- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
ஹொன்னாவர், கெலடி 1605

ஹொன்னாவர் ரதவீதியில் பரபரப்பு ஏற்படுவதற்கு முன் மாந்தோப்புத் தெரு இல்லத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று நேமிநாதன் தீர்மானம் செய்திருந்தது நிலைகுலைந்து போனதற்கு பாதிராத்திரிக்கு மேலும் விழித்திருக்க வைத்த ரோகிணி காரணம் இல்லை.
மாந்தோப்புத் தெருவே மரங்களின் அணிவகுப்புக்கு இடையே இருப்பது. வேம்பும், மலை வேம்பும், நெடுநெடுவென்று நெட்டிலிங்க மரங்களும், அசோகமும், பலா மரங்களுமாக தெருவோரம் வரிசையாக நிற்கும். வீடுகளுக்கு நடுவே ஒன்றிரண்டு மாமரங்கள் தட்டுப்படாமல் இருக்காது.
நாள் முழுக்க வெப்பம் தட்டுப்படாமலும் ராத்திரியில் குளிர் மிகுந்தும் உள்ள சூழலில், படுத்தது தெரியும், எழுந்தது தெரியும். காலை ஐந்துக்கு எழ நினைத்தது, ஏழுக்கு எழுந்தானது.
இன்னும் ஒரு வாரம். நேமிநாதனுக்கு மனை வாடகைக்குக் கொடுத்திருக்கும் நாகேச பட்டர் நேற்றைக்கே சொல்லி விட்டார் –
”ஸ்வாமின், நீங்கள் பேஷாக நடுக்கூடத்திலே ஒத்தக்கால்லே நின்னுண்டு இருங்கோ, மூக்கிலே விரலை விட்டுண்டு சம்மணம் கொட்டி திண்ணையிலே உக்காந்துண்டிருங்கோ, சமையல் உள்ளுலே குப்புறப் படுத்திண்டிருங்கோ, தோட்டத்துலே இலை போட்டு பலகாரம் பண்ணிண்டு இருங்கோ. நீங்க வருங்கால மகாராஜா. நான் எப்பவும் பிரஜைதான். வருங்காலத்திலே ஜீவிச்சிருந்தா பல் இல்லாம போன பிரஜை. இந்த பிரஜைக்கு ஒரே ஒரு அபேக்ஷைதான். உங்க பார்யாளை கொண்டு வந்து வச்சுண்டு ஜாம்ஜாம்னு இருங்கோ. மத்த ஸ்த்ரிகள் ஆத்துலே சமைக்க, பெருக்கி மெழுக இப்படி வந்துட்டு போகட்டும். மத்ததுக்கு உசிதம் போல பண்ணுங்கோ. உங்களுக்கு தெரியாததில்லே”.
பட்டர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான் என்று நேமிநாதனுக்கும் பட்டது. மிளகுராணி மிர்ஜான் கோட்டை மாளிகைக்கு வெளியே போகச் சொன்னதும் இங்கே ரோகிணி முயற்சியில் நாகேச பட்டர் வீடு பூட்டியிருந்தது திறந்து துப்புரவு செய்யப்பட்டு நேமிநாதன் வசிக்க இடம் ஏற்படுத்தித் தரப்பட்டது. மாதம் முன்நூறு வராகன் பட்டருக்கு குடக்கூலியாகத் தரவேணும் என்றும் ஒப்பந்தமானது.
தத்துப் புத்திரன் நேமிநாதனின் மனைவி ரஞ்சனா தேவி எங்கும் போக வேண்டாம், கோட்டையிலேயே இருக்கலாம் என்று சென்னபைரதேவி மகாராணி நிர்ணயித்தது மூலம் நேமிநாதனுக்கு மட்டும்தான் வெளியே போக உத்தரவு என்று தெரிந்தது.
சந்தேசங்கள் எப்போதும் கீழ் உத்தியோகஸ்தர் மூலம் அறிவிக்கப்படுவது வாடிக்கை. என்றாலும் சென்னா தன் வளர்ப்பு மகனை வெளியேற்றி வெளியிட்ட அதிகார ஆணையை பிரதானி நஞ்சுண்டய்யா தான் அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பித்தார்.
அதற்கு முக்கிய காரணம் நேமிநாதனின் அரசகுமார அந்தஸ்து என்பதோடு நேமிநாதனின் மூத்த நண்பர்; நேமிநாதன் புழங்கும் ஹொன்னாவர் ரதவீதியில் மனை எழுப்பி ஐம்பது வருடமாக இருக்கிறவர் அவர்; முலைகளும் நிதம்பமும் வரும் கொங்கணிக் கவிதைகளை (எல்லாக் கவிதையும் அப்படித்தான்) போர்த்துகீஸ் மொழியாக்கம் செய்வதில் கூட்டு சேர்ந்த கவிதா ரசிகர்கள்; எப்படியும் நஞ்சுண்டய்யா நேமிநாதனை சந்தித்து லிகிதத்தைக் கொடுத்து விடுவார் என்ற திடமான நம்பிக்கையும் தான்.
நேமிநாதன் அதேபடி சந்தேசத்தை வாங்கிக்கொண்டு, வலுக்கட்டாயமாக நஞ்சுண்டர் பிரதானியை இனிப்பு அங்காடிக்குள் இழுத்துப்போய், ஜயவிஜயீ இனிப்பு எடுத்து, வேண்டாம் என்று மறுத்தாலும் ஊட்டாத குறையாக நிர்பந்தித்துத் தின்ன வைத்தான்.
சென்னாவை விட்டு விலகி இருப்பதற்கான ஆணையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும், கொண்டு வந்தவருக்கு இனிப்பு வழங்கி அதைக் கொண்டாடுவதாகவும் காட்டிக் கொண்டான்.
அதற்கும் மேலே ஒருபடி போய் அந்த நேரத்தில் கடைக்கு வந்தவர்கள், தெருவில் அந்தப் பக்கமாக வந்தவர்கள், போனவர்களுக்கும் ஒருவர் விடாமல், சிலபேரைத் துரத்திச் சென்றும், ஜபர்தஸ்தியாக இனிப்பு எடுத்துக்கொள்ளச் சொல்லி நீட்டி ஊரோடு கொண்டாடினான் நேமிநாதன்.
சொல்லப் போனால் கடந்த ஒரு வருஷமாகவே பெரும்பாலான காலம் அவன் மிர்ஜான் கோட்டை அரச மாளிகையில் தங்குவதைப் பெரும்பாலும் தவிர்த்து, ஹொன்னாவரில் தான் தங்கியிருந்திருக்கிறான். அதுவும் ரோகிணியின் இனிப்பு அங்காடி மாடியை கிட்டத்தட்ட முழுவதுமாக அவனும் அவளும் சுகம் கொண்டாட விஸ்தாரமான இடமாக ஒதுக்கி வைத்திருந்திருக்கிறார்கள்.
நேமிநாதன் இருக்கும்போதெல்லாம் பரமன் மட்டும் வீட்டில் ரோகிணியின் மகன் மஞ்சுநாத்தோடு இருக்க, அங்கிருந்து புறப்படும் போதெல்லாம் முகத்தில் வருத்தமான பாவத்தைத் தேக்கிக்கொண்டு புறப்படுவாள் ரோகிணி.
நாள் கணக்கில் இப்படி நேமிநாதனும் ரோகிணியும் இங்கே சுகித்திருக்க, குழந்தை மஞ்சுநாத்துக்கு சோறூட்டி, பாலூட்டி, குளித்து உடை மாற்றி உறங்கி எழ வைத்து, அங்கே பரமன் அவனுடைய பராமரிப்புக்கே பெரும்பாலும் நேரம் செலவழித்தது வேறே விஷயம்.
நேமிநாதன் எழுந்தபோது ரோகிணி விழித்திருந்தாள். விளக்கேற்றி வைத்துக்கொண்டிருந்தாள்.
”நான் இருந்தால் நீங்கள் கிரமமாகச் செய்ய வேண்டிய காரியம் எதுவும் செய்ய மாட்டீர்கள். போகிறேன். அங்கிருந்து காலை உணவும் இன்றைக்கான உடுப்புகளும் பயணத்துக்கான பொருட்கள் அடைத்த பெட்டியும் கொடுத்து விடுகிறேன். சிறப்பாக அமையட்டும் உங்கள் கெலடி பயணம்”.
விடிகாலையிலேயே சில முத்தங்களுக்கு ஊடே நேமிநாதனிடம் இதைச் சொல்லி வீட்டிலிருந்து இறங்கினாள் ரோகிணி. அப்போதிலிருந்து பயணம் பயணம் என்று மனது சொல்ல, இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும் என்று உடல் சோம்பல் முறிக்க, ஒரு வழியாக ஏழரை மணிக்குப் புறப்பட்டான் நேமிநாதன்.
ஹொன்னாவரில் இருந்து ஜெருஸோப்பாவைத் தொடாமல் கோகர்ணம் வழியாக ஐந்து மணி நேரப் பயணம். ’கெலடிக்கு. வரப் போகிறேன்’ என்று வெங்கடப்ப நாயக்கரிடம் முன்கூட்டிச் சொல்லி அனுப்பவில்லை. பயணம் வைத்ததும் அதை உடனே நாயக்கரிடம் சொல்லச் செய்தி கிரகித்து அனுப்பும் ஒற்றர் படை கெலடி அரசருக்கு உண்டு என்பதை அவன் அறிவான்.
வரப் போகிறேன் என்ற செய்தி அதிகாரம் தொனிக்கும். அல்லது நேரத்தை யாசிக்கிறதாக இருக்கும். ‘புறப்பட்டேன், வந்து சேர்ந்தேன், பேசி முடித்தேன், விரைந்து புறப்பட்டு ஊர் சேர்ந்தேன், அடுத்த வேலையைக் கையில் எடுத்தேன்’ என்று செயல்படலே சரியான அணுகுமுறை என்று ரோகிணி தலையணை அரசியல் மந்திரம் ஓதியிருந்தாள் நேமிநாதனின் காதில். காது என்று இருட்டில் அவள் அனுமானித்த இடத்தில்.
என்ன, சொன்ன நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பதில் தான் சுணக்கம் உண்டானது. காலை உணவு அருந்தாமலேயே புறப்பட்டு விட்டான் நேமிநாதன்.
கோகர்ணம் கடந்து கெலடிக்குப் போகும் பாதையில் இல்லாத உணவகங்களா? விஜயநகரம் செழித்து வளர்ந்து தேய்ந்த இந்த இருநூற்று சில்லறை வருட காலத்தில் சோறு விற்பது சகஜமாகி விட்டிருந்தது.
பிடவை, வேட்டி, காய்கறி, பால் விற்கிற மாதிரி வழியில் ஒரு உணவு விடுதி. நேமிநாதன் யாரென்று அறிந்த உடமையாளரும் இருந்தார். இளம் வயது. பரபரப்போடும் உற்சாகத்தோடும் அவனைப் பார்த்து வணங்கி, மிளகு அரசர் வாழ்க என்று முழங்கினார்.
அங்கே உணவு செய்து கொண்டிருந்த ஏழெட்டு இளைஞர்கள் உடனே நேமிநாதனைச் சூழ்ந்து கொண்டு மிளகு அரசர் வாழ்க என்றும் நாளை அரசர் நேமிநாதர் வாழ்க என்றும் உற்சாகமாக எச்சில் கையோடு முழங்கினார்கள்.
அலை வந்த திசை மாறி இருக்கிறது என்றுபட நேமிநாதன் அவர்களைப் பார்த்துக் கையசைத்து உப்பிட்டும் தோசையும் கிடைக்குமா, நான் கொஞ்சம் விரைவாகப் பயணம் போய்க்கொண்டிருக்கிறேன் என்று விடுதிக்காரரிடம் தெரிவித்தான்.
ஒரு குழப்பமும் இல்லை, இன்னும் ஐந்து நிமிடத்தில் கிடைக்கப் பண்ணுவேன் என்று தேவதா பிரேமையும் மரியாதையுமாக அறிவித்தான் விடுதிக்காரன். தோசை செய்ய நேரமாகுமென்றால் வேணாம் என்று சிரித்தபடி சொன்னான் நேமிநாதன். ஒரு குழப்பமும் இல்லை என்று இரண்டாம் தடவையாகச் சொன்னான் மலையாளி விடுதிக்காரன். வாழை இலையை வெள்ளித் தட்டில் வைத்து, சுடச்சுட அதன் மேல் இரண்டு தோசைகளை வைத்து, தேங்காய்த் துவையலும் புளி இஞ்சியும் தொடுபண்ணியமாகப் பக்கங்களிலிட்டுக் கொண்டு வந்து, பெரும் மரியாதையோடு நேமிநாதன் முன் வைத்தான அவன்.
அடடா எவ்வளவு ஸ்வாதும் நிறமும் கொண்ட சூடான தோசைகள். நன்றி நண்பரே. ஆனால் உப்பிட்டுவை விட்டுவிட்டீரே என்று சிரித்தான் நேமிநாதன்.
உண்டே ஐயா என்று கரண்டி கொண்டு ஒரு தோசையைத் திருப்பித் திறக்க உள்ளே உப்பிட்டு ஒரு கையளவு பரத்தியிருந்தது. இதென்ன உப்பிட்டு உள்ளிட்ட தோசையா என்று சந்தோஷத்தோடு கேட்டான் நேமிநாதன். ஆம் என்று குஷியாகச் சொன்ன விடுதிக்காரன் ஒரு காசும் வாங்க மாட்டேன் என்று சொல்லி வழியனுப்பினான்.
கையலம்பி வந்த மற்ற வாடிக்கையாளர் இளைஞர்களும் மிகுந்த நம்பிக்கையும் சாதிக்கப் போகும் தீவிரமுமாக மிளகு சக்ரவர்த்தி வாழ்க என்று ஒரு தோசை தின்னும் நேரத்தில் அரசனை சக்கரவர்த்தியாகப் பதவி உயர்த்தி வாழ்த்தி முழங்க, நேமிநாதனின் சாரட் ஊர்ந்து வேகம் கொண்டது.
சாகரா பெருநகருக்கு ஐந்து கல் தொலைவில் கெலடி நகரம். நகர வெளிப்பரப்பில் சாரட் வந்து நின்றபோது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது. நகரில் புதியதாக வருகிற பயணிகள், வர்த்தகத்தின் பொருட்டு வந்தவர்கள், சுவாமி தரிசனத்துக்கு வந்தவர்கள் என்று பலரையும் ஊர் எல்லையில் நிறுத்தி விசாரித்து தகுதியான நபர் என்று தட்டுப்பட்டாலே உள்ளே போக அனுமதி இலச்சினை வழங்குவதை சீராகச் செய்து கொண்டிருந்தார்கள் அதற்கான ஊழியர்கள்.
நேமிநாதன் தான் வியாபரத்திற்காக, அதுவும் பவளமும் முத்தும் வாங்க ஜெருஸொப்பாவில் இருந்து வருவதாகச் சொன்னபோது புன்முறுவலோடு அந்த அதிகாரி, ”ஜெருஸொப்பா மிளகுராணியின் அபிமான புத்திரன் நேமிநாதர் வாழ்க வாழ்க” என்று வாழ்த்தினான்.
ஆக, கன்னத்தில் மரு வைத்துக்கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறுவேடம் பூண்டு உள்ளே போய், வெளியேறலாம் என்பதெல்லாம் சூரவீரதீரக் கதைகளிலும் கதைப் பாட்டுகளிலும் வேண்டுமானல் நடக்கும். நேமிநாதனாக உள்ளே வந்ததால் சந்திக்க வேண்டியவர் பெருமதிப்புக்கும் மரியாதைக்குமுரிய கெலடி மாநில அரசபிரான் லட்சம் ஸ்ரீ வெங்கடப்ப நாயக்கர் அவர்களை என்று பதிய வேண்டிப் போனது.
தனி இலச்சனை நேமிநாதனுக்குத் தரப்பட்டதோடு அவனை அரண்மனைக்கு வழிநடத்த இரு குதிரை வீரர்களும் சாரட்டுக்கு முன்னும் பின்னுமாக வர அனுப்பப் பட்டார்கள்.
அவர்களில் மூப்பனாக முகம் தோன்றும் குதிரைவீரன் நேமிநாதனிடம் ”ஐயா ராமேஸ்வர, வீரபத்ர ஆலயங்கள் ஒரு நிமிடம் தரிசித்து அரண்மனை போகலாமா? நீங்கள் வந்த காரியம் ஜெயமாகும்” என்று வினயமாக வினவினான். வந்த காரியம் அவனுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருக்காதென்றே நேமிநாதன் நம்பினான்.
“நல்ல காரியம் நினைவு படுத்தினீர், ஒரு வினாடி என்ன ஒரு மணி நேரம் கூட வழிபட வேணும்தான். அரசர் எனக்காகக் காத்திருக்கக் கூடாது. அரைமணி நேரத்தில் ஆண்டவனை உள்வாங்குவோம் வாரும்” என கோவில் வளாகத்துக்குப் போனது அந்தச் சிறிய ஊர்வலம்.
சாரட்டை கவனத்தை ஈர்க்காத ஆலமரத்தரைக்குப் பின்னால் நிறுத்தி, தலையில் உத்தரீயத்தை தலைப்பாகையாகக் கட்டி கழுத்தில் பெரிய உருத்திராட்ச மாலையை பெட்டியில் இருந்து எடுத்து அணிந்து, முகத்தைத் தூய குளிர்நீரால் கழுவி, வீபுதியைத் தண்ணீர் விட்டுக் குழைத்து நெற்றியிலும் தோளிலும் மார்பிலும் தரித்துச் சைவனாகக் கோவில் வலம்வந்து வணங்கப் புறப்பட்டான் நேமிநாதன்.
நூறு வருடம் முன்னால் என்றால் சமணர்கள் சைவக் கோவிலில் வணங்குவது அரிதானது. அனல் வாதம், புனல் வாதம் என்று மோதி வென்று தோற்று, வென்றோர், கழுவேற்றக்கூட செய்தார்கள் தோற்றோரை என்று நேமிநாதன் கேட்டிருக்கிறான்.
அந்த மதவிரோதக் காலத்தை எதற்காகத் திரும்பக் கொண்டுவர வேண்டும்? கார்டல் நிதிக்குழுமம் சொன்னால் சமண பசதியில் மீனை விட்டெறிந்து கோகர்ணத்து ஆலயத்தில் நரகல் சட்டியை வீசி சமண சைவ விரோதத்தைக் கொண்டு வர இந்த மண்ணில் எவ்வளவு, எப்போது முடியும் என்று நேமிநாதனுக்குப் புரியவில்லை.
அவன் மிளகு அரசன் ஆக, நூறு தலை உருளணும் என்றால் அது வேண்டாம்.
நேமிநாதன் சட்டென்று அதிர்ந்து தன் சிந்தனை தன்னை அறியாமல் நல்ல வழியில் போவதெப்படி எனப் பரபரப்பாக நோக்க, அவனோடு ஒட்டி நடந்து வலத்திலொருத்தரும், இடத்திலொருத்தருமாக, இடுப்பில் கைத்தறித் துண்டு மட்டும் அணிந்த கருத்த இருவர் மெல்ல வருவது தெரிந்தது.
இல்லை இவர்கள் நடக்கிற வர்க்கமில்லை மிதக்கும் வடிவங்கள். உடல் இருந்து உயிர் உள்ளே பிணைந்திருந்து நகமும் சதையும் ரத்தமும் கொழுப்பும் மயிரும் நவ துவாரமுமாக சுவாசித்து உலவி வந்து உயிர் உடலை விட்டு நீங்கி ஆவி ரூபமாக இன்னும் உலவுகிறவர்கள்.
நேமிநாதன் அவர்களை மனதில் வணங்கி, ”கோவில் போகிறேன், நீங்கள் தொல்லைப்படுத்த வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என் பாட்டன் பூட்டன் வகையறா நல்லாவிகளே” என்று அன்போடு கோரினான்.
”ராஜகுமாரரே, நீங்கள் கோவில் போய் தரிசித்து வாரும். நாங்கள் இங்கேயே இருக்கிறோம்” என்று அவர்கள் சாரட்டில் ஏறும் போது அடுத்து நின்ற குதிரைகள் இவர்களை இனம் கண்டு நடுங்கி சேணம் குலுங்கி நின்றன. கோவிலில் சங்காபிஷேகம் நடக்கிறதாக உள்ளே அவசரமாகப் போய்க் கொண்டிருந்த சிவாசாரியர் ஒருவர் நேமிநாதனிடம் தெரிவித்தபடி நடந்தார்.
நேமிநாதன் அர்ச்சனைப் பொருட்கள் வாங்கி எடுத்துக்கொண்டு உள்ளே போக, மணிகள் நல்ல சகுனம் என்று சொல்லி ஒரே நேரத்தில் முழங்கின.
ராமேஸ்வரன் சந்நிதிக் குருக்கள் நேமிநாதன் சொன்னபடி ஜெர்ஸுப்பா என்ற பெயரில் அர்ச்சனை செய்விக்க முனைந்தார். வாசலில் இருந்து தன் நாவைச் செலுத்திக் குரல் உண்டாக்கியது யாரென்று நேமிநாதன் அறிவான்.
”நேரே அரண்மனை போகலாமா, நேரமாகிக்கொண்டிருக்கிறது” என்று குதிரை வீரர்களிடம் சொன்னபோது, அவனுக்கு முன்னால் சாரட்டுக்கு உள்ளே வந்து நின்றிருந்தவர்கள் வணங்கிச் சொன்னார்கள் –
“எஜமானரே, இந்த ஒரு இடம் மட்டும் எங்களுக்காக வந்து பார்த்து ஒரு வினாடி செலவழிக்கக் கோருகிறோம்”.
யாரோ சொன்ன மாதிரி வண்டியும், குதிரை வீரர்கள் ஏறிவந்த பரிகளும் நிற்க நேமிநாதன் இறங்கினான். ஒரு சிறு கோவில். உள்ளே மேடை வைத்து சிவலிங்கப் பிரதிஷ்டை ஆகியிருந்தது.
நேமிநாதன் மேடை வைத்த லிங்கத்தை வணங்கினான். இந்த மேடை எதற்கு? அவன் யோசிக்கத் தொடங்கும் முன் இரண்டு பேரில் ஒருத்தனான ஆவிரூபத்தான் வணங்கிச் சொன்னது –
”கெலடி நகர் ஸ்தாபித்தபோது நாங்கள் சவுட கவுடர், பத்ர கவுடர் சீமான்களுக்காக மாடு மேய்த்து வந்தோம். அந்தப் பசுக்கள் எறும்புப் புற்றில் பால் சொரிந்த போது எஜமானர்களிடம் ஓடி வந்து சொன்னோம். அவர்கள் முதலில் எங்கள் வாயில் சொற்களைப் போட்டார்கள். புற்றை அகழ, சிவலிங்கம் தோன்றியதாகச் சொல்லச் சொன்னார்கள். அந்த சிவலிங்கம் தான் நீங்கள் வழிபட்டது. பின்னால் இருக்கும் மேடைதான் எறும்புப் புற்று இருந்த இடம்”. ஆவியோன் ஒரு வினாடி மௌனத்துக்கு அப்புறம் கூறினான்.
அவர்கள் இருவரும் மிதக்க, சாரட்டும் குதிரை வீரர்களும் கெலடி வெங்கடப்ப நாயக்கரின் அரண்மனைக்குச் செல்லும் பாதையில் திரும்பியானது.
மிகுந்த சுத்தம் கொண்டதும், நன்கு பராமரிக்கப்படுவதுமான அந்தப் பாதை அரண்மனைக்குச் செல்லும் தகுதி வாய்ந்து, சிறப்பு இலச்சினை பெற்ற அரசியல், இதர துறை பிரமுகர்களுக்கானது. நேமிநாதன் அரசியல் பெரும் பிரமுகராகச் சுட்டப்பட்டு அதிவேகமாக இப்பாதையில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சாரட் அரண்மனை வளாக வெளி வாசலுக்கு முன் நிற்க, நேமிநாதன் இறங்கினான். மரியாதையோடு அவனுக்குத் தலை வணங்கினர் அங்கே இருந்த காவலர்கள். அது குறைவு படாமல் மெய்யிலும் உடுப்பிலும் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று சோதிக்கப்பட்டு உள்ளே இரண்டாம் வாசலுக்கு தலைவாசல் வழியாகப் போகக் கோரப்பட்டான்.
”எங்களைப் போல் மாடு மேய்த்து, கன்றுகாலி பராமரித்து, வயலில் விதைப்பு முதல் அறுவடை வரை உழைத்த இனம் தான் இப்போதைய மன்னன் வெங்கடப்பனும். அவன் மூதாதையர் சௌட, பத்ர கவுடர்களும். எங்களைப் பலி கொடுத்து புதையல் அகழ்ந்து மேலினமானார்கள் அவர்கள். முதலில் எங்கள் வாயில் வார்த்தைகளைப் போட்டார்கள். அதன்பின் எங்கள் கழுத்தில் வாளைச் செலுத்த எங்களையே வேண்டிக் கொண்டார்கள். எங்கள் உயிரை உடலில் இருந்து நீக்கினார்கள். கேளும் நேமிநாதரே, இது தகுமா?” நிறையப் பேசும் ஆவியோன் வெஞ்சினம் உரைக்க மற்றவன் கண்ணீர் உகுத்தான்.
நேமிநாதனுக்கு சூரியன் வெளிச்சப்பட்டிருக்கும் பகலில் இப்படி ஆவியும் பூதமும் தன்னை ஏன் பிடித்துக் கொண்டு, தன்னோடு கெலடிக்குள் மிதந்து, பேசுவது பாதி புரிந்தும் மீதி அர்த்த சூனியமாகவும் இருக்கக் கூடவே ஓடி வரவேண்டும் என்று புரியவில்லை.
“ஐயா, அரண்மனைக்குள் அரசரை சந்திக்கப் போகிறேன். நீங்கள் வேறு சலசலவென்று என்னைச் சுற்றி வந்து என் செவியில் விடாது பேசிக்கொண்டிருந்தால் நான் வந்த காரியம் எப்படி நடக்கும்?”
சற்று கோபத்துடன் நேமிநாதன் இதைச் சொல்லும்போது குரலில் கண்டிப்பு ஏறியிருப்பது தெரிந்தது. அப்போது ஆவியோன் ஒருத்தன் நைச்சியமாகச் சொன்னது –
“எங்களுக்கு அரண்மனைக்குள் போயோ, அரசன் வெங்கடபதி நாயக்கரைப் பார்த்து வணங்கியோ ஒரு காரியமும் ஆக வேண்டியதில்லை. உம்மோடு நீர் கெலடியில் இருக்கும் போது கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போவதே உத்தேசம்”.
“அது ஏன் என்னிடம் மட்டும் பேசணும்? ஆயிரம் பேர் இந்தக் கதவுகள் வழியே கெலடி நகரத்துக்கு உள்ளும் வெளியும் சென்றுகொண்டிருக்கிறார்களே. அவர்களில் வேறு யாரையாவது கூப்பிட்டுச் சொல்லலாமே?”
“ஆனால் அவர்கள் விரைவில் மெய்யாகக் கூடிய அரசராகும் கனவுகளோடும் ஆசைகளோடும் கெலடி வரவில்லை. கவுடர்கள் போல் அரசாள அடங்காத ஆசை உமக்கு. அரசனாக வாய்ப்பு அநேகம். அரசனாகும்போது எங்களுக்கும் கடைத்தேற வாய்ப்பு கிடைக்க உம் உதவி வேண்டும். எங்களை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தால் செய்வீரா?” காளி கேட்டான்.
நேமிநாதன் மௌனமாக அவர்களிடம் சொன்னான் –
“அப்படியென்றால் நான் திரும்பும்போது பேசுங்கள்”.
அவன் சாரட் குதிரை வீரர்களுக்கு வழிவிட அந்த இரண்டு வீரர்களும் முன்னால் போய் கபாடங்களுக்கு முன் மணி ஒலித்துக் காத்திருந்தனர். திட்டிவாசல் திறக்க தலையை மட்டும் நீட்டிப் பார்த்த அலுவலகர் நேமிநாதனைப் பார்த்து தலையசைத்து வணங்கி அவன் முன்னால் கதவு அருகே வரமுடியுமா எனக் கேட்டான்.
நடக்க வேணும் என்றால் நடக்கணும். ஓடணும்னா ஓடணும். தவழணும்னா தவழணும். ராஜாவைப் பார்க்கிறது சும்மாவா என்ன என்று ஆவியோன் சொல்ல, மற்றவன் சத்தமில்லாமல் சிரித்தான். அவனுக்குச் சிரிக்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது.
”ஜெர்ஸோப்பா மகாமன்னருக்கு கெலடி மாமன்னர் ஒரு செய்தி கையில் தரச் சொல்லி இருக்கிறார். அது உசிதமானது என்றால் உங்கள் வரவு நல்வரவானது”. திட்டிவாசல் அதிகாரி நேமிநாதனை வணங்கிச் சொன்னான்.
மடித்து மரப்பட்டை சேர்த்து ஒட்டிய கரமுர என்ற புதுக்காகிதத்தில் எழுதியிருந்த லிகிதத்தைப் படிக்கும் முன் நேமிநாதன் அதிகாரியைக் கேட்டான் – ”உசிதமில்லை என்று எனக்குத் தோன்றினாலோ?”
“பேரரசரே, உசிதமில்லை என்றால் வந்த வழியே போவது தவிர வேறே வழியேதுமில்லை என்று நேமிநாத ராஜ்குமாரர் அறியாததில்லை”.
“காகிதத்துலே எழுதியிருக்கார். உம்மை பெரிய மனுஷனா எடுத்துத்தான் அதிக பட்ச மரியாதையாக காகித லிகிதம் தர்றார். உசிதமில்லேன்னு அதைப் புறக்கணிக்க வேணாம்”.
காளி குரல் இப்போது ஆலோசனை சொல்வதாக மாறியிருந்தது. அதை விட ஆச்சரியம் அது நஞ்சுண்டய்யா பிரதானி குரல் போல் ஒலித்தது.
லேகனத்தைப் பிரித்துப் படித்தான் நேமிநாதன். வெங்கடப்ப நாயக்கர் எழுதி கையொப்பம் இட்டிருந்த கடிதம் அது-
“இன்று அலுவல் நிமித்தம் மால்பெ போய்க் கொண்டிருக்கிறேன். நீங்கள் திடீரென்று வந்ததுபோல் எனக்கும் அதேபடி ஒரு பயணம் வைக்கவேண்டிப் போனது. இன்று ஒரு நாள், இந்த பிற்பகுதி நாள் மட்டும் தாங்கள் காத்திருக்க முடியும் என்றால் நாம் நாளை காலை ஏழு மணிக்கு சந்திக்கலாம். தங்களுக்கு இங்கே நான் இல்லாத குறையே தெரியாமல் முக்கிய விருந்தினருக்கான உபசரிப்பை ராணியம்மாளும், என் இரண்டு மகன்களான ராஜகுமாரர்களும் தங்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறார்கள். நல்ல அறையும் சித்தம் செய்யப்பட்டுள்ளது”.
அந்த லேகனத்திலேயே வெங்கடப்ப நாயக்கரின் குணமும் திட்டமிடலும் பிரியமும் புலப்பட, நேமிநாதன் அரண்மனைக்குள் பிரவேசித்தான்.
அரண்மனை உத்தியோகஸ்தன் பின்னால் திரும்பி சைகை செய்ய, நேமிநாதனுக்கான மரியாதையாக ஏழு தடவை பீரங்கி ஒலித்து முரசும் அதிர்ந்தது.
நீங்க ராஜாவாக இருந்தால் இருபத்தியொரு பீரங்கி மரியாதை. சீக்கிரம் ஆகிடுங்க என்று ஒரு ஆவியோன் சொன்னதை காதில் வாங்கவில்லை என்ற முகபாவத்தோடு நடந்தன நேமிநாதன். முன்கூட்டியே சொல்லி விட்டிருந்து வந்தால் இப்படி மால்பே பயணத்தை அவசரமாக ஏற்படுத்திக்கொண்டு சந்திக்காமல் போயிருக்க மாட்டாரோ. அவர் வேலைச் சுமை அவருக்கு.
அது இருக்கட்டும். சாயந்திரம் நல்ல தென்றல் வீச அற்புதமாக மலர்ந்துள்ளது. வாரும் நேமிநாதரே, கொஞ்சம் லாந்திவிட்டு வரலாம். பேசும் ஆவியோன் பிரியத்தோடு சொன்னான். மற்றவன் தலையசைத்தான் ஆம் என்று.
நேமிநாதன் வெளியே புறப்பட்டபோது வெங்கடப்ப நாயக்கரின் இளைய மகன் அவனுக்கு நல்ல தோழன் ஆகியிருந்தான்.
நேமிநாதரே, சிற்றுண்டி கழித்துப் போகலாமே
நான் வரும் வழியில் நெய் பொழிந்து வார்த்த தோசைகளும் அவற்றோடு உப்பிட்டுவும் உண்டு வந்தேன். வயிறு நிரம்பியுள்ளது. இரவு உணவு சேர்ந்திருந்து உண்ணலாமா? என்று வினயத்துடன் கேட்டான் நேமிநாதன். மன்னரின் இளைய மகன். மரியாதை காட்டணும். நாளை மன்னனுமாகலாம்.
நீ தனியாக கெலடி நகரைச் சுற்றி வரப் போகிறாயா இல்லை கூட யாரையாவது அனுப்பி வைக்கட்டுமா என்று விசாரித்தான் வெங்கடப்பா நாயக்கரின் புதல்வன். ஒரு மணி நேரப் பழக்கத்தில் நீவாபோ விளிக்கு மாறியிருந்தான் அவன். நேமிநாதனை விட பத்து வயது இளையவனாக இருப்பான் என்று நேமிக்குத் தோன்றியது.
இல்லையப்பா, நான் காலாற நடந்து வருகிறேன். ராத்திரி உணவு உண்டு நாம் உரையாடிக் கொண்டிருப்போம் என்று உசிதமான வார்த்தைகள் சொல்லி காலணி அணிந்து நடக்க ஆரம்பித்தான் நேமிநாதன்.
ஒரு மணி நேரத்தில் நேமி நாதர் நேமிநாதா ஆனார். இந்த ராத்திரி விடிவதற்குள் அடா நேமி ஆகவும் வாய்ப்பு உண்டு என்றான் கூட மிதந்து வந்தவரில் ஒருவன்.
ராஜாங்கப் பாடம் படிக்க கெலடி நாயக்கர் குடும்பம் நல்ல ஆசான்கள் என்றான் முதல் தடவையாக அபிப்பிராயம் சொன்ன இரண்டாமவன். இருவரும் நேமிநாதனைத் தொடர்ந்து காற்றோய்ந்த வெளியில் மிதந்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.
சாரட் சாரதி ஓடோடி வந்து எஜமான் சாரட்டை எடுத்து வர்றேன் என்றான். வேண்டாமப்பா நான் காலாற நடக்க உத்தேசித்திருக்கிறேன். நீ ஓய்வு எடுத்துக்கொள் என்று அனுப்பி வைத்தான்.
வடக்கே பத்து நிமிடம் நடையை நீட்டிப் போட்டால் பழையவயல் போகலாம். எங்களைப் பலி கொடுத்த மேட்டைக் காட்டி நாங்கள் உம் உசிதம் போல் கூட வருகிறோம் அல்லது விடை வாங்குகிறோம் என்றான் முதலாமவன்.
இந்தத் திருப்பம் தான். வலது என்று அவசரமாகச் சொன்னான் இரண்டாமவன்.
”இங்கே எங்களைப் புதைத்திருக்கிறார்கள். நான் காளி. இவன் என் சகோதரன் கூளி. எங்கள் பெயர்களையும் யாதவன், முராரி என்று மாற்றி உயர்வகுப்பு உயிர்களாக்கி விட்டார்கள்” என்றான் காளி.
”பெயருக்கு ஒரு சிறு ஆலயம் நிர்மாணித்து அதனுள் ஒரு ஓரமாக இரண்டு சமாதிகள். இங்கே தான் நாங்கள் உறங்குகிறோம். காளி வலது மேட்டு சமாதி. கூளியாகிய நான் இடதுவசத்து சமாதி. ஓரமாக உள்ள பீடத்தில், ஓவ்வொருத்தராக எங்களுக்கு மாலை போட்டு, தலையை வைத்துப் பிடித்து வெட்டினார்கள்” என்றான் கூளி.
நேமிநாதன் காலணிகளைக் கழற்றி உள்ளே போய் வணங்கினான். நேமிநாதரே உம் விஜயம் வெற்றி பெறட்டும் அது எவ்வளவு தூரம் நியாயமானதோ அவ்வளவு.
அவர்களையும் திரும்பி நின்று வணங்கினான் நேமிநாதன். சமாதிகளுக்குப் பின் பெரிய அரசமரம் நின்று கொண்டிருந்தது. கீழே காரை கொண்டு எழுப்பிய சிறு மேடை நான்கு பக்கமும் மரத்தைச் சுற்றி இருந்தது. நேமிநாதன் மேடையில் அமர்ந்தபோது மெல்லிய காற்று வீச ஆரம்பித்தது.
காளி மரத்தில் தொங்கியபடி பேசலானான் –
எங்களைப் போல் அப்பாவிகள் எங்குமுண்டு – ஜெருஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் ஏன் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீர்த்தி வாய்ந்த இன்று அழிந்து கொண்டிருக்கும் ஹம்பி, இப்போது தலைநகராக எழுந்த பெனம்கொண்டா, எங்கும் உண்டு. உலகத்தில் ஆதிக்கம் செலுத்த எங்கே எல்லாம் ஒரு கூட்டம் உருவாகி, நச்சுச் செடியாகப் பெருகியுள்ளதோ அங்கே எல்லாம் எங்களைப்போல் அடிமைகளும் சந்ததி சந்ததியாகத் தொடர்வார்கள்.
கூளி தொடர்ந்தான் –
எல்லா அற்புதங்களிலும் எங்கள் பெயர் இருக்கும். அற்புதம் நிகழக் கண்ட முதல் மனுஷர்கள் நாங்கள், கண்டதாக, கேட்டதாக, உண்ர்ந்ததாகச் சொல்ல வைக்கப்பட்டவர்கள் நாங்கள். எறும்புப் புற்றின்மேல் பால் சொரியும் பசுவைப் பார்த்தோம் நாங்கள் என்று சொல்ல வைத்தார்கள். தானே சீறிச் சினந்து யுத்தம் பண்ணும் அருவாளை நிலத்தில் இருந்து அகழ்ந்தவர்கள் நாங்கள் என்று சொல்லச் சொன்னார்கள். சொல்லிச் சொல்லி நாங்களே அதை நம்ப ஆரம்பித்தோம். புதையல் வைத்த பானையை, பயிரிட நிலம் உழுதபோது கலப்பையில் நங்கென்று உலோகம் தட்டிக் கண்டுபிடித்தவர்களும் வேறு யாருமில்லை. நாங்கள் தானென்றோம். வேறு யாருமாக இருந்தால் அவர்கள் புதையலில் பங்கு கேட்பார்களே. அடிமைகள் புதையலைக் கண்டெடுக்கவும் வேண்டும். பாதுகாக்கவும் வேண்டும். பின்னால் ஒரு நாள் அவர்கள் பங்குக்கு வரலாம். எனவே புதையல் காத்த பூதங்கள் கேட்டபடி நரபலியாக அடிமைகள் தயாராக வேண்டும். எங்களைப் பலி கொடுத்து இந்த அரச பரம்பரை தழைத்து வாழ நாங்கள் எலும்பும் பொடித்து மண்ணுக்குள் மண்ணாகிக் கிடக்கிறோம்.
ஒரு முழு நிமிடம் அமைதி. நேமிநாதன் என்ன ஆச்சு என்று சுற்றுமுற்றும் பார்க்க காளி சொன்னான் –
ஜெர்ஸொப்பாவிலும் ஆண்டான் அடிமைகள் புதையல் பொக்கிஷம் என்று நிகழ்வுகள் விதித்த விதிப்படி போகும்.
வெங்கடப்ப நாயக்கன் உதவினாலோ உதவ மறுத்தாலோ உன் நாட்கள் விதித்தபடி போகும். எங்களைப் போன்றவர்கள் மேன்மையான வாழ்க்கை பெற நீ வழிசெய் என்று கூளி சொல்ல இருவரும் மறைந்து போனார்கள்.
மெல்ல நடந்தான் நேமிநாதன்.
கெலடி வீதிகள் நடக்க நடக்க கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தாலும் ஹொன்னாவர் வீதிகள் போல் விசாலமானவைகளாக இல்லாத காரணத்தால் தோளோடு தோள் இடிக்க நடக்க வேண்டி இருந்தது. இரண்டு கடைகளுக்கு ஒன்று மதுசாலையானதால் தெருவில் கள்ளு மாந்தி போதம் கெட்டுத் திரிகிறவர்கள் அதிகமாக இருந்தனர். சும்மா அலையாமல் போகிறவன் வருகிறவனை வம்பிழுத்துக் கொண்டு நடமாடும் அவர்களைத் தவிர்த்து நடந்தான் நேமிநாதன்.
நான்கு மதுக்கடைகளும் சூதாட்ட விடுதிகளும் இருந்த தெருவில் நெரிசலுக்கு நடுவே யாரோ நேமிநாதனின் இடுப்புக்குக் கீழே தொட்டது போல் இருந்தது. பணப்பையை இடுப்பில் மாட்டி வைத்திருப்பது தெரிந்து அறுத்தெடுத்துப் போகப் பின்னாலேயே வந்த யாரோ நேமிநாதன் விழிப்பாக இருந்ததால் தோற்றுப் போய் நாயின் மகனே என்ற வசவு மொழிந்து ஓடியதைப் பார்த்து நேமிநாதனுக்குச் சிரிப்பு வந்தது.
தெருவின் இருவசமும் காட்சிகள் மாறி இருக்க, தீர்க்கமான மல்லிகைப்பூ மணம். ஒருகதவு மட்டும் திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்த வீடுகளில் வாசல் கதவைப் பிடித்தபடி நின்ற இளம் பெண்கள் ’சுகிக்க வா, திருப்தி இல்லையேல் திரும்ப வா’ என்று கிசுகிசுக்கும் குரலில் அழைத்தார்கள்.
எல்லாப் பெண்களும் மூக்குத்தி அணிந்து கூந்தலை இறக்கி வாரித் தலையில் மல்லிகையும் பிச்சிப் பூவுமாக, கண்ணில் அழுத்தமாக இட்ட கண்மையுமாக சுந்தரிகள்.
வா வா ஓர் இரவுக்கு பத்து வராகன் கொடுத்தால் போதும் என்று சிரிக்கிற அவர்கள் அதரங்களில் சிவப்புச் சாயம் அதிகமாகப் பூசி ரத்தப் பிசாசு சாயலிலும் சிலர் தென்பட்டார்கள்.
உதடுகளைச் சற்றே பிரித்து, ஒளிரும் இரு வரிசைப் பற்களும் நடுவே இடைவெளியின்றி மூடியிருக்க சற்றே குனிந்து பார்த்து எச்சில் உமிழும் காட்சி காமம் எழச் செய்வதென்று நேமிநாதனுக்குத் தோன்ற விரைத்து வந்த குறி ஆமாம் என்றது.
அவன் வலதுகைப் பக்க வீட்டு வாசலில் நின்றிருந்த இளம் கணிகை பாய்ந்து இறுகி வந்த அவன் குறியை வேஷ்டியோடு பற்றி இழுத்து, வாரும் வாரும் உம் கருங்கல் வளர்ச்சியெலாம் நானறிவேன். உமக்கு வாய்த்த நிலைக்கு நீர் இந்த ராத்திரி முழுக்க நிமிர்ந்து நிற்பீர். கலந்து உழைப்போம் வாரும் என்று பற்றியதை விடாமல் ஆசையோடு அழைத்தாள். அவள் அழைப்பைப் புறக்கணித்து நாளைக்கு வரேன் என்று கழன்றுகொண்டு சிரிப்போடு வந்தான் நேமிநாதன்.
ரோகிணியை இப்படி சிருங்காரமாக உமிழச் சொல்லி வாயில் முத்தமிட அவசரம் என்று உடல் இன்னொரு சந்தேசம் பிறப்பித்துச் சொன்னது. வீடெல்லாம் துப்பலாகி இருக்கும் அந்த மோக விளையாட்டுக்குப் பதில் வேறே சுத்தமான எத்தனையோ உண்டே என்று யோசித்தபடி நடந்தான்.
தெரு முனையில் நாட்டிய சாலை இருந்தது. அரை வராகன் கொடுத்து உள்ளே ஆட்டபாட்டம் பார்க்கப் போனான் நேமிநாதன். குதித்து ஆடிய பேரிளம் பெண்கள் மேல் வராகன்களை விட்டெறிந்தும் முலைக் குவட்டில் வராகன் பொற்காசை இருத்தியும் அவர்களை கொங்கை அற்று வீழ குதியுங்கடி என்று கூச்சல் போட்டபடி தேறல் அருந்துகிறவர்களை வெளியே கொண்டு போய் விடுவதும் நிகழ்ந்தது. அலுக்கவே வெளியே வந்தான் நேமி.
இருட்டு ஆட்சி செய்யும் பிரதேசங்கள் தொடர்ந்து வர தனியாக சஞ்சரிக்க தோதுப்படாத பகுதிகளைத் தவிர்க்கலாம் என நேமிநாதன் திரும்பி நடந்தான். அரண்மனை வாசல் கதவுகள் பெரும் ஒலியோடு சார்த்திக்கொள்வதை அப்போது தான் கவனித்தான் நேமிநாதன்.
அவன் உள்ளே வந்தபோது இருந்த பாதுகாவலர்கள் பணி முடிந்து அடுத்த குழு காவலுக்கு வந்திருந்தார்கள். நேமிநாதனை இலச்சினை இல்லாமல் உள்ளே விடமுடியாது என்று சொல்லி விட்டார்கள் அவர்கள்.
தான் யார் என்பதை ஒரு தடவைக்கு நான்கு தடவை சொல்லிவிட்டான் நேமிநாதன். எனினும் இலச்சினை இல்லாமல் உள்ளே போக முடியாது என்று பிரவேசிக்க முடியாமல் நிறுத்தி விட்டார்கள்.
இரும்புக் கம்பிக் கதவுகள் ஊடே பார்க்க, நேமிநாதனின் ரதம் கதவுக்கு சற்றுத் தொலைவில் நிறுத்தியிருக்க, குதிரைகளை அகற்றி நிறுத்திவிட்டு ரதசாரதி இரவுக்கு உறங்க சித்தம் பண்ணிக்கொண்டிருந்தது தெரிந்தது.
கதவு வழியாகப் பார்த்து, ஆலாலா வா இங்கே என்று உரக்க அவனைக் கூப்பிட்டது அவன் காதில் விழவில்லை என்று புரிந்து இன்னும் நாலு தடவை குரல் உயர்த்த, வாசல் காவலர்கள் நேமிநாதனைப் பிடித்து இழுக்க முற்பட்டார்கள். அவர்கள் கொங்கணியோ, கன்னடம், தெலுகு, தமிழோ பேசவில்லை என்பதையும் ஒடிய பாஷை அல்லது வங்காளி போல் புரிபடாத மொழியைப் பேசுவதாகவும் நேமிநாதனுக்குப் பட்டது.
கடைசியாக ஒருதடவை காவலர்களைப் புறம்தள்ளி ரதசாரதியை அழைக்க உள்ளே அரண்மனை சாளரம் ஒன்று திறந்து வெங்கடப்ப நாயக்கரின் இளைய புதல்வன் அரண்மனை வாசலை நோக்கினான். நேமிநாதனை அவன் இனம் கண்டு கொண்டு அவசரமாக கீழே ஓடி வந்து அவனை உள்ளே அழைத்து வந்தபோது, இலச்சினை எடுத்துப் போங்கன்னு சொல்லாமல் போய்ட்டேன் மன்னிக்கணும் என்று சம்பிரதாயமாகச் சொல்லி அதோடு நிறுத்தினான்.
ஒரு இளவரசனாக முத்திரை, இலச்சினை, அனுமதி இதெல்லாம் தேவைப்படாமல் இருந்து இப்போது அதெல்லாம் கட்டாயமான வாழ்க்கை எவ்வளவு துன்பம் நிறைந்தது என்று அனுபவத்தால் தெரிய வரும்போது நேமிநாதனுக்கு மனதில் தேவையற்ற தன்னிரக்கம் வர, அதைக் களைந்தான்.
கெலடி அரண்மனையில் அவனுக்கு ஒதுக்கியிருந்த அறைக்கு வெங்கட லட்சுமணன், அதுதான் அந்த இளைய புதல்வனின் பெயர், நேமிநாதனை அழைத்துப் போகும்போது ஒரு பெரிய மண்டபத்தில் வீற்றிருந்து குவளையில் வைத்து ஏதோ பருகியபடி இருந்தவரைப் பார்த்தான். அப்பா என்றான் லட்சுமணன். கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர்.
அவர் மால்பெ போவதாகச் சொன்னாரே என்று நேமிநாதன் புரியாமல் கேட்டான். லட்சுமணன் புன்சிரித்தான். வெங்கடப்ப நாயக்கர் இங்கே இருந்தால் நேமிநாதனை சந்தித்திருக்கலாமே? அவன் வந்தது தெரிந்தும் அவனை நேரில் கண்டு ஒரு மணி நேரமோ அல்லது வரவேற்று ஒரு நிமிடமோ பேசிவிட்டுப் போயிருக்கலாமே.
இன்னும் எவ்வளவு அவமதிப்பை நேமிநாதன் வாங்கிச் சுமக்க வேணுமோ.
அவன் மெல்லத் தனக்கு ஒதுக்கிய அறைக்குப் போய் விரைவில் நித்திரை போனான்.
காலையில் வெங்கட லட்சுமணன் வந்து நித்திரை சுகபரமாக இருந்ததா என்று விசாரித்தான். கொசுக்கள் தொந்தரவு செய்ய மூன்றாம் ஜாமமும், அவற்றை விரட்ட அரண்மனை முழுவதும் சாம்பிராணிப்புகை போட்டு தூமதண்டியோடு சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்கும் நடந்து அடுத்த ஜாமமும் தூங்க முடியாமல் போன துக்கத்தைச் சொல்லவேண்டாம் என்று தீர்மானித்தான் நேமிநாதன்.
பசியாறிக்கொண்டே மகாராஜாவும் லட்சுமணனின் பிதாவுமான வெங்கடபதி நாயக்கர் நேமிநாதனோடு சந்திப்பு காலை ஏழரைக்கு என்று அறிவித்தான் லட்சுமணன். நேமிநாதன் கொஞ்சம் தயங்க, நேரம் சரியாக வராதென்றால் சொல்லு, மாற்றிவிடலாம் என்றான்.
அப்படித்தான், எழுபது வயதான விஜயநகர பிரதிநிதி ஹனுமந்த ராயர், வேங்கடப்ப நாயக்கரை சந்திக்க பெனுகொண்டாவில் இருந்து வந்தபோது விஜயநகரத்தார் ஒரு வேண்டுகோள் மட்டும் வைத்தாராம். ”காலையில் வெளிக்குப் போனதற்கு அப்புறம் எந்த நேரமும் சந்திக்கத் தயார். குளித்து, இரண்டு இட்டலிகளை பிட்டுப் போட்டுக்கொண்டு சந்திக்க ஓடி வந்துவிடுவேன்” என்றாராம் விஜயநகரப் பிரதிநிதி. காலை ஆறிலிருந்து எட்டு மணிக்குள் அந்த மகத்தான சம்பவம் நிகழ வாய்ப்பு உண்டாம்.
நல்ல வேளையாக ஆறரை மணிக்கே அதெல்லாம் முடிந்து குளித்து இட்டலி உண்ண ஏழு மணிக்கு வந்துவிட்டாராம் அவர். அவருக்கே தெரியாமல் முந்தின ராத்திரி சாப்பாட்டில் ராயருக்கு மட்டும் கொஞ்சம் கடுக்காய்ப்பொடி சேர்த்து அவருக்குக் காலையில் வயிறு இளகி ஒத்துழைக்கச் செய்ததும் வெங்கடப்ப நாயக்கர் தான் என்று பெரும் சிரிப்போடு நேமிநாதனோடு பகிர்ந்து கொள்ள, நிறுத்தாமல் சிரித்தான் நேமி.
”எனக்கு அந்த பிரச்சனை எல்லாம் இல்லை, ஒரே சந்தேகம் என்ன என்றால், நீ காலையில் மகாராஜா பசியாறிக் கொண்டே என்னோடு உரையாடுவார்னு சொன்னியே லட்சுமணா. அப்போது நானும் சாப்பிட்டுக் கொண்டிருப்பேனா அல்லது அவர் சாப்பிட, நான் வாய் பார்த்தபடி வெறும் வயிற்றோடு பேச வேணுமா?” என்று கேட்டான் நேமிநாதன்.
லட்சுமணன் உரக்க நகைத்தான். ”நேமி, உன் நகைச்சுவை அலாதியானது. நாயனாவிடம், என்றால் என் தந்தையாரிடம் இதைச் சொல்கிறேன். நீயும் பசியாறத்தான் அந்த சந்திப்பு. சந்தேகம் என்றால் நான் ஏழரை மணிக்கு போஜனசாலைக்கு வந்து எல்லாம் கிரமமாக வந்திருக்கிறதா என்று பார்த்துப் போகிறேன்” என்றபடி போனான்.
அதுபடிக்கு நேமிநாதன் காலை ஏழு மணிக்கு மெல்லிய சீனக் கத்திரி கொண்டு மழமழவென்று முகச் சவரம் செய்துவிக்கப்பட்டு, வெதுவெதுப்பான வென்னீரில் குளித்து, உடுத்து, பாரீஸில் வடித்த ஸ்வப்ன புஷ்பங்கள் மணக்கும் தைலம் கம்புக்கூட்டில் பூசி, காலணியை சிப்பந்தி மூலம் பளபளவென்று துடைத்து அணிந்து கொண்டு புறப்பட்டான். முள்ளுத்தாடியும், புழுதி படிந்த காலணிகளும், அக்குளில் கற்றாழை வாடையும் வெங்கடப்ப நாயக்கருக்குக் காணவும் பிடிக்காத கோலம் என்று கேள்விப்பட்டிருந்ததால் ஜாக்கிரதையாகப் பார்த்துப் பார்த்து எல்லாம் சரியாக வைத்து பசியாறப் போனான் நேமிநாதன்.
நாலு அடி நடந்தவன் திரும்ப அறைக்கு வந்து மேசை மேல் வைத்திருந்த அனுமதி இலச்சினையை எடுத்துக் குப்பாயத்தில் வைத்துக்கொண்டு நடந்தான். அவன் போய்ச் சேர்வதற்குள் போஜனசாலையில் வேலைப்பாடமைந்த சொகுசு நாற்காலியில் நீலமும், பச்சையும், சிவப்புமாக பட்டு உத்தரீயம், குப்பாயம், அரையில் மொகலாய முழு நிஜார் என்று அணிந்து காத்திருந்தார் கெலடி மன்னர் வெங்கடபதி நாயக்கர்.
அவர் கண்கள் மூடியிருக்க கை விரல்கள் இப்படியும் அப்படியுமாக அசைந்தன. உடல் உபாதை ஏதாவது பற்றியிருக்குமோ. நேமி பயப்பட்டான்.
”ஒன்றுமில்லை, அவர் கவிஞராயிற்றே மனதில் வரிவரியாகக் கவிதை கவனம் செய்கிறார் தெலுங்கில்”. வெங்கட லட்சுமணன் எங்கிருந்தோ வந்து நேமிநாதன் காதில் சொல்லிவிட்டுப் பூஞ்சிட்டாக ஓடி மறைந்தான்.
அவன் ஓடும்போது தரையில் வைத்திருந்த செம்பு கால் பட்டு உருள, கண் திறந்து பார்த்த வெங்கடப்ப நாயக்கர் பார்வை நேமிநாதன் மேல் விழுந்தது. சிரித்தபடி அவனை தீனிமேசையில் எதிர் நாற்காலியில் அமரச் சொல்லிக் கைகாட்டினார்.
கைகூப்பி வணங்கி அது போதாது என்று பட குனிந்து அவர் பாதம் தொட்டு வணங்கினான் நேமிநாதன். ஆயுஷ்மான் பவ என்று வாழ்த்தி அவன் தோளை இறுக்கி உட்கார்ந்தபடியே அணைத்துக் கொண்டார் நாயக்கர்.
வாரும் நேமிநாதரே, நலம் தானா? உம்மைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். கொங்கணிக் கவிதைகளை போர்த்துகீஸ் மொழிக்கு மொழிமாற்றம் செய்கிறீர்களாமே. வாழ்க.
அவர் குரல் சற்றே திக்கித் திக்கி ஒலித்ததை கவனித்தான் நேமிநாதன். ஷேமலாபங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நேமிநாதனின் காலம் சென்ற தந்தையும் மிளகு ராணி சென்னபைரதேவியின் சகோதரனுமான பாரஸ்வநாதரும் வெங்கடப்ப நாயக்கரும் சேர்ந்துதான் இக்கரெ குருக்களிடம் மல்யுத்தமும், அங்கவெட்டும் கற்றுக் கொண்டார்களாம். அது ஒரு வருடம் மிக சிறப்பாகப் போனதாம். பிறகு சமஸ்கிருத ரூபத்தில் கஷ்டம் ஏற்பட்டதாம். கட்டாயமாக சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேணும், அதுவும் அதே இக்கரெ குருக்கள் வித்தியாலயத்தில் என்று நாயக்கரின் தந்தை மகாராஜா வற்புறுத்தினாராம். சமஸ்கிருதம் படிக்க சிரமப்பட்டு நாயக்கர் படிப்பை நிறுத்தியவர் தான், குருகுல நண்பர்களைத் தொலைத்து விட்டாராம் அப்புறம்.
ஒரு நிமிடம் பரஸ்வநாதரின் பதினைந்து வருடம் முன்பு நிகழ்ந்த மறைவுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்திய வெங்கடப்ப நாயக்கர் நேமிநாதன் தீன்மேசை முன்னிட்ட நாற்காலியில் அமர்ந்ததும் சொன்னார் – நேற்று ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது நேமிநாதரே.
என்ன அது என்று குழம்பி அவன் கண்களில் மிரட்சி தென்பட்டது. ஜெர்ஸோப்பாவில் ஏதும் விபத்து அல்லது வேறேதும் அசம்பாவிதமா?
“அதொண்ணும் பெரிய அசம்பாவிதமில்லை, சிறியதுதான். பசியாற என்ன சாப்பிடுகிறீர்கள் நேமிநாதரே?” அவர் சமையலறைப் பக்கம் நோக்கியபடி நேமிநாதனைக் கேட்டார்.
”சைவ உணவாக எது பாகம் செய்திருந்தாலும் சரிதான்” என்று வினயமாகத் தெரிவித்தான் நேமிநாதன்.
சமையலறை உள்ளிருந்து வந்த உபசாரிணிப் பெண்ணை அழைத்து தாழ்ந்த குரலில் ஏதோ தெலுங்கில் சொல்லிச் சிரித்தார் நாயக்கர். அந்தப் பெண்ணும் சிணுங்கிச் சிரித்தபடி உள்ளே போக, பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் –
“உடுப்பி-மால்பேயில் சாயம் தோய்த்து வைத்த நெசவான துணிகள் முதல் முறையாக இத்தாலிக்கு ஏற்றுமதியாகக் கப்பலில் ஏற்றப்படும் நிகழ்ச்சி நேற்று அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு, என்னை வரச்சொல்லி தரையில் விழுந்து புரண்டு வேண்டினார்கள். நம்முடைய நேமியன்றோ நீர், எனக்காக ஒரு பிற்பகலும் ராத்திரியும் காத்திருந்து நம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாமா என்று நான் கோரிக்கை விடுத்தால் மாட்டேன் என்றா சொல்வீர்? அந்த நம்பிக்கையில் உம்மை இருக்கச் சொல்லி மால்பே புறப்பட்டு அரண்மனை வாயிலில் தேர் வெளியேற முற்பட்டேனா? ஏன் கேட்கிறீர், அரண்மனை புரோகிதன் நாராயண பட்டன் குறுக்கே வந்து கடந்து போனானே பார்க்கலாம். ஒற்றைப் பிராமணன் குறுக்கே போனால் என்ன ஆகும் அதுதான் ஆனது. தேர் அச்சு மாளிகை முகப்பில் கட்டுமான வேலைக்காகக் குவித்த கல்லில் பட்டு முறிந்தது. நான் உஷாராகி உடனே மால்பேக்குப் பயணத்தை ரத்து செய்தேன். பேசாமல் ஒரு உத்தரவு போடலாமா என்று பார்க்கிறேன். கெலடி தேசத்தில் பார்ப்பனர்கள் எங்கே போனாலும் ஒற்றையாகப் போகக் கூடாது, இன்னொரு பார்ப்பனன் கூடப் போக வேண்டும். தனியாகப் போக நேர்ந்த பிராமணர்கள் அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று சட்டம் இயற்றலாமா என்று கூடத் தோன்றியது. அந்தச் சட்டம் இயற்ற நல்ல நேரம் தேவை. அதைக் கணித்துச் சொல்வதற்கு அரண்மனை புரோகிதரிடம் தான் கேட்கவேண்டும் என்பதால் தடம் புரண்டு ஓடிய சிந்தனையை ஒதுக்கி வைத்தேன்”.
சொல்லி விட்டு ஓவென்று சிரித்தார் நாயக்கர். நேமிநாதனும் ஒரு வினாடி தாமதித்து அவர் நகைப்பில் கலந்து கொண்டான். சட்டென்று நகைப்பை நிறுத்தினார் நாயக்கர்.
நீர் நினைக்கலாம், அதுதான் ஒற்றைப் பார்ப்பான் போயாச்சே மீதி நேரத்தில் நேமிநாதனைச் சந்தித்திருக்கலாமே என்று. யோசித்தீர் இல்லையா, யோசித்தீர்தானே?
ஆம் என்று சொல்லிச் சிரித்தான் நேமிநாதன். இவ்வளவு கலகலவென்று எதற்கும் சிரித்து சூழ்நிலை இறுக்கம் தவிர்த்துத்தான் விஜயநகரத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட குறுநில அரசுகளில் பிரபலமானவராக இருக்கிறார் வெங்கடப்ப நாயக்கர் என்று நினைத்தான் அவன்.
நேமிநாதரே, நேற்று என் அதிர்ஷ்டம் குறைவான தினம். நீர் இளசு. பெரிய பெரிய திட்டங்களோடு எதிர்காலத்தை ஒளிமயமாக்க முனைப்போடு வந்திருக்கலாம் நீர். அதை நல்ல நாள் பார்த்து, ஆலோசனை சொல்ல வேண்டிய மூத்தவனான நான் சகல அதிர்ஷ்டத்தையும் உமக்குக் கடத்தி நல்லபடி எல்லாம் நடக்க வாழ்த்த ஒரு பகலும் ஒரு இரவும் உம்மைச் சந்திக்காமல் தள்ளிப் போட்டேன். தவறு என்றால் மன்னிக்கணும் பிள்ளாய்.
ஐயோ ஒரு தப்பும் இல்லை என்று நேமிநாதன் அவசரமாக நாயக்கரோடு சேர்ந்து சந்தோஷமாகக் கட்சி கட்டினான். இறுக்கம் தளர்ந்த சூழ்நிலை பசியைத் தூண்டுவதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.
நேமிநாதன் தனக்குப் பரிமாறப்பட்ட அக்காரவடிசல், இட்டலிகள், குழாய்ப் புட்டு, கடலை என்னும் விஸ்தாரமான காலை ஆகாரத்தைப் பார்த்தபடி ஒரு வினாடி இருந்து பின் சொன்னான் –
மகாராஜா தயை செய்து என்னை ஒருமையில் நீ என்றே அழைக்க வேண்டுகிறேன். தாங்கள் என் அன்னை சென்னபைரதேவி மகாராணிக்கும் தகப்பன் போல். ஒருமையில் அவரையே அழைக்கும்போது நேமிநாதனை அவனுடைய அப்பா வயசு அப்பாவின் சிநேகிதர் அப்படிக் கூப்பிடக்கூடாதா என்று கேட்டான் நேமிநாதன்.
நாயக்கர் ஒருமையிலா, அல்லது முழு மரியாதையோடு பன்மையிலா அதுவும் அன்றி அரை மரியாதையோடு நீர் எனவா விளிப்பதில் இந்தப் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நடந்தேறுவது இருக்கும் என்று நேமிநாதன் திடமாக நம்பியதாகத் தெரிந்தது.
சரி நீ என்றே சந்தோஷமாக விளிக்கிறேன் உம்மை, உன்னை. உன் அப்பாவின் சிநேகிதன். அவன் போல உரிமை எடுத்துக்கொண்டு என் அபிப்பிராயங்களைச் சொல்வதில் தவறு ஏதுமில்லையே, ஏய் யாரது இந்தப் பையனுக்கு இன்னும் கொஞ்சம் புட்டும் கடலையும் வை.
நீங்கள் ஆகக் குறைவாக உண்கிறீர்களே மாமா என்று சொல்லி நிறுத்தி அவரைப் பார்த்தான் நேமிநாதன்.
அதுவும் சரிதான், நான் சென்னாவின் சகோதரன். எது எப்படியோ என் கவிதைகளை படிக்கும், வாசித்து வெளிப்படையாக ரசிக்கும் எல்லோரும் என் அத்யந்த நண்பர்கள் தாம். சென்னா என் கவிதா லோகத்தில் லயிக்கும் சோதர ஜீவன். மருமகனே, மாமா என்றே அழை என்னை. சொல்லு. வர்த்தமானம் என்னவாக்கும்?
வந்து மாமா, நேமிநாதன் தயங்கித் தயங்கித் தொடங்கினான்.
மென்று முழுங்கணும் என்றால் புட்டையும் கடலையையும் மெல்லு. தேங்காய் சேர்த்து ருஜியாக வேகவைத்தது. உண்டபிறகோ அல்லது உண்ட படிக்கோ எனக்கு கார்டெல் என்ற போர்த்துகீசிய நிதிக்குழு பற்றிச் சொல்லு.
தடாரென்று விஷயத்துக்கு வந்து விட்டார் வெங்கடப்ப நாயக்கர்.
மாமா, கை அலம்பி வந்து சொல்லட்டா, எச்சில் கையோடு பேசினால் கை உலர்ந்து அதிர்ஷ்டம் எல்லாம் இறங்கிப் போய்விடும் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
நேமிநாதன் எழுந்து வெளியே போய்க் கை அலம்பி வந்தான். ஒரு பாத்திரத்தில் சுத்த நீரில் எலுமிச்சை துண்டு போட்டு கையில் எடுத்துக்கொண்டு ஒரு சிப்பந்திப் பையன் நாயக்கரிடம் நீட்ட, அவர் அந்தக் கிண்ணத்தில் கை முக்கி அலம்பி, எலுமிச்சை துண்டால் உதடு துடைத்தபடி, என்ன கை கழுவி வந்தியா? கொஞ்சம் பொறுத்திருந்தால் தண்ணீரே இப்படி உன்னைத் தேடி வந்திருக்கும் என்றார்.
போகுது மாமா என்றபடி கார்டெல் பற்றி வாஸ்கொ ட காமா காலத்து கார்டெல் நடவடிக்கையில் தொடங்கிச் சொன்னான் நேமிநாதன்.
ஆக, அவங்க நா செல்லி சென்னபைராளை இறக்கிட்டு உன்னை ராஜாவாக்கினா, அவங்க கொறைச்ச விலைக்கு மிளகு இங்கே வாங்கிப்போய் வக்கணையா ஐரோப்பாவிலே லாபம் பார்ப்பாங்க. அதானே?
ரொம்ப எளிமையா சொன்னா அதுதான். அது மேலே இருக்கற எளிமை இது. தொழில் சிறக்க நடவடிக்கை எடுத்தல், படிக்க கலாசாலை ஏற்படுத்தறது, லிஸ்பன்லே போய் வேலை வாய்ப்பு இப்படி நிறைய நன்மை வரும் மாமா. மெல்லச் சொன்னான் நேமிநாதன்.
அது என்ன மேன்மை நன்மை வரும் இப்படி கார்டெல் நிழல் அரசாங்கம் ஏற்படுத்தினா? சென்னாவாவது ஜெரஸோப்பா, ஹொன்னாவர், கோகர்ணம் இப்படி ஒரு நிலப்பகுதிக்கு ராணியா இருக்கா. நீ பார்க்கக் கிடைக்கறது கார்டெல் நிதிக்குழு வெள்ளைக்காரன் குண்டியைத்தான். டர்ர்ர்னு குசு விட்டா ஆஹா என்ன வாசனை என்ன வாசனைன்னு மெய்மறந்து நிப்பே. பாரு நீதான் என்னை ஒருமையிலே கூப்பிட்டு உங்கப்பா மாதிரி வெள்ளையா பேசச் சொன்னே.
பேசுங்க மாமா நான் வேணாம்னு சொல்லலியே.
அப்ப கேளு. மிளகு விலை மிளகு விதைப்பு மிளகு அறுவடை, மிளகு பயிர் பாதுகாப்பு இப்படி ஒரு நாடே மிளகு மேலே மட்டும் முழு ஈடுபாடு வச்சு நடந்தா, மிச்ச தானியம், காய்கறி, ஆடு, மாடு, கோழி பற்றி எல்லாம் யார் கவலைப்படுவாங்க? நீயும் மிளகு ராஜாதான். கோழி ராஜா ஆட்டு ராஜா பச்சரிசி ராஜா இல்லே. ஆக அதெல்லாம் கவனிக்காம விட்டா நாட்டுலே மிளகு விற்று காசு குவியும். காசு கொடுத்து வாங்க அரிசியும் கோதுமையும் புளியும் கிடைக்காது. வேணுமா அது நமக்கு?
நேமிநாதன் நாயக்கரையே பார்த்தபடி இருந்தான்.
அப்புறம் என்ன சொல்றே? நாட்டில் போர்த்துகீஸ்காரன் மூலம் தான் தொழில் அதிகரிக்கும். அப்படியா? என்ன செய்யப்போறே? என்ன செய்யப் போறீங்க?
வயல்லே தண்ணி இரைக்க விசை, விளக்கு வீட்டிலும் தெருவிலும் எரிய விசை, வண்டி இன்னும் வேகமாக போக விசை. நேமிநாதன் கனவுகள் கண்ணில் தெரிய மந்திரம் போல் உச்சரித்தான்.
விசை விசை விசை. எங்கே இருக்கு விசை? லிஸ்பன்லேயே ஒரு தத்துவமா, கோட்பாடாக தான் இந்த விசை வச்சு சக்தி ஏற்படுத்தி உலகத்தை அதைக் கொண்டு இயக்கறதைப் பத்தி பரபரப்பா பேசறாங்க. கடந்த இருபது வருஷமா அதே பேச்சுதான். இன்னும் இருபத்தைந்து வருஷம் அதேதான் பேசுவாங்க. சக்தி உருவாக்கறது இப்போது இல்லே. வந்தாலும் அய்ரோப்பா தான் அதை முதல்லே பயன்படுத்தும். இங்கே அது வருமோ வராதோ.
ஏன் மாமா கவலைப்படறீங்க? இங்கே விசை மூலம் சக்தி உருவாக்கி, இயக்கி வேலை செய்யறது கார்டெல் முயற்சியிலே சீக்கிரமே வந்துடும். வந்தா அவங்களுக்கும் நன்மை நமக்கும் என்றான் நேமிநாதன்.
இங்கே இருக்கற மனுஷ சக்தியை வச்சு கல்லே இல்லாத தஞ்சாவூர்லே கல்கோவில் கட்டறான். தண்ணியைத் திருப்பி விட்டு சேகரித்து வச்சு கல்லணை கட்டறான். அதைவிடவா புது விசைச் சக்தி நமக்கு கை கொடுக்கப் போகுது? போகட்டும் அப்புறம் என்ன சொன்னே? கல்வி அபிவிருத்தி, அது போர்த்துகீஸ் மொழி கத்துக்கறது மட்டுமாக இருக்கும். நம்ப பேசற பாஷை எல்லாம் ஓஞ்சு போய் சாகும். போர்த்துகீஸ் தான் உலகம் எங்கும் இங்க்லீஷோடு சேர்ந்து முன்னே வரும். இந்த விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வேறே வாங்கப் போறியா?
நேமிநாதன் சிலையாக உட்கார்ந்திருந்தான்.
அப்புறம் என்ன சொன்னே? லிஸ்பன்லே, போர்த்துகல் முழுக்க போய் வருமானம் ஈட்ட ஐரோப்பிய வேலை வாய்ப்பு. இங்கே இரும்படிச்சு, அரிவாள் பிடிச்சு அறுவடை இப்படி கௌரவமான, காசு அதிகம் கிட்டாத வேலை உண்டு. உனக்கு நீயே ராஜான்னு செய்யற பெருமையான தொழில் அது எல்லாம். ஆனால் லிஸ்பன்லே வேலை வாய்ப்புன்னா? சாக்கடை தள்ளி, வீடு பெருக்கி மெழுகி, குசினியிலே வெந்து, வண்டி இழுத்துக்கிட்டு ஓடி, மூட்டை தூக்கி இதெல்லாம் ஆப்பிரிக்கக் காரனோடு போட்டி போட்டு வாய்ப்பு கிடைச்சால் செய்யலாம். அதுக்கான உடம்பு ஆகிருதி ஆப்பிரிக்கக் காரனுக்கு இருக்கு, உனக்கு இருக்கா? என்ன வேலை செய்யப் போறே அங்கே?
ஆயிரம் வேலை இருக்கு மாமா என்று பலகீனமாக மறுத்தான் நேமிநாதன். அவன் தோற்கும் கட்சிக்கு வாதாட முடியாது. ஜெயிக்கப் போவது யாரென்றும் இப்போது தெரியாது.
ஆக இந்த கார்டெல் ஜீவனோட இருந்தா இதெல்லாம் நடக்கலாம், நடக்காமல் போகலாம். போர்த்துகல்லுக்கு ஒரு அரசர் இருக்கார். ஒரு அரசவை இருக்கு. அவர்கள் ஒரு கையசைத்தால் கார்டல் இருந்த இடம் தெரியாமல் போயிடலாம். அப்புறம் எதை நம்பி நாம ஆற்றிலே இறங்கறதாம்? யோசிச்சுப் பாரு நேமி. நான் சொல்றது தப்பா?
இல்லையென்று தலையாட்டினான் நேமிநாதன். எது சரி என்றுதான் தெரியவில்லை அவனுக்கு.
அது இருக்கட்டும். நூறு வருஷமா கார்டெல் வேறே வேறே ரூபங்கள்லே செயல்பட்டு வருது. ஆனா இதுவரை இங்கே ஒரு சமஸ்தானத்து அரசரை, அரசியை பதவி விலக்க அறிவில்லாத அறமில்லாத வழிமுறைகளைக் கையாண்டதில்லே. சொல்லு வைதீக மதம், சமணம், இப்படி பெரிய மதங்கள், கிறித்துவம், இஸ்லாம் இப்படி இங்கே இன்னும் வேர் ஊன்றாத மதங்கள் இதிலே ஏதாவது ஒண்ணுலே இருந்துக்கிட்டு அவனவன் எந்த புகாரும் இல்லாமல் நிம்மதியா வாழ்கிறான். வைதீகம் சமணம் சண்டை, சமணம் பௌத்தம் தகராறு, வைதீக மதம் இஸ்லாம் அடிதடி இப்படி ஆரம்பிச்சா அதுக்கு தூண்டுகோலாக இருந்தா, அந்த பூதத்தை போத்தல்லே இருந்து இப்போ திறந்து விட்டு எப்படி அதை திரும்ப அடைக்கப்போறோம்? இது இன்னும் நூறு நூறு வருஷமா மோதல், சாவு, அடிதடி இப்படியே போய் மனுஷ குலத்துக்கே நாசம் ஏற்படுத்தி விடும். மேற்குலே அப்பப்போ சிலுவை யுத்தம் வர்ற மாதிரி, ஆனா அதிகம் உக்ரமா இருக்கும். நீ மிளகுராஜா ஆக மனுஷ குலம் நசிக்கணுமா சொல்லு நேமிநாதா.
வெங்கடப்ப நாயக்கர் மேலே வழிந்த வியர்வையை உத்தரீயம் கொண்டுவரச் சொல்லித் துடைத்துக் கொண்டார். குடிக்க குளிர்ந்த தண்ணீர் கேட்டு கூஜாவில் வாங்கி கடகடவென்று தொண்டையில் சத்தம் ஒலிக்கக் குடித்து கூஜாவை மடியில் இருத்திக் கொண்டார். மழை பெய்து ஓய்ந்த மாதிரி ஒரு அஞ்சு நிமிஷம். தம்பிக்கு பழக்கூழ் எடுத்து வந்து கொடு என்று பிரத்யட்சமாகாத யாருக்கோ உத்தரவு பிறப்பிக்க, நேமிநாதன் வேண்டாம் என்று சொல்வதற்குள் மா, பலா, கனிந்த வாழை, ஆரஞ்சு, கிச்சிலி என்று எல்லாப் பழமும் சின்னச் சின்னத் துண்டுகளாக அரிந்து போட்டு தில்லியில் இருந்து வரவழைத்த முகலாய பாணி ஷர்பத் நனைக்க விட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் ஒரு பெண். கெலடி நகர்ப் பெண்கள் எல்லாரும் அழகானவர்கள் என்று நேமிநாதனுக்குத் தோன்றியது. அவன் பார்வை போகிற திசை பார்த்து நாயக்கரும் புன்சிரித்து அதை ஆமோதித்தார்.
நேமி, இந்த கார்டல் விநோதம் என்னிடம் தானே முதலில் சொல்கிறாய்? நல்லதாகப் போச்சு. அதில் பலவீனம் பலம் எல்லாம் நான் சொல்லி சரி பண்ணிக்க வைக்க முடியும். அது இல்லையா ஒரு வேளை வேறு யாரிடமோ. அப்பக்கா புருஷன் வீரு போல் புத்திசாலி அரசர்களிடம் கலந்தாலோசித்திருந்தால். வாக்கியத்தை முடிக்காமல் சிரிக்கத் தொடங்கினார் வெங்கடபதி நாயக்கர். அடுத்த மழை ஆரம்பமானது.
மன்னிக்கணும் மாமா, மாமா எப்போதும் நிர்வாக மும்முரத்தில் இருப்பதால் ஒரு அளவு கார்ட்டெல் திட்டம் உருவாகி வரட்டும் அப்போது மாமா நேரத்தை வீணாக்காமல் என்ன திட்டம், எப்படி நடக்கிறது, என்ன வேண்டும் என்று நீங்கள் பேசுவது போல் இல்லாவிட்டாலும் அதில் கொஞ்சம்போலவாவது நேர்த்தியாகப் பேசலாமே என்று நினைத்தேன். ஆகவே போன வாரம் பில்ஜி அரசர் திம்மராஜு அண்ணாவிடம் இதைப் பற்றிக் கொஞ்சம் போல்.
நேமிநாதன் முடிப்பதற்குள், யாரங்கே, எனக்கும் பழக்கூழ் எடுத்து வா என்று சத்தமாகச் சொன்னார்.
சந்தன நறுமணமும் மை எழுதிய பெரிய விழிகளும் நீளக் கருங்கூந்தலுமாக தனக்கு பழக்கூழ் கொண்டு வந்தவளை எதிர்பார்த்திருக்க, உயரமான ஆப்பிரிக்க காவலன் பழத்தோடு வந்தான். அவன் மனதில் ஏமாற்றம் ஏற்பட்டது அறிந்தவர்போல் இன்னொரு முறை பலமாகச் சிரித்தார் வெங்கடபதி நாயக்கர்.
நான் தவறு செய்துவிட்டேன். மன்னிக்கணும் மாமா. உங்களிடம் கலந்தாலோசனை செய்ய முதலில் வந்திருக்கணும். மன்னிக்கணும். நேமிநாதன் மன்றாடினான். வெங்கடபதி நாயக்கர் நரை பாய்ந்த மீசையை நீவியபடி அவனைக் கூர்மையாகப் பார்த்தார். மறுபடி தப்பு செஞ்சிட்டிருக்கே மருமகனே. பில்ஜி திம்மப்பாவை நீ முதல்லே பார்த்தது தப்புன்னு நான் சொன்னேனா? நீயா சூழ்நிலையை தவறுதலாக புரிஞ்சுக்கிட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இது அரசியல் பாலபாடம் மருமகனே.
அவன் கைகூப்பி வெங்கடப்ப நாயக்கரை வணங்கினான். திம்மப்பாவும் நானும் நகமும் சதையும் போல். அவன் கிட்டே பேசினால் எங்கிட்டே பேசிய மாதிரி. அது இருக்கட்டும் உனக்குத் தெரியுமோ திம்மப்பாவுக்கு பிரான்ஸ் சிவப்பு ஒயின் பொண்டாட்டி மாதிரி. ரொம்பப் பிடிக்கும். சமயத்துலே ரொம்ப வெறுப்பான். இல்லாமல் முடியாது. அவ்வளவு பிரியம். உங்க அப்பக்கா சித்திக்கு சமண சாமியார்களை அழைக்கச் செய்து பிரசங்கம் செய்ய வச்சு அவங்க காலைத் தொட்டு கும்புடறது மற்றும் குழிப்பணியாரத்திலே ஆசை அதிகம். உன் அம்மா சென்னாவுக்கு ரொம்ப பிடிச்சது நீதான். உசிரையே வச்சிருக்கா உன் மேலே. இப்படி பிச்சுக்கிட்டு கிளம்பிட்டியேப்பா.
அவர் குரல் கரகரத்தது. நேமிநாதன் அதிர்ந்து போனான். பேச்சு போக வேண்டியதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிக்கிறது என்று புரிகிறது. குறுக்கிட்டால் புரிதல் தப்பு என்று தள்ளிவிடுவார். பொறுத்திருந்தே பார்க்கலாம் என்று முடிவு செய்தான் நேமிநாதன்.
சரி உடஞ்சாச்சு ஒட்டுமோ ஒட்டாதோ திரும்பி. காலம் தான் பதில் சொல்லணும் கோகர்ணம் கணபதி சொல்லாட்டாலும். அது இருக்கட்டும், உனக்கு அரசாட்சி கைக்கு வர நானும் திம்மப்பனும் ஏன் உதவி செய்யணும் சொல்லு. திம்மப்பன் கிட்டே கேட்டதை ஒரு சௌகரியத்துக்காகத் தனியா நிறுத்திட்டு என் கிட்டே வந்திருக்கியே உனக்கு உதவி பண்ணனும்னு. செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?
நேமிநாதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். அவன் சொன்னது – நான் விஜயநகரத்துக்கு கப்பம் கட்டறதை நிறுத்தி உங்களுக்கு அந்தத் தொகையை மாதாமாதம் அனுப்புவேன். தொகையிலே பத்து சதவிகிதம் அதிகரிக்கவும் தயாராக இருக்கேன். நீங்க விருப்பப்பட்டால் அந்தத் தொகையை பில்ஜி அதிபர் திம்மப்பாவோடு தேவையானதாக நீங்க கருதும் அளவு பங்கு வைக்கலாம். திம்மப்பாவோ உங்களுக்கு வேண்டிய வேறே பாளையக்காரராகவும் இருக்கலாம். இது முப்பது வருஷத்துக்கு எழுதிக் கையெழுத்து போட்டு கொடுக்கப் போகிற ஒப்பந்தமாகும். அப்புறம் அருகதேவன் அருளாலே அது புதுப்பிக்கப்படும் அல்லது வேறே எதாவதாக எதிர்காலம் வரும். போர்த்துகீசியர்களோடு மிளகு விற்பன ஒப்பந்ததை நானே தொடர்ந்து கவனிச்சுக்குவேன். அந்த விற்பனை லாபத்தை நான் எடுத்துக்கறேனே மாமா.
வெங்கடப்பா நேமிநாதன் அருகில் வந்து, நீ நான் எதிர்பார்த்ததை விட புத்திசாலியா இருக்கேடா நேமி. ஆரியக் கூத்து ஆடினாலும் காசு காரியத்துலே கண் வைப்பேடா ஒக்காளி. அவன் முதுகில் தட்டி சிரிக்க, நேமிநாதன் எழுந்து அவர் காலில் தொட்டு வணங்கினான்.
சரி பார்க்கலாம். இன்னும் ஒரு வாரத்திலே நானே முடிவைச் சொல்லி விடறேன். நீ இதை ரகசியமாக வச்சுக்கோ. இனிப்பு கடை வைப்பாட்டி கிட்டே போய் முதல் காரியமா சொல்லிட்டு இருக்காதே. அவ உனக்கு சகலமும்னு எனக்கும் தெரியும். ஆனா ராஜாங்கம் லட்டுருண்டை பிடிக்கற விஷயம் இல்லே. அவளோடு ராக்கூத்து ஆடினாலும் ராஜாங்கக் காரியத்துலே கண்ணு வையடா மருமகனே. ஓம் சக்தி ஓம். நீ கிளம்பு. நானும் காரியங்களை நோக்கறேன். வெங்கடப்ப நாயக்கர் எழுந்தார்.
இப்போதைக்கு ஒரு பாடம் கேள். புதையல் கிடைத்து பழையவயல்லே பழைய அரண்மனை கட்டி சுற்றுமுற்றும் அறுபது கிராமத்தை வளைச்சு எங்க மூதாதையர்கள் ரெண்டு கவுடர்களும் ஆட்சி பிரகடனம் பண்ணினாங்க. விஜயநகர பேரரசு செயலாக இருந்த காலம் அது. இவங்க ரெண்டு பேரையும் பிடிச்சு ஹம்பிக்கு கொண்டு போனாங்க. அங்கே போகிறபோதே எங்க மூதாதையிலே அண்ணன்காரர் அவரோட தொடுப்பு மூலம் ஒரு செய்தி அறிஞ்சார். உனக்கு அல்வா கொடுக்கற இனிப்புக்காரி மாதிரி அவருக்கு ஒரு கூத்தியாள், அதான்பா, ஆட்டக்காரி, பாட்டுக்காரி. எவனோ ஒரு பாளையக்காரன் விஜயநகரத்துக்கு வரி கொடுக்க மாட்டேன்னானாம். விஜயநகர பேரரசர் கிட்டே என் மூதாதையர் சொன்னாங்க – நாங்க அவனை உண்டு இல்லேன்னு பண்ணிடறோம். எங்களை பழையவயல்லே கொஞ்சம் போலவாவது இடம் கொடுத்து நிர்வாகம் பண்ண விடுங்களேன். சொன்னது போல் செஞ்சு காட்டினாங்க. நான் இன்னிக்கு ஆட்சியிலே இருக்கேன்னா அவங்க பேச்சு சுதாரிப்பும் கொடுத்த வாக்கைக் காப்பாத்தற நேர்மையும் காரணம். என்மருமகன், நீயும் அப்படி இருக்கணும். என்ன புரியுதா?
கோவில் மணி ஒலித்தது. எப்போதும் ஒலிப்பது அது. நேமி நெகிழ்ந்து போய்க் கைகூப்பி நாயக்கரோடு போஜனசாலைக்கு வெளியே வந்தான்.
வெங்கடபதி நாயக்கர் வழியனுப்ப வாசல் வரை வந்தார். நினைவாக இலச்சினையை அவனிடமிருந்து வாங்கி காவலாளியிடம் கொடுத்தார். மதியம் இருந்து சாப்பிட்டு போயிருக்கலாமேடா மருமகனே என்று ராகம் இழுத்தார்.
இல்லே மாமா, நீங்க என் மூளைக்கு வேலை கொடுத்திருக்கீங்க. அதே வேகத்திலே செய்ய வேண்டியதைச் செய்யறேன். சந்திப்போம் மாமா உங்க ஆசிர்வாதத்திலே என்று அடக்கமாகச் சொன்னான் நேமிநாதன். சந்திப்போம் என்று அவர் சொன்னபோது எதிரே தனியாக நடந்து வந்த அரண்மனை புரோகிதர் ”சகுனமே சரியில்லே’ என்று முணுமுணுத்துக்கொண்டு அவசரமாகத் திரும்பி வந்த வழியே ஓடத் தொடங்கினார்.
(தொடரும்)
****
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
