிளகாய் அரிந்து போடப்பட்டிருக்கிறது.
“விட்டலன் மிளகுக்கும் மிளகாய்க்கும் வித்தியாசம் பார்ப்பதில்லை” என்கிறார் மடையர்.
“எல்லோரும் மிளகு வேண்டாம்னு வச்சா நாளைக்கு எதை வித்து ராஜதானியிலே பணம் கிடைக்கும்? நம்ம ராஜாங்கம் வேணும்னா மிளகுப்பொடி, பரங்கி கொடி பறக்கணும்னா மிளகாய். எதுன்னு முடிவு செஞ்சுக்கங்க”.
அம்மியில் துவையல் அரைத்துக் கொண்டிருந்த உப மடையர் சொல்வதைப் பின்னால் நின்று பிரதானி சிரத்தையாகக் கவனிக்கிறார்.
“தாசாச்சார்யாரே, இனிமேல்கொண்டு நம்ம குசினியிலே மிளகாயும் வெங்காயமும் வரவேண்டாம். என்ன தெரிஞ்சுதா?”
பிரதானி களி வாடையை முகர்ந்தபடி வெளியே போகிறார். அரிந்த பச்சை வெங்காயத்தோடும், உப்புப் புரட்டிய மிளகாய்த் துண்டுகளோடும் ராகிக் களி தின்ன என்ன ருசியாக இருக்கும்! அவர் நாக்கில் உமிழ்நீர் சுரப்பதை விழுங்கி சிரமப்பட்டு அடக்குகிறார்.
இருபத்திரண்டரை நாழிகை. காலை ஒன்பது மணி. வெதுவெதுப்பான வெந்நீரில் வாசனாதி திரவியங்கள் கலந்து அரப்புப் பொடி தேய்த்து நீராட சென்னபைரதேவிக்கு தாதி மிங்கு உதவ, ஸ்நானம் முடித்து மடிப் பிடவை உடுத்தி மிர்ஜான் கோட்டை பூஜை மண்டபத்துக்கு வருகிறாள் மகாராணி.
தாதி மிங்குவும் பணிப்பெண் இன்னும் ஒருத்தியும் குளித்து மடி உடுத்து கூந்தலை வெண்பட்டுக் கட்டி மறைத்தபடி பூஜை மண்டபத்தில் ஓரமாகக் காத்திருக்கிறார்கள். நானாவித புஷ்பங்களும் ரோஜா வாடையடிக்கும் மைசூர் மட்டிப்பால் ஊதுவத்திகளும், தமிழ் பேசும் கல்வராயன் மலைப் பிரதேசத்திலிருந்து வரவழைத்த கட்டி சாம்பிராணிப் புகையுமாக பூஜை மண்டபம் கைலாசம் போல் மிளிர்கிறது. வயதான புரோகிதர்கள் நாலு பேர் பூசனை மந்திரங்களைச் சொல்கிறார்கள். பெரிய பிரம்புத் தட்டுகளில் வைத்த ரோஜாப்பூ இதழ்களையும் வில்வ இலைகளையும் சிவபிரானுக்கும், அடுத்து மகாவீரர் பிரதிமைக்கும், மெல்லப் பூவிதழ் தூவி அர்ச்சனை செய்தபடி இருக்கிறார் மகாராணி.
மிர்ஜான் கோட்டை சமையல் அறைகளில் சுத்தமாகப் பக்குவப்படுத்தப்பட்ட பொங்கலும் பாயசமும் நைவேத்தியமாகின்றன. ருசிபார்க்கும் உத்தியோகஸ்தன் கொஞ்சம் நைவேத்தியப் பொங்கலைத் தின்று பாயசம் ஒரு மடக்கு குடித்து சரிதான் என்று வணங்கிச் சைகை தர, பணியாளர்களும், தொடர்ந்து அரசியாரும் நைவேத்திய பிரசாதம் உண்கிறார்கள்.
இருபத்தைந்து நாழிகை. காலை பத்து மணி. பிரதானி நஞ்சுண்டய்யா ஹொன்னாவரில் தன் இல்லத்தில் உண்டு முடித்து தாம்பூலம் தரித்து, வேஷ்டியை பஞ்சகச்சமாக அணிகிறார். மேலே முகலாய பாணி குப்பாயத்தை அணிந்து பொத்தானைத் துளையில் திணித்து நேராக வைத்தபடி குப்பாயத்துக்குள் முப்புரிநூல் தெரியாமல் இழுத்து விட்டுக் கொள்கிறார். தலையில் குல்லாய் கவிழ்த்தால் மிர்ஜான் கோட்டையில் பிரதானிகள் அரசியோடு ஆலோசனை நடத்தப் புறப்பட்டு விடலாம். நீளக் குல்லாயோடு அத்தனை பிரதானிகளும் ஒரு பார்வைக்கு கிருஷ்ண தேவராயர் போலத் தெரிகிறார்கள். இன்னொரு பார்வைக்கு கூத்தாட வந்த கோமாளிகள் போல் தோற்றம்.
அரைக் குல்லாவை எடுத்து வா என்று மலைப் பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் புதுப் பணியாளனுக்கு உத்தரவு தருகிறார் பிரதானி. அவன் உள்ளே ஓடிப்போய் பளபள என்று நீலப்பட்டில் நெய்த மார்க்கச்சை ஒன்றை எடுத்து வந்து பவ்வியமாக நீட்டுகிறான்.
”இது எதுக்கு எனக்கு? கச்சை தலைக்கு மேலே போச்சுன்னா எல்லா அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் அதுக்குத்தான்”.
பிரதானி சொல்ல, புரியாமல் மறுபடி உள்ளே போய் சிவப்புக் கச்சையை எடுத்து வந்து தருகிறான்.
”ஒரு கச்சையே கஷ்டம். ரெண்டா? ஈசுவரா”.
பிரதானி தானே உள்ளே போய் குல்லாவைத் தேட குல்லா தொங்கும் கம்பிக் கொடிக்குக் கீழே பிரதானியின் மனைவி கால் மடக்கி அமர்ந்து பணிப்பெண்களோடு ஊர்வம்பு பேசியபடி இட்டலி தின்று கொண்டிருக்கிறாள். குல்லா எச்சில் இலையில் விழாமல் கொடியோரமாக இழுத்து எடுத்துத் தலையில் வைக்கும்போது நேற்றைக்கு எறும்போ எதுவோ உள்ளே இருந்து கஷ்டப்படுத்தினது நினைவு வரக் குல்லாயைத் திரும்ப எடுத்துத் தரையில் வேகமாகத் தட்ட, எறும்பையும் காணோம் ஒண்ணையும் காணோம். வேலைக்காரன் கொண்டுவந்து காலில் இட்ட வளைந்த சீன ஜோடுகள் மெத்தென்று பொருந்தியிருக்க, பிரதானி மிர்ஜான் கோட்டையில், ராணியம்மா சொல்படி ஏகமனதாக முடிவெடுத்து, உலகைப் பராமரிக்கப் புறப்பட்டுப் போகிறார்.
முப்பது நாழிகை. பகல் பனிரெண்டு மணி. ஹொன்னாவர் நகர் ரதவீதியில் மிட்டாய் அங்காடியில் நெய்யும் உளுத்தம் மாவும் கலந்து பொறித்தெடுக்கும் வாசனையான புகை எழுந்து தெரு முழுக்கக் கமழ்கிறது.
பெரிய குஞ்சாலாடுகள் என்ற லட்டு உருண்டைகள் எட்டு வரிசையாக அடுக்கிய தட்டைக் கவனமாகச் சுமந்தபடி கடை நுழைவுப் பகுதிக்கு வந்த பணியாள் ஒரு வினாடி அங்கே தரை சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணின் விலகிய முந்தானையில் பதிய, இரு லட்டுகள் தட்டிலிருந்து சிதறிக் கீழே விழுகின்றன. அந்தப் பெண் ஆசையோடு, உதிர்ந்த லட்டுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு போகிறாள்.
பின்னாலேயே வந்த அங்காடி உரிமையாளினி ரோகிணி அந்தப் பணியாளன் மீதி லட்டுகளைக் கவனமாக கண்ணாடி அலமாரியில் வைக்கும் வரை காத்திருந்து அவனைக் கேட்கிறாள் – ”ராத்திரி பொண்டாட்டி எதுவும் செய்ய விடலியா? பக்கத்து வீட்டு லட்டு வேண்டியிருக்கா வேலை நேரத்துலே?”
அவன் நெளிகிறான். ”சீ போ சீக்கு பிடிச்ச காண்டாமிருகமே! வேணும்னா இன்னிக்கு ஒரு மணி நேரம் முன்னாலே வீட்டுக்குப் போ. ரெண்டு லட்டு எடுத்துப் போ அவளுக்கு. நான் கொடுத்ததா இருக்கட்டும்’.
”ரோகிணியம்மா”. அவன் கை கூப்புகிறான். ”வேலையைப் பாருடா”. ரோகிணி சொல்லியபடி உள்ளே போகும்போது வழக்கமான கடைத்தெரு வணிகர்கள் சாப்பாட்டுத் துணையாக காரச் சுண்டல் வாங்க வந்து கொண்டிருப்பது கண்ணில் படுகிறது.
சுண்டல் கிண்டியாச்சா என்று உள்ளே பார்த்துச் சத்தம் போட, ஆச்சு.
“இன்னிலே இருந்து இனிப்பு வாங்கினாத்தான் சுண்டல்”. அவள் கண்களைச் சிமிட்டி முட்டைக்கடை நாராயணப்பாவுக்குச் சொல்ல அவன் சொர்க்கத்துக்குப் போன மாதிரி மெய்மறந்து சிரிக்கிறான்.
ஒவ்வொருத்தரும் ஆளுக்கு நாலு லட்டுகளையும் சுண்டலோடு வாங்கிக்கொண்டு போகும்போது வீட்டில் விசேஷமா என்று ரோகிணி ஒவ்வொருத்தரையும் கேட்டு, ”இல்லேன்னா இனிமேல் இருக்கும்’ என்கிறாள் தட்டில் அடுக்கி வைத்த லட்டுக்களைச் சுட்டிக் காட்டி. அவளைத் திரும்பத் திரும்ப பார்த்துப் பார்வையால் பருகியபடி கடைத்தெரு கூட்டம் திரும்பி நடக்கிறது சிரிப்பும் கும்மாளமுமாக.
முப்பத்தைந்து நாழிகை. பிற்பகல் இரண்டு மணி. ஜெரஸோப்பா வண்டிச் சத்திரம். சத்திரத்தில் கருங்கல் பாளங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மேல் நல்ல சூடான வென்னீர் அடித்து ஊற்றப் படுகிறது. பாளங்கள் அடுக்கிலிருந்து உருவப்பட்டு, வடித்து சூடாக சமையல்மனையிலிருந்து வந்து சேரும் சோற்றுக் கூடைக்கு அருகே வைக்கப்படுகின்றன. பாளங்களில் சோறு வைக்கவும், வியஞ்சனமும், புளிக்குழம்பும் வைத்து உண்ணத் தரவும் ஆழமாகக் குழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நிரப்பித்தர பணியாளர்கள் நிற்கிறார்கள். இயன்றவர்கள் மூன்று காசு கொடுத்தும், இல்லாதவர்கள் விலையின்றியும் பகல் உணவு உண்டு போகலாம் என்று அறிவிக்கப்படுகிறது. வண்டிக் கோட்டத்து வண்டிக்காரர்கள் ஆளுக்கு மூன்று காசு கொடுத்தும், இல்லாதவர்கள் இயன்றதைக் கொடுத்தும் பகல் உணவுக்குக் கல்பாளங்களோடு தரையில் அமர்கிறார்கள். வயிற்றில் பசித்தீ கனன்று எரிய, சோறும் மற்றவையும் கொண்டு அது எல்லோருக்கும் ஒரு பொழுது மெல்ல அணைக்கப்படுகிறது.
நாற்பது நாழிகை. பிற்பகல் நான்கு மணி. ஹொன்னாவர் வெண்மாளிகை வீதியில் கணிகையர் வீடுகளில் அழகான பெண்கள் எழுந்து பசியாறுகிறார்கள். வாடிக்கையாளர்களோடு இரவு முழுக்கக் கூடியிருந்து விடிகாலையில் பசியாறி உறங்கப்போன அந்தப் பெண்கள் இன்றிரவு அணிய வேண்டிய, அணிந்து களைய வேண்டிய உடைகள் சீராக மடித்து நறுமணமூட்டி வைக்கப்படுகின்றன.
அவர்கள் கூட்டமாக நீராட மாளிகைக் குளங்களுக்குப் போகிறார்கள். நீராடித் தற்காலிகமாகப் புத்துணர்ச்சி பெற்று மாளிகையில் கிழக்கு பார்த்து ஏற்படுத்திய சிறு கோவிலுக்கு, ஈரம் காயத் துணி சுற்றிய கூந்தலோடு போகிறார்கள். வாடிக்கையாளர்கள் அதிகம் வரப் பிரார்த்தித்து அவர்களைச் சுற்றி சிறு மணிகள் முழங்க, தூபம் கமழ தீபாராதனை காட்டப்படுகிறது.
நாற்பத்தைந்து நாழிகை. மாலை ஆறு மணி. ஜெரஸோப்பா கடைவீதியிலும், ஹொன்னாவர் ரதவீதியிலும் துணி விற்கும் கடைகளும், பாத்திரம் விற்கும் கடைகளும், வளையலும், நகப்பூச்சும், உடம்பில் அள்ளிப்பூசி மணக்க வைக்கும் வாசனைத் தைலங்களும், அத்தரும், ஜவ்வாதும் விற்கும் கடைகளும் பரபரப்பாகின்றன.
கடைத்தெருவில் பொருள் வாங்க வந்தவர்கள் தெருக் கோடியில் குதிரை சாரட் வாகனங்களை நிறுத்தித் தெருவோடு நடந்து கடைகடையாக நின்று போகிறார்கள்.
ஜவுளிக்கடைகளில் பிடவை வாங்க வந்த பெண்கள் விற்பனையாளனிடம் பிடவைகளைப் பிரித்துக் காட்டச் சொல்கிறார்கள். அணிந்த மாதிரி துணியை தோளில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். மார்க்கச்சு தைக்கும் தையல்காரர்கள் கடைக்கு உள்ளே ஒற்றைத் திரியிட்ட நிலவிளக்கின் ஒளியில் விதவிதமான ஸ்தனங்களை உற்று நோக்கித் தேவையான புதுத்துணி கத்தரிக்கிறார்கள்.
கோவில்களில் சங்கீத வினிகை வழங்க (கச்சேரி செய்ய) வந்திருக்கும் கலைஞர்கள் இசைக்கருவிகளை மீண்டும் மீண்டும் மீட்டி சுநாதம் தர வழிவகை செய்கிறார்கள். பாடும் இசைஞர்கள் சற்றுப் பாடித் தொண்டையைச் சீர் செய்ய சீரகமும், சுக்குப்பொடியும் இட்ட சூடான நீர் பருகுகிறார்கள்.
ஐம்பது நாழிகை. இரவு எட்டு மணி. ஹொன்னாவர் மதுசாலையில் கூட்டம் பெருகி வழிகிறது. போர்ச்சுகீசிய ராணுவ வீரர்களும், அராபியர்களும், நகர தனவந்தர் வீட்டுப் பிள்ளைகளும், கணிகையரோடு கூடும் முன் நல்ல மதுவை ருசித்துப் போக வந்தவர்களுமாக கலகலப்பாக இருக்கும் மதுசாலை.
போர்த்துகீசிய நாணயம் நான்கு குருஸடோவுக்கு ஒரு வராகன் நாணய மாற்று செய்கிற மதுக்கடை ஊழியனோடு, கப்பலிறங்கி ஹொன்னாவர் வந்த போர்த்துகீசிய வீரனொருவன் அதிக வராகன் மாற்றாகக் கேட்டுத் தகராறு செய்ய, வெளியே கொண்டு போய் விடப்படுகிறான்.
ஐம்பத்தைந்து நாழிகை. இரவு பத்து மணி. மதுசாலையின் மறுபக்கம் கள் விற்பனை சுறுசுறுப்பாக நடக்கிறது. மண் பானைகளிலும் தாழிகளிலும் இரவில் பறக்கும் சிறு பூச்சிகள் இறந்து கிடக்கும், போதை மிகத்தரும் தேறல் பருகக் கிடைக்கிறது. அது வடிகட்டாமல் பருகப்படுகின்றது. வெல்லமும் தேனும், முந்திரிப் பழச்சாறும் புளிக்க வைத்து வடித்த மதுவும், அரிசி கொண்டு உண்டாக்கிய மதுவும், தென்னங்கள்ளும், பனங்கள்ளும் பருகி லகரி தலைக்கேறியவர்கள் தரையில் உருண்டும், பாடி ஆடி விழுந்தும் அடுத்த கோப்பைக்கு அரை வராகன் காசு தனியாக மடியில் முடிந்ததை எடுத்துக் கடைக்காரர்களிடம் நீட்டுகிறார்கள். இன்னிக்கு இதுதான் கடைசி கிண்ணி என்றபடி மடியில் இன்னொரு முடிச்சைத் தடவிக் கொள்கிறார்கள்.
அறுபது நாழிகை. இரவு பனிரெண்டு மணி. காவல் வீரர்கள் சிலர் குதிரையேறியும், பெரும்பாலும் கையில் நாட்டுத் துப்பாக்கிகளைச் சுமந்து ஆளரவமில்லா தெருக்களில் வரிசையாக நடந்தும், கடைவீதியில் பூட்டி அடைக்கப்பட்ட கடைகளின் வாசல், பின்பகுதி, பக்கவாட்டில் அங்கும் இங்குமாகப் பிரப்பங்கழிகளால் தட்டிச் சோதித்தும், குழந்தைகள் உறங்க அடம் பிடித்தால் அஞ்ச வைக்கும் விதத்தில் ஓ என்று கூச்சலிட்டும், பாதுகைகள் ஓங்கிச் சப்திக்க நடை பயின்று போகின்றார்கள். வண்டிப் பேட்டையில் வண்டிகளிலிருந்து குதிரைகள் விடுவிக்கப்பட்டு வண்டிக் கூடுகள் தலை தாழ்த்தி வைக்கப்பட்டிருக்க, குதிரைகள் நின்று கொண்டே உறங்குகின்றன.
(தொடரும்)
ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form: