இருத்தலும் ஆணையும்

இருத்தல்

சொல்லுடன்
சற்று
தனியாக இருக்கவிடுங்கள்
ஆயிரம் கைகளில்
உள்ளிருந்து என்னை
அழைத்துக்கொண்டே இருக்கவேண்டாம்
பேரங்களின் ஒலிகள்
சலித்துவிட்டது
ஆணவத்தின் ஆட்டங்கள்
அச்சமுறச்செய்கின்றன
அன்பின் பெயரால் நிகழ்பவை
வேண்டாமே
கொடுத்தலின் வாங்கலின்
உயிர்த்தலின் ஒரு வட்டத்துக்கு
ஏன் இத்தனை சிடுக்கான வடிவங்கள்
பார்வைகள் கனிகின்றன அவ்வப்போது
அவ்வப்போது குரல்கள் குழைகின்றன
அழகியவற்றின் மேல் எல்லாம்
பாவனையின் ஓயாத நிழல் விழுவது
என்னை கைவிடச்செய்கிறது
உண்மை என்று ஒரு சொல்
உண்மையாகவே
உள்ளதா என கேட்டுக்கொள்கிறேன்
வேகமாக அணைந்துவிட்ட
மழைக்கால அந்தியில்
கைவிடமுடியாத இவ்வாழ்க்கையுடன்
அமர்ந்துள்ளேன்
சொல்லை தியானித்தபடி

………………………….
சொல்லைக்
கடைவிரித்துள்ளேன்
கொள்வார்
கொள்ளாதார் இருக்கட்டும்
நானே
ஒரு மெல்லிய இழையாகி
வலைந்து நெளிந்து
வார்த்த சொற்கள்
அரற்றுகிறது
நான் நான் என்று


என்னை நான்

சொல்லில்

தஞ்சம்கொண்டுள்ளேன்
அதுதான்
என்னை உடைத்து
நெறுக்கி
செறிவாக்கி
தளர்த்தி
மேலும் கீழும் இழுத்து
இடம் வலம் அலைத்து

உலைத்துலைத்து

அடுக்கிக்கொள்கிறது
மெழுகால் ஆன
வீட்டைக் கட்டி
கையில் ஒரு கொல்லியைக்
கொடுக்கிறது
என்னை நான் எரித்துக்கொள்ள


ஆணை

சொல்

தீர்ந்துவிட்டது
சற்றுமுன் வரை
தாண்டமாடிற்று
உருகிற்று
உறுதிபூண்டது
நீர்மைசூடி ஓடி
காற்றென அலையெரிந்து
இசையை முயங்கி
வீர்யம்‌ கொண்டு
எல்லாம் இழந்து
வெறுமையைப் பாடிக்கொண்டு
துன்பங்களை வருடிக்கொண்டு
இன்பத்தின் நாளங்ளில்
பெருக்கெடுத்து
சற்றுமுன் வரை இருந்து
ஓய்ந்து எஞ்சியது
சொல்லற்று
சொல் செழித்த தடம்
பின் மெல்லிதாய்
மிக மெல்லியதாய்
எழுகிறது
நித்யத்தின் ஆணைப்படி
கருவினுள்  முதல் அசைவாய்


சுடரும் சொல்

என் சொற்கள்
சென்றுவிட்டன

அன்பின் கதையை
சொல்லப்போவதில்லை

வெறுப்பின் கதையோ
இல்லவே இல்லை

வெற்றித் தோல்விகள்
இம்மியும் கிடையாது

அழல்
மோகம்
காமம்
இன்னும்
இன்னும்
கீழ்மைகள்
இருக்கும்
திசைக்கூட திரும்பப்போவதில்லை

அறத்திற்கும்
நியாய நேர்மைகளுக்கும்
இதே கதிதான்

என் சொற்கள்
சென்றுவிட்டன
அணைந்தபின்
சுடர் எங்கு
சென்றதோ
அங்கு
………………
மண்ணுக்கு மேல் எழும்
சொற்களை
கூண்டுப் பறவைகள் கொத்திச்
செல்கின்றன

பிரயத்தனமின்றி
உதிக்கும் ஒரு சொல்
மண்ணுக்குக்கீழ்
வேறொரு உலகில்
வண்ணமாகிக்கொண்டிருக்கிறது
சொல்லுக்கு தவம் புரிவோர்
உண்மையில் தியானிப்பது
அம்மலரை


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.