காதலெனும் திசைமானி

1

காமம்
சர்ப்பமல்ல
அது மலர்
அவன் நமக்குச்சூட்டும்
மலர்
நாம் அவனுக்குச் சூட்டும்
மலர்
நாம் அருவியில் கைகோர்த்து
விழும் முன்
வானில் நமக்கெனவே
எழும் மலர்

2

வசந்தத்தின் தேன்
மலர்களில்
நிறைந்துள்ளது
மென்னலை பரப்பிக்கிடக்கும்
ஏரியில் ஒரு மலர் விழுந்தால்
எழுகிறது காலத்தின் அலைவட்டம்
ராதை ஏங்கிக்கொண்டிருக்கிறாள்
அவனோ காமத்தின் கோடிக்கண்களுக்கும்
பதில் சொல்லும் ஜாலக்காரன்
இனி ஒளித்து ஒளித்துப் பயனில்லை
கள்ளச்சிரிப்புடன்
‘ஆடைகளை கடம்ப மரத்திற்குச்
சூட்டுங்கள்
ஒரு மாற்றத்துக்கு
நாம் ஆடையற்ற மலர் மரமாவோம்’
என்றழைக்கும் சழக்கன்
சுடரை சுடராக எதிர்கொள்பவன்
மலரை மலராக எதிர்கொள்பவன்
எது நம் நிர்வாணமோ
அதை அவனுக்களிப்போம்
…………………………..

3

ஒருத்தி
காமத்தின் உரசல் ஒன்றை
நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள்
ஒருத்தி அவன் உதடுகளின்
தேனை வேட்கிறாள்
ஒருத்தி ஆடைகளற்று
அவன் மடி வீழ்கிறாள்
அவன் கோடிக் கரங்களால்
உலகெலாம் பரந்த ஒவ்வொரு புல்லின்
நுனி வாழ் தாபத்தையும்
அறிகிறான்
ஆசை
காமம்
அழல்
பொறாமை
கோபம்
என அத்தனையும்
அவனுக்கான மாலையாகிறது
தோ, ராதையே
யமுனையின்
இக்கரை நின்று
நீராய் உருகுகிறாய்
பிறவியின் பெருநதியில்
குமிழியிடுகிறது மீன்கள்
நீ வேட்பது அவன் ஆவியை
உடலின் சுவர் தகர்த்து
உள் உதித்த பிரம்ம கமலத்தின்
மணம் கேட்கிறாய்
படகுக்குக் காத்திராதே
எப்படியாவது
நீந்திச் செல் அக்கரைக்கு
உன்னைக் கண்டால் போதும்
அவன் ஆவி எழுந்து வந்து
கூடிக் களிக்கும்
நீந்திச் செல்
நீந்திச் செல்
காதலின் பெருநதி கிடக்கிறது
நீந்திச் செல்
…………………………..

4

இந்த வசந்தத்தில்
ஆயிரமாயிரம்
ஆயிரமாயிரம்
ஆயிரமாயிரம்
மலர்கள் பூத்துள்ளன
ஒவ்வொரு மலரையும்
அதன் ஒவ்வொரு இதழையும்
அதன் ஒவ்வொரு துளி மகரந்தத்தையும்
அவன் அறிகிறான்
வண்ணத்துப்பூச்சிகளின் இயல்பு
மலர்தேடி சிறகடிப்பதுதான் அல்லவா
உன் இறகுகள் கண்ணீர் பட்டு
கனத்துள்ளன
தோ, ராதையே
சொன்னால் நம்பமாட்டாய்
நீ அழுதேங்குவதை
ரசிக்கிறான் திருடன்
நீ பார்க்கிறாய் என அறிந்து
அருகிருப்பவளை அணைத்து
முத்தமிடுகிறான்
உன் ஒவ்வொரு துளிக்
கண்ணீரும்
அவன் பெருக்கியது
கண்ணீரில் உன் இறகின் வண்ணம் கரைந்து
வண்ணத்தின் ஜாலமாகிறது
எழு, ஜாலங்களின் சிறகடித்து
உன் சிறகசைவதற்குள்
அவன் ஒரு கோடி மலரை மலரச்செய்வான்
உனக்காக
……………………………….

5

உன் தேகத்தின்
வன விருட்சமெல்லாம்
தகிக்கிறது
அவன் மேனியெனும் வானம்
ஏகாந்திருக்கிறது
உன் குடிலின் வாயிலை
அவன் குழல் நாதம் தட்டியதை
நீ அறியவில்லையா
கன்றுகள் பைத்தியமாய் துள்ளுகின்றன
காதலின் போதையில்
கிரங்கிக்கிடப்பளே
உலகின் ஒவ்வொரு துளியையும்
அன்பால் நிறைப்பவன் அவன்
உன் கண்ணீரின் அழலை அறிவான்
உன் காதலின் பெருக்கை அறிவான்
உன் ஏக்கத்தை கோகிலத்தின் பறவைகள்
அவனிடம் சொல்லிவிட்டன
சென்றுவிடு அவனிடம்
உன்னைத் தேடி அவன் வந்தால்
இன்னதென்று புரியாத உணர்வால்
வெடித்து மலராய் விழுவாய்
………………………………

6

ராதையே
இரவு அருகிவிட்டது
இரவுக்கான ராகத்தை
அவன் குழல் தேடிக்கொண்டிருக்கிறது
அந்திப் பறவைகளுக்காக
அவன் கூடுகளில்
காத்திருக்கிறான்
தொழுவத்திற்குத் திரும்பும்
ஆவினம் எழுப்பும் புழுதி
அந்திச் சிவப்பை மேலும்
மயக்கமுடையதாக்குகிறது
நிலவொளியின் கனம் தாளாது
உன் உயிர்மலர்
உதிர்ந்துவிடும்
அவன் அந்தியின் சிவந்த கரங்கள்
அழைக்கின்றன
சென்றுவிடு
………………………………………

7

நாளெல்லாம்
காமத்தில் ஆடி
இரவில் கிறங்கிச்
சரிகின்றன உயிரெலாம்
இரவின் அமைதிக்குள் விழும்
அவன் அருவியின் ஒலி
கேட்கவில்லையா?
வானில் ஓடும் இரவின் நதி
எக்கடலில் கலக்கிறது?
அவன் அறிகிறான்
ஒவ்வொரு துளி இருளையும்
நிலவொளியின் ஒவ்வொரு அணுவையும்
மலரெழும் காமத்தின் மணம்
வண்டுகளை அழைக்கின்றன
உன் வெண்ணுடல் மலரில்
ரீங்கரிக்கிறான் அவன்
நாணத்தின் சுவருக்கு
அப்பால் கண்ணே
பிரபஞ்சம் காத்துள்ளது
……………………………………………………

8

காமத்தின் நீர்
வடிய வேழமொன்று
இரவுக்குள்
அலைகிறது
உடல் பிண்ணி
இன்பத்தின் கிறக்கத்தில்
காலமுரையக் கிடக்கிறது
சர்ப்பங்கள்
மலரின் அரூபச் சொல்
உள்ளுறையும் தேன் கடலில்
பிறந்தவை
மேகத்திற்கு மேல்
வானில் மாகாலமாய் விரிந்தவன்
யமுனையின் கரையில்
அவளுக்காகக் காத்துள்ளான்
இணையை
அழைக்கும் ஆயிரமாயிரம்
வண்ணக் குரல்களால்
நிரம்பி வழியும் இரவில்
காதலின் ஆயிரம் அம்புகள் தைக்க
களம்பட்டுக் கிடக்கிறாள்
ராதை
…………………………..

9

அன்பே
இப்பூமியில் இடப்பட்ட
முத்தங்கள் யாவும்
அவன் நிமித்தம்
காதலின் போராட்டங்கள்
யாவும்
அவன் ஆடல்
அன்பின் சொற்களை
மானுடரின் கனவுக்குள்
தூவிச் செல்கின்றன
அவன் மேகங்கள்
பிரிவின் விஷத்தை
பெருக்கி பெருக்கி
அமிர்தின் பெருவெள்ளத்தை
திறந்துவிடுகிறான்
அகத்தின் அழலில்
துளிர்க்கும் கண்ணீரைக்
கண்டு சிரிக்கிறான்
காதலென்று சாகத்துணிந்தவரைக்
கண்டு
அவன் தீவிரம் கொள்கிறான்
அன்பின் நிமித்தம் பிறந்து
அன்பின் நிமித்தம் வாழ்ந்து
அன்பின் நிமித்தம் இறக்கவே
படைத்துள்ளான்
உயிர் என மண் சேர்ந்த
அனைத்தையும்
…………………..

10

இந்த இரவு
பெருகிக்கொண்டிருக்கிறது
நிலவிவொளி
விழும் ஆழத்தில்
கிடக்கிறது பூமி.
மேகம் விலக
பால் ஒளியின் படை
மலரின் விரிந்த
இதழ் மேல் ஆரோகணிக்கிறது.
அல்லிக்குளத்தில்
நிலவு பூத்துக்கிடக்கிறது
யமுனைக்கரையருகே
தொழுவத்தில் கன்றின்
அருகமர்ந்து இசைக்கிறான்
பல கோடி ஒளியாண்டு தூரம்
செல்லப்போகும்
குழலிசையை
……………………………..

11

ஒரு பிறவியில் காதலற்று
அழிந்தாய்
ஒரு பிறவியில் நட்பின்
கதகதப்பில் லயித்தாய்
ஒரு பிறவியில் காதலின்
துளிகளைக் கண்டு வான் நோக்கினாய்
ஒரு பிறவியில் காதல்கொண்டு
இல் புரந்தாய்
ஒரு பிறவியில் காதல்கொண்டு
பித்தியாய் அலைந்தாய்
பின் காதலின் ஓயாத் தாகத்துடன்
பேயாய் அலைந்தாய்
இப்பிறவியில்தான்
அணுகி வந்துள்ளான்
கல்லிலும்கூட அன்பாய்
விரவிக்கிடப்பவன்
எழுந்து செல்
அவன் தொழுவத்தின் கன்றுகள்
உன்னையே நினைத்துக்கொண்டிருக்கின்றன
…………………………….

12

அசைவிப்பது அவன்.
அசைவும் அவன்.
அசைந்தாள் ராதை.
அவள் கொலுசின் ஒலியில்
இரவு ஆவி ஒடுங்கி மௌனமானது.
மண்ணில் புதையுண்ட
பிரிவின் காதல்கள்
கை நீட்டுகின்றன அவளை நோக்கி.
நீரைக்கிழிக்கும் அலகென
நிலவொளி கிழித்து அலையெழச்
செல்கிறாள்.
தான் அசைத்தவையெல்லாம்
தன் ஆணையின்றி
அசைவறுத்து சிலைப்பதை
திகைத்து நோக்குகிறான்.
கன்று அவனைக் கடந்து
அவன் குரலுக்கு செவி மடுக்காமல்
யமுனைக்கரை நோக்கி ஓடுகிறது.
அன்பான பெண்ணே
பிரபஞ்சத்தின் கடிவாளம்
உன் வளைகரங்களுக்கு வந்துவிட்டது
உன் ஒரு சொல் உதித்தால்
இந்நள்ளிரவில்
கோடிச் சூரியங்கள் உதிக்கும்
நீயோ பித்தி, ஓடிச்செல்
திகைக்கிறான் திருடன்
அன்பிற்கு அடைக்கும்தாழில்லை
எனக்கண்டு
அது நிறைக்கிறது
அவன் விரித்தெடுத்த வெளியெங்கும்
……………………..

13

ஆயிரம் பொய்யுரைப்பான்
விடாதே
காதைத் திருகிக்கேள்
அன்பின் நிமித்தம்
கண்ணீர் சிந்த
ஏன் வித்தித்தாய் என்று
…………………………..

14

கைசலியாமல் நீந்து.
இரவின் ஆழத்துள் சென்று சென்று
ஒரு துளி ஒளியாய் எழுகிறான்.
நாம் எதிர்பாரா ஒரு புள்ளியில்
எழுகிறது முதல் கதிர்.
இரவெல்லாம் உறக்கமின்றி
கண்ணீர் வடிந்த உன் முகம்
கனத்துக்கிடக்கிறது.
புலரியின் முதல் பறவையைத்
தொடுகிறது அவன் மூச்சு.
ஆழிவெண்சங்கின் கார்வையினூடே
எழுகிறது புள்ளினங்களின் கீச்சரவம்.
இரவெல்லாம் கிடந்த கடலில்
சிவந்த ஒளியின் அலைநெழிவுகள்.
மானுடர் காதலின்
பொருட்டு துயில் கலைகின்றனர்.
காதலின் பொருட்டு பெருகுகிறது
காலை.
தென்றலின் குளிர் அறியா
அழல் கொண்டவள்,
இரவைக் கலைந்து
காலையை உடுத்தி
அவன் ஒளிந்துகொள்வதைக் கண்டாள்.
மீள மீள நோக்கினாள்
ஆம்
இரவைக் கலைந்து
காலையை உடுத்தி
ஒளிந்துதான் கொள்கிறான்

காதலின் அனல் சினமானது
பிறவிகளின் தாகம் சினமானது
ஓட்டத்தின் வேகம் நின்றது
பல்லாயிரம் கதிர்விழ
எழும் அவன் காலையை நோக்கினாள்
ஒளித்துகள் பெருகிப் பெருகி ஆன
இந்த கதிர்ப்பெருக்கில்
எத்துகளில் ஒளிந்துள்ளான்?
திரும்பிற்றுப் பாதம்
‘காதலாய்க் கசிந்துருகும்
அகம் கண்டு ஒளிகிறாய்தானே
நீ வேண்டாம் எனக்கு
செல் உன் காமக்கிழத்திகளிடம்
கோடிப் பெண்களை முத்தமிட்டவன் தானே
நீ..
சீச்சீ சழக்கா’
……………………….

15

கரியவனுக்கு ஏதும்
புரியவில்லை.
படைத்தவை எங்ஙனம்
எக்கணம்
தன்னிச்சை கொண்டன.
புரவிகள் திசையை எப்பொழுது
தேர்ந்தன.
கடிவாளம் ஒற்றைக் கரத்தில் அல்ல
எத்தனைக் கோடிக்கரமோ
அத்தனைக் கரத்திலுமா?
எனதான அனைத்தையும்
எடுத்துச் செல்கிறாள்.
வளையணிந்த ராதையே
உன் கொலுசொலியை
செவி மடுக்கிறது
பிரபஞ்சத்தின் செவிகள்
அன்பின் கீதம் திசைதிருப்பிற்று
யுகங்களை
……………………….

16

அன்பின் பாடல் ஓயாமல்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது புவியெங்கும்
காதலின் நதியாய்
பெருகுபவளை
நோக்கி ஓடிச்சென்றது
அவன் கன்று.
அதைத் தொடர்ந்து ஓடுகிறான்
கரியவன்
‘பிறவிகளின் தவம் கனிந்து
காதலானது
உன் பாராமுகம் ஆக்கிற்று
அதை சினமாய்
என்னைத் தொடராதே
பிறவிகளின் அழல் பட்டுப்
கருகிப்போவாய்
கரியவனே’
……………………………….

16

நதியை பெருகச்செய்தவன்
கடலை தளும்பச் செய்தவன்
வானத்தை வரைந்தெடுத்தவன்
அகமெல்லாம் காதலின் விதைகளை
தூவியவன்
நீந்திக் கடக்கிறான் யமுனையை
இரவில் ஏக்கமான காதல் காதலை தேடிச்செல்ல
இக்காலையில் காதல் ஏக்கமாகி காதலை தேடிச்செல்லக்
கண்டது யமுனை
ஆயிரம் யமுனைகளில்
நீர்த்துளியென வழுக்கிச் செல்பவன்
நீந்திச் செல்கிறான் காதலின் நதியில்
அன்பின் ஒவ்வொரு ஆடலும்
மலரின் விளங்கிக்கொள்ள முடியா
நுண்மையுடனிருப்பது கண்டு
மேலும் மேலும் பெருகிற்று யமுனை
………………………….

17

காமனின் கனவுகளில்

ஒரு அழைப்பெழுந்தது.
கொலுசொலி அடித்த
நீதியின் மணி நாதம்
கனவினுள் நீண்டு எழுப்பிற்று.
ஒரு கோடி வில்லெடுத்து
பலகோடி அம்பு பூட்டி
வானுக்காப்பலிருந்து
தொடுத்தான்.
ஓடும் கால்கள் ஓயாமல்
வான் நோக்கினான் கரியவன்
வீழ்ந்தான்
நடுவானில் நெஞ்சு பிளக்க
விழும் பறவையென,
மலராய் எழுந்து
இரும்பாகி நெஞ்சு பிளக்கும்
அம்பு பட்டு.
……………………………….

18

ஆகி வந்த
பிரபஞ்சம்
வாசல் நின்று கதவிடித்தது
‘ராதை ராதை
ஏன் சினந்தாய் சொல்’

‘நீ முத்தமிட்டாயே
கோகிலத்துப்பெண்
அவளிடம் கேள்’

‘நான் உன்னைதான்
நினைத்திருந்தேன் ராதை
என் ஒவ்வொரு முத்தமும்
உனக்கானதே’

‘சீச்சீ சழக்கா
வாயை மூடு
வேசையே’

‘உனக்காக
உலகையே
வென்றெடுப்பேன்
இந்திரனிடம் போர்புரிந்து
கொணர்ந்து சூட்டுவேன்
பாரிஜாதத்தை’

‘சீ
வெண்ணைத் திருடி
கையும் களவுமாய்
சிக்குண்ட கள்வனே
பேரன்புக்கு செவிமடுக்கா
இதயம் பாழும் நரகில் வீழுமென
அறியாதவனா நீ
இக்கணமே செல்
உன் ஊருக்கு
காமப்படல்களை பாடித்திரி.
சுடலைக்குச் சென்று
காமனை எரித்து
தவம் பூண்டோனை வேண்டி
பேயாய் அலைகிறேன்
நீ வேண்டாம் எனக்கு’

‘அன்பே
மழைத்துளிகளின்
ஆழத்தில் உரையும்
அழல் பட்டு
தீயாய் எரிகிறது என் வனம்…’

‘ஐயோ
போதுமப்பா
உன் கவிப்பேச்சும்
குழல்நாதமும்
நந்தகோபர் பாவம்
உன்னைப்பெற்றாரே’

கரியவன் கண்மூடி நிற்க
மழை நின்றது

‘ராதா
நான் பெருநகரமொன்றை
கட்டியெடுப்பேன்
பெரும்போர் ஒன்றை
நடத்திவைப்பேன்
பெருகும் கணங்களில்
ஏறி நின்று
மாகாலங்களைப்
பார்த்திருப்பேன்
மானுடருக்குப் பற்றிக்கொள்ள
பாடலொன்றை பாடிச்செல்வேன்
ஆனால் இக்கணம் இக்கதவுகள்
திறப்பதில் உள்ளது
நான் கொண்ட ஆயிரமாயிரம்
பிறவிகளின் அர்த்தம்
ஆன்மம் ஒன்றாகி மலராமல்
முழுமை கொள்வதில்லை
எப்பிரபஞ்சமும்’
………………………………

19

கடவுளரை மானுடராக்கும்
மானுடரை கடவுளராக்கும்
அக்குழல்
எழுந்தது மழையினூடே.
தன் அகமெல்லாம்
மழைவிழும் வனமென அதிர்வதை
உணர்ந்தாள்.
சினம் எங்கு போனது?
ஆயிரம் பிறவிகளாய் சூல்கொண்ட
ஏக்கமும் தாகமும்
மீண்டும் நிரப்பியது எங்ஙனம்?
மாகாலத்தின் எந்நொடியில்
எது நகர்ந்து
மலராகிறது அகம்?
சுடரென ஒளிர்பவளே,
அணையாச்சுடர்
அன்பின் நீர்மையில்தான்
நின்றெறிகிறது
இல்லின் கதவைத் திற
பிறவிகள் கட்டி இழுத்து
வந்துள்ளது
பிரபஞ்சத்தை
உன் அகத்துக்கு
…………………………………

20

இவ்வுடல் போதவில்லை.
அண்ட மகண்டமெல்லாம்
நிறைந்திருப்பது
இச்சிற்றில்லுக்குள்
நுழைகிறது.
யுகம் யுகமாய்
பாடப்பட்ட காதலின் பாசுரங்கள்,
அதனின்று எழுந்த
மகாவாக்கியமொன்று
ராதையாய் பிறந்து வந்தது.
உலகின் நீரெலாம்
அவன் தான் எனினும்
அன்பை தாகிக்கிறான் அவன்
அன்பை தாகிக்கும் உயிர்களை
நோக்கி பெருக்கெடுக்கிறான் அவன்.
பிறவிகளாய் ஓடிவந்த நதியை
நோக்கி கடல் வந்து
நிற்கிறது.
பெண்ணெ கதவைத் திற
உன் பாசுரத்துடன்
கலக்கக் காத்துள்ளது
ஓங்காரம்.
…………………………….

21

இக்காலையில்
மழை பெருகிவிட்டது
கரியவன் காதலின் மதகுகள்
உடைந்து மூழ்கிக்கொண்டிருக்கிறான்.
கன்றுகள் மடியைத் தேடி
கயிற்றை இழுத்துச்
சுழல்கின்றன.
அங்கை வருந்தும்
ஆயர் மகளிர்
தங்கள் நாளங்களில்
பாயும் புதுக் குருதி
யாதென்று நோக்குகின்றனர்.
கண்விழிக்காமல் உறக்கம்
கொள்ளும் கன்னியரின்
கனவில் எழுகிறது
கரியவனின் உடல்.
காமத்தின் நீர் வழிந்தோடும்
பாதையெங்கும்
பிறக்கிறது
ஒன்றாகிக் கலப்பதற்கான
தாகம்.
யமுனை சிலிர்க்கிறது
யமுனை சிலிர்க்கிறது
சூல்கொண்ட மழை
கண்ணீராய் பெருகிற்று
ராதையில்
………………………….

20

ராதே
உன் இல்லின் கதவடைத்து
என்னை வெளி நிறுத்தியுள்ளாய்
என்ன பாவம் இழைத்தேன்?
உன் ஸ்பரிஸங்களால்
நிறைய வேண்டிய உடலிது
காமனின் அம்புகள்
துளைத்து இதயத்தின் குருதி
பெருகிக்கொண்டிருக்கிறது
இந்த காலையில்
உன் உதடுகளைப்போல்
சிவந்த மலர்களை
உனக்காவே சூட்டினேன்
கதிர்களைப் பெருக்கி
இசையாக்கியது உனக்காக
உன் மறுப்பால்
வலிமையியழந்து நிற்கும் பொழுதில்
காமன் தன் முழுப்படையும் கொண்டு
தன் ஆவநாழியின் அத்தனை மலர்களையும்
என் மீது எய்துவிட்டான்
நீ அணைத்தாலன்றி
இந்நோய் ஓயாது
நீ முத்தமிட்டலன்றி
என் காயங்கள் ஆராது
ஒன்றாகிக் கலக்கவே
பிறந்து வந்தோம்
பின் ஏன் சழக்குகளில்
நம் காலங்கள் கழிகிறது?
………………………….

21

மூடர் மறுப்பர் காமத்தை
காமம் காதலின் மலரல்லவா
காதல் நதி
காமம் அருவியல்லவா
அகத்தின் துளி அசைந்ததால் மட்டுமல்ல
புறம் விரிந்து விரிந்து தானே ஆனது
பிரபஞ்சம்
என் உடல் வேட்கிறது
என் உடல் வேட்கிறது
ஒரு மலராகி உன் நதியில்
விழுந்துவிடுகிறேன்
கொண்டு செல்
நம் வானங்கள்
ஒன்றாகட்டும்
ஏகமாகும் உடல்கள்
காதலின் மலர்
…………………………………

22

தோழி
என் அகம் நடுங்குகிறது
ஏன் சினம் கொண்டேன்
அவன் மேல்
அவன் பொய்யன் என்பதும்
கோகிலத்துப் பெண்களுடன்
அவன் கொள்ளும் சரசமும்
நாமறியாததா?
ஒவ்வொரு பூவிலும் உரைபவனை
எனக்கென சூடிக்கொள்ள
நான் கொண்ட விழைவு
சரியா?
சென்று பார்
கொட்டும் மழையில் இன்னுமா நிற்கிறான்?

ஆம்
ஆழி நிறத்தவன்
வானமெல்லாம் நிறைந்தவன்
வெறும் காதலனாக
நிற்கிறான் ராதா
உன் அகத்தை நோக்கியவண்ணம்
நம்பு என் கண்ணே
நீ மட்டுமே சூடிக்கொள்ளும்
மலராக ஆகி வந்துள்ளான்
…………………………..

23

சிவதனுசு
உடைபட்டது.
மழையில் கண்ணீர்த்துளியாய்
நின்று இசைத்துக்கொண்டிருந்தான்.
ஆம்
கேள்விகளை நோக்கி
பாடலாகப் பெருகுகிறான் அவன்
பழி பாவங்களை நோக்கி
சிறு புன்னகையாய் பெருகுகிறான் அவன்
கண்ணீரை நோக்கி
கண்ணீராகவே பெருகுகிறான் அவன்.
பேதையாய் ஆகி நிற்பவளே
காதலின் அழைப்புகள்
ஆழங்களில் பிறக்கிறது
நாம் அறியா ஆழங்கள்
வான் அறியா ஆழங்கள்
மலர் மட்டும் அறியும்
ஆழங்கள்.
சிறகு கொள்ளப் பிறந்தவளே
எத்தனைப் பிறவிகள் கடந்துவிட்டது
எத்தனை வாழ்க்கைகள்
நழுவி ஓடிச்சென்றுவிட்டது
அவன் குழல்நாதம் எழுவது
கோடானகோடி இதயங்களின்
லயத்தின் மேல்
அகத்தின் முதல் கருவி இவ்வுடல்
அவன் மேல் கிடத்து
அவனை இறுகப்புள்.
பருப்பொருள் தனித்துக்கிடக்கிறது
நீர் முழுதாய் கலப்பதில்லை
காற்றாகு
அதுதான் ஆவியே உடலாய்க் கொண்டது
காற்றாகு அதில்தான்
அவன் குழல்நாதம் அரோகணிக்கிறது
காற்றாகு அதில்தான்
நுண்மகரந்தங்கள் பறந்து செல்கிறன
தன் தன் மலர்களைத் தேடி
…………………….

26

வலையொலிக்க மத்திசைக்கும்
பெண்ணே
பெருகிவிட்ட படைப்பு
ஓயாமல் நெய்துகொள்கிறது
மாயையின் திரைகளை
அதன் திரைச்சீலையில்
மானுடனாகத் தெரிகிறான்
மிக நுன்னிய கரத்தால்
தன்னைத்தானே
தான் பெருக்கும்
ஓவியத்தில்
வரைந்துகொள்கிறான்
நாடகத்தில் ஊறித்திளைக்கிறான்
படைப்பின் புன்னகை
மாறா முகத்துடன்
………………………………….

27

எத்தனை தூரப் பயணம்?
எத்தனை பிறவிகளின் வாழ்வு?
இன்னும் எஞ்சியிருப்பது
உன் கூடத்திற்கும் கதவுக்கான தூரம்
வாசலில் காத்துள்ளது
இன்பத்தின் ஊற்று,
எல்லாவற்றிலும் உரையும் மலர்,
அணடமெல்லாம் நிறைக்கும் குழல்நாதம்.
காதல் நின்று பிடர் பிடித்து உந்தவும்
எழுந்து ஓடினாள் ராதை
கண்ணொடு கண் கலந்தாள்
இரு உடலும் அணுஅசையாமல்
சிலைத்தது
காற்றசைந்தாலும் உதிர்ந்துவிடும்
இரு உயிர்
மழை ஓய்ந்தபின் வானெழும் பறவையைப்போல்
மெல்ல எழுந்தது அவன் குறு நகை
வாரி அணைத்தெடுத்து இதழ் சேர்த்தான்
காதலின் திசைதேர்பவளே
வானென்பது ஒன்று
இரண்டல்ல அன்றோ?
கடல் என்பது ஒன்று
இரண்டல்ல அன்றோ?
வளி என்பது ஒன்று
இரண்டல்ல அன்றோ?
காதல் என்பது ஒன்று
இரண்டல்ல அன்றோ?
ஒவ்வொரு காதலும் அவனுக்கானது
பூமியில் உதிக்கும் ஒவ்வொரு மலரும்
அவனுக்கானது போல்
கூடிக்களித்தாள் ராதை
தான் அவன் எனும்
பேதமின்றி
…………………………….

26

காதல் இட்டுச்சென்றது
காதல் கரைதேற்றியது
காதலின் ஆன்மம் தன்னைக் கண்டுகொண்டது
பெருவெளி நிறைந்த ஒன்றின்
பிம்பமாக.
சேர்ந்தாய் அவனுடன்
யாருமற்ற தனிமையில்
யமுனையின் சலசலப்பிடையே
கன்று கண்மூடி லயித்திருக்க
அவன் நாதத்தில்
விழுந்தாய்.
இக்கணம்
பெருக்கிக்கொண்டே இருக்கும்
இந்நிலமெங்கும்
கன்னியாகும் ஒவ்வொரு பெண்ணின்
அகத்திலும் உன் கொலுசொலிக்கும்
வான் நோக்கும் ஒவ்வொரு ஆணும் கேட்பான்
உன் வளை சரியும் ஒலியை
திசையறியா மானுடம்
திசை தேறும்
உன் காதலின் துடிப்பில்
…………………………………


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.