அதனால்தானா?  

நேற்று காலையில் அத்தை ஒரு தடவை போன் பண்ணிப் பேசினாள்.

“மாலு, நம்பாத்துக்கு எதிராளாத்திலே ராமய்யங்கார் இருக்காரோல்லியோ? அவரோட பேரன் ரங்கனுக்கு நாள்னிக்குப்  பெங்களூர்லே  கல்யாணம். நீங்க  அவசியம் வரணும்னு கல்யாணம் நிச்சயமான நாள்லேர்ந்து சொல்லிண்டு இருந்தார். இந்த உடம்பைத்  தூக்கிண்டு ஊர் ஊரா அலையற

தெல்லாம் முடியாதுன்னுதான் இருந்தேன். ராமய்யங்கார் முந்தா நாள் 

இங்கேர்ந்து பெங்களூருக்குக் கிளம்பிப் போனதுக்கு அப்புறமும் ரெண்டு நாளா கண்டிப்பா வந்துடணும்னு போன் போட்டு சொல்லிண்டே இருக்கார். இப்ப சித்த நாழிக்கு மின்னாலே கூப்பிட்டுக் கிளம்பியாச்சான்னு கேட்டார். நம்மை யார் இப்பிடித் தாங்கிண்டு அழைக்கிறான்னு எனக்கும் தோணித்து. அதான் சரின்னு கிளம்பி வரதா இருக்கேன். நாளைக்கு ஏதாவது ஒரு டிரெயினைப் பிடிச்சு வரணும் ” என்றாள் அத்தை.

 சுபத்ரா அத்தை என் அப்பாவின் ஒன்று விட்ட அக்கா. இந்த ஒன்று விட்ட உறவு அடிக்கடி விட்டுப் போய்விட்டு மறுபடியும் சேர்ந்து கொள்ளும் சுபாவம் சார்ந்தது போல. அது கூடத் தப்புதான். மனிதர்களின் மனம் மாறும் நிலைக்கு உறவு எதற்காகப் பழி சுமக்க வேண்டும்? ஒரு சமயம் அப்பா அல்லது அம்மா, இன்னொரு சமயம் அத்தை அல்லது அத்திம்பேர் இந்தக் கூத்தை ஆரம்பித்து வைப்பார்கள். கூடலும் ஊடலுமாகப் போகும் வாழ்க்கையின் நியதி ஆச்சரியத்தை சுமந்து தன்னில் வைத்திருக்கிறது என்று நான் நினைப்பேன். அவ்வப்போது எடுத்து விட்டு அதிர  அடிக்க ஏதுவாக.

கடைசியாக நான் சுபத்ரா அத்தையுடன் பேசி இரண்டு வருஷமிருக்கும். எனக்கு வெரிகோஸ் வெய்ன் என்று திடீரென்று பலத்த கால் வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். அறுவை சிகிச்சைக்குப் பின் ஒரு வாரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினேன்.  என் உடம்பைப் பற்றி விசாரிக்கப் போனில் வந்தாள் அத்தை. நேற்று பேசும் போது பிரபுவைப் பற்றியும் விசாரித்தாள். 

“மாப்பிள்ளை ஊர்லேதானே இருக்கான்?”

மாப்பிள்ளை! முகரக்கட்டை! அயோக்கியப் பதர்! என்னடா புருஷன் மீது இத்தனை மரியாதை வைத்திருக்கிறாள் என்று பார்க்க வேண்டாம். ஆங்கிலத்தில் மோசமான நாலெழுத்துக் கெட்ட வார்ததைகள்இருக்கிறதே,  

அதே மாதிரி தமிழில் நானும் வைத்திருக்கிறேன். பிரபுவின் மேல். அவன் ஊரில் இல்லாததால் அவற்றை உபயோகிக்க சாத்தியமில்லை.

அத்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறெங்கோ பாய்கிறேனே!

“பிரபு ஊர்லே இல்லே அத்தை. பாம்பே போயிருக்கான். மூணு நாளாகும் அவன் திரும்பி வர.” 

“குழந்தை தாத்தா பாட்டியோடதான் திருச்சிலே இருக்கா?”

“ஆமா. அவா செல்லத்திலே ஆடித் திரிஞ்சிண்டு நான் கூப்பிட்டாக் கூட இங்க வரமாட்டேங்கிறது” என்று சிரித்தேன். திருச்சியில் பிரபுவின் பெற்றோர்களிடத்தில் குழந்தையை விட்டு வைத்திருந்தேன்.

“ரொம்ப நாளாச்சு பிரபுவையும் பாத்து. சரி, ராத்திரி பார்ப்போம்” என்று போனைக் கீழே வைத்தாள்.   

ரொம்ப நாள் ஆனது நல்லதுதான். இல்லையென்றால் அவள் பிரபுவைப் பார்க்கும் போது அவன் அவளிடம்  நிறையப் பொய் சொல்லுவான். அதை நான் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். 

நேற்று மறுபடியும் மத்தியானம் அத்தையிடம் இருந்து போன் வந்தது.  

ஆதி அவளை அழைத்துக் கொண்டு வருகிறானாம். “திடீர்னு ‘நானே உன்னை அழைச்சுண்டு போறேன். காரில் போயிட்டு வரலாம்’னான். நாளைக்கு இங்க லஞ்ச் சாப்பிட்டுட்டு காரில் கிளம்பி வரோம். டின்னர் எங்களுக்கு உன்னோடதான்” என்று சொல்லி விட்டுப் போனை வைத்தாள். .  

ஆதி தன்னுடன் வருகிறான் என்று அத்தை சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனைப் பார்த்து ஏழெட்டு  வருஷமிருக்கும். என் கல்யாணத்தன்று பார்த்தது. அதற்கப்புறம் கிடைத்த வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவன் என்னைத் திட்டமிட்டுத் தவிர்த்தான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இப்போது திடீரென்று என்னைப் பார்க்க எப்படி அவனுக்குத் தோன்றியது? என்னைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று ஒரு காலத்தில் சொன்னவன்தான் மாறிப் போனான். நானும்தான் எப்படி அவனோடு ஒட்டிக் கிடந்தேன்? ஆனால்  என்னைப் பொறுத்தவரை.அவன் மாறி விட்டது ஒன்றும் ஊகிக்கக் கஷ்டமான விஷயமாக  இல்லை. தான் விரும்பியவளை அடையப் போகின்றோம் என்று கனவில் மிதந்து கொண்டிருந்தவனை எழுப்பி நையப் புடைத்தால் எப்படி இருக்கும்? ஆனால்  கலைத்ததும், அவனைப் புரட்டிப் போட்டு அடித்ததும் நான்தான் என்று அவன் சொன்னதுதான் என்னைக் கோபத்துக்குள் தள்ளி அவனிடமிருந்து நான் விலகி நிற்க வழி வகுத்தது. 

என் அப்பாவுக்குப் பவித்ரா அத்தையின் மேல் ரொம்பப் பிரியம். அவர் கூடப் பிறந்தது என்  சித்தப்பாதான். பெண் வாசனையே இல்லாத குடும்பம் என்று ஒரு பேர் வேறு. அதனால் அவருடைய பெரியப்பாவின் பெண் அக்காவாக நின்று ஊட்டி வளர்த்தது அவள் மீது அடங்காத பாசத்தை வளர்த்து விட்டது. ஆனால் அபரிதமான அன்பும் பல சந்தர்ப்பங்களில் 

உரிமைகளின் எல்லை மீறல்களை அனுமதித்து விடுகிறது. தான் சொன்னதை அத்தையோ இல்லை,அவள் கணவனோ  அல்லது அவள் சொன்னதை என் அப்பாவோ , இல்லை என் அம்மாவோ கேட்கவில்லை என்று காரணமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு விலகிப்  

போவார்கள். அது பத்து நாளைக்கு நீடிக்கும். அல்லது பத்து  மாதங்கள் கூட. அநேகமாக சமாதானத்தை எல்லோருக்குமிடையில்  ஏற்படுத்துவது இளம் வயது ஆதியும் நானும் தான்.

என் அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. வேலையில் திறமைசாலியாக இருந்தது, சொன்ன பேச்சுக்கு மறு வார்த்தை பேசாதது என்று அவர் கொண்டிருந்த இரு கெட்ட குணங்களுக்காக அவரை மூன்று நான்கு வருஷத்துக்கு ஒருமுறை வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள். நான் பிறந்ததே கான்பூரில்தான். அவருக்கு வடக்கே மாற்றல் கிடைத்த போது உடன் சென்ற அம்மா தாங்க முடியாத வெய்யில் அல்லது தாங்க முடியாத குளிர் என்று வருஷம் பூராவும் ஆட்டிப் படைத்த ஊர்கள் தனக்கு ஒத்து வராது; தானும் குழந்தையும் மெட்றாஸிலேயே இருந்துக்கறோம் என்று அப்பாவை அவ்வப்போது பயமுறுத்தினாலும் சாகும் வரை அவள் அவர் கூடவேதான் இருந்தாள். நான் காலேஜ் சேர வேண்டிய வருஷம் அம்மா இறந்து விட்டாள். வடக்கே இருக்கப் பிடிக்காமல் அப்பா தெற்கே வர டிரான்ஸ்பர் கேட்டார். கிடைக்காததால் வேலையை உதறி விட்டார். நாங்கள் அப்படித்தான் மைலாப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து வந்தோம். 

மந்தை வெளியில் அத்தையின் குடும்பம் இருந்தது.

நானும் அப்பாவும் வார இறுதியில், பண்டிகை நாள்களில்  அத்தை வீட்டுக்குப் போய் விடுவோம். அவர்களும்  எங்கள் வீட்டுக்கு வந்து போவார்கள். இந்தச் சமயத்தில்தான் ஆதியுடன் பழக்கம் நெருக்கமாயிற்று. சினிமா, பீச், கச்சேரி, நாடகம் என்று அலைந்து திரிவோம். நான் காலேஜில் படிக்கும் போது ஆதி சி.ஏ. பண்ணிக் கொண்டிருந்தான். தினமும் காலையில் மட்டும் ஸ்கூட்டரில்  என்னைக் காலேஜில் கொண்டு விடுவது அவனுடைய வேலை. அவன் ஆடிட் பார்க்கும் கம்பனிகள் இருக்குமிடங்கள் மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் மாலையில் அவனால் வர முடியாது.  

எங்கள் காது கேட்க இரு குடும்பத்தாரும் எங்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து விடுவதைப் பற்றி சில சமயங்களில் பேசுவார்கள். அது மாலு பிறந்த போதே தீர்மானிக்கப்பட்டு விட்ட விஷயம் என்று ஆதியின் அப்பா ஒரு தடவை என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் என் கல்யாணத்துக்கு இரண்டு வருஷம் முன்பு ஒரு பெரும் அலை வந்து ஒவ்வொருவர் வாழ்க்கையையம் கலைத்துப் போட்டு விட்டுப் போய்விட்டது. இப்போதும் அன்று நடந்த சம்பவங்கள், வார்த்தைகள் எல்லாம் எனக்கு அப்படியே மனதில் உறைந்திருக்

கின்றன.

 ***

மணி சித்தப்பாவுக்கு படிப்பு ஏறவில்லை. அதனால் அவர் அரசியலில் நுழைய முயற்சி செய்தார். ஆனால் அவர் ஜாதி அவருக்கு உதவியாக இருக்க மறுத்து விட்டது. அப்பாதான் அவரைக் கடைசியில் ரயில்வேயில் சேர்த்து விட்டார். பியூன் வேலை. படிப்பு இல்லையே தவிர மனுஷன் மற்ற விஷயங்களில் கெட்டிக்காரன். ஆபீசர்கள் அனைவருக்கும் அவர்கள் வீட்டு வேலைகள் பார்த்தே ஆபீசில் சம்பளமும், நல்ல பெயரும் வாங்கிக் கொண்டார்.ஆனால் கையில் பணம் வந்தால் அதைத் தொலைப்பது எப்படி என்று ஏதோ ரிசர்ச் செய்பவர் போலக் காலியாக்கி விடுவார். ஜெயம் சித்தியைக் கல்யாணம் செய்து கொள்ளும் வரை.

ஜெயம் சித்தி அவரைக் கல்யாணம் செய்து கொண்டதால் குடும்பம் நடுத் தெருவில் நிற்கவில்லை. அவருடைய ஊதாரித்தனத்தில் பங்கு பெறுவது போலச் சேர்ந்திருந்து நடித்து குடும்பச் செலவுக்கு வேண்டிய பணம் வரும்படி செய்து விடுவாள். ஆனால் இருவரும் ஒரு விஷயத்தில் ஊதாரியாக இருந்தார்கள். மக்கட் செல்வம் என்று திருவள்ளுவர் சொன்னதைத் தப்பாகப் புரிந்து கொண்டவர்கள் போல ஆறு வாரிசுகளை உருவாக்கினார்கள். சித்தி கெட்டிக்காரியாக இருந்தது மட்டுமில்லை. எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் நல்லவளாகவும் நடமாடினாள். உறவு ஜனங்களில் கஷ்டப்படுபவர்களைக் கண்டால் அவளுக்குப் பொறுக்காது. உடம்பாலும் பணத்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்து விடுவாள்.  

நல்லவர்கள் நிறையப் பேர் இருந்தாலோ அல்லது நல்லவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலோ இந்தப் பூமியால் அந்தப் பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது போல. திடீரென்று ஒரு நாள் சித்தி நெஞ்சை வலிக்கிறது என்று ஆஸ்பத்திரிக்குப் போனாள். பார்க்க முடியாத கண்களுடனும் பேச முடியாத வாயுடனும் அசைக்க முடியாத கை கால்களுடனும் அவள் உருவம் வீட்டுக்குத் திரும்பி வந்து மின்மயானத்துக்குச் சென்றது. 

அந்த அடியை ரமணி சித்தப்பாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் அம்மாவும் பவித்ரா அத்தையும் முடிந்த அளவு அவருடைய குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டும் என்று ஆறு மாதம் கழித்து சித்தப்பா சொன்னார். 

பவித்ரா அத்தையும் “நானே சொல்லணும்னு இருந்தேன். குழந்தைகளுக்கு வயிறு ரொம்ப,  சமைச்சுப் போடவாவது ஒருத்தி இருக்கணும். ஜெயம் இருந்தப்போ எப்படி கொழு கொழுன்னு இருந்தது குழந்தைகள்லாம்? இப்ப என்னவோ சீக்குலே அடிபட்ட மாதிரின்னா இருக்கறதுகள்” என்றாள்.

“நானே பாத்துட்டேன் பொண்ணை” என்றார் சித்தப்பா.

அப்பா ஆச்சரியத்துடன் “ரமணி, என்னடா சொல்றே? யாருடா அது?” என்று கேட்டார்.

“எங்க ஆபீஸ்லேயே வேலை பாக்கறா. லேகான்னு.”

“ஐயோ, அந்தக் குடிகார வேலாயுதன் நாயரோட பொண்ணா? அவ டைவர்சியாச்சேடா?” என்று அப்பா சற்று உரத்த குரலில் கேட்டார். முந்தி வரும் கோபம்.

“ஆமா. அதுக்கென்ன?” என்றார் சித்தப்பா.

“உனக்கு வேறே ஒருத்தியும் கிடைக்கலையா?” என்று அத்தையும் கோபத்துடன் கேட்டாள்.

“பின்னே என்னோட ஐவேஜிக்கு சரபோஜி மகாராஜா குடும்பத்திலேந்தா ரெண்டாந் தாரமா வருவா? அவளும் வேலை பாக்கறா. ரெண்டு பேர் சம்பளம் வந்தாதான் ஆறு குழந்தைகளை வச்சு நிர்வாகம் பண்ண முடியும்னு டிசைட் பண்ணிட்டேன்.” 

திருமதி லேகா ரமணி வந்து சேர்ந்து சில மாதங்கள் கழிந்திருக்கும். ஒருநாள் சித்தப்பா அத்தையையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார். 

“நான் வேலையை விட்டுட்டு பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்” என்றார் அப்பாவிடம்.

“பேஷா பண்ணேன்” என்றார் அப்பா விட்டேத்தியாக.  சித்தப்பாவின் இரண்டாம் திருமணத்துக்குப் பிறகு அறுந்து போன பட்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்த பாதி வால் போல அவர்களின் உறவு இருந்தது. 

“அதுக்குப் பணம் வேணும்.”

 “ஆமா. வெறுங் கையாலே முழம் போட முடியாதே!”

“அதுக்குத்தான் உன்கிட்டே வந்திருக்கேன்.” 

“என்கிட்டேயா? என்கிட்டே என்ன இருக்கு? அட்சதைக்கு வழி இல்லாதவன் லட்சம் பேருக்கு சாப்பாடு போடறது எப்படி?”

“சரி, நேரேயே கேக்கறேன். உன்னாலே பணம் தர முடியாதா?”

“என் கிட்டே இருந்தா தந்துடுவேனே.”

“அப்ப என் பாகத்தைப் பிரிச்சுக் கொடு” என்றார் சித்தப்பா. 

நான் அயர்ந்து விட்டேன். அப்பா “என்னது?” என்று கேட்டபடி எழுந்து விட்டார். அவர் உடல் நடுங்குவதைப்  பார்த்தேன். ஜீரணிக்க முடியாத சொல்லை, சித்திரவதையை மனதில் ஏற்றும் தருணம் போல எனக்குத் தோன்றியது.

என் தாத்தாவும் அத்தையின் மாமனாரும் சேர்ந்து ஒரு காலத்தில் பொட்டல் காடாகக் கிடந்த மறைமலை நகரில் இடம் வாங்கினார்கள். அவர்கள் வாங்கி சில காலத்துக்குப் பின் ஒரு பெரிய இந்திய மென் பொருள் கம்பனி ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிப் போட்டுத் தனது அலுவலகத்தை ஆரம்பித்தது. அப்போதிலிருந்து விலை படிப்படியாக நகரின் வளர்ச்சியுடன் தானும் வளர்ந்தது என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். 

“இப்படியெல்லாம் நடக்கும்னு நீ அந்த மலையாளச்சி கால்லே விழுந்த போதே எனக்குத் தெரியும்டா” என்று அப்பா கோபத்தில் கத்தினார்.

“எதுக்கு என் பொண்டாட்டியை இதிலே இழுக்கறே? இன்னும் ஒரு வார்ததை அவளைப் பத்திப் பேசினா மரியாதை கெட்டுடும்” என்றார் சித்தப்பாவும் கோபத்துடன்.

“ஏய், என்ன இது ரெண்டு பேரும் இப்பிடி சண்டை போட்டுண்டு? பேசித் தீர்க்க வேண்டிய சமாசாரம்னா இது. டேய் ரமணி, முதல்லே நீ அண்ணாவோட எப்படி பேசறதுன்னு தெரிஞ்சுக்கோ” என்றாள் அத்தை குறுக்கே புகுந்து.

“இன்னும் பேச என்ன இருக்கு? ஒழுங்கா பாகத்தைப் பிரிச்சுக் கொடுக்

காட்டா வக்கீல் நோட்டீஸ் வந்து பேசும்” என்று சொல்லி விட்டு விருட்டென்று எழுந்து போய் விட்டார் சித்தப்பா.

அப்பா தலையைக் குனிந்து  உட்கார்ந்திருப்பதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. ரமணி சித்தப்பாவை வாழ்க்கையில் மேலேற்றிக் கொண்டு வந்து வாழ வைத்ததற்குக் கிடைத்த சரியான சன்மானம் என்று இப்போது அவருடைய உள்ளம் துடித்துக் கொண்டிருக்கும். 

அப்போதுதான் அத்தை அந்த எதிர்பாராத பேச்சைத் துவக்கினாள்.

அவள் அப்பா அருகே சென்று “கலிகாலத்திலே இதெல்லாம் நடக்கறது ஆச்சரியமா என்ன? நீ எதுக்குக் கோபமும் துக்கமும் பட்டுண்டு கிடக்கே? காலுக்கு உதவாத செருப்பை யாராவது ஹால்லே கொண்டு வந்து வச்சு அழகு பாக்கணும்னு ஆசைப்படுவாளா?” என்றாள்.

அவர் அவளைப் பார்த்து “என்ன சொல்றே?” என்று கேட்டார்.

“அவன் இனிமே உன்கூட இருப்பான்னா நினைக்கிறே?”

“அதுக்காக?”

“அவன் கேக்கறதைக் கொடுத்துத் தொலைச்சு தலை முழுகிடு.” 

அவர் அவள் பேச்சை நம்ப முடியாதவராய் அவளைப் பார்த்தார்.  

“ஓ, இதைச் சொல்றதுக்குத்தான் அவன் உன்னைக் கூட இழுத்துண்டு வந்தானா? என்ன ஒரு கிரிமினல் மைண்ட் உங்க ரெண்டு பேருக்கும்!”

“நீ கோபத்திலே கொட்டற வார்த்தைக்கு நான் மரியாதை கொடுக்கப் போறதில்லே” என்றாள் அத்தை நிதானமாக.

“என்ன எழவு பிசினஸ் தெரியும் அவனுக்கு? எல்லாம் அவன் பொண்டாட்டி வேலை. அவன் இந்தச் சொத்தை ஆறு மாசத்தில் அழிச்சிடுவான்னு உனக்குத் தெரியாதா? ரெண்டு பொண் குழந்தைகளை வச்சுண்டு நிக்கறானே. நாளைக்கு ரெண்டுக்கும் கல்யாணம் கார்த்தின்னா உதவுமேன்னு நான் நினைச்சிண்டு இருக்கேன். அதிலே அவன் மண்ணைப் போடறதுக்குத் தயாரா நிக்கறான்னு உனக்குத் தோணலையா?” என்று அப்பா கோபத்துடன் அவளைக் கேட்டார்.

“இன்னும் அவனை நீ வேலைக்குச் சேத்து விட்ட பதினெட்டு வயசுப் பையனா நினைச்சிண்டு இருக்கே. அவன் ஒரு பொண்டாட்டிக்கு ரெண்டு பொண்டாட்டியா கட்டிண்டவன். ஆறு குழந்தைகள் வேறே. அவனுக்கும் இப்போ  ஆறு கழுதை வயசாச்சு. நீ சொல்லிக் கேக்கறவனா இருந்தா எப்படியெல்லாமோ அவன் இருக்கலாம். ஆனால் அவன் சண்டிக் குதிரையா ஆயிட்டான். இனிமே நீ  வண்டியிலே வச்சுப் பூட்ட முடியாது.”

அப்பா அவளுக்குப் பதிலளிக்காமல் மௌனம் சாதித்தார். 

“அவன் கஷ்டப்படறதுதான் நிஜம் இப்ப. அவன் யாரு? உன் கூடப் பிறந்தவன். அவன் தெருவுக்கு வந்து நின்னா நீ சந்தோஷமா படப் போறே?  நீ மட்டும்தான் அவன் கேக்கறதைக் கொடுக்கணும்னு நான் சொல்லலே. நானும் தீர்மானிச்சிட்டேன். என்னோட நிலத்தை அவனுக்கு கொடுத்துடலாம்னு. எனக்கு இருக்கறதும் ஒரே ஆண்பிள்ளை. ஆனால் அவன் இன்னும் ரெண்டு வருஷத்திலே வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவான். நம்ம கிட்டே இருக்கறது ஆறு குழந்தைகளை வச்சுக் கஷ்டப்படறவனுக்குப் போய்ச் சேரட்டுமேன்னுதான் நான் நினைக்கிறேன்” என்றாள் அத்தை. 

இப்போதும் அப்பா மௌனம் சாதித்தார். இது நல்லதற்கு இல்லை என்று என் மனது சொல்லியது.

அத்தை அவரிடம் “ஆதியும் சொன்னான். ரமணி மாமா கோர்ட்டுக்குப் போனா அவருக்குத்தான்….”

அப்பா அவளைப் பேச விடவில்லை. “ஓ உன் பிள்ளையும் இதிலே சேத்தியா? அவன்தான் ரமணியோட லீகல் அட்வைஸரோ?ரொம்ப

நன்னாயிருக்கு. நீங்கள்லாம் என் மேலே மரியாதையும் விச்வாசமும் வச்சிண்டிருக்கறவான்னு முட்டாள் மாதிரி இவ்வளவு நாள் நினைச்சிண்டிருந்தேன் பாரு, என்னைச் செருப்பாலே அடிச்சுக்கணும்” என்றபடி அங்கிருந்து எழுந்து மாடிக்குப் போய் விட்டார். அவர் பின்னாலேயே போய் அத்தை கதவைத் திறக்கச் சொல்லி மன்றாடினாள். 

“இனிமே எனக்கும் உன் குடும்பத்துக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லே, போ போ” என்று உள்ளிருந்தபடியே அவர் சத்தம் போட்டார். 

வழக்கு நடந்தது. கடைசியில் ரமணி சித்தப்பாவுக்குதான்  இடம் போய்ச் சேரும் என்பதில் அவருக்கு சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் 

“கோர்ட்டுக்குப் போய் அலையட்டும் கம்மனாட்டி. வக்கீல் பீஸ் அழட்டும். ராஸ்கல். நன்றி கெட்ட நாய்” என்று அப்பா பழி வாங்கிக் கொண்டிருந்தார். இந்த நாள்களில் ஆதி தன்னை வந்து பார்த்து  அனுதாபமாக நாலு வார்த்தை சொல்லவில்லை என்பது அவருக்குப் பெரிய விஷயமாகப் போய்விட்டது. என்னாலும் கூட ஆதியின் மௌனத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நானாக எதற்கு அவனிடம் அப்பாவை வந்து பார் என்று சொல்லவேண்டும் என்று என் மனதிலும் குமுறல் இருந்தது.

அப்பாதான் பிரபுவைத் தேர்ந்தெடுத்தார். விஷயத்தைக் கேள்விப்பட்டு அத்தை எனக்குப் போன் பண்ணினாள். 

“இன்னிக்குதான் எங்களுக்கு உன் கல்யாண விஷயம் தெரிஞ்சது. தன்னோட பிறந்த நாளைக்கு வந்த க்ரீட்டிங்ஸ்னு ஆதி சிரிச்சான்” என்றாள் அத்தை.

நான் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் தெரிந்த தேதியைப் பார்த்தேன். ஜூன் இருபத்தி அஞ்சு. ஒவ்வொரு வருஷமும் என்ன அட்டகாசமாக எங்களின் பிறந்த நாள்கள் கொண்டாடப்படும் என்று லேசான வலியுடன் நினைத்தேன்.

“அவனுக்கு என்னோட ஹாப்பி பர்த்டே க்ரீட்டிங்ஸ்னு சொல்லு அத்தே” என்றேன்.

“உனக்கு இந்த கல்யாணத்திலே முழு இஷ்டம்தானா மாலு?” என்று கேட்டாள் அத்தை.

“அதிலென்ன சந்தேகம் அத்தே?” என்று நான் கேட்டேன்.

எதிர்முனையிலிருந்து சில நொடிகள் பதில் வரவில்லை.

“நாம என்னமோ நினைச்சோம். ஆனா நமக்கு மேலே இருக்கறவன் வேறே ஏதோ நினைச்சுட்டான்” என்றாள் அத்தை. அவள் குரலில் லேசான துக்கம் தென்பட்டது.

“அத்தே, நான் இதிலே என்னோட இஷ்டம்னு எல்லாம் எதையும் வச்சுக்கலே. என் அப்பாவுக்கு நான் நன்றியோட இருக்கறதுதான் எனக்கு முக்கியமா இருக்கு அத்தே. குழந்தையிலிருந்து என் மனசு நோக அவர் ஒரு காரியம் பண்ணியதில்லை. அம்மா போனதுக்கு அப்புறம் அவர்தான் அம்மாவா  அப்பாவா எனக்கு இருந்திருக்கார். அவர் பேச்சுக்கு எதிரா ஒரு வார்த்தை நான் சொன்னாலும் எனக்கு விமோசனமே கிடைக்காது அத்தே” என்றேன் நான்.

“ஐயோடா என்ன வார்த்தை, என்ன வார்த்தை!  கடவுளே, என் குழந்தையை நன்னா வச்சுக் காப்பாத்து!” என்று அத்தை உடைந்து அழத் தொடங்கினாள். பிறகு சமாளித்துக் கொண்டு “என்னைக் கூப்பிடாட்டாக் கூட என் குழந்தையோட கல்யாணத்திலே வந்து நான் நிப்பேன்” என்றாள்.

“அதெப்படி அத்தே நீ கல்யாணத்தன்னிக்குதான் வருவேங்கிறே! அப்புறம் கூரைப் புடவை எல்லாம் எனக்கு யார் செலெக்ட் பண்ணித் தருவா?” என்றேன் நான். எதிர்முனையில் அத்தை சிரிக்கும் ஒலி கேட்டது.

நான் அப்பாவிடம் எல்லா சண்டைகளையும் மறந்து கல்யாணத்துக்கு என் அத்தையையும் என் சித்தப்பாவையும் அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என்றேன். முதலில் அவர் முரண்டினாலும் “நான் உன்கிட்டே கேக்கறதே இது ஒண்ணுதானே!” என்று என் அஸ்திரத்தைப் பிரயோகித்ததும் நெகிழ்ந்து விட்டார். 

                                                                                                                                                                                      ***

ரவு அத்தையும் ஆதியும் வரும் போது ஒன்பது மணியாகி விட்டது.

“வருக ஆதி அவர்களே” என்று சினிமா பாணியில் அவனை வரவேற்றேன். அத்தையைப் பார்த்து “இவனை இங்கே இழுத்துண்டு வந்ததுக்கு உனக்கும் நன்றி” என்று வசனம் பேசினேன்.

இருவரும் சிரித்தார்கள். 

“ஐம் கிளாட் டு ஸீ யூ” என்றான் ஆதி. அவன் முகத்தில் மலர்ச்சி விகசித்துக் கிடந்தது.

“ரொம்ப ட்ரிம்மா இருக்கியே!” என்றேன் நான். 

“அம்மா காது கேட்க சத்தமா சொல்லு” என்று சிரித்தான். 

“என்ன ட்ரிம் வேண்டிக் கிடக்கு?  ஊர் உலகத்திலே வயிறு ரொம்ப, சாப்பிடறதுக்கு செலவழிப்பா, இவன் வயிறு சுருங்கறதுக்கு என்னமோ பேலியோ, கீட்டோன்னு பணத்தைக் கொண்டு போய்க் கொட்டறான்” என்றாள் அத்தை.

“அம்மாவுக்கு நான் ரமணி மாமா மாதிரி பிள்ளையாருக்குச் சொந்தக்

காரனா இல்லேன்னு ரொம்ப வருத்தம்” என்று சிரித்தான் ஆதி. ரமணி 

மாமாவுக்குப் பாரி உடம்பு.  

ஆதி சற்று ரிஸர்வ்டாகதான் வருவான் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அவன் முகத்தில் என்னைக் கண்டதும் உண்டான மகிழ்ச்சி!  

அவன் பாத்ரூமுக்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லி உள்ளே சென்றான்.

“அங்கே ஊரிலேயே கொட்டு கொட்டுன்னு உக்காந்துண்டு இருக்கறதை விட இப்பிடி வெளியே நாலு இடங்களுக்கு வந்து, நாலு ஜனங்களைப் பாத்தா உனக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்” என்றேன் நான்.

“ஆமா. எல்லாரும் வந்து அவாவா ஆத்திலே கல்யாணம், வாங்கோன்னு கூப்பிடறா. நான் போய் அப்படிக் கூப்பிடறதுக்குத்தான் என் தலையிலே எழுதியிருக்கலே” என்றாள்.

நான் அத்தை கையைப் பிடித்துக் கொண்டு “எல்லாம் நடக்கும். கவலைப்

படாதே அத்தே” என்றேன். 

“அதெல்லாம் இல்லே மாலு. அந்த ஜூன் மாசமே எனக்குத் தெரிஞ்சுடுத்து அவன் மனசு.”

நான் அந்தக் கணம் என்னைக் குற்றவாளியாக உணர்வதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. 

ஆதி திரும்பியதும் நாங்கள் சாப்பிட்டோம். “ஆதிக்கு ரொம்பப் பிடிக்கும்னு குழம்புமா உப்புமா பண்ணிருக்கே” என்றாள் அத்தை.

“இட்ஸ் வெரி நைஸ்” என்று ஆதி கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தான். அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் போது காண்பிக்கும் 

சமிக்ஞை. நானும் அதே மாதிரி செய்தேன். அத்தை அதைப் பார்த்து விட்டுச் சிரித்தாள். ஒரு கணம் பழைய நாட்களின் உலகத்தில் புகுந்து வெளிப்பட்டேன். 

சாப்பிட்டதும் அத்தை “கார்லே வந்ததுலே கால் வலிக்கிறது. எனக்கு ஏற்கனவே ஆர்த்ரிடிஸ் வேறே. நான் படுத்துக்கறேன்” என்றாள்.

ஆதி அவளிடம் ஒரு மாத்திரையைக் கொடுத்தான். “கால் வலி வந்தா சீக்கிரத்திலே தூங்க விடாது. அதனாலே அப்பல்லாம் ஒரு ஸ்லீப்பிங் டேப்லெட் போட்டுக்குவா” என்றான் என்னிடம். ஒரு பக்கம் தன் வாழ்க்கையைத் தீய்த்துக் கொண்டு இன்னொரு பக்கம் அம்மாவைப் பரிவுடன் பார்த்துக் கொள்ளும் அவனைப் பார்க்கும் போது இரக்கம் தோன்றியது. 

அடுத்த கால் மணி நேரத்தில் அத்தை தூங்கி விட்டாள்.

நானும் ஆதியும்  ஹாலில் உட்கார்ந்து கொண்டோம்.

“காலம்பற எத்தனை மணிக்குக் கல்யாணத்துக்கு கிளம்பணும்?” என்று நான் கேட்டேன்.

“எட்டு மணிக்கு முகூர்த்தம்னா. இங்கே பக்கத்திலேதான் ராஜாஜி நகர்லே. ஏழரைக்கு கிளம்பினா சரியா இருக்காது?” என்றான் அவன்.

“ஆமா நீங்க போனா ப்ரேக்பாஸ்ட் ரெடியா இருக்கும். மத்தியான லஞ்சும் அங்கேதானே? அய்யங்கார் விடமாட்டார்” என்று நான் சிரித்தேன்.

“ஆமா. லஞ்சை முடிச்சிண்டு ஊருக்குத் திரும்பிடலாம்னு இருக்கேன்.”

“என்னது? இன்னிக்கி கார்லே இருநூறு மைல் நாளைக்கு மறுபடியும் இருநூறு மைலா? அத்தைக்கு எப்படி ஒத்துக்கும்? அப்படி என்ன தலை போற அவசர வேலை உனக்கு?” என்று நான் படபடத்தேன்.

“இல்லே. எனக்கு நாளைக்குக் கமிஷனர் கிட்டே ஹியரிங். ஏற்கனவே மூணு தடவை அட்ஜர்ன்மெண்ட் வாங்கின கேஸ். ஐ ஹாவ் காட் டு பி தேர்” என்றான். “வேணும்னா அம்மா இங்கே இருந்துட்டு வரட்டும்.”

“நீ வந்தது எனக்கு சந்தோஷம்தான். ஆனா நீ எப்படி திடீர்னு மனசு மாறி வந்தே?”

ஆதி என்னை உற்றுப் பார்த்தான்.

சற்று முன்பு ஏற்பட்ட அவன் முக மலர்ச்சி, காண்பித்த பரிவு,

எனக்கேற்பட்ட குற்ற உணர்ச்சி, இரக்கம், பழைய நாள்களின் உலகில் புகுந்து மூழ்கி எழுந்த உணர்வு, பேச்சில் வந்த படபடப்பில் அடிநாதமாய் இயங்கிய உரிமை…அவன் அருகில் சென்று அமர வேண்டும் போல் இருந்தது.  

“நீ என்னைத் தலை முழுகிட்டதான்னா நான் நினைச்சிண்டிருந்தேன் நேத்தி வரைக்கும்? இந்த ஏழெட்டு  வருஷத்திலே நீ எவ்வளவு தடவை பெங்களூர் வந்திருப்பே? இப்போ எப்படி மனசு மாறி இங்கே வரத் தோணித்து உனக்கு?” என்று திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டேன். என் மேலிருந்த கோபம் அழிந்து விட்டதா? என்னை நேசிக்கும் மனப்பான்மை திரும்பி விட்டதா அவனிடம்? அவனே அதைச் சொல்லட்டும்.

அவன் சில நிமிடங்கள் பேசாமல் இருந்தான். அத்தை படுத்திருந்த அறையின் பக்கம் சென்று பார்த்து விட்டுத் திரும்பினான்.

“சொல்ல முடியாது. சில சமயம் திடீர்னு எழுந்துடுவா. நாம மாடிக்குப் போகலாமா?” என்று கேட்டான் நின்றபடியே.

நாங்கள் மாடிக்குச் சென்றோம். அங்கு போட்டிருந்த ஸ்விங் கிளைடரில் உட்கார்ந்து கொண்டோம்.

“நான் இங்க வந்ததுக்கு ஏதாவது காரணம் சொல்லிடலாம். ஆனால் நான் எப்பவுமே உன்கிட்டே உண்மையைத்தான் பேசியிருக்கேன்”  என்றான். 

“என்கிட்டே உன்னாலே பொய் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும்” என்றேன் நான்.

“போன வாரம் சங்கரி வந்திருந்தா ஆத்துக்கு” என்றான் ஆதி. சங்கரி ரமணி சித்தப்பாவின் முதல் பெண். 

“மாலு, அவ சொன்னதைக் கேட்டதும் எனக்குப் படபடன்னு ஆயிடுத்து” என்றான் ஆதி.

“அப்படியென்ன சொன்னா?”

அவன் சற்றுத் தயங்கி விட்டுப் பேசினான் “பிரபுவைப் பத்தி.”

“என்னன்னு?” 

“அவன் இங்கே யாரையோ வச்சிண்டிருக்கான்னு. மாலுவுக்குத் தெரியுமான்னு கேட்டேன். அவளுக்கு தெரியும். அவனைத் தனியா விடறதுக்கு அவளுக்கு இஷ்டமில்லே. அதனாலேயே  அவ குழந்தையைப் பாத்துட்டு வரதுக்குக் கூடத்  திருச்சிக்குப் போறதில்லேன்னா.” 

நான் ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன். 

ஆதி “நீ நேத்திக்கு அம்மாகிட்டே  பிரபு ஊர்லே இல்லேன்னு சொன்னதா சொன்னா. அதனாலேதான் நானும் கிளம்பி வந்தேன்.”

என்னது? 

சற்று முன்பு கண்ட முக மலர்ச்சி, காண்பித்த பரிவு,  எனக்கேற்பட்ட குற்ற உணர்ச்சி,பழைய நாள்களின் உலகில் புகுந்து மூழ்கி எழுந்த உணர்வு, பேச்சில் வந்த படபடப்பில் அடிநாதமாய் இயங்கிய உரிமை… எல்லாம் அந்த நொடியில் கழன்று கீழே விழுந்தன.

“அதனால்தான் வந்தாயா? என்று ஆதியிடம் கேட்டேன்.

சட்டென்று வந்த அந்தக் கேள்வியில் அவன் குழம்பி நின்றான்.

“சரி, கீழே போகலாம், வா. நாளைக்குக் கார்த்தாலே சீக்கிரம் கிளம்பிப் போகணுமே நீங்க ரெண்டு பேரும்” என்று எழுந்தேன். 

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.