மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது

சித்திரம்: அருண்

ஹொன்னாவர் 1605

நான் ரோகிணி. வெறும் ரோகிணி. ரோகிணி என்ற பெயரில் உலவும் மாயப் பெண் பிசாசம் என்று ஒரு மதகுரு பிரசங்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவு நான் பெயர் வாங்கியிருக்கிறேன். 

பிசாசு என்று சொல்லியாகி விட்டது. அப்புறம் எதற்கு பெண் பிசாசு என்று பால் வேறுபாடு காட்டிச் சொல்ல வேண்டும்? ரத்தம் உறிஞ்சிய பெண் பிசாசுக்கு கனத்த கொங்கைகளும், வழுவழுத்த தொடைகளும் வாய்த்திருந்து காட்சி வைத்தால் வெறித்துவிட்டுத்தான் சாவார்களா?  

பெண்விலக்கு மனப்பான்மையை நான் வைதீக, சமண, கிறிஸ்துவம் கடைப்பிடிக்கும் குருக்கள்களுக்கு ஏற்பட்ட பொது சிந்தனைப் போக்காகப் பார்க்கிறேன். ஏதாவது விழா, மதப்பிரசங்கம், பண்டிகை என்று நிதி வசூல் செய்துகொண்டு வருகிற குழுக்கள் கூட ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்துப் பார்த்து, என் மிட்டாய் அங்காடியில் படி ஏறுகிறார்கள். ஒரு பெண் நிர்வகிக்கும் நிறுவனம் அது.

இனிப்பு வாங்கும்போது, நான் விற்பதைக் காசு கொடுத்து வாங்கும் பெருமை முகத்தில் தெரிய அங்காடிக்கு உள்ளே வரும் இவர்கள், வாங்க வந்ததற்கு மேல் விலையில்லாமல் கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தாலும் மகிழ்ச்சியோடு வாங்கிப் போகிறார்கள். என்றாலும், ரோகிணி  அங்காடியின் இனிப்பு விற்பனை தவிர்த்த எந்த நோக்கிலும், முக்கியமாக மத நம்பிக்கை சார்ந்த நோக்கில் அவர்களுக்கு ஈடுபாடு ஏதுமில்லை. 

இவ்வளவுக்கும் நான் எல்லா மதப் பண்டிகைகளையும் இனிப்பு அங்காடியில் கொண்டாடுகிறேன். அங்கே வேலை பார்க்கிற யார் என்ன மதம் என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. அது அவர்கள் சொந்த விஷயம். தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. தெரியாததால் ஏதும் குறை வரவும் வாய்ப்பில்லை. 

மதம் இனிப்பு அங்காடியில் வேலை பார்ப்பதில்லை. ஆனால் எல்லாக் கொண்டாட்டத்திலும் ஏதாவது ஒரு மதம் மகிழ்ச்சியோடு பங்கு பெறுகிறது. அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும் அங்காடியின் படி இறங்கிப் போய்விடுகிறது. அடுத்த கொண்டாட்டத்துக்கு இன்னொரு மதம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது. 

இத்தனையும் சொல்லி என்னை நான் நிலையுறுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நான் லிஸ்பனில் போர்த்துகல்காரி அம்மாவுக்கும், இந்தியத் தமிழ் தகப்பனுக்கும் பிறந்தவள் என்பதால் இரண்டு பக்கமும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். 

அப்பா இறந்து போய் அம்மாவின் கவனிப்பில் வளர்ந்தேன்.  அவளை கவனிக்க ஏழெட்டு கள்ளப் புருஷன்மார் உண்டு என்பதால் வளர்ச்சி எந்த திசையில் போயிருக்கும் என்று ஊகிக்கலாம். 

என் பதினெட்டு வயதில் என் கணவர், முதல் கணவர், பத்தாவது இணை அந்த லியனார்டோ. பதினைந்து வயதில் மாதாகோவிலில் கல்யாணம் நடத்த பிஷப் ஒத்துக்கொள்ளாததால் சர்ச்சுக்கு வெளியே நாங்கள் மோதிரம் மாற்றிக் கல்யாணம் செய்து கொண்டோம். 

வீட்டுக்கு வரவேண்டாம் என்று மென்மையாகத் தெரிவித்து விட்டு இந்திய வேலைக்காரனோடு உறவு தொடரப் படுக்கையை சித்தமாக்கிக் கொண்டிருந்தாள் அம்மா. 

நானும் லியனார்டோவும் கொஞ்சநாள் லிஸ்பன் யாத்ரிகர் விடுதியில் தங்கியிருந்தோம். நல்ல வேளை அவனுக்கு ராணுவத்தில் குதிரைப்படையில் உத்தியோகம் கிடைத்தது. எங்கள் விருப்பப்படி சிறிய அழகான ஒரு இல்லத்துக்குக் குடிபுகுந்தோம். 

முதல் வருடம் முழுவதும் ராணுவத்துக்கு எந்தப் போரும் இல்லாத காலம் என்பதால், வேளாவேளைக்கு சாப்பிட, சாயந்திரம் கவாத்து பழக, ராத்திரி களித்து உறங்காமல் உறங்கி உறவு கொள்ள என நாட்கள் பறந்தன. 

அப்போது தான் ஊமத்தை யுத்தம் இந்துஸ்தானத்தில் அதுவும் கோவா துறைமுகத்தில் தொடங்கியது. ராணுவ வீரனாக லியனார்டோ இந்துஸ்தானம் போயிருந்த நேரம் அது. 

ஊமத்தை யுத்தம் கேட்டிருக்கிறீர்கள் தானே? மதுசாலைக் காரர்களும், இந்துஸ்தான ஜெரஸோப்பா அரசாங்கமும் கணிகையரும் ஒன்று சேர்ந்து போர்த்துகல் ராணுவ வீரர்கள் அருந்திய மதுவில் கொடிய ஊமத்தைச் சாற்றைக் கலந்து குடிக்கத்தர, அதை குடித்து புத்தி கெட்டு ராணுவ வீரர்கள் இந்துஸ்தான வீதிகளில் பைத்தியமாகத் திரிய வைத்து போர் தொடங்கும் முன்பே தோற்றுப்போகச் செய்த ஏற்பாடு அது. 

எப்படியோ திட்டம் வெளியேவர நூற்றுக்கணக்கான போர்த்துகல் வீரர்கள் தப்பிப் பிழைத்தார்கள். அவர்களில் லியனார்டோவும் ஒருவன். லிஸ்பன் துறைமுகத்தில் திரும்பி வந்த இருபத்தாறு ராணுவ வீரர்களை வரவேற்றுப் பெண்களும் குழந்தைகளும் ஒரு சில ஆண்களும் குழுமி இருந்த சாயங்காலம் அது. நானும் கண்ணில் கண்ணீர் திரைபோட நின்றிருந்தேன். 

இந்துஸ்தானம் போய்த் திரும்ப அவர்களுக்கு நான்கு மாதம் தான் பிடித்தது. மற்றவர்களை விட பலகீனமாக, கண்கள் அலைபாய்ந்து சூனியத்தில் வெறிக்க, வாயில் எச்சில் தன்னிச்சையாக ஒழுக, ஈர்க்குச்சி மனுஷன் போல தலைமுடி கொட்டிப் போய் தொளதொளத்த, கசங்கி அழுக்கான ராணுவ உடுப்போடு என்னைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்தான் லியனார்டோ. 

வீட்டுக்கு சாரட் வண்டி பேசிப் போய்ச் சேருவதற்குள் என் தோளில் சாய்ந்து உறங்கிவிட்டான் பலகீனம் காரணமோ என்னமோ. ராத்திரி ஏழு மணிக்கு அவனோடு இருந்து அனுபவித்து உண்ண வேண்டிய ராச்சாப்பாடு நடுராத்திரிக்கு குளிர்ந்திருக்க,ரெண்டு பேரும் சாப்பிட்டோம். அப்போது தான் அவன் சொன்னான் – எல்லோருக்கும் விரல் நகக்கண் அளவு கூட ஊமத்தைப் பொடி மதுவில் கலந்து ஹொன்னாவர் தேவடியாக்கள் கொடுக்க, ஊரிலேயே மகாபிரசித்தமான கணிகையான கனகவல்லி விரித்த வலையில் விழுந்தானாம் லியனார்டோ. 

இவன் படைத்தலைவன் என்று வேறு அவள் கவனத்தை ஈர்க்கச் சொல்லி வைத்திருந்திருக்கிறான். உடுப்பு களைந்து நிர்வாணமாக உட்கார்ந்து லியனார்டோவை மடியில் சாய்த்து குடி குடி என்று அவனுக்கு அந்தப் பெண்பிள்ளை கொடுத்த ஊமத்தைப் பொடி கலந்த ஒயின் அதிகம். மிக அதிகம். 

அவள் யோனியில் சதா மல்லிகைப்பூ வாடை லகரி ஏற்றியதாக லியனார்டோ மறக்காமல் குறிப்பிட்டான். மற்றவர்கள் எல்லாம் ஊமத்தைப் பொடி விளைவித்த கிறுக்கு கொஞ்சமானதால் உதிர்ந்து விட, நிரந்தர நோயாளியாக எதற்கும் லாயக்கற்றவனாக வந்திருக்கிறான் என் லியனார்டோ. 

அப்படியே ஒரு மாதத்தில் அவன் இறந்தும் போனான். அவன் போய்ச் சேர்ந்து, லிஸ்பன் கல்லறையில் புதைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் என் அம்மாவும் இறந்து போனாள். போகும்போது சொத்துகளை என் பெயரில் மாற்றி எழுதிப் போனாள் என்பதால் எனக்கு உரிமையான வீடும் தோட்டமும் வெள்ளி தங்கமும்   என்னிடம் எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தது.

அந்த நிமிடம் இரண்டு தீர்மானங்களை எடுத்துக் கொண்டேன். முதலாவதாக யோனி மல்லிகை நாறும் கனகவல்லி என்ற தேவடியாளைக் கொன்று தீர்க்க வேண்டும். அடுத்து ஜெர்ஸோப்பா மாநில அரசி, மிளகுராணியாம், அவள் ஆட்சியை முடிக்க வைத்து எனக்குக் கட்டுப்படும் அரசாட்சியை ஏற்படுத்த வேண்டும்.  மிளகுராணியை சிறையில் அடைத்து மூன்று வேளை ஊமத்தைப் பொடி தாராளமாகக் கலக்கிய மதுவை வலுக்கட்டாயமாகப் புகட்டி, அவளை உடையைக் கிழித்துக்கொண்டு ஆடும் பைத்தியக்காரி ஆக்கி வேடிக்கை பார்க்க வேண்டும். 

லிஸ்பன் சொத்துகளை விற்றுத் தங்கமாக்கி  என் நெருங்கிய நண்பர்களான யூத லேவாதேவிக்காரர்களிடம் பாதுகாத்து வைக்க ஒப்படைத்தேன். அந்தத் தங்கத்தில் ஒரு சிறு பகுதியோடு இந்துஸ்தானம் வந்து சேர்ந்தேன். 

வந்ததும் முதல் வேலையாக ஹொன்னாவரின் பெரிய மதுசாலையில் கனகவல்லி மதுக் கலந்து தருவதாகத் தெரிந்து கொண்டேன். கூட்டம் மிகுந்த ராத்திரியில் நான் அங்கே மதுவருந்தப்போனேன். வாசல் அறைகளில் ஒன்றில் இருட்டில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தேன். கனகவல்லி யாருக்கோ பருகத்தர மதுவோடு வந்தபோது சன்னமான கண்ணாடிக் கத்தியால் அவள் கழுத்தை அறுத்தேன். கூட்டத்தின் பேரொலியில் அவள் இருட்டறையில் கிடந்து சத்தமிட்டது வெளிவருவதற்குள் வெளியேறி விட்டேன். 

ஐரோப்பிய உடையைக் களைந்து உள்ளே கட்டியிருந்த புடவையோடு நடக்க, யாருக்கும் புடவை உடுத்த பெண் மீது சந்தேகமில்லை. கனகவல்லியின் மல்லிகைவாடை அங்கே சூழ்ந்திருக்கிறதா என்று பார்த்துவரப் போகவேண்டும் எனத் தோன்றியதை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தேன். 

பிணநாற்றம் அவள் உடலின் நவதுவாரங்களில் வெளியேற அவளை எரித்தார்களா, புதைத்தார்களா தெரியாது. 

அடுத்து மிளகுராணியைப் பதவி இறக்குவது. மத இணக்கம், பண்டிகைகளை சேர்ந்து இருந்து கொண்டாடுவது என்றெல்லாம் சொல்லி விட்டு கண்ணாடிக் கத்தியால் கொலை செய்வதைச் சொல்கிறேன் என்பதில் முரண் தட்டுப்படுகிறதா? என்ன செய்ய? இரண்டும் தான் ரோகிணி. 

எந்த மத இணக்கத்தோடு தொடங்கினேனோ அதன் எதிரிடையான மத விரோதம் வரவழைத்து ஜனங்களைப் பிரிக்க பணம் செலவழித்தேன். முதலாமது அம்பலத்தில் ஆடி நல்ல பெயர் வாங்க. அடுத்தது பின்னறையில் கத்தி தீட்ட. 

நடுவே அம்மாவின் இந்தியத் தோழிகளிடம் இருந்து கற்ற இந்திய இனிப்புகள் உண்டாக்கி விற்கும் இனிப்பு அங்காடியை எனக்கான இயல்பான கௌரவமான  முகமூடியாகத் தொடங்கி அணிந்தேன். நானே எதிர்பார்க்காத படி அந்தக் கடை மகத்தான வெற்றி பெற்றதோடு, ஹொன்னாவரில் தொடங்கிய அதன் கிளையும் வெற்றி பெற்றுப் பணவரவு குவிக்கிறது.

இந்த இந்துஸ்தான பணம் காசு எல்லாம் எந்த நேரமும் ஒரு மயிருக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடலாம். ஆகவே நான் சம்பாதித்த காசு பணத்தை எல்லாம் தங்கப் பாளங்களாக்கி சேர்த்து வருகிறேன். கடை, வீட்டை எல்லாம் கூட அததற்கான வேளை வரும்போது தங்கமாக்கி விடுவேன். தங்கப் பிசாசும் கூடவாக்கும் நான்.

இதெல்லாம் பத்து வருட வரலாறு. நடுவில் ஒரு முறை லிஸ்பன் போயிருந்தபோது மிளகு வர்த்தகத்தில் ஜெர்ஸோப்பா மிளகு ராணியின் ஏகாதிபத்தியத்தை முறிக்க கார்டல் நிதிக்குழு ஏற்பட அம்மாவின் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்தேன். 

அம்மாவின் நண்பர்கள் எனக்கு நண்பர்கள் ஆக ஒவ்வொருத்தருக்கும் ஒரு கட்டிலும் ஒரு மணி நேரமும் போதுமானதாக இருந்தன. கொஞ்சம் வயோதிகர்கள் ஆனால் என்ன, அவர்களை விரட்டி கட்டளையிட்டு ஏதும் செய்ய வைக்கலாம். செய்தேன். 

யூத நண்பர்களிடம் கொடுத்து வைத்த தங்கத்தில் கொஞ்சம் போல் எடுத்துக்கொண்டு இந்துஸ்தானம் திரும்ப, நானே எதிர்பாராத விஷயமாக ராஜகுமாரர் நேமிநாதனின் நட்பு கிடைத்தது. 

லிஸ்பன் பணக்காரர்கள் போல் பணம் ஆனால் அவர்கள் வயசில் பாதி மட்டுமான இளமை. என்னை விடவும் ஐந்து வயது சின்னவன் நேமிநாதன். 

என்றால் என்ன? என்மீது காமம் மீதுர நான் வலையை விரிக்காமல் அவனே எடுத்து விரித்து தலைகுப்புற சந்தோஷமாக வீழ்ந்தான். 

ரோஜா அத்தரில் நீராடி வந்த முதல் ராத்திரி அது. ரோஜா நறுமணம் என்று அவன் கண்மூடி ரசிக்க, நான் கனகவல்லி அல்ல என்றேன். புரியாமலேயே சிரித்தான் அந்தச் சிறுவன். இப்போதும் அவன் சிறுவன் தான். நான் சொன்னால் அவன் செய்வான். நான் சொல்லாதவரை கைகட்டி வாய்பொத்தி ரோஜாவாடை பிடித்து நிற்பான். 

நான் அளிக்கும் ஊமத்தம்பூ ரச மது என் வாயில் ஊறி இதழ்களில் வழங்கப்படுவது. அவன் மனைவி ரஞ்சனாதேவியைப் பிரிந்தான். மிளகுராணி என்ற சென்னபைரதேவியின் மாற்றாந்தாய்ப் பிரியத்தைப் பிரிந்தான். 

எல்லாம் எதற்கு? அவன் அடுத்த அரசராக வேண்டும். அவனுடைய ராணி நானாக வேண்டும். ரஞ்சனா தேவி எனக்கு எச்சில் படிக்கம் ஏந்தி இரவு முழுவதும் நிற்க வேண்டும். மிளகுராணிக்கு கண்ணாடிக் கத்தியோ பனிக்கத்தியோ காத்திருக்கிறது.

 நேமிநாதன் தலையாட்டி பொம்மையாக எனக்குக் கிடைத்தது நல்லதாகப் போயிற்று. நான் மிளகுராணியைப் பதவி இறக்கச் செலவழிக்க. 

ஒரு சிவராத்திரி இரவில் பாங்க் என்ற அரிசி மது கண்மண் தெரியாமல் பருகி கலந்தபோது என் அருமை மகன் மஞ்சுநாத் உருவானான். 

நேமிநாதனை எத்தனை மிரட்டினாலும் கட்டளையிட்டாலும், எல்லாப்பூவும் என்னில் வாசம் அடிக்க கிறுகிறுக்க வைத்தாலும்  நேமிநாதனால் மஞ்சுநாத்தை மகனாகக் கண்டு அன்பு செலுத்த முடியவில்லை. 

மஞ்சுநாத்தை விரட்டி அடிக்கலாம் தெருப் பொறுக்க என்று ஒரு நாள் என் பெற்ற வயிறு கலங்க யோசனை சொல்வான். அவன் மேலும் கண்ணாடிக் கத்தி எறியச் சொல்வான் ஈவிரக்கமே இல்லாமல். அவனை இருட்டறையில் சதா பூட்டி வைத்து உணவு இல்லாமல் பட்டினி போட்டு குடிக்கத் தண்ணீரும் தராமல் வைத்திருக்கச் சொல்வான் இகழ்ச்சியோடு. 

இந்த சித்திரவதை எல்லாம் அந்தப் பச்சைக் குழந்தை மேல் பிரயோகிக்க எப்படி மனம் வருமோ. என்னை விட கிராதகன் நேமிநாதன். மென்மையான பேச்சும், கௌரவம் மிகுந்த இடைகலந்து பழகுதலும் எல்லாம் பொய். இந்த ராட்சசன் தான் நேமிநாதன். அவனை அரசராக்க நான் பாடுபடுவது என் தலைவிதி. 

ஒன்றும் முடியவில்லை. அவன் அரசனானதும். நான் மகாராணி ஆவேன். அடுத்து அவனையும் ஒழித்துக்கட்டுவேன். 

என் லியனார்டோவுக்கு ஊமத்தைப் பொடி கலந்த மது கொடுத்து கிறுக்கனாக்கிக் கொன்ற மிளகுராணி குடும்பம் சீரழிந்து போகட்டும். 

நேமிநாதனை நேசமான புன்னகையும்,  சிருங்கார சேஷ்டைகளுமாக என் தோளடி வியர்வையை முகர்ந்து மயங்க வைத்து எல்லாம் முடிப்பேன். 

நேமிநாதன் எனக்கு வழியில் கிடைத்த பொன் தனம் என்றால், பரமன் எனக்கு அதே வழியில் கிடைத்த வைர வைடூர்யப் பொதி. அவன் அவர் என்னை விட பத்து இருபது முப்பது வயது மூத்தவராக இருக்கக் கூடும். இருந்து விட்டுப் போகட்டும். 

ஊமத்தைச் சாறு பருகாமலேயே விமானம் எதிர்காலம், பம்பாய், மதறாஸ், நாக்பூர் என்று ஏதோ சதா பிதற்றிக் கொண்டிருக்கிறார் பரமன். நல்ல சமையல்காரர். மஞ்சுநாதனுக்கு நல்ல விளையாட்டுத் தோழன். 

நேமிநாதன் சொன்னபடி அந்த அரைக்கிறுக்கன் பரமனை நான் கல்யாணம் செய்து கொண்டு, நேமியோடு படுத்து அந்தத் திருமணத்தைக் கொண்டாடியாகி விட்டது. அது மட்டுமில்லை, பரமனின் பிள்ளைதான் மஞ்சுநாத் என்று ஊரெல்லாம் சொல்லியாகி விட்டது. நம்பினவர்கள் நம்பட்டும். நேமிநாதனுக்கு பரம திருப்தி. பரமன் கொடுத்த திருப்தி.

 பரமனுக்கு ஆப்பிரிக்க மந்திரவாதி மூலம் காலத்தில் முன்னால் போக ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று வாக்குக் கொடுத்தாகி விட்டது. பரமன் சொன்ன கிறுக்குப்பேச்சு எல்லாம் நம்புவதாக நடித்து, அவன் மனதில் மஞ்சுநாத் மூலம் பச்சாதாபத்தையும் கிளப்பி விட்டு கல்யாணமும் முடிச்சாச்சு. 

சீக்கிரம் நேமிநாதனை விட்டுத் தொலைத்து நான் ஏகசக்ரவர்த்தினி ஆகும்போது பரமனையும் கிறுக்கர்களுக்குச் செய்யும் கல்லெறி, சாணிப்பால் குடித்தல் உபசாரங்கள் நடத்தி நக்னனாக்கித் துரத்தி விடவேண்டியதுதான். 

வீட்டு விவகாரங்கள் இப்படிப் போக அகத்துப் பேச்சு ஓயட்டும். அம்பல பேச்சு முன்னணிக்கு வந்துவிட்டது. மிளகுராணி மேல் ஜனக் கூட்டத்துக்கு வெறுப்பு வந்துசேர வழிபாட்டு இடங்களில் வெடிவைத்தது முழுக்க வெற்றியும் இல்லாமல் முழுக்கத் தோல்வியும் இல்லாமல் போய்விட்டது. 

ஆனால், போர் வந்து கொண்டிருக்கிறது என்ற வதந்தியை ஒரு மாத காலத்தில் நிலப் பிர தேசம் முழுக்கப் பரவச் செய்து, எல்லோரையும் சொத்தெல்லாம் விற்றுத் தங்கத்தைத் தேடிச் சேர்க்கத் தொடங்க வைத்தாகி விட்டது. 

குழப்பம் கூடட்டும். இன்னும் சில வாரங்களில் இவர்கள் எல்லோரும் மிளகுராணியை வெறுத்துத் திட்டப் போகிறார்கள். நேமிநாதனை முன்நிறுத்த அருமையான சந்தர்ப்பம். நான் மகாராணி ஆகவும் தான். 

அதற்கு முன் நிதிக்குழும உறுப்பினர்கள் வகுத்துக் கொடுத்த திட்டப்படி நேமிநாதன் கேலடி மற்றும் பில்ஜி பிரதேச மன்னர்களை சந்தித்து, மிளகுராணியைப் பதவி இறக்கும் திட்டத்தை கூடியிருந்து ஆலோசனை செய்ய வேண்டும். 

அந்த மன்னர்கள் இரண்டு பேரும் விஜயநகரப் பேரரசுக்கு கப்பம் கட்டுவது அவர்கள் விருப்பப்படி. மற்றப்படி மிளகு சாம்ராஜ்யம் ஆளும் சென்னபைரதேவியோ, போர்த்துகீசியரை பத்து முறை துரத்தியடித்தவளாகக் கருதப்படும் உள்ளால், பட்டிகே அரசி அபயராணி அப்பக்கா தேவியோ கூட நிர்ணயித்த கப்பத்தொகைதான் செலுத்துகிறார்கள். 

விஜயநகர் செயலாக இருக்காவிட்டாலும் நடுவாந்திரமாக கேலடியும் பில்ஜியும் அதிகாரம் செய்யவும் செல்வாக்கு கொண்டு ஆட்சியை வழிநடத்தவும் செய்யலாம். அவர்கள் ஆசி எல்லாம் நேமிநாதனுக்குத் தேவையானது.

 கார்டல் நிதிக் குழுமத்தில் கூட எல்லோரும் அபிப்பிராயப்பட்டது என்னவென்றால், கேலடி அரசர் வெங்கடபதி நாயக்கரை முதல் வெளியாராக இணைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யணும் அடுத்து பில்ஜி அதிபர் திம்மராஜு ஆதரவைக் கோர வேண்டும் என்று. 

நான் நேமிநாதனிடம் சொன்னேன் – இப்படி உதவி கேட்டுப் போகும்போது அதிக பலம் உள்ள கேலடி நாயக்கரை தேவை என்றால் மட்டும் நேரில் பார்த்து ஆதரவு கோருவது, பில்ஜி திம்மராஜுவை முக்கியத்துவம் அதிகமாகத் தராமல் உதவி கோருவதாகும். வேலைக்கு வேலை, செலவு கம்மி என்று தொடங்கலாம். 

நேமிநாதனுக்குப் புரிந்ததோ என்னமோ, என் முலைகளை வெறித்தபடி சரி என்றான். எத்தனை தடவை வெறித்தாலும் ஆதி மனிதன் ஆகிறான் இவற்றுக்கு முன்னே அவன். அதுவும் நல்லதுக்குத்தான். எனக்கு.  

நாதா என்று ஏக்கமும் இணைவிழைச்சும் நிரம்பி வழியும் பார்வையோடு அவனை நோக்கினேன். கண்ணில் நான் மையிட்டிருக்கும் போதெல்லாம் அவன் முதலில் என் விழிகளில் தலைகுப்புற வீழ்ந்து விடுகிறான். அடுத்து காது மடல்களை விருந்தாக மென்று சுவைத்து, மூக்குத்தி அவன் உதட்டில் குத்த, நாசி நுனிக்கு மெல்லக் கீழிறங்கி, இதழ்களில் முத்தமிட்டு அலைபாய்கிறான். மேலும் நடப்பதைச் சுருக்கமாகச் சொன்னால் இந்த நாளும் இரவும் மோகத்தில் என்னுள் முக்குளித்து அவன் முயங்கிக் கிடக்க, காலம் என்ற பரிமாணம் எங்களுக்குள் உறைந்து நிற்பதில் முடியும்.

நாதா, எடோ நேமிநாதா. 

இந்த அழைப்பு அவனை இன்னும் காமாந்தகாரனாகி என் முழு அடிமையுமாக்கி ரசவாதம் புரிகிறது. எஜமானி என்று என் பாதங்களை முத்தமிட்டு அவன் சிரசில் வைத்துக்கொள்ள நான் உபசாரம் எல்லாம் பெற்றுக்கொண்டபடி உபதேசம் நல்கினேன் இப்படி-

பில்ஜி அரசர் திம்மையராஜு உன்னை விட ஐந்து வயது பெரியவன். என்னைப் போல். அவனை சந்திக்க என்ன கொண்டு போகப் போகிறாய்?

 அப்பாவியாக நான் நேமிநாதனின் விரல்களைச் சொடுக்கியபடி கேட்டேன். 

என்ன எடுத்துப் போவார்களாம்? பழம். இனிப்பு. வைரமும் தங்கமுமாக வார்த்தெடுத்த  கிருஷ்ண பிரதிமை. 

மடையா இதை வைத்துக்கொண்டா ஆட்சி மாற்றம் கொண்டு வரக் கூடிய முக்கியமான அரசியல் சந்திப்பை நடத்தப் போகிறாய் என்று அவன் தலையில் உதைத்தேன். அவன் என் பாதங்களைக் கொண்டு தன் கண் இமைகளை மூடி உள்ளங்காலைச் சுவைத்து முத்தமிட்டான். 

இந்த ரீதியில் புத்தி போதனை செய்து கொண்டிருந்தால் இன்னும் இரண்டு நாள் அறுபத்து மூன்று கரணமும் அரங்கேறிக் கழியுமே தவிர உருப்படியாக போதனை ஏதும் நடக்காது. 

நேமி நாதருக்குத் தெரியாததையா நான் சொல்லப் போகிறேன். இந்த வார்த்தை சொல்லுதல் முற்றிலும் வேறு வகைப்பட்டது. உங்களுக்குத் தெரியாதா? 

உங்களுக்குத் தெரியாதா என்று முன்னொட்டு வைத்து அவனுக்குத் தெரியாத ராஜதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டும் முறை. மடியில் போட்டுக்கொண்டு புகட்டலாம். மடியை பிடித்தவன் இறங்காமல் அடியைப் பிடியடா பரத பட்டா என்று கைகள் ஊர்ந்து அப்புறம் போதனை திசை திரிந்து போய்விடும். 

ஆக நான் சொல்ல விரும்பியது அவன் பில்ஜி அரசர் திம்மராஜுவை சந்திக்கப் போகும்போது பழமும், தேங்காயும், இனிப்பும், விக்ரகமும் அன்பளிப்பாக எடுத்துப் போகலாம். கூடவே ரஞ்சனாதேவியும் வர முடியுமானால், வேறே எதுவும் சொல்ல வேண்டாம் எந்த மாதிரிப் பேசவும் நடக்கவும் தேவையில்லை. 

வீட்டு விசேஷத்துக்கு கணவன் மனைவியாக அடுத்த ஊர்ப் பிரமுகரை அழைக்க வந்தவர்களாக இரண்டு பேரும் போகணும் என்றேன். அவன் உடனே சொன்னது – அவள் என்னோடு பேசுவது கூட அபூர்வமாகி விட்டது. என்னோடு நீ வாயேன் நீ கூட இருந்தால் முகலாய சக்கரவர்த்தி அக்பர் முகல் எ ஆஸம் அவர்களைக்கூட தைரியமாகச் சந்தித்து சலாம் வைத்து வீட்டில் சத்தியநாராயணா பூஜைக்கு வருக என்று அழைத்துத் திரும்புவேன். 

அக்பர் எதற்கு சத்யநாராயண பூஜைக்கு? நான் சிரிக்கும் போதே பில்ஜி திம்மராஜுவுக்கான திட்டம் மனதில் உருவானது. ரஞ்சனா தேவியும் வேறு வேசி எவளும் போக வேண்டாம்.  மிளகு ராணியோடு நேமிநாதன் பிணங்கித் தனியாகப் பிரிந்து போனது அரண்மனை ரகசியமும் இல்லை அங்காடி பரஸ்யமும் முழுக்க இல்லை.  

ஒரு நல்லெண்ண விஜயமாக நேமிநாதன் மற்ற விஜயநகர் அதிகாரத்துக்கு உட்பட்ட குறுநில மன்னர்களில் மிக முக்கியமானவர்களை சந்தித்து நேமிநாதன் தொடங்கிய மிளகுப் பிசின் ஏற்றுமதி கேந்திரத்துக்கு வணிக ஆதரவு கோர வந்திருக்கிறேன் என்று பில்ஜி திம்மையராஜுவை அழைக்கலாம் என்றேன். 

நேமிநாதன் என் கையைப் பற்றிக்கொண்டு அது என்ன மிளகு பிசின்? கர்ப்ப ஸ்திரி விழுங்கும் லேகியம் போல் வாடை அடிக்காதோ என்று விசாரித்தான். 

மிளகு வெறும் வெளியில் மூட்டையாக கேடு வராமல் ஒரு வருஷம் இருக்கும். அதை ரசாயனம் கலந்து பிசினாக்கினால் குறைந்தது ஐந்து வருடம் கெட்டுப் போகாது. சுவையும் காரமும் சற்றும் தாழாது இருக்கும் என்றேன். 

போன வாரம் ஒரு விக்ஞானி, என்றால் என் கணவர் பரமு சொன்ன யோசனை அது என்று பெருமையோடு சொன்னேன். 

கிழட்டு மடையர்கள் உனக்கு படுக்கையில் சேவகம் செய்யும்போது உளறியதெல்லாம் விக்ஞானத்தில் சேர்த்தி இல்லை பெண்ணே என்றபடி நேமி என்னை இறுக அணைத்துக் கொண்டான். 

நான் விடாப்பிடியாக அவனிடம் தகவல் பகிர்ந்து கொண்டேன் – தேங்காயெண்ணெயும் வாடை நீக்கிய விளக்கெண்ணெயும், காடியும், சிவப்பு ஒயினும் கலந்து மிளகுப் பொடியைக் குழைத்து ஒரு வாரத்தில் பரமு எனக்கு மிளகுப் பிசின் செய்து கொடுத்தார். 

திம்மராஜுவிடம் மிளகுப் பிசின் பற்றிப் பேசணுமா? நேமி நம்பிக்கை வராமல் கேட்டான். பில்ஜி மன்னனாக என்பதை விட முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகராக அவருடைய, அவருடைய பிரதானிகள், வேண்டப்பட்ட மதகுருக்கள் இப்படி சுற்றமும் நட்புமாக தனிப்பட்ட ஆதரவு கோரினால் போதும். 

பேச்சு தானே மிளகுராணியின் பதவி இறக்கத்துக்கான அவசியம் பற்றி வாய்க்கால் வெட்டிப் பொசிந்திடும். 

நேமிக்கு நான் சொன்னது பாதிக்குப் பாதியாவது அர்த்தமாகி இருக்கக் கூடும். அதிகாலையில் விழிப்பு கண்டு வீடு செல்ல அவசரமாக எழுந்தேன். 

ராத்திரி முழுக்க சிருங்காரம் விற்கும் வேசியாக வீட்டை விட்டு வெளியே இருந்தாகி விட்டது., கணவனாக அறிவித்த பரமனுக்கும் குழந்தை மஞ்சுநாத்துக்குமான அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் இந்தக் கோணங்கியோடு நேரம் போக்கியாகி விட்டது. 

நான் கூந்தலை அள்ளி முடிந்து முகம் கழுவி வெளியே கிளம்பும்போது நேமியிடம் சொன்னேன்  உங்கள் சாரட் ஒன்பது மணிக்கு வந்துவிடும். பழமும் இனிப்பும் நேற்றே ஏற்பாடு செய்தாகி விட்டது. ரதத்தில் காலையில் ஏற்றப்பட்டிருக்கும். 

அவன் சரி என்று தலை அசைக்க இறுதி அங்க போதனைகளை நின்றபடியே அவனிடம் சொன்னேன். அது அதிகாலையில். இப்போது கிட்டத்தட்ட நள்ளிரவு ஆகிக் கொண்டிருக்கிறது. மறுபடி வீட்டையும் கணவனையும், குழந்தையையும் பிரிந்து வெளியில் ஒரு இரவு. சாரட் வந்து நிற்கும் சத்தம். 

நேமிநாதன் உற்சாகமாக இறங்கினான். சாரட் ஊர்ந்து காடி கானாவில் குதிரைகளை சேணம் அகற்றி அழைத்துப் போகும் சத்தம். வாசல் கதவைக் கூட சாத்தாமல் உள்ளே வந்ததும் நேமி என்னை அணைத்து முத்தமிட்டான். 

நான் நழுவி வாசல் கதவடைத்து வந்தேன். 

பசியோடு இருப்பீர்கள். தோசைகளும், இடியாப்பமும், நற்செய்திக்காக ஜயவிஜயீபவ இனிப்பும் பாயசமும் நமக்காகக் காத்திருக்கிறது. பசியாறி போன விஷயம் பற்றிப் பேசலாமே என்றேன் மெதுவான குரலில். 

உன்னைத் தின்று கொண்டே பேசலாமே என்றான். அவன் இதற்குத்தான் வருவான் என்று தெரியும். வெள்ளித் தட்டில் பரிமாறி பக்கத்தில் உட்கார்ந்து ஒரு முத்தமும் ஒரு கவளம் ஊட்டிய பலகாரமுமாக பின்னிரவு மெல்ல நகர்ந்து போனது. 

உணவுக்கு இடையே அவன் சொன்ன தகவல் – ரோகிணி நீ சொன்னது போல் எல்லாம், அதுவும் கடைசிச் சுற்றில் அப்படியே நடந்தது. திம்மராஜு அன்போடு வரவேற்றார். 

தொழில் அபிவிருத்திக்கான தொழில் கூடம் அவருக்குப் பிடித்த மாதிரி இருந்தது. சட்டென்று புத்தி கூர்மை தென்பட சிரித்த முகத்தோடு சொன்னார் திம்மராஜு- 

நேமிநாதரே, இதெல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் இந்தப் பிரதேசத்தையே முன்னேற்றக் கூடிய் தொழில் அபிவிருத்தி காரியங்கள். தனிப்பட்ட, பில்ஜி அரசன் என்ற வகையில் என் ஆதரவு இதற்கு எப்போதும் உண்டு. 

ஆனால் ஒன்று. இந்த ஒண்ணரைப் பண விவகாரமான தொழில் கூடம் பற்றி என்னிடம் கலந்து பேசி ஆதரவு பெறவா ஹொன்னாவரில்  இருந்து அதிகாலையில் புறப்பட்டு ஓட்ட ஓட்டமாக விரைந்து இங்கே வந்தது? இல்லை, இருக்காது. சொல்லுங்கள். உங்கள் வருகையின் உண்மையான நோக்கம் என்ன? எதுவாக இருந்தாலும் என்னால் முடியும் என்றால் முடியும் அளவு உதவிக்கரம் நீட்டுவேன். 

அவர் புன்சிரிப்பு மாறாமல் சொன்னார். அப்புறம் எனக்கு எதுக்கு சுற்றி வளைத்துப் பேசி நேரம் போக்குவது? சுருக்கமாக நிதிக்குழு, அரசுரிமை எனக்கு வர எடுத்த நடவடிக்கை, ஏன் வரணும் என்ற காரணகாரியம், மிளகுராணியோடு நான் எதிரெதிர் நின்று ஆட்சி மாற்றம் கேட்க இருக்கும் விரைவில் நிகழ இருக்கும் நடப்பு இதற்கு பில்ஜி அரசரின் ஆதரவு வேண்டுதல். எல்லாம் சொன்னேன். 

முகத்தில் பசை போட்டு ஒட்ட வைத்த சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தவர் ஆட்சி மாற்றத்துக்கான போராட்டம், அதற்கு ஆதரவு கோருதல் என்று பேசத் தொடங்கியபோது பேச்சை நிறுத்தினார். 

போதும், இதற்கு மேல் சொல்ல வேண்டாம். சென்னபைரதேவி என் நல்ல நண்பர். அவருக்கு அவருடைய வளர்ப்பு மகனே கேடு நினைத்தால் அதை நான் நிச்சயம் ஆதரிக்க மாட்டேன் என்றபடி பாதி சாப்பாட்டில் எழுந்தார்.

 நன்றி சொல்லி நானும் எழுந்தேன். எழுந்தபோது அவர் கையைப் பார்த்தேன். கடிக்க எடுத்த இறைச்சி துண்டு கையிலேயே இருந்தது. நானும் உண்ண எடுத்த பொங்கல் சோறு கவளத்தோடு நன்றி சொல்லி இரண்டடி முன்னால் நடந்தேன். நான் திரும்பிப் பார்க்க அவரும் என்னையே பார்த்தபடி இருந்தார். 

நீ சொன்னது நினைவு வந்தது. கையில் எடுத்த உணவோடு வெளிநடக்க மாட்டார்கள் பேசும் பொருளில் ஈடுபாடு இருந்தும் பொய் ஒவ்வாமை காட்டி எதிராளியை ஆழம் பார்ப்பவர்கள். அவருக்கு பேச்சு சென்னா மகாராணியின் பதவி விலகல் பற்றி இருப்பது விரும்பத்தக்கதுதான். 

பெயருக்காக அவரும் நானும் வெளிநடப்பு செய்தோம். அதை இருவரும் புரிந்து கொண்டானது. 

நேமிநாதரே, நின்றபடி பொங்கல் உண்டால் சீரணமாகாது. வாருங்கள் உட்கார்ந்து உண்ணலாம். சென்னமகாராணி பதவி இழப்பதில் எனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்? திம்மராஜு கேட்டார். அவர் தரைக்கு வந்திருந்தார்.

நேமிநாதன் உக்ரமான உற்சாகத்தோடு மூன்று முறை என்னோடு கலவி செய்தான். கர்ப்பம் தாங்காதிருக்க அதிஜாக்கிரதையாக ஒரு குளிகையை விழுங்க வைத்தான். இந்த விஷயத்தில் அவனுக்கு போதனை ஏதும் வேணாம்.

காலை எழுந்து உடல் அயர்வோடு மாளிகைக்குச் செல்லும் போது ராணியாகப் போகும் வேசியாக என்னை உணர்ந்தேன். எதையாவது கொடுத்துத்தான் வேறெதையாவது பெற வேண்டியிருக்கிறது.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு  அத்தியாயம் ஐம்பத்தெட்டு மிளகு: அத்தியாயம் அறுபது

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.