
அந்தக் குழந்தைகள் நல மருத்துவமனையின் நுழைவாயிலிலிருந்த ஆளுயர கண்ணாடியாலான சுழல் கதவு சுழன்று உள்ளே இருப்பவர்களை வெளியே அனுப்பியும் வெளியே இருப்பவர்களை உள்ளே தள்ளியும் இடைவிடாது இயங்கிக்கொண்டிருப்பதை ரோகிணி உள்ளிருந்து பார்த்துக்கொண்டேயிருந்தாள். அக்கதவின் வழியே கர்ப்பிணியாய் சிலர் உள்ளே வருவதும், கைக்குழந்தையுடன் சிலர் வெளியே செல்வதுமாய் இருந்தனர். அது காலசக்கரம் எனச் சுழன்று அவளுக்குக் காலத்தின் இரு வேறு புள்ளிகளை இணைத்துக் காட்டுவது போல இருந்தது. நான் பல வருடங்களுக்கு முன்பு இந்தச் சுழலும் கதவின் வழி உள்வந்தவள், இன்றும் உள்ளேயே காத்திருக்கிறேன். எனக்கான காலம் இனி வரப்போவதில்லை. அவை முடிவற்று நீண்டு துவக்கத்தையே வந்தடைந்து மீண்டும் மீண்டும் நான் உள்ளே மட்டும் வந்துகொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டாள். ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது ஒரு கர்ப்பிணிப் பெண் அவள் எதிரில் இருந்த நாற்காலியில் மெதுவாக அவளுடன் வந்த மற்றொருத்தியின் துணை கொண்டு அமர முயற்சி செய்துகொண்டிருந்தாள். அந்த நாற்காலி அவள் உட்கார எத்தனிக்கும் தோறும் அவள் கால் பட்டு பின்னால் நகர, ரோகிணி எழுந்து அந்த நாற்காலியைப் பிடித்துக்கொண்டாள். அவள் ரோகிணியின் தோளை மற்றொரு கையால் பிடித்துக்கொண்டு மெல்ல அமர்ந்தாள். அமர்ந்தவுடன் பெருமூச்சுவிட்ட அவளின் முகத்தில் நிம்மதி வந்து மெல்லப் படிந்தது. கால்களைச் சற்று அகட்டி வைத்துக்கொண்டு பின்புறம் சாய்ந்துகொண்ட அவளின் கால் விரல்கள் அவளை அறியாமலே சற்று மடங்கி இருந்தது. பின்பு அவளுடைய வலது கையை மேடாக இருந்த அவளின் வயிற்றின் மீது வைத்துக்கொண்டாள். ரோகிணி, அவளின் ஒவ்வொரு உடல் அசைவையும் எதிரே அமர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தாள். அப்பெண்ணின் அவ்வசைவுகள் ஒத்த அசைவுகளை இங்கு வரும்தோறும் பல பெண்களிடம் பார்த்திருந்ததால் அவளுக்கு அது மனதில் பதிந்து இருந்தது. அவள் தனியாக வீட்டில் இருக்கும்போது அது போலவே அவளும் உட்கார்ந்து பின்பு எழுந்து பார்ப்பாள். அதே தவிப்போடும் பரிவோடும் தன் வயிற்றையும் தடவிப் பார்ப்பாள். அது ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவமாக அவளுக்கு இருக்கும். ஆனால் அதுவல்ல அப்பெண்கள் உணர்வது. அது வேறு ஒன்று என்று ரோகிணி நினைக்கும் தருணம் அவளுக்குக் கட்டுப்படுத்த முடியாத அழுகையும் பின்பு தன் மேல் பரிதாபமும் கொள்வாள்.
சிறிது நேரத்தில் மருத்துவர் அறையிலிருந்து அழைப்பு வர, அவளையறியாமலே இருக்கையிலிருந்து மெல்லச் சிரமப்பட்டு எழுவது போல எழுந்தாள். அவள் எதிரே இருந்தவள் ரோகிணியை உற்று நோக்க, சட்டெனச் சுதாரித்து அவளைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு உள்ளே சென்றாள்.
விஸ்தாரமான அந்த அறையும் அங்கிருக்கும் பல மருத்துவ உபகரணங்களும் இன்னதென்று சொல்லமுடியாது அந்த அறையில் தேங்கியிருக்கும் அந்த வாசனையும் ரோகிணிக்குப் பழக்கப்பட்டதுதான். எப்போதும் போல இன்றும் அந்த அறையில் அனைத்தும் ஒழுங்கற்று இருப்பது போல அவளுக்குத் தோன்றியது.
மருத்துவர் லோகமாதேவி அருகே இருந்த தண்ணீர்க் குழாயில் கையை கழுவிக்கொண்டிருந்தாள். பின்பு தண்ணீர்க் குழாயை மூடிவிட்டுத் திரும்பி ரோகிணியைக் கண்டவுடன் “வாம்மா, எப்படி இருக்க?” என்று கேட்டுக்கொண்டே அருகே இருந்த கைக்குட்டையில் கையை துடைத்துக்கொண்டாள். அவள் எப்போதும் அணிந்திருக்கும் வெள்ளை நிற மூக்குக் கண்ணாடி இல்லாமல் ரோகிணிக்கு அவள் சற்று வித்தியாசமாக இருப்பதுபோல இருந்தது.
“நல்லா இருக்கேன் மேடம்”, என்று கூறிக்கொண்டே அருகிலிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்தவள் சட்டென எழுந்து இருக்கையைச் சிறு கோணத்தில் நகர்த்தி மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
“என்ன வெயிட் குறைச்சியா?”, என்று கேட்டுக்கொண்டே அவளுடைய சுழலும் இருக்கையில் லோகமாதேவி அமர்ந்து மேஜையின் மீது இருந்த அவளுடைய கண்ணாடியை அணிந்துகொண்டாள். நேர் வகிடெங்கும் வெள்ளை நிறம் துளிர்த்து, ஒற்றைச் சடையுடன், கண்ணாடியில் அவள் கண்கள் சற்று புடைத்து இருக்கும் அந்த லோகமாதேவி ரோகிணிக்கு இப்போது தெரிய அவள் கொஞ்சம் இலகுவானாள்.
“இல்லையே”
“பார்த்து ரொம்ப நாள் ஆச்சி. வேலை அதிகமோ? காஸ்டியூம் டிசைனராதான இருக்க?”
“ஆமாம் மேடம்”
“என்ன படம் ஒர்க் பண்ற இப்ப?”
“டிரீம் லேண்ட் கம்பெனி ஒரு படம் பன்றாங்க. அதுல ஒர்க் பண்றேன். இன்னும் பேரு வைக்கல”
லோகமாதேவி ரோகிணி சொல்வதைப் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் அப்படிச் சிரிக்கும் போது அவளின் பற்களின் வரிசையில் வலது ஓரத்தில் இருக்கும் ஏதோ ஒரு பல் சற்று எட்டிப்பார்க்கும் அந்தப் புன்னகை ரோகிணிக்கு எப்போதும் பிடிக்கும்.
“சந்திரா எப்படி இருக்காரு? வரலையா?” எனக் கேட்டுக்கொண்டே லோகமாதேவி இருக்கையில் அமர்ந்தவாறே சுழன்று பக்கவாட்டிலிருந்த மேஜையிலிருந்து ஸ்டெதெஸ்கோப்பை எடுத்து மீண்டும் சுழன்று தனக்கு முன்னாள் வைத்துக்கொள்ள, அவள் பின்னால் இருந்த படத்திலிருந்து குழந்தை ஒன்று சிரித்து மறைந்ததை ரோகிணி கவனித்தாள்.
“இல்ல. மீட்டிங்.”
“இஸ் ஹி ஒகே”
“திங்க் சோ”
“ஆம்பிளைங்களுக்கு ஆயிரம் வழிகள் திறந்திருக்கும். தப்பிக்கிறதுக்கு. ஆனா நமக்கு ஒரே வழி தான்.” என்று சொல்லிச் சிரித்தாள். “சரி அதை விடு. போன தடவை பார்த்தபோது சரோகேசி பத்தி பேசுனோம்ல? உங்க உறவினர்கள்ல யாராவது சம்மதிச்சாங்களா?” எனக் கேட்டாள் லோகமாதேவி
“இல்ல. கேட்டுகிட்டு தான் இருக்கோம். சரியாய் யாரும் பதில் சொல்ல மாட்டேங்குறாங்க.”
“சந்திரா உறவினர்கள் பக்கம்?”
“கேட்டாச்சு. ஒன்னும் ரெஸ்பான்ஸ் இல்ல.”
“ம்..எதாவது பயமா இல்ல வேற ஏதாவதா?”
“சரியா தெரியல மேடம். ஒருத்தங்களுக்கு ஏற்கனவே சிசேரியன். அதனால் கொஞ்சம் பயம் இருக்கும்னு நினைக்கிறேன்.”
“முன்னெல்லாம் கொஞ்சம் ஈஸியா இருந்துச்சி. பணம் முன்ன பின்ன கொடுத்தா யாராவது குழந்தை பெற்றுத் தர ரெடியா இருந்தாங்க. இப்ப அதெல்லாம் இல்லீகல். நெருங்கின சொந்தங்கள் மட்டும் தான் பண்ண முடியும். சிறிது இடைவெளி விட்டு “சரி பார்க்கலாம்” என்றாள்.
“எனக்கு எல்லாக் கதவையும் அடைச்சிட்ட மாதிரி இருக்கு டாக்டர்” என்றாள் விரக்தியாக.
“நோ..நோ. டோன்ட் ஒர்ரி. சம்திங் வில் கம்” என்று கூறிக்கொண்டே ரோகிணியின் விரலில் ஓர் உபகரணத்தைப் பொருத்தினாள். பின்பு எழுந்து வேறு ஒன்றை எடுத்து அவளின் கைகளில் பொறுத்த, அது ஒரு சில ஒலியுடன் இயங்க ஆரம்பித்தது. பின்பு அனைத்தையும் கழட்டி விட்டு, “வெயிட் பாரு” என்று சொல்லி அவளை ஒரு பலகையில் நிறுத்திப் பார்த்தாள். பின்பு கணினியில் அவளின் முந்தைய எடையைப் பார்த்துவிட்டு.
“சரி, எல்லாம் ஒகே. கவலைப்படாம இரு” என்று அவளின் கையை பிடித்து அழுத்திச் சொன்னாள்.
ரோகிணி அவள் அலுவலகம் சென்று வேலை முடித்து வருவதற்கு இரவாகியிருந்தது. வாகனத்தில் கண் மூடி அமர்ந்திருந்தாள். எண்ணங்கள் பலவற்றைத் தொட்டுத் தொட்டுத் திரும்பிக்கொண்டிருந்தது. மனது எதையும் தொகுக்கும் நிலையிலில்லை. காலையில் லோகமாதேவியை சந்தித்ததை பற்றி நினைத்துக்கொண்டாள். எப்போதும் அவளிடமிருக்கும் அந்தக் கனிவான பார்வையும், உண்மையான அக்கறையும் ஆறுதலாக இருக்கிறது. எத்தனை பிரசவங்கள் பார்த்திருப்பாள். எத்தனை குழந்தைகளின் தரிசனத்தை, முதல் அழுகுரலை அவள் கேட்டிருப்பாள். அவளைவிட வேறு யாருக்குத் தெரியும் தனக்கென்று ஒரு குழந்தை இருக்கும் மேன்மையும், இல்லாமல் இருக்கும் வேதனையும். உறவினர்களிடம் என்னிடத்தில் நிறையப் பரிதாபம் மட்டுமே இருக்கிறது. இது மட்டுமே ஒரே வழி என்று இருப்பவர்களுக்கு உறவினர்களும் கைகொடுக்க முடியாவிட்டால் வேறு என்ன செய்வது. சட்டங்கள் கண்மூடித்தனமாக எல்லாக் கதவையும் இதில் அடைத்துவிட்ட நிலையில், நாமே வேறு ஒன்றைத் திறந்துகொள்ள வேண்டும்போல என்று நினைத்துக்கொண்டாள். சட்டென வாகனம் அதிர்ந்து குலுங்கியதில் அவளின் தலையில் சொருகிவைத்திருந்த கண்ணாடி கீழிறங்கி முகத்தில் விழ, அவள் கண்திறந்து அதனை எடுத்து மீண்டும் தலையில் சொருகிக் கொண்டாள். வாகனம் அவள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் முகப்பில் கதவு திறப்பதற்காக நின்றுகொண்டிருந்தது. அந்த பெரிய கதவு சுழன்று திறக்க வாகனம் முன் விளக்கின் அத்துணை ஒளியும் எதிரே நின்றுகொண்டிருந்த காவலாளி சாஜன் மேல் படிந்து அவன் நிழல் ஓங்கி அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மீது விழுந்து, வாகனம் வலது பக்கம் திரும்ப அவன் நிழல் படிப்படியாகக் குறுகி எதிர்த்திசையில் நகர்ந்து சென்றது. வாகனம் திரும்பும் போது ரோகிணி தூணின் மறைவில் செல்வம் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்தாள். வாகனம் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிறுத்தி அணைந்தவுடன் ரோகிணி தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள்.
“மணி, ட்ரங்க்ல ஒரு பேக் இருக்கு மேல எடுத்துக்கிட்டு வா. நாளைக்கு மகாபலிபுரத்துல ஷூட்டிங் இருக்கு. அதனால காலையில ஆறு மணிக்கு வந்துடு.” என்று சொல்லிக்கொண்டே வாகனத்தின் கதவை மூடினாள்.
மணி வாகனத்தின் பின்பக்கத்திலிருந்து துணிகள் நிறைந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு ரோகிணியின் பின்னால் சென்றான்.
ரோகிணி சட்டென நின்று அவள் கைப்பையைத் திறந்து பணம் எடுத்து “மணி, இத செல்வத்துக்கிட்ட கொடு” என்றாள்.
அவன் சற்று தயங்கி பின்பு அவளிடம் வாங்கிக் கொண்டு இருள் நிறைந்த அந்தத் தூணின் மறைவுக்குள் நின்றுகொண்டிருந்த செல்வத்தை நோக்கிச் சென்றான்.
அவள் சற்று நடந்து அங்கிருந்த மின்தூக்கியின் பொத்தானை அழுத்திக் காத்துக்கொண்டிருந்தாள். செல்வத்தின் முகத்தை வெளிச்சத்தில் பார்த்து வெகு நாட்களாகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு அவன் மஞ்சுவை அழைத்துக்கொண்டு வீட்டு வேலைக்குச் சேர்த்துவிடக் காத்திருக்கும்போது பார்த்தது. அப்போதுதான் கல்யாணமாகியிருந்ததால் அவன் முகம் சற்று தெளிவாக இருந்தது. அதற்குப் பின் எப்போதும் தூணின் மறைவில் இருளில் பொதிந்து நின்றுகொண்டிருக்கும் அந்த ஒல்லியான உருவம் மட்டுமே நினைவுக்கு வருகிறது என நினைத்துக்கொண்டாள்.
சற்று நேரத்தில் மணியும் வந்து அவள் பின்னல் நின்றுகொண்டான்.
“மேடம், தப்பா நினைக்காதீங்க. நீங்க அடிக்கடி அவனுக்கு கொடுக்குற எல்லா பணத்தையும் குடிச்சே அழிக்கிறான். அவனுக்கு ஏன் கொடுக்குறீங்க?” என மணி ரோகிணியைப் பார்த்துக் கேட்டான்.
“எப்பிடி சொல்ற எல்லாக் காசையும் குடிக்கிறான்னு?”
“மஞ்சு அக்காகிட்ட கொடுக்குறமாதிரி தெரியல.”
“எல்லா நாளும் குடிக்கிறானா?”
“ஆமாம். ஒரு நாள் விடறதில்ல”
ரோகிணி ஒன்றும் சொல்லாமல் மின்தூக்கியில் ஏறிக்கொண்டாள்.
அவன் கல்யாணத்துக்கு முன்பும் இப்படித்தான் இருந்தான். இந்த பழக்கம் ஒன்றும் புதுசு இல்ல என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
“மஞ்சு அக்கா இன்னும் இவன் கூட எப்பிடி குடும்பம் நடத்துறாங்கன்னு தெரியல? என் பொண்டாட்டியா இருந்தா, இந்நேரம் என்னை கொன்னுருப்பா”, என்று சொல்லிச் சிரித்தான்.
இதே கேள்வியை ஒரு முறை ரோகிணி மஞ்சுவிடம் கேட்க அவள் “ஒரே வீட்டுல இருக்கிறதால ரெண்டு பேரும் குடும்பம் நடுத்துறோம்ன்னு அர்த்தமில்லை. கணவன் மனைவியா எங்களுக்குள்ள எதுவுமில்லை” என்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்து போனது.
மின்தூக்கி சிறு தயக்கங்களுடன் நிற்க அவர்கள் வெளியே வந்தனர். ரோகிணி வீட்டுக் கதவைத் திறந்து மணியிடமிருந்த பையை வாங்கிக்கொண்டு மீண்டும் கதவைத் தாழிட்டாள்.
வீட்டில் அங்கங்கே மூலையிலிருந்த சிறு விளக்குகள் எரிந்துகொண்டிருக்க, பெரும்பாலான இடங்களில் இருள் தேங்கியிருந்தது. சமையலறையிலிருந்து வரும் சத்தம் மஞ்சு வீட்டில் இருப்பதை உறுதி செய்தது. ரோகிணி கையிலிருந்த பையை அங்கிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு சமையலறைக்குச் சென்றாள். அங்கு மஞ்சு காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.
இவளைப் பார்த்தவுடன் நறுக்குவதை நிறுத்திவிட்டு, “காபி குடிக்கிறிங்களாக்கா?” எனக் கேட்டாள்.
“இல்ல. குளிக்கணும். என்ன சாப்பாடு?”
“சப்பாத்தி குருமா. தோசை மாவு கூட இருக்கு.”
“இல்ல சப்பாத்தி போதும். சந்திரா வந்ததுக்கப்புறம் சப்பாத்தி போடு”
“அவரு வந்தாச்சே” என்றாள் மஞ்சு.
“யாரு சந்திராவா?”
“ஆமாம். காபி கேட்டாங்க.”
ரோகிணிக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. சமையலறையிலிருந்து வெளியேறி சந்திரா இருக்கும் அறைக்குச் சென்றாள்.
அறையில் கணினி வெளிச்சம் பரவி சுவர்களில் பிரதிபலித்தது. சந்திரா கணினியில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ரோகிணி கதவைத் தட்ட அவன் திரும்பாமல் கையை மட்டும் நீட்டி எதையோ பிடிப்பதுபோல அவன் விரல்கள் அலைபாய்ந்தன. ரோகிணி அந்த விரல்களையே சற்று நேரம் பார்த்து நின்றுகொண்டிருந்துவிட்டு, அவள் கையை அவ்விரல்களுக்குக் கொடுக்க அவன் சட்டென அந்த கைகளைப் பிடித்து இழுத்தான். ரோகிணி இழுபட்டு தோளை உரசி அவன் முன்னால் வந்து நிற்க, சந்திரா ரோகிணியின் முகத்தைக் கண்டவுடன் சட்டென அவன் முகம் மாறி அவள் கையை விடுவித்தான்.
“என்னாச்சு”, என்றாள்.
அவன், “ஒண்ணுமில்லை” என்று சொல்லிச் சிரித்தான்.
ரோகிணி இயல்பாக “என்ன சீக்கிரம் வீட்டுக்கு வந்தாச்சு இன்னிக்கு?” எனக் கேட்டாள்.
“மீட்டிங் முடிஞ்சு எல்லாரும் டின்னர்க்கு வெளியே போனாங்க. நான் வீட்டுக்கு கிளம்புறேன்னு வந்துட்டேன்.”, என்றான்.
“காபி குடிச்சீங்களா.”
“இல்ல, அப்டியே வந்து சிஸ்டம் முன்னால வந்து உட்கார்ந்தேன். நேரம் போனதே தெரியல”, என்று சிரித்தான்.
“சரி நான் போய் என் ரூம்ல குளிச்சிட்டு வந்துடுறேன். மஞ்சு சப்பாத்தி போடுறா சாப்பிடலாம்”, என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.
ரோகிணி குளித்துவிட்டு வெளியே வந்தபோது மஞ்சு சமையலறையிலிருந்து இரவு உணவுகளை வெளியே இருந்த மேஜையின் மீது வைத்து ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். மேஜையின் மீது பூ வேலைகள் செய்யப்பட்ட சிறிய விரிப்புகளை எதிர் எதிரே விரித்தாள். அதன் மீது வண்ணங்களால் வேலைப்பாடுகொண்ட இரு வேறு பீங்கான் தட்டை அவ்விரிப்புகளின் மீது வைத்துவிட்டு, ஏதோ நினைத்தவளாய் அத்தட்டுகளை ஒன்றோடு ஒன்று இடம் மாற்றி வைத்தாள். பின்பு சற்று நகர்ந்து பார்த்துவிட்டு ஒரு பக்கத்திலிருந்த விரிப்பைத் தட்டுடன் ஒரு கோணத்தில் நகர்த்தி அதன் எதிரே இருந்த விரிப்புடன் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்தாள். மேஜையின் மீது இருந்த உணவுகள் நிறைந்த பீங்கான் பாத்திரங்களை இரு தட்டுகளுக்கு இடையே ஒரு வரிசையில் அடுக்கி, பின்பு அவைகளைச் சற்று மாற்றியமைத்து வேறு வரிசையில் அடுக்கி வைத்தாள். குடிக்கும் தண்ணீர் புட்டிகளைக் குளிர்சாதனத்திலிருந்து எடுத்து மேஜையின் மீது வேறு ஒரு சிறு வட்டமான விரிப்பை வைத்து அதன் மீது வைத்தாள். பின்பு அந்த மேஜையின் மீது இருப்பவை அவளுக்குப் பிடித்த ஒரு ஒத்திசைவில் அமைந்தது போலத் தோன்றச் சமையலறைக்குச் சென்றாள். ரோகிணி அந்த மேஜையின் மீது அடுக்கி வைக்கப்பட்டவற்றைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஏதோ கண்டுகொண்டவளாய் முன்னகரும் சமயத்தில், சமையலறைக்குச் சென்றுகொண்டிருந்த மஞ்சு சட்டெனத் திரும்பி வந்து அந்தத் தண்ணீர் நிறைந்த புட்டியைச் சற்று நகர்த்தி மேஜையின் நடுவே மிகச் சரியாக வைத்துவிட்டு மீண்டும் சமலயறைக்குச் சென்றாள். ரோகிணி சற்று துணுக்குற்று பின்பு சிரித்துக்கொண்டே அந்த வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தாள். அவையனைத்தும் மஞ்சுவாள் அமைக்கப்பெற்றும் பராமரிக்கப்பட்டாலும் தன்னால் ஒரு போதும் சொல்லாத சொல்லமுடியாத உள்ளுணர்விலிருந்து எழுந்த ரசனையை ஒட்டியே இருந்ததைக் கண்டாள்.
பின்பு சாப்பாட்டு மேஜையின் அருகிலிருந்த நாற்காலியை இழுத்து அமர்ந்துகொண்டாள். சிறிது நேரத்தில் சந்திராவும் வந்துவிட, ரோகிணி சாப்பிட்டுக்கொண்டே சந்திராவுடன் காலையில் லோகமாதேவியை பார்த்தது, அலுவலக வேலை எனப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, சமையலறைக்குச் சென்று மஞ்சுவுக்கு உதவி செய்துகொண்டே அவளிடம் மறுநாள் தொடங்கவிருக்கும் படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்.
“மஞ்சு, நாளைக்கு மறுநாள், இரண்டு வாரம் வெளியூர் ஷூட்டிங் இருக்கு.” என்றாள் ரோகிணி.
“சரிக்கா. எங்க?”
“மதுர பக்கம்.”
“ஓ!” என்று சொல்லிக்கொண்டே மஞ்சு பாத்திரத்தை ஒவ்வொன்றாகப் பாத்திரம் விலக்கும் இயந்திரத்துக்குள் கவிழ்த்து வைத்துக்கொண்டிருந்தாள்.
“செல்வத்தை பார்த்தேன்.” என்றாள் ரோகிணி.
அவள் ஒன்றும் சொல்லாமல் இயந்திரத்தின் உள்ளே இருந்த பாத்திரங்களைச் சரி செய்து கொண்டிருந்தாள்.
“உடம்பு எதாவது சரியில்லையா? பார்க்கவே முடியல.”
மஞ்சு அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.
பிறகு, “எனக்கு ஒன்னும் தெரியாதுக்கா. ஆனா அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரதா பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க. ஆனா குடியை மட்டும் இன்னும் விடல. அதுக்கு மட்டும் காசு எங்கிருந்து வருதுன்னு தெரியல” என்று சொல்லிக்கொண்டே அந்த இயந்திரத்தின் கதவை மூடினாள்.
அதற்கு மேல் மஞ்சுவுக்கு செல்வத்தைப் பற்றிப் பேச விருப்பமில்லை என ரோகிணி உணர்ந்து, வேறு விஷயங்களை அவளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
மறு நாள் படப்பிடிப்பு முடிந்து மகாபலிபுரத்திலிருந்து வீட்டுக்கு வருவதற்கு இரவு ஆகிவிட்டது. ரோகிணி நன்றாக உறங்கியிருந்தாள். வீட்டுக்கு முன்பு இருக்கும் மேட்டில் ஏறி இறங்கி வாகனம் குலுங்கியவுடன் முழித்துக்கொண்டாள்.
செக்யூரிட்டி சாஜன் இவளைப் பார்த்தவுடன் வாகனத்தின் அருகில் வர, ரோகிணி கண்ணாடிக் கதவைத் திறந்தாள்.
“கொடுத்துட்டேன் மேடம்”, என்று அவன் கூற அவள் சரி என்பதுபோல தலையை ஆட்டினாள். வாகனம் திரும்பும்போது ரோகிணி அந்த இருளில் இரு கண்கள் மட்டும் ஒளிர்ந்து மறைந்ததைக் கண்டாள்.
“மணி, நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு பிளைட். காலையில ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடு.”, என்றாள்.
மணி புறப்பட்டுப் போக அவள் வீட்டுக்குச் சென்றாள். சமையலறையில் மஞ்சு காபி குடித்துக்கொண்டே கடையில் வாங்கி வந்த பொருட்களைச் சரி பார்த்துக்கொண்டிருந்தாள்.
ரோகிணி வருவதைக் கண்டவுடன், “காபி?” எனக் கேட்டாள்.
“இல்ல வேண்டாம். சந்திரா இன்னும் வரல?”
“இல்லையே”, என்றாள்.
“சரி, குளிச்சிட்டு வரேன். ரெண்டு பேரும் சாப்பிடலாம்”, என்று சொல்லிவிட்டு சற்று தூரம் சென்றவள் திரும்பி “இந்தப் புடவை உனக்கு எடுப்பா நல்லாயிருக்கு” என்றாள்.
அவள் சிரித்துக்கொண்டே, “உங்களடையுதுதான். நீங்கக் கொடுத்ததுதான்”, என்றாள்.
ரோகிணி சிரித்துக்கொண்டே, “அப்படியா” என்று சொல்லிவிட்டுத் திரும்பி தன் அறைக்குச் சென்றாள். போகும்போது சட்டென நின்றவள் சமையலறையில் அந்தப் புடவையில் நிற்பவளை மனம் கண்டுகொண்டதுபோல உணர்ந்தாள்.
இரண்டு வாரங்கள் கழித்து ரோகிணி வீட்டுக்குத் திரும்பியிருந்தாள். வெளியூர் படப்பிடிப்பு எப்போதுமே அவளுக்கு அதிக உடல் உழைப்பைக் கோரக்கூடியது. மிக அசதியாக இருந்தது. வந்தவுடன் வெந்நீரில் குளித்துவிட்டு அது ஏற்படுத்திய சோம்பலுடன் அப்படியே தன் அறையில் படுக்க வேண்டும் போல அவளுக்கு இருந்தது. சமையலறைக்குச் சென்று பார்த்தாள். மஞ்சு சாப்பாடு செய்து அனைத்தையும் மூடி வைத்திருந்தாள். சந்திரா மஞ்சு வீட்டில் இருக்கும் போதே சாப்பிட்டு இருக்க வேண்டும். சாப்பாடு வெளியே எதுவும் சிந்தாமல் சுத்தமாக இருந்தது. அவள் ஒரு தட்டில் சாப்பாடு போட்டுக்கொண்டு அங்கேயே அமர்ந்து சாப்பிட்டாள்.
“நீ எப்போ வந்த?” எனக் கேட்டுக்கொண்டே சந்திரா அங்கே வந்தான்.
“கொஞ்சம் நேரத்துக்கு முன்னால்தான்.” என்றாள் ரோகிணி.
“ஓ! ரூம்ல வேலையா இருந்தேன்.” என்று சொல்லிவிட்டு “எவ்ரிதிங் ஒகே? டயர்ட்?” எனக் கேட்டான்.
“ஆமாம். நாளைக்கு இண்டோர் ஷூட்டிங் தான். கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கலாம்.”
“மஞ்சு நாளைக்குச் சீக்கிரமா வரேன்னு சொல்லிட்டுதான் போனா.”
“ம்..சரி.”, என்று சொல்லிக்கொண்டே தட்டை எடுத்து எழுந்திருக்க முற்பட்டபோது, சந்திரா அவள் கையிலிருந்து அந்தத் தட்டை வாங்கிக் கொண்டு,”நீ போய் படு நான் பாத்துக்குறேன்”, என்றான்.
ரோகிணி அவனிடம் தட்டை கொடுத்து கை கழுவிவிட்டு சற்று ஆச்சரியத்துடன் நகர்ந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சந்திரா தட்டையும் மற்ற பாத்திரங்களையும் அங்கிருந்து எடுத்து அதைச் சற்று கழுவிவிட்டு பாத்திரங்கள் கழுவும் இயந்திரத்துக்குள் போட்டு அதனை இயக்கினான்.
சந்திரா அவனையே பார்த்துக்கொண்டு நின்ற ரோகிணியைக் கண்டவுடன்,சிரித்துக்கொண்டே, “கத்துக்கிட்டேன்”, என்றான்.
ரோகிணி ஒரு புன்னகையுடன் தன் அறையில் சென்று படுத்துக்கொண்டாள்.
ரோகிணி ஒரு ராட்சச சுழலும் கதவின் முன் நின்றுகொண்டிருந்தாள். அது மெல்லச் சுழன்று கொண்டிருந்தது. அவளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பலர் அதன் சுழலின் வழியே உள்ளே சென்றார்கள். ஆனால் யாரும் அதன் சுழற்சியிலிருந்து வெளியே வரவேயில்லை. அவள் மிகுந்த ஏமாற்றத்துடன் யாரிடமோ அழுதுகொண்டே பேசுகிறாள். அவர்கள் யாரும் இவளைக் கண்டுகொள்ளவேயில்லை. சட்டென ஏதோ மணியின் ஓசை அவளுக்குக் கேட்கிறது. மீண்டும் மீண்டும் அது கேட்டுக்கொண்டேயிருக்க அவள் பதற்றமாக ஓடுகிறாள். சட்டெனக் கனவிலிருந்து விடுபட்டு எழுந்து அமர்ந்துகொண்டபோது அவள் கைப்பேசி ஒளிர்ந்து அடங்கியது. அவள் ஏதோ ஒன்றை உணர்ந்தவளாய் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். மணி அழைத்திருந்தான். அவள், இன்று படப்பிடிப்பு செல்வதற்குக் கிளம்பாமல் அறையிலேயே தூங்கிவிட்டோம் போல என்று நினைத்த அடுத்த வினாடி, தான் சென்னை வீட்டுக்கு வந்துவிட்ட உணர்வையடைந்தாள். பின்பு எதற்காக மணி அழைத்திருந்தான் என்று யோசித்துக்கொண்டே அவனை அழைத்தான்.
“சொல்லு மணி. அசதி. தூங்கிட்டேன் உன்ன சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தேனா?”
“இல்ல மேடம். அதெல்லாம் இல்ல” என்று சற்று தயங்கி இடைவெளிவிட்டு, “செல்வம் இறந்துட்டான் மேடம்”, என்றான்.
அவனையுடைய தயக்கத்தின் இடைவெளியில் ஏதோ ஒன்றை அவள் மனம் யூகித்திருந்தது போல “ஓ” என்றாள். பின்பு சுதாரித்து “எப்போ?” எனக் கேட்டாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் மேடம். நேத்து நைட் ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காங்க.” என்றான்.
அவள் சற்று நேரம் ஒன்னும் சொல்லாமல் அமைதியா இருந்தாள். பின்பு “எந்த ஆஸ்பத்திரி?”
“சிந்தாதிரிப்பேட்டை எஸ் எஸ் க்ளினிக் மேடம்.”
“சரி, நான் வரேன்”
“நான் வரட்டுமா மேடம்” எனக் கேட்டான் மணி.
“இல்ல நான் வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
ரோகிணி அப்படியே சிறிது நேரம் தன் படுக்கையில் அமர்ந்திருந்தாள். பின்பு எழுந்து சந்திராவிடம் சொல்வதற்குச் செல்ல அவன் குளியலறையிலிருந்தான். சமையலறைக்குச் சென்று காபி போட்டு எடுத்துக்கொண்டு, தினசரி பத்திரிக்கையை எடுத்து வந்து சிறிது நேரம் வாசித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு இருளில் அன்று மினுங்கிய செல்வத்தின் கண்கள் நினைவுக்கு வந்து சென்றது. மொத்தமாக இருளின் ஆழத்துக்குள் சென்று மறைந்துவிட்டான்.இனி அவன் இல்லை என்று நினைத்தபோது அவளுக்கு எந்தவிதமான குற்றவுணர்ச்சியுமில்லை. பின்பு மஞ்சுவின் ஞாபகம் வர, அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்? அவள் மனம் இப்போது எப்படி இருக்கும்? என்று நினைத்துக் கொண்டாள்.
சந்திராவுக்கு ஒரு காகிதத்தில் விஷயத்தை எழுதி வைத்துவிட்டுக் கிளம்பி ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்.
ஆஸ்பத்திரியில் அவ்வளவாகக் கூட்டமில்லை. வெளியே விசாரித்துக்கொண்டு இரண்டாவது தளத்துக்கு வந்தாள். மணி யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
இவளைக் கண்டவுடன் அழைப்பைத் துண்டித்துவிட்டு, “ஏதோ சில பார்மாலிட்டி இருக்காம். முடிஞ்சவுடன் பாடிய கொடுத்துடுவாங்கலாம்”, என்றான்.
ரோகிணி சரி என்பதுபோல தலையாட்டிக் கொண்டே “பணம் எதாவது கட்டணுமா?” எனக் கேட்டாள்.
“அப்படிதான் நினைக்கிறேன்.”
“சரி, இந்தா இதுல கொஞ்சம் பணமிருக்கு. எவ்வளவுதுன்னு கேட்டு கொடுத்துட்டு சொல்லு”, என்று ஒரு காகித உரையை அவனிடம் கொடுத்தாள்.
பின்பு, “மஞ்சு எங்க?” என மணியிடம் கேட்டாள்.
“அவங்க வேற ரூம்ல இருக்காங்க. மயக்கம் வந்ததுன்னு டாக்டரம்மாவ பார்க்க போயிருக்காங்க” என்றவன் சிறிது இடைவெளி விட்டு “கர்ப்பமா இருக்காங்களாம்”, என்றான்.
அவள் வயிற்றுக்குள் ஒன்று சட்டென ஏதோ ஒன்று உருண்டது போல உணர்ந்தாள். அவனிடம் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் ரோகிணி முகத்தைத் திருப்பிக்கொண்டு சன்னல் வழியே வெளியே பார்த்தாள். மெல்ல ஆடிக்கொண்டிருந்த மரக்கிளை ஒன்றின் வெற்றிடத்தில் மற்றொரு சிறிய பறவை வந்து அமர்ந்து “கிரீச்” என்பதை ரசித்தாள் ரோகிணி.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
