ஆயன்

அந்தச் சிறு குன்றின் முன் கிடக்கும் பெரும்பாறையின் கீழ் திரண்ட நிழல்தான் சோமனின் இருக்கை. பகல் முழுதும் அங்குதான் சோமனுக்கு வாசம். விடியலின் ஒளி ஒரு பொட்டு இருக்கையில் கண் விழித்து எழுந்து மச்சு வீட்டிலிருக்கும் ஏழு மாடுகளுக்கு நீர் வைப்பது பின் வைக்கோல் வாரிப் போடுவது நாளின் முதல் கடமை. காற்றில் குளுமை மாறாமலிருக்கும் பொழுதில் பால் கறவை நடந்தேறும். மச்சு வீட்டில் மட்டுமல்ல ஊரின் எல்லா இல்லங்களிலும் பஞ்சாயத்துக் கட்டிடம் தவிர அனைத்து வீடுகளிலும் நுரையில் பால் பீறி அடிக்கும் அமுங்கிய ஒலி கேட்கும். மச்சு வீட்டில் பால் கறவை முடித்து கோயில் பசு மடத்திற்கு செல்லும் வழியில் இந்த பால் கறவையின் சொர்ர்ர்ப்ஸ் ஒலியை கேட்டபடி நடப்பது வழக்கம். இந்தக் கறவை ஒலி வீட்டிற்கு வீடு மாறுபடுவது பற்றி சோமனுக்கு மட்டும்தான் தெரியும். கோயில் பசு மடத்தில் கறவை முடிந்தபின்  ஊர்க் குளத்தில் முழுக்கு போட்டு, துவட்டிய துண்டை இடையில் கட்டியபடி கொடிக்கம்பத்தின் முன் விழுந்து வணங்குவான். குளத்தருகிலிருக்கும் புங்க மரத்தின் கீழ் சற்று கிடந்தால் கைலி காய்ந்துவிடும். கோயில் ஐயர் ஏதேனும் வேலை கொடுப்பார், அதைக் கொண்டுவா இதை கொண்டுவா எனும் சிறு ஏவல்கள்,  கண் ஒளிர சூரியன் ஏறும் வரை நின்றால் ஐயர் பிராசதம் கொடுப்பார். காலையுணவு. ஊர் விழித்துவிட்டதற்கான கலசலான மந்தமான ஒலிகளுக்கிடையில் மச்சு வீட்டிற்குச் செல்வான். மச்சானி அம்மாளிடம் ஏதாவது வேலை இருந்தே தீரும். ஆட்டுரலைக் கழுவ, தொழுவத்தைச் சுத்தம் செய்ய, கொல்லையைப் பெருக்க என ஏதாவது இவன் வரக் காத்திருக்கும். எப்படியும் காலை ஒன்பது மணிக்குள் ஒரு நாளுக்கான வேலை முடிந்துவிடும். அதன் பின் சோமனுக்கு முழுதும் ஓய்வுதான். மச்சு வீடு உட்பட இன்னுமொரு பத்து வீட்டு மாடுகள் இவன் பொறுப்பாகும். அன்று மச்சுவீட்டின் லட்சுமியை அவிழ்த்த போது இன்று எப்படியும் ஈனும் எனத் தோன்றியது. வயிறு மூட்டையைப் போல் உப்பி விட்டிருந்தது. கோலிக்குண்டு கண்களில் மிக மெல்லியதாய் இழையோடிய மருட்சியை சோமனின் உள்ளிருந்த ஏதோ ஒன்று உணர்ந்துகொண்டது.

‘அம்மா, லட்சுமி இன்னக்கி ஈந்துறும் போலருக்கே’

‘ஆமான்டா.. மேச்சலுக்கு விடுறதா என்ன?’

‘இல்லம்மோவ் மேச்சலுக்கு வேணாம்… ஈந்துச்சுன்னா காட்டுக்கு சொல்லி அனுப்புங்கம்மோவ்’ என்றபடி இதர மாடுகளை அவிழ்த்துக்கொண்டு கிளம்பினான். ஊர் எல்லையிலிருக்கும் கல்லம்மன் சன்னதியை தாண்டியபோது மொத்தம் பதினாலு மாடுகள் உடனிருந்தன. சோமனை ஒரு சிலர்தான் ஊர்க்காலிமாடு என அழைக்கிறார்கள். எல்லா வீட்டு மாடுகளும் இவன் பார்வைக்கு விடப்படுவதில்லை. தொழுவத்திலேயே நாள் முழுதும் நிறுத்துகிறார்கள். ஏதேதோ தீவனம். சோமனுக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை இல்லை. கல்லம்மன் கோயிலிருக்கும் திசையில் வயல்கள் ஏதும் கிடையாது, காடுதான். காட்டுக்குள் செல்லும் கோடிழுத்தது போன்ற மண் பாதையில் சென்றால் மரங்கள் அருகிய குன்று. மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு வேண்டுமட்டும் புல். அந்தக் குன்றின் அடிவாரத்தில்தான் சோமனுக்கென்றே உருவாக்கப்பட்ட பாறைக்குடை. அதில் வந்து படுத்துவிடுவதுதான் சோமனின் வேலை. பெரும்பாலும் உறக்கம். அது பனிக்காலம் வேறு எழுந்த சூரியனை அழுதபடி வந்து மேகங்கள் சூழ்ந்து கொண்டன. தூக்கம் பிடிக்காததால் மாடுகளைப் பார்த்தபடி படுத்திருந்தான். தூரத்தில் மரத்தின் நிறத்திலேயே நாயொன்று நிற்பதைக்கண்டான். நாய்தானா? யோசித்துக்கொண்டிருக்கையிலேயே வள் வள் என்றபடி தூரத்திலிருந்து அதே திசை நோக்கி கறுப்பன் குரைக்கத்துவங்கினான். சோமன் அருகில் கிடந்த கழியை எடுத்துக்கொண்டு ஓடத் துவங்கினான். சற்று அருகனைந்ததும்தான் முகத்தின் கூர் நரி என்று காட்டியது, அடர் வால், ஒடுங்கிய வயிறு. இந்த நரியை சோமன் அறிவான், இரட்டை நரியில் ஒன்று இது. ஜோடியாகவே திரியும் நரியில் ஒன்றைக் காணவில்லை. சற்று அருகில் சென்றதும் அமைதியாய் பத்மா அருகில் அமர்ந்துகொண்டான். பத்மா புல்லை கருக் கருக்கென உண்பதில் மும்முரமாய் இருந்தாள். பத்மாவின் கால்களுக்கு இடையில் அமர்ந்துகொண்டு நரியைப் பார்த்தான். இப்போது இரட்டை நரியும் நின்றிருந்தது. மாடுகளை நோட்டமிட்டது. கறுப்பன் குரைத்துக்கொண்டே இருந்தான். 

சோமன் பலமுறை நரிகளைப் பார்த்திருக்கிறான். குறிப்பாக இந்த ஜோடி நரிகளை பலமுறை பார்த்திருக்கிறான். மரநாய், மலைப்பாம்பு, நாகம், முயல், உடும்பு, முள்ளம்பன்றி இப்படிப் பல. ஒரு நாள் சோமன் சிறுத்தை ஒன்றைப் பார்த்தான். பூனையைப் போலிருந்தாலும் அதன் கண்களின் பசி சோமனை நடுங்க வைத்தது. மாட்டின் மேல் பாய்வதற்குள் வெறிக்கூச்சலிட்டு கையிலிருந்த கழியை சுழட்டிக்கொண்டு ஓடத்துவங்கினான். கறுப்பனும் குறைத்தபடி உடன் வந்தான். ஒரு முறை காதை விடைத்து சோமனை நோக்கிவிட்டு மரங்களிடையே ஓடி மறைந்தது சிறுத்தை.

அந்த வாரமே ஊர்க்கூடுகையில் சோமன் எழுந்து சொன்னான். இவன் என்ன பேசுறது என்பது போல் ஒரிருவர் பார்த்தாலும் சோமன் சொன்னான்,

‘ஐயா நரி வருதுங்க மேய்ச்சலுக்கு விடுற இடத்துல,.’ அவன் முடிப்பதற்குள் பஞ்சாயத்து ப்ரெஸிடென்ட் ‘அதுக்கென்னடா இப்ப… ரெண்டு கல்லெறிஞ்சா போய்டும்’

‘இல்லய்யா.. நரி வந்தா பரவால்ல.. போன வாரம் ஒரு சிறுத்த வந்திருச்சு’

வி ஏ ஓ சொன்னார் ‘அன்னிக்கேதான் பஞ்சாயத்து கட்டடத்துல வந்து கூப்பாடு போட்டியேடா… நானும் பாரஸ்ட் காரங்க கிட்ட கேட்டுட்டேன்… நரியுமில்ல பேயுமில்ல இந்தக் காட்டுல என்றார்

‘கண்ணால் பாத்தேங்கய்யா’

‘என்னடா மறுக்க மறுக்க பேசிட்டு கிடக்க.. போட்டன்னா உக்காரு’ 

சோமனுக்கு வருத்தம். அன்று மச்சு வீட்டுக்காரரே கூப்பிட்டு செவிலோடு இரண்டு போட்டார். ‘இனிமே பஞ்சாயத்து கட்டடம் பக்கம் வந்த தொலச்சு பிடுவேன் ராஸ்கல்’

சோமன் அன்று அழுதபடி ‘எக்கேடு கெட்டு போனா என்ன? என் மாடா போது? சிறுத்த இருக்குன்னு சொன்னா அடிக்கிறானுவ.. அவன் ஒரு புத்திகெட்ட கிராமாபிஸரு’ என வாய்க்குள் முணுமுணுத்தபடி நடந்தான். அன்று மச்சானி அம்மா அவனுக்கு பழையதோடு இரண்டு மீன் துண்டு கொடுத்தாள்.

ஆனால் மாடுகளை சிறுத்தை இழுத்துச்செல்வதான கனவு அவனை அலைக்கழித்தது. நடுங்கி உடல் வியர்க்க எழுவான். அழுகை கூட வந்துவிடும். அப்படி ஒரு காலமும் விடக்கூடாது என உறுதிகொண்டான். ‘உயிரு போனாலும் பரவால்ல எனும் உறுதி. செத்தாலும்கூட சிறுத்த இருக்குன்னு நம்பமாட்டனுவ.. ஆக்கங்கெட்ட வி ஏ ஓ’

கவலையே இல்லாத சோமனின் வாழ்வில் இந்த ஒரு கவலை மட்டும்தான் வந்து சேர்ந்தது. நரிகளைப் பற்றி அவனுக்கு கவலையில்லை. நரி நாயெல்லாம் ஒன்னுதான் எனும் எண்ணம் அவனுக்கு. கல் எறிந்தால் ஓடிவிடும். ஆனால் சிறுத்தை அப்படியில்லை, மின்னல் சொடுக்கில்  வருவதும் மறைவதும் கோரமும் பசியும் நிறைந்த அதன் பார்வையும், உடலை விரைத்து வாலை உயர்த்தி நெட்டி முறிப்பதும், சதையைய் கவ்விக் கிழிக்கவே ஆண்டவன் கொடுத்த கூர்ப்பற்களும் – இவையெல்லாம் அவனை நடுக்குறவே வைத்தன. 

சோமன் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளத் துவங்கினான். வில்லம்புதான் சரியான ஆயுதம் எனப்பட்டாலும் தற்போதைக்கு என ஒரு உண்டிக்கோலை செய்துகொண்டான். ஊருக்கு மாதத்திற்கு ஒரு முறை வரும் நரிக்குறவனிடம் கெஞ்சிக் கூத்தாடி பெற்றது அந்த உண்டிக்கோல். மச்சானி அம்மாவிடம் கேட்டு கதிரருவாளைப் பெற்றுக்கொண்டான். உண்டிக்கோலும் கதிரருவாளுமில்லாமல் சோமன் மேய்ச்சல் விட வருவதில்லை. சிறு சிறு கற்களைப்பொறுக்கி சேமித்துக்கொண்டான். அதுநாள் வரை சாமியை கும்பிட வேண்டும் என்பதனால் ஒரு வணக்கம் போட்டு வைப்பான். ஆனால் இப்பொழுதெல்லாம் அவரிடம் பாதுகாப்பை தைரியத்தை கோர வேண்டிய அவசியம் உருவாகி விட்டது. வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையோ பூக்களோ என்ன முடிகிறதோ அதை பறித்து வந்து உண்டியல் முன் வைத்துவிடுவான். மேய்ச்சலுக்கு அருகிலேயே கல்லில் புடைத்து நிற்கும் வீரன் சிலை ஒன்றிருந்தது. தினமும் ஒரு எலுமிச்சையை வீரனுக்கு காணிக்கையாக வைத்துவிட்டுத்தான் தன் பாறைக்குடைக்கு திரும்புவான். மண் நிறக் கல்லில் புடைத்திருக்கும் சிற்பம், கையில் வாளேந்தி போருக்குக் கிளம்பும் வீரன் ஒருவன். அந்த சிலையருகே தினம் சற்று அமர்ந்துவிட்டு ‘வீரா நீதான் மாடுகள பாத்துக்கணும், சிறுத்த வந்தா அதுங்க சாகும் மின்ன நான் சாக தைரியம் கொடுக்கணும்’ என்று வாய்திறந்து சொல்லிவிட்டு தன் பாறைக்குடைக்குத் திரும்பிச் சென்று படுத்துக்கொள்வான்.

இப்படியான காலத்தில்தான் லட்சுமி கன்று ஈந்தது. அந்த இரவில் மடுசாரி ஐயாவை ஓடிச்சென்று அழைத்துவந்தவன் சோமன்தான். கறுப்பி ஈன்ற போது மடுசாரி தன் கையை உள்விட்டு பிடுங்கித்தான் எடுத்தார், ஆனால் லட்சுமி ஒரு தொந்தரவுமில்லாமல் சலார் என ஈந்து போட்டது. யாரும் இடாதபோதும் சிவப்பி என்பதே புதுக்கன்றுக்கு பெயர் என்றானது. சிவப்பி வரவும் சோமனுக்கு மேலும் பொறுப்பு கூடி வந்தது. ஓடத் தெம்பில்லாத கன்றினை காத்தே ஆக வேண்டும் எனும் பொறுப்பு. சோமன் பகல் உறக்கத்தையே மறந்து விட்டிருந்தான். 

ஆனால் சிறுத்தை வரக்காணும் உண்டிக்கோலை வைத்து அவ்வப்போது காட்டு மாமரத்தில் மாங்காய் அடித்துத் தின்று சூட்டு கட்டி வந்ததுதான் மிச்சம். சோமன் வீரனுக்கு அளிக்கும் எலுமிச்சை வாரத்துக்கு ஒன்றாகக் குறைந்து பிறகு இல்லாமலேயே போனது. உடலின் ஆழ்நினைவிலிருந்து பகல் தூக்கம் எழுந்து வந்து ஆட்கொண்டது. பின் பகலுறக்க வழக்கம் தொடர்ந்தது. ஊர்க்காலிமாடு சோமனின் காலம் மிக மெல்ல நகர்வது. சோமனுக்கு மூவாயிரம் எனும் எண் எங்கிருந்து அறிமுகமானது தெரியவில்லை, ஒரு நாள் நினைத்துக்கொண்டான் தான் மூவாயிரம் வருஷமாய் இங்கேயே மாடு மேய்த்துக்கொண்டிருப்பதாய். 

ஒருநாள் ஆழ் பகல் தூக்கத்தில் எறும்பு கடிக்க விழிப்புத் தட்டியது. இப்படி விழிக்கும் போது மாடுகள் மேல் கண் ஓட்டுவதுண்டு. அன்று முதல் பார்வைக்கே பட்டது சிறுத்தை மெல்ல பதுங்கி லட்சுமியின் பக்கம் நெருங்கிக்கொண்டிருந்தது. சோமன் அதி கோரமான ஒலியை எழுப்பியபடி உண்டிக்கோலை எடுத்து கல் பொருத்திக்கொண்டு கதிரருவாளை வாயில் பற்றிக்கொண்டு சிறுத்தையை நோக்கி ஓட்டமெடுத்தான். மாடுகள் எல்லாம் மிரண்டு ஓட்டமெடுத்தன. லட்சுமி நகர்வதற்குள் அதன் கழுத்தை அணுகியது சிறுத்தை, உண்டியில் கல் பொறுத்தி சிறுத்தையின் கண்ணுக்கு அடித்தான். கறுப்பன் சிறுத்தை மீது பாய்ந்தான். லட்சுமி ஓடிவிட்டிருந்தது. இன்னொரு கல்லைப் பொறுத்தி தயாரானான் சோமன். சிறுத்தை சப்தமற்ற மின்னல் அடிகளில் காட்டை நோக்கிச் சென்றது, திரும்பி நின்று நோக்கியது சோமனை வெறிகோண்டு குரைக்கும் கறுப்பனை. அடுத்த நொடி சென்று மறைந்தது.

சோமனுக்கு உடல் வெலவெலத்துப் போனது. உடல் உறுப்பெல்லாம் கடகடத்துப்போனது. ஒண்ணுக்கு பிரியும் போலிருந்தது. தரையில் அமர்ந்துகொண்டான். வாயிலிருந்து கதிரருவாள் தரையில் விழுந்தது. ‘வீரா வீரா என முணுமுணுத்துக்கொண்டான். திரும்பி நோக்கினால் ஒரு பசு இல்லை. ஓடி ஓடி திரட்டினான் ஒவ்வொரு பசுவாய். எல்லா உடலிலும் பயத்தின் துடிப்பு இருந்தது. சிவப்பிக் கன்று தவிர எல்லா பசுவையும் திரட்டிவிட்டான். கறுப்பன் குன்றின் மேலேறி மறுபுறம் பார்த்து குரைத்துக்கொண்டிருந்தான். மாடுகளை வேகமாக ஊர் நோக்கி பத்தி விட்டபின் குன்றின் மேலேறி மறுபக்கம் இறங்கினான். முழுக்கவும் அடர் காடு மண்டிக்கிடக்கும் புதர்க்கிடையில் சிவப்பியின் குரல் கேட்டது. அரிவாளால் புதரை நீக்கிச் சென்றபோது சிவப்பி நின்றிருந்தது. தும்புக் கயிற்றை அள்ளிப் பற்றிக்கொண்டு பெருமூச்சு விட்டபோதுதான் அந்த குகையைப் பார்த்தான் ‘என்னாது கொகையா?’ என்று வாய்விட்டுச் சொன்னவன் குகை அருகில் சென்றான். குகை வாசலிலிருந்து ஆன வரை கூச்சலிட்டான். மிருகங்களேதுமில்லையென உணர்ந்தபின் உள் சென்றான். மேற்கில் இறங்கத் துவங்கிய சூரியன் குகைகயின் உள்ளெல்லாம் வெளிச்சமாய் விழுந்துகிடந்தது. ஒரு கையில் சிவப்பியை பற்றிக்கொண்டு கறுப்பன் உடன் வர சோமன்  குகையின் சுவரைக் கண்டான். கரியில் தீட்டியது போல் உருவங்கள். முதலில் புரியவில்லை. பின் கூர்ந்து நோக்கியபோது மாடுகள் புலப்பட்டது. கரிய கோடுகளில் வரையப்பட்ட மாடுகள். கழுத்துமணி ஏதுமில்லை என்பதைக் கவனித்தான். அதில் ஒரு பசு லட்சுமியைப் போலவே இருந்தது. அதே திமில் அதே ஒசிவு. மாடுகளின் அருகில் ஒருவன் நிற்கிறான். அவன் கையில் ஒரு கோல். சுவரின் மறு புறம் ஒரு சிறுத்தை கழுத்து வரை வரையப்பட்டிருந்தது. சோமனால் ஆச்சரியத்தை தாள முடியவில்லை. ஓ ஓ என ஓலமிட்டான். அந்த குகைச் சுவர் முழுவதும் ஓவியங்கள். தன்னையும் தான் மேய்க்கும் பசுக்கைளையுமே யாரோ குகைக்குள் வரைந்திருப்பதாய்ப் பட்டது சோமனுக்கு. ஒரு பக்கம் நடனமிடுவது போல் ஓவியங்கள். குச்சி குச்சியான மனிதர்கள். ஒருவன் கண் மூடி தியானம் பண்ணுவது போல். குகைக்குள் வெளிச்சம் செல்லும் தூரம் வரை சென்று நிறுத்திக்கொண்டான். மீண்டும் பசுக்களின் ஓவியம் அருகில் வந்து லட்சுமியை அப்படியே யாரோ வரைந்திருப்பதை வியந்துகொண்டான். மீண்டும் சிறுத்தையைப் பார்த்தான், அதே கண்கள்.

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எத்தனை அறை விழுந்தாலும் பரவாயில்லை என்று பஞ்சாயத்துக் கூடுகையில் எழுந்து சிறுத்தை வந்தது பற்றியும் தான் உண்டிக்கோல் வைத்து சண்டையிட்டது பற்றியும் சொன்னான். சிரித்தார்கள். பின் அங்கிருக்கும் குகைப் பற்றி அதில் வரையப்பட்டிருப்பது பற்றிச் சொன்னான். யாரும் காதில் போட்டுக்கொண்டால் என்ன போட்டுக்கொள்ளாவிட்டல் என்ன. 

ஊர்க்காலி மாடு சோமனின் காலம் மீண்டும் மிக மெல்ல அசைந்தாடி ஒசிந்து மெல்ல நடையிட்டது. விழிப்புடன் தூங்கப் பயின்றான் சோமன். அதே இடத்தில்தான் மாடுகளை மேய விடுகிறான். யார் யாரோ அந்த குகைக்கு படிக்க படம் பிடிக்க வந்து செல்வதை சோமன் நோட்டம் விடாமலில்லை. சிவப்பி வெகு வேகமாய் வளர்ந்துவிட்டாள். சிவப்பிக்கு லாடமடிக்க அழைத்துச்செல்கையில்தான் வி ஏ ஓ சொன்னார் ‘சோமா… நீ பாத்தியே கொக… அது மூவாயிரம் வருஷம் பழசாம்டா’. 

சோமனுக்கு மூவாயிரம் என்றதும் முகம் சற்று தெளிந்தது. அப்ப நெசமாவே மூவாவிரம் வருஷம் என நினைத்துக்கொண்டான். 

‘அதுல சிறுத்த படமும் இருக்கே பாத்தீங்களா ஆபீஸர்’ என்றான்.

வி ஏ ஓ ‘போடாப் போடா…இந்தக் காட்டுல சிறுத்த நரியெல்லாம் கிடையாது… ஃபாரெஸ்ட் டிப்பார்மென்ட்ல விசாரிச்சுட்டேன்..உன் கண்ணுக்கு மட்டும் அதிசயமா சிறுத்த தெரியுதா?’

‘ஆக்கங்க்கெட்ட ஆபிஸர்’ என வாய்க்குள் முனகியபடி சிவப்பியை இழுத்துக்கொண்டு நடந்தான்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ஆயன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.