பிரதிபிம்பம்

பெரும் செல்வம் படைத்தவன், ஏன் ஒரு பசுவைக் கொடுக்க மறுத்தான்? நீ என்ன நினைக்கிறாய்?’
‘அவன் நாட்டைக் கேட்டது அந்த நிமிஷத்தில் எழுந்த கோபம். தான் என்னதான் தவறு செய்திருந்தாலும், அதற்காக நான் சினம் கொள்வேன், சபையில் அந்த சினத்தை வெளியே காட்டுவேன் என்று அவனுக்கு தோன்றியே இருக்காது. நாங்கள் இருவரும் தனியாக இருக்கும்போது அடித்திருந்தாலும் அது அவனுக்குத் தவறாகத் தெரிந்திருக்காது. அந்தக் கணம் வரைக்கும் அந்த உரிமை கொண்டவன் நான் ஒருவனே, ஏன் இன்றும் அந்த உரிமை கொண்டவன் நானே!’ என்று துருபதர் சொன்னார்.

அந்துப் பூச்சி

“புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க எல்லாம் இருக்காங்க… நான் மட்டும் என்ன?” என்று விக்கத் துவங்கியவள் முகத்தை அழுந்தத் துடைத்தபடியிருந்தாள்.

அழுது முடிக்கும் வரை பொறுமை காத்தேன். அமைதியான அவ்வறையில் என் தலைக்கு மேல் இருந்த மின்விளக்கில் டங்.. டங் என்று பூச்சியெதோ மோதும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

சிறுது நேர மௌனத்திற்குப் பிறகு “ஸாரி, ரெஸ்ட் ரூம் போய் வருகிறேன்” என்றபடி வெளியேறினாள்.

“நேற்றும் ஒரே அழுகை, நான் சாகத்தான் செய்யணும்னு என்னவெல்லாமோ சொல்லிட்டு இருந்தாங்க.”

தியேட்டர் இல்லாத ஊரில்

மாத்தையப் படம் ஒளிபரப்பப்படவிருக்கும் அன்றைய இரவை முன்னிட்டு அன்று பின்னேரமே நான் மாமியின் வீட்டுக்குப் புறப்பட்டு விடுவேன். இந்தப் பயணத்தில் என்னுடன் என் மூத்த சகோதரங்களான மர்ழியாவும் மர்வானும் இணைந்துகொள்வார்கள். மர்வான் படம் பார்ப்பதற்காக என்னை விட கடுமையாக முண்டக்கூடியவன். சத்தமில்லாமல் ஒரே நாளில் ஒன்பது படம் ஒரு முறை பார்த்திருந்தான்.
ஆனால் சிலவேளைகளில் இந்த மாத்தையப் படமும் கைகொடுக்காமல் விட்டு விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அப்போதெல்லாம் மனம் ஒரு எரிமலைபோல் வெடித்துக் குமுறும். சிலநேரங்களில் மாத்தையப் படம் ஓட இருக்கும் இரவாகப் பார்த்து கரண்ட் போய் விடும்.

திருக்கூத்து

அந்த கோயில்ல பூசன பண்ணின பண்டாரங்களால வாய்மொழியா சொல்லப்பட்ட கதைகளும் பாடல்களும்தான் பண்டார நூலா இன்னக்கி இருக்கு. அந்த நூல தொகுத்தவர் சின்னப் பண்டாரம். அவர் அந்த நூலுக்கு இட்ட பெயர் திருநடம். ஆனா பண்டார நூலுங்குற பெயர்தான் நெலச்சிருக்கு. அந்த நூல் பெருவெள்ளங்களப் பத்தி பேசுது. மொத்தம் நூற்றியெட்டு தடவ அங்க வெள்ளம் வந்து ஊர நீர் சூழ்ந்திருக்கு. ஒவ்வொரு முறையும் உச்சிகால பூஜையோட மழை வலுத்து வாரங்களுக்கு தொடர்ந்திருக்கு.

ஏகபோகம்

This entry is part 3 of 5 in the series 1950 களின் கதைகள்

மறுநாள் அப்பாவின் வருகைக்கு ஆவலுடன் காத்திருந்தான். ஐந்து மணியில் இருந்தே வாசற்படிக்கட்டு அவனை ஒட்டிக்கொண்டது.
சைக்கிளின் பின்னால் செய்தித்தாளில் சுற்றிய பெட்டி.
“ஆகா!”
“சௌந்தரம்! ஜாக்கிரதையாப் பிரி!”
உள்ளே. செக்கர்ஸ்-பாக்கேமன். மடிக்கும் அட்டையின் இரு பக்கங்களில் இரண்டு ஆட்டங்கள். தேவையான காய்கள், பகடைகள்.
குமரநாதனுக்கு அழுகை வரும்போல இருந்தது.
“இதை ஆடினா மூளைக்கு நல்லதுன்னு சொல்லிக்கொடுத்தான். செஸ் மாதிரி அவ்வளவு கஷ்டமா இருக்காதாம்.”

சில்லறைகள்

நான் தெரியும் என்று தலையாட்டினேன். அவள் தொடர்ந்தாள், “துர்கா பூஜைக்கு கொல்கத்தா எங்கும் வெச்சு வணங்கும் துர்காமாவோட மண் சிலை இருக்கே? எங்களை மாதிரி ஒரு பொண்ணு வீட்டுக்கு பூசாரி வந்து வேசி வீட்டுவாசல் மண் வாங்கி கலக்காமல் எந்த துர்கா சிலையும் செய்ய மாட்டாங்க. மரியாதையைப் பத்தி நீ எங்ககிட்ட பேசறயா? கிளம்பு இங்க இருந்து.”
பேசிவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள்.

மருந்து

பரிசோதனை அறைக்கு சீக்கிரமாகவே போயாகிவிட்டது. அங்கு கரடி ஒவியம் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. நாலு பேருடைய உள்ளங்கைகளை பெயிண்டால் அச்செடுத்து கரடியின் கால்களாக மாற்றியிருந்தனர். இரண்டு பெரிய கை, இரண்டு சிறிய கை. Kate, Avery, Robert, Kelly என்று ஒவ்வொரு பாதத்திலும் பெயர் எழுதப்பட்டிருந்தது. சிறுசு அதனுடைய கையை ஒவ்வொரு கரடியின் காலிலும் பொருத்திப் பார்த்தது. படம் கழன்று விழுவது போன்று ஸ்திரமற்று இருந்தது. உடனே கையை எடுத்து விட்டு அம்மாவின் மடிக்கு ஓடிவிட்டாள்.

காட்டு மல்லி

அன்று இரவு சிவநாதத்திற்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. இந்த ஊருக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஆபீஸில் வேலை அதிகமானாலும் ஆபீஸர் திட்டினாலும் வீட்டில் சச்சரவுகளின் அழுத்தம் அதிகமானாலும் அந்த ஏரிக்கரைக்குச் சென்று மணிகணக்காக படுத்துக் கிடப்பதில் எல்லாவற்றையும் மறந்து போவான். அந்த ஏரிக்கரையை பார்த்த உடனேயே மனது அமைதியாகிவிடும். ஆனால் அவனுடைய அந்தராத்மா அவனைத் திருப்பி கேள்வி கேட்டது. “உனக்கு மனசாந்தி அளித்து கவலையை நீக்கியது குருவனின் குடும்பம். அவர்களுடைய மனப்பொருத்தமும் அவர்கள் திருப்தியோடு ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பும் உனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது அல்லவா?” என்று அவனை விமரிசித்தது.

தொள்ளாயிரம் பாட்டிகள்

ஆர். ஏ. லாஃபெர்ட்டி, இந்த எளிய, சுவையான கனியை, அண்ட வெளிக் கொள்ளைக்காரரும், அத்தனை எளிமையானவரல்லாதவருமான மையப்பாத்திரத்தின் முன்னால் தொங்க விடுகிறார். பாத்திரத்தின் பெயர், சேரன் ஸ்வைஸ்குட். சேரன் என்னவோ தான் ஒரு ‘ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்” ஆள் என்று நினைக்கிறார். அதாவது மேன்ப்ரேக்கர் (மனிதரை உடைப்பவன்) என்றோ பாரல்ஹௌஸ் (பீப்பாய் வீடு) என்று முரட்டுத் தனமான பெயர்களைக் கொண்ட தன் சகபாடிகளைப் போல அல்லாது, தான் பண்பட்டவன் என்றும் நினைக்கிறார். அவர்களோ அத்தகைய பெயர்கள், அடித்துப் பிடுங்கவோ, கொள்ளை அடிக்கவோ உதவுகின்றன என்று நினைக்கிறார்கள். ‘சேரன் ஸ்வைஸ்குட்’ என்ற பெயரோ, அதிசயமான…. கிடைப்பதற்கரிய பொருட்களைத் தேடிப் பிடிப்பவரான ஒருவருக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.

தோற்றங்கள்

உறவினரோ நண்பரோ வரும்போது அவர்களோடு அம்மா கொண்டிருந்த பிணைப்பு, அவர்களுடனான சந்திப்பு எல்லாம் ஒருகணத்தில் நினைவுக்கு வந்தது. திரைப்படத்தில் நினைவோட்டத்தைக் காட்டும்போது ஒரு வினாடியில எப்படி இத்தனையும் ஞாபகம் வரும் என்று கேலியாக கேட்டிருக்கிறான். ஆனால் இப்போது, திரைப்படத்தில் குறைவாகவும் மெதுவாகவும் காட்டுவதாகத் தோன்றியது. சந்திரனுக்கு நினைவுக்கு வருபவை அனைத்தும் வருபவருக்கும் தோன்றும்போலும். அதனால்தான் இவன் அழும்போது அவருக்கும் கண்ணீர் வருகிறது.

சப் செய் (SUP SEI)

உள்ளே, பதற்றமும், பரபரப்புமாக ஒரே களேபரமாய் இருந்தது. நான், அதையெல்லாம் ஒன்றும் சட்டையே செய்யவில்லை!. எனக்கு இதெல்லாம் சலித்துப்போனக் காட்சி!.. ஒவ்வொரு தடவையும் நான், எனது வேலையைச் செய்யும்போது, இந்தக் கண்றவியைத்தான் பார்க்கிறேன். நோயில் படுத்து இன்னும் சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும்போது, ‘இந்த சனியன் வேற இன்னும் சாகாம உயிர வாங்குது..’ என்றோ; ‘ஒத்த கால வெச்சிக்கிட்டு இது இன்னும் என்னத்த சாதிக்கறதுக்கு இப்படி இழுத்து பறிச்சிக்கிட்டு கெடக்குது?’ என்றோ கட்டிய மனைவியே வாயிற்குள் முணுமுணுத்துக்கொள்வதை உயிரைப் பறிக்கப்போன எத்தனை இடங்களில் நான் பார்த்திருப்பேன்!.

ஒளியின் நிழல்

“ஆனால் அவர் மகன்களிடம் அடக்குமுறையை மட்டுமே கையாள்கிறார். அவர் நவீன காலத்தின் தொழில்களின் மீது பற்றிழந்து விட்டதால் அவரது மகன்கள் நவீனக்கல்வியை பெற அனுமதி மறுக்கிறார். அவர் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தலால் அவரது பிள்ளைகளும் அப்படியே செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட அவருக்கிருக்கலாம். ஹரிலாலும் மணிலாலும் சத்யாகிரகிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். கைதாவதிலிருந்து நிலத்தில் பாடுபடுவது வரை அவர் தந்தை விரும்பியதையே அவர்கள் செய்ய வேண்டும் என்று கருதுவது இந்த காலத்து பிள்ளைகளிடம் அதிகப்படியான எதிர்பார்ப்பு அல்லவா?”

சற்றே இனிக்கும் கரும்புகள்

பேசாமல் நிற்க நிற்க அவள் என்னை உரசி உரசி வெட்டுவது போல உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அவள் அழ ஆரம்பித்தாள். மூர்ச்சை ஆவது போல விக்கித் திணறினாள். பதற்றத்துடன் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். சொந்த வீட்டை அப்பாவின் குடியால் விற்றுவிட்டு பிச்சைக்காரியைப்போல இறங்கிய அம்மாவின் முகம் அழுது முடித்ததும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது. அல்லது அதை அவளாகவே தருவித்துக்கொண்டாள். நானாகவே அந்த பெண்ணின் அப்பாவிற்கு போன் செய்தேன். அம்மா பதறி என் கையிலிருந்து போனை பிடுங்கும் முன். அவர் எடுத்திருந்தார். 

1957 – 1 செம்பருத்தி

This entry is part 1 of 5 in the series 1950 களின் கதைகள்

ஆனால் நகராட்சி பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் சம்பளம் அவள் ஆசையைத் தடுத்திருக்கும். அவள் செய்வது ஜெபநேசனுக்குத் தெரியாமலும் இருக்கலாம். கணவன் மனைவி அந்தரங்கத்தில் தலையிடுவது தவறு. அதே சமயம் இந்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மனித சட்டம். உலகில் கிறித்துவக் குழந்தைகளைப் பெருக்குவது அதற்கும் மேலான கடவுளின் ஆணை. அதை நிறைவேற்றுவது கடவுளின் பணியாளரான ஆசீர்வாதத்தின் கடமை.

மங்களாம்பிகை

அவரவர் உடைமைகளை எடுத்துக் கொண்டு அரிபரியாக இறங்கி கொண்டிருந்தனர். சென்னை வந்து இறங்கிய உடனே ஒரு வித பதற்றம் எல்லோருக்கும் தொற்றிக் கொள்கிறது. சென்னையின்  வேகமே அதன் பலம் பலவீனம்.எங்கு தான் எதற்கு தான் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? என்ற எண்ணம் தோன்றும். நானெல்லாம்  இத்தனை வேகமாக ஓடினால் தலை குப்புற விழுந்துவிடுவேன்.வேகம் என்றாலே எனக்கு ஒரு வித அலர்ஜி. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

பேராசிரியரின் கிளி

நம் ஆராய்ச்சியின் முடிவுகள் நம்மை அதீதமான தன்னம்பிக்கைக்கு இட்டுச் சென்று விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தினால் செனிசெண்ட் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க முடிந்தபோதிலும், நோயாளிக்கு இதனால் உருவாகும் நிரந்தரமான வலியை நீக்குவதில் பல சிக்கல்களை நான் உணர்ந்திருந்தேன். அதனாலேயே அந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் தயக்கம் இருந்தது.

அவளும்

அப்படித் தன்னிடம் எதைப் பார்த்து திருமணம் வரை வந்து விட்டான் இவன் என்று ராணி யோசித்தாள். குமரேசன், கல்லூரியில் கூடப் படித்த சபரி, தன்னோடு வேலை செய்த கௌரிஷங்கர், இவர்களும்தான் காதலித்தார்கள், எவனாவது கல்யாணம் என்று வந்து நின்றானா? …
சந்திரன் வீட்டினர் சந்தோஷமாய் உணவருந்திவிட்டுச்  சென்றதும் ராணி சமையலறையில் அம்மாவுக்கு உதவிக்கொண்டே சொன்னாள் “எல்லாத்துக்கும் சரீன்னு சொல்லறான். டயலாக் வேற பேசறான். அதுதான் சந்தேகமா இருக்கு.” 

குமிழி

“அம்மா….மணி டாகி குட்டி போட்டிருக்கு….” பள்ளி பேருந்து வருவதற்கு காத்திருந்த ஒரு சிறு பெண் என்னைப்பார்த்து கைகொட்டிச் சிரித்தாள். இந்தத் தெரு எனக்குப்பழக்கமானதில்லை. நாங்கள் முன்பு இருந்த வீட்டைக்காலிசெய்துவிட்டு இங்கே வந்திருக்கிறார்கள். மெதுவாகச்சென்று அவர்கள் இருக்கும் வீட்டைக் கண்டு பிடிக்க வேண்டும். அதற்குள் அசந்தர்ப்பமாக அந்த சிறு பெண்ணால் ஆணின் பெயர் சூடப்பட்ட என் அம்மா… அவளிடமிருந்து என்னைக்காக்க வாயில் கவ்வி எடுத்து ஓட்டம் பிடித்தது. 

கனவுப் பலன்

கோமதியின் திருமணத்தன்று இரவில் நான் சம்பத்துடன்தான் சென்று  தங்கினேன். அவனுடைய தகப்பனார் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். மூச்சு விடுவதற்கு நிகராகப் புகை பிடிப்பவர். சம்பத்துக்குத் திருமணமாகிவிட்டால் தேவைப்படும் என்று மாடியில் ஒரு போர்ஷன் எழும்பிவந்த நேரம். வாசலில் குவித்த மணலில் அவர்கள் குடும்பமும் நானும் உட்கார்ந்திருந்தோம். அக்கம்பக்கம் வீடுகள் அதிகம் வந்திராத புறநகர்ப்பகுதி.  சம்பத்தின் அம்மா அவனைப் பாடச் சொன்னாள்.அவன் அவ்வளவு நன்றாகப் பாடுவான் என்பதே அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும். பேசும் குரலுக்கும் பாடும் குரலுக்கும் சம்பந்தமேயில்லை – அதைத்தான் கள்ளக்குரல் என்பார்களோ. உண்மையில், சம்பத் பேசுவதுதான் கள்ளக்குரல்; பாடுவது சொந்தக்குரல் என்று பட்டது எனக்கு.  எம்க்கேட்டி பாகவதர், நாகூர் ஹனீஃபா பாடல்களை உரத்த குரலில் பாடினான். ’என் ஜீவப்ரியே… ஸ்யாமளா’ என்று ஓங்கி எடுக்கிறான். நான் நடுங்கத் தொடங்கினேன். பொன்னு அங்க்கிள் என்னிடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினார். நான் தயங்கினேன்.

ஊபருக்குக் காத்திருக்கிறார்கள்

பதின்பருவத்தில் பொதுவாக பெற்றோர்களின் பழக்கங்களும் அறிவுரைகளும் குழந்தைகளுக்கு எரிச்சலைத் தரும். என் விஷயத்தில் என் அப்பாவின் தினப்படி முனகல். ‘சம்பளம் பத்தவில்லை, பணக்காரர்கள் செல்வத்தைச் சுருட்டிக்கொண்டு விடுகிறார்கள். அரசியல்வாதிகள் நிர்வாகத்தினர் பக்கம்.’ இப்படி. ஒருநாள், பொறுக்கமுடியாமல் வீட்டுச் செலவுகளின் பொறுப்பை நான்  ஏற்றுக்கொண்டேன். அத்தியாவசிய செலவுகள் போக மீதிப் பணத்தை செலவழிக்குமுன் அதன் அளவுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதா? என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் பயணம் போவோம். டிஸ்னி உலகம் இல்லை லாஸ் வேகாஸ். பத்தாயிரம் டாலர் பறந்து போய்விடும். முழுநேரமும் ஓயாத மனத்தாங்கல், சிறு தடங்கலுக்கும் வருத்தம், திரும்பி வந்ததும் ஏமாற்றம். அதை ஒதுக்கினேன். அம்மாவின் சிகரெட் பழக்கத்தை நிறுத்தினேன்.

நீர்வழிப் படூஉம் புணைபோல்……

இப்போது  எழுபத்தைந்து வயதான சௌமித்ரா தன் தொழிலிருந்தும் ஓய்வு பெற்று, கல்கத்தாவின்  மேல்தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் ஆடம்பரமான,  அழகான, அமைதியான குடியிருப்புப் பகுதியில் அழகிய தோட்டத்துடன் கூடிய ஒரு பங்களாவில் ஒரு வேலைக்காரனுடன் தனியே வசித்து வருகிறார். அவருக்கு இருக்கும் சொற்பமான நண்பர்களுடன் மாலை நடைக்குப் போவது, பாட்மின்டன் விளையாடுவது, அவருடைய அற்புதமான பாடல் சேகரத்திலிருந்து ஹிந்துஸ்தானி சங்கீதம், ரபீந்த்ர சங்கீதம், மேலை இசை இவைகளைக் கேட்பது, செஸ் விளையாடுவது என்று  அவரின் நாட்கள் கழிகின்றன. அவர்கள் யாருக்கும் கூட இவர் நாற்பந்தைந்து ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் நடித்திருக்கிறார் என்று தெரியாது. 

படைத்தல்

அன்று கண்விழித்தபோது தன்னுள் ஒரு உதயம் நிகழ்வதாய் உணர்ந்தாள். இரவின் வீச்சு இன்னும் ஓயாத புலரி ஒரு பண்டிகையின் அதிகாலை நோக்கி விடிவதாய் தோன்றியது. தூக்கமின்மை களைப்பு என எல்லா சோர்வையும் மறைத்துவிடும் ஒரு மாயக்கம்பளம் என அக்காலை இப்பூமியின் மீது அவ்வூரின் மீது அவ்வில்லத்தின் மீது விரிக்கப்படுவதாய் பட்டது. முகம் விழும் சிகையைக் கோதி காதோரம் விட்டாள். அகம் முகம் மலர எழுவது அவளுக்கே ஆசையாய் இருந்தது. நீரள்ளி குளிர் உணர உணர முகத்தில் வீசிக்கொண்டாள்.மூக்கு நுனி தாடை என திரண்டு சொட்டும் நீர், ஒவ்வொரு அசைவுக்கும் ஒட்டி ஒலி எழுப்பும் வளையுடன் மெல்ல ஆடி நோக்கினாள். மகிழ்வான முகம் பூரித்திருந்தது. உதயமேதான்.

தனித்த வனம்  

கை அசைத்து வந்து நின்ற டாக்ஸியில் அமர்ந்து “கோவைப்புதூர், உறவுகள் எல்டர்ஸ் சொசைட்டி” என்றேன். ஆயிரம் ரூபாய் சார் என்றான். தலையை ஆட்டினேன். அப்பா இருந்திருந்தால் தீனமான குரலில் அவருக்கே உரிய கிண்டலுடன், “அதான் போயிட்டேனே, இனி எதுக்கு அவசரமா டாக்ஸி புடிச்சு வர்றே. உக்கடம் வந்தா நிறைய பஸ் காலியா கிடைக்கும். பழைய பஸ்ல ஏழு ரூபா டிக்கெட் எடுத்து பொறுமையா வா” என்று சொல்லி இருப்பார். 

நாகலிங்கப்பூக்கள்

முன்புறத்தே வீதி  நகர்ந்து கொண்டிருந்தது. யௌவனம் இறங்கிக் கொண்டிருந்த பருவத்தில் , திகழுக்கு எதனையும் இலகுவாக எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை. மௌனத்தின் மீது திரளும் சிறிய சலனங்களால் அவன் சூழப்பட்டிருந்தான். “பூனை குறுக்காலை போனாக் கூடாதப்பா…” ஞானம்மாவின் குரல் பூனை கடந்து போன சொற்ப நிமிடங்களுக்குப் பிறகு வெளிப்பட்டது.

கல்லளை

அண்ணா! அன்று குரு என்னைத் தள்ளி விட்டு விட்டுத் தன்னையே பலி கொடுத்துக் கொண்டார். ஏதோ ஒன்று அழியும் உடல் தாண்டியும் நிரந்தரமாக உள்ளது என்று அவர் சொன்னதற்குச் சான்றாகவே அவர் செயல் அமைந்தது. அது என்னவென்று நான் அறியவேண்டாமா? அதை அறியத்தான் என் உள்ளமெல்லாம் தவிக்கிறது அண்ணா!” என்றான் பஸ்தாவா, கெஞ்சலாக.

அவள்

தலையில் ஏதோ எறும்புகள் ஊர்வதுபோல பரபரப்பு. கண்களைத் திறந்து பார்த்தார். வெயில் பாதங்களைத் தின்று கொண்டிருந்தது. மணி காலை ஒன்பது. வேலைக்காரி வருவதாக இல்லை. பால் இருக்கிறது, காப்பிப் பொடியும் இருக்கிறது. அப்படியே அவள் நேரத்திகு வந்து காப்பிப் போட்டாலும் வாயில் வைக்க சகிப்பதில்லை. மெள்ள இருகைகளையும் சாய்வு நாற்காலி கைப்பிடியில் ஊன்றி எழுந்தார். மெள்ள அடுப்படியை நோக்கி நடந்தார். 

கசம்

ஏப்ரல் மாத கோடை மழையில் கவர்ச்சியாய் நனைந்திருந்தது நிலம். ஈரம் சொட்ட நனைத்திருந்தால் எதுவுமே கவர்ச்சிதான். ஈரம் சொட்ட நனைந்த ஆப்பிள். வெள்ளத் துளிகளை “பருக்களாய்” தாங்கி நிற்கும் ரோஜா. சொட்ட சொட்ட குளித்துக் கரையேறும் விடலைப் பெண், தெப்பக்குளத்தில் நனைந்திருக்கும் தாமரை. மழையில் நனைந்திருக்கும் மிதிவண்டி. என எல்லாமே கவர்ச்சிதான். ஆனால் ஜீப்புக்குள் இருந்த “இருவரும்” இம்மாதிரியான “லௌகீக ரசிப்புகளில்” ஈடுபட முடியாத அளவிற்குப் பரபரப்பாயிருந்தனர். 

பிணை

சச்சதுரமாக இடித்துக் கொண்டே வந்தான். வியர்வை ஆறாகப் பெருகியது. மதிய சூரியன் தகித்தது. அவன் கண்ணிற்குத் தெரியாத எதிரியுடன் மோதுகிறான்; அவனா, நானா பார்த்துவிடுவது என்ற எண்ணம் ஒரு புறம், அறிவிற்கு உட்பட்டுத்தான் இதைச் செய்கிறோமா என்ற எண்ணம் மறுபுறம் அவனை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. அவன் கை ஓய்ந்து கடைசி அடி அடிக்கையில் உலோகத்தின் மீது மோதும் ஒரு ஒலி கேட்டது. மண்ணுக்குள் கிடந்த நிர்வாண ஆணுருவம் வாயைக் கோணலாக்கி, கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு நின்றது. அதை எடுக்கப் பயந்தவன், அப்படியே விட்டுவிடலாமா என நினைத்தான்.

ஒத்திகைக்கான இடம்

சாஹிபின் ஜின் திடீரென்று மூர்க்கத்துடன் அவனுக்குள் திரும்பி வந்தது. இம்முறை தூஷண வார்த்தைகள் பேசியது. சாஹிபை அங்குமிங்கும் தூக்கி எறிந்தது. சாஹிபை சுவற்றோடு மோதியது. தரையில் தலையை வேகமாக முட்டியது. உம்மா கதறிக் கொண்டு சாஹிபைக் கட்டியணைக்கப் பார்த்தாள். அது காற்றுப்போல அவள் கைகளுக்குள் சிக்காமல் தாப்புக் காட்டியது. இது மகாகெட்ட ஜின் என அவள் பயந்து நடுங்கினாள். “என்ட புள்ளய வுட்டுடு…” அவள் கதறிய சத்தத்தால் சனங்கள் மெல்லக் குழுமினர்.  

திருநடம்

ஒரு வழியாக ஏரி தன் நூறாண்டுத் தாகத்தை மேலெல்லாம் நீர் வழிய அருந்தி முடித்து ஓய்ந்தது. நீர் ஏரிக்கரைக்குள் அடங்கியது. எங்கும் சேறாய்க்கிடந்து பின் காய்ந்து வெடித்து மண்ணானது. ‘வீட்டுச் சமையல் ஆரம்பிக்கலாம்’ என மீத அரிசி பிரித்துக் கொடுக்கப்பட்டது. எல்லாம் தன்னிலை மீண்ட நாளில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஒரு சிறுவன் ஊருக்குள் வந்தான். சிவன் கோயிலில் பண்டாரத்துடன் ஒட்டிக்கொண்டான். பண்டாரம் அவனுக்கு இரண்டு வெள்ளத்தின் கதைகளையும் சொன்னார். திருவாசகம் பாடிக்கொண்டே அங்கு வளர்ந்தான் சின்னப் பண்டாரம்.

அன்னப்பறவை

கல்யாணம் முடிந்த அடுத்த எட்டாவது மாதம், ஆச்சியின் பெரிய மனுஷியான சடங்கு ஊரே அமர்களப்பட நடந்து முடிந்தது. அடுத்த ஆறு வருடங்களுக்கு, மாதமாதம் அடி வாங்கும் சுழற்சியாக நகர்ந்து கொண்டிருந்தது ஆச்சிக்கு. தான் அப்பா ஆக முடியவில்லை என்ற மொத்த வெறுப்பையும் கோபத்தையும் அடிகளும் உதைகளுமாக ஆச்சி மீது இறக்கி கொண்டிருந்தார் தாத்தா. ஏதோ விரக்தியை எப்படியே தீர்த்துக் கொள்கிறேனென்று சொத்து பத்திகளை அழித்து மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருந்தார். ஆச்சி எல்லா வெறுப்பிற்கும் பதிலாக அன்பை தவிர வேறெதையும் தரவில்லை. ஆறு வருட முடிவில் வேலப்பன் ஆச்சியின் வயிற்றைக் குளிர வைத்து, அவளை ஆசுவாச மூச்சுவிட அனுமதித்தான்.

அலெக்சாந்தர்

அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்ப்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிறத் தாடியுடன் இருக்கிறார், நல்ல வேலைக்காரர் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.  

கர்மா

முகத்தில் அசடு வழியும் புன்னகையுடன் அமர்ந்திருந்த சாராவையும் பீட்டரையும் நோக்கி, சமாதானத்துக்கான அடையாளமாக ஒரு மெல்லிய புன்னகையைத் தன் கல் முகத்தில் வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள் திருமதி. ப்ராடி. திரு. ப்ராடி விரைவில் குணமடைய வேண்டும் என்ற அவர்களின் வேண்டுதல்களையும், சிரப்பில் ஊறவைத்த குலாப் ஜாமூன்களையும் இருவரும் மகிழ்ச்சியுடன்  ஏற்றுக்கொண்டனர். சரியாகப் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முழுவதும் பீட்டர் தனது இருக்கையில் அசௌகரியமாக நெளிந்தபடியே இருந்தார். 

கண்ணாடிப் பரப்பு

அடுத்தநாள் ‘மெகபூபா’ பாடலை மிக மெல்லிய சத்தத்தில் வைத்து தொட்டிக்கு மேலே பிடித்துக்கொண்டேன். வா வா என் அன்பே வாழ்வின் பேரன்பே என்று அலைபேசி அதிர்ந்தது. என்னை போலவே அதற்கும் அந்த ஒலி இனிய அதிர்வாக இருக்குமா என்று தெரியவில்லை. உடனே இந்த மீன் ஆணா பெண்ணா என்று முதன்முதலாக கேள்வி வந்தது. இத்தனை நாள் என்னைப்போலவே அதையும் பெண் என்று நினைத்திருந்தது எத்தனை மடத்தனம் என்று பாடலை நிறுத்தினேன்.

விடுதலை

குருநிலையை சுற்றி இருக்கும் ஐந்து கிராமங்களுக்கு குரு இரண்டு சீடர்களை கல்விப்பணிக்காகவும் மருத்துவப் பணிக்காகவும் அனுப்பி வைப்பார். யாரேனும் கற்றுக் கொடுக்க சொன்னால் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். யாரேனும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் அவர்களுக்கு என்ன மருத்துவம் என்று சொல்வார்கள். மருத்துவம் என்றால் சிகிச்சை அல்ல. நோயாளியை எதிரில் அமர வைத்து சில நிமிடங்கள் எதிராளியின் கண்களை மட்டும் நோக்குவார்கள். ஐந்து நிமிடம் . அதிகபட்சமாக பத்து நிமிடம். உடல்நிலையில் என்ன கோளாறு என்பதை மட்டும் சொல்லி விட்டு அதற்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விடுவார்கள்.

குங்குமப்பூந் தோட்டம்

வெண் மேகங்கள் கலைந்து பின் கூடி வெவ்வேறு உருவெடுத்து மலை முகடுகளுடன் காதல் பரிமாறிக்கொண்டிருக்கும் காலைப்பொழுது.  ஏதோ இனமறியா இளம் நறுமணத்தில் தடுமாறி அலைந்து கொண்டிருந்தது இளங்காற்று. ஜீலம் நதிக்கரையில் ஜீவனை விடத் தவிக்கும் ஊதாப் பூக்களை நிரப்பிக்கொண்டு, வாய் பேசமுடியாமல் ஊமையாய்ச் சிரித்துக்கொண்டிருந்தன காஷ்மீரின் பாம்பூர் பள்ளத்தாக்குகள். சூரிய ஒளி ஊடுருவுவதற்குள் தங்களைக் கொய்துவிடப் போவதைப் பாவம் அவ்வூதாப் பூக்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. மண்ணிலிருந்து எட்டிப்பார்த்து இதழ் விரித்துக் கிடந்தன அவைகள். அவ்விதழ்களுக்கிடையில் வளைந்து நெளிந்து துருத்திக்கொண்டிருந்தன அதன் விலையறியாத குங்குமப்பூக்கள். இயற்கையில் பலவையும் அதனின் மதிப்பறியாமலேயே பரவிக்கிடக்கின்றன.

பார்வை

பொது வாழ்விலை ஈடுபட வேணுமெண்டு எப்ப நினைக்கிறமோ, அப்பவே எங்கட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிலை   இருந்து வெளீல வந்திட வேணும்., நான் வந்திட்டன்.  ஆனா, பொது வாழ்விலையிருந்து ஒரு காலமும் எங்கட சொந்த வாழ்க்கைக்குத் திரும்ப ஏலாது, அப்பிடியொரு பார்வை, அவனிட்டை இருந்து மட்டுமில்ல, வேறை எங்கை, எங்கயோவிருந்தெல்லாம் வருது. அந்தப் பார்வை என்னை வாழ விடாது. அவனுக்கு என்ரை வாழ்த்துக்களை சொல்லி விடுங்கோ. இன்னும் ஒண்டை நான் சொன்னதாய் சொல்லுங்கோ. ஒரு பெண் ‘ரேப்’ பண்ணப்படுறதை விடப் பயங்கர வலி, அதுக்காகப் புருஷன் நடந்து கொள்ளுற விதம், அது ஆத்திரம், ஆவேசமாய் இருந்தாலும் சரி,அனுதாபம், அவமானம் எதுவெண்டாலும் சரி, எல்லாம் ஒண்டு தான்….

பூரணம்

காந்தி ஒரு சிறு மேடையில் கண்மூடி அமர்ந்திருக்க அவர் முன் மூன்று பெண்கள். அவர்கள் முன் இரண்டு மைக். காந்தி கண் மூடியிருப்பதிலும் அப்பெண்கள் வாய் திறந்திருக்கும் விதத்திலும் அது பஜனையின் போது எடுக்கப்பட்ட படம் எனத் தெரிந்தது. இரண்டு பெண்கள் கண்ணாடி அணிந்திருந்தனர். மூன்றாவதாக இருக்கும் பெண்ணை பார்த்ததும் சிறு அதிர்ச்சி. எதிர்பாராத கணத்தில் ஒன்று அறிவுக்கு வெளிச்சமாவதன் அதிர்வு. பாட்டியேதான். அம்மாவின் அம்மா. எனக்கு ஒன்பது வயதானபோது பாட்டி இறந்து போனாள். அப்போது பதிந்த ஒரு மென் ஞாபகத்தை வைத்துக்கொண்டு எப்படி பாட்டியின் இள வயது புகைப்படத்தை இனங்கண்டேன் எனத் தெரியவில்லை

மெய்யை அப்புறப்படுத்து

ரஃபெயேல்… கொஞ்சம் ஒதுங்கும் சுபாவியாக, கவிதை எழுதுபவனாக, தனிமையைப் பூட்டிக் கொள்பவனாக வளைய வந்தான். தலை சாய்த்து மென்மையாக சிரித்து என்னை அழகாக்கினான். மெருகூட்டினான். என் வனத்தை எனக்குப் புரிய வைத்தான். அவன் மீதான ஈர்ப்புக்கான காரணமென்ன? வழமையான ஐரோப்பியனின் குணாதிசயங்கள் ஏதுமின்றி மாறுபட்டவனாக, வேறுபட்ட இந்தியத்தனத்துடன் வளைய வந்தான். அது தான் ஈர்த்ததா? பனி சூழ்ந்த இரவில் கரம் பற்றி கண் கலங்க நின்றானே, அதுவா? ஏதேதோ பட்டியலிட்டாள். சிந்தனை வரிசைகளற்று ஓடியபடி இருந்தன.‌ தற்கால லௌகீகம் உசுப்பியது. 

அம்மண(ன)ம்

அந்த அறையில், உயிருள்ள சதைப்பிண்டங்களைத் தவிற மற்றவைகளெல்லாம் ஆடை அணிந்திருந்தன. நாற்காலிகள், மேசைகள், கதவுகள், சன்னல்கள், சுவர்கள் மற்றும் எல்லாம். ஏன் பரிமாறப்பட்ட ரொட்டிகள் கூட துணியால் மூடப்பட்டிருந்தன. இந்த மனிதர்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை? உண்பவர்கள், சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள், ஆபிசில் வேலை பார்ப்பவர்கள் என அத்தனை ஜீவன்களும் எதற்காக இங்கு நிர்வாணமாய் இருக்கிறார்கள்? எதற்காக இந்த நிர்வாண உணவகம்? என்ற கேள்விகளை என் மனம் டைப்படித்தது. 

அதனால்தானா?  

“கோர்ட்டுக்குப் போய் அலையட்டும் கம்மனாட்டி. வக்கீல் பீஸ் அழட்டும். ராஸ்கல். நன்றி கெட்ட நாய்” என்று அப்பா பழி வாங்கிக் கொண்டிருந்தார். இந்த நாள்களில் ஆதி தன்னை வந்து பார்த்து  அனுதாபமாக நாலு வார்த்தை சொல்லவில்லை என்பது அவருக்குப் பெரிய விஷயமாகப் போய்விட்டது. என்னாலும் கூட ஆதியின் மௌனத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நானாக எதற்கு அவனிடம் அப்பாவை வந்து பார் என்று சொல்லவேண்டும் என்று என் மனதிலும் குமுறல் இருந்தது.

ராகாங்கராகம்

அம்மா சமையலறையில் காய்ச்சும் பாலின் மணம் வழக்கம் போல இல்லை; அம்மா வேறெதோ செய்யப் போகிறாள்- ஒருக்கால் திரட்டிப் பால் காய்ச்சுகிறாளோ?  இல்லை, அம்மா அதில் எலுமிச்சையைப் பிழிந்தாள்; பால் திரிந்தது “என்னதிது’ என்று அப்பா ஆச்சர்யமாகக் கேட்டார். திரிஞ்ச பாலை துண்டுல வடிகட்டி அம்மா செஞ்ச ரஸகுல்லா எனக்குப் பிடித்தது. ‘பாலயே திரிச்சுட்டே’ என்று அப்பா கிண்டலாகச் சொன்ன போது எனக்கு சிரிப்புடன் கூடக்கூட மற்றொன்றும் மனதில் எழுந்தது; முதலில் கலக்கமாக இருந்தது. ஏதோ ஒன்று எச்சரித்தது. அதையும் மீறி குரலொன்று ஒலித்துக் கொண்டே இருந்தது. யாரிடம் கேட்பது, அம்மா, அப்பா, பாலுவிடம்..அவன் ஒருத்தன் தான் மற்ற நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களின் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறான். ‘அத்தால போயி ஆட்றதுதான, சும்மா சும்மா எங்கள சுத்திட்டிருக்கே’ என்று சொல்லும் பிற நண்பர்களின் வாயை அடைப்பதும் அவன்தான். ஆனால், அவனுக்கும் என் வயதுதானே, அவனுக்கெப்படித் தெரியும்?

அணங்கு கொல்?

அதில் அந்த பெண் கொஞ்சம் பெரியவளாக இருபதுகளின் இறுதியில் இருப்பவள் போல இருந்தாள். அவளும் மராத்திக்கட்டு புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.கூட இரண்டு பெண்ணும் ஒரு ஆணுமாக குழந்தைகள்.” வாம்மா! வாங்கோடா கண்களா!” குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆயி கேட்டாள் “என்னடி பார்வதி! உங்க மடிசார் கட்டிக்காமல் நம்ம கட்டு கட்டிண்டு இருக்கே ”

தன்னறம்

அவ்வாகனங்கள் மறையும் இடத்திலிருந்த மரத்தடியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் “உதவி” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை முன்னும் பின்னுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். உடல் பருத்து தலைமயிர்கள் கலைந்து அவள் தோளிலிருந்த ஒரு கனமான பை முழங்கால் வரை நீண்டிருந்தது. அவளுக்குப் பின்புறம் ஒரு சிறு பெண் மர நிழலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை மடியில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என் முன்னால் நின்றிருந்த ஒரு கனரக வாகனத்திலிருந்து சட்டென வெளியேறிய கண்ணுக்குத் தெரியாத வெப்ப புகை ஏற்படுத்திய கானல் நீரில் அவர்கள் இருவரும் நெளிந்து நீரின் ஆழத்திற்குச் செல்வதுபோல இருந்தது. முன்னால் இருந்த அனைத்து வாகனங்களும் நகர நானும் முன்னகர்ந்து விரைந்தேன். எனக்குள் அவர்கள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றுகொண்டே இருந்தார்கள்.

நான்கு சுவர்கள்

நான் ஸ்கூல் படிக்கும்போது அவுங்கதான் எனக்கு ஆறு வருஷம் தமிழ் டீச்சர். அவங்கள புடிக்காத ஸ்டூடன்சே அப்ப எங்க ஸ்கூல்ல கெடயாது. அம்மா பெரிய அறிவாளியெல்லாம் இல்ல. ஆனா அவுங்க தமிழ் கிளாஸ் இன்ட்ரஸ்டின்ங்கா இருக்கும்.  இன்னிக்கும் நான் தமிழ் நாவல்ஸ்லாம் படிக்க அவுங்க தான் இன்ஸ்பிரேஷன். அம்மா நல்ல ஒயரம். அந்த பவளக்கல்லு மூக்குத்தி அவுங்க நீளமான மூக்க கிள்ளிக்கோன்னு இன்னும் எடுத்துக்காமிக்கும். அவுங்க காட்டன் பொடவ கட்டி அதுக்கு மேட்சிங்கா ஆக்சசரீஸ் போட்டு ஸ்கூலுக்கு வருவாங்க. அத பாக்கறதுக்குன்னே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனா என்னவிட அம்மா கொஞ்சம் கலர் கம்மிதான். நான் அப்பா மாதிரி கொஞ்சம் வெள்ள கலர்.

சடைப்பூ

கூடப்படிக்கிற பிள்ளைகள், ஆயா னு எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.குண்டுமல்லியும் கனகாம்பரமும் வரிவரியாய்க் கண்ணை மலர்த்திச் சிரிப்பது போலிருந்தன.நடுவில ஒரு பட்டு ரோஸ் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் ல.கையில் வைத்துத் திருப்பித் திருப்பிப் பார்ப்பதற்கே நாள் போதாது போல.

உணவு, உடை, உறையுள், … – 3

This entry is part 3 of 3 in the series உணவு, உடை, உறையுள்

. நடுவில் புல்தரையில் இருந்து பெண்களின் சிரிப்பொலியும் பேச்சுக்குரலும். ஒலிகள் இல்லாத வர்த்தக லோகத்தில் இருந்து பேசும் உலகில் நுழைந்தாள். பெண்களின் கலகல சத்தம் வந்த திசையில் இலைகளின் ஊடே பார்வையை ஓட்டினாள். மஞ்சள் விரிப்புக்குமேல் ஒரு செவ்வக பிரம்புக்கூடை அதைச்சுற்றி மூன்று பெண்கள். ஹிந்தி வார்த்தைகள் என்றாலும் பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. இப்படியொரு காட்சியை அங்கே அதுவரை பார்த்தது இல்லை. கூடையில் என்ன இருக்கும்? அவர்கள் என்ன பேசுகிறார்கள்? பக்கத்தில் போய்ப் பார்ப்பது அநாகரிகம் என ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

தேர்வு

இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சா?” என்று திடுக்கிட்டாள் பத்மா.
“ஆமா. சந்தையிலே மாடு பிடிக்கற மாதிரியெல்லாம் வந்து என்னை யாரும் பாக்கக் கூடாது. ஐ கான்’ட்  லீவ் ரெஸ்ட் ஆஃப் மை லைஃப் வித் எ ஸ்ட்ரேஞ்சர். நான் ஆளைப் பாத்துப் பேசிப் பழகினத்துக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” 
“சரி, சரி. இப்ப எதுக்கு வீணான பேச்செல்லாம். கல்யாணம், கார்த்தி எல்லாம் வேளை வந்தா யார் தடுத்தாலும் நிக்காது” என்று சூரி கோபத்துடன் இருவரையும் பார்த்தார்.

ஆர்கலி

அவன் அந்தத் தகட்டுக்கதவை ஓங்கி அடித்துக்கொண்டிருந்ததில் ஊரே சற்று நேரத்திற்குக் குழுமியிருந்தது. சதகத்தும்மா ஒரு ஓரமாக அத்திவாரத்திட்டில் குந்தியிருந்தாள். கண்ணிலிருந்து நீர்வரத்து நின்றிருந்த பிசுபிசுப்புக்குத் தாடைய ஒட்டவைத்துப் பார்த்தபடியிருந்தாள். கால்களைச் சுற்றி பூனைக்குட்டிகள் ஒன்றன் மீதொன்று வாகாய்ப் படுத்திருந்தன. அத்தனை அவமானத்திலும் பூனைகள் கால்களைக் கவ்வி உரசும் வால்சுரணை கொஞ்ச நேரத்திற்கு இருக்கலாமென்றிருந்தது. கிணற்றைச் சுற்றி குளிக்கக் கட்டிய சீமெந்துக் கட்டின் கீழ் மணல் சாந்தோடு அரித்துப்போனதில் சாய்ந்திருந்தது.

கல்நின்று முன்நின்றவர்

உணர்வு தன் சிறகுகளை ஒன்றிணைத்து உறங்கும் பட்டாம்பூச்சியென உரைந்து சிறகடிப்புகளில் தன்னை மீட்டு மீண்டும் அடங்கியது. மனம், எதிலோ முட்டிக்கொண்ட விசையுடன் அதை ஊதி நகர்த்திற்று. கணந்தோறும் உணர்வின் சிறகடிப்பு. உணர்வு, எழுந்து பறந்து அதன் வண்ணங்களை உதிர்த்து வெற்றுச் சிறகுகளுடன் வேறொரு புல்லில் அமர்ந்த கணமே உதிர்ந்த வண்ணங்களை மனம் ஊதி உணர்விடம் மீண்டும் சேர்த்தது. அது ஒரு முடிவிலி. சலிப்பின்றி ஆடப்படும் ஆட்டம். அதன் கோடிக்கணக்கான கண்ணிகளின் இடுக்குகளில் சிலவற்றிலே விரல் அகஸ்மாத்தாக சிக்கிக்கொள்கிறது.