குங்குமப்பூந் தோட்டம்

வெண் மேகங்கள் கலைந்து பின் கூடி வெவ்வேறு உருவெடுத்து மலை முகடுகளுடன் காதல் பரிமாறிக்கொண்டிருக்கும் காலைப்பொழுது.  ஏதோ இனமறியா இளம் நறுமணத்தில் தடுமாறி அலைந்து கொண்டிருந்தது இளங்காற்று. ஜீலம் நதிக்கரையில் ஜீவனை விடத் தவிக்கும் ஊதாப் பூக்களை நிரப்பிக்கொண்டு, வாய் பேசமுடியாமல் ஊமையாய்ச் சிரித்துக்கொண்டிருந்தன காஷ்மீரின் பாம்பூர் பள்ளத்தாக்குகள். சூரிய ஒளி ஊடுருவுவதற்குள் தங்களைக் கொய்துவிடப் போவதைப் பாவம் அவ்வூதாப் பூக்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. மண்ணிலிருந்து எட்டிப்பார்த்து இதழ் விரித்துக் கிடந்தன அவைகள். அவ்விதழ்களுக்கிடையில் வளைந்து நெளிந்து துருத்திக்கொண்டிருந்தன அதன் விலையறியாத குங்குமப்பூக்கள். இயற்கையில் பலவையும் அதனின் மதிப்பறியாமலேயே பரவிக்கிடக்கின்றன.

அம்மண(ன)ம்

அந்த அறையில், உயிருள்ள சதைப்பிண்டங்களைத் தவிற மற்றவைகளெல்லாம் ஆடை அணிந்திருந்தன. நாற்காலிகள், மேசைகள், கதவுகள், சன்னல்கள், சுவர்கள் மற்றும் எல்லாம். ஏன் பரிமாறப்பட்ட ரொட்டிகள் கூட துணியால் மூடப்பட்டிருந்தன. இந்த மனிதர்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை? உண்பவர்கள், சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள், ஆபிசில் வேலை பார்ப்பவர்கள் என அத்தனை ஜீவன்களும் எதற்காக இங்கு நிர்வாணமாய் இருக்கிறார்கள்? எதற்காக இந்த நிர்வாண உணவகம்? என்ற கேள்விகளை என் மனம் டைப்படித்தது. 

நான்கு சுவர்கள்

நான் ஸ்கூல் படிக்கும்போது அவுங்கதான் எனக்கு ஆறு வருஷம் தமிழ் டீச்சர். அவங்கள புடிக்காத ஸ்டூடன்சே அப்ப எங்க ஸ்கூல்ல கெடயாது. அம்மா பெரிய அறிவாளியெல்லாம் இல்ல. ஆனா அவுங்க தமிழ் கிளாஸ் இன்ட்ரஸ்டின்ங்கா இருக்கும்.  இன்னிக்கும் நான் தமிழ் நாவல்ஸ்லாம் படிக்க அவுங்க தான் இன்ஸ்பிரேஷன். அம்மா நல்ல ஒயரம். அந்த பவளக்கல்லு மூக்குத்தி அவுங்க நீளமான மூக்க கிள்ளிக்கோன்னு இன்னும் எடுத்துக்காமிக்கும். அவுங்க காட்டன் பொடவ கட்டி அதுக்கு மேட்சிங்கா ஆக்சசரீஸ் போட்டு ஸ்கூலுக்கு வருவாங்க. அத பாக்கறதுக்குன்னே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனா என்னவிட அம்மா கொஞ்சம் கலர் கம்மிதான். நான் அப்பா மாதிரி கொஞ்சம் வெள்ள கலர்.

குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும்

அந்த குறுக்குத்தெருவுல மழ பெஞ்சு ஓஞ்சிருந்துச்சு. அங்கங்க தண்ணி. அதுசேரி, மழத்தண்ணிக்கு இன்னா ஒட்டா ஒறவா? எங்கல்லாம் பள்ளம் இருந்துச்சோ அங்கல்லாம் மழத்தண்ணி தேங்கிகெடந்துச்சு. எந்த வூட்டு சன்னல்லருந்தோ ஏதோ ஒன்னு தொப்புன்னு ஒரு பள்ளத்துல விழுந்து தவமணி மேல சகதி தெறிச்சுச்சு. அத்த தொடச்சிக்கிட்டே தவமணி வானத்த அன்னாந்து பாத்தா , அந்த குறுக்குத் தெருவுக்குள்ளாருந்து பாத்தா வானங்கூட குறுகலாதான் தெரிஞ்சுச்சு. வேகமா நடந்து அந்த தெருவோட மொனைக்கு வந்தா. கொஞ்சம் தயங்கி அந்த பக்கமும் இந்த பக்கமும் நடந்தா. எங்குட்டு திரும்புனாலும் அங்க ரோடு குறுகலாத்தான் இருந்துச்சு.