வட்டம்

அன்புள்ள எட்வர்ட்,

இந்த இரவில் நரிகளின் ஊளையிடும் ஒலி தூரத்தில் கேட்பது என் உணர்வுகளை மேலும் மேலிட வைக்கிறது.எந்தவிதமான உணர்வுகளின் வழி கடந்த ஒரு வாரமாக பயணிக்கிறேன் என்பதை என்னால் அவதானிக்க முடியவில்லை. மனம் சலனித்துக்கொண்டே இருக்கிறது. போன வாரம் வரலாற்று ஆய்வுக் குழுவில் என் பெயரை இணைத்துக்கொண்டேன். நான் பணி செய்வது கலனல் ஜேம்ஸ் ஸ்டூடனின் கீழ். அவர் என்னிடம் கேட்ட ஏன் வரலாற்று ஆய்வுக் குழுவில் சேர விரும்புகிறாய் எனும் கேள்விக்கு, ஆர்வம் என்று பதிலளித்தேன். பின்னர் தெரிய வந்தது இப்படி பொத்தாம் பொதுவாக பதிலளித்த யாரையும் குழுவில் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை என்று. நான் பதிலளித்த பின் என் கண்களை சிறிது நேரம் பார்த்தார். பின் போகலாம் என்றார். இரண்டு நாட்கள் கழித்து எனக்கு வந்த உத்தரவில் நான் வரலாற்று ஆய்வுக் குழுவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தேன்.

இன்று காலை நாங்கள் கிளம்பினோம். என்னை அவரது உதவியாளராக நியமித்திருந்தார். அதிகாலையிலேயே தன்னை வந்து சந்திக்கும் படி சொல்லியிருந்தார். நான் என் தங்குமிடம் விட்டு அவர் பங்களாவை நோக்கிச் சென்றேன். வெளிச்சத்தை யாரோ அழுத்தி மூடுவது போலும் அது திமிறிக்கொண்டிருப்பது போல் ஒரு அழுத்தமான இருள் கலந்த ஒளி. உள் அறைக்குள் செல்லும் படி பணியாள் தெரிந்த ஆங்கிலத்தில் திணறித் திணறி சொன்னான். அறையில் விளக்கு எரிவது தெரிந்தது. கலனல்  ஒரு புத்தகத்தை படித்துக்குக்கொண்டிருந்தார். நான் அறைக்கதவை மெல்ல தட்டி ஒலி எழுப்பினேன். தொண்டையை கனைத்தபடி ‘கம் இன் ப்ளீஸ்’ என்றார்.

புத்தகத்தை மூடி தன் அருகில் இருந்த டேபிளில் வைத்தார். நான் என்ன புத்தகம் என கண் ஓட்டினேன்.

“இபன் பத்தூட்டாவின் பயண நூல் இது. போராடி ஒரு பிரதியை தருவித்தேன். பி.எம்.எஸ் கப்பலில் போன வாரம் மதராஸ் வந்தடைந்து. பின் அங்கிருந்து பாம்பே. பின் என் கைக்கு வந்தது. உட்கார். டீ அருந்துகிறாயா. அதிகாலையில் வெந்நீரில் டீ அருந்துவது உடலுக்கு உகந்தது’

‘இல்லை கலனல் பரவாயில்லை’

‘இபன் பத்தூட்டாவின் கண்கள் வழி இந்தியா விரிந்து கொண்டே செல்கிறது. இன்றிலிருந்து சுமார் ஐநூறு ஆண்டுகள் முன்பு. மொராக்கோவிலிருந்து இந்தியா சீனா என அலைந்திருக்கிறார். அப்படி அலைவது ஒரு ஆன்மீக மார்க்கம் என்றே தோன்றுகிறது. முழுமையாய் நம்மை ஏதோ ஒன்றுக்கு ஒப்படைக்கும் போது நாம் ஆன்மீகத்துக்குள் சென்று விடுகிறோம். பத்தூட்டாவின் சொற்களின் வழி துக்ளக் பற்றி நிறையவே தெரிய வருகிறது. ஆனால் எங்கு பத்தூட்டா மிகவும் முக்கியமானவராக ஆகிறார் தெரியுமா? அவரின் சொல் வழிதான் ஷிவாதீர்த்தமும் சாமுன்டி தீர்த்தமும் சந்திக்கும் புள்ளிக்கு தெற்கே ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் இருந்தது பற்றி அறிகிறோம். பத்தூட்டா ‘இதுவும் சாத்தியமோ’ என ஒவ்வொரு வரிக்குப் பின்னும் பின்னொட்டு இடுகிறார். பத்துட்டாவை கவிதைக்குள் தள்ளும் ஒரு ஆச்சர்யம் இருந்திருக்கிறது. அதுபற்றித்தான் நாம் ஆராயப்போகிறோம். ‘

நான் உணர்ச்சி மேலிட அமர்ந்திருந்தேன். ஒரு பணிப்பெண் கையில் ட்ரேவும் அதில் பீங்கான் குவளைகளில் ஆவி பறக்கும் தேநீருடனும் வந்தாள். 

சிரித்தபடி ‘உணர்ச்சி வயப்படுதல் வரலாற்றாய்வாளனுக்கு இயல்புதான் எனத் தோன்றும். மாபெரும் உண்மைகளின் முன் மௌனியாக நிற்க முடியாது பார். ஒரு சொட்டு கண்ணீராவது விட வேண்டும். ஏனெனில் மாபெரும் உண்மைகள் கூடவே காவிய சோகத்தையும் உடன் அழைத்து வருகிறது. டீ எடுத்துக்கொள்.

மேலும் நூனிஸ், பேயஸ், மற்றும் ரஸாக்கின் பயண நூல்களை தருவிக்கும் முயற்சியில் இருக்கிறேன், அதிலும் சில நூல்கள் மூல மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன். 

நாம் ஒரு கதையை எழுதப்போகிறோம். கற்பனையில் உதிக்க உதிக்க எழுத்தாளன் கதையை நெய்வது போல் நாம் உண்மையின் துணுக்குகளை இணைத்து இணைத்து ஒரு மாபெரும் வலைப்பின்னலை நெய்யப்போகிறோம். நமக்கான பட்ஜட் ஒதுக்கீடுகளில் எந்த சிக்கலும் வராது. அப்படி வந்தாலும் நான் நிற்க மாட்டேன். அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை கண்டே தீருவேன். மேன்மை பொருந்திய ராணி வாழ்த்துகிறாரோ இல்லையோ, இபன் பத்தூட்டாவின் ஆன்மா நம்மை வாழ்த்தும்.

குறிப்புகள் எடுக்கத் தயார் நிலையில் இரு. இன்றே நாம் கிளம்புகிறோம். செல்லும் இடமெல்லாம் வசதியாய் தங்க இயலாது. கூடாரமிட்டுக்கூட தங்க நேரலாம். ஏனெனில் ராணுவ தளவாடங்கள் விட்டு வெகு தூரம் செல்லப் போகிறோம், காட்டுக்குள். தில்லிக்கலகம் நம் வீரர்களை வெகுவாக பாதித்துள்ளது. நீ பயப்பட வேண்டாம். தில்லியிலிருந்து வெகு தூரம் இருக்கிறது நாம் செல்லப்போகும் இடம். அப்பேர்பட்ட துக்ளக்கால் கூட தொட முடியாத தூரம். இன்னும் ஒரு மணி நேரம், தயாராக இரு.

நான் எழுந்துகொண்டேன். சுவற்றில் விழும் நீண்ட நிழல்கள் அக்கணங்களை மேலும் விநோதமானதாக மாற்றிக்கொண்டிருந்தது.

‘உனக்கு அந்த ராஜியத்தின் பெயரை சொல்லவில்லை அல்லவா.. ஸ்ரீஜயப் பேரரசு. பத்தூட்டாவின் கூற்றுப்படி அதன் முதல் மன்னன் அணங்க ராஜன். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தி டெவில் கிங். அல்லது தி ஏஞ்சல் கிங் என்றும் சொல்லலாம்.’

நண்பா, நான் இக்கடிதத்தை எந்த கிராமத்திலிருந்து  எழுதிக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? ஜயனூர். ராமப்பன் எனும் விசித்திரமான பிறவி சொன்ன மேலுமொரு தகவல் ஸ்ரீஜெயம் என்பது அவ்வூரின் பழைய பெயர்.

நான் தூங்கச் செல்கிறேன். தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா. தாய் தந்தை மற்றும் எமிலியை கேட்டதாகச் சொல்.

அன்புடன்

எர்னஸ்ட் ஜோன்ஸ்.

…………………..

2

ராமப்பனுக்கு வெயில் சுளீர் என்று முதுகை அறைவது வரை தூங்குவது வழக்கம். அன்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்டு உறக்கம் கலைந்தது. கால்வாசி கூட திறக்காத கண்களில்  குதிரையின் மேல் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. அருகில் மற்றொரு குதிரை இருப்பது அது இரண்டு அடிகள் முன் வந்தபின்தான் தெரிந்தது. பின்னால் இருந்த சுமை வண்டிகளிலிருந்து ஒரு பணியாள் வந்து ராமப்பனை உலுக்கினான். 

‘ஏய்யா…ஏய்யா இப்படி குலுக்குற.. விடுய்யா’ என்றபடி ராமப்பான் எழுந்துகொண்டான். 

‘தொரசாருங்க உன்னத்தான் தேடி வந்துருக்காங்க.. எழுந்துக்க… நீதான் ராமப்பனா?’

‘அது செரி.. ஆள் தெரியாமத்தான் இந்த குலுக்கு குலுக்கினியா’

அதற்குள் குதிரை மேலிருந்து ஒரு குரல் கேட்டது ஆங்கிலத்தில்,

‘நீதான் ராமப்பனா’

‘ஆமாம் ஸர்’

‘நாங்கள் கேள்விப்பட்டோம் உனக்கு நன்றாக ஆங்கிலம் தெரியுமென்று. எங்களுக்கு உன் உதவி தேவைப்படுகிறது. நான் கலனல் ஜேம்ஸ் ஸ்டூடன். இது எர்ன்ஸ்ட் ஜோன்ஸ்’

‘ஆம் ஆங்கிலம் ஓரளவுக்கு தெரியும் எனக்கு. எந்த மாதிரியான உதவி வேண்டும் உங்களுக்கு’

‘எங்களுடன் அடுத்த ஒரு மாதமோ இரண்டு மாதமோ இருக்க வேண்டும். இந்த சுற்று வட்டாரத்தில்தான் எங்கள் வரலாற்று ஆராய்ச்சி நிகழும். உனக்கு சம்பளமாக நீ கேட்கும் தொகையும் உணவும் வழங்கப்படும்’

கலனல் பேசிக்கொண்டிருக்க ஸ்டூடன் ராமப்பனை பார்த்துக்கொண்டிருந்தார். அருவருப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். ராமப்பனை பார்த்தாலே சோம்பல் தொற்றிக்கொள்ளும், அப்படி ஒரு பேர்வழி. தினம் உறங்குவது பின் எழுவது, வீட்டில் தாயும் மனைவியும் எதாவது உணவு தயாரித்திருப்பார்கள் அதை உண்ணுவது. பின் சத்திரம் உறக்கம். இதுதான் ராமப்பனின் அன்றாடம். கடந்த ஐந்து வருடமாக இதுவே அன்றாடம். அவனுடன் போராடி தோல்வியை ஒப்புக்கொண்டவர்கள்தான் அந்த ஊர்வாசிகள். ஆனால் ராமப்பன் உடனே இசைந்தான் கலனலின் கோரிக்கைக்கு.

‘நான் உங்களுடன் உங்கள் ஆராய்ச்சி முடிவது வரை இருக்கிறேன். சம்பளமெல்லாம் எனக்கு வேண்டாம். அப்படி எதாவது கொடுக்கவேண்டுமெனில் வீட்டில் கொடுத்துவிடவும். எனக்கு உணவிடுங்கள் போதும்’

பின் அந்தக் குழு பயணிக்கத் துவங்கியது. ராமப்பன் தான் படுத்திருந்த சத்திரத்தின் மூலையிலிருந்து ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டான். பின் செல்லலாம் என்றவனுக்கு அவர்கள் திக்கு அறியாமல் நிற்கிறார்கள் எனத் தெரிய வந்தது. அவனே ஆரம்பித்தான்,

‘நாம் ஏன் துவக்கமாக ஷிவ தீர்த்தமும் சாமுண்டி தீர்த்தமும் சந்திக்கும் இடத்திற்குச் செல்லக்கூடாது?’ 

கலனல் சற்று யோசித்தார். பின் இசைந்தார். அவ்வூரிலிருந்து தெற்காகப் பயணித்து சுமார் ஒரு மணி நேரத்தில் ஆறுகள் சந்திக்கும் இடத்தை அடைந்தார்கள். ராமப்பன் துவங்கினான்,

‘வரலாற்றுக்கு கதைகளும் உதவும் என நினைக்கிறேன். வரலாறே கதைதானே’ இரு குதிரைகளும் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டது. ‘இங்குதான் இந்த தீர்த்த சங்கமத்திற்கு வடக்கில் ஒரு பெரும்போர் நிகழ்ந்ததாகக் கதை உண்டு. பெயர்களெல்லாம் கிடையாது வெறும் போர்தான். இங்கு திருவிழாக்களில் கூட அப்போர் பாடல்கள் காட்சிகளாக நடிக்கப்படும். பேய்க்கூத்து என்று பெயர். மொழிபெயர்ப்பது கஷ்டம் . பின் நிதானமாக மொழிபெயர்த்துச் சொல்கிறேன். இங்கிருந்து வடக்காக ஒரு பெரும் போர் அல்லது பலப் பெரும் போர்கள் நிகழ்ந்திருக்கலாம்.’

‘ம்… இந்த சங்கமத்திற்கு தெற்காக என்ன உள்ளது?’

‘காடுதான்.. வெறும் காடு. பாதைகளற்ற காடு. கருங்காடு. பேய்க்காடு.’

ராமப்பனின் சித்தரிப்பைக் கேட்டு ஜோன்ஸ் சிரித்து வைத்தான்.

‘காட்டிலிருந்து தூரம் செல்ல செல்ல பாறைகள் பாறைகளாலான சிறு குன்றுகள். ஒரே காட்டு வாழை மரங்கள். ஏராளமான குரங்குகள்.இந்தத் தகவல் வேறு யாரிடமும் கிடைக்காது. நான் ஒருவனே இந்தக் காட்டுக்குள் ஆன வரை தூரம் சென்று திரும்பியவன்’

ராமப்பன் சற்று விட்டு ‘தெற்கே சற்று தூரத்தில் ஒரு ஆலயம் உள்ளது.’

‘என்ன ஆலயம்?’

‘சற்றே பெரியது. ஆனால் கைவிடப்பட்டது. பல காலங்களாக கைவிடப்பட்டது.’

‘நீ சென்றுள்ளாயா?’

‘என்னால் செல்ல முடியவில்லை. ஓரிரவு அது கோயில் என்றே தெரியாமல் அதன் முக மண்டபத்தில் கிடந்து உறங்கினேன். உக்கிரமான கனவுகள். கண் விழித்தபின் அக்கணமே அந்நள்ளிரவிலேயே அவ்விடம் விட்டு நீங்க வேண்டும் எனும் எண்ணம் என்னை பிடித்துத் தள்ளியது. எழுந்து ஓடினேன். சற்று தூரம் சென்று பார்த்த பின்தான் கண்டுகொண்டேன், அது கோயில் என்று. இருளுக்குள் நிழலுருவாக கோரமாக காட்சியளித்தது. பின் அப்பக்கம் செல்லவேயில்லை.’

‘இப்போது செல்வோம்’ என்றார் கலனல்.

தீர்த்த சங்கமத்திலிருந்து அரைமணி தூரத்தில் இருந்தது அக்கோயில். ராமப்பான் கோயில் முன் அமைதியாய் நின்றான். கோயிலின் கோபுரம் ஒரு தென்னை அளவு இருந்தது. கோபுரத்தை தலைவிரிக்கோலமாக்கி கொடிகள் படர்ந்திருந்தன. அடுத்த சற்று நேரத்திற்கெல்லாம் கோயில் கதவு திறக்கப்பட்டது. நான்கு நாகங்கள் ஊர்ந்து உள்சென்றதை ராமப்பன் பார்த்தான். உள்ளுக்குள் கோயில் குகை போல் நீண்டு சென்றது. உடனடியாக தீப்பந்தங்கள் தயாராயின. குதிரைகள் அப்பால் மரநிழலில் கட்டப்பட்டன. ஒரு பணியாள் குதிரையுடன் இருந்துகொள்ள ஒரு பணியாள் கோபுர வாயிலில் நின்றான். ராமப்பன் கையில் ஒரு தீப்பந்தம். எர்னஸ்ட் கையில் ஒன்று. மெல்ல உள் நுழைந்தார்கள். ராமப்பன் ஒரு கணம் நின்று ‘துரை ஸார்.. நாம் திரும்பிவிடலாம்.. இது சரியென்று படவில்லை எனக்கு.. உண்மை அழகானது.. ஆனால் நம் அறிவின் எல்லையைக் கடந்த உண்மைகளின் பிரதேசங்களுக்குள் நாம் நுழைவது ஆபத்தானது’ என்றான்.

‘பயப்படாதே’ என்றான் எர்னஸ்ட்.

இருளின் நாக்கு தங்களை உள் உறிஞ்சுவதாகத் தோன்றியது எர்னஸ்டுக்கு.

‘வாடையே சொல்கிறது..பாம்புகள் உள்ளன.. வாடையின் நெடி விஷப்பாம்புகளை குறிக்கிறது’

சற்று நேரத்திற்குள் கருவறை கதவை அடைந்தார்கள். பத்து படிகள் கீழிறங்கினால் கருவறைப்படிகள். பாதாளத்தின் இருட்டுக்குள் இறங்குவது போலிருந்தது. கதவுகள் முழுதும் இரும்புச் சங்கிலிகள். பூட்டு எதுவும் இல்லை. ஆனால் தகடுகள் இருந்தன.

ராமப்பனின் உடல் நடுங்குவது அவன் தீப்பந்த அசைவில் தெரிந்தது. செயலற்றவனாய் நின்றிருக்க கலனல்தான் தகடுகளை பிரித்து சங்கிலியை அவிழ்த்து கதவைத் திறந்தார். எந்த மிருகம் அப்படி ஒலி எழுப்புமென அங்கிருந்த மூவரும் அறிந்ததில்லை.  ராமப்பனின் கைகளில் இருந்த தீப்பந்தத்தை கலனல் வாங்கி உள்ளே பார்த்தார், சிலை தெரிந்தது.

ராமப்பன் ‘அம்மா.. காளி என தரையில் விழுந்தான்’

சிலையை சங்கிலியால் கட்டி சுவற்றுடன் பிணைத்திருந்தார்கள். எர்நஸ்ட் லேசாக தன் உடல் நடுங்குவதை உணர்ந்தார். கலனலின் கைகள் கூட லேசாக நடுங்கியது. 

ராமப்பன் நிதானித்தவனாய் ‘இதற்கு மேல் இங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. போர்த்தேய்வம். போருக்கு முன் முழு படையும் கோயிலுக்கு முன் திடலில் கூடியிருக்கும். காளிக்கு அப்போது நரபலி கொடுக்கப்ப்படும். சற்றே தீப்பந்தத்தை தாழ்த்துங்கள்’

காளி சிலையின் அடியில் புடைப்புச் சிற்பமாக ஒருவன் தன் இடக்கையால் சிகையை மேல் இழுத்துக்கொண்டு வலக்கையில் இருக்கும் வாளால் தலையை அறுத்துக்கொள்ளும் காட்சி இருந்தது.

சிலையின் இடைக்கச்சை அசைவதை ராமப்பன் கண்ட போது கலனல் “ஸ்னேக்ஸ்… இந்த இடம் முழுதும் பாம்புகள்’ என்றார்.அவர்கள் வெளி வந்த போது கோபுர வாயிலில் நின்றிருந்த பணியாள் இறந்து கிடந்தான். குதிரைகளும் அதனுடன் இருந்த இரண்டு பணியாட்களும் அங்கு இல்லை. ஒரு சொல் இல்லாமல் வேகமாக இறங்கி காட்டுக்குள் சென்று மறைந்தார்கள் மூவரும்.

……………..

3

முதலில் கலசம் எழுந்தது. பின் கலசத்தைச் சுற்றி வெளிப்புறமாக நான்கு கழுகுகள் விரித்து உயர்த்திய சிறகுகளுடன் திறந்த வாய்க்குள் தெரியும் சிறிய நாவுடன். பின், முழு கோபுரம் எழுந்தது. ஒரு பெரும் மணிச் சத்தம். அணங்கர் விழித்துக்கொண்டார். பகலில் உணவுக்குப்பின் சிறிது கண் அயர்ந்து எழுவதுண்டு. அதுவரையிலான பணியின் களைப்பை அந்த சிறு நித்திரைப்பிரவேசம் போக்கி தெளியச் செய்யும். ஆனால் அன்று பகலிலேயே அந்த கோபுரக் கனவு வந்தது. இது எத்தனையாவது முறை என்று நினைவில்லை. கனவு என்றாலே இந்தக் கழுகு சூழ்ந்த கோபுரம்தான். எழுந்து முகம் கழுவினார்.  அறையை விட்டு வெளிவரவும் ஓலையுடன் காத்திருந்தார்கள். நடந்தடி மன்னர் ஆணைகளை எழுத்து வடிவாகச் சொன்னார். பின் அவர்களிடம் போகலாம் என்று கைகாட்டினார். இரண்டு அடுக்குடன் கூடிய மாளிகை அது. தரை தளத்தில் முற்றத்தின் மூலையில் நீர் வைக்கப்பட்டிருந்தது. சிரமபரிகாரம் முடித்தபின் கிளம்பினார். வாயிலில் குதிரையுடன் காத்திருந்தான் ஏவலாள். வழக்கத்திற்கும் வேகமாக விரைந்தார் அணங்கர். ராஜபாட்டைக்குள் குதிரை நுழைந்தபோது நெஞ்சம் அமைதி கொண்டது. எப்பொழுதும் இருக்கும் செய்யப்போகும் காரியம் பற்றிய கணக்கிடல்கள்கூட இல்லை. மன்னர் காவிய மண்டபத்தில் இருப்பதாக அறிந்து அங்கு விரைந்தார் இலக்கினை தைக்கச் செல்லும் அம்பு போல்.

கண்ணனின் லீலைகளைக் கூறும் பாடலொன்றை பாடிக்கொண்டிருந்தார் ஒரு கவிஞர். மன்னர் கண்மூடி சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தார். காவிய மண்டபத்தின் வாயிலை அடைந்தவர் அங்கிருந்த நான்கு வீரர்களை அழைத்தார்.

‘இன்னும் இரண்டு விநாடியில் இந்த காவிய மண்டபத்தில் யாரும் இருக்கக்கூடாது. இருந்தால் நால்வர் தலையும் எல்லைக்காளி கோயிலில் உருளும்’

ஒரு கணம் திகைத்தவர்கள் உள் விரைந்தனர். 

‘யாரது… உங்களை யார் உள் விட்டது?’

‘அரசே.. நான்தான் காவிய கர்த்தர்களை வெளியேற்ற ஆணையிட்டேன். உங்களுடன் உடனடியாக பேசியாகவேண்டும் அதனால்’

‘எதுவானால்…’

‘நாட்டின் மீது போர் இன்று இரவே தொடுக்கப்படலாம்’

மன்னர் அமைதியானார். அதற்குள் காவிய மண்டபம் காலியானது. மன்னர் அமரும்படி சொல்லவும் அணங்கர் சம்மனமிட்டு தரையில் அமர்ந்தார். கண்மூடி சற்று அமர்ந்துவிட்டு,

‘அரசே.. சார்வ ராஜ்ஜியம் சிவ தீர்த்தத்திற்கு வடக்கே அமைத்துள்ளது. இங்கிருந்து தென் கிழக்கில் உள்ளது தீர்த்த சங்கமம். தெற்கில் எதிரிகள் ஒரு காலத்தில் இருந்தார்கள். காலமுகத் தேவகரின் காலத்தில் தெற்கில் இருந்து படையெடுப்புகள் இருந்தன. இயற்கை அரண்கள் நம்மை காத்தன. ஒரு போரிலும் சிறு சரிவைக் கூட நாம் சந்திக்கவில்லை. வடக்கில் எதிரிகள் இல்லாதபோதிலும் கோட்டைச் சுவருக்கு அப்பால் பெறும் விரிந்த நிலம். மரங்கள் அருகிய பாலையை நெருங்கும் நிலம். கோட்டைக்குள்ளிருந்து எழக் காத்திருக்கும் அம்பின் கூர்நாக்கு வடக்கை காத்தது பகையென ஒன்று வடக்கில் இல்லாதபோதும். சார்வ ராஜ்ஜியம் ஐநூறு ஆண்டுகள் கடந்த சாம்ராஜ்ஜியம். ஒரு தேசம் போரின் புழுதியில் கலைவதும் எழுவதும் மீண்டும் கலைவதுமே பாரத தேசமெங்கும் காணக்கிடைக்கும் காட்சி. ஐநூறு ஆண்டுகளைக் கடந்து நீளும் சார்வ ராஜ்ஜியத்தின் முடிமன்னர் தாங்கள் – வீரகுல தேவகர். உங்கள் ஆட்சியின் போது வடக்கிலிருந்து வந்த ஒரு படை நம் அண்டை தேசமான கூர்ம நாட்டினை சூறையாடியது. தாங்கள் எதுவும் செய்யவில்லை. வடக்கிருக்கும் நம் ஒற்றர்களிடமிருந்து ஒரு பெரும்படை மலைநாகமேன ஒவ்வொரு தேசமாக விழுங்கும் கதைகள் வந்த வண்ணமிருந்தன. ஆனாலும் ஒன்றும் செய்வதாக இல்லை தாங்கள். நான்கு பௌர்ணமிகள் முன் நம் தலைநகரை தெற்கில் தீர்த்தசங்கத்துக்கு அப்பால்கொண்டு செல்லலாம் என அமைச்சரவை முடிவெடுத்தது. கடலென விரியும் தீர்த்த சங்கமத்தை அதைத் தொடர்ந்த காடுகளை அரணாகக் கொண்டால் வடக்கின் படைகள் நம்மை அணுக முடியாது என்பது காரணம். அனுமன் விழா அணுகுவதாகவும் அது முடியட்டுமெனவும் வாழாவிருந்தீர். அம்மன்னன் துக்ளக், டில்லியிலிருந்து தௌலதாபத் வந்து பின் மீன்டும் டில்லிக்கே ஓடினான். இதற்கு விரையமானதில் பாதி கூட விரையமாகாது நம் தலைநகர் மாற்று திட்டத்திற்கு. துக்ளக்கின் தளபதி அப்துல் தெற்கின் நுனி வரை செல்லும் விரைவுடன் சென்றுகொண்டிருக்கிறான். தில்லை வரை சென்று விட்டதாகச் செய்தி. ஒரு தனிப்படை இப்போது நம் தெற்குக் காடுகளை ஊடுருவிக் கொண்டிருப்பதாக ஒற்று வந்துள்ளது. வடக்கில் ஒரு பெரிய படை நகர்வு நம் தேசத்தை மையமாக்கி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இப்போதே போருக்குத் தயாராக வேண்டும். ஒரு போர் எழுவது உறுதி.’

மன்னர் நாக்கால் முன் உதட்டை துருத்தினார்.

‘அரசே… அரசே…..’

‘ம்’

‘போர்’

‘ஆவண செய்யுங்கள்’

மன்னரை சந்திக்க வரும் முன்னரே அமைச்சரவை கூட ஏற்பாடு செய்துவிட்டு வந்ததிருந்தார். நேராக அமைச்சரவை நோக்கி நடந்தார். அமைச்சரவை கூடியிருந்தது. அணங்கர் உள் நுழைந்தபோதே ஒரே கூச்சலாக இருந்தது. சந்திரர் உரக்கக் கத்திக்கொண்டிருந்தார். அணங்கரின் நுழைவுடன் அமைதியும் வந்தது. 

‘எல்லோரும் அறிந்திருப்பீர்கள் நம்மை சூழ்ந்திருக்கும் பகையை. மன்னரின் சார்பாக போர் ஆணையை இங்கு முதல் அமைச்சரான நான் படிக்கிறேன். இதனை மன்னரின் ஆணையாகக் கொள்ளுமாறு…’

சந்திரர் கைத்தட்டியபடி ‘என்ன வழக்கம் இது… போர் ஆணைகளை மன்னரே பிறப்பிக்க வேண்டுமென்பது நூல் வரி. முதன்மை அமைச்சர் தன் இஷ்டத்திற்கு எதையும் செய்ய சித்தம் கொண்டிருப்பது தகுதியின்மையைக் காட்டுகிறது’

இது வழக்கமாக நடப்பதுதான் என அமைச்சரவை அணங்கர் பேசக் காத்திருந்தது. வாள் உருவப்படுவதையோ சந்திரரின் தலை துண்டிக்கப்பட்டதையோ அவை உள்வாங்கமுடியாமல் அமர்ந்திருந்தது. பின் அசைவின்மை எழுப்பும் அமைதியில் புதைந்து நிச்சலனமானது. கையில் ரத்தம் தோய்ந்த வாளுடன் அணங்கர் போர் ஆணையைப் படித்தார். ஏனோ ஐநூறு வருடம் கடந்து நீளும் சார்வ ராஜ்ஜியத்தின் கடைசி அரசாணையை தான் படிப்பதாக அணங்கருக்குத் தோன்றியது.

………………….

4

அப்துர் ரஸாக்கின் குறிப்புகள்:

(கலனல் ஜேம்ஸ் ஸ்டூடனின் கோரிக்கையின் பேரில் பெர்ஷிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு திரு.ராபர்ட் ஸலிமனால் மொழிபெயர்க்கப்பட்டது)

தீர்த்த சங்கமங்களுக்கு தெற்கில் இரு பழமையான ஆலயம் உள்ளது. அதன் கோபுரக் கட்டமைப்புப் பணி இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதனை சிறிது நேரம் நின்று பார்த்தேன். அக்கோயில் வெகு பழமையானது என சொல்லப்படுகிறது. கோரமான ஒரு போர்த்தெய்வத்தின் கோயிலாகும். ஸ்ரீஜய ராஜ்ஜியத்தை நிறுவிய அணங்க ராஜன் முதலில் சார்வ ராஜ்ஜியத்தின் கீழ் அமைச்சராக இருந்தவர். வரும் துக்ளக்கின் படைகள் வடக்கு தெற்கு என இரு புறமும் சூழ்ந்து கொள்ள மன்னர் தன் படைகளுடன் வடக்கே சென்றார். அணங்கர் ஒரு படையுடன் தெற்கே புறப்பட்டார். அப்போது இந்தக் கோயிலில் ஒரு வீரன் சுயபலி ஆனது பற்றி கதைகள் இன்னும் மக்களிடையே உலவுகிறது. ஒரு வீரக்கல் கோயில் வளாகத்துள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. அப்போரில் சார்வ ராஜ்ஜியம் வீழ்ந்தது. அணங்கர் உடலெல்லாம் போர்க்காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த ஆலயத்தின் கருவறையில்தான் அணங்கரும் அவரது சிறு படையும் ஒரு மாதம் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. பின் அணங்கர் தெற்கே சென்றார். அங்கு அவர் கழுகுப் பாறை எனும் மலையுச்சிப் பாறையின் நுனியில் நின்று நோக்கிய போது அவர் கண்களில் ஒரே கணத்தில் கண் முன் விரிந்த காட்டில் ஒரு பெருநகரம் காட்சியானதாக கதை உள்ளது. 

இன்று தீர்த்த சங்கமத்தின் தெற்கில் காடு இல்லை. முழுதும் சாலை. ஒரே காளை வண்டிகளும், குதிரை வண்டிகளும், அத்திரி மூட்டைகளும், கால் நடையாக தலையில் சுமந்த படி செல்லும் வியாபாரிகளும் என உயிர்ப் பிரவாகமாக காட்சியளிக்கிறது காளிக்கோயிலைக் கடந்து செல்லும் சாலை. அந்த சாலை சென்று முடிவது அர்ச்சுன வாயிலில். அந்த வாயிலையும் அதை ஒட்டி நீளும் மலை முழுதும் சுவர் எழுப்பப்பட்டு வில்லாளர்கள் கூர்ந்து நிற்கிறார்கள். அதில் அவ்வாயிலியின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் பொறியில் இருந்து தீர்த்த சங்கமத்தை கடக்கும் எதிரிகளைக் கூட தடுத்து நிறுத்திவிட முடியும்.

அர்ச்சுன வாயிலினுள் நுழையும் முன்  வலது புறமாக காட்டுக்குள் நுழைந்து சென்றால் கழுகுப் பாறையை அடையலாம். அருகிலேயே பிரசன்னரின் மடம் உள்ளது. பிரசன்னரின் மடத்தில் விழுப்புண்களுடன் கொஞ்ச காலம் அணங்கர் தங்கியிருந்தார். குருவின் அருளினால்தான் இந்நகரம் நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கழுகுப் பாறையின்  நுனி நின்று நோக்குகையில்தான் ஒரு கணம் தோன்றி மறைந்தது இந்த மாநகரம்.

நான் அந்த கழுகுப் பாறையின் நுனி நின்று பார்த்தேன். ஒரு பெரும் ஆச்சர்யம் கண் முன் விரிந்து கிடந்தது. அந்த நகரமே அசைந்துகொண்டிருந்தது. அர்ச்சுன வாயில், ராஜ வாயில், கருட வாயில், புஷ்ப வாயில் என நான்கு வாயில் வழியாகவும் ஒரு நதியைப் போல் வியாபாரிகளும் மக்களும் ஒழுகி உள் வந்துகொண்டிருந்தனர். சுங்க வசூல் எந்த வித தேக்கத்தையும் உருவாக்கவில்லை. தூரத்தில் ஒளிர்கல் தெருவில் வைரங்களும் மாணிக்கங்களும் மூட்டை மூட்டையாக வைத்து விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. கருட ஆலயம் செல்லும் வழி நெடுக ஒரே பூக்கள் சிவப்பும் மஞ்சளுமாய் மலர் நிறைந்த ஒரு நதி போல காட்சியளித்தது. கருட ஆலயத்தின் கோபுர நுனி முதலில் ஒரு மலர் போல் காட்சியளித்தது. பின் உற்று நோக்குகையில் கலசம் சுற்றி நான்கு கருடன் சிறகு விரித்து உயர்த்தி நிற்பது புலனானது.   தூரத்தில் ராஜ பாட்டை. பின் அரண்மனைக்கு இட்டுச் செல்லும் மாபெரும் தோரண வாயில். முழுவதும் ஆயுதமேந்திய வீரர்கள் காணப்பட்டார்கள். தென் கிழக்கு மூலையில் ராமர் ஆலயம். அந்த ஆலயத்துள் அமையப்பெற்ற மாபெரும் குளம் முழுவதும் பெண்களும் ஆண்களுமாய் நிறைந்திருந்தார்கள். சாமுண்டி தேவி ஆலயம் செல்லும் வழி முழுவதும் பெண்களின் வண்ண ஆடைகள். அந்த நகரமே சிறகு அசைத்து வானில் மிதக்கும் பறவையைப் போல் தெரிந்தது.

அணங்க ராஜனின் காலத்திலேயே இந்த நகரம் பாதி நிர்மானிக்கப்பட்டுவிட்டதாய் கூறப்படுறது. அணங்க ராஜனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லையே என இப்போது வருந்துகிறேன். இப்போது ஆட்சியில் இருப்பது மூன்றாம் அணங்க ராஜன்.

……………………….

அன்புள்ள எட்வர்ட்,

நீணட காலத்துக்குப் பின் உனக்கு எழுதுகிறேன். வாழ்வின் செரிந்த அடர்ந்த ஒரு பகுதியின் வழி பயணித்துக்கொண்டிருக்கிறேன். அன்றைய தினம் பற்றி உன்னிடம் சொல்லியாக வேண்டும். தீர்த்த சங்கமம் கடந்து காளிக்கோயிலில் பல விநோத அனுபவங்களைக் கடந்து ஒரு மாத காலம் வெவ்வேறு திசைகளில் அலைந்தோம். கடைசியாக அப்துர் ரஸாக் எனும் பயணியின் குறிப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு கைக்கு வந்ததும் எங்கள் பயணம் திசைத் தெளிவு கொண்டது. மீண்டும் காளிக்கோயிலைக் கடந்து காட்டுக்குள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். ஏற்றமான பகுதி. மலைதான் ஏறிக்கொண்டிருந்தோம். அதன் உச்சி ஏறி மறுபுறம் இறங்கினோம். பின் நிதானித்து திரும்பிய போது, அது ஒரு வாயிலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. முழுதும் கொடிகளால் மறைக்கப்பட்டு புதர்கள் மண்டி இருப்பதால் எந்த வித அவதானிப்பும் சாத்தியமாகவில்லை. ராமப்பன் அருகில் இருக்கும் மரத்தில் ஏறி அந்த மேட்டின் உச்சிக்கு சென்றான். பின் அங்கிருந்து கத்தினான் நகருங்க என்று. மேலிருந்து இரண்டு ஆள் உயரமிருக்கும் ஒரு அம்பு வந்து தரையில் குத்தி நின்றது. ஆம் அது ஓரு வாயில். கலனல் சொன்னார் அப்துர் ரஸாக் சொல்லும் அர்ச்சுன வாயில் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று. 

அப்துர் ரஸாக்கின் புத்தகம் வழியாகவே பயணிக்க முடிவெடுத்து கழுகுப் பாறையை சென்றடைந்தோம். அணங்க ராஜன் எனும் முதல் ஸ்ரீஜய மன்னன் நின்ற இடம். இவ்விடத்திலிருந்து தான் அணங்க ராஜன் கண் முன் விரிந்திருந்த காட்டில் ஒரு பெரும் நகரத்தைக் கணடான். அந்நகரம் அதன் முழுமையில் இருந்த போது அப்துர் ரஸாக்கால் கண்ணுறப்பட்டது. ஆனால் இப்போது வெறும் பாறைகளும் மரங்களும் கொடிகளும்தான் காட்சியளித்தது. அனங்க ராஜன் இந்த கொடிகள் செடிகள் பாறைகள் மத்தியில்தான் ஒரு மாநகரத்தைக் கண்டான். பின் அந்நகரம் எழுந்தும் வந்தது. பின் இல்லாமல் போனது.

அம்முனையில் நிற்கும் போதே மூவரும் உணர்ந்துகொண்டுவிட்டோம். ராமப்பன் ஒரு தென் மேற்கு மூலையை குறி வைத்து ஓடினான். அங்கு தெரியும் ஒரு முகட்டை நோக்கி. அங்கு மண்ணை கைகளால் அள்ளி தூர வீசினான். மெல்ல எழுது வந்தது ஒரு கோபுரம் ஆனால் நான்கு கழுகுகள் அல்ல இரண்டு கழுகுகள்தான் நின்றிருந்தது. இரண்டு உடைக்கப்பட்டிருந்தன. கலனல் நீள்மூச்சு வாங்கியபடி தரையில் படுத்து உருண்டார். ராமப்பன் அழுதான்.

பின் ஒரு மாபெரும் அகழ்வுக்கு தயாரானோம். மெல்ல ஒரு சிதைந்த  நகரம் எழுந்த வந்தது. 

அன்புடன்

எர்னஸ்ட் ஜோன்ஸ்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.