பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?

மன்னர்கள் இரண்டுவகையிலாக நினைவு கூறப்படுகிறார்கள். முதலாவதாக, பல இராச்சியங்களை வென்று பெரும் நிலப்பரப்பை தன் குடைக்கீழ் கொண்டு, பன்னெடுங்காலம் ஆண்டவர்கள். இரண்டாவதாக, குறைந்த காலமே, குறுகிய நிலப்பரப்பையே ஆண்டாலும் கல்வியிலும், அருங்கலைகளிலும் பல தலைமுறைகளாகத் தொடரும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றவர்கள். கரிகாற் பெருவளத்தான், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் போன்றோர் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். மகேந்திரவர்ம பல்லவன், முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் போன்றோர் இரண்டாம் வகை. மிக அரிதாக மெய்மை நாட்டம் கொண்ட சுந்தர சோழர், கண்டராதித்தன் என்ற வரிசையும் உண்டு. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கணைக்கால் இரும்பொறை, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பெருஞ்சேரலாதன், கடையெழு வள்ளல்கள், முதலாம், இரண்டாம், மூன்றாம் என்று வரிசை கட்டி வரும் இன்ன பிற சேர, சோழ, பாண்டிய மற்றும் குறுநில மன்னர் கூட்டத்தில் தன் செயல்திறத்தாலும் ஆட்சித்திறத்தாலும் தனித்துத் தெரிபவர்களே பெருமன்னர்கள்.    

பல்லவப் பேரரசின் பெருமன்னர்கள் மகேந்திரவர்மனும்(600-630), அவனது மகன் முதலாம் நரசிம்மவர்மனுமே(630-668). மகேந்திரவர்மன் பெருவீரன் மட்டுமல்லாது பெரும் கலையார்வம் கொண்டவனாகவும் விளங்கினான். பல கோயில்களைக் கட்டியதால் ‘சேதகரி’ என்றும், அக்கோயில்களில் பல வண்ண ஓவியங்கள் தீட்டியதால் ‘சித்திரக்காரப் புலி’ என்றும் அழைக்கப்பட்டான். செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள வல்லத்திலும், திண்டிவனத்திற்கருகில் தளவனூரிலும், அரக்கோணத்திற்கடுத்த மகேந்திரவாடியிலும் இவன் சமணர்களுக்குரிய குகைக்கோயிலைக் கட்டினான். தொடக்கத்தில் சமணனாக இருந்து பின் சமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசரின் வழிகாட்டுதலில் சைவநெறிக்கு மாறினான். பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகையில் ‘குணபரன்’ என்ற தன் பட்டப்பெயரால் குணபரேஸ்வரம் என்ற சிவாலயத்தைக் கட்டுவித்தான். இச்செய்தியை அவனது திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. தென்னாட்டில் மரம், செங்கல், சுண்ணாம்பு இல்லாமல் கற்களைக் குடைந்து ‘கற்றளி’ களைக் கட்டுவித்தவன் இவனே. 

இதுபோக, அந்நாளைய இசைக்கலையில் இந்த மன்னன் புதிய சுரங்களையும், பண்களையும் அவனே அமைக்கக்கூடிய அளவிற்கு தேர்ச்சிபெற்றவனாக இருந்தான் என்பதைக் குடுமியான்மலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. நடன, ஓவியக் கலையில் அவன் சிறப்பைச் சித்தன்னவாசல் ஓவியங்கள் இன்றும் புலப்படுத்துகின்றன. மேலும் இம்மன்னன் சமஸ்க்ருதத்திலும் பெரும் புலவனாக இருந்திருக்கிறான். சமண மதத்தினனாக இருக்கும்போது புத்தரையும், காபாலிக சைவர்களையும் நையாண்டி செய்து ‘மத்தஹாஸப் பிரஹசனம்’ என்றொரு களிநாடகமும் இயற்றியிருக்கிறான்.     

இவனது மகனே ‘வாதாபி கொண்டான்’ , ‘மாமல்லன்’ என்று பெரும்புகழ் பெற்ற முதலாம் நரசிம்மவர்மன். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள் மகேந்திரவர்மன் காலத்திலேயே தொடங்கப் பெற்றாலும், இவனுடைய காலத்திலேயே முடிவுற்றன. மாமல்லபுரம் துறைமுகத்தை செப்பம் செய்து தன் நாட்டுத் தலைமைத் துறைமுகமாக்கினான். இலங்கைப் படையெடுப்பு தொடங்கப்பட்டது இங்கிருந்தே. சங்கஇலக்கியத்தில் ‘கடல்மல்லை’ என்று வழங்கப்படுவது இதுவே. இவனுடைய தந்தையின் காலத்திலேயே பல்லவப் பேரரசின் மீது படையெடுத்து வந்த இரண்டாம் புலிகேசி புள்ளலூரில் தோற்கடிக்கப்பட்டான். அதே புலிகேசியை நரசிம்மவர்மன் பரியளம், மணிமங்கலம்(சென்னைக்கு அருகில் உள்ளது), சூரமாரம் என்ற மூன்று இடங்களிலும் நடைபெற்ற போர்களிலும் முறியடித்து எல்லையை விட்டுத் துரத்தினான். அதோடு அமையாமல் ,அதேசமயத்தில் எல்லையில் முன்னேறிக்கொண்டிருந்த பாண்டியப்படைகளை விரட்டுவதற்காகச் செல்லவேண்டியதிருந்ததால், தன் படைத்தலைவர் பரஞ்சோதியாரின் தலைமையில் ஒரு பெரும்படையை சாளுக்கியர்களின் தலைநகர் வாதாபியை நோக்கி அனுப்பினான். பல்லவர்கள் வாதாபியை சூறையாடி பெரும் சேதம் விளைவித்தனர். தலைநகரைக் கைப்பற்றி, மண்ணோடு மண்ணாக்கி எல்லையில் வெற்றித்தூணை நிறுவினர். பெரும் செல்வக்குவையையும் பொன்னையும் கைப்பற்றி தன் மன்னன் நரசிம்மவர்மனின் முன் குவித்தார் பரஞ்சோதியார். தம் வெற்றிச்சின்னங்களில் ஒன்றாக வாதாபியிலிருந்து கொண்டுவந்த பெரிய பிள்ளையார் சிலையை அவர் காஞ்சிமாநகரில் நிறுவினார். அதன் பின்னரே தமிழர்களின் முதன்மைத் தெய்வமானார் கணபதி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு சமய இலக்கியங்களில் பிள்ளையார் என்ற சொல் முருகனுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ‘வாதாபி கணபதிம் பஜே’ என்ற பாடலின் முதலடி இந்த வரலாற்றையே குறிக்கிறது. வாதாபி வெற்றிக்குப்பின்னர் வீரபரஞ்சோதியார், அசோகனைப் போல அருட்புகழை நாடி தொண்டருக்குத் தொண்டராக சிறுத்தொண்டரானார். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டநாயனார் இவரே. 

புலிகேசி மகேந்திரவர்ம பல்லவனிடமிருந்து கைப்பற்றிய வேங்கைநாட்டிற்கு  தன்னுடைய தம்பி விஷ்ணுவர்த்தனை மன்னனாக்கி கீழைச் சாளுக்கியர்கள் என்று புதிய ஒரு கிளையை உருவாக்கினான். பின்னாளில் இவன் வழிவந்த விசயாதித்தனுக்கும் இராசராசன் மகள் குந்தவைக்கும் பிறந்த நரேந்திரனுக்கு தன் இளையமகள் அம்மங்கைதேவியை மணம் செய்துகொடுத்தான் இராசேந்திரன். இவ்விருவரின் புதல்வனே முதலாம் குலோத்துங்கன்.

தமிழகத்தின் ஒப்புயர்வற்ற இருபெரும் பேரரசர்களாக ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலாசிரியர் கா.அப்பாதுரையார் கூறுவது முதலாம் இராசராச சோழனும்  முதலாம் குலோத்து சோழனும் ஆவார்கள். தன்னுடைய ஒரே ஆட்சியில் சோழப்பேரரசை பெரும் பேரரசாக்கியவன் இராசராசனே(985-1014). அவனுடைய பேரரசின் விரிவினாலோ, அவன் வீரத்தாலோ மட்டும் பெரியவனல்ல. அரசனுக்கும், பேரரசனுக்கும் உரிய எல்லாப் பண்புகளும் கொண்ட தமிழகப் பேரரசன் மட்டுமல்ல, உலகப் பேரரசன் என்றே அவனைக் கூறலாம். ஒப்பிடுவதாக இருந்தால் அலெக்சாண்டர், சீசர், நெப்போலியன் ஆகியோருடன் மட்டுமே அவனை ஒப்பிட முடியும். இராசராசனின் தொலைநோக்கு அவர்களில் அலெக்சாண்டர் ஒருவனிடம் மட்டுமே இருந்தது. ஆனால் ஆட்சித்திறமையில் எந்தப் பேரரசரையும் அவனுக்கிணையாகக் கூற முடியாது என்கிறார் ஆசிரியர். வேறெந்த அரசர்கள் பெற்ற வெற்றிகளை விடவும் இவனது வெற்றிகள் நிலையான நீடித்த பயனைத் தந்தன. அவன் திறமையினாலேயே நூறாண்டுகளுக்கும், அவனது ஒப்பற்ற பின்தோன்றலான முதலாம் குலோத்துங்கன் திறமையினால் மற்றொரு நூற்றாண்டுக்கும் சோழப்பேரரசு நிலைத்திருந்தது. 

பேரரசில் நேராட்சி எல்லை கடந்த பெரும்பகுதிகளை மண்டலங்களாக்கியது. அதன் சிற்றெல்லையிலுள்ள ஊர்களை அடுத்த பேரெல்லையுடன் தொடர்புறுத்த ‘வளநாடு’ என்ற புதுப்பிரிவை ஆக்கியது, வரி வதிப்பிற்குரிய திட்டமும், வரி அல்லது அரசாங்க வருமானத்தையும், அதற்கீடான மக்கள் வளர்ச்சியையும் ஒப்பிட்டுக் காண்பதற்கெளிதாகும்படி பேரரசெங்கும் நிலஅளவைத் திட்டம் அமுல் செய்தது முதலிய இராசராசன் செயல்களே பிரிட்டிஷ் ஆட்சி வரையிலும் கீழ்த்திசை அறிந்த ஆட்சிப்பெருஞ்செயல்களாகும் என்கிறார் ஆசிரியர். இது போன்ற திட்டங்களை தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தியவன் குலோத்துங்கன். புவிச்சக்கரவர்த்திகளைப் பாடும் கவிச்சக்கரவர்த்திகள் அவன் காலம் முதல்தான் தொடுத்துச் சில தலைமுறைகள் இருந்தார்கள் என்கிறார் ஆசிரியர்.   

பேரரசை வானளாவ உந்தித் தள்ளிய பெருமை இராசராசனுடையது என்றால், அது சரிந்து விழாதபடி தடுத்தாட்கொண்ட பெருமை குலோத்துங்கனை(1070-1122) யே சேரும் என்கிறார் ஆசிரியர். முதல் இராசாதிராசன் (1018-1054), இரண்டாம் இராசேந்திரன் (1051-1063), வீர இராசேந்திரன் (1063-1070) ஆகியோருக்குப் பின்வந்தவன் முதலாம் குலோத்துங்கன். அவனுக்குப்பின் விக்கிரம சோழன் (1118-1136), இரண்டாம் குலோத்துங்கன் (1133-1150), இரண்டாம் இராசராசன் (1146-1163), இரண்டாம் இராசாதிராசன் (1163-1178), மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218), மூன்றாம் இராசராசன் (1216-1256) மூன்றாம் இராசேந்திரன் (1246-1279) என்ற பெரும் அரசர் நிரையைத் தோற்றுவிக்க அடித்தளமிட்டவன் முதலாம் குலோத்துங்கனே. தமிழகப் பேரரசுகள் எதுவும் இப்படி நூற்றாண்டுக் கணக்காக உச்சத்தில் இருந்ததில்லை. அதுமட்டுமல்ல, தந்தையின் ஆட்சிக்காலத்திலேயே பிள்ளையும் சரி மதிப்புடன் ஆட்சிப்பயிற்சி பெற்று ஆளச்செய்தமையால், உலகில் எந்தப் பேரரசு மரபும் காணாத அதிசயத்தை, திறமையில் ஒருவருக்கொருவர் குறையாத பல தலைமுறைப் பேரரசர் மரபை அவன் தோற்றுவித்தான். 

இராசராசன் வரலாறு மட்டும் படித்த எவரும் இதற்குமேல் வெற்றிகளைக் குவித்த மன்னனை கற்பனையிலும் புனைந்து காண்பது அரிது. ஆனால், அவனைக் கடந்த வெற்றிவீரனாக விளங்கியவன் அம்மும்முடிச்சோழன் பெற்ற வெற்றிக்களிறு  ‘கடாரம் கொண்டான்’ இராசேந்திரனே. கற்பனையுலகில் தமிழர் கண்டு மகிழ்ந்த விக்கிரமாதித்தன் வெற்றி முழுதும் கட்டுக்கதையல்ல, இராசேந்திரனின் வெற்றியின் ஒரு நிழலே என்கிறார் ஆசிரியர். முதலாம் இராசேந்திரன் பட்டத்திற்கு வந்தகாலத்திலேயே தென்னகம் முழுவதும் மற்றும் இலங்கையும் உட்கொண்டிருந்த சோழப்பேரரசை வடக்கே இமயம் வரையும், கலம் செலுத்திக் கொண்ட கடாரமும் சேர்த்து பழம் பாண்டியன் நெடியோனது இராச்சியத்தை மறுமுறையும் விரித்தெடுத்தான் இராசேந்திரன். தஞ்சாவூர்ப் பெரியகோயிலுக்கு நிகராக கங்கைகொண்ட சோழபுரத்தை எழுப்பியவனும் இவனே.

 ‘காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும், கங்கை பாடியும்,
தடிகைபாடியும், நுளம்பபாடியும்,
குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும்
முரண்தொழில் சிங்களர் ஈழமண்டலமும்,    
இரட்டபாடி ஏழரை இலக்கமும்,
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரமும்  கொண்டு, தன்
எழில்வளர் ஊழியுள் எல்லாயாண்டும்
தொழுதக விளங்கும்யாண்டே, செழியரைத்
தேசுகொள் கோராச கேசரிவர்மன்….  

என்ற இராசராசனின் மெய்க்கீர்த்தியில் வெற்றிகளில் வியத்தகு வெற்றியாக இங்கு குறித்திருப்பது வடதிசை வெற்றிகளையோ, கடல் கடந்த வெற்றிகளையோ அல்ல. அவையெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிதான் என்றும், ஆட்சி முழுவதும் வென்று பெற்ற வெற்றி செழியரை அதாவது பாண்டியரை வென்று, தேசு அதாவது புகழ் அழித்த வெற்றியே என்பதிலிருந்து சோழருக்கு பாண்டியர் மீதுள்ள பகையுணர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம். காலத்தின் ஊழாக பின்னாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்குப்பிறகு இந்த சோழப்பேரரசை வென்றவர்களும் பாண்டியப்பேரரசே. இத்தகைய பெருமன்னர் வரிசை இல்லாததனாலேயே ஏற்கனவே வலிமை குன்றியிருந்த பாண்டியப் பேரரசு எளிதில் டெல்லி சுல்தான்களின் வசமானது. பெருமன்னர்கள் நிலையான ஆட்சியை வழங்கிக்கொண்டிருந்த வரையில் ஹர்ஷர், அசோகன் போன்ற வடஇந்தியப் பெருமன்னர்களாலும் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பெருமன்னர்களின் காலம் பொற்காலமா? ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ (மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு) நூலைப் படித்தவுடன் இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ‘மங்கலஇசை மன்னர்கள்’ என்ற நூலில் ஒரு புகழ்பெற்ற நாகஸ்வரவித்வானுக்கு குழந்தை பிறக்கிறது. அவருக்கு வீட்டிற்கு வந்து குழந்தையைக் காண நேரமில்லாத அளவிற்கு தொடர் கச்சேரிகள். ஒரு நாள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ரயிலில் கச்சேரிக்கு சென்று கொண்டிருக்கும்போது நாகஸ்வரவித்வானின் ஊரில் ரயில் நிற்கும் அந்தச் சிறியஇடைவெளியில் குழந்தையைக் கொண்டுவந்து காட்டுகிறார்கள். அநேகமாக இது போன்ற காட்சிகள் அன்று போர்க்களத்தில் நடந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லா மன்னர்களுக்கும் காலம் கடந்த புகழ் தேவைப்பட்டிருக்கிறது. தென்நாட்டு மன்னர்களுக்கு வடதிசைப் படையெடுப்பு, இமயத்தில் கால்பதித்தல், மேருவைச் செண்டால் அடித்தல் (செண்டு – கதை)  முதலியன.  வடநாட்டு மன்னர்களுக்கு தென் திசைப் படையெடுப்பு. இன்று ‘அமைதிப்பூங்கா’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் தமிழகத்தைப் பெரும்போர்களால் அன்று உழுது போட்டிருக்கிறார்கள் மன்னர்கள். 

வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை என்று போருக்காகப் பறந்தலைந்திருக்கிறார்கள். எதிரி நாடுகளைக் கைப்பற்ற, எதிரியிடமிருந்து நாட்டைக் காத்துக்கொள்ள, குலப்பழி தீர்க்க என்று பலகாரணங்களால் பெரும்போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதுபோக பெண்கொடுத்த வகையிலும், எடுத்தவகையிலும் நேர்ந்த குடும்பத் தகராறுகளை வைத்து மன்னர்கள் செய்த ஆணவப்போர்கள் வேறு.  எதிரி மன்னன் வாரிசுகள் மீது போர்செய்வதற்காகவே பிள்ளை பெற்றிருக்கிறார்கள் மன்னர்கள். எதிரிப் படையினரிடம் தலைகொடுக்கவே  பிள்ளை பெற்றிருக்கிறார்கள் மக்கள். போருக்கு நடுவே கொஞ்சம்போல வாழ்வு.  அன்றைய போர்ச்சூழலில் மனிதன் நாற்பது வயதுவரை உயிர்வாழ்ந்திருந்தாலே சாதனைதான்.போரின் பெயரால் பெரும் அறமீறல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. எறிபறந்தெடுத்தல், நீர்நிலை உழந்தெடுத்தல் போக எதிரி நாட்டுப் பெண்டிரின் சிகையினைக் கொண்டு பிரிசெய்து யானையை இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.மெய்க்கீர்த்திகளைப் படிக்கும்போது இந்த அறமீறல்களும், பேரழிவுகளுமே நினைவில் எழுகிறது. குழந்தை மணம், பலதார மணம் போன்றவற்றை அந்தப் போர்ச்சூழலின் பின்புலத்திலேயேதான் புரிந்துகொள்ளவேண்டும் போல. 

ஒப்புநோக்க போரில்லாமல் மக்கள் அமைதியாக இருந்த காலம் முதலாம் குலோத்துங்கன் காலம்தான் என்கிறார் ஆசிரியர் கா.அப்பாத்துரை. இந்த ரத்தம் படிந்த காலத்தில் முகிழ்த்தெழுந்தவைதான் இன்று நாம் காணும் கலைப்பொக்கிஷங்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு வழியாக(!?) இந்தப் பெருமன்னர்களின் காலம் சோழப்பேரரசின் வீழ்ச்சியோடு பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. மன்னர்களின் காலம் முடிந்து மக்களாட்சி மலர, முதலாம் உலகப்போர் வரை, மேலும் ஆறு நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.

One Reply to “பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.