புனர்ஜென்மத்தின் நெருப்பில் எரியும் வாழ்வு

This entry is part 6 of 6 in the series ஜகன்னாத பண்டித ராஜா

கங்காலஹரி

   33. ஓ தாயே, உயர்ந்த மனிதர்கள் சுவர்க்கத்தைத் தங்கள் 
    தெய்வீக வாகனங்களில் சென்றடைகிறார்கள். ஆனால்
    யமனுடைய தூதர்களால் கட்டுப்படுத்தப் படுபவர்கள்
    துரிதமாக நரகத்தில் வீழ்கிறார்கள்.
    இவ்வாறு மக்கள் இரு பிரிவுகளாவது 
    மானிடர்களின் அனைத்துப் பாவங்களையும் அழிப்பவளான
    நீ இல்லாத புனிதமற்ற பிரதேசத்தில்தான் நிகழும்.

34. ஓ அன்னையே! உனது நீர் எத்துணை புனிதமானதென்றால்
    அந்தணர்களைக் கொன்றவர்கள், 
    தங்கள் ஆசிரியர்களின் மனைவியை இச்சிப்பவர்கள், 
    எப்போதும் மதுவின் போதையிலிருப்பவர்கள்,
    பொன்னைக் கொள்ளையடிப்பவர்கள் ஆகிய
    எளிய மனிதர்கள் இறந்தபின் தங்கள் உடல்களை 
    உன் நீர்ப்பெருக்கில் ஒப்படைத்துவிட்டால்
    சுவர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
    பலிகள் கொடுத்தும், பெருமதிப்பு வாய்ந்த பொருட்களை
    தானமாகக் கொடுத்தும் இருப்பவர்களின் பாதங்களை விட
    அவர்களது பாதங்களைக் கடவுள்களும் 
    பெரும் மரியாதையுடன் வழிபடுவார்கள்.

35. எந்தக் காற்று மலர்களின் மணத்தையும் 
    பிரிவினாலும் ஆயுதங்களாலும் உண்டான
    காயங்களால் எவருடைய உயிர்களையும்
    சில பொழுதுகளில் எடுத்துச் செல்கின்றதோ, அது
    உனது விளையாட்டுத்தனமான அசையும் 
    அலைகளின் தொடர்பால் மூவுலகங்களையும்
    புனிதமாக்குகிறது.

36. உலகில் வெகு சிலரே பொதுஜன நலனுக்காக உழைப்பவர்;
    சில தூய இதயங்கள் சுவர்க்கத்தை அடையப் பிரார்த்திப்பவை;
    நீ கருணையுள்ளம் கொண்ட தாய், ஆகையால் 
     ஜகன்னாதனான நான், 
    இரு உலகங்களின் சுமையையும் உன்மீது ஏற்றிவிட்டு
    எப்போதும் மகிழ்ச்சியாக உறங்குகிறேன்.
    (இம்மை, மறுமை - இரு உலகங்கள்)

37.     ஓ அம்மே! எவ்வாறு உன்னால், உன்னிடம் அடைக்கலம்
    புகுந்த தாழ்ந்த ஜனங்களை, அவர்களது உடற்கூறுகளைப்
    புறக்கணிக்க இயலாதோ, அதே போன்று, எனக்கும்
    பலவிதமான பாவங்களிலும் உண்டான ஆசையை
    விட்டொழிக்க இயலவில்லை; ஏனெனில் உலகிலுள்ள
    அனைத்து உயிர்களுக்கும் அவர்களுடைய வழிமுறைகளை
    விட்டொழிப்பது மிகவும் கடினமானதாகும்.

38. சிவனின் சடையினுள்ளே உள்ள நீரானது 
    மத்தளம் போல் எழுப்பும் ஒலியாலும்
    அலைகள் அசைந்து வீசுவதால்
    அசைந்தும் நீண்டும் கரங்கள் போலக் காணப்பட்டு
    சிவனின் சடைபிடித்த மயிரில் 
    விளையாட்டாக அசைந்தும் எறிந்தும்
    கங்கைக் கரையில் மாலைப்போதில் இனிமையாக 
    அவரால் ஆடப்படும் தாண்டவ நடனமானது, 
    எனது துயரங்களை மறக்கச் செய்யட்டும்.

39. ஓ தாயே! எப்போதும் உன்னிடமே
    எனது நல்வாழ்வை ஒப்படைத்தவனான என்னை 
    இந்த அசந்தர்ப்பத்தில் நீ கைவிட்டுவிட்டால்,
    நம்பிக்கை என்பது மூவுலகங்களினின்றும்
    மறைந்துவிடுமல்லவா? உன்னுடைய நிபந்தனைகளற்ற
    கருணை என்பதும் கூட ஆதாரமின்றிப் போய்விடுமே!

40. ஓ கங்கா மாதாவே! உனது அலைகள் வெற்றி முழங்கட்டும்.
    தனது உடலின் இடதுபாகத்தை அன்பினால் தான் பிணைந்த
    இளம் பார்வதியினுடையதாக ஆக்கிக் கொண்ட சிவனின் 
    சடைமுடியிலிருந்து குதித்தெழுந்து தலைமயிரின்
    மிக மென்மையான பகுதியிலிருந்து வழிந்தோடும் 
    உனது நீரலைகள் (இன்னொரு மனையாள் நீ என்றெண்ணி)
    கோபம்கொண்ட கண்களை உடையவளான 
    அழகிய பார்வதியின் கைகளால் துடைக்கப்படுகின்றன.

41. ஓ அன்னையே! தெய்வங்களின் நதியே, 
    மற்ற மனிதர்கள் அடைக்கலம் தேடி, உன்னிடம் 
    புகலடைவதில்லையா, மரியாதைக்குரிய தாயே?
    அவ்வகையில் நீ அவர்கள் வேண்டுவதனைத்தையும்
    கொடுக்கிறாய் என்பது விளங்குகிறது.
    ஆனால் நான் இயற்கையாகவே என் சுபாவத்தில்
    உன்னிடம் பேரன்பு பூண்டுள்ளேன் என்று
    சத்தியம் செய்கிறேன்.

42. உனது புனிதமான மண்ணானது, விளையாட்டாக
    மக்களால் எடுத்து, அறியாமை என்பதனை அழிக்க
    நெற்றியில் ஒரு துளி வடிவான திலகமாக அணியப்படுகிறது.
    அது மதியத்து பலம்வாய்ந்த சூரியனைப்போல
    படைப்புக்கடவுள் எழுதிவைத்த அமங்கலமான 
    எழுத்துக்களை விரைவில் அழித்து விடுகிறது.
    அதுபோல அந்த மண்ணும் எனது கவலைகளை
    முழுமையாக நீக்கட்டும்.

43. தெய்வங்களின் நதியின் கரையிலுள்ள மரங்கள்
    நமது நண்பர்களாகட்டும்; அந்த மரங்கள், 
    மலர்ந்துள்ள பூக்களால் மறைக்கப்பட்டு,    களிப்புடன்
    தங்கள் குறுகிய பிரதேசங்களிலான பார்வையில் மட்டும்
    இருந்து தம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் 
    மனிதர்களைக் கேலி செய்கின்றன.        
    எப்போதுமே அழுக்காக உள்ள தேனீக்களைத் தமது 
    விதவிதமான நறுமணங்களால் இடைவிடாமல்
    புனிதப்படுத்திக் கொண்டும் உள்ளன.

44. மூவுலகங்களிலும் பிரவகிக்கும் தாயே!      
    சிலர் தெய்வங்களை அதிகமான பூசைகளால் வழிபடுவர்;
    மற்றோர் சடங்குகளை அதிகமாகச் செய்வதில் ஈடுபடுவர்;
    இன்னும் சிலர் யோக வழிமுறைகளான
    யம, நியமங்களைக் கடைப்பிடிப்பார்கள்;
    கங்கையன்னையே, நானோவெனில்,      
    எனது விருப்பங்கள் அனைத்தையும் உன் பெயரை 
    தியானிப்பதாலேயே நிறைவேற்றிக்கொண்டு
    இந்த உலகம் ஒரு அற்பமான காய்ந்த புல்கட்டுக்கு 
    சமமானது என்று அறிந்துகொண்டேன்.

45. அடுத்த பிறவியில் புகழ்வாய்ந்தவராய்ப் பிறக்கவேண்டி
    இவ்வாழ்க்கை முழுமையும் உழைக்கும் நல்மனிதர்களுக்கு 
    வரமருளும் தெய்வங்கள் வேறு எவரும் இல்லையா?
    ஆனால், ஒருவரும் துணையின்றி,
    ஒரு நற்செயலும் செய்யாதவர்களுக்கு
    உன்னையன்றி புரப்பவர் யாருளரென என்னால்
    எண்ணிப்பார்க்க இயலவில்லை.

46. ஓ தாயே! உனது நீரை அருந்திவிட்டு நான்
    மயக்கத்திலாழ்ந்த எனது நண்பர்களுடன்
    பொழுதைக் கழிக்க விரைந்து சென்றேன். ஆனாலும்
    அமைதியை எங்கும் பெற்றிலேன்.
    ஓ இரக்க நெஞ்சம் கொண்டவளே!
    நீண்ட நாட்கள் உறக்கமின்றிக் கழித்த என்னை
    இப்போது மென்மையான தென்றலினால் குளிர்ச்சி பொருந்திய
    உனது மடியில் நீண்ட உறக்கம் கொள்ளச் செய்வாய்.

47. ஓ தெய்வங்களின் நதியே! நான் தகுதியற்றவன் என்றெண்ணி
    நீ உதாசீனம் செய்யலாகாது; ஏனெனில் இதுவே 
    ஜகன்னாதனை விடுவிக்கும் தருணம்; ஆகவே 
    உனது கெட்டியான, இனிய கட்டுமானத்தைக் கட்டிக்கொண்டு
    ஒரு பிறைநிலாவையும் உனது கிரீடத்தில்
    பாம்புகளுடன் அணிந்து கொள்வாயாக.

48. உன்னைப்பற்றிச் சிந்திப்பவர்கள் அவமதிப்பு அடைவதில்லை;
    நீ இலையுதிர் காலத்து நிலவைப்போல வெண்மையானவள்;
    உனது கிரீடம் ஒரு வெள்ளைப் பாம்புபோல 
    பிறைச்சந்திரனுடன் தொடர்பு கொண்டது.
    நீ உனது இரு கரங்களிலும் 
    ஒரு குடத்தையும் தாமரை மலரையும் ஏந்தி,
    மற்ற இரண்டையும் வரங்களையும் நன்மையையும் 
    அளிக்கும் வகையில் காண்பித்தபடி
    ஒரு முதலையின்மீது அமர்ந்தவளாகவும்
    உனது அணிமணிகள் அமுதம் பொழிவதற்கு 
    இணையாகவும் தெரிகின்றனை.

49. சந்தனுவின் மனைவியானவள், எப்போதும் 
    உலகாயதமான வாழ்வில் ஈடுபட்டு எரியும் உயிர்களைக் 
    காக்கும் பணியில் தன் அமிழ்தம் போன்ற அழகான முகத்தில்
    திகழும் மெல்லிய புன்னகையுடன் ஈடுபட்டவள்,
    நிலவொளியின் நலத்தைப் பரப்புபவள், 
    எண்ணங்களின் தொகுதியானவள்,
    எனது ஆனந்தத்தை விரைவில் அதிகரிக்கச் செய்யட்டும். 

50. நீ காளியன் எனும் பாம்பின் பகைவனான 
    விஷ்ணுவின் பாதங்களை உனது அலைகளால்
    கழுவுகிறாய். இப்போது  புனர்ஜென்மத்தின் நெருப்பால் 
    சுட்டெரிக்கப்படும் எனது துயரங்களைக் களைவாய்; 
    அவை மந்திரங்களுக்கும், மருந்துகளுக்கும் கட்டுப்படவில்லை.
    அதனால் அடர்ந்த அமிழ்தத் தேறல்கள் உலர்ந்து போக,
    அணிந்த மரகத நகைகள் பொடியாகப் போகும்படி
    தெய்வங்களும் அச்சமுற்றுள்ளனர்.

51.     ஓ அன்னையே, சூதாட்டத்தில், சிவபிரான் பார்வதியிடம்
    சர்ப்பங்களின் அரசன், யானைகளின் அரசன், 
    தனது அணுக்கத் தொண்டர்கள், பலவிதமான ஆபரணங்கள்,
    தனது காளைவாகனம், பிறைச்சந்திரன் ஆகிய
    அனைத்துப் பெரும் செல்வங்களையும் இழந்தவராகி,
    தன்னையே பணயம் வைக்க எண்ணியபோது,
    கங்கையான நீ, சங்கேதப் புன்னகையுடன் ஒளிந்த
    எண்ணங்களுடன் அந்தப் பார்வதியால் பார்க்கப்பட்டாய்.
    நடனமாடுபவர் தலையில் ஒரு குடத்தை 
    வைத்துக் கொண்டாடுவது போல் 
    உனது அலைகள் மேலும் கீழும் குதிப்பதனால் எழும்
     உனது தாண்டவ நடனம்
    எங்களைப் புனிதமாக்கட்டும்.

52. கங்கை, காமனை அழித்த சிவபிரானின் சடையை
    அலங்கரிப்பவள், எண்ணற்றோரின் துயரங்களை
    விரைவில் நீக்குபவள், யாருடைய அழகிய நீரலைகள் 
    உயரமாக இழிந்து மேல்நோக்கிச் செல்கின்றனவோ, 
    அவள் என் உடலின் உறுப்புகளைப் புனிதமாக்கட்டும்.

53. அமிழ்தத்தின் அலைகள் என்னும் பெயரில் 
    ஜகன்னாதனால் இயற்றப்பட்ட இந்தக் கவிதையைப்
    படிப்போர்க்கு எங்கும் எப்போதும் 
    வாழ்வு வளம் பெறட்டும்.



சித்திரம்: சங்கர நாராயணன்

இந்த நூல் இத்துடன் முடிவடைகிறது. ஆனால் நமக்கு அவ்வாறு தோன்றவில்லை; நம்முடன் இத்தனை நாட்களாகப் பயணித்து வந்த ஒருவர் சட்டென விடைபெறும்போது ஏற்படும் ஒருவிதமான சோகம் நெஞ்சை அழுத்துகிறது. அருகே நின்று ஜகன்னாதரின் வாழ்க்கையை அவர் காட்டிய காட்சிகளில் கண்ட நாம் அவர் இவ்வுலகினின்றும் விடைபெறுவதனை சூசகமாகக் குறிப்பிடும்போது உள்ளம் துணுக்குறுகிறோம்.

ஸ்லோகங்களில் காணும் வேண்டுதல்களைக் கண்டால் ஆரம்பத்திலிருந்தே ஜகன்னாதர் கங்கையுடன் ஐக்கியமாகிவிடும் எண்ணத்திலிருந்தார் எனவே எண்ணத் தோன்றுகிறது.

ஸ்லோகங்கள் 46, 47, 48-ல் இதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. -அமைதியை எங்கும் பெறவில்லை, உன் மடியில் நீண்ட உறக்கம் கொள்ள வேண்டும்; ஜகன்னாதனை விடுவிக்கும் தருணம்; கங்கையின் அழகான தெய்வ வடிவம் – என இவைகள் பண்டிதராஜரின் இறுதி விருப்பங்களை நமக்கு உணர்த்துகின்றன.

ஸ்லோகம் 50-ல் புனர்ஜென்மத்தின் நெருப்பில் எரியும் தன் வாழ்வின் நிலையை விளக்குகிறார். கங்கை ஒருத்தியே தனது துயரங்களைக் களையக் கூடியவள் எனக் கூறுகிறார்.

ஸ்லோகம் 51-ல் ஒரு அழகான நிகழ்ச்சியை, சிவனும் பார்வதியும் (சொக்கட்டான்) சூதாடும்போது நிகழ்வதாக ஒரு காட்சியை உண்டுபண்ணி, படிப்பவர்களைக் களிப்பில் ஆழ்த்துகிறார் பண்டிதர்.

ஸ்லோகம் 52 கங்கையில் அமிழும்போது அவள் தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் புனிதமாக்கட்டும் எனும் வேண்டுகோளைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு படியாக நீர்மட்டம் உயர்ந்து வரும்போது, அது 52ம் படிவரை வந்து விட்டதனால் இனி, தான் அந்த அன்னையிடம் சரண் புகவேண்டும் எனும் ஆவலால் எழுதப்பட்ட ஸ்லோகமாக இது எனக்குத் தோன்றுகிறது.

கடைசி ஸ்லோகம், அவர் கங்கையினுள் ஐக்கியமாகுமுன் எழுதிய ஸ்லோகம், சொல்வோர் எல்லாருக்கும் நன்மைகளைப் பயக்கட்டும் எனும் வேண்டுகோளுடன் நிறைவு பெறுகிறது.

கனத்த நெஞ்சத்துடன் நானும் தற்சமயம் விடைபெறுகின்றேன்.

இன்னொருமுறை வாராணசி செல்ல வேண்டும். கங்கைக் கரையில் பஞ்சகங்கா கட்டத்தில் படிகளில் அமர்ந்து இந்த ஸ்லோகங்களைப் படித்து கங்கையை ஜகன்னாதரின் சொற்களால் போற்றிப்  புளகாங்கிதம் எய்த வேண்டும். அதற்கும் அவள் அருள்வேண்டும். 

நிறைந்தது.

Series Navigation<< வீழ்ச்சியடைந்தவர்களால் ஒதுக்கப்பட வேண்டியவை! வீழ்ந்தவர்களால் உரக்கக் கூறப்படாதவை!!

One Reply to “புனர்ஜென்மத்தின் நெருப்பில் எரியும் வாழ்வு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.