அட! என்ன ஊர்யா இது?

வேலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன.  அங்கே ஒரு தொகுதியில் அடுத்த வாரம் இடைத் தேர்தல்.  தெருவெங்கும் தலைக்கு மேலே வண்ண வண்ண கட்சிக் கொடித் தோரணங்கள்.  வாகனங்கள் வீதிகளில் மெதுவாக ஊர்ந்து வர, அதில் கை கூப்பியபடி கட்சி வேட்பாளர் நின்றபடி இரு பக்கங்களிலும்  மக்களைப் பார்த்து பணிவோடு வாக்கு சேகரிக்க, அவர் அருகே கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர், மந்திரியோ மற்ற முக்கிய பதவி வகிப்பவரோ நின்றபடி தங்கள் கட்சிக்கே வாக்களிக்கும்படி மக்களை வேண்டி  கேட்டுக் கொண்டு பிரசாரம் செய்வதில் மும்முரமாக இருந்தனர்.  

புளியம்பட்டி கிராமத்திற்கு இன்னும்  கட்சிக்காரர்கள் பிரசாரத்திற்கு வரவில்லை. ஆனால் இன்றோ நாளையோ வந்து விடுவார்கள் என்பது அவசர அவசரமாக வீதிகள் கூட்டப்பட்டு இரண்டு ஓரங்களிலும் ‘ப்ளீச்சிங் பவுடர்’ தூவப்பட்டதிலிருந்து தெரிந்தது. அநேகமாக ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் யாரேனும் வரக்கூடும் என்று மக்கள் இத்தனை வருட தேர்தல் அனுபவங்களிலிருந்து புரிந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சில இடங்களில்  கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டு  அவசரகதியில் சாலை போடப்பட்டது.  அவர்கள் வாக்கு சேகரித்து சென்றபின் அந்த சாலை,  மூலைக்கொரு கல்லாக காற்றடித்தாலே பறந்து விடும் என்பது அந்த ஊர்க்காரர்களின் அனுபவந்தான்.  

சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகப் போகிறது.  ஆனாலும் அந்த ஊரில்  பாதி வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. கிராம முக்கியஸ்தர்கள், மற்றும் ஓரிரு பணக்காரர்கள் வீடுகளில் மட்டுமே தனியாகக் கழிப்பறை இருக்கிறது.  மற்றவர்களுக்கு எப்போதும் போல ஊருக்கு வெளியே காடு போல் புதர்ச் செடிகள் மண்டி கிடக்கும் மறைவான இடந்தான் பொதுவான கழிப்பறை.  இரண்டு  தலைமுறை மக்கள் பொதுவிடத்தில் தங்கள் அன்றாட காலைக் கடன் தேவைகளுக்கு இருட்டுப் பிரியும் முன்  ‘ஒதுங்கியே’ காலத்தைக் கழித்து விட, இப்போது மூன்றாவது தலைமுறையினர் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மனுவுக்கு மேல் மனு கொடுத்து, கோரிக்கைகள் வைத்து போன முறை ஆண்ட அரசு ஒரு கழிப்பறையை ஊருக்குப் பொதுவாகக் கட்டிக் கொடுத்தது.  ஆனால் அந்தப் பொதுக் கழிப்பறையைக் கட்டிய அரசு அதை ஊருக்கு வெளியில் ஒரு மயானத்தில் கட்டியிருக்கிறது. ‘ஒண்ணுக்கு’ போவதானால் வீட்டுக்கருகேயே எங்காவது புதர் அருகில் வெட்ட வெளியில் ஆண் பெண் இருபாலாரும் இருந்து விட்டு வருவது தான் வழக்கம். ஆனால் வேறு ஏதாவது என்றால்?  இரவு வேளையில் குழந்தைகள், பெண்கள் எப்படி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மயானத்தில் இருக்கும் கழிப்பறையில் போய் ‘இருந்து’ விட்டு வருவார்கள்.  அதுவும் எப்படி?  கிராம முக்கியஸ்தர் ஒருவர் வீட்டில் அந்த கழிப்பறையின் சாவி இருக்கும்.  அங்கே போய் வாங்கிக் கொண்டு ‘இருந்து விட்டு’ திரும்ப கழிப்பறையை பூட்டி விட்டு சாவியை அவரிடம் பொறுப்பாக ஒப்படைக்க வேண்டும்.  அடிக்கடி போய் தொந்திரவு செய்தால் அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும்.

“கண்டதைத் தின்னுப்புட்டு நடுராத்திரியில் கக்கூஸ் போவதே இதுங்களுக்கு வழக்கமாயிடுச்சு!” என்று கிண்டலாகப் பேசுவார்.  

சின்னப் பெண்கள்  காலையில் வெளிச்சம் வருமுன்பே அவதி அவதியென்று எழுந்து ஒருவருக்கொருவர் துணயாக ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று இருந்து விட்டு வருவார்கள். மயானம் வேறயா?  ஏதாவது சத்தம் கேட்டாலே அச்சமாக இருக்கும்.  வீட்டை விட்டுக் கிளம்பி அவசரகதியில் நடக்கவும் முடியாது. வழியிலேயே வந்துவிட்டால் ‘ஒதுங்க’ இடமில்லையே?  புளியங்குடி பெண்களின் முகத்தில்  கழிப்பறை விஷயத்தால் எப்போதும் ஒரு அச்சமும் சோகமும் அப்பிக் கிடக்கும். 

பொதுக் கழிப்பறை அருகில் இல்லாத அந்த ஊரில் இரண்டு ‘டாஸ்மாக்’ கடைகள்  கூப்பிடு தூரத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தது.  இப்போ தேர்தல் வேறயா?  கட்சிக்காரர்களே சரக்கு வாங்கி வந்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.  ஒரு வீட்டில் எத்தனை ஓட்டு என்று கணக்கு எடுத்து அத்தனை பேருக்கும் வெள்ளி விளக்கு, வெள்ளி கொலுசு, குக்கர் என்று பரிசுப் பொருட்கள் மானாவாரியாக வழங்கப்படுகின்றன.  பக்கத்து ஊர்க்காரர்கள் சொன்னார்கள்.   இதைத் தவிர வீட்டுத் தலைவரிடம் எலுமிச்சம்பழத்தில் குலதெய்வம் மேல் “நிச்சயம் ஒங்களுக்கு தான் எங்கள் ஓட்டு!” என்று  சத்தியம் செய்யச் சொல்லிக் கொடுக்கும் அஞ்சாயிரம், பத்தாயிரம் ரூபாய் அன்பளிப்பு.

  எல்லா ஊர்களிலும்,  ஊருக்கு வெளியே ஒரு கீற்றுப்பந்தல் போட்டு  ஊர் மக்களை தங்க வைத்திருக்கிறார்கள். அங்கே  இரண்டு வேளை கறிச்சோறு, மாலையில் சரக்கு,  நடுப்பகலிலும் இரவிலும் சினிமா படங்கள் என்று போட்டு மக்களை 

தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தனர்  கட்சிக்காரர்கள். அவர்கள் குறி வைக்கும் அத்தனை பேர்களின் ஓட்டுகளும் அவர்களுக்கே விழ வேண்டுமே?  பெரும்பாலான மக்கள் வேலை வெட்டிக்கிச் செல்லாமல் குஷியாக அங்கே உட்கார்ந்து சாப்பிட்டு, சரக்கடித்து சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  பிரசாரம் நடக்கும் இந்த ஒரு மாதமாக எல்லா இடங்களிலும் டாஸ்மாக்கில் அபாரமான வியாபாரமாம். 

புளியம்பட்டி கிராமத்திலும் ஊருக்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தலில் நாள் முழுவதும் கூடி அளவில்லா மகிழ்ச்சியோடு  கொண்டாட்டமாக இருந்தனர் அந்த கிராம ஜனங்கள்.  இந்த ஆர்ப்பாட்டங்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ஐயனார்.   சமீபத்தில்  சடங்கான ஐயனாரின் மகள் செல்விக்கு ‘மஞ்சள் நீராட்டு விழா’ மறுநாள் காலையில் வைத்திருந்தார்கள்.  இதை நினைத்து அந்த வீட்டில் யாருக்குமொன்றும் சந்தோஷம் இல்லை.  இது வரை எப்படியோ காலத்தை ஓட்டி விட்டோம்.  ஆனால் இனிமேல் வயதுக்கு வந்த பெண்ணை ஊருக்கு வெளியே கழிப்பிடத்திற்கு எப்படி அனுப்புவது என்று அவள் தாயார் மங்கம்மா சோகத்தில் ஆழ்ந்திருந்தாள். 

போன மாதம் தான்,  பொழுது போய் கழிப்பிடத்திற்குத் தனியாகச் சென்ற ஒரு பள்ளிச் சிறுமியை குடித்து விட்டு போதையில் இருந்த ஒருவன் தொடர்ந்து சென்றிருக்கிறான்.  யாரும் இல்லாத இடத்தில் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றபோது,  அவன் மேல் கைக்குக் கிடைத்த கட்டை,  கற்களை வீசித் தாக்கி   அவனிடமிருந்து எப்படியோ தப்பிப் பிழைத்து அந்தப் பெண் ஊருக்குள் ஓடி வந்த நிகழ்வு இன்னமும் மக்களின் மனதில் அச்சத்தை ஊட்டிக் கொண்டிருக்கிறது.  போதை மனிதர்கள் அதிகமாகி விட்ட ஊரில் கழிப்பறைக்குச் செல்லவே தக்கத் துணையோடு செல்ல வேண்டியிருக்கிறது. 

அந்தச் சிறுமி தேன்மொழி இதே தெருவில் தான் வசிக்கிறாள்.  செல்வியும் அவளும் ஒரே வகுப்பு தான்.   பக்கத்து ஊர்  பள்ளியில் படிக்கிறார்கள்.  இந்த சம்பவம் அந்த ஊரில் எல்லா இளம்பெண்களின் மனங்களையும் மிகவும் பாதித்து விட்டது.  பள்ளியிலும் விஷயம் தெரிந்து  போக, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு மனு தயாரித்து அதில் எல்லா சிறுமிகளையும் கையெழுத்திட வைத்து முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.  அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  அதற்குள் அரசாங்கத்திற்கு அடுத்த முக்கியமான வேலை, இடைத் தேர்தல், அது சம்பந்தப்பட்ட பணிகள் வந்து விட்டன.

  சூரியன் மேற்கு நோக்கி மெதுவாகச் செல்ல, மாலை மயங்க ஆரம்பித்து விட்டது.  திடீரென்று அந்த நேரத்தில் ‘சர் சர்’ ரென்று நாலைந்து கார்கள்  ஐயனார் வசிக்கும் தெருவில் வந்து நின்றன. அதிலிருந்து ‘திமு திமு’ வென்று வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் இறங்கிய   கட்சிக்காரர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்கள். அவர்கள் கட்டியிருந்த கரை வேட்டி அவர்கள் இன்ன கட்சி என்று அறிவித்தது.  ஐயனார் மெதுவாக நடந்து சென்று தன் வீட்டு  வாசலில் போய் நின்று கொண்டான்.  வேகமாக வந்த கார் ஒன்று அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது.

“நாந்தான்  வில்லு அம்பு கட்சியோட மாவட்டச் செயலர் முருகேசன்.  ஊருக்குள்ள வந்ததுமே ஒரு நல்ல விஷயம் கேள்விப்பட்டோம். ஒங்க வீட்டுல பாப்பாக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்குதாமே?” ஒரு பெரிய ‘ஸ்கார்ப்பியோ’ காரிலிருந்து இறங்கிய முருகேசன் புன்முறுவலுடன் ஐயனாரை அணுகினான்.

“டேய்! புருஷோத்து! அந்தப் பெட்டியைக் கொண்டாடா!”  புருஷோத்து கார் டிக்கியிலிருந்து ஒரு பெட்டியைக் கொண்டு வந்தான். ஐயனார் வீட்டுக்குள் வந்த முருகேசன் அதிலிருந்து ஒரு வெள்ளி விளக்கு, வெள்ளி கொலுசு, பட்டுப்புடவை  குக்கர் எல்லாம் எடுத்து ஐயனார் வீட்டுக் கூடத்தில் கடை பரப்பினான்.

கண்கள் அகல அவற்றைப் பார்த்த ஐயனார் மனைவி மங்கம்மாவிடம், “தயங்காம எடுத்துக்குங்கம்மா! பாப்பாக்கு தாய்மாமா சீர்னு வச்சிக்கங்களேன்!” என்று சிரித்தபடி  அவற்றை  காட்டினான். அவள் அதைத் தொடாமல் சட்டென்று  ஒரு எட்டு பின்னுக்குச் சென்று நின்று கொண்டாள் மங்கம்மா.  இப்பொழுது தன் கைப்பையிலிருந்து  ஒரு கட்டுப் பணத்தை எடுத்து ஐயனாரிடம் நீட்டினான் முருகேசன்.

“இதை மொதல்ல பிடிங்க.  சடங்குன்னா எவ்வளவு செலவு இருக்கும்?  ஊர் ஜனங்களைக் கூப்பிட்டு கறி விருந்து வேற வைக்கணும்?” என்று சிரித்துக் கொண்டே சொல்ல,  நீட்டிய பணத்தை வாங்காமல் பணிவாக மறுதலித்தான் ஐயனார்.

“பணம் எங்கே போகுதுங்க? இருக்கட்டும். இப்போ நீங்களே வச்சிக்குங்க. இருட்டிப் போச்சுங்க தலைவரே! பேசாம நீங்க இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க!” என்றான்.  ஒன்றும் புரியாமல் முருகேசன் அவனைப் பார்க்க, “நாளைக்குக் காலையில விசேஷத்தில கலந்து கிட்டு ஒங்க கையாலேயே பாப்பாக்கு இதையெல்லாம் கொடுங்க தலைவரே!  அது  எங்களுக்கு மருவாதை இல்லீங்களா தலைவரே!” என்றான்  கைகளைக் கூப்பி.

இங்கே எப்படி தங்குவது என்று முருகேசன் யோசித்துக் கொண்டிருக்கும்போது “வாசல்ல கயித்து கட்டில் போட்டுப் படுக்கலாம்.  காத்து பிச்சிக்கிட்டுப் போகும்.  யோசிக்காதீங்க.  நீங்க எங்க வீட்ல தங்கினீங்கன்னா எங்களுக்கும் ஒரு மருவாதை, எங்க ஊருக்கும் ஒரு கௌரவதை இல்லீங்களா தலைவரே!” என்றான்.

புருஷோத்து ஜாடைமாடையாக முருகேசனை தடுக்க முயன்று தோற்றுப் போனான். முருகேசன் களிப்பின் உச்சக் கட்டத்தில் இருந்தான்.

முருகேசன் செய்யும் ஆர்ப்பாட்டங்கள், அலட்டல்கள் பிடிக்காமல் கட்சியில ஒரு பய இவனை மதிப்பதில்லை.  அது முருகேசனுக்கும் நன்றாகவே தெரியும்.  மதிக்காததோடு மட்டுமல்லாமல் எப்படி இவனை ஓரங்கட்டலாம், தான் செயலராக வரலாம் என்று கணக்குப் போட்டு  காரியங்கள் செய்வதும் முருகேசனுக்குத் தெரிந்த விஷயங்தான்.  அப்படி இருக்கும்போது  பேச்சுக்குப் பேச்சு ‘தலைவரே, தலைவரே’ என்று ஐயனார் விளித்துப் பேசியது, அவர்கள் குடும்பத்தவர்கள் காட்டிய பணிவு எல்லாம் முருகேசனுக்கு புளகாங்கிதம் ஆகி விட்டது. தலையை எண்ணி கணக்குப் போட்டான். ஐயனார், அவன் மனைவி, அம்மா, அப்பா, வயதாகி முடியாமல் ஓரமாகப் படுத்துக் கிடக்கும் ஐயனாரின் பாட்டன் அதைத் தவிர, அவன் தம்பி, தம்பி மனைவி என்று வீட்டில மொத்தம் ஏழு ஓட்டு இருக்குது.   மொத்தமா அள்ளி விட வேண்டியது தான் என்று பெருமிதப்பட்டுக் கொண்டான். ஐயனார் பிள்ளை ஒருவன் நெடுநெடுவென்று வளர்ந்து நிற்கிறான்.  அவனுக்கும் ஓட்டு இருக்கும்.  கேட்டுப் பார்க்கணும் என்று நினைத்துக் கொண்டான்.

ஐயனாருக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் அவன் பெரியப்பா வீராசாமிக்கு பயங்கர கோபம்.  “என்னடா கொண்டாட்டம் நடக்குது ஒன் வீட்டில? கட்சிக்காரங்களை வீட்டுக்குள்ளாற கூப்பிட்டு கூத்தடிக்கிறியா?” என்றார்.

“எத்தினி வருஷமா இவுங்க மாத்தி மாத்தி  ஆண்டுக்கிட்டிருக்காங்க? ஆனா இன்னும் ‘வெளிக்கி இருக்கக்’ கூட வசதிங்க  செய்து தராத இவுங்களையெல்லாம் நம்ம ஊருக்குள்ளாற விட்டதே  தப்பு.  அதுல உங்க வீட்டில  வச்சு சீராட்டல் வேற நடக்குதா?  இவங்களுக்கு நாம ஓட்டுப் போட்டுத் தான் ஆகணுமான்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா? ஒனக்குக் கொஞ்சமாச்சும் சூடு சொரணை இருக்குதா? ” என்றார் வீராசாமி கோபங்குறையாமல்.

“கொஞ்சம் பொறுமையா இருங்க பெரியப்பா!” என்று அவரை சமாதானம் செய்தான் ஐயனார்.   பிறகு அவர் காதோடு ஏதோ கிசுகிசுப்பாகச் சொன்னான்.  அவன் பெரிய மகன் கமலக்கண்ணன் அந்தப் பக்கம் வர அவனை வீட்டுக்குள் கூப்பிட்டுக் கொண்டு போய் ஏதோ விசாரித்தான்.  அவன் ‘ஆமாம்!’ என்பது போல தலையை ஆட்ட, அவனிடம் ரகசியமாக ஏதோ சொன்னான்.  அவனும் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டி விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். 

முருகேசனுக்கு அந்த ஊர், அங்கே  தனக்குக் கிடைத்த மரியாதை எல்லாம் பிடித்திருந்தது. ‘சென்னையில் நம்ம மதிப்பு தெரியலனாலும், இங்கேயாச்சும் ஜனங்க மதிக்கிறாங்களே!’ என்று பெருமிதமாக நினைத்துக் கொண்டான்.  மாலையில் போட்ட சரக்கு பத்தவில்லை.  சரக்கு இன்னும் கொஞ்சம் கூட அடிச்சா போதும்,  தூங்கிடலாம்.  ‘தேர்தல் நேரமானதால் சரக்குக்குப் பஞ்சமேயில்லை.  தான் அடிக்குற சரக்கையும் ஜனங்களுக்குக் கொடுத்ததா கணக்குக் காட்டி விடலாம்’ என்று தெனாவெட்டாக நினைத்துக் கொண்டான். 

வீட்டுக்கு வெளியே கார் நிற்கும் இடம் அருகே போய் பாட்டிலைத் திறந்த முருகேசனுக்கு ‘காரம் போட்ட அவித்த வேர்க்கடலை’ சைட் டிஷ் ஆக ஐயனார் கொண்டு வந்து கொடுத்தான். அதைப் பார்த்த உடனேயே முருகேசனுக்கு நாவில் எச்சில் ஊற, தட்டிலிருந்து ஒரு கை அள்ளி எடுத்தான்.  நடப்பதையெல்லாம் ஐயனாரின் வயதான தாய் தந்தையர், ஐயனாரின் தம்பி, தம்பி பொண்டாட்டி எல்லோரும் வேடிக்கை பார்த்தனர்.

ஐயனார் கொடுத்த அவித்த வேர்க்கடலை சுவையாக இருக்கவே அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டு குடிக்க ஆரம்பித்தான்.   அடிக்கடி முருகேசன் குடித்து விட்டு வாந்தி எடுத்து சுற்றுப்புறத்தை அசிங்கமாக்குவது  பழக்கமானதால், புருஷோத்தமன் கொஞ்சமாக குடித்து விட்டு முருகேசன் அருகிலேயே எச்சரிக்கையோடு காவலுக்கு நின்று கொண்டிருந்தான். 

ஒரு குவார்ட்டர் உள்ளே போனதுமே முருகேசனுக்கு திடீரென்று  வயிறு வெகுவாகக் கலக்கியது.   ‘வெளிக்கி’ வரும் போல இருந்தது.  புருஷோத்தை அருகில் கூப்பிட்டு மெதுவாக கிசுகிசுத்தான்.  அவன் முகபாவத்திலிருந்து வாந்தி தான் எடுக்கப் போகிறான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த புருஷோத்து, இப்போது இதைக் கேட்டதும் சற்றே கதிகலங்கிப் போனான்.  மற்றவர் வீட்டில் எந்த அசிங்கமும் செய்யாமல் இவன் ‘இருந்து’ விட்டு வரணுமே என்று கவலையாக இருந்தது.

புருஷோத்தமன் ஐயனார் வீட்டு உள்ளே போயி,”இங்கே டாய்லட் உள்ளே எங்கே இருக்கு? ஐயாக்கு வெளிக்கி போகணுமாம்.” என்றான்.

வீட்டிலுள்ளவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“இன்னா சொல்றீங்க? டாயிலட்டா? அப்படீன்னா..?” என்றார் ஐயனாரின் தந்தை. 

புருஷோத்து அவர் அருகில் வந்து காதில் கிசுகிசுப்பாக முருகேசனுக்கு ‘வெளிக்கு’ப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கூறினான்.

“ஓ! அதுவா? இங்கேயெல்லாம் அது இல்லீங்களே!” என்றார் அவர்.

புருஷோத்து மிரண்டு போனான்.  அதற்குள் ஐயனார் அவன் அருகே வந்து,”என்ன விஷயம்?” என்று வினவினான்.  புருஷோத்து சங்கடமாக திரும்ப தான் சொன்னதையே சொல்ல,

“இந்த ஊருல பாதி வீடுங்கள்ள கழிப்பறை வசதி இல்லீங்களே! இதுவரைக்கும் ஆட்சி செய்த எந்த கட்சியும் எங்களுக்கு கட்டிக் கொடுக்கலியே?  எவ்வளவு மனு கொடுத்திருப்போம்? எவ்வளவு கோரிக்கைகள் வச்சிருப்போம்?”  என்றான் ஐயனார் மிக்க வருத்தத்துடன்.

“அப்போ  நீங்க எல்லாம்……”  என்று இழுத்தான் புருஷோத்து.

“மூணு தலைமுறையா ஜனங்க ஊருக்கு வெளியே காட்டுப்பக்கம் தான், அதாங்க…வெட்ட வெளியில தான்… ஒதுங்குவது வழக்கம்.  இப்போதான் மொதன்முறையா  ஊருக்கு வெளியே ஒரு பொதுக் கழிப்பறை இருக்குது! இந்த விஷயமெல்லாம்  தெரியாமலா ஓட்டு கேக்க வந்தீங்க?” என்றார் வீராசாமி  ஆத்திரத்துடன்.

புருஷோத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. மேற்கொண்டு அங்கே நிற்கவே அச்சமாக இருந்தது.   சங்கடமான சூழ்நிலை.  ‘இந்த ஆள் பேசாம இங்கே தங்காம தன் பேச்சைக் கேட்டு வந்திருந்தா,  அழகா வேலூர் ஓட்டல்ல போய் ஏசியில படுத்து சுத்தமான டாய்லெட்ல ‘இருந்து’…  ஹூம்! எல்லாத்தையும் கெடுத்தானே!’ என்று பெருமூச்சு விட்டான். 

அதற்குள் முருகேசனின் சங்கடம் அதிகமாகவே, புருஷோத்து ஐயனார் அருகில் போய், “வாங்க! தயவு செஞ்சு காரில ஏறிக்குங்க.  கொஞ்சம் நீங்க எல்லாம் எங்கே போவீங்களோ அந்தப் பொதுக்கழிப்பறையை காட்டுங்க!” என்றான் கெஞ்சலாக.

முருகேசனின் வலக்கை, இடக்கை, அல்லக்கை, நம்பிக்கை என்று கேலியாக அழைக்கப்படும் புருஷோத்து முருகேசனின் பழக்க வழக்கங்கள் நன்றாகத் தெரிந்ததால் எப்போதுமே டிக்கியில் கந்தல் துணி கொஞ்சம் வைத்திருப்பான்.  ஓவராகக் குடித்து விட்டு வாந்தி எடுத்தால் சுத்தம் செய்ய வேண்டுமே? இப்போது முருகேசன் படும் அவஸ்தையைப் பார்த்தால் காரிலேயே ‘வெளிக்கி’ப் போய் விடுவான் போல இருக்க, பின்  சீட்டில் கொஞ்சம் கந்தைத் துணியைப் பரப்பி வைத்து  அதன் மேல் அவனை உட்காரச் செய்தான்.    ஐயனார் முன் சீட்டில் அமர புருஷோத்தமன் வண்டியை எடுத்தான்.  வண்டி போய்க் கொண்டேயிருந்தது. 

“இருங்க! நிறுத்துங்க!” ஒரு வீட்டு வாசலில் வண்டி நிற்க ஐயனார் உள்ளே போய் சாவி வாங்கிக் கொண்டு வந்தான்.

“இன்னும் எவ்வளவு தொலைவு போகணும்யா?  அட சட்! என்ன ஊர்யா இது? ஒரு கக்கூஸு கூட இல்லாம?” என்று கூப்பாடு போட்டான் முருகேசன் அவஸ்தை தாங்காமல். ஐயனார் உக்கிரமாகத் திரும்பிப் பார்க்க முருகேசனுக்குத் தலை தொங்கிப் போனது. புருஷோத்தும் தலையை குனிந்து கொண்டான்.  கழிப்பிடத்தை ஒருவழியாக அடைந்ததும் அதற்குள் ஏறக்குறைய ஓட்டமாக ஓடினான் முருகேசன். தண்ணீருக்காக புருஷோத்து சுற்றுமுற்றும் பார்த்தபோது,  நல்ல வேளையாக கழிப்பறைக்கு உள்ளேயே குழாய் இருக்கிறதென்று ஐயனார் சொன்னான்.

முருகேசனை உள்ளே விட்டு விட்டு இருவரும் வெளியில் நின்ற போது சற்றுத் தொலைவில் ஏதோ எரிவது போல இருக்கவே, “அது என்னய்யா? ஏதாச்சும் தீப்பத்திக்கிச்சா?” என்றான் புருஷோத்து.

“இல்லீங்க! அது பொணம்….  எரியுதுங்க. ஒரு  வயசான கிழவி காலையில போயிடுச்சு. அதான்… இப்பதான் கொஞ்ச முன்னால… நீங்க ஊருக்குள்ளாற வர்றதுக்கு முன்ன எடுத்தாங்க…..”

“என்னது? இது சுடுகாடா? சுடுகாட்டிலயா டாய்லெட் கட்டியிருக்காங்க?” விதிர்விதிர்ப்போன புருஷோத்து அங்கிருந்து ஓடுவதற்குத்  தயாராக நின்றான்.

‘என்ன ஜனங்க இவங்க? சுடுகாட்டில எரியுற பொணத்துக்குப் பக்கத்துல டாய்லட்டை வச்சிக்கிட்டு….  இது என்ன வாழ்க்கைன்னு வாழ்ந்திட்டிருக்காங்க…………’ வாழ்க்கையில மொதன் முறையாக கீழ்த்தட்டு ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான் புருஷோத்து.  திரும்ப பின்சீட்டில் கந்தைத்துணி மேல் ஆசுவாசமாக முருகேசன் அமர்ந்து கொள்ள கார் கிளம்பியது.

திரும்ப ஐயனார் வீட்டு வாசலுக்கு வந்த போது முருகேசனுக்கும் புருஷோத்துக்கும் தூக்கிவாரிப் போட்டது.  அங்கே ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது.  அதில் பாதிக்கு மேல் பெண்கள். எல்லோரும் வாயைப் பொத்திக் கொண்டு முருகேசனை சுட்டிக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  காரிலிருந்து இறங்க முயன்ற முருகேசனை அவசரம் அவசரமாக நிறுத்தி காருக்குள்ளேயே தள்ளினான் புருஷோத்து.

  ஐயனாரை பார்த்ததும் கமலக்கண்ணன் கண்ணைக் காட்டினான்.  ஏதோ தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கே  வந்திருந்தது தெரிந்தது. முருகேசனுக்குப் பதற்றத்திலும் பயத்திலும் உடல் நடுநடுங்கியது.   சகட்டு மேனிக்கு எல்லோரையும் படம் பிடித்து அவர்களைப் பேச வைத்து ரெகார்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ‘இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? முந்தைய தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?’ போன்ற கேள்விகள் மக்களை நோக்கிக் கேட்கப்பட்டன.   தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி சம்பந்தப்பட்டவர்கள் அந்தத் தொகுதியிலுள்ள எல்லா ஊர்களையும் வட்டமடித்துக் கொண்டே இருந்தனர், எங்கேயாவது ஏதாவது சுவாரசியமான நிகழ்வு தென்படுமா அதைத் தொலைக்காட்சியில் போட்டு தங்கள் டி.ஆர்.பி. ரேட்டை ஏற்ற முடியுமா என்ற முயற்சியில்.  அதில் ஒன்றைத் தேடிப் பிடித்து தான் தங்கள் தெருவிற்கு அழைத்து வந்திருந்தான் கமலக்கண்ணன்.

  “ஓட்டுப் போட வீட்டில ஒரு ஓட்டுக்கு தலை எண்ணி  ஏதோ பணம் கொடுக்கிறேன்னு சொல்றாங்களே? அதுக்கு பதிலா வீட்டுக்கு வீடு எங்களுக்கு கழிப்பறை  கட்டிக் கொடுத்திருந்தாங்கன்னா அவுங்களுக்கே சந்தோஷமா ஓட்டு போடுவோமே.  இல்லியா?” என்றார் வீராசாமி தொலைக்காட்சி நிருபரின் மைக்கைக் கையில் வாங்கி.  மொத்த ஜனமும், “ஆமாம்! ஆமாம்!” என்று ஆர்ப்பரித்தது, “மிகவும் இன்றியமையாத கழிப்பறை வசதி கூட  இல்லாத இந்த ஊரில் ஓட்டு கேட்க வந்த நம்ம வில்லு அம்பு கட்சி மாவட்ட செயலரின் நிலைமை பரிதாபத்திற்குரியது. சரக்கோடு அவித்த வேர்க்கடலையை ருசித்து சாப்பிட்ட அவருக்கு  வயிறு கலக்கவே, இந்த ஊரில் கழிப்பறை வசதியில்லாததால்,  டாய்லட்டைத் தேடி இதோ வேலூருக்குத் தான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு விரைகிறார்.  இவரால் தான் தங்கியிருக்கும் சொகுசு ஹோட்டலில் சுத்தமான கழிப்பறையில் ‘இருக்க முடியும்’.   ஆனால் இந்த  மாதிரி கழிப்பறை வசதிகள் இல்லாத கிராமத்திற்கு என்றைக்கு வழி பிறக்கும்?” மைக்கைக் கையில் வைத்துக் கொண்டு  தொலைக்காட்சி நிருபர் பேசிக் கொண்டிருக்க அவசர அவசரமாக  புருஷோத்து காரைக் கிளப்பினான்.  உண்மையாகவே முருகேசனுக்கு அடுத்த கலக்கல் வயிற்றில் ஆரம்பிக்க, டாய்லெட்டைத் தேடித் தான், பின் சீட்டில் உட்கார முடியாமல் சங்கடத்துடன் நெளிந்து கொண்டே,  காரில் வேலூருக்கு விரைந்து கொண்டிருக்கிறான். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.