மிளகு – அத்தியாயம் 61 & 62

 உள்ளால் 1605

நான் அப்பக்கா. இப்படிச் சொன்னால் போதாது. எந்த அப்பக்கா? என் அம்மா பெயரும் அதேதான். போதாக்குறைக்கு என் தங்கையும் அப்பக்கா தான். உலகத்தில் புதிதாகச் சூட்டப் பெயர்களே இல்லாமல் அஸ்தமித்து, எல்லோரும் வேறு வழியின்றி அப்பக்கா என்று நாமகரணம் பெறவேண்டும் என்பது எழுதாவிதியோ என்னமோ. 

நான் மூத்த மகள் அப்பக்கா. வடக்கு கர்னாடகத்தில் உள்ளால் மற்றும் புட்டிகே பிரதேசங்களுக்கு அரசி. அரசியோ அரசனோ நாளும், பொழுதும் ஒரு கணம் விலக்காமல் நிர்வகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்க, நான் இந்த அதிகாலையில் படகுத்துறையில் நின்று கொண்டிருக்கிறேன்.

என் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் எழுந்த பிரச்சனைகள் என்னை வரச்சொல்லி அழைக்கின்றன. ஆட்சி உட்படுதல் எல்லாம் பெரிய சொற்றொடர் பயன்பாடுகள். நூறு இருநூறு கிராமம், கூடவே ஒன்றிரண்டு சிறு நகரங்கள். இவை தான் நான் நிர்வாகம் செய்யும் நிலப்பரப்பு. எனக்கான நகரம் உள்ளால், மற்றும் பெரிய கிராமம் பட்டிகே. சென்னபைரதேவிக்கு ஜெருஸோப்பாவும் ஹொன்னாவரும் நகரங்கள். என் கணவன் வீரு என்ற வீரநரசிம்மருக்கு இருபத்தைந்து குக்கிராமங்கள் மட்டும்.

விஜயநகரப் பேரரசுக்குக் கப்பம் கட்டி சுல்தானிய, முகலாய ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறது எல்லா குறுநில மன்னர்களும் வழக்கமாகச் செய்வது. விஜயநகரைப் பாதுகாக்கவே வலுவான படை வேண்டியிருக்க, நாங்கள் மாசாமாசம் அளிக்கும் கப்பமும் திறையும் அவர்களுடைய தினப்படி பராமரிப்புக்கு வழி செய்கின்றன என்பதே பொருத்தமானது. அமைப்பு இருநூறு வருடம் பழையவை என்பதால் அவற்றை மாற்ற யாரும் முற்படுவதில்லை. நானும் தான்.

உள்ளால் மகாராணியாக நான் அதிகாலையில் ஆட்சி நடத்தப் போகவேண்டும். மூன்று பிரச்சனைகள். மூன்றும் நீர்நிலை சம்பந்தப்பட்டவை

 உள்ளால் துறைமுகத்துக்கு வடக்கே பத்துமைல் தூரத்தில் அம்பெலி என்ற ஒரு கிராமத்தில் ஏரி உடைத்துக்கொண்டு விட்டது என்று விடிவதற்கு ஐந்து நாழிகை முன் தாக்கல் வந்து சேர்ந்தது, அது காலை நாலு மணி. 

சேதம் எதுவும் இல்லை. உடைப்பு அடைபட்டிருக்கிறது என்றாலும் ஏரிக்குள் நீர் வரத்து  உயர்ந்துதான் இருக்கிறதாம். எங்கிருந்து நீர் வருகிறது என்று தெரியவில்லையாம்.  

அங்கிருந்து இன்னும் தென்மேற்கே துர்கி என்று இன்னொரு பெரிய கிராமம். அங்கேயும் பெரிய ஏரி. அது உடையவில்லை. ஆனால் ஒரு வேண்டாத விருந்தினர் வந்திருக்கிறாராம் ஏரிக்கு. என்றால், முதலை ஒன்று எங்கிருந்தோ வந்து ஏரிச்    சதுப்புப் பிரதேசத்தில் மறைந்து திரிகிறதாம். இன்னும் முதலை வாயில் யாரும் போகவில்லை என்றாலும் அதற்கான காலம் வரலாமாம்.  

இந்த இரண்டு ஏரிகளுக்கும் கிழக்கே இருக்கும் இருபது சின்னக் கிராமங்களின் தொகுதியில் நடுநாயகமாக கட்டோலி கிராமத்தில் பரந்து விரிந்த மற்றொரு நீர்நிலை. ஏரிக்குள் இருந்து  கணபதி தும்பிக்கை பின்னமான மர விக்கிரகம் ஆக நீர்ப்பரப்புக்கு மேலே வந்து இருக்கிறாராம். 

முன்னூறு வருஷம் முந்திய கோவில் விக்கிரகம் என்று சொல்கிறார்கள்.   கட்டோலி கிராமத்தில் தினம் ஆயிரம் பேராவது தினம் வந்து தரிசித்துப் போகிறார்களாம். கணபதி வருகை சுற்றுப்புற கிராமங்களில் கொண்டாடப்பட வேண்டியதாக மாறியுள்ளதில் ஆச்சரியம் இல்லைதான். 

கட்டோலி கிராமத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட, ஒவ்வொரு வீட்டிலும் தினம் கணபதியை தரிசிக்க வந்த யாராவது உறவுக்காரர்கள்  விருந்தாட வந்துவிடுகிறார்களாம். இதனால், கிரமமான விவசாயம், தறிநெசவு, பசு பராமரிப்பு, எருமை வளர்ப்பு, ஆடு கோழி பராமரிப்பு எல்லாம் தறிகெட்டுப் போகிறதாகத் தகவல். கட்டோலி கிராமத்தில் கோழிக்கழிச்சல் பரவி கணிசமான கோழி, சேவல்கள் மடிந்து விட்டன என்றும் தெரிகிறது. 

வெளியூர்க் காரர்களுக்கு, கணபதி வரவு  புல்லரிக்க வைப்பது. குடும்பத்தோடு போய்க் காண வேண்டிய நூதன நிகழ்வு, அவசர பக்தி, கூட்டுப் பிரார்த்தனை. பாடல். படையல். மிஞ்சினால் ஒருநாள் விடுமுறை. 

விநாயகர் அருளோடு கட்டோலி கிராமம் சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப ஒரு வழி காண வேண்டும். 

ஆக நான் மூன்று ஏரிகளையும் பார்வையிட்டு மூன்று விதமான தீர்வுகளை அளித்து   வரவேண்டும்.

சித்திரம்: அருண்

இருட்டு இன்னும் விலகாத பொழுது. படகுத்துறை மேற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளதால் சாரட் வேண்டாம் என்று சொல்கிறேன். ராணியம்மா, இந்த இருட்டில் நடக்க வேண்டுமா என்று பாதுகாப்புத்துறை அதிகாரி தயங்கித் தயங்கிச் சொல்கிறார். 

ஏன் என்ன பயம்? நான் சிரித்தபடி கேட்கிறேன். 

பாம்புகள் உலவ வரும் நேரம் இது என்று மகாராணிக்குச் சொல்ல வேண்டாம். அவற்றைத் தீண்டினாலே விஷம் கக்கிவிடும் என்றால் மிதித்துத் துன்பப்படுத்தினாலோ? 

பாதுகாப்பு அதிகாரி சொல்ல வேண்டியதைச் சொன்ன திருப்தியோடு இப்போ என்ன செய்யணும் என்று கேட்கிறவராக நிற்கிறார். 

சரி படகில் ஏறப் பலகை போடுங்கள் என்கிறேன். அபய ராணி என்று பயம் இல்லாதவளாகப் கௌரவமான பட்டப் பெயர் வைத்து முழங்கியாகி விட்டது. என்றாலும் பாம்பும், சிலந்தியும், எப்போதாவது தலைகாட்டிக் கொடுக்கு நிமிர்த்திப் போகும் தேளும், குளியலறையில் விருட்டென்று மேலே பறந்து வந்து அமர்ந்து விதிர்விதிர்க்கச் செய்யும் கரப்பும் இன்னும் என்ன எல்லாம் உண்டு பயம் உண்டாக்க? இன்றைக்கு சந்திக்க வேண்டிய முதலை இருக்கக் கூடும். அந்தப் பட்டியலில் போர்த்துகீசியர்கள் இல்லை என்பது உண்மை. 

நீளமான மலையாள பூமிப் படகு மெல்ல அசைந்தாடிக்கொண்டு வந்து நிற்க படகுத்துறையில் பரபரப்பு. நீண்ட தாங்கு பலகையை படகில் பாதுகாப்பாகத் திருகி  நேரெதிர் முனையை கரையில் வளைந்து தொடவைத்து நான்கைந்து பேர் தனியாகவும், பாரம் சுமந்தும் நடந்து பார்க்கிறார்கள். எல்லோருக்கும் திருப்தி. 

மகாராணி படகில் ஏறத் திருமனசு செய்யணும். 

கேரளப் பிரதேசக்காரனான ஸ்ராங்கு எனச் சொல்லப்படும் படகுத் தலைவன் என் முன்னால் வந்து கைகட்டி வாய் பொத்தி நின்று மெதுவாகச் சொல்கிறான்.   – திருமனசு காலணி அணிய கருணை செய்யணும். 

எனக்கு இந்த மலையாள மொழி உபசாரங்களும், மென்மையாக நினைவூட்டுதலும் கேட்க இனிமையாக இருப்பதால் சிரித்துக் கொண்டு  சொல்கிறேன் –

 ’அப்படியே இருக்கட்டும் படகு ஓட்டிப்போ, காற்று நாம் போகிற திசையில் வீசுகிறது’. 

ஆம் அம்மா, எதிர்காற்றில் துடுப்பு துழைந்து போவதை விடப் பாய் விரித்துக்  காலையில் ஷராவதி நதியில் செல்வது அமைதியான காட்சியல்லவா என்றான் அவன். 

துடுப்பு சத்தம் ஒரு மாதிரி சங்கீதம். பாய் விரித்துப் போகும்போது மௌனம் கலைக்கும் பறவைகளின் இனிமையான சத்தம் சேர்ந்து ஒலிப்பது இன்னொரு சுகானுபவம். இந்தக் காலை நேரத்திலும் உத்தியோகம் செய்யும் பாதுகாப்பு வீரர்களும் அதிகாரிகளும், இரண்டு பிரதானிகளும் என்னை வணங்கி எனக்கு அடுத்து படகில் ஏறிக் கொள்கிறார்கள். படகு நகர்கிறது. 

ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நீர்த் தாவரங்களின் பரப்பும் அடர்த்தியும் எப்போதையும் விட அதிகமாக எனக்குப் படுகிறது. இந்தத் தாவரங்கள் அதிகமாக அதிகமாக நதியில் வாழும் மீன் மற்ற ஜீவராசிகள் குறைவாகும் என்பார்கள். இதை நீர்ப்பாசானம், தண்ணீர்நிலைகள் சம்பந்தமான அதிகாரிகளோடு நாளை பேச்சு நடத்த வேணும் என்று மனதில் போட்டு வைத்துக் கொள்கிறேன். 

காற்று சாதகமாக இருந்ததால் படகு வேகமாகப் போவது போல் ஒரு தோற்றம். என் பிரிய சிநேகிதி மிளகுராணி சென்னபைரதேவிக்கு மரக்கலமும், பாய் விரித்து ஏற்றி வரும் படகும் ஏனோ பிடிக்காது. துடுப்பு வலித்து வரும் படகுகளின் சேர்ந்த துடுப்பொலியும், படகோட்டிகளின் பாட்டொலியும் அவளுக்குப் பிடித்த காட்சி.

அவ்வப்போது நீர்ப்பரப்பில் இருந்து படகுக்குள் தாவிக் குதித்து துடிக்கும் சின்ன மீனை உடனே நதிக்குள் எறிந்து விடுவாள் சென்னா. மீன் பிடித்து விற்பவனுக்கு அது தொழில், தானாக வந்த மீன் துடிதுடித்துச் சாவதைப் பார்த்துக் கொண்டிருப்பது ஈவிரக்கமில்லாத செயல் என்பாள் அவள். 

மலையாள பூமி குட்டநாட்டில் வேம்பநாட்டுக் காயல் கடல் முகமான நீர்ப்பெருக்கில் படகு விட்டுப் போனபோது அவள் இதைச் சொல்லி இருபத்தைந்து வருஷம் ஆகிவிட்டது. என்றாலும் அவளோ நானோ மாறவில்லை. உலகம் தான் மாறிக்கொண்டிருக்கிறது. 

பாவம் சென்னா,  வளர்ப்பு மகனால் அடுக்கடுக்காக அவளுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்க, அவளும் தனியாக நின்று சமாளிக்கிறாள் தான். நேமிநாதனை மிர்ஜான் கோட்டையில் இருந்து வெளியேற்றி இருப்பதாக இரண்டு நாள் முன்பு  ராத்திரி தகவல் வந்த பிற்பாடு மனதில் அமைதியே இல்லை. ராப்பூறா, பகலில் எல்லாம் அவளைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

படகு கரையோரம் ஒதுங்கி நின்றது.  சூரியன் உதயமாகும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத அற்புதமான காட்சி அரங்கேற அதை நோக்கியபடி நான் படகை விட்டு இறங்குகிறேன். எனக்கு இன்னும் எத்தனை சூரிய உதயங்கள் மீதி உள்ளன? தெரிந்தால் இன்னும் விரிவாகத் திட்டமிட, அனைவர் மேலும் அக்கறை செலுத்தி வாழ, இன்னும் வாரணாசி போக, லிஸ்பன் போக நானும் விரும்புவேன். சென்னா லிஸ்பன் போக ஆசைப்பட்ட மாதிரி. 

நான் அம்பெலி கிராம ஒற்றையடிப் பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்ததும் ஊர்ப் பிரமாணி ஓட்டோட்டமாக ஓடி வந்து அம்மா, ஏரிக்கு ஆபத்து இல்லே. உயிர்ச் சேதமும் இல்லே. அம்பாளும் நீங்களும் காப்பாத்திட்டீங்க. மெதுவாகவே போகலாம் என்று கைகூப்பி வணங்கிச் சொல்கிறார். 

புன்சிரித்து வைக்கிறேன். பல்லக்கு சித்தம் செய்திருக்கேன். குதிரை ஏறிப் போகணும் என்றால் அதுவும் உண்டு வாங்க என்று அன்போடு சொல்கிறார். 

அது மட்டக் குதிரை. நான் ஏறி அமர லகான் பிடித்து கூடவே ஒரு சிப்பாய் ஓடி வருகிறான். வேண்டாம் என்று சொல்லலாம் என்று பார்ப்பதற்குள் ஏரி வந்து விட்டது. 

பரந்து நீர் நிறைந்து தளும்பி அலையடித்துக் கொண்டிருக்கும பெரிய நீர்ப் பரப்பு பார்க்கும்தோறும் மனதில் சாந்தியையும் அமைதியையும் பரப்பி இருக்கும். இந்த நீர்மட்டம் உள்ளே தண்ணீர் வரத்து கசிந்து இன்னும் ஒரு சில மணி நேரத்தில் கிராமத்தை, பக்கத்தில் இருக்கும் மற்ற கிராமங்களைச் சூழ்ந்து வெள்ளப் பெருக்காக சீறிச் சினந்து பெருகி வந்து உயிர் கொல்ல, பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் நீர்ச் சுழலில் சிக்க வைத்து இழுத்துப் போய் திரும்ப வராத வெளியில் கொண்டு சேர்த்து விடும். 

நேற்று ராத்திரி நான் தான் ஏரிக்குக் காவல், சக்கரவர்த்தினியம்மா. எப்பவுமே நான் தான். என்னை ஏரிக்காவல் சுந்தய்யான்னு கூப்பிடுவாங்க. நாற்பது வருஷமா காவல் இருக்கேன். ஆனா நேற்று ராத்திரி எப்படியோ அசந்துட்டேன். ஏரிக்குள்ளே எங்கே இருந்துன்னு இவங்களுக்கு தெரியாம நீர்வரத்து ஏறிட்டிருந்திருக்கு. இன்னும் அரை மணி நேரம் அப்படியே விட்டிருந்தா ஏரி உடைஞ்சிருக்கும். 

தொண்டை கமற நிறுத்தி, தொடர்கிறார் சுந்தய்யா.

நடுராத்திரிக்கு பூ வாடை. கண்ணைத் திறந்தா அம்பாள்  கொண்டை போட்டு சித்தாடை கட்டிக்கிட்டு காலில் தண்டையும் போட்டு வந்து ஏரிக்கரையில் என் குடிசைக்குள்ளே நுழைஞ்சுட்டு இருக்கறாங்க. சுந்தா எழுந்திருன்னு எங்கம்மா குரல்லே நாலு தடவை சொல்லி அழைக்கறாங்க. ஏதோ கனவுன்னு நான் மறுபடியும் உறங்கப் போறேன். குறிபார்க்கற குறமகள் வச்சிருக்கற பிரம்பு  கையிலே வச்சிருக்காங்க அதனாலே என் முதுகில் சுறீர்னு ரெண்டு தடவை அடிச்சு என்னை எழுப்பிட்டு உடனே வெளியே போயிடறாங்க. 

அப்படியா? நான் வியப்பை குரலில் கொண்டு வந்து விசாரிக்கிறேன்.  நம்புவதாக குரலும் முகபாவமும் காட்டுவதால் என்ன குறைந்து போச்சு. அவர் பரவசத்தோடு தொடர்கிறார் –

நான் வெளியே போய் என்ன நடந்ததுன்னு தெரியாமலேயே ஏரியோட வடகிழக்கு பகுதி ஓரமாக நீருக்குள்ளே போறேன். மூச்சு பிடித்து முங்கி ஆழத்திலே கண்மறைவாக வச்சிருக்கற சக்கரத்தை வலமிருந்து இடதாக திருப்பறேன். நிலத்தடி தண்ணீர் ஊற்று நீர் ஏரியில் கசிவது நின்னுபோகுது. அதுக்குள்ளே ஏரி உடையப் போகுதுன்னு உங்களுக்கு விடிகாலையிலே சந்தேசம் அனுப்பிட்டாங்க போல் இருக்கு. 

நான் சுந்தய்யாவைத் தோளில் தட்டிப் பாராட்டிப் பின்னால் பார்க்க கருவூல அதிகாரி வராகன் பையை என்னிடம் தருகிறார். உள்ளே இருந்து பத்து வராகன் காசுகளை சுந்தய்யாவிடம் தருகிறேன். 

பிரமாணியும் மற்றவர்களும் என்னைக் கைகூப்பி வணங்கறாங்க. அபயராணி வாழ்கன்னு காலைப் பறவைகள் பயந்து தூரமாகப் பறக்க, வாழ்த்தொலி முழக்கி டமாரங்களை அடிச்சு சங்கு முழக்கறாங்க. 

நான் ஏரிக்காவல் சுந்தய்யனிடம் கேட்கறேன். நிலத்தடி தண்ணீர் எப்படி திறந்தது? சில சமயம் நீர் அழுத்தத்தாலே அந்த விசை இடம் வலமாகத் திரும்பி நீர் வரத்து தொடங்கறது நடக்கறதுதான் என்று சாதாரணமாகச் சொல்கிறார் சுந்தய்யா. 

அதை கண்டுபிடித்து தண்ணீருக்குள்ளே முங்கு நீச்சல் போட்டுப்போய் விசையை வலம் இடமாக்கி நிறுத்தற திறமையை இதுவரைக்கும் யாருக்கும் கத்துக்கொடுக்காமல் ரகசியமாக வச்சிருக்கறது தப்பு. ஊர்லே ஒரு பத்து பேருக்காவது சொல்லிக் கொடுக்கணும் என்று கட்டளை இடுகிறேன். 

எல்லோரும் அமைதியாக இருக்க, பிரதானி சொல்கிறார் –அம்மா, அவங்களுக்கு கத்துக்க ஆசைதான். ஆனால் முங்குநீச்சல் கற்றுக்கொள்ள மூச்சை அடக்க வேண்டீருக்கே. அதுக்குத்தான் பயம்.

பிரமாணி சிரிக்க, இரண்டு இளைஞர்கள் நான் வர்றேன் என்று முன்னால் வருகிறார்கள். நான் அவர்களை வரவேற்பதுடன் பிரமாணியிடம் சொல்கிறேன் – ஏதோ ஒரு காலத்தில் எதிரிகளிடமிருந்து நீர்நிலையை காப்பாத்த இப்படி விசைகளை மறைவாக வைத்திருக்காங்க. உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த விசையை இன்னும் அதிக உயரத்தில் தண்ணீர் மட்டத்துக்கு மேலே நிர்மாணம் செய்து இயக்கறதை எளிமைப் படுத்தலாம். 

எல்லாம் செய்து என்னை அடுத்த செவ்வாய்க்கிழமை காலையில் உள்ளாலில் சந்தித்து நிலைமை பற்றி தகவல் சொல்ல ஆணையிடறேன். மகாராணி சித்தம் என்று தலை வணங்கி நிற்கிறார்கள். 

திரும்பிப் பார்க்கிறேன். இனி நிலப் பயணம் தான் என்பதால் நான் சொல்லி விட்டபடி உள்ளால் அரசு மாளிகையின் மூன்று சாரட்களும் புறப்பட்டு வந்து நிற்கின்றன. 

துர்கி கிராமப் பிரதேசத்தில் அடுத்த ஏரிக்கு  சாரட் ஏறிப் புறப்படுகிறேன். 

அம்மா வேகமாகப் போகணுமா? சாரட் ஓட்டும் சாரங்கன் பரிவாகவும் மரியாதையோடும் விசாரிக்கிறான். நிதானமாகவே போ சாரங்கு. காலை சாப்பாடு சாப்பிட்டியா என்று அவனைக் கேட்கிறேன். இல்லை அம்மா, நீங்களே இன்னும் ஆகாரம் கழிக்கலே. எனக்கென்ன அவசரம் என்கிறான்.

 வழியில் தென்படும் முதல் சத்திரத்தில் சாரட் வண்டிகளை நிறுத்தச் சொல்கிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வல்லூர் ராமானுஜ கூடம் என்று பெயர் எழுதிய வழிப்போக்கர் சத்திரத்தை அடைந்து நிற்கின்றன. 

முதல் சாரட்டில் வந்த பாதுகாப்பு வீரர்கள் சாரட்டில் இருந்து கீழே இறங்கி சத்திரத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். வாசலில் இருந்து எட்டிப் பார்த்து விட்டு காலணிகளைக் கழற்றி உள்ளே ஓடுவதைப் பார்த்து புன்னகைக்கிறேன். நான் இது தொடர்பாகக் கொடுத்திருந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சத்திரத்துக்குள்ளே இருந்து நெற்றி நிறைய, தோள்களில், மார்பில், வயிற்றில் என்று துவாதச வடகலை வைஷ்ணவ நாமம் அணிந்திருந்த ஒரு முதியவர் காதில் செருகிய பூணூலோடு இரைந்து கொண்டு வருகிறார்-

இன்றைக்கு வேலைக்காரி வராமல் நானே பெருக்கித் துடைத்து குளித்து வந்து சமையல் பண்ணிண்டிருக்கேன். உப்புமா மட்டும்தான் செஞ்சிருக்கு. ஒருத்தொருத்தருக்கும் மூணு சேர் உப்புமாவும்,  ஒரு ஆழாக்கு மோரும் கொடுக்கப்படும். கூட்டம் போடாமே, சளசளன்னு இரைச்சல் இல்லாமல், ஒருத்தருக்கு பின்னாடி இன்னொருத்தரா நின்னுக்குங்க. 

அவர் பாட்டுக்கு சத்தம் போட்டுக்கொண்டு உப்புமா வைத்த வெங்கல உருளி மேல் பித்தளைக் கரண்டியால் லொட்டுலொட்டென்று தட்டியபடி திரும்ப சொல்கிறார் 

நான் எதற்கும் இருக்கட்டும் என்று பிடவைத் தலைப்பை தலையில் முக்காடாகப் போட்டுக்கொண்டு உள்ளே போகிறேன்.

ஒவ்வொருத்தருக்கும் மூணு சேர் உப்புமா, ஒரு ஆழாக்கு மோர். நகத்தைக் கடிக்காதேடீயம்மா.  

கடைசி வார்த்தைக் கண்டிப்பு எனக்கு. கையை வாயில் இருந்து அவசரமாக எடுக்கிறேன்.

பாதுகாப்பு வீரர்கள் அவர் வாயைப் பொத்தி மரியாதை காட்டச் சொல்ல விரைய நான் வேண்டாம் என்று சைகை செய்கிறேன். எத்தனை சுவாரசியமான மனிதர். நான் என்ன, முகலாய சக்கரவர்த்தி அக்பர் வந்தால் கூட நகத்தைக் கடிக்காமல் வரிசையில் நின்று, ஒரு ஆழாக்கு மோரும், மூணு சேர் உப்புமாவும்தான். 

திரும்ப என்னை நோக்குகிறார் அவர். 

இந்தாம்மா பரதேவதை, பின்னால் கிணத்து ஜலம் பிடிச்சு வச்சிருக்கறது போறுமான்னு பாரு. இல்லேன்னா ஸ்ரமம் பார்க்காம ரெண்டு வாளி கிணத்துலே இரைச்சு மரப் பீப்பாய்லே கொட்டிட்டு கால் அலம்பிண்டு வந்துடேன். உனக்கு நாலு சேர் உப்புமாவா தர்றேன். 

எனக்கு சிரிப்பு பீறிட்டு எழுகிறது. சுவாமிகள் திருநாமம் என்ன என்று பவ்யமாக விசாரிக்கிறேன். ஏண்டியம்மா அதை தெரிஞ்சிண்டாத்தான் ஜலம் ரொப்புவியோ. அப்படின்னா கேளு நான் மாண்ட்யா பொம்மனஹள்ளி செலுவ கேசவ ஐயங்காரன். இந்த வைஷ்ணவ சத்திர தர்மாதிகாரி. இப்போ போறியாடியம்மா? 

எனக்கு இந்த காட்சி நீடிக்க ரொம்ப ஆசை. இவர்களுக்கோ இது எனக்குச் செய்யப்படும் மரியாதைக் குறைச்சலாம். 

பாதுகாப்பு வீரர்களில் துடிப்போடு நின்ற இளைஞர் ஐயங்காரைப் பார்த்து சிரிப்போடு விசாரிக்கிறார்

ஓய் ஐயங்கார் ஸ்வாமின், நீர் யாரென்று நினைத்து அம்மாவை கிணற்றில் தண்ணீர் சேந்தச் சொல்கிறீர்? அவர் இந்த பூமியை ராஜ்யபரிபாலனம் செய்கிற ஸ்ரீமதி அப்பக்கா மகாராணி ஓய். 

ஐயங்கார் ஒரு வினாடி என்னைப் பார்த்தார். தலையாட்டிக்கொண்டு சொல்கிறார் – ரொம்ப சந்தோஷம். உப்புமா நாலு சேர் மோர் ஒரு ஆழாக்கு தரையிலே உக்காந்து சாப்பிடலாம். பெருக்கி வச்சுட்டேன்

பேசியபடி வாழை இலையை வரிசையாக விரிக்கிறார். பூணூல் காதிலிருந்து தோளுக்கு வருகிறது. ஹரி ஓம் என்று ஹரி நாமம் முழங்குகிறார். உட்காரச் சொல்லிக் கைகாட்டுகிறார்..

நான் முதலில் ஓரமாக இருந்த இலைக்கு முன் உட்கார்ந்து அடுத்து என் கூட்டத்தைக் கைகாட்டுகிறேன். கொஞ்சம் தயங்கி அவர்கள் வந்து மூன்றடி தொலைவில் இலையை மாற்றிப் போட்டு உட்கார்கிறார்கள்.

 திவ்யமான உப்பிட்டு கரண்டி கரண்டியாக வட்டிக்கிறார் ஐயங்கார். சரியாக மூன்று கரண்டி உப்பிட்டு ஒவ்வொருவருக்கும் போட்டு எனக்கு ராணி என்பதால் நான்கு சேர் அதாவது நான்கு கரண்டி இலையில் வார்க்கிறார். 

முடித்து விட்டுக் கையலம்பிப் புறப்படும் போது மண்சட்டி குவளையில் அளவுக் குவளையால் ஒரு ஆழாக்கு மோர் ஊற்றி எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். நான் முதலில் எடுத்துக்கொண்டு கைகாட்ட மற்றவர்களும் எடுத்துக் கொள்கிறார்கள். எலுமிச்சைச் சாறு பிழிந்து, மிளகாயும் கொத்தமல்லியும், சன்னமாக இஞ்சியும் அரிந்து போட்டு அமிர்தமாக்கிய மோர் அது.

ஐயங்காரிடம் நன்றி சொல்லிப் புறப்பட்டோம். நன்னா இருந்ததா, சந்தோஷம். உப்புமாவில் எலுமிச்சை சாறு அரைக்கால் குவளை கலந்திருக்கலாம். முந்திரிப் பருப்பு முழிச்சிண்டு இருக்க நெய் கொஞ்சமா ஆரம்பத்திலே ஊத்தி வறுத்து வச்சு கடைசியா சேர்த்திருக்கலாம் என்று கவனத்தோடு சொன்னார். 

 நாளையிலிருந்து உம் சத்திரத்துக்கு தினசரி இரண்டு வீசை முந்திரிப்பருப்பும், ஒரு படி பசுநெய்யும் தர ஆக்ஞை பிறப்பிக்கறேன் என்று சொல்கிறேன். செலுவ ஐயங்கார் நமஸ்காரம் செய்து நிற்க நாங்கள் வெளியேறுகிறோம். ஏப்பம் விட்டது யார்?

இன்னும் பதினைந்து நிமிடத்தில் துர்கி ஏரிக்கரைக்கு வந்து விடுவோம் அம்மா என்று ரதசாரதி சொல்ல நான் கண் மூடி சென்னா பற்றித் தொடர்ந்த நினைவுகளில் மிதக்கிறேன்.

இரண்டு நாள் முன்பு சென்னபைரதேவி அவளுடைய வளர்ப்பு மகனை மிர்ஜான் கோட்டையில் இருந்து வெளியேற்றிய செய்தி   கொண்டு வந்த தூதன் ஏதாவது பதில் இருக்கிறதா அம்மா என்று கேட்டான். 

என் ஆதரவை சென்னபரதேவிக்கு அளிக்கிறேன். ஜெர்ஸோப்பா நாட்டு மகாஜனங்களும் அவருக்கு பெரும் ஆதரவு தரவேண்டும் என்று விரும்புகிறேன் . உத்தர கர்னாடகா பிரதேசத்தின் வியாபார, பொருளாதார வளர்ச்சிக்கு அவருடைய பங்கு கணிசமானது. அவருக்கு எதிரான சிறு போராட்டங்கள் நிலைக்காது. நிலைமை சீராகிறது, பார்க்கலாம்”. 

இதை என் மனதில் இருந்து பேசினேன். ஆனால் என்ன ஆச்சு? நேற்று காலையில் கேலடி அரசதிபர் வெங்கடப்ப நாயக்கர் அனுப்பியிருந்த துரிதச் செய்தியில் என்னைக் கடிந்து கொண்டிருக்கிறார், அவருடைய வேடிக்கை விநோத எழுத்துப் பாணியில் – 

பிரியமான அப்புக்குட்டி, சென்னாவை உனக்கும் பிடிக்கும் எனக்கும் பிடிக்கும்; திகம்பர முனிகளை உனக்குப் பிடிக்கும் எனக்குப் பிடிக்காது.  அப்பக்காவை சென்னாவுக்கு பிடிக்கும் எனக்கும் பிடிக்கும். என்னை சென்னாவுக்குப் பிடிக்கும் உனக்குப் பிடிக்குமோ தெரியவில்லை. ஏன் சென்னாவுக்கு ஆதரவு சொல்ல அத்தனை அவசரம்? நீ செய்தி கொண்டு வந்த ஒற்றனிடம் ரகசிய லிகிதமாக எழுதிக் கொடுத்திருக்கலாம். வாய்வார்த்தையாகச் சொல்லி ஜெர்ஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் உன் உள்ளாலிலும் சகலருக்கும் சம்பந்தமுண்டோ இல்லையோ சகலருக்கும் தெரிந்து விட்டிருக்கும். இனிமேலாவது ராஜாங்க ரகசியத்தை அற்பர்களிடம் வாய் வார்த்தையாகச் சொல்லாதே. வாய் நிறைய சந்தோஷமான காரியங்களுக்காக ஏற்பட்டது. உன்னை எனக்குப் பிடிக்கும். உனக்கு என்னை

அப்போது சிரித்தபடி படித்துச் சுருட்டி வைத்துவிட்டாலும், மறுபடி திரும்பத் திரும்பப் படிக்கும்போது வெங்கடப்ப நாயக்கார் சொல்வதின் ஆழமான பொருள் என்னைச் சூழ்ந்து மருட்டுகிறது. 

இந்த விவகாரத்தில் நான் என்ன செயது கொண்டிருக்கிறேன்? அடுத்த குறுநிலத்தின் ஆட்சியைப் பற்றிக் கருத்துச் சொல்ல நான் யார், தனிப்பட்ட முறையில் சென்னா என் நெருங்கிய தோழி என்றாலும்? 

நாளையே ஏதாவது உடன்பாடு ஏற்பட்டு தாயும் மகனும் மீண்டும் சேர்ந்து விட்டால், அதுவும் சென்னாவின் முழு விருப்பத்தோடு நேமிநாதன் அரசராகப் பதவி ஏற்றுக்கொண்டால், என் மேல் அவன் விரோதத்துடன் தானே ஆட்சிக்கு நட்பு – எதிரிக் கணக்கைத் தொடங்குவான்?

அம்மா துர்கி ஏரிக்கரை வந்திருக்கு என்றான் சாரட் ஓட்டி கோவிந்த். நான் தான் ஏரிக்கரைக்கு வந்திருக்கோம் அது நம்மிடம் வரவில்லை என்று வெங்கடப்பா நாயக்கர் பாணியில் அவனிடம் சொல்லி விட்டு இறங்குகிறேன்.

 வெங்கடப்பா தெலுங்கில் நல்ல கவிஞர். எனக்கு தெலுங்கு அவ்வளவாகத் தெரியாவிட்டாலும் அவர் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். ஏரிக்கரையில் இறங்கி நிற்கிறேன்.

நான் பார்த்தபோது முழங்கால் வரை ஏரிநீரில் மூழ்க விட்டுக்கொண்டு பலபேர் எந்த காரியமும் இல்லாமல் ஏரிக்குள் இருந்து எல்லா திசையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஏரிக்குள் இறங்கி நிற்கும் எல்லோரையும் இன்னும் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து அவரவர்களுக்கான காரியங்களில் செயல்படுவதை தொடரச் சொல்லி உத்யோகஸ்தர்கள் பலமாகக் கூவுகிறார்கள். அப்படி வரவில்லை என்றால் முதலை ஊர்ந்து வந்து பிடித்துக் கொண்டால் மீட்க ஒரு முயற்சியும் செய்யப்பட மாட்டாது என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஏரிக் கரையில் நிற்பவர்கள் முதலையைப் பிடிக்க எடுக்கப் போகிற ஒரு ராஜாங்க நடவடிக்கையில் பங்கு பெற அழைக்கப்படுகிறார்க்ள். கிட்டத்தட்ட எல்லோரும் உடனே கலைந்து போய்விடுகிறார்கள்.

அம்மா, இவர் தான் இந்த ஏரிக்குக் காவல் இருக்கும் குகன் என்று வயசன் ஒருவனை என் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார் பிரமாணி. 

இந்த   வாரம் ஷராவதி நதியிலிருந்து திசை திரும்பிய வெள்ளப் பெருக்கில் இந்த முதலை ஏரிக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்று கிராமப் பேச்சாம். முதலை வந்தால் முதல் காவு என்னை மாதிரி காவல்காரங்கதான் என்று ஏரிப் பாதுகாவலன் குரல் தழுதழுக்கச் சொல்கிறான்.  

முதலை வெளியே வந்தால் அதன் ஆயுளை ஓய்த்து விடலாம் ஆனால் வருவேனா என்று அடம் பிடிக்கிறது என்கிறார் பிரமாணி. ஏரியில் மீன்பிடித்தமும் கடல்முகத்துக்கான போத்துவரத்தும் நான்கு நாட்களாக நடக்காமல் வர்த்தகம் நின்று போயிருக்கிறது என்று கிராமப் பெரிய மனிதர்கள் சிலர் என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் என்ன செய்து முதலையை வெளியே கொண்டு வரவேண்டும்? அதனோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமா? 

அம்மா ஒரு கன்னுக்குட்டி அல்லது ஆட்டுக்குட்டியை முளையடிச்சு ஏரிக்கரையில் கட்டி வச்சா, அதுவும் காதை அறுத்து ரத்த வாடையடிக்கக் கட்டி வச்சிருந்தா, இளசு ரத்தம், சதைக்காக முதலை வெளியே வரும். ஆட்கொல்லி புலியை சுலபமாகப் பிடிக்க இதான் செய்யறாங்க என்கிறார் ஒரு ஊர்ப் பிரமுகர். 

எனக்கு சபையில் கோபம் வருவது அபூர்வம். இப்போது வருகிறது. அப்படித்தான் முதலை பிடிக்கணும்னா மனுஷ ரத்தவாடை, மனுஷ உடம்புன்னு படைக்கலாமே. என்னை எடுத்து காதை அறுத்து கட்டி வைக்கச் சொல்லுங்க. முதலைக்கு இந்த அப்பக்கா ராணிக்கிழவி மாமிசம் பிடிக்காமல் போகாது சதை கொஞ்சம்  குறைவு தான் என்றாலும். 

நான் சொல்லி முடிப்பதற்கு முன் அவர் என் காலில் விழுந்து பிழை பொறுக்கச் சொல்லி மன்றாடுகிறார். அவரை எழுப்பி நிற்க வைத்து நகர்கிறேன்.

பாதுகாப்புப் படையில் இருந்து வந்த வீரர்கள் மொத்தம் எண்பத்தேழு பேர் என்று என்னிடம் கணக்குச் சொன்னார் அவர்களின் தலைவர். அவர்கள் கரையில் ஏரி நீர்ப் பரப்பை ஒட்டியும் பத்து பேர் மட்டும் பெரும் கவனத்தோடு நீர்ப் பரப்பில் நின்றும் தொடங்கலாமா என்று ஒரே குரலில் கேட்டு ஜெயவிஜயிபவ என்று முழங்குகிறார்கள். இன்னும் பத்து பேர் பெரிய வலைகளோடு ஏரிக் கரையில் இருந்து ஏரிக்குள் மெல்ல நகர்ந்து போகிறார்கள். திடீரென்று நிசப்தம். எல்லாக் கண்களி, ஏரிக்குள்ளிருந்தன.

ஏரி உள்ளே ஏதோ பெரிய உடம்போடு ஊர்ந்து வருவது கண்டு தண்ணீரில் இறங்கி நின்றவர்கள் அவசரமாக விலகி நீர்ப் பரப்பை விட்டு வெளியே ஓடி வருகிறார்கள். முதலை முதலை என்று குரல்கள் உச்சத்தை அடைய நான் வெகு சிரமப்பட்டு அவர்களை அடக்குகிறேன். 

முதலை நான் நிற்கும் பக்கமாக முன்னேறுகிறது என்று என் பாதுகாப்பு வீரர்கள் கையில் எடுத்த வாளோடு தண்ணீரில் இறங்கப் போகும்போது நான் தடுத்து நிறுத்துகிறேன். இந்த வாளும் வில்லும் முதலைக்கு சாதாரணம். நெருப்பு அம்பு இருந்தால் சித்தம் பண்ணுங்கள் என்கிறேன். 

உடனே பாதுகாப்பு வீரர்கள் உடம்போடு சேர்த்து வைத்திருந்த சிறு பெட்டகத்தில் இருந்து வெடியுப்பையும் கந்தகத்தையும் எடுத்துக் கலந்து நாட்டுத் துப்பாக்கியில் அதை உள்ளாக்கி விசையை முதலை பக்கம் நகர்த்தி இழுத்து விரல் சுண்ட பெரும் சத்தத்தோடு துப்பாக்கி வெடிக்கிறது. 

இல்லை, அதன் மேல் படவில்லை. முதலை வந்த வேகத்தில் ஏரிக்குள் திரும்ப ஓடுகிறது.  ஷராவதி நதியில் நீர்ப்பெருக்கு அதிகமாகி வருவதாக ஒன்றுக்கு மேல் பலர் சொல்கிறார்கள். தண்ணீர் மட்டம் உயரும்போது வெள்ளத்தோடு முதலையும் கரைக்கு வரலாம் என்று நேரிட வேண்டியிருக்கக் கூடும் பெரும் இடர் அத்தனை பேர் மனதிலும் எழுந்திட எல்லோரும் அமைதியாக நிற்கிறார்கள். 

ஏரிக்கு அருகே இருக்கும் குடிசைகளில் வசிப்பவர்களை பத்திரமாக வெளியே அடுத்த கிராமங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யச் சொல்கிறேன் பாதுகாப்பு அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறார்கள்.

நான் சற்று யோசித்து ஏன் சில வீடுகள் மட்டும்? முழு கிராமத்தையும் விட்டு வெளியே வந்து வெறும் இடமாக்கி வைத்தால் முதலை வரும்போது இனம் காணவும் குறி வைக்கவும் எளிதாக இருக்கும் என்கிறேன். 

இருபத்தைந்து பேர் கொண்ட ரோந்துப் படையாக பாதுகாப்பு வீரர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து அடுத்த இரண்டு நாளும் பகலும் ஏரி பிரதேசத்திலும் கிராமப் பரப்பிலும் ரோந்து போக ஆணையிடுகிறேன். 

ஜாக்கிரதையாக முதலை வாயில் மாட்டாமல் ரோந்து செல்லுங்கள். அதே நேரத்தில் எப்படியும் அந்த பயங்கர உயிரினத்தைப் பிடித்து வேட்டையாடிக் கொல்லுங்கள் என்னும்போது என் தொண்டை இடறுகிறது. ஒரு சமணத்தி கொலை செய்யச் சொல்லி ஒன்றுக்கு மூன்று தடவை சொல்லித் தூண்டுகிறேன். எனக்கான சொர்க்கத்தை வேறு யாருக்கோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

நாளையோ மறுநாளோ முதலை வதம் முடிந்தபிறகு கிராமத்தினர்  இல்லம் திரும்பவும், இன்றும் நாளையும் அவர்கள் தங்கியிருக்கும் கோவில்களிலேயே உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதற்கான செலவு அரசாங்கத்தைச் சார்ந்தது என்று சொல்லியபடி நடக்கிறேன். சாரட்டில் உட்கார்ந்து என்னமோ தோன்ற ஏரிக்குள் அசைவு ஏதும் தட்டுப்படுகிறதா என்று பார்க்கிறேன். அனங்காமல் காற்று அங்கே ஓடிக் கொண்டிருக்கிறது. 

கட்டோலிக்கு  அடுத்துப் போக வேண்டும் என்று நினைவு படுத்தும் குரலில் பாதுகாப்பு தலைவர் என்னிடம் மரியாதையோடு தெரிவிக்கிறார். கணபதியை தரிசிக்க வேணும் இல்லையா? வாழைப் பழங்களும், தேங்காய்களும், வாசனை மிகுந்த மலர் மாலைகளும், வெற்றிலைக் கவுளிகளும், பாக்கும் நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். எல்லாம் வாங்கிவிட்டு என்னைக் கூப்பிடுங்கள், புறப்படலாம் என்று சொல்லியபடி நான் ரதத் தட்டில் தலை வைத்து சிறு நித்திரை போக உத்தேசித்துக் கண்களை மூடுகிறேன்.

சென்னபைரதேவி உள்ளால் வந்திருக்கும்போது லிஸ்பன் போய்வர அவள் திட்டமிட்டிருப்பதைச் சொன்னாளே. இன்னும் அதில் தீவிரமாக இருக்கிறாளா? அவள் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் உள்ளாலில் இருந்து புட்டிகே கூடப் போக யோசிப்பேன். அவள் லிஸ்பன் போகும் இரண்டரை மூன்று மாதம் ஜெர்ஸொப்பாவை தற்காலிகமாக நான் நிர்வகிக்கிறேன் என்று சொன்னேனே அது முடியாது என்று தோன்றுகிறது. அவளிடம் எப்போது சொல்வது? மனதை நோவிக்காமல் எப்படி சொல்வது? 

அம்மா நைவேத்தியத்துக்கான பூசைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து விட்டேன். புதியதாக அவித்த கொழுக்கட்டை பலகாரம் கிடைக்குமா என்று தேடினேன். கிடைக்கிறது. ஆனால் ஆராதனைக்குப் படைக்கத் தயங்குகிறார்கள். சுத்தம் குறைவான பொருட்கள் இவை என்று விலகிப் போகிறார்கள் என்றான் பாதுகாப்பு அதிகாரி சிரித்தபடி. தெரியும், அதனால்தான் நான் சமைக்கப்பட்ட பொருள் ஏதும் கேட்கவில்லை என்றேன்.

குதிரைகள் சேணம் அசைய நிற்க, கட்டோலி கணபதிக்கு நமஸ்காரம் செய்ய சாரட்டில் இருந்து வெளியே வருகிறேன். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக வெள்ளமெனத் திரண்ட பக்தர்கள் கூட்டம் ஏதுமில்லை. அப்பக்கா ராணி வருகிறார் அவரோடு அரசு அதிகாரிகளும் வருகிறார்கள் என்பதால் கெடுபிடிகள் இருக்கும் என்று வெளியூர் பக்தர்கள் பயணத்தை ஒத்திப் போட்டிருப்பார்கள். உள்ளூர்க்காரர்கள் இன்று விருந்தாட வேண்டியில்லாததால் அவரவர் தொழிலைக் கவனித்துக் கொண்டிருக்க முடிவு செய்திருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரி என்னிடம் மெதுவான குரலில் சொன்னார். அவர்களைக் கூப்பிடச் சொல்லியிருக்கிறேன் என்றார் அதிகாரி. வேண்டாம், அவர்களைத் தொந்தரவு படுத்த வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒன்று இரண்டாக ஊர்ப் பொதுமக்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். 

வழக்கம்போல் ஊர்ப் பிரமுகர்கள் என்னிடம் பேசத் தயாராக மேல் துண்டால் வாய் பொத்தி நிற்கிறார்கள். துண்டை அகற்றித் தோளில் போட்டுக் கொண்டு சுருக்கமாக, வாழ்த்து எல்லாம் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து பேசச் சொல்கிறேன். கேட்டதின் சாரம் இதுதான் –

இந்த ஏரியில் உத்தர கர்னாடாகப் பிரதேசத்தின் பல பகுதி நீர்நிலைகளில் இருப்பதுபோல் கோடையில் வெள்ளம் வடிவதும் மற்ற காலங்களில் கூடுவதும் சாதாரணமாக நடப்பதில்லை. மழைநீர் சேமிப்பு இருப்பதால் இந்த ஏரி வற்றுவதே இல்லை. ஆகக் குறைவான மழை பெய்தாலும், ஏரி சிறியதென்பதால் சேமிப்பு வழக்கம்போல்தான் இருக்கும். 

இந்த ஆண்டு மழை இருந்தது. ஆனால் வெய்யில் வழக்கத்தை விட மிக அதிகமாக நீண்டநாள் தொடர்ந்ததால் ஏரி வற்றிப் போய் உள்ளே இருந்து மரச் சிற்பமாக விநாயகர் வெளிப்பட்டிருக்கிறார்,

பேசிக்கொண்டே ஏரிக் கரையில் கிழக்கு மூலைக்கு நடந்தோம். பந்தல் போட்டு புது மணல் பரப்பி குலை தள்ளிய வாழை மரங்கள் கட்டி கல்யாண வீட்டு சூழ்நிலை வியாபித்திருந்தது அங்கே. நடுவில் ஜம்மென்று மூன்றடி உயரத்தில் விநாயகர் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார். 

கரம் கூப்பி வணங்குகிறேன். கொண்டுபோன நைவேத்தியப் பொருட்களை கணபதிக்குப் படைத்து என் மகள் பானுமதி விரைவில் மால்பே போய் அவள் கணவனோடு ஊடுதலெல்லாம் தீர்ந்து கூடியிருந்து நிறைவாழ்வு வாழ அருளப் பிரார்த்திக்கிறேன்.

முதல் கிராமத்து ஏரிக்கு முறையான காவல் இன்னும் சிலர் செய்ய, இரண்டாம் கிராமத்து ஏரியில் இருந்து முதலை நீங்க விநாயகன் அருளை அடுத்து வேண்டுகிறேன். பிரார்த்திக்கும்போது கவனிக்கிறேன். வலம்புரியாகத் தும்பிக்கை கீழே சற்றே பின்னப்பட்டிருக்கிறது. காரணம் என்னவாக இருக்கும்? 

மரத்தில் விக்ரகத்தைச் செதுக்கும்போது கைத்தவறுதலாக தும்பிக்கையில் பங்கம் ஏற்பட்டிருக்கலாம்.  அதனால் ஏரியில்  எந்தக் காலத்திலோ விசர்ஜனம் செய்து விக்ரகத்துக்கு விடை கொடுத்திருக்கலாம்.  

காணபத்யம் என்ற கணபதி வழிபாடு இருநூறு, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பெருவாரியாகத் தென்னிந்தியாவிலும் மேற்குக் கரையிலும் பரவியபோது அப்போதைய பேரரசுகள் அதற்குத் தடை விதித்தன. உயிர்நீக்கம் வரை கொடுமையான தண்டனைகள் மத நம்பிக்கை பேரில் ஏற்பட்ட அந்தக் காலத்திலும் பிடிவாதமாக அவசர அவசரமாக வழிபாடு நடத்தியிருந்ததாக வரலாறு சொல்கிறது. 

கணபதி விக்ரகத்தை வைத்து வழிபட்டு அதை மரியாதைபூர்வமாக அகற்ற, களிமண் பிரதிமைகளே ஏற்றவை என்று அந்த விநாயக பக்தர்கள் அறிந்தார்கள். மஞ்சளிலும், களிமண்ணிலும், வெல்லத்திலும், ஏன் பசுவின் சாணகத்திலும் கணபதியைப் பிடித்து வைத்து ஆறு, குளம், கடல் ஏன் கிணறுகளில் அவற்றைப் பின்னர் அமிழ்த்திய காலத்து விநாயகர் இந்த ஏரி விநாயகராக இருக்கலாம். 

அதுவும் இல்லை என்றால் வீட்டில் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்து தற்போது தினசரி வழிபட வசதி இல்லாமல் ஏரிக்குள் யாரோ கொண்டு வந்து விடுத்துப் போயிருக்கலாம்.

நான் சொல்லச் சொல்ல கிராமத்துப் பிரமுகர்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எதுவாக இருந்தாலும் வழிபட்டு விடைகொடுத்து ஏரித் தரையில் ஓய்வு கொள்ள அனுப்பிவைத்த கணபதியை மறுபடி கரைக்குக் கூட்டி வந்து  வழிபடுவது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது. எதற்கும் மத அறிஞர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்கிறேன். 

தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவர்களில் மூத்த பிரமாணி சொன்னார் – அம்மா நல்ல புரிதலோடு தெளிவாகச் சொன்னீர்கள். எங்களுக்கு இதேதான் பிரச்சனை. கணேசர் கரையில் இருக்கட்டுமா ஏரியில் இருக்கட்டுமா? 

நான் சிரிக்கிறேன். ஏரிக்கரையில் ஏற்கனவே கணபதி வீற்றிருக்கிறார். ஊரெல்லாம் நகரெல்லாம் விநாயகர் தான். மஞ்சளில் பிடித்து வீடுதோறும் சுப காரியங்களைத் தொடங்கி வைப்பவர் அவர் தான். வெல்லத்தில் பிடித்த வெல்லப் பிள்ளையாராக அவரை வழிபட்டுக் வயிற்றடியில் இருந்து பிரசாதமாகக் கிள்ளித் தின்றாலும் கோவித்துக்கொள்ள மாட்டார் அவர். 

ஜெய்கண்பதி ஜெய்ஜெய் கண்பதி கோஷங்கள் அதிர, ஏரி கணபதியை ஏரிக்குள்ளேயே அழைத்துப் போய் இருக்க விட்டு அவருடைய ஏரிக்கரை பிரதிமையை வழக்கம்போல் வழிபடுவோம் என்றார்கள் அவர்கள். 

நாளை பௌர்ணமி. அர்ச்சனை, படையல், அபிஷேகம் எல்லாம் செய்வித்து விநாயகரை அனுப்பி வைக்கிறோம். மகிழ்ச்சியாக என்னையும் அனுப்பி வைத்தார்கள் கட்டோலி கிராமத்துப் பெருமக்கள்.

சாரட் புறப்பட, நான் சற்றுக் கண்ணயரலாமா என்று இந்தக் காலையில் இரண்டாம் முறையாக முயல்கிறேன். இருக்கையின் கீழே வைத்துத் துணி மூடிப்போன ஓலை சந்தேசம் உருண்டு கீழே விழுகிறது. குனிந்து தரையில் இருந்து அதை எடுத்து வைக்க சுரீர் என்று இடுப்பில் வலி. ஒரு முழு நிமிடம் அப்படியே குனிந்திருக்கிறேன். வலி போனதும் நேர்கோடாக நிமிர்கிறேன். 

வயது எல்லா துன்பத்தையும் கொண்டு வந்து கொடுத்து வாங்கச் சொல்லி வற்புறுத்துகிறது. அந்த ஓலையை கையில் எடுத்துப் பிரிக்கிறேன். ஏற்கனவே படித்தது தான். கேலடி அரசர் வெங்கடப்ப நாயக்கரின் கவிதா லேகனம். 

போன பௌர்ணமி விருந்தில் விஜயநகர அரசுப் பிரதிநிதியும் கீழ்ப்படிந்த எங்களைப் போன்ற குறுநில மன்னர்களும் மகாராணிகளும் குழுமியிருந்தபோது கேலடி நாயக்கர் கேட்டது நினைவு வருகிறது. 

ஏன் சென்னா வரவில்லை? முன்பை விட உடல் நலம் சீராக இல்லையா அல்லது தில்லிக்கு முகல் ஏ ஆஸம் அக்பர் சக்ரவர்த்திகளை சந்திக்க பயணம் வைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாளா? 

அவர் மூத்த வயதினர் என்பதால் என்னையும் சென்னாவையும் ஒருமையில்தான் அழைப்பார். மூத்த சகோதரரின் வாத்சல்யம் தெரிய செல்லி என்று தெலுங்கில் அவர் தங்கச்சி என அழைக்கும்போது வெங்கடப்ப நாயக்கர் மேல் என்ன சினம் இருந்தாலும் வடிந்து விடும். 

சென்னா தில்லி போவதாக யார் சொன்னாங்க அண்ணா என்று கேட்கிறேன். அவள் லிஸ்பன் தான் போகத் திட்டமிட்டிருக்கிறாள் என்று சொல்ல நினைக்கிறேன். வேணாம், சென்னாவே அண்ணாவிடம் சொல்லட்டும். 

கேலடி அண்ணா சிரிக்கிறார். சென்னா ஓய்வெடுக்க உன் சாம்ராஜ்யத்துக்கு வந்தாளாமே ரொம்ப நல்லது ரொம்ப நல்லது. அவளுக்கும் ஓய்வு தேவை, உனக்கும் ஓய்வு தேவை என்கிறார் சிரிப்பு விலகாமல். 

நான் இதை எப்படி அர்த்தம் பண்ணிக்கொள்வது என்று யோசிக்கிறேன். அது பௌர்ணமி விருந்தில். 

குதிரைகள் தண்ணீர் அருந்தவும் நாங்கள் சற்றே இளைப்பாறவும் சாலை ஓரத் தோப்பில் சாரட்கள் நிற்கின்றன. நேரம் என்ன என்று கேட்பதற்கு முன் பகல் ஒரு மணி ஆகப் போகிறது. உள்ளாலில் இருந்து ஒண்ணரைக்கல் வெளியே இருக்கிறோம் என்று பாதுகாப்பு வீரர் மரியாதையோடு சொல்லி நிற்கிறார் – எதாவது வேணுமா அம்மா? 

வேணும் என்று சொல்ல வாயெடுக்கிறேன். வேணாம். அவர்கள் அத்தனை ஆண்களும் தோப்பின் மரங்களுக்குப் பின்னாலும் கொஞ்ச தூரம் நடந்து பழைய ஆளில்லாத கட்டடங்களின் ஒரமாகவும் குத்தவைத்து சிறுநீர் கழிப்பதைப் பார்த்து முகம் திருப்பிக் கொள்கிறேன்.  

உள்ளால் மகாராணி உட்கார்ந்து நீர்பிரிய முடியாது. பெண்களுக்கே உரிய சுகவீனம். பொறுத்துக் கொள்ளத்தான் வேணும். வேறு வழி? தாகம் எடுத்தாலும் தண்ணீர் பருகுவதை ஒத்தி வைக்கிறேன். அரசு மாளிகை போய்ச் சேர்ந்துதான் தண்ணீரும், மோருமெல்லாம். அற்பசங்கை முடித்துத்தான் எல்லாம்.

இதோ வந்தாகி விட்டது. இன்னும் கால் கல் தொலைவுதான். சாரட்டை நிறுத்தி நடக்கத் தொடங்குகிறேன். கூடவே பாதுகாப்பு அதிகாரிகளும், ஆட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் வருகிறார்கள். தலையில் பருத்தித் துணியால் முக்காடு போட்டுக் கொள்கிறேன். மார்பு மூடி தலையும் மூடும் நீள்துணி இது. காலில் செருப்பின்றி  வேகமாக நடக்கிறேன்.   என் கூட்டம் வேகமாக பின் தொடர்கிறது.  

சாலை ஓரத்தில் இருந்து ஒரு வெள்ளைக்காரன் எதிர்ப்படுகிறான். கூடவே அவன் அமர்த்திக்கொண்டு வந்த துவிபாஷி. 

நான் பியத்ரோ தெல்லா வல்லே. வெனிஸ் நகரில் இருந்து வருகிறேன். 

அவன் சொல்வது, துவிபாஷி மூலம் உடனே மொழிபெயர்ப்பாகிறது. 

வெனிஸ்ஸில் இருந்து தனியாகவா வருகிறீர்கள்? கடவுள் உண்டம்மா என்னோடு என்கிறான் அவன். இளைஞன் தான். 

இதென்ன மொழி நீங்கள் பேசுவது? இத்தாலி அம்மா.  

எங்கெல்லாம் இந்துஸ்தானத்தில் போயிருக்கிறீர்கள்? கண்ட்ஹர், லக்னௌ, தில்லி, மத்துரா அவன் அடுக்கிப் போகிறான். எனக்கு மாளிகைக்குள் போகும் அவசரம். அவனைத் தவிர்க்கப் பார்க்கிறேன். 

இத்தனை பெரிய நகரங்களுக்குப் போய்விட்டு இந்தப் பொட்டல்காட்டுக்கு என்ன காண வந்தீர்கள் என்று நடந்தபடி கேட்கிறேன். அரசியாக இருந்து  காலில் காலணி கூட இல்லாமல் நடந்து வருகிறீர்களே அந்த உலக ஆச்சரியமான நிகழ்வைக் காணத்தான் வந்தேன் என்கிறான். 

பார்த்தாயிற்று தானே, செல்லலாமா? நான் இன்னும் சில அடிகள் நடந்து மாளிகையில் நுழையும் முன் அவனுக்கு இன்றும் நாளையும் தங்கவும், உணவுக்கும் ஏற்பாடு செய்யவும் அரச மாளிகை அலுவலர்களிடம் முணுமுணுக்கிறேன். 

நன்றி சொல்லும் அவனிடம் நான் கழிப்பறைக்கு நடக்கும் முன் சொல்கிறேன் – இது என் பிறந்த மண். காலணி இட்டு இதைப் பிரிய மாட்டேன். முடிந்தால் உருண்டு கொண்டே வருவேன் எங்கும். என் மண் என் மக்கள். 

அவன் கரவொலி செய்தது பின்னால் கேட்கிறது. கூட வந்த மற்றவர்களும். 

அரசி என்றால் நாளைக்கு வரலாற்றில் இடம் பெற இதெல்லாம் சொல்லவும் செய்யவும் வேண்டித்தான் இருக்கிறது.

8 பலம்=1 சேர்; 5சேர்=1 வீசை(426.67 கிராம்); 3.5 சேர்=28 பலம்; 8 ஆழக்கு= 1 படி.


அத்தியாயம் அறுபத்திரெண்டு

அம்பலப்புழை 2000

நான் சாரதா. நான் தெரிசா. நான் கொச்சு தெரிசா. நான் சாரதா தெரிசா.

இன்றைக்கு என் பிறந்தநாள். ஜூலை 4 அமெரிக்காவுக்கு சுதந்திரதினம் என்பதோடு எனக்கும் விசேஷமான தினம். அறுபத்தைந்து வயது ஆகிறது. அம்பலப்புழை தேகண்ட என்றால் சமையல்கார பிராமணர்களின் கிட்டத்தட்ட நூற்றுநாற்பது வருட வரலாறு கொண்ட குடும்பத்தில் வந்தவள். அம்பலப்புழை தேகண்ட பிராமண குடும்பத்தில் இருந்து என் கொள்ளுத்தாத்தா மதம் மாறியதால் அவர் ஜான் கிட்டாவய்யர் ஆனார். நான் மறுபடி மதம் மாறி இந்துவாக, சாரதாவாக ஆனேன்.  ஜான் கிட்டாவய்யரின் மகள் சாரதாவாக இருந்து வல்ய தெரிசா ஆனாள். நான் கொச்சு தெரிசா.  

அம்பலப்புழை குடும்பம் போல  நூற்றுநாற்பது வருட வரலாறு கொண்ட அரசூர் குடும்பத்தில் நான் வாழ்க்கைப்பட்டவள்.  அரசூர் குடும்பத்தில் சங்கர அய்யருக்கு என் கொள்ளுத் தாத்தாவின் தங்கை பகவதி அம்மாள் வாழ்க்கைப்பட்டு வம்சம் விருத்தியானது. பகவதிப் பாட்டியின் பேரன் சின்னச் சங்கரனுக்குத்தான் நான் தாலி கட்டாமலேயே வாழ்க்கைப்பட்டேன்.  அரசூர், அம்பலப்புழை குடும்பங்களை இணைப்பவர்கள் நானும், எங்கள் அன்பு மகன் மருதுவும்.

நான் என் கணவர் சின்னச் சங்கரனை முதலில் சந்தித்தது இந்த அம்பலப்புழையில் தான். சர்வதேசக் கலைவிழா நேரம் அது. டெல்லியில் இருந்து இங்கே அரசாங்க அதிகாரியாக விழாவுக்கு வந்த சின்னச் சங்கரனும், பிரிட்டன் மேற்கு யார்க்‌ஷயர் மாநிலம் கால்டர்டேலில் இருந்து என் வேர்களைத் தேடி அம்பலப்புழை வந்த நானும் சந்தித்துக் கொண்டபோது இயல்பான நட்பாகத் தொடங்கி, காதலாக மாறி காமம் வழிகாட்ட,  பின் நேசம் மேலெழுந்திட   ஆண்டுகள் பலவும் இன்பம் அனுபவித்து வருகிறோம். 

நான் சின்னச் சங்கரனோடு இணை சேரும்போது என் கணவனாக இருந்த முசாபர் அலியும். அவனுக்கு முன் கணவனாக இருந்து இறந்த மெட்காஃபும் நல்ல நண்பர்களாகவே உறவு விலக்கினோம். முசாபர் இன்று ஒரு உற்ற நண்பன். சமீபத்தில் லண்டன் போயிருந்தபோது அவனோடு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். சின்னச் சங்கரன் அல் க்வய்தா தீவிரவாதிகள் ஹைஜாக் செய்த   காத்மாண்டு-புதுதில்லி விமானத்தில் உயிர் இருக்குமா போகுமா என்று தெரியாத நடுக்கத்தில் இருந்த இரவு அது.

அரசூர் குடும்பத்திற்கு நெருங்கிய  உறவாக சங்கரய்யருக்கு அம்மான்சேய் மதறாஸ் வைத்தியநாதன். அவரது மதறாஸ் குடும்பத்தில் வந்தவர் என்னோடு சேர்ந்து அம்பலப்புழையில் ஜான் கிட்டாவய்யர் சைவ உணவு விடுதி நடத்தி வரும் திலீப் ராவ்ஜி.  உணவு விடுதி மட்டுமில்ல, மிளகு, ஏலம், லவங்கம் ஏற்றுமதியிலும் நல்ல லாபம் பார்த்து வரும் திலீப்பின் மனைவி காலம் சென்ற அகல்யா. அவர்களின் மகள் கல்பா என்ற கற்பகம் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் ஃபிசிக்ஸ் பேராசிரியர். லண்டனில் புராதனப் பொருள் விற்பனையில் தடம் பதித்து வரும் என் மகன் மருதுவுக்கு ஆத்மார்த்த சிநேகிதி, காதலி அவள். ஆக இந்த மூன்று குடும்பங்களும் பரஸ்பரம் உறவு பாராட்டி இருப்பவை என்பதோடு நானும் மருதுவும்   இணைப்புகளை உருவாக்குகிறோம் என்பதும் உணரப்பட வேண்டியதாகும். கல்பாவும் மருதுவும் அந்த உறவைத் தொடர்வார்கள்.  

என் ஜீவிதத்தில் அற்புதங்களை நான் தரிசிக்க, அனுபவிக்கத் தொடங்கியது மேற்கு யார்க்‌ஷயரில் இதுவரை இல்லாத அதிசயமாக ஒரு மயில் வந்து ஆடியதில்தான். முப்பது வருடம் முன் நான் கால்டர்டேலில் நடத்தி வந்த பிஷ் அண்ட் சிப்ஸ் கடை வாசலில் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. 

என் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பரான அமேயார் பாதிரியார் அந்த வினோதப் பறவை என்ன என்று வாட்டிகனுக்கு, சங்கைக்குரிய போப் ஆண்டவருக்கு லிகிதம் எழுதி விளக்கம் வந்து சேர எதிர்பார்த்திருந்தார். 

அதற்கு முன், என் முதல் கணவன் மெட்காஃப் உயிரோடு இருந்த காலத்தில் அதிசயமான ஒரு காரை செகண்ட் ஹாண்ட் ஆக வாங்கி அடிக்கடி அங்கே இங்கே மோதி உடைத்து ஒருமாதிரி ஓட்டிக் கொண்டிருந்தான். அந்தக் காரில் விபத்து நிகழ்வது அதிசயமில்லை. பெட்ரோல் தேவையில்லாமல் தண்ணீரில் ஓடுவது என்பதே பேராச்சரியம். 

மெட்காஃப் இறந்துபோய் முசாபரை நான் இரண்டாம் கணவனாகத் திருமணம் செய்து கொண்டபோது அந்தக் காரை ஓட்டிப் போக அவன் விருப்பப் படவில்லை. எனினும் அதன் கியாதி லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கும் பரவ, இங்கிலாந்து ஸ்காட்லாந்து பேரரசியான ஹர் மெஜஸ்ட்டி எலிசபெத் மகாராணி அந்தக்காரைப் பார்க்க விருப்பப்பட்டதால் அமேயர் பாதிரியாரும் மெட்காஃபின் சிநேகிதன் ஒருவனும் காரை லண்டனுக்கு எடுத்துப்போய் அரண்மனை வாசலில் விட அந்த வாகனம் தானே நகர்ந்து விரியத் திறந்த அரண்மனைக் கதவுகள் கடந்து உள்ளே போக, கதவுகள் மறுபடி மூடிக்கொண்டனவாம். அப்புறம் என்னாச்சோ அந்தக் காருக்கு, தெரியவில்லை. 

என் வாழ்க்கையில் அதிசயங்கள் அத்தோடு முடிவடைந்தன என்று நான் கருதியிருந்த காலத்தில் அதாவது இன்றைக்கு முப்பது வருடம் முன்பு சின்னச் சங்கரனை முதலில் சந்திப்பதற்கு முன் அடுத்த ஆச்சரியமான நிகழ்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறையில் நானும் என் அப்போதைய கணவன் முசாஃபரும் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த நேரம் அது. தற்செயலாக அரசூரில் சின்னச் சங்கரனின் பூர்வீகமான வீட்டுக்குப் போயிருந்தேன்.  என்றால் பூட்டியிருந்த கதவுகளுக்கு இந்தப் பக்கம் இருந்து ஒரு ராத்திரி நான் பார்க்க, உள்ளே தீப ஒளியில்  ஹாலில் போட்டு வைத்த ஊஞ்சல் ஆடி அசைந்தபடி இருந்தது. ஊஞ்சலில் குடுமியோடு ஒரு அழகனும் ஆவி ரூபத்தில் ஒரு அழகியும் காதல் புரிந்து கொண்டிருந்தது எனக்கு சிறிது நேரம் கண்ணில் பட்டு நின்று போனது. இந்த மண்ணில் எனக்கு ஏற்பட்ட முதல் அதிசய அனுபவம் அது. 

அதற்கு அப்புறம் நானும் முசாஃபரும்  அம்பலப்புழையில் என் பூர்வீக வீட்டின் சிதிலங்களைப் பார்வையிட்டு விட்டு, நூறு வருடம் முன் சாவக்காட்டு வயசன் என்ற குடும்பத்துக்குப் பரிச்சயமான ஒரு கிழவருக்கு புதையல் கிடைத்த தலத்துக்குப் போனோம். புதையுண்ட போத்தலில் நிறைந்திருந்த ஏதோ தைலத்தில் தோய்த்த பலா இலையை கிழவன் வீசியெறிய அந்த இலையை அசைபோட்டு உண்ட பசுமாடு ஒன்று திடீரென்று கட்டைக்குரலில் இங்க்லீஷில் பேச ஆரம்பித்த அந்த இடத்தில் என் கால் பட்டதும்   கரகரத்த குரலில் என்னை அந்தப் பசு வரவேற்றுப் பேசியது மறக்க முடியாத ஒன்று. 

அதற்கு அப்புறம் முப்பது வருஷம் என் வாழ்க்கையில் அதிசயங்கள் ஏதும் நிகழவில்லை. கடந்த சில மாதங்களாக, குறிப்பாகச் சொல்லப் போனால் வருஷம் 2000 பிறந்தபின் ஆச்சரியகரமான நிகழ்வுகள் மறுபடி தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. 

டிசம்பர் 1999 இறுதியில் நான் என் மகன் மருதுவோடு கொஞ்சம் நாள் லண்டன் கருப்புக் குதிரை வீதி பலமாடிக் குடியிருப்பில் தங்கி இருந்து வர லண்டன் போயிருந்தேன். சின்னச் சங்கரன் காத்மாண்டுவில் இருந்து தில்லி போய்ச் சேர ஏறிய விமானம் மத அடிப்படைத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கண்ட்ஹரில் எந்த நேரமும் சின்னச் சங்கரன் உயிர் போகலாம் என்ற பயங்கரமான சூழ்நிலை என்னைப் பாதித்த டிசம்பர் இறுதி 1999இல் தான் அற்புதங்கள் என்னை திரும்ப சூழ்கின்றன.

சின்னச் சங்கரன் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்டபோது நான் லண்டனில் இருந்து தில்லி போயிருந்தேன். முதல் தடவையாக என் சின்னச் சங்கரன் சங்கூவின் சட்டபூர்வ மனைவி வசந்தி, மகள் பகவதிக்குட்டியோடு கூட சங்கரனின் வீட்டிலேயே தங்கியிருந்தேன். சங்கரன் கந்தஹரில் இருந்து மீட்கப்பட்டு தில்லி பாலம் விமானத்தாவளத்தில் வந்து சேர்ந்தபோது வசந்தி அவனைக் கட்டியணைத்துக் கொண்டபோது என்னையும் அந்த அணைப்பு வளையத்தில் வந்திருக்கச் சொன்னதை மறக்க முடியாது. என்றாலும் நான் குறிப்பிட்ட அதிசயம் அது இல்லை.

தில்லியில் இருந்து அம்பலப்புழை வந்த ராத்திரி வீட்டைச் சூழ்ந்தது ஒரு வினோதமான தாவரம். அசுர மிளகு என்று அதன் பெயரை எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் பிஷாரடி குறிப்பிட்டார்.  பெயரில் என்ன இருக்கிறது? 

சாயந்திரம் நான் கொச்சி நெடும்பாசேரி விமானத் தளத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது வாசல் படி ஓரமாக செடிபோல் இரு புறமும் தழைத்திருந்ததைக் கண்டபோது ஏதோ காட்டுச்செடி வாசலுக்கு வந்திருக்கிறது, நான் இல்லாத நேரத்தில் வாசல் தோட்டத்தை யாரும் கவனிக்காததால் ஏதேதோ தாவரங்கள் அண்டியிருக்கின்றன என்று தோன்ற உள்ளே போகிறேன். 

மனமெல்லாம் சின்னச்சங்கரனின் மனத் துன்பமும், சாவு என்ற பள்ளத்தாக்கின் ஓரம் வரை போய் எட்டிப் பார்த்து திரும்பிய சங்கரனின் பரிதாபத்துக்குரிய நிலையும் தான் நினைவில் முழுக்கச் சூழ்ந்திருந்ததால் வாசல் தாவரம் நினைவில் வரவேயில்லை. 

ராத்திரி எட்டு மணியைப் போல் வீட்டுக் காரியம் செய்து வீட்டைப் பராமரிக்கவும், அத்தியாவசிய சமையல் செய்யவும் நான் ஏற்பாடு செய்திருக்கும் சுகிர்தா என்ற பேரிளம்பெண் வீட்டு குசினியில் முழுக்கப் பற்றிப் படர்ந்து இன்னும் அதிகமாகிக்கொண்டு அந்த அசுரமிளகுக் கொடி ராட்சச வேகத்தில் வீட்டுக்குள் பரவி வருவதை முதலில் பார்த்து குடல் நடுங்க சத்தமிடுகிறாள்.  

 வீட்டு மாடியில் ஓடித் திரிந்த கரப்பான் பூச்சிகளும், எங்கிருந்தோ எப்படியோ ஈர்க்கப்பட்டு வந்து சேர்ந்திருந்த எலிகளும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் மேலே வேகமாக வளர்ந்து வரும் அசுர மிளகுக் கொடிக்குள் நுழைகின்றன. பின் அவை வெளியே வருவதில்லை. 

மேடம் எலி இன்னிக்கு உள்ளே போகும்னா, நானும் நீங்களும் உள்ளே போக எவ்வளவு நேரம் பிடிக்கப் போறது? ஆப்பிரிக்காவிலே காட்டுலே திரியறவங்களைக் கட்டி அணைச்சு ரத்தத்தை உறிஞ்சற மரம் பற்றி பள்ளிக்கூடத்திலே படிச்சிருக்கேன். இங்கே அம்பலப்புழையிலே மாமிசம் தின்னற மிளகுக்கொடு பற்றி, அதுவும் ஒரு மணி நேரத்திலே வீட்டை சூழ்கிற ராட்சச தாவரம் பற்றி கேட்டதே இல்லை. இப்போது தான் பார்க்கிறேன் என்று பயமும் ஆர்வமும் கலந்து கூச்சலிடுகிறாள் சுகிர்தா.  

இரண்டு பக்கமும் பார்த்து விட்டு என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள் அவள். இது வேறு எங்கோ இட்டுச் செல்லும் என்று தோன்ற மெல்ல அவளை ஆலிங்கனத்தில் இருந்து விடுவித்து, கீழே போகச் சொல்கிறேன். மாடிப்படிகள் இறங்கும் பாதி தூரம் வரை அசுர மிளகு பரவியிருக்கிறது.

வீட்டை விட்டுப் போய் என் ஓட்டலில் மேல் மாடியில் என் உபயோகத்துக்காக எழுப்பியிருக்கும் தனி அறைக்குத் தற்காலிகமாகக் குடிபெயரலாம் என்று முடிவு செய்து மாடிப்படி இறங்கும்போது கீழே டாக்டர் பிஷாரடி நிற்கிறார். திலீப் ராவ்ஜியும் ரஷ்ய முதுபெண் என் வயதானவள் ஒருத்தியுமாக வாசலில் தாவர முற்றுகை தவிர்த்து உள்ளே வருவதை பார்க்கிறேன். 

பீஜத்தை கெல்லிப் போடுங்க என்று பிஷாரடி சத்தமாக கீழே வந்து நிற்கும் கிட்டாவய்யர் உணவு விடுதி பணியாளர்களிடம் கூச்சலிடுகிறார். அடுத்த பத்தாவது நிமிடம் வாசலுக்கு நேரே இடம் கொண்ட மிளகுக் கொடியின் வேர் தட்டுப்பட அதை அசைத்துப் பிடுங்கி, வேரை அறுத்தெறிகிறார்கள். 

அதில் ஒரு மிளகை வாயிலிட்டுச் சுவைத்த சுகிர்தா பசுமாடு இங்க்லீஷ் பேசுவது போல் கரகரவென்ற குரலில் எல்லோரையும் போகச் சொல்கிறாள். துப்பு சுகிர்தா துப்பு என்று நான் அவள் தலையைக் குலுக்க தரையில் அவள் மென்ற மிளகு கூழாக வந்து விழுகிறது. துப்பிட்டேன் மேடம் என்று அவளுடைய கிரீச்சிடும் குரலில் சொல்கிறாள் சுகிர்தா. 

பத்தே நிமிடத்தில் மேலே படர்ந்தேறிய அசுர மிளகு தடதடவென்று கீழே குவிந்து விழுந்து குப்பையாகிறது. வீட்டுப் பின்னாலும் பாருங்கள் என்று பிஷாரடி சத்தம்போட நான் மாடியிலும் கொடி வேர் பரப்ப பால்கனியில் மண் நிறைத்த தொட்டிகள் உண்டென்பது நினைவு வர திரும்ப மேலே ஓடுகிறேன். டாக்டர் பிஷாரடியை வாங்க என்று வரவேற்கக் கூடத் தோன்றாமல் கற்கால மனுஷி உசிர் பயத்தில் ஓடுவது போல் செயல்படுகிறேன். 

ராத்திரி பதினோரு மணிக்கு ஹோட்டல் ஸ்ரீகிருஷ்ணா அதிபரும் இன்னும் இரண்டு பேரும் வாசல் அழைப்பு மணி அழுத்துகிறார்கள்.  பால்கனியில் இருந்து பார்க்க, கை ஆட்டுகிறார்கள். ராத்திரி உடுப்பில், பரவாயில்லை என்ன அவசரமோ என்று மாடிப்படி இறங்கி வருகிறேன். 

“மேடம் திலீப் ராவ்ஜி சாரும் மதம்மா ஒருத்தரும் ரூம் போட்டிருக்காங்க என்று ஹோட்டல் அதிபர் ஆரம்பிக்க, எனக்கெதுக்கு அந்த அந்தரங்கம் எல்லாம் என்றதாக கையை அசைத்து மேலே போகலாம் என்கிறேன். 

மதாம்மா  ரூம் சர்வீஸை ஒரு மணி நேரம் முன்னால் கூப்பிட்டு ஏதோ ராட்சச தாவரம் அவங்களை பெட் மேலே இருந்து இறங்க முடியாமல் சூழ்ந்திருக்கறதாக அலர்றாங்க. போய்ப் பார்த்தால் ஷணத்துக்கு ஷணம் மேலே வளர்ற தாவரம் அது. 

யாரோ சொன்னாங்க, உங்க வீட்டுலே முதல்லே வந்து அதை அழிச்சீங்களாம். அவர் முடிப்பதற்குள் நான் களைப்பும்,  பிரயாண அயர்வும், தூக்கத்தில் இருந்து எழுப்ப்பப்பட்ட எரிச்சலுமாக சத்தமிடுகிறேன் –  பீஜத்தை பிடுங்கி எரியுங்க பீஜத்தை பிடுங்குங்க. எரியுங்க. அவர் ஒன்றும் புரியாமல் தன் காலுக்கு நடுவே பார்த்துக்கொள்ள அந்த எரிச்சலிலும் சிரிப்பு வருகிறது. அசுர மிளகு கொடியை பிடுங்கினா வேர் ஒரு இடத்திலே தட்டுப்படும். அந்த பீஜத்தை தூர எரியுங்க அல்லது எரிச்சுடுங்க. கொடி வளராது என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டு உறக்கத்தைத் தொடர மாடியேறுகிறேன். உறக்கம் வரவில்லை. அந்த இரவு சுகிர்தா என் வீட்டிலேயே தங்கியிருந்தாள்.

அடுத்த ஆச்சரியகரமான அனுபவமும் இந்த அம்பலப்புழையில் தான் கிடைத்தது. அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பலம் தரிசித்த பகல் நேரம் பிஷாரடி வைத்தியர் வீட்டுக்கு எல்லோரோடும் நானும் போகிறேன். திடீர்னு அந்த வீட்டையும் அசுர மிளகுக் கொடி சூழ்ந்து படர்ந்து வாடை கனமாகக் கவிந்து வருதுன்னு பிஷாரடி சொல்லி அந்த மிளகுக் கொடியின் பீஜத்தை பிடுங்கிப் போடுகிறார். அப்புறம் சொல்றார் –  அது யார் அந்த சின்னப் பையன். மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கிய இடத்திலே இவன் என்ன பண்றான்? ஓ கதவு சாத்தியிருக்கு. அது எந்தக் காலத்து மிளகுக் கிடங்கு, எந்தக் காலத்துப் பையன்? அவன் யார் என்று யாருக்காவது ஒருத்தருக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்.

 மங்களூர் கடற்கரைக்கு சின்னச் சங்கரன், வசந்தி,  ஜெயம்மா ஜயகர் மேடத்தோடும் போனபோது அப்பா அப்பா என்று அழைக்கிற சிறு பிள்ளைக் குரலை வசந்தி கேட்ட ராத்திரி நினைவு வருகிறது. ஜெயம்மா வீட்டில் உறக்கத்தைப் போக்கித் தட்டி எழுப்பிய பிள்ளைக் குரல் என்னை எழுப்பியது அப்பா என்று யாரையோ அழைத்தபடி. பிஷாரடி சொல்வது போல் அந்தக் குரல் வேறு ஒரு   காலத்தில் இருந்து வருவதாக இருக்கலாம். சோப்புநீரில் சிறு குழலிட்டு ஊதும்போது தெறிக்கும் சின்னக் குமிழிகள் போல் வேறு ஏதோ காலத்தின் குமிழிகளை காலப் பெருவெளியில் மிதக்க வைத்து அரசூர் குடும்பத்தையும், அம்பலப்புழை குடும்பத்தையும், இவற்றோடு உறவு கொண்ட மதறாஸ் குடும்பத்தையும் யாரோ கவன ஈர்ப்பு செய்ய நினைக்கிறார்கள். யாராக இருக்கக் கூடும்? அந்தப் பையன்? யார்  பையன்?

வீட்டுப் பின்னணி, தெருப் பின்னணி, மிட்டாய்க்கடை பின்புலம், அடுத்து கிடங்கு பின்னணி. அவன் காலம் உள்ளடங்கிய நாற்பரிமாண வெளியில் நகர நகர பின்னணி மாறுது. அந்தப் பையன் மட்டும் காலத்தில் நிலைச்சிருக்கான். அவன் பதைபதைப்பு நிஜமானதாக இருக்கலாம். காலக் குமிழிகள்   ஊடாக நம்மோடு,      பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்யறான் அவன்.  சின்னச் சங்கரன் மாதிரி ப்ராணபயத்தில் இருக்கான். கிட்டத்தட்ட நம் எல்லோரையும் நேரடியாக இல்லாவிட்டாலும் ஏதோ காட்சி ரூபமாக பிரத்யட்சப்பட்டு   தொடப் பார்க்கிறான். எனக்கு தோணுறது தப்பாக இருக்கலாம். இப்போதைக்கு ஒன்று மட்டும் நிச்சயம். காலவெளியிலே அவன் நமக்கு வெகு பின்னால் இருக்கப்பட்டவன்.  அவன் நம்மோட காலத்துக்கு வரணும் அல்லது நாம் அவன் காலத்துக்குப் போகணும். காலக் குமிழ்கள் நம்மை பின்னால் கொண்டு போகுமாக இருக்கும். பின்னால் போக முடிந்து போனால் அப்புறம் நம்மோட இந்தக் காலத்துக்கு எப்படி திரும்ப முடியும்? இதற்கு பதில் இன்னும் கிடைக்கலே.

(தொடரும்)

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு: அத்தியாயம் அறுபது மிளகு  அத்தியாயம் அறுபத்துமூன்று

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.