திருக்கூத்து

இரவு சூழ்ந்த வனம் சூழ்ந்த அந்தப் பாதையில் நடந்து கொண்டிருந்தவனை  துர்நாற்றம் ஒரு பாறையைப் போல் நிறுத்தியது. முகத்தை சுழித்து மூக்கை புறங்கையால் உரசி நிதானித்தான். மேட்டுக்கோயில் அருகில்  இருப்பதை உணர்ந்தவன் கோயிலை நோக்கி நடந்தான். சுற்றுச் சுவரின் அடி முழுவதும் புதர் மண்டியிருந்தது. மதில் சுவரை துளைத்து மரம் கிளர்ந்திருந்தது. அது கோயில் என்பது ஊர்க்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். மற்றபடி அவ்விருளில் அது ஒரு கருங்குவை. ஒரு நிழற்கோயில். கனவில் எழும் ஒரு வடிவம். அணுக அணுக துர்நாற்றம் பெருகி வந்தது. இரண்டு படிகள் மேலேறினால் வாசற்கதவு. ஒரு காலத்திலிருந்த முப்பத்தாறு படிகள் இப்போது மண்ணுக்குள். வாசற்கதவின் மீது படர்ந்திருந்த கொடிகளை விலக்கி துவாரத்தின் வழி கண் பொருத்தி நோக்கினான். வெறும் இருள். ஆனால் துர்நாற்றம் கோயிலின் உள்ளிருந்து வருவது சர்வ நிச்சயம். அப்போதுதான் உணர்ந்தான் வழக்கமாய் கேட்கும் பூனைகளின் ஒலி இல்லை என்பதை. சண்டையிடும் முனகும் குரலகள் சில நேரங்களில் அழைப்பவை கடிந்து கொள்பவை இப்படியான மியாவின் பெருக்கு இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான். கைவிடப்பட்ட கோயில். தள்ளித்திறந்தான். இருட்டுக்கு நன்றாகப் பழகியிருந்த கண்கள் உடனடியாக கண்டன இறந்து கிடக்கும் பூனைகளை. ஒரே ஒரு கோபுரம் தாங்கிய கருவறை ஒரு சுற்றுப் பாதை அதைச் சுற்றி மதில் அவ்வளவே. பூனைகளின் உடல்கள் நேர்க்கோடாகக் கிடந்தது, யாரோ அடுக்கி வைத்தார்போல். பிரகாரத்தின் உள்ளிருந்து காலடியோசை ஒன்று கேட்கவும் அத்திசை நோக்கினான். 

“இவன் ஒருத்தன் ஒன்ன யாருடா மேட்டுக்கோயில் கிட்ட போகச் சொன்னது.. பூன எதையோ திண்ணு செத்து போச்சு… ஏதோ அதப் பாத்தன் இதப் பாத்தன்னு”

“நீங்க சொல்றது சரிங்கிறேனே.. இந்தப் பய எதுக்கு அங்க போறான்…”

சத்திரத்தில் கூடியிருந்த ஊர்க்காரர்களின் ஒருமித்த கருத்தாய் இருந்தது சோமன் அங்கு போயிருக்கக்கூடாது என்பது. 

“சோமா இங்க பாரு நீ பாத்தது ஒன்னோட இருக்கட்டும். அதப் பாத்தன் இதப் பாத்தன் அப்டி கெளம்புச்சு இப்டி கெளம்புச்சுன்னு சொல்லிட்டு இருக்கக்கூடாது.. “

“ரெண்டு நாள் வேணும்னா சத்திரத்துலயே இருந்துக்க… இதோ… கோயில் சாமி வந்துட்டாரு.. கேட்ருவோம்”

திருநீறு துலங்க காவி வேஷ்டியும் காவித் துண்டுமாய் ‘நமச்சிவாயம்’ என்றபடி உள்நுழைந்தார்.

சோமன் சாமியைக் கண்டதுமே “கருப்பு உருவம் சாமி.. கால்ல செலம்பு போட்டிருந்துச்சு.. ஆணா பொண்ணான்னு தெரியல.. கைல ஒரு செத்த பூன இருந்துச்சு சாமீ…”

“டேய் இந்தாடா .. நேத்து உருவம் மட்டும் இருந்துச்சுன்ன.. இன்னக்கி கைல செத்த பூனங்குற.. சாமி ஒன்னுமில்ல நேத்து ராத்திரி சாலியூர் போய்ட்டு திரும்பி வந்திருக்கான்.. குறுக்குப்பாதையாச்சேன்னு மேட்டுக்கோயில் வழியா வந்திருக்கான்.. சும்மா இல்லாம கோயில்குள்ளையும் எட்டிப் பாத்திருக்கான்.. எதையோ பாத்து பயந்துட்டான்”

சாமி பொறுக்கும்படி கைகாட்டினார். ஒரு கணம் சோமனையே உற்று நோக்கியது போல் தோன்றியது. பின் “சரி இருக்கட்டும்.. நான் வரேன்” என்று கிளம்பினார்.

சாமி சத்திரம் விட்டு இறங்கும் போது விநாயகம் அவருக்கு வழி விட்டு அவர் முகத்தை உற்றுப் படித்தபடி நிற்பதைக் கண்டார். சாமி எத்திசை செல்கிறார் என்பதை குறித்துக்கொண்டு உள் நுழைந்தான். விநாயகம் உள் நுழைவதைக் கண்டதுமே சோமனை ‘வாய வெச்சிட்டு சும்மா இருக்கணும்’ என ஒரு குரல் எச்சரித்தது. மீன் மூச்சு விடுவதைக் கூட கேட்கும்  காதுகள் விநாயகத்தினுடையது. அங்கு இருக்கும் முகங்கள் ஒவ்வொன்றாய் நோக்கினான். கண் தன் மீது படும் முன் அங்கிருந்து நகர்ந்தார் ஊர்க்காவல். அப்போதைக்கு சோமன் முகத்தைப் பார்த்தால் நாய் கூட பாவப்படும். அப்படி பயம் அப்பிக் கிடந்தது. 

விநாயகம் ஒரு தூணில் சாய்ந்து வேட்டியைத் திரட்டிக்கொண்டு அமர்ந்தான்.

“என்ன சோமா” என்றான் விநாயகம். பின் ‘ம்’ என்றான். அந்த ம் விஷயங்கள் துலங்கும் போது அவனையே அறியாமல் வெளிப்படும் ம். ‘சாமியின் முகம் யோசனையில் கூர்ந்திருந்தது. உச்சிவேளை நேரம் கோயில் திசையில் செல்லாமல் தோட்டம் நோக்கி செல்கிறார். உள்ளே சோமன் பயந்து அமர்ந்துள்ளான்.’ வேகமாய் சத்திரம் விட்டு வெளியேறினான். ஊர்ப்பெரியவரான மூர்த்தி ‘போச்சு’ என்பது போல் சைகை செய்தார். விநாயகம் இரண்டு தெரு கடந்து ஒரு வீட்டின் முன் நின்றான்.

“என்ன அக்கா” என குரல் கொடுத்தான்.

“சொல்லுப்பா..”

“சோமன் எங்க போனான்.. பாக்கணும்னு நேத்துலேந்து தேடுறேன்…”

“சாலியூர் போனான்”

“சுத்திதான போனான்.. இல்ல மேட்டுக்கோயில் வழியாவா?”

“சொன்னா எங்க கேக்குறான்..” என்றாள் சோமனின் தாய்.

“சரிக்கா வரேன்…” 

விநாயகம் வேகமாக கிழக்கு நோக்கிப் போவதைப் பார்த்தார் ஊர்க்காவல். நடந்து வந்து அவனுடன் இணைந்து கொண்டார்.

“என்ன விநாயகம் தொலங்குச்சா”

ஒரு பார்வை பார்துவிட்டு பேசாமல் நடந்தவனை மேலும் உசுப்பினார் “சும்மா சொல்லுடா”

“சோமன் மேட்டுக்கோயில்ல எதையோ பாத்து பயந்திருக்கான்.. அவன் எதையோ பாத்தது நெஜம்…”

“எப்டி சொல்ற”

“கோயில் சாமி மொகம் தீவிரமான யோசனையில இருந்துச்சு…அவர் அவன் சொல்றத நம்புறாரு… உச்சி வேள பூஜ கூட பண்ணாம தோட்டம் பக்கம் போறாரு.. அனேகமா தோட்டத்து சாமியப் பாக்கப் போறாருன்னு நெனக்கிறேன்..”

“நீ இப்ப எங்க போற”

“மேட்டுக்கோயிலுக்கு… சோமன் என்ன பாத்தான்னு தெரிஞ்சிக்க..”

“சாமி நம்புறதா சொன்ன… நீ போய் பாத்துத்தான் நம்புவியா”

“சாமி தெரிஞ்சுக்குற விதம் வேற நான் தெரிஞ்சுக்குற விதம் வேற”

“மேட்டுக் கோயில் தூரம் அதிகம்ல…”

 தோட்டத்து சாமி இருக்கும் தோட்டம் மட்டும்  தோட்டம் என அழைக்கப்படும் வழமை உருவாகி இருந்தது. எந்தக் காலத்தில் வந்தார் என்பது தெரியாது. ஆனால் வெகு அரிதாக பேசக்கூடியவர் தோட்டத்து சாமி. வார்த்தைகள் அவருக்குள் இருக்கும் ஒரு கடலாழத்தில் புதையுண்டுவிட்டதாய் தோன்றும். அவர் பேசியதை சின்ன வயதில் பார்த்ததாய் தொண்டுக்கிழங்கள் சொல்வதுண்டு. இருவரும் போகும் வழியில் தோட்டத்தைக் கடந்தபோது கோயில் சாமி வெளியே வந்து கொண்டிருந்தார். முகம் லேசாகக் கவலை தோய்ந்து இருப்பதாய் தோன்றியது. ஊர்க்காவல் மடித்திருந்த வேட்டியை கீழிறக்கியபடி சாமியிடம் ஓடினார்.

“தோட்டத்து சாமி என்ன சொன்னுச்சு சாமி”
“இன்னக்கிதான் வாய தொறந்து ஒரு வார்த்த சொன்னாரு… அப்புறம் உள்ள போய்ட்டாரு…” 

“என்ன சொன்னாரு”

“காலத்தின் சுழின்னாரு”

“அப்டின்னா.”

“யாரும் மேட்டுக்கோயிலுக்கு போகவேண்டாம்… ஊர் உத்தரவா இத சொல்லிடுங்க”

“சாமி… விநாயகம் மேட்டுக்கோயிலுக்குத்தான் போய்கிட்டு இருக்கான்”

“அவன் போகட்டும்.. பாத்துச் சொல்ல ஒருத்தன் வேணும்ல”

அன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். கோயிலுக்கு சென்று பூஜை முடித்த கோயில் சாமி கோயிலை ஒட்டிய மரத்தடியில் கண்மூடி அமர்ந்துவிட்டார். ஊரெல்லாம் பரவியது தோட்டத்து சாமி வாய்திறந்து பேசியது. கந்தசாமிக்கு பயமானது ‘ஊரக்காக்க தபசி தபஸ் விட்டு எழுவான். அவன் தபஸ்ல அமர்ந்ததே கூட ஊருக்காகத்தான்’ என அவர் பாட்டி அடிக்கடி சொல்லக்கேட்டிருக்கிறார். ஏன் விநாயகமே கதை சொல்லும்போது அடிக்கடி சொல்லும் வரிகள் இவை. அன்றிரவு மூர்த்தி சத்திரத்திலேயே தங்கினார். சோமனை யாரும் கட்டுப்படுத்தவில்லை. கேட்பவரிடம் அவன் சொல்லிக்கொண்டிருந்தான் தான் கண்டதை.  பூனை சடலங்களும் இன்னதென்றில்லாத உருவங்களும் கனவில் எழுந்து ஊரையே தூக்கமில்லாமல் ஆக்கியது. மேட்டுக்கோயில் சென்று திரும்பிய விநாயகம் அன்று மாலை சத்திரத்தில் கிடந்து உறங்கினான். அவன் எழுந்து கொண்ட போது ஊரே சத்திரத்தில் கூடி இருந்தது. நீரை அள்ளி அடித்து முகம் கழுவினான். இரண்டு வாழைப்பழமும் கொஞ்சம் கூழும் குடித்து சத்திரத்தின் முன்னிருக்கும் மேடையில் அமர்ந்த போது கந்தசாமி அருகில் வந்தார். ‘அப்பா விநாயகம்…. ஆகும்னா சொல்லுப்பா’ என்றார். ஊர் அமைதியாய் அமர்ந்திருந்தது.

விநாயம் கண்மூடி அமர்ந்தபடி,

“சோதி ஏற்றப்படாதது. என்றுமிருப்பது” பின் சற்று அமைதி. “ஆயிரம்கோடி சூரியனின் ஒளி நிறைந்தவள். மலர்களின் மென்மை நாணும் திருப்பாதங்கள் அவளினது. சக்தி அனந்த கோடி முறை தன் உள்ளை பிராணனால் நிறைத்துப் பின் வெளிவிடுபவள். அவள் மூச்சால் நிறைகையில் அவள் உள்ளுறையும் பிரபஞ்சம் உயிர் பெறுகிறது. அவள் மூச்சினை வெளியிடுகையில் உயிர்கள் அழிகின்றன. வெளிவிடும் பிராணனில் வேறு பிரபஞ்சங்கள் உயிர் கொள்கின்றன. கோடி கோடி கோடி ஆண்டுகளாய் அவள் பிராணனின் போக்கில் உயிர்கள் ஆடி அழிகின்றன. அவளின் மூலாதாரத்தில் ஒளிர்கிறது என்றுமுள்ள சோதி” மெல்லக் கண் திறந்தான்.

“நம்ம ஊரோட கதைக்கு ரெண்டு மூலம் இருக்கு. ஒன்னு இப்பவும் நம்ம கோயில்ல இருக்குற பண்டார நூல். வெறும் பாடல்களாவும் செவி வழிக் கதையாகவும் இருந்தது தொகுக்கப்பட்டு இன்னக்கி ஒரு நூலா இருக்கு. ரெண்டாவது கதைகள். இருட்டோட எந்த ஒரு புள்ளீல மின்மினி தன்னோட ஒளிய காட்டுதுன்னு யாருக்கும் தெரியாது. அதுபோல கதை தன்னிச்சையா பெருகி எழுந்து வரது. தோட்டத்து சாமி ஆயிரம் வருடமா இந்த பூமீல இருக்குறவர். அவர் இதுவரை சொன்ன சொற்கள் என எதுவுமே இல்ல. ஆனா அவரோட சொல் என எழுந்து வர அவ்வளவும் கதைகளா துலங்குது. மக்கள் தன் கதைகள அவரோட சொல் வழியா சொல்லிக்கிறாங்க. நம்ம ஊரோட கதைக்கு இந்த ரெண்டு மூலங்கள்தான். 

இன்னக்கி வெயில் தேங்கி நிக்கிற ஏரியா இருக்கு இந்த ஊர். மண் காய்ந்து வெடித்து பாதாளத்தின் உஷ்ணம் வீசுற ஊர் ஒரு காலத்துல மழைக்கு அஞ்சி நடுங்குச்சுன்னா நம்ப முடியமா நம்மால? சக்தியின் ஆடல் நம் அறிவுக்கோ கற்பனைக்கோ அப்பாற்பட்டது. நம்ம ஊருக்கு கெழக்க  இருக்குற மேட்டுக்கோயில மையமா வெச்சுதான் நம்ம ஊர் இருந்துச்சு அந்த காலத்துல. அந்த கோயில்ல பூசன பண்ணின பண்டாரங்களால வாய்மொழியா சொல்லப்பட்ட கதைகளும் பாடல்களும்தான் பண்டார நூலா இன்னக்கி இருக்கு. அந்த நூலத் தொகுத்தவர் சின்னப் பண்டாரம். அவர் அந்த நூலுக்கு இட்ட பெயர் திருநடம். ஆனா பண்டார நூலுங்குற பெயர்தான் நெலச்சிருக்கு. அந்த நூல் பெருவெள்ளங்களப் பத்தி பேசுது. மொத்தம் நூற்றியெட்டு தடவ அங்க வெள்ளம் வந்து ஊர நீர் சூழ்ந்திருக்கு. ஒவ்வொரு முறையும் உச்சிகால பூஜையோட மழை வலுத்து வாரங்களுக்கு தொடர்ந்திருக்கு. நூறு வருஷத்துக்கு ஒரு முற மழ விடாம கொட்டி ஏரி நெறஞ்சு நீர் ஊருக்குள்ள வரதும் மக்கள் எல்லாம் கோயில்ல தஞ்சமடையிரதும் நூறு தடவைக்கும் மேல நடந்திருக்கு.  மேட்டுக்கோயிலுக்கு எதிர்க்க ஒரு நீர் நெறஞ்ச ஏரி இருந்திருக்கு அந்த காலத்துல. இன்னக்கி  அந்த ஏரிய வெயில் நெறச்சிருக்கு. மேட்டுக்கோயிலுக்கு வடக்கா நானூறு அடி தூரத்துல எல்லையம்மன் கோயில் இருந்திருக்கு. இன்னக்கி வெறும் மணல் மேடுதான் இருக்கு. அப்டி ஒரு கோயில் இருந்ததுக்கு எந்த ஒரு தடயமும் இல்ல. ஆனா என்னோட கனவுல அந்த கோயில பாத்திருக்கேன். அந்த அம்மனோட மூக்கு ஒளிர்ரதையும் அத பாத்து ஒரு பெண் கைதொழுது அழுறதையும் பாத்திருக்கேன். மேட்டுக்கோயிலுக்கு மொத்தம் முப்பத்தியாறு படிகள். இன்றைய தேதிக்கு  ரெண்டு படிதான் இருக்கு. மண் மண்ண உண்ணுது.

மேட்டுக்கோயில்ல இருந்த கடைசிப் பண்டாரம் சின்னப் பண்டாரம். இவர்தான் விவரமா கோயில் பூஜை நேரங்கள், ஊர் அமைப்பு, ஊர்ப் பெரியவர்கள் பெயர், ஒரு குழந்தைக்காக உயிர் விட்ட திருமூர்த்தி கதைன்னு விரிவா பதிவு செஞ்சிருக்கார். அவர் காலத்துல பெய்த பெருமழைய நூத்தியெட்டாவது பெருமழைன்னு குறிப்பிட்டிருக்காரு. நூத்தியெட்டாவது பெருமழைல நீர் எழுந்து சூழ்ந்தப்ப அவர் ஊர இன்னக்கி நாம இருக்குற எடத்துக்கு கூட்டி வந்திருக்கார். அன்னக்கி மேட்டுக்கோயில்ல இருந்த சிவலிங்கத்த எடுத்துதான் இப்ப நம்ம ஊர்ல இருக்க சிவங்கோயில வெச்சிருக்கு. எல்லையம்மன எடுக்க வேண்டாம்னு சின்னப்பண்டாரம் சொன்னதால எடுக்கல. அவர் காலத்துலையே ஊருக்கு மேற்க குன்றுல இருக்குற வேப்ப மரம் எல்லையம்மனா வழிபடப்பட்டது, இன்னக்கி மலையம்மன் கோயிலா மாறி இருக்கு நம்ம ஊர் எல்லையம்மன். 

ஒரு கோயில்ல இருக்குற சாமி நீங்கவும் அது வெறும் வெற்றிடமா இருக்காது.  ஒரு சாமி இடம் விட்டு நகரவும் அத நிரப்ப வேற ஒன்னு வரத்தான் வரும். அதத்தான் சோமன் நேத்து மேட்டுக்கோயில்ல பாத்தது.

சக்தி மூச்ச உள்ளெடுக்க ஒரு கோடி ஆண்டு ஆகும்… அந்த கோடி ஆண்டுகள்ல ஒரு சின்ன பகுதிதான் பண்டார நூல் பேசுற பெருவெள்ளங்களோட காலம். காற்றுதான் மழை இல்லையா? அவள் உள்ளிழுக்குற பிராணன்தான் மழையா வருது. பின் அவள் பிராணன் வெளியேற வெளியேற  அவளுக்கு வெளியே இருக்குற பிரபஞ்சங்கள் உயிரால பெருகும், அவள் உள்ளிருக்கும் பிரபஞ்சம் உயிரில்லாமல் ஆகும். அவள் பிராணனின் ஆடலே எல்லாம். அவள் மூச்சிழுப்புக்கும் வெளியேற்றத்துக்கும் நடுவுல ஒரு அசைவற்ற காலம் இருக்கு. அதுதான் காலத்தின் சுழி. அந்த சுழிக்குப் பிறகு சக்தியோட உள்ளிருக்கும் பிரபஞ்சத்தோட உயிர்கள் அழியும். அந்த காலத்தின் சுழி அணுகி ரொம்பவும் அருகாமைல இருக்கு. காத்துல இலைகள் அசையிறத கடைசியா பாத்தவங்க யாரும் இப்ப இல்ல.” 

இருளுக்குள் இருந்து கோயில் சாமி நடந்து வந்தார். வந்து விநாயகம் அருகில் அமர்ந்துகொண்டார். கூட்டம் அப்போதுதான் வெகு நேர அமைதிக்குப்பின் சலசலத்தது. விநாயகமும் கோயில் சாமியும் சிலைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பின் விநாயகம்,

“இன்றிலிருந்து ஒன்பதாம் நாள் எல்லையம்மனுக்கு பூசனை இரவு பூராவும் நடக்கணும். ஊர் முழுதும் அன்று மலைலதான் இருந்தாகனும். இது தோட்டத்து சாமி கோயில் சாமியோட கனவுல வந்து சொன்ன சொல். சக்தி ஓம்”

சக்தி ஓம் என்பதுதான் விநாயகம் சொன்ன கடைசி சொல். அதன் பின்  வாழ்வில் அவன் பேசவே இல்லை. ஆனால் அன்றிரவு அவன் சொன்னவை யாவும் ஆயிரம் நாக்குகளால் மீண்டும் மீண்டும் கதையாகிக்கொண்டே இருந்தது. 

அன்றிலிருந்து ஒன்பதாம் நாள் ஊர் முழுவதும் எல்லையம்மனுக்கு பூசனை எடுக்க ஊர் மேற்கில் இருந்த குன்றில் கூடியிருந்தது. தோட்டத்து சாமி மட்டும் தோட்டம் விட்டு நீங்கவில்லை. குன்றின் உச்சியில் ஊர் நோக்கி அமைந்த பாறையில் விநாயகம் அமர்ந்திருந்தான். அன்று அவன் கண்கள் பார்த்திருந்தது, வானிலிருந்து கருங்குவை மழையென கீழிறங்குவதை. எந்த வித ஒலியும் இல்லை. இரவு தன் ஒலிகளை ஆழத்தில் புதைத்து விட்டிருந்தது. அல்லது ஒலி அசைவற்று நின்றிருந்தது. மழையென இறங்குவது எது என அவன் கண்கள் பார்த்துக்கொண்டே இருந்தது.  உடல் அடங்கி விட்டிருந்தது. கண்கள் கண்ட ஒன்றினை அகம் வெறுமனே உள்வாங்க அமர்ந்திருந்தான்.

அடுத்த நாள் காலை இயக்கப்பட்டவன் போல் விநாயகம் மேட்டுக்கோயில் நோக்கிச் சென்றான். கோயில் நோக்கிச் செல்லும் பாதை மேடேறிக்கொண்டிருந்தது. தூரத்திலேயே காண முடிந்தது கண் எட்டும் தொலைவு வரை வெறும் கரும் மணல் இருப்பதை. மண்ணை எத்தினான். கைகளால் தோண்டினான். வெறும் கரும் மணல். கண்கள் உணர்ந்தது கோயில் இல்லை என்பதை. மனம் உணர நேரம் எடுத்தது. வந்த தூரத்தைக் கணக்கிட்டு தான் நிற்கும் இடத்தை அவதானிக்க முயன்றான். அதன் படி அவன் காலுக்குக்கீழ் கோயில் இருக்கிறது. ஒரு இரவில் கோயில் புதையுமா? இரவு மழையென பொழிந்தது கரும் மணலா? சுற்றி கண் எட்டும் தூரம் வரை கரு மணல். வானத்தைப் பார்த்தான் ஒரு பொட்டு மேகமில்லை. வெறும் நீலம். தூரத்தில் தோட்டத்து சாமி நடந்து வந்தார். உடையேதுமில்லை. கருமணல் பூசப்பட்ட உடல். உள்ளுக்குள் ஒலித்தது “சக்தி ஓம்” எனும் சொல்.

-ஆதித்ய ஸ்ரீநிவாஸ்/ நவம்பர் 2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.