- ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி…
- ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி
- ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி
- ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி
Economic Limits 47 (2023) 1081-1086.
4. முடிவுரை
உலகெங்கும் மணல் உள்பட பல கனிமங்களின் அகழ்வு வேகம் எடுத்து வருகிறது. இது நெடுங்காலம் தொடர முடியாது. மணலுக்கு நாம் கடைப்பிடிக்கும் சிக்கனம் பிற கனிமங்களுக்கும் உதவும்.
மிக அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே மணலை எடுப்பதும், இடிக்கப்பட்ட கட்டடங்களின் பகுதிகளைத் திரும்ப உபயோகிப்பதும் குறுகிய காலத் தீர்வுகள்.
தென்-பூமியின் வறுமையைக் குறைக்க அதன் பொருளாதார வளர்ச்சியை இன்னும் பல காலம் நீட்டிக்க வேண்டும் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது நியாயமாகத் தோன்றினாலும் ,நீண்டகால நோக்கில் அது தவறான வழி. கடந்த நாற்பது ஆண்டுகளில் தீவிர உலகமயமாதல் உருவாக்கிய பொருளாதார வளர்ச்சியின் பயன் தென்-பூமியின் உயர்மட்டத்திற்கும் வட-பூமியின் கார்பொரேஷன்களுக்கும் போனது போல எதிர்காலத்திலும் அது தொடரும். பொருளாதாரப் பெருக்கத்தின் பெரும்பங்கு மேல்-மட்டத்தினரின் சௌகரிய உணவு, ஆடம்பரம், பொழுதுபோக்கு, சூதாட்டம், சோம்பேறித்தனம், தேவையற்ற மருந்துகள் – இவற்றை வளர்ப்பதற்காக. அவற்றைக் குறைப்பதால் அவற்றைச் சார்ந்த வேலைகள் மறைந்து நகர வளர்ச்சி நின்று பெரும்பாலான மக்கள் கிராமங்களுக்கும் சிற்றூர்களுக்கும் நகர நேரிடும்.
அங்கே களிமண், மூங்கில், கருங்கல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தும் மரபுவழிக் கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை வேலை இழந்த மனிதர்களின் உழைப்பில் செயல்படுத்தும்போது மணலின் தேவை வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கலாம்.
கடப்பாடு: ஆராய்ச்சியில் வழிகாட்டிய பேராசிரியர் எஸ். மணிமொழிக்கும், நிதியுதவிய ருக்மணி க்ருஷ்ணா டெக்னிகல் காலேஜ் நிர்வாகத்திற்கும் நன்றி.

சலசலக்கும் ஆற்றுக்கு மேல் குறுகலான தொங்கும் மூங்கில் பாலம். அதில் முதுகுப்பையுடன் தனியாக சைக்கிள் ஓட்டுகிறாள். மேகம் மூடிய மங்கலான வெளிச்சம். மூங்கில் கழிகளின் இடைவெளிகள் அகல ஆரம்பித்து வண்டி தூக்கித்தூக்கி போடுகிறது. இடைவெளியில் அதன் சக்கரம் சிக்கிக்கொண்டால்? அதை யோசிப்பதற்குள் பனி அடர்ந்து பார்வையை மூடுகிறது. தடால்! சைக்கிள் பாலத்தில் இருந்து நழுவி…
கைபட்டு தண்ணீர் ஜாடி கீழே விழந்த சத்தத்தில் மணிமொழி விழித்துக்கொண்டாள்.
என்ன அபத்தக் கனவு! தலையை உதறிவிட்டு எழுந்தாள்.
சமையலறைக்கு வந்து வெந்நீர் கொதிக்க வைத்தாள். எங்கோ விளைவித்து, வேறெங்கோ வறுத்து அரைத்த பொடியில் காப்பி தயாரிப்பது அவளுக்குப் பிடித்தமானது இல்லை என்றாலும் பல வருஷப் பழக்கம். பயணக்களைப்பைப் போக்க அன்று அது நிச்சயம் அவசியம்.
வீட்டில் அவள் மட்டும்.
சுனிலின் எச்சரிக்கை உண்மையாகப் போனது.
‘இப்போ நான். இனிமேல யாருமே உன்னோட பாட்டி காலத்துக்குப் போக ஆசைப்படமாட்டாங்க.’
அவள் வாழ்வில் குறுக்கிட்ட ஆண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அலைபேசியை மாற்றி எதிர்காலத்தில் இன்னும் அதிகமான சௌகரியங்களை எதிர்பார்ப்பவர்கள். தொழில் வாழ்க்கையில் அவள் அறிந்தவர்களுக்கு சஸ்டெய்னப்ல் என்ற வார்த்தையின் காலநீளம் சிலபல நூற்றாண்டுகள் என்பது தெரியாது.
பாட்டி காலத்தைப் பற்றிப் பேச பாட்டி இப்போது இல்லை. ஆனால், அரிசி உப்புமாவுக்கு பாட்டி எழுதிக்கொடுத்த செய்முறை இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் அவள் தாய்க்கு முதுமை வருவதற்கு முன்பே வந்த மறதி நோய். “கல்யாணத்துக்கு முன்னாடியே தேன்நிலவுக்கு சுனிலும் நீயும் பாண்டிச்சேரி போகலாம்” என்று மணிமொழியிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
“வியாதி அதிகமாறதுக்கு முன்னாடியே ஒரு இடத்தில செட்டில் பண்ணிடறது நல்லது. வாரத்துக்கு ஒரு தடவை வந்து உன்னைப் பார்க்கிறோம். கவலைப்படாதே!” என அவள் தந்தை தீர்மானித்ததால் அவரும் அம்மாவும் பல்லாவரத்தில் பாதுகாப்பான ஒரு முதியோர் இல்லத்தில்.
புதிய நாளை எதிர்கொள்ள ஊக்குவது காப்பி மட்டுமல்ல, அவளைப் போல மனிதகுலத்தின் தீவிரநிலையைப் புரிந்துகொண்டவர்களின் நட்பு; பொது வாழ்வின் தனிமைக்கு மருந்து. சிலருடன் மின்னஞ்சல் வழியாகத் தகவல் பரிமாறல். வெர்மான்ட்டில் வாழும் ஒருத்தி எழுதும் பருவங்களின் சுழற்சி பற்றிய கட்டுரைகள், மேற்கு வர்ஜினியாவில், இத்தாலியில் வீட்டைச்சுற்றிய தோட்டத்தில் கிடைக்கும் காய் பழங்களை சமைத்து மின்சாரத் தொகுப்பில் இருந்து விலகி வாழ்கிறவர்கள் – இவர்களின் இணையப் பக்கங்களை வாசித்து அவள் கருத்துக்களையும் சேர்ப்பது பொழுதுபோக்கு. அன்று அதைச் செய்தபோது,
‘லிங்க்ட்-இன்னி’ல் நீ அறிந்த இருவரின் புதிய தகவல் என மின்னஞ்சல் அவள் ஆர்வத்தைக்கிளறி அவளை அழைத்துப்போனது.
ஸெர்கி லோகினாவ் இப்போது ப்ரிஸ்பேன், ஆஸ்ட்ரேலியாவில் அமைந்திருக்கும் சஸ்டெய்னப்ல் மினரல் எக்ஸ்ட்ராக்ஷன் இன்ஸ்டிட்யுட்டில் பொறுப்பான ஆராய்ச்சியாளர். செய்தி அறிந்து மனம் நிறைந்த மகிழ்ச்சி – மானுவெலா.
எவ்வளவு சாமர்த்தியமாகக் கனிமங்களை அகழ்ந்தெடுத்தாலும் அது ஒருசில பத்தாண்டுகளுக்கு மேல் தொடராது என்று அவர்களுக்கு யார் சொல்வது? கோமி மக்களின் சார்பில் லூகிட் பெட்ரோலியம் நிறுவனத்தையும், கைகட்டி நிற்கும் அரசாங்கத்தையும் எதிர்த்துப் போரிட இனி யாரும் இல்லை. எண்ணெய் ஒழுகிப் பரவினால் மக்களே அதை எரித்து சுத்தம் செய்தாக வேண்டும்.
ஜெனிவா க்ராஜுவேட் யுனிவெர்சிடியில் மக்களாட்சித் துறையின் புதிய உதவி பேராசிரியர் மானுவெலா க்ரெஸ்போவுக்கு வாழ்த்துக்கள்! – ஸெர்கி
ஆதிக்குடிகள் பற்றிய ஆராய்ச்சி கல்விக்கூடத்தில் வெறும் ஏட்டுப்பாடமாக முடங்கப்போகிறது. யாரும் அதை நடைமுறையில் பின்பற்ற முயற்சிக்கப்போவது இல்லை. அத்துடன், அமஸானின் உபநதிகளில், மிகையாகப் பதப்படுத்தி பிளாஸ்டிக் உறையில் அடைத்த சத்தற்ற தின்பண்டங்களைப் படகுகள் எட்டாத இடங்களுக்கு எடுத்துச் சென்று பாரம்பரிய உணவு வகைகளை பின்னுக்குத்தள்ளப் போகின்றன.
ம்ம்ம்… நேரில் பழகிய இருவர் அவள் சிந்தனை உலகில் இருந்து வெளியேறி பிரதான பொருளாதாரத்தில் கலந்துவிட்டார்கள்.
மனதில் கனவு மறுபடியும் நகர்ந்தது. தனியாக மூங்கில் பாலத்தின் மேல் முதுகுப்பையுடன் சைக்கிள் ஓட்டுகிறாள். கழிகளைக் கட்டிய கயிறு இற்றுப்போகும் நிலையில். இடைவெளிகள் அகன்றுகொண்டே போகின்றன. போகும் பாதை தெரியாதபடி அடர்ந்த பனி…
பல ஆண்டுகளுக்கு முன் சோழிங்கநல்லூருக்கும் தெற்கே வாங்கிய தனி வீட்டை விற்பதற்காக ரகு, ஷோபா சென்னை வந்தார்கள். மூன்று ஆண்டுகளில் சேகரித்த விவரங்களைத் தொகுத்து நிகில் எழுதிய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை பிரசுரத்துக்கு ஏற்கப்பட்டதாக அவன் தெரிவித்தான். இரண்டையும் கொண்டாட மாலை விருந்து. பிற்பகலில் தாத்தா பீன்ஸ், கத்திரிக்காய், காலி ஃப்ளவர், உருளைக்கிழங்கு என வரிசையாக நறுக்கியபோது வில்லா என்ன விலைக்குப் போகும் என்பதைப் பற்றி அவர் துளியும் நினைக்கவில்லை.
நிகில் எழுதிய சிறு அறிக்கைகள் அங்கும் இங்குமாக அச்சில் வந்திருக்கின்றன. ஒன்று ‘டெக்கான் ஹெரால்டி’ல். ‘மணலின் எதிர்காலம்’ அவற்றுக்கு மகுடம் போல. அவன் சொல்லாவிட்டாலும் அது பிஎச்.டி.யின் முடிவைக் குறிக்கிறது என அவர் ஊகித்தார். அதற்காக அவன் சந்தோஷப்பட்டதாகத் தெரியவில்லை.
அவன் நிச்சயமின்மை அவர் எதிர்பார்த்ததுதான்.
இருபது வயதில் கல்லூரியை முடித்ததும் அவர் வேலையில் சேர்ந்தபோது பெரிய மாற்றம் நிகழவில்லை. அதே மின்சார ரயிலில் பயணம், பத்து நிமிடம் கூட. மூன்று மணிக்கு பதில் வீட்டின் படிகளில் ஏறிய போது ஐந்தரை மணி. மற்றபடி, அம்மா கட்டிக்கொடுத்த அதே மதிய சாப்பாடு – எலுமிச்சை சாதம் இல்லை புளியோதரை. கல்லூரியின் கைக்கு அடக்கமான பாட நோட்டுகளுக்குப் பதில் மேஜை முழுக்கப் பிரியும் பாங்க் லெட்ஜர். பேராசிரியரின் கெடுபிடிக்கு பதில் ஏஜென்ட்டின் அதிகாரம். கல்லூரிப் பாடங்களில் ரூபாயைக் குறிக்கும் எண்கள், வங்கியில் கைமாறிய நிஜமான ரூபாய் நோட்டுகள். கல்லூரிக்கு சம்பளம் கட்டுவதற்கு பதில் மாதம் முடிந்ததும் வருமானம்.
நிகிலுக்கு அப்படி இல்லை.
எந்த இறுக்கமான நியதியும் இல்லாத பல ஆண்டுகள். மாணவனாக மாதம் ஒருசில ஆயிரங்கள் செலுத்தியபோதும், ஆராய்ச்சியின்போது பதினைந்தாயிரம் சன்மானம் வாங்கிய போதும் பணத்தைப் பற்றிய கவலையை அவனுக்கு அவர் வைக்கவில்லை. அவனும் அவசியத்துக்கு மேல் கடனட்டையைப் பயன்படுத்தியது இல்லை. இனி பணக்கணக்குகள் அவன் பொறுப்பு. விலையேற்றத்துக்கும் விரிந்த விருப்பங்களுக்கும் அவன் பணம் தேட வேண்டும். குடும்பம், தினசரி வேலை என்கிற நியதிகளுக்கும் பழக வேண்டும்.
இருபத்தியைந்து வயதில் அவன் எதிர்காலம் முடிவாகப் போகிறது. அவர் எதிர்காலம்?
அவனைவிடச் சரியாக ஐம்பது ஆண்டுகள் அதிகம். அவர் வயதில் நண்பர்கள் சிலருக்கு முதல் பேரக்குழந்தை கின்டர்கார்டனில் நுழைந்திருக்கிறது. அவர் பேரன் கல்வியை முடிக்கப்போகிறான். நல்ல வேளை! உடலில் சக்தி இருந்தபோதே அவனை வளர்த்து ஆளாக்கிவிட்டார். இனி அவர் வாழ்க்கை தரையை நோக்கி இறங்கும் பட்டம். பெங்களூரில் கடைசிக் காலத்தை செலவழிக்க ரகுவும் ஷோபாவும் அழைக்கிறார்கள்.
நிகிலின் பிஎச்.டி.க்கு என்ன வேலை காத்திருக்கிறது? சென்னையிலேயே வேறொரு கல்லூரியில் பேராசிரியர்? சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். இந்த வீட்டை அவன் பெயருக்கு மாற்றிவிட்டால் அந்த செலவும் அது பற்றிய கவலையும் இராது.
ஆனால் மணிமொழி? ஆகா! அவளைப் பிரிந்து போக வேண்டும். அது தான் அவன் சந்தோஷத்தை மட்டுப்படுத்துகிறதா?
ஆரம்பத்தில் இருந்த மோகம் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அவள் பேச்சு வரும்போதெல்லாம் அவன் முகம் சாதாரணமாக இருக்கிறது. அதில் ஆச்சரியம் இல்லை. அவள் கடைக்கண்ணில் பார்த்து மோகிக்கும் அழகி இல்லை, நேருக்குநேர் பார்க்கும் மதிப்புக்குரிய வழிகாட்டி. கூடத்தின் ஒரு பக்கம் அவள் தன் வேலையைக் கவனிக்க இன்னொரு மூலையில் இவன் சோதனைகள் செய்திருக்கப் போகிறான்.
ஒரு பிரபலமான தாவரவியல் பேராசிரியரின் பேத்தி அவள் என்பதற்கு மேல் எந்த விவரமும் அவருக்கு அவன் சொன்னதில்லை. அவனுக்கே கூடத் தெரியாமல் இருக்கலாம்.
மாலைச் சாப்பாட்டிற்கு மேஜையைச் சுற்றி எல்லாரும் அமர்ந்ததும்,
பாட்டியின் சேமியா பாயசம் ஒவ்வொருக்கும் ஒரு கிண்ணத்தில்.
“நிகிலின் ரிசர்ச் பேப்பர் ‘எகனாமிக் லிமிட்ஸ்’ என்கிற ஜர்னலில் வரப்போறது” என்று அம்மா பெருமையுடன் அறிவித்தாள்.
‘அது எதைப்பத்தி? நிகில்!’ என்று நல்ல வேளை மாமாவோ மாமியோ கேட்கவில்லை. சஞ்சிகையின் பெயரே அவர்களுக்குப் பயம் கொடுத்து இருக்கும்.
எல்லாரும் கோப்பைகளைத் தட்டிக்கொண்டார்கள். சுவைத்தபோது,
“இன்னொரு விஷயம். எனக்கு ஒரு ஆஃபர் வந்திருக்கு” என்று நிகில் ஆரம்பித்தான்.
“பலே! பலே!” என்றார் தாத்தா. சர்க்கரை கட்டுப்பாட்டை மீறி, “இன்னும் கொஞ்சம் பாயசம்.”
“எங்கே? எங்கே?” அம்மா அவசரப்பட்டாள்.
“கோக் இன்ஸ்டிட்யுட். இப்பதான் ஈ-மெய்ல் பார்த்தேன்.”
“அது எங்கே இருக்கு?”
“அட்லான்ட்டா.”
“அவ்வளவு தூரத்தில் இருந்து உன்னைக் கவனிச்சி இருக்காங்களே” என அம்மா ஆச்சரியப்பட்டாள்.
“இது சின்னஞ்சிறு உலகம்” என்றான் ரகு. “இப்ப எல்லாமே இன்டர்நெட் தானே. அவன் பேப்பரின் ப்ரீ-வியு அவங்க கண்ணில பட்டிருக்கும். அதிலேர்ந்து அதுக்கு முன்னாடி அவன் எழுதினது எல்லாத்தையும் படிச்சிருப்பாங்க.”
“அப்ப அது சம்பந்தப்பட்ட ரிசர்ச் செய்யறாங்களோ?” நிகிலின் அப்பாவைப் போல இல்லாமல் அவன் ஒரு குறிப்பிட்ட வேலையில் நிலைத்து நிற்க வேண்டும் என்று அம்மாவுக்கு ஆசை.
“அப்படி இருக்கணும்னு கட்டாயம் இல்ல. அவன் எழுத்தின் தரத்தைப் பார்த்து நிகில் எந்த ப்ராஜெக்ட்டையும் நன்னா செய்வான்னு அவங்க நினைக்கிறாங்க” என்றாள் ஷோபா.
“எவ்வளவு சம்பளம்?”
“ஆரம்பத்தில வருஷத்துக்கு எண்பதாயிரம் டாலர்.”
“கலிஃபோர்னியாவுக்கு அது போதாது. அட்லான்ட்டால செலவு குறைச்சல்” என்றாள் அவள்.
வேலையின் விவரங்கள் கேட்டு அம்மாவின் முகத்தில் திருப்தியும் நிம்மதியும். அவளுக்கும் ஒரு பாரம் குறைந்தது.
பிரதான சாப்பாட்டின் போது ரகுவும் ஷோபாவும் வீடு விற்ற கதை.
“முன்னாள் சினிமா நடிகை ஸ்ரீ…”
மறுநாள் பிற்பகல் ரகுவும் ஷோபாவும் கிளம்பிப்போகும் வரை நிகிலைத் தனியாக சந்தித்துப்பேச தாத்தாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பகலின் உக்கிரம் குறைந்ததும் மேல் மொட்டை மாடிக்குப் போனார்கள். சலங்கை ஒலியும் போக்குவரத்தின் ஓசையும் தொலைவில் நின்று மனம்விட்டுப் பேச அனுமதி கொடுத்தன.
தாத்தா மாடியின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்தார். நிகில் சிறு வட்டத்தில் வலமாகச் சுற்றி நடந்தான்.
“உன் அப்பா உனக்கு என்ன செய்திருப்பாரோ கூடியவரை நான் அதையெல்லாம் செய்துவந்திருக்கேன்.”
நடையை நிறுத்தி,
“அப்பா இல்லாத குறையை நான் உணர்ந்ததே இல்லை” என்று உருக்கமாகச் சொன்னான்.
உணர்ச்சிகள் அடங்கியதும் தாத்தா,
“தந்தைக்கான கடமையில ஒண்ணு பாக்கி இருக்கு.”
அது என்னவாக இருக்கும்?
“உன் கல்யாண விஷயம்.”
நிகில் யோசனையில் இன்னொரு சுற்று நடந்துவிட்டு வந்தான்.
“உன் எதிர்காலம் இப்போ கேள்விக்குறியில் இல்ல.”
கோக் இன்ஸ்டிட்யுட்டின் மின்னஞ்சலை வாசித்தபோது நிகிலுக்கும் ஒரு கணம் அந்த எண்ணம் மனதில் எழுந்தது.
“நீ ஏற்கனவே யாரையாவது பார்த்துவச்சிருந்தா சொல்!”
அவன் மனக்கண்ணில் ஒரு பெண்ணின் கோட்டுருவம் நிலைத்து நின்று மறைந்துவிட்டது.
அவன் நிச்சயமற்ற மௌனத்தினால்,
“உனக்கு வர்ஷிணி ஞாபகம் இருக்கா?” என்றார் தாத்தா.
“அம்மாவோட ஒரு சிஷ்யை. அவ அரங்கேற்றத்துக்கு நாம எல்லாரும் போனோம்.”
“அவளே தான். யு.எஸ்.ல பிறந்து இரண்டு வயசில இங்கே வந்தா. ப்ளஸ்-டூக்கு அப்புறம் அட்லான்ட்டாக்குத் திரும்பப் போய் ஜியார்ஜியா டெக்ல பி.எஸ். அங்கேயே ‘கப்ளிங்னு’ ஒரு கம்பெனியில நல்ல வேலை கிடைச்சிருக்காம். இந்தியப் பெற்றோர்களுக்குப் பிறந்து அங்கேயே வளர்ந்த பையன்களுக்கு அவள் ஒரு இந்தியப்பெண். அதனால…” என்று நிறுத்தினார். இன்னும் சில தகவல்கள் சொல்லாமல் வெளிப்பட்டன.
“இப்ப பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு வர்ஷிணி வந்திருக்கா. இன்னிக்கி காலையில அவளோட அம்மாவும் உன் அம்மாவும் ரொம்ப நேரம் பேசி இருக்காங்க. நீ அட்லான்ட்டாலேயே கோக் இன்ஸ்டிட்யுட் போறதைக் கேட்டு அவ அம்மாவுக்கு திருப்தி.”
அவன் அந்த வேலையை ஏற்றுக்கொள்வதாக அம்மா தீர்மானித்துவிட்டாள். இருவர் வருமானத்தில் நிம்மதியான வாழ்க்கை.
“தெரிந்த பெண் மருமகளாக வர்றதில உன் அம்மாக்கு சந்தோஷம்.”
நிகிலின் சம்மதம் மட்டும் பாக்கி.
“என் கடமை முடிஞ்சிதுன்னா பெங்களூர். பாட்டிக்கு அங்கே போய் இருக்க ஆசை.”
இன்னும் சில சுற்றுகள் நடந்துவிட்டு,
“மணிமொழி பாரதிதாசன் யுனிவெர்சிடிக்கு போயிருக்கா. இன்னிக்கித்தான் திரும்பி வரா. நாளை அவ கிட்ட கோக் இன்ஸ்டிட்யுட் வேலை பத்தி கேட்கறேன். அவ என்ன சொல்றாள்னு பார்ப்போம்.”
அப்பா வேஷத்தைக் கலைத்துவிட்டு தாத்தா அந்தரங்க நண்பர் ஆனார்.
“இப்போ உன் வாழ்க்கைப் பாதை இரண்டாகப் பிரிகிறது.”
தாத்தா குரலின் கனத்தைக் கவனித்து நிகில் நின்று கவனமாகக் கேட்டான்.
“ஒரு பக்கம் நல்ல தார் போட்ட சாலை. அதில வழுக்கிண்டு போறதுக்கு சொகுசான கார்.”
தற்போதைய சமுதாயம் ஆராதிக்கும் தொழில் தெரிந்த இளம் பெண் பக்கத்தில்.
“அதில கொஞ்ச தூரம் போனதும் ஒரு சரிவில் பெட்ரோல் காலின்னு கார் நிக்கப்போறது.”
“ம்ம்ம். அப்படித்தான் நீயும் இரண்டு மூணு வருஷமா சொல்லிண்டு இருக்கே. எவ்வளவு தூரம்னு யாருக்கும் நிச்சயமாத் தெரியாது. அதில போற வரைக்கும் ஆனந்தம்.”
நிகில் தெருவில் ஓடிய ஊர்திகளைப் பார்த்தான்.
“இன்னொண்ணு ஒத்தையடிப் பாதை. அதில வெகு தூரம் போகலாம். மனசுக்கு சரின்னு பட்டதைச் செய்யும் ஆத்ம திருப்தி கிடைக்கும். ஆனா…”
“ஆனா…”
“அதில தனியாப் போறதை விட, துணைக்கு ஒருவர் இருந்தா நல்லது.”
அவர் யார் என்று இருவருக்கும் தெரியும்.
“இதில எந்தப் பாதையை எடுக்கறதுன்னு நீதான் யோசிச்சு முடிவு பண்ணணும்” என்று நிறுத்தினார். திருப்தியான குரலில், “அதற்குத் தேவையான புத்தியைக் கொடுத்து உன்னை நான் வளர்த்திருக்கேன், சரியா?”
“அதில சந்தேகமே இல்ல.”
தாத்தா எழுந்தார்.
“ஒண்ணு மட்டும் நீ கவனத்தில வச்சிக்கணும்.”
அவர் முகத்தையே பார்த்தான்.
“மணிமொழி கிட்ட ஆலோசனை கேட்கப் போறப்போ உனக்கு எந்தப் பாதை பிடிச்சிருக்குன்னு அவளுக்குத் தெரியாம இருக்கறது நல்லது. வெறும் அறிவுரை மட்டுமில்ல இந்தத் தீர்மானத்தில அவளுடைய வாழ்க்கையும் அடங்கி இருக்கு.”
பதிலுக்குக் காத்திராமல் தாத்தா கீழே இறங்கிப் போனார்.
தாத்தாவின் வார்த்தைகளை ஜீரணிக்க இன்னும் பல சுற்றுகள். நன்றாக இருட்டிவிட்டது. அவனுக்கு ஒளி தெரிந்தது.
தாத்தா அனுபவசாலி, அதிபுத்திசாலி.
ஆராய்ச்சியில் மட்டுமல்ல எதிர்காலம் பற்றிய தீர்மானத்திலும் மணிமொழி அவனுக்கு வழிகாட்டி. அதற்கும் மேலாக அவன் மனதில் அவளுக்கு ஓர் இடம். அதை அவன் அவளுக்கு மறைமுகமாகக் கூட உணர்த்தியது இல்லை. ஏன்? ஒன்றிரண்டு வாய்ப்புகள் தான்.
“டெல்லியில் என்னுடன் ஆராய்ச்சி செய்த இருவர். புத்தாண்டிற்கு வாழ்த்து அனுப்புவார்கள். இந்த தடவை மறந்துவிட்டார்கள்.”
அப்போது நிஜமான மணிமொழியின் உருவம் அவன் மனதில் வரைந்த சித்திரத்தை அழித்து, ‘மணிமொழி! உன்னை நான் எப்போதுமே மறக்கமாட்டேன்.’ என்று சொல்ல முடியாதபடி வாயை அடைத்துவிட்டது.
வட்டத்தின் நடுவில் நின்றான்.
‘இது ஒருதலைக்காதல் என்றால் நான் அவளிடம் இருந்து விடைபெற்று சுமுகமாகப் பிரிகிறேன். அவளின் இனிய நினைவுகள் என்னுடனேயே இருக்கட்டும்! அவளுக்கும் என் மேல் விருப்பம் என்றால் அவளாகவே எனக்கு அதைத் தெரிவிக்க வேண்டும். சரளைக்கல் பாதையில் அவளுடன் நடந்துபோகவும் கூரை வேய்ந்த வீட்டில் வசிக்கவும் நான் தயார்.’
வருத்தத்தைத் தணிக்க மணிமொழி மிகவும் பிடித்தமான ஆடை அணிந்தாள். கத்தரிப்பூ நிறத்தில் பார்டர் வைத்த ரவிக்கை. அதே மாதிரி பார்டருடன் புள்ளிபோட்ட பச்சைப் புடவை.
வளாகத்தில் நுழைந்து பஸ் நின்றது. ஜன்னல் வழியே பயணிகளை இறக்கிவிட்டு ஓய்வெடுத்த ஆலந்தூர் பஸ்ஸை மணிமொழி கவனித்தாள். நிகிலின் நினைவு வந்து சற்று வெட்கமாகக் கூட இருந்தது. அவள் வசிக்கும் சின்னஞ்சிறு தீவில் இன்னொரு குடிமகன் இருக்கிறான். அதை ஏன் மறந்தாள்? கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தினம் பார்த்துப் பழகியதால் அவளிடம் இருந்து பிரித்து அவனை நினைக்கத் தோன்றவில்லையோ?
இறங்கி நடந்தபோது தொலை தூரத்தில் அறிவியல் கட்டடம். அதன் மூன்றாம் மாடியின் நடைவழியில் நிகிலின் உருவம். காலையிலும் மாலையிலும் அவன் அங்கே நடந்தது அவர்கள் உறவின் ஆரம்பக்கட்டம். நிச்சயம் அது தப்படிகளின் எண்ணிக்கையைக் கூட்டத்தானா?
வேலை நாட்களில் பலமுறை பார்த்துப் பேசி இருக்கிறார்கள். சொந்த விவரங்கள் மிகக்குறைவாகவே இடம் மாறியிருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக. ஓரளவு வசதியான குடும்பம். அப்பா இல்லாததால் தாத்தா கவனிப்பில் வளர்ந்தவன். அம்மா நாட்டியப் பள்ளி நடத்துகிறாள். மாமா மாமியின் மேற்பார்வையில் ரூபாய்கள் பத்துப்பன்னிரண்டு இலக்கங்களில் நகர்கின்றன. ஆனால், அவனுக்கு எல்லாவற்றிலும் சிக்கனம்.
அவளைப்பற்றி அவனுக்கு இன்னும் குறைவாகவே தெரிந்திருக்கும். அவளாக எந்த விவரமும் வெளிப்படுத்தியது இல்லை. பாட்டி இறந்தபோது சோகத்தை மறைத்து சாதாரண முகம் காட்டாது இருந்தால்…
‘ஏன் மணிமொழி! ரொம்ப வருத்தமா இருக்கீங்க?’
‘சொல்றேன். அதுக்கு வளாகத்தைச் சுற்றி நடந்துட்டு வரலாமா?’
‘ஒரு நிமிஷம்!’ என்று கணினியிடம் இருந்து விடைபெறுகிறான்.
கட்டடத்தின் நிழலை விட்டு வெளியேறியதும்,
‘என் பாட்டியின் காலம் முடிந்துவிட்டது.’
‘ஐ’ம் சாரி மணிமொழி.’
‘பாட்டிக்கு எந்த விதத்தில பார்த்தாலும் பூரணமான வாழ்க்கை. அதனால் என் வருத்தம் பாட்டிக்காக இல்ல. எனக்காக.’
அவள் பக்கம் திரும்பிப் பார்க்கிறான்.
‘என் தாத்தா ‘எ டெக்ஸ்ட்-புக் ஆஃப் பாடனி’ எழுதிய வெங்கடேசன்.’
‘அதோட புது எடிஷன் என் கிட்ட இருக்கு.’
‘அவர் எனக்கு படிப்பில வழிகாட்டி. ஆனா மத்த விஷயங்களில பாட்டியின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பேன்.’
‘எனக்கும் என் தாத்தாவின் வார்த்தை தான் வேதவாக்கு.’
மணிமொழி அவன் பக்கம் கேள்விக்குறியுடன் பார்க்கிறாள்.
‘சின்ன வயசிலேயே அப்பா இறந்துட்டார்.’
‘ஐ’ம் சாரி நிகில்!’
‘ஆனா அந்த இழப்பு தெரியாம தாத்தா என்னை வளர்த்தார்.’
மௌனமாக நடக்கிறார்கள்.
‘உங்க தனிமை எனக்குப் புரிகிறது. நான் அதை சில சமயம் அனுபவித்தது உண்டு. பஸ்ஸில் போகும்போது என்னைத் தவிர மத்த எல்லாரும் இறங்கிவிட்ட மாதிரி சில சமயம் தோணும்.’
சுனில் போல இல்லை இவன்.
‘அதைக் குறைக்க நேரம் கிடைக்கிறப்ப இப்படி பேசிண்டே நடக்கலாம்.’
பெற்றோர்கள் பாதுகாப்பு இல்லம் போன தகவலை அவனுடன் பகிர்ந்துகொண்டு இருந்தாள்…
‘இப்போ என் வாழ்க்கையில நான் ஒருத்தி தான்.’
‘உயிர்க்கோளத்தில நாம யாருமே தனி இல்ல.’
இப்படி உரையாடல் வளர்ந்து ஆசிரியர் மாணவன் உறவின் எல்லையை அழித்துவிடலாம் என்கிற அச்சத்தினால் ஆரம்பத்தியேயே அவளுடைய அந்தரங்கத்தில் அவனை நுழையவிடவில்லையா? அவ்வெல்லையைத் தாண்டி என்ன இருக்கிறது? அங்கே போவதில் அவளுக்கு ஏன் தயக்கம்?
பட்டத்திற்குத் தேவையான எல்லா சடங்குகளையும் முடித்துவிட்டான். அவன் எழுதிய ‘மணலின் எதிர்காலம்’ விரைவில் வெளிவரும். சுதந்திரமாக சிந்திக்கவும் ஆராய்ச்சிக்குத் திட்டமிடவும் அவன் கற்றுக்கொண்டு விட்டான். அவள் ஆய்வகத்தில் இருந்து விலகி அவன் வேலை தேடிப் போகும் நாள் நெருங்கிவிட்டது. அது நடைமுறை நிகழ்வு என்றாலும் அந்த எண்ணம் அவளைத் தாக்கியது.
அவன் எதிர்காலத்தில் அவள் பங்கு என்ன?
டெல்லி ‘சஸ்டெய்னப்ல் மேனேஜ்மென்ட்டி’ல் ஆராய்ச்சியைத் தொடர அவனுக்கு விருப்பம் இருந்தால் அவள் உதவ முடியும்.
சென்னையிலேயே வேறொரு கல்லூரி தொடர்நிலை சமுதாயத்தில் அக்கறை காட்டி அவனை அழைக்கலாம்.
இன்னும் உயர்ந்த பாதை.
தண்ணீர் சேமிப்புக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த (மழை மனிதன்) சேகர் ராகவன் போல மணலுக்கு நிகில் நரேந்திரன். கடற்கரை மற்றும் ஆற்று மணலைக் காப்பாற்றும் தன்னார்வல நிறுவனம் தொடங்கி அதை நடத்தட்டும். நிறுவனத்துக்குப் பெயர் ‘சான்ட் அவர்க்ளாஸ்’. கவர்ச்சிகரமாக இல்லை? மணலை நம்பி இருக்கும் பொருளாதாரத்தின் ஆயுள் மணல் கடிகாரம் போல டொக் டொக் டொக். துகள்கள் இறங்குகின்றன. அப்படிப்பட்ட நிறுவனம் தொடங்கினால் அவள் அதில் பங்குகொள்வாள். நிதி உதவி, உடல் உழைப்பு மற்றும் ஆலோசனை அவளால் தரமுடியும். அவள் வாழ்வதற்கு இன்னொரு அர்த்தம்.
மாடிப்படி ஏறி வந்தபோது அங்கே காத்திருந்த நிகிலின் களைத்த தோற்றம். சரியாகத் தூங்காததால் வெளுத்த ஆனால் நிம்மதியை வெளிக்காட்டிய முகம். மாணவனாகப் பாதுகாப்பான சூழலில் வசித்து இப்போது வெளி உலகைச் சந்திக்க அவனுக்கும் தயக்கமாக இருக்கும்.
“குட் மார்னிங், நிகில்!”
“குட் மார்னிங், மணிமொழி!” குரலில் ஒரு சம்பிரதாய தொனி.
ஆய்வகத்தின் நடு மேஜையின் பக்கம் நகர்ந்தாள். அங்கே வேறு யாரும் இல்லை என்றாலும்,
“தனியாகப் பேசமுடியுமா?”
கேள்விக்குறியுடன் நின்றாள்.
“ஒரு முக்கியமான விஷயம்.”
அலுவலகத்தில் அவளைத் தொடர்ந்து நிகில் நுழைந்தான். அவனுக்கு அது முதல் தடவை. மிக எளிமையான அறை. சுவரில் கறுப்பு வெள்ளைப் படத்தில் டர்பன் அணிந்த பேராசிரியரின் படம். அவள் தாத்தா. இந்த விஷயத்தில் அவள் பாட்டி தான் அறிவுரை தர வேண்டும். அது என்னவாக இருக்கும்?
எதிர் எதிரே உட்கார்ந்ததும் மௌனமாக அச்சடித்து மடித்த காகிதத்தை அவளிடம் நீட்டினான்.
பிரித்து மின்னஞ்சலில் கண்களை ஓட்டியதும் சில வரிகளிலேயே தகவலின் சாரம் தெரிந்துவிட்டது. ஆனாலும் அதன் அதிர்ச்சியை ஜீரணிக்க முழு விவரங்களையும் வாசித்தாள்.
கண்கள் எழுத்துக்களை மேய்ந்தபோது ஆழ்மனதில் சிறு போராட்டம். வாய்ப்பை ஏற்றுக்கொள்ள நிகில் தீர்மானித்திருக்க வேண்டும். மறுப்பதாக இருந்தால் அவளிடம் ஏன் அதன் முழு விவரங்களையும் கொண்டுவந்து காட்ட வேண்டும்? ‘கோக் இன்ஸ்டிட்யுட் கூப்பிட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’ என்று சொல்லி விஷயத்தை அத்துடன் முடித்து இருக்கலாமே.
‘இந்த வாய்ப்பு பற்றிய உன் எண்ணம் என்ன? நான் ஏற்றுக்கொள்ளலாமா?’ என்று அவன் வெளிப்படையாகக் கேட்கவில்லை.
கேட்காவிட்டாலும் இது அவன் நன்மைக்கா?
சில ஆண்டுகளில் அவனுடைய பத்து வயதுப் பையனோ பெண்ணோ,
‘இயந்திரப் பொருளாதாரம் சரியும் என்று உனக்குத் தெரியும்’ என்று குற்றம் சாட்டுகிறாள்.
‘ம்ம்.. அதற்கு ஒரு உருவகக்கதை கூட எழுதினேன்.’
‘அதை நம்பி ஏன் வாழ்க்கையை வீணடித்தாய்?’
‘சுலபமான பாதையில் வழுக்கிக்கொண்டு போவது தான் மனித இயல்பு.’
‘நீ விமானத்தில் பறந்தாய். எரிபொருள் பணத்தில் மிதந்தாய். இப்போது எனக்கு இருண்ட எதிர்காலம்.’
‘நான் ஒருவன் மேற்கத்திய நாகரிகத்தின் பாதையை மாற்றி இருக்க முடியுமா?’
‘ஒருசில சிந்தனை சிற்பிகள் முழுமனதுடன் முயற்சிப்பதால் தான் உலகின் போக்கு மாற்றப்படுகிறது – இப்படி மார்க்ரெட் மீட் சொல்லி இருக்கிறாள். அந்த ஒரு சிலரில் ஒருவனாக நீ இருந்திருக்கலாம்.’
அந்த குற்றச்சாட்டில் உடல் சாம்பலாகப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
அவளிடம் எதிர்பார்ப்பது அவன் தீர்மானத்துக்கு ஆதரவான வார்த்தைகள்.
ஜன்னல் வழியாக அமைதி தரும் மரங்களின் உச்சாணிக் கொம்புகளைப் பார்த்தாள்.
இந்நிலையில் ஒரு சராசரி பிஎச்.டி. வழிகாட்டி தன் சராசரி மாணவனிடம் என்ன சொல்வார்?
‘கோக் சிந்தனைக் களஞ்சியம் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களுக்கு ஏராளமான பணம். அத்துடன் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு. ஆபத்து இல்லாத பெட்ரோலியத்தையும் நிலக்கரியையும் எரித்து இன்றையப் பொருளாதாரம் இன்னும் பலகாலம் இப்படியே தொடர்ந்து வளரும் என்பது அந்நிறுவனத்தின் குறிக்கோள். அதற்கு சாதகமான விவரங்களைத் தேடிப்பிடித்து அவற்றை அவ்வப்போது ஊடகத்தில் அச்சிலோ நேர்காணலிலோ வெளிப்படுத்தினால் உன் பதவி நிரந்தரம். உனக்காக நான் சந்தோஷப்படுகிறேன். நீ தொலைதூரம் போனாலும் மின்னஞ்சல் தொடர்பில் இருப்போம். புதிய வேலையில் வெற்றி பெற என் நல் வாழ்த்துக்கள்!’
சின்ன விஷயங்களில் கூட அவள் பொய் சொன்னதில்லை. சொல்ல அவசியம் நேரிட்டதும் இல்லை.
திரும்பி நிகிலின் மேல் பார்வையை வைத்தாள். அதன் ஆழம் தாங்காமல் அவன் குனிந்துகொண்டான்.
காகிதத்தைத் திரும்ப அழகாக மடித்தாள். அவனிடம் அதைத் திருப்பித்தரவில்லை. ஏமாற்றத்தின் ஞாபகார்த்தமாக அவளிடம் அது இருக்கட்டும். உணர்ச்சிகளை மறைப்பதிலும் அவளுக்கு அனுபவம் இல்லை. உருக்கமான தொனியில்,
“தகவல் தொழில், நிதி ஆலோசனை, வர்த்தக நிர்வாகம் போன்ற வேலைகளுக்குத் தயார் செய்யும் பட்டங்களை வாங்கி அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உயர்ந்த விலையில் விற்க இன்றைய இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள். அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையைப் பார்த்து… சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களின் நிலைமை, பொருளாதாரத்தைச் சுருக்கும் வழிமுறைகள், கட்டுப்பாடுகள் இல்லாத உலகப் பொருளாதாரம் மக்களுக்கு இழைக்கும் தீங்குகள் – இவற்றில் ஆராய்ச்சியைத் தொடங்கியவர்களும் பட்டத்திற்குப் பிறகு எவ்விதத் தீர்வுகளுக்கும் வழிகாணாத பதவிகளில் திருப்தி அடைவது மனித இயற்கை. டெல்லியில் நான் நன்கு அறிந்த இருவர் சுலபமான அப்பாதையில் இறங்காமல் ஆதரிச வாழ்வை மேற்கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பறக்கவிட்டு ஒருவன் ஆஸ்திரேலிய டாலரையும், ஒருத்தி ஐரோப்பிய யூரோவையும் தேடிப்போய் விட்டார்கள் என இன்று காலை தெரியவந்தது” என்று நிறுத்தினாள்.
அவள் வார்த்தைகள் எதை நோக்கிப் போகின்றன என்பதை ஊகிப்பது நிகிலுக்கு சிரமமாக இல்லை.
நம்பிக்கைச் சிதைவு, வருத்தம், விரக்தி நிறைந்த குரலில்,
“எட் டூ நிகில்?”
“நீ கூடவா நிகில்?”
அதைக் கேட்டதும் பரவசப் புன்னகை கலந்த கண்ணீர் துளிகளுக்கு நடுவே முதன்முதலில் பார்த்த மணிமொழியின் தோற்றம் நிகிலுக்குத் தெரிந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
