மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று

1606 மிர்ஜான் கோட்டை

சித்திரம் அருண்

மிர்ஜான் கோட்டை குதிரை லாயத்தில் பேராய  அவை கூடப்போகும் பின்மாலைப் பொழுது. இந்தக் கூட்டம்  இன்று இரவிலும் நீண்டு கொண்டு போகும். விடிகாலையிலாவது முடியுமா என்பது சந்தேகமே என்று வகுளாபரணன் நினைத்தான். 

ஜெருஸோப்பா அரசின் உப பிரதானிகளில் ஒருவன் வகுளாபரணன். பேரிளைஞன். சென்னபைரதேவி மேல் மதிப்பும் அன்பும் கொண்டவன். நேமிநாதனுக்கு உற்ற தோழன்.  ஜெரஸோப்பாவின் வருங்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் சிலரில் வகுளன் என்ற வகுளாபரணனும் ஒருவன். 

இன்றைக்கு கூட்டத்தில் நேமிநாதனும் வந்திருந்தால் பேச வேண்டிய, பேசித் தீர்க்க வேண்டிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம். தீர்வு காணாவிட்டாலும் அதற்கான தேடலில் சுவடு வைக்கலாம். ஆனால் என்ன செய்ய? நேமிநாதன் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறான். 

வகுளனுக்கு இது சம்பந்தமாக சென்னா மகாராணி மேல் கோபம் ஏற்பட்டது உண்மைதான். அம்மா பிள்ளை தகராறு என்றால் அவர்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டியதுதானே? கிட்டத்தட்ட அற்ப விஷயம். மழைநாள் பிற்பகலில் கடலைமாவு பட்சணத்தை நொறுக்குத்தீனியாக மென்றபடி ஜன்னலுக்கும் பாதி திறந்த கதவுக்கும் அந்தப் பக்கம் மழை சீராகப் பெய்வதைப் பார்த்தபடி பேசிக் கொண்டே இருந்தால் அடுத்த ஈடு கடலைமாவு பலகாரம் வருவதற்குள் பேசி முடித்துத் தீர்வு கண்டு, உற்சாகமாக சேர்ந்து சாப்பிடலாம். மழை நின்று போனாலும் சரிதான்.

நல்ல வேளை. மிர்ஜான் கோட்டைக்குள் வரத்தான் தடை விதித்திருக்கிறார் மகாராணி. அதுவும் நேமிநாதனுக்கு மட்டும் தான். அவன் மனைவி ரஞ்சனா தேவி இங்கே எப்போதும் போல் இருக்கலாம். நேமிநாதன் ஹொன்னாவரிலும் ஜெரஸுப்பாவிலும் போக வர இருக்கிறான். அங்கே நடமாட, வசிக்க எந்தத் தடையும் இல்லை. இப்படி ஒரு தடை ஏற்படுத்துவதற்கு எதுவும் இல்லாமலேயே இருக்கலாம். அரச குடும்பம். விமர்சனம் செய்யக்கூடாது.

வளர்ப்பு மகனைத் தன் வாஞ்சையில் இருந்தும் கரிசனத்தில் இருந்தும் விலக்கி வைத்திருப்பதாகக் காட்ட மிளகு ராணிக்கு திடீரென்று என்ன அவசியம் ஏற்பட்டுவிட்டது என்று வகுளனுக்குப் புரியவில்லை. அல்லது இருவரும் பேசி வைத்துக்கொண்டு செய்கிறார்களா? அதுவும் தெரியவில்லை. யாருக்கு இதைக் காட்ட வேண்டும்?

சென்னா ராணி இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேரவைக் கூட்டத்தில் நேமிநாதனும் பங்கெடுக்க வசதியாக, இன்று மட்டும் கோட்டை நுழைவுத் தடையை அமலாக்காமல் வைத்திருக்கலாம். அல்லது இந்தப் பேரவைக் கூட்டத்தை கோட்டைக்கு வெளியே நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம். அவன் வரவேண்டும் என்று ராணி விரும்பியிருந்தால் இதைச் செய்திருக்கலாம். அப்படியே ஏற்பாடு செய்தாலும் நேமிநாதன் வர வேண்டுமே. ரெண்டு ஆப்பை ரெண்டும் கழண்ட ஆப்பை என்று வகுளனின் அப்பனாத்தாள், என்றால் பாட்ட,  தமிழில் இந்தப் பழமொழி சொல்லி வளர்த்தது வகுளனுக்கு நினைவு வரவே சிரித்துக்கொண்டான்.

குதிரை லாயத்தில் கூட்டம் நடத்தலாம் என்றால் கோட்டைக்கு வெளியே நடத்த என்ன சிரமம்? என்ன மாதிரி பேரிடரோ சின்ன இடரோ இதில் உண்டு? ஒன்றும் இல்லை. ஜன்மப் பகைவர்களா அம்மாவும் பிள்ளையும்? 

சென்னா மகாராணி நேமிநாதனை பகிரங்கமாகக் கண்டித்துத்தானாக வேண்டும் என்றால் அது அவன் அரசாட்சி கேட்பதற்காக இருக்காது. வீட்டில் கிளிபோல் ரஞ்சனாதேவி என்ற புத்திசாலியும் அடக்கமும் அழகும் கொண்ட மனைவியை வைத்துக்கொண்டு மிட்டாய் அங்காடிக்காரி மேல் மையல் கொண்டு அவளே எல்லாம் என்று பிடவை விலகிய தொப்புள் தரிசித்து, சதா பிடவைத் தலைப்பு வாசம் பிடித்துக்கொண்டு போகிறானே அந்த அநியாயத்துக்கு வேண்டுமானால் விசாரிக்கலாம். 

அவனை விட ஏழெட்டு வயது பெரியவளாம் மிட்டாய்க்காரி. அவளோடு ரமித்தால் ரோகம் எல்லாம் எங்கே எங்கே என்று ஓடி வந்து சேராதா? வகுளன் தலையைக் குலுக்கினான்.   வராது போலிருக்கிறது. வரும் என்றால் இந்நேரம் பெண்சீக்கு முகத்திலும் உடம்பிலும் தூலமாகத் தெரிய, மருந்து தின்றுகொண்டிருப்பானே நேமிநாதன். யோசித்தபடி வகுளன் அமர்ந்திருக்க,  சாரட் குதிரை லாயத்து வாசலில் நின்றது.

ஏழு பிரதானிகள், வகுளனையும் சேர்த்து மூன்று உப பிரதானிகள், ஒரு தளவாய். உளவுத்துறை சார்பில் பைத்யநாத் வைத்தியர். சென்னபைரதேவி அரசி, பேரவை முழுவதும் கூடியிருக்கிறது. வகுளன் அரசி பக்கத்தில் வெற்றிடமாக இருந்த நாற்காலியைப் பார்த்தான். நேமிநாதனுடையது அது. அவன் இல்லாமல் என்ன முடிவுகள் எடுக்கப்படும்? எடுத்தாலும் நடைமுறைப்படுத்தப் படுமா?

சென்னபைரதேவி உள்ளே வரும்போது எப்போதும் புன்னகையும், கையசைத்து ஒவ்வொருவரையும் வணங்குவதும், பதிலுக்கு வணக்கமுமாக இருக்கும். பேரவை உறுப்பினர்கள் ஜெயவிஜயீபவ ஜபித்து மிளகுராணி வாழ்க என சேர்ந்து முழங்குவதும் நடைபெறும். இன்று எந்த முழக்கமும் இன்றி பேரவை ஒட்டுமொத்தமாக எழுந்து நின்றனர். ராணி அமர்ந்தபிறகு அவர்கள் சத்தமின்றி இருக்கைகளில் அமர்ந்து ராணியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். சென்னா உரையாடலைத் தொடங்கி வைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் தெரிந்தது.  

சென்னா பன்னீரும் சிறிது அத்தரும் கொண்டு ஈரமாக்கிய பருத்தித் துண்டை மடியில் வைத்துக்கொண்டு ஒரு வினாடி அதை விரித்து உயர்த்தி முகம் புதைத்துக் கொண்டாள். 

குதிரை லாயம் முழுக்க கொள்ளு வாடையும் பன்னீர் வாடையும் சேர்ந்து மணத்தது. பின்னால் இருந்து கோட்டை உத்தியோகஸ்தர் ஒருவர் ஆடம்பரமில்லாத நாற்காலியைக் கொண்டு வந்து போட, சென்னா மகாராணி அமர்ந்தாள்.

“நான் எப்போதும் இந்த கூட்டத்தை நின்று கொண்டு தான் விளித்துப் பேசுவேன். இப்போது அமர்ந்திருந்து பேச உங்கள் அனுமதி கேட்கிறேன். கிடந்து பேசும் நாள் வந்தால் நான். 

பாதி சொல்லில் நிறுத்தி கூட்டத்தைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்தாள் மகாராணி. வகுளாபரணனுக்கு இந்த நாடகத்தன்மை பிடிக்கவில்லை தான். வெளியே சொல்வது மரியாதை இல்லையென்று சும்மா இருந்தான் அவன்.

பேராயம் அமைதியாக நின்றது. நஞ்சுண்டையா பிரதானி இருகையும் தலைக்கு மேல் கூப்பி அகவும் குரலில் சொன்னார் – அப்படி விதிக்கப்பட்டிருந்தால் மகாராணிக்கான விதிப்பை என் கணக்கில் சேர்த்துக் கொண்டு அவர்களை நூறாண்டு செயலோடு இருக்க மல்லிகார்ஜுன சுவாமியைப் பிரார்த்திக்கிறேன். ஜெயவிஜயீ பவ. மிளகுராணி வாழ்க. 

இருமலுக்கு இடையே குரல் உயர்த்தினார் நஞ்சுண்டையா. மற்ற பேரவையினரும் கூடவே முழக்கினார்கள். சென்னா முகத்தில் சற்றே ஓடி மறைந்தது புன்னகை ஒன்று. முழு நாடகீயமாக இது நடக்கப் போகிறதா?

நஞ்சுண்டரே உமக்குப் பேராசை என்று சொல்வேன். நூறாண்டு இருக்க என்னை ஏன் சபித்தீர்? அறுபத்தேழு நடந்துகொண்டிருக்கிறது. சுமையோடு பயணம் போகிற வழிப்போக்கனாக என்னை உணர்கிறேன். 

நான் பயணி. வீடில்லை தங்குமிடம் இல்லை. நகர்ந்து போய்க் கொண்டிருக்க விதிக்கப்பட்ட பயணி நான் என்று தில்லி முகல் ஏ ஆஸம் அக்பர் சக்ரவர்த்தியின் தர்பாரில் அரங்கேறிப் புகழ்பெற்று இந்துஸ்தானம் எங்கும் பரவிய  மெல்லிசை கானத்தின் வரிகளைச் சொன்னாள் ராணி.

பறவைகள் சரணாலயத்தில்/மூத்த புறாவுக்கு முதல் இடம்/களைப்பு நீங்க இறகு கொண்டு/காலமெல்லாம் விசிறுவோம்/சற்றே ஓய்வெடுக்கட்டும்

வகுளாபரணன் குரல் எடுத்துப் பாட்டாகச் சொன்னான். கவிதை அரங்கேறும்போது ஒன்றிரண்டு முறை அதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடமிருந்து வாஹ் வாஹ் என்று பாராட்டு எழுவது வாடிக்கை. வகுளாபரணன் கவிதைக்கு மௌனத்தை பரிசாக எல்லாரும் அளித்தார்கள். ஒரு நிமிடம் மௌனத்துக்குப் பிறகு ஒற்றைக் குரல் வாஹ் வாஹ் என்று பாராட்டி மெல்ல எழுந்தது. சென்னபைரதேவி மகாராணி குரல்.

அம்மா இந்த அவையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது. எனக்குத் தோன்றுவது நீங்கள் சற்று ஓய்வெடுக்க வேண்டும். பயணம் கொஞ்சம் எளிதாக, சிரமமின்றி அமைய சுமையைப் பகுதியாவது கைமாற்ற வேண்டும்.

மாட்டுவண்டிக் காளையை அசைத்துக் கிளப்பும் தார்க்குச்சி மேலே விழுந்த புலி போல் கண்கள் ஜ்வலிக்க சட்டென்று பார்வையை முழுக்க வகுளாபரணன் மேல் பதித்து என்ன சொல்கிறாய் என்று கேட்பதாக உற்று நோக்கி,  வீறுகொண்டு நாற்காலியில் வீற்றிருந்தாள் சென்ன பைரதேவி. 

அம்மா மீண்டும் சொல்கிறேன், நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதைப் பற்றிச் சர்ச்சை செய்யத்தான் இந்தப் பேராயம் கூட்டப்பட்டிருக்கிறது. மற்ற பேராயக் கூட்டங்கள் போல் தாங்கள் எங்களை வரச்சொல்லி கூட்டவில்லை. நாங்கள் உங்களை ஒரு தாயைக் குழந்தைகள் கூப்பிடுவதுபோல் உரிமையோடு கூப்பிட்டிருக்கிறோம்.  உங்கள் நலமும், ஜெரஸோப்பா மாநில நலமும் நம் எல்லோருக்கும் பிரதானமான விஷயங்கள். அவற்றைப் பற்றி ஏனோதானோ என்று இருக்க முடியாது என்பதை யாரும் மறுக்க இயலாது.

வகுளன் ஒரு வினாடி நிறுத்தி விட்டு சென்னாவைப் பார்த்தான். மேலே போ என்கிறது போல் கண்ணால் சைகை செய்தாள் அவள். தலையசைத்து வணங்கி அவன் மேலே பேசலானான் – இந்தக் கூட்டம் சிக்கலான, இடர் மிகுந்த ஒரு காலத்தில் நடக்கிற ஒன்று. போன வாரம் மகாராணியின் உயிருக்கே ஆபத்து நேர இருந்தது. யாரால் அனுப்பப்பட்டவள் என்றே தெரியாத ஒரு பெண் குறுவாளால் மகாராணியைக் கொல்ல முற்பட்டாள். விசுவாசமான ஊழியை தாதி மிங்கு தன்னுயிர் கொடுத்து அரசியார் உயிர் காப்பாற்றினாள். 

அவன் சொல்லும்போது எல்லோர் பார்வையும் வைத்தியர் மேல். தலை குனிந்து வெறித்துப் பார்த்துக் கொண்டு அங்கே நின்றதோ வைத்தியரின் சோகையான நிழல்.

”அரசுத் தரப்பில் பேரிழப்பு என்பதோடு எனக்கு தனிப்பட்ட முறையில் தாங்கிக்கொள்ள முடியாத பெரும் இழப்பு மிங்குவின் இறப்பு”

சென்னபைரதேவி சொல்லும்போதே குரல் நெருடியது. வைத்தியர் நிமிர்ந்து பார்த்தார். நடுங்கும் குரலில் சொன்னார் அவர் –

”அந்த விசுவாசம் மிக்க ஊழியை இறந்திருக்க வேண்டாம். அந்தக் கலந்துரையாடல் நடத்த வேண்டாம் என்று இங்கே இருக்கும் பலரும் சொன்னதைக் கேட்டிருந்தால். மிங்கு இன்னும் இருந்திருப்பாள். அப்படி நடக்க வேணும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனில் அப்படி நடக்கலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும், முக்கியமாக மகாராணிக்கு மனதில் எழுந்திருக்கலாம். அந்தக் குரல் கேட்டு நடந்திருக்கலாம். வாய்க்கவில்லை”. 

வைத்தியர் மேலே பேச முடியாமல் வாயைத் துண்டால் பொத்திக்கொண்டு குலுங்கி விம்மினார். சென்னபைரதேவியின் அணுக்கத் தொண்டராகவும் அவளுடைய உடல்நலம் பற்றி உரிமையோடு கட்டுப்பாடு விதித்து ராணியிடமே கண்டிப்பாகப் பேசக்கூடியவருமான பைத்யநாத் வைத்தியர் முதல்தடவை ராணியை விமர்சனம் செய்த பொழுது அது. 

தலையை அசைத்தபடி வைத்தியரைப் பார்த்த ராணியின் பார்வையில் நீயுமா வைத்தியா என்ற தீனமான விசாரிப்பு அப்பட்டமாக எழுதியிருந்தது. 

வைத்தியர் மகாராணியின் கண்களை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தார். அவரால் கோபப்பட முடியவில்லை. சென்னா நிறுத்தாமல் ஒரு நிமிடம் இருமிவிட்டு கையில் வைத்திருந்த துணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். வைத்தியர் கண்கள் கசியத் தொடங்கின. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவர் வகுளன் அருகே நின்றார். தொடர்ந்து கனைக்கிற குதிரைகளின் சத்தம் பூசி வந்த ராத்திரி இன்னும் நீண்டது.

அம்மா, நேமிநாதர் சார்பில் நான் இந்தக் கூட்டத்தில் பங்கு பெறுகிறேன்.

வகுளன் அறிவித்ததைத் தலையைச் சற்றே சாய்த்துக் கேட்டபடி இருந்தாள் சென்னா. தக்க பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று உள்ளங்கையில் குவிந்த விழிகள் வெளிப்படுத்தின.

பிரதிநிதியை அனுப்பி அவர் வராமல் போனதற்கு என்ன காரணமோ? 

வகுளனை கூர்மையாகத் துளைத்தெடுக்கும் சற்றே சத்தம் ஓங்கிய குரலில் கேட்டாள் சென்னா. வகுளன் இதை எதிர்பார்த்தவனாக சாந்தமாகச் சொன்னான் – வரமுடியாத சூழ்நிலை. வந்தால் உயிருக்கு அபாயம் நேரலாம் என்று நினைக்கிறோம்.

சென்னா உடனே எழுந்து நின்றாள். இரண்டு கையும் விரித்துக் காட்டி வகுளனிடம் அதிகாரம் மிளிரும் குரலில் சொன்னாள் –

இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்திருக்கும் நீங்கள் என்னைப் பற்றியும் அறிந்தவர் இல்லை.  நேர்மையான அரசியலில் நம்பிக்கை  வைத்தவரும் இல்லை என்று எனக்குத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. இத்தனை வருடம் இந்த அவையில் இருந்தும், நான் மதிப்பு வைக்கும் இளம் நண்பராக இருந்தும் சென்னாதேவி என்ற பிற உயிர்க்குத் துன்பம் நினைக்காத சமணத்தியை நீங்கள் அறியாமல் போனது என் குற்றம் தான். வாள் வீசத் தெரிந்த சமணத்தி நான். எங்கு வாளோங்குவது, எங்கே நாவோங்குவது என்று இந்த அறுபத்தேழு வயதில் நன்றாகவே உணர்ந்தவள். அதுவும் என் பிரியமான மகன் மேல், என்னோடு பேச வந்தவன் மேல், என் இன்னொரு மகனான உங்கள் மேல் ஆயுதம் வீசிக் கொலைப்படுத்த என் மதமும் சொல்லவில்லை நான் அறிந்த ராஜாங்க நெறிமுறையும் கூறவில்லை, அடிப்படை மனிதாபிமானமும் கற்றுத்தரவில்லை. நேமிநாதரை வரச்சொல்லுங்கள். அவருடைய உடலுக்கும் உயிருக்கும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இன்னும் சந்தேகம் என்றால் வாளும் துப்பாக்கியும் ஏந்திய இரு நபர் காவலர் கூட்டத்தோடு வரட்டும். நான் உங்களை, நேமிநாதரை நம்புகிறேன். என் உடலும் உயிரும் உங்களிடம் எந்த இடருமின்றிப் பாதுகாப்பாக இருக்கும் என்றறிவேன்.

வகுளன் வானை நோக்கி இரு கரமும் உயர்த்திக் கூறினான் – அம்மா உங்கள் மனதை அறியாமல் நான் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். நான் பேசியது ஒரு பார்வைக் கோணத்தை இங்கே தரவே. குழந்தைகள் மேல் சினம் கொள்ளும் தாயை நாங்கள் அறிவோம். சிசுவதை செய்யும், அதுவும் தம் மக்களையே வதம் செய்யும் தாயை நாங்கள் பார்த்ததில்லை. 

“என்றால், நேமிநாதனிடம் சொல்லுங்கள்- அவர் வந்து கலந்து கொள்ளாமல் இந்த பேராயம் பாதி கிழித்த பட்டுத்துணியாகத்தான் தென்படுகிறதென்று. இனிவரும் கூட்டத்தில், அப்படி ஒன்று இருந்தால், அவர் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நான் அதற்குள் இறந்துவிட மாட்டேன் என்று நம்புகிறேன்”.

மிளகுராணி வாழ்க என்று அவை முழுக்க முழங்கியது. அம்மா நீங்கள் ஒரு நூறும் இன்னொரு நூறும் காண்பீர்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் போதும். அரசாட்சி வேலைப் பளுவைக் குறைத்துக் கொள்ளுங்கள் என வேண்டிக் கேட்கிறேன். வகுளன் அன்பு தென்படும் குரலில் சொன்னான்.

விழித்துக் கொண்டே உறங்கி, பணி புரிந்துகொண்டே  ஓய்வெடுத்துப் பழகியவள் நான். என் உடல்நலத்தில் உங்கள் உண்மையான அக்கறைக்கு நான் நன்றி சொல்கிறேன். வெளிப்படையாக ஓய்வு எடுக்க தருணம் தோன்றும்போது நானும் கிடந்து எழுவேன். 

சென்னா சொல்லிக்கொண்டு போக, வைத்தியர் இடை மறித்தார். நான் ஜெருஸூப்பாவின் அடிப்படைக் குடிமகனாக, அரசு அதிகாரியாக, அரசி அவர்களின் நெடுங்காலம் நலம் பேணும் வைத்தியனாகக் கண்டதை ஓரளவாவது நாட்டு நலன் முன்வைத்து இங்கே இந்த பேராயம் அவையில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். 

வேண்டாம் என்று கை உயர்த்தினாள் சென்னபைரதேவி. வைத்தியர் கூட்டத்தில் நடுவில் நடந்து போய் நின்றார். மகாராணி வருத்தம் தொனிக்கும் குரலில் பிரலாபித்தாள் – சொன்னால் கேட்காத பிள்ளைகள் நீங்கள் என்று இன்னொரு முறை நிரூபணமாகிறது; நடக்கட்டும் என்றாள்.

வைத்தியர் குரலைத் தாழ்த்திப் பேசத் தொடங்கினார் -இது அரசியாருக்கு அந்தரங்கமானது என்றாலும், மருத்துவத் தொழில் அந்தரங்கப் பகிர்வு தவிர்த்தல் நெறிமுறையோடு ஒத்து சேராமல் போனாலும், தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதால் இந்த அவையில் பகிர வேண்டிப் போனது. அரசியாரின் ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருக்கிறது. மற்றும் வயிற்று நோய் அவரைப் படாத பாடு படுத்துகிறது. அவருக்கு உடனே தீர்க்கமான ஓய்வு கிட்டாவிட்டால் நாம் நம் அன்புக்குரிய மகாராணியை. சரியான வார்த்தை தேடித் தோற்று பாதியில் நிறுத்தினார்.

வகுளாபரணன் வணங்கிச் சொன்னான் – அப்படி இருக்க ஓய்வு எடுக்க மாட்டேன் என்று ஏன் இந்தப் பிடிவாதம்? 

இதுவரை வாய் திறக்காமல் இருந்த நஞ்சுண்டய்யா பிரதானி மகாராணியை வணங்கிச் சொன்னார் – கொஞ்சம்போல் களைத்து, மற்றபடி  சுறுசுறுப்பாக ஓடியாடுகிறவரை உடனே படுத்து நித்திரை போகச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறது போல் இருக்கிறது வைத்தியரும் வகுளரும் செய்வது. மகாராணி பதவி துறக்க வேண்டும் என்று நீங்கள் வேண்டுகிறீர்கள். சுற்றி வளைத்துப் பேசுவது இதுதான். இல்லை என்று நேமிநாதரோ அவருடைய, எல்லாம் தெரிந்த  பிரதிநிதியாக வேடமிட்டு வந்த நண்பர் வகுளரோ சொல்லட்டும் பார்ப்போம். உங்கள் பகல்கனவு ஒருபோதும் நிறைவேறாது. நீங்கள் அரசாளத் தொடங்கினால். அரசவைக் கூட்டம் மிட்டாய்க்கடையில் தான் நடக்கும். நேமிநாதர் ஆள மாட்டார். வேறு யாரோ பூமாலை கைக்கொண்ட குரங்காக ஜெர்ஸூப்பாவின் ஆட்சியை நிர்மூலமாக்கி கிடைத்தவரை லாபம் என்று சுருட்டவும் செய்வார்கள். உங்கள் கோரிக்கைக்கு  அரசியார் செவிசாய்க்க வேண்டாமென்று கோருகிறேன்.

சந்திரப்ரபு பிரதானி  இதை ஆமோதிக்கிறேன் என்றார். வீர சேகர தளவாய் நானும் ஆதரிக்கிறேன், விவாதிக்க வேண்டுமென்றால் அதற்கும் தயார் என்கிறார். இன்னும் இரு பிரதானிகள் பேசி முடிவு காணுவோம் என்கிறார்கள். இங்கே வேறே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என நினைக்கிறீர்கள் என்கிறான் வகுளாபரணன்.

இவர்கள் கோரிக்கைதான் என்ன? பின்வரிசை பிரதானி ஒருவர், வேங்கடபட்டர் என்ற பெயர், குரல் கீச்சிட சொல்கிறார். மற்ற குரல்கள் தேய்ந்து மறைய, வகுளர் என்ன சொல்கிறார் கேட்போம் என்கிறாள் மகாராணி. 

அப்படியானால், கேட்க நேரமும் மனமும் இருந்தால் அன்போடு ராணியிடம் வைக்கும் கோரிக்கை 

வகுளன் ஆரம்பித்து ஒரு நொடி தாமதித்துத் தொடர்கிறான் – அரசாளும் பூமியில் ஒரு பகுதி நேமிநாதருக்குக் கைமாற்ற வேண்டும். ஜெருஸூப்பாவும், கோகர்ணமும் அரசியார் தொடர்ந்து ஆட்சி செய்ய, அவருக்கு உட்பட்டு ஹொன்னாவர் நேமிநாதரின் கவனிப்புக்கு வரும். மிர்ஜான் கோட்டை இருவரின் கூட்டாட்சியில் வரும்.

நிச்சயமாக முடியாது. கருங்கல் கருங்கல்லாக நான் பார்த்துப் பார்த்துக் கட்டியது மிர்ஜான் கோட்டை. ஒவ்வொரு சுவருக்கும் ஒவ்வொரு கதவுக்கும் கோட்டை புல்தரைக்கும் என்னைத் தெரியும். எங்கே பயணம் போனாலும் ராத்தங்க கூடு நோக்கிப் போகும் பறவை போல் மிர்ஜான் கோட்டைக்கு ஓடி வருகிறவள் நான். மிர்ஜானை கூட்டாட்சி செய்ய என்ன அவசியம் இப்போது? ஹொன்னாவரும் ஜெருஸூப்பாவும் மாநிலத்தின் முக்கிய துறைமுகங்கள். அதைத் துறந்து நான் என்ன ஆட்சி செய்ய வேண்டியிருக்கு?

சரி இப்படி வைத்துக்கொள்ளலாமா? வகுளன் நைச்சியமாகக் கூறினான். ஜெருஸொப்பாவும் கோகர்ணமும் நேமிநாதரின் கண்காணிப்புக்கும் நிர்வாகத்துக்கும் வரட்டும். மற்ற பிரதேசங்கள் ராணியம்மாள் ஆட்சியில் தொடரட்டும். கோட்டை கூட்டாட்சியில் வரட்டும். 

நிச்சயமாக உடன்பட முடியாது. நீங்கள் போகலாம். அவை கலைகிறது. 

ராணி சென்னபைரதேவி உறுதியாகக் கூறத் தொடங்கி குரல் நடுங்க முடித்தாள்.

கோரிக்கையைச் சொன்ன மாத்திரத்திலேயே இத்தனை படபடப்பும் அவசரமுமாக எதுவும் தர முடியாது என்று மறுப்பது வேடிக்கையாக உள்ளது. அதுவும் முழுக் கோரிக்கையையும் என்ன என்று கேட்கப் பொறுமை இன்றி

வகுளன் சிரித்தபடி சொன்னான். 

வகுளரே வேறு என்ன கேட்கிறீர் கேளுங்கள் நியாயமானது என்றால் ஆவன செய்ய்யப்படும் என்றார் நஞ்சுண்டய்யா பிரதானி. 

பட்டர் பிரதானி முன்னால் வந்து கிரீச்சிட்டார் – வகுளர் கிருஷ்ண பரமாத்மா இல்லை. நேமிநாதன் பாண்டவர் இல்லை. 

அவர் முடிப்பதற்குள் அடிபட்ட வேங்கையாக சென்னபைரதேவி சீறினாள். 

ஆம், நான் தான் துரியோதனன். கொடுமைக்கார துச்சாதனன். நூற்றுவரில் இதரரும் நான் தான். போகட்டும். வேறு என்ன கேட்கிறீர்?

தொடங்கி நடந்து கொண்டிருக்கும், தொடங்க நாள் குறிக்கப்பட்ட மத வழிபாட்டு இடங்களான பசதிகள், கோவில்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு இன்னும் செலவு பிடிக்கும் எவ்வளவு வேலை பாக்கி உண்டு என்று கணக்குப் பார்த்து நிதிநிலைமையை கருத்தில் கொண்டு ஒன்று ரத்து செய்யப்பட வேண்டும். 

அரசி உதடு துடிக்க அவனைப் பார்க்க, வகுளன் தொடர்ந்தான் – அல்லது ஒரே வருடத்தில் கட்டி முடிப்பதற்குப் பதிலாக ஏழெட்டு வருடத்தில் கட்டம் கட்டமாக நிறைவேற பகுதி பகுதியாக நிதி அளிக்கப்பட வேண்டும்.

முடியாது என்று தலை குலுக்கினாள் சென்னா. கையில் பிடித்த ரோஜா அத்தர் நனைத்த துணியை முகத்தில் அழுத்தமாக வைத்துப் பிடித்தபடி இரண்டு நிமிடம் இருந்தாள். மெல்லத் துணியைக் கையால் முகத்தில் ஒற்றிக் கொண்டு வகுளனை இகழ்ச்சி தொனிக்கப் பார்த்தாள். அவன் தொடர்ந்தான். 

மேலும் போர்த்துகல்லோடு மட்டுமின்றி மற்ற ஐரோப்பிய நாடுகளோடும் மிளகு கொள்முதல் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும். 

எப்படி கையெழுத்து இடப் போகிறீர் வகுளரே? நான் போட்டால் தான் கையெழுத்து. இல்லை என்றால் என் விரலை வெட்டி வைத்துத்தான் துணியில் தொக்கிப் பிடித்து அழுத்தி கட்டைவிரல் ரேகை வைக்க வேண்டும். செய்தாலும் செய்வீர்.

வன்மையாகக் கண்டிக்கிறேன். மகாராணியார் இதைக் கையாளும் விதம் தவறானது. உப பிரதானி செயலுக்கு உள்நோக்கம் கற்பித்து அவரை அற்பமானவராகப் பார்க்கிறார். சரியில்லை அது என்கிறார் இன்னொரு பிரதானி.

வாயைப் பொத்திக்கிட்டு போடா என்று இதுவரை இப்படி பேசி யாரும் பார்த்திருக்காத தொனியும் ஊடாடும் சொற்கடுமையுமாக நஞ்சுண்டய்யா பிரதானி ஏசுகிறார். 

வேறெங்கே யுத்தம் வருகிறதோ என்னமோ, அங்கே வாக்கு யுத்தம். குதிரை லாயத்துக் குதிரைகள் ஆர்வமின்றிப் பார்த்திருக்கும்.

இன்னும் ஒருவாரம் அவகாசம் தருகிறோம். ராணி சென்னபைரதேவி உடன்பட்டு ஒத்துழைக்காவிட்டால் யுத்தம் துவங்கும். ஆட்சி மாறும்.

வகுளாபரணன் ராணிக்கு முதுகு காட்டி நடக்க, சந்த்ரப்பிரபு பிரதானி அவன் கன்னத்தில் சுரீர் என்று அடிக்கிறார். நாயும் பன்றியுமாக அந்த அரசவை அறிஞர்கள் உரத்த குரல் வசவுகளில் மறு அடையாளம் காணப்படுகிறார்கள். 

நஞ்சுண்டய்யாவின் குல்லாவை ஒரு உப பிரதானி தரைக்குத் தட்டி விட்டு அதன்மேல் உமிழ்கிறார். குதிரைகள் ஏதோ கலவரம் என்று உணர்ந்து ஒருசேர கனைக்கின்றன. குதிரை லாய தீவட்டிகள் பாதிக்கு மேல் அணைந்துவிட்டன.

வீரு தளவாய் இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்து வகுளாபரணன் முதுகுப்பக்கம் அதைப் பாய்ச்ச ஓடுகிறார்.  திரும்பிப் பார்த்த வகுளன் தப்பி ஓடுகிறான். தரையில் விழுந்து எழுகிறான். வீரு தளவாய் காலால் அவனை  உதைக்கிறார். 

வீரு, கத்தியை மடக்கு. அவரைப் போகவிடு. நேமிநாதன் ஆப்பிரிக்க மந்திரவாதி மூலமாக எனக்கு சூனியம் வைக்கப் பார்த்தான். படுக்கையறையிலே என் தலைமுடி பிடுங்கி எடுக்க ராத்திரியிலே ஆளனுப்பினான். ஒற்றாக வந்த செய்தி இது. விழிப்பாக இருந்து ரட்சைப்பட்டேன். நேமிநாதனும் இந்த வகுளாபரணன் போன்ற அவன் சிநேகிதர்களும் என்மேல் கத்தி செலுத்தி என்னை முடிக்கத் திட்டமிட்டு, குறி தவறி என் தாதி மிங்குவைக் கொன்றார்கள். இன்னொரு சாவு விழவேண்டாம். 

எழுந்து நின்று சொல்கிறாள் சென்னபைரதேவி. சொல்லியபடி நெஞ்சைப் பிடித்தபடி நாற்காலியில் மறுபடி தடுமாறி உட்கார்கிறாள். 

அம்மா என்ன பண்ணுது என்றபடி வைத்தியர் அவள் பக்கம் ஓடி வருகிறார். அவர் குனிந்து அவள் கையைப் பற்றி நாடி பார்க்கும்முன் கையை உதறியபடி சென்னா அங்கிருந்து அகன்று போயிருந்தாள்.

(தொடரும்)

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு அத்தியாயம் எழுபது மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.