மிளகு – அத்தியாயம் 87

 2000 ஹொன்னாவர்

ஹொன்னாவரில் இருந்து பிற்பகல் நாலு மணிக்குக் கிளம்பியாகி விட்டது. 

காடும் மலையுமாகக் குறுகத் தரித்த பாதை. சட்டென்று முகம் காட்டிய சிறு அருவியைத் தொட்டு நனைந்து போகிறது அது.  

வலமிருந்து இடமும் இடமிருந்து வலமும் செங்குத்தாகத் திரும்பி உடனே பாறையை எதிர்கொண்டு அடுத்த உடனடி திருப்பத்தை நிகழ்த்தி காரின் சக்கரங்களுக்குக் கடினமான வேலை தரும் பாதை. 

எதிரில் வரும் வாகனத்தைப் பிரித்தறிய ஒட்டாமல் சதா பெய்யும் சன்னமான மழையில் கார் கண்ணாடி மேல் நீர்ப் படலம் வைப்பர் கொண்டு அகற்ற அகற்றக் கனமாகக் கவிந்து வருகிறது. நீண்டு மெலிந்த சரளைக் கற்கள் கூர்மையான முனை வானம் பார்க்க அங்கிங்காகக் கிடந்த ஈரமான வீதி.

சித்திரம் : அருண்

 மழை வலுக்காது, பாதையில் நிலச்சரிவு, கல் புரண்டு அடைப்பு ஏதுமில்லை, கார் போகும் என்று கிளம்பும்போதே ஹொன்னாவரில் தங்கிய விடுதியின் வரவேற்புப் பகுதியில் தெளிவாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். 

மழை சாயந்திரம் வலுக்கும் என்று ஏனோ யாரும் சொல்லவில்லை. மாலை ஐந்து மணிக்குப் பாதையில் இருள் படரத் தருணம் பார்த்தபடி இருக்கிறது. 

இன்னும் ஒரு மணி நேரம் இந்தக் குறுகிய பாதையில் வண்டி போகவேண்டும். கூடவே கொஞ்ச தூரத்தில் நுரையும் அலையுமாகப் பொங்கிப் பிரவகித்துப் போய்க் கொண்டிருக்கிறது ஷராவதி நதி. 

இந்தப் பாதை ஷராவதி நதிக்கரையில் முடியும். அடுத்து படகுகள் ஏறி அங்கிருந்து கெருஸொப்பா. ஏர் கண்டிஷன் வேன் ஒன்று முன்னால் போக, மருது ஓட்டி வந்த பி.எம்.டப்ல்யூ கார் அடக்கத்தோடு வேனைத் தொடர்ந்தது. 

திலீப் ராவ்ஜியின் கார் அது. மருதுவுக்கு அருகே காரின் முன் இருக்கையில் திலீப் ராவ்ஜியும் பின்னால் கிட்டத்தட்டப் படுக்கை நிலையில் அவருடைய அப்பா பரமன் என்ற பரமேஸ்வரனும் இருந்தார்கள். 

மருது லண்டன் ஸ்ட்ராண்ட் பகுதியில் நாடக அரங்குகள் பற்றி சுவாரசியமாகப் பேசியபடியே கார் ஓட்டிக் கொண்டிருந்தான். முன்னால் போன வேன் ஒரு நொடி நின்று வலது பக்கம் சற்றே வளைய மருது அவசரமாக பிரேக் அழுத்தி வண்டி அதிர்ந்து குலுங்கிச் சமனப்பட வைத்துத் தொடர்ந்து ஒட்டிப் போய் ஓரமாக நிறுத்தினான். 

முன்னால் போன வேனும் ஓரம் கட்டி நின்றது. என்ன பாலன் நாயர், திடீர்னு ரைட் எடுத்திட்டீங்க. நான் தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டறேனான்னு டெஸ்ட் பண்ணவா என்று சிரித்தபடி கேட்டான் மருது. 

பாலன் என்ற அந்த வேன் டிரைவரும் சிரித்தபடி மருது சார், திடீர்னு ரெண்டு விஐபி ரோடைக் கடந்து போனாங்க. நீங்க பார்க்கலியா என்றார். 

மருது பதில் சொல்லாமல் பார்த்திருக்க, பாலன் சொன்னார் –

நல்ல பாம்பு ரெண்டு, புருஷன் பெண்டாட்டியாக இருக்கும், நம்ம பாதையிலே வந்துட்டாங்க. ரொம்ப சுவாரசியமா நடந்துட்டிருக்காங்க போலே இருக்கு. நாமதான் வண்டியை பாதையிலே இருந்து விலக்கிப் போகணும். அடிச்சு உசிருக்கு ஆபத்து ஆச்சுன்னா ராத்திரி கனவிலே வந்துடுவாங்க. 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார் உள்ளே பின் சீட்டில் இருந்து பரமன் குரல் பெரியதாக்கி மஞ்சுநாத் மஞ்சுநாத் என் குழந்தே மஞ்சுநாத் என்று அங்கே இல்லாத மஞ்சுநாத்தைக் கூப்பிட்டார். 

முன்னால் இருக்கையில் இருந்த திலீப் ராவ்ஜி பின்னால் திரும்பிப் பார்த்து அப்பா என்ன பண்றது உடம்புக்கு என்று கேட்டார். 

ஒண்ணும் இல்லேடா திலீப். நான் இங்கே இருக்கேனா அங்கே இருக்கேனான்னு தெரியலே. அவர் பலமாக முணுமுணுத்தார். 

நீங்க எங்கேயும் இருக்கீங்க. எப்போதும் இருக்கீங்க. 

திலீப் ராவ்ஜி ஒரு குறுமுறுவலோடு பதில் சொன்னார். 

புரியலே நீ என்ன சொல்றேன்னே. 

அப்பா எழுந்து உட்கார்ந்து கொஞ்சம் தண்ணி தா என்கிறார். ஆண்கள் எல்லோரும் கொஞ்ச தூரம் மலைத் தாவரங்கள் ஊடாக நடந்து   பாதை அருகே கருங்கல் சுவர் எழுப்பியதுபோல் நின்ற இடம் காரிலிருந்தும் வானில் இருந்தும் கண்ணில் படாத ஒன்று. 

ஆண்கள்  அற்பசங்கைக்கு ஒதுங்கி வர மருது கல்பாவிடம் காதில் சொன்னான் – 

அம்மாவும் நீயும் பகவதியும் போறதுன்னா அங்கே போய்ட்டு வாங்க. கல் பாறைதான் மறைவு. சுத்தமான இடம். லேடீஸ் பிஸ் ஹியர்ன்னு சாக்பீஸாலே புது ஸ்பெல்லிங்லே எழுதி வச்சிருக்கு –

Ladys piss hear!!

கல்பா ஓவென்று சிரித்தாள். தெரிசா என்ன விஷயத்துக்காக சிரிக்கிறார்கள் என்று ஒருமாதிரி ஊகித்திருந்ததால், புன்சிரிப்போடு கல்பாவுடன் நடந்தாள். 

எல்லோரும் வந்து வண்டிகள் புறப்பட்டன. மாலை ஆறு மணி ஆகி வெளிச்சம் சிறு பொதியாக மலைப் பாதையில் இறங்கிக் கொண்டிருந்தது. 

ஷராவதி நதி பாதையைத் தொட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது அந்தப் பின்மாலை நேரத்தில் அழகாகத் தெரிந்தது. அந்திக் கருக்கலில் வேறே ஒலியின்றி, சின்னச் சின்ன அலைகளின் சத்தம் அதிகரித்துக் கேட்டது. 

காரையும் வேனையும் இங்கே போட்டுட்டு போகலாமா இல்லே பெரிய படகுலே அதையும் ஏத்தி ஆறு கடக்கலாமா என்று டிரைவர் பாலன் கேட்டார். 

இங்கே போட்டா பத்திரமாக இருக்குமா கார் என்று திலீப் வினவினார். 

அதுக்கு கியாரண்டி இல்லே சார். 

எவ்வளவு அடைக்கணும்? பிஷாரடி கேட்டார். 

முதல்லே பெரிய போட் இருக்கான்னு தெரியலே. அக்கரையிலே பெரிசா லைட் எல்லாம் போட்டுத் தெரியுது பாருங்க, அதான். இங்கே வந்துட்டிருக்கு. படகுக்காரங்க ஏதாவது தடை ஆறு மணிக்கு படகு ஓஃபரேட் பண்றதுலே வச்சிருக்காங்களா தெரியலெ. 

படகு வரும்வரை காத்திருந்தார்கள் எல்லோரும். படகின் ஸ்ராங்க், என்றால் கேப்டன், உரக்கச் சொன்னார் – 

எல்லோரும் உள்ளே வரலாம். பத்து கார் வரைக்கும் படகுலே ஏற்றி ஜாக்கிரதையா கொண்டு போகலாம். ஒரு காருக்கு நூறு ரூபாய் கட்டணம். 

சொல்லி முடித்து விட்டு கையில் வைத்திருந்த நூறு வாட்ஸ் பல்பை படகின் ஓரம் தொங்கவிட்டு சுவிட்சை ஆன் செய்ய கரையெல்லாம் ஒளி வெள்ளம். 

இயற்கை வெளிச்சம் இன்னும் அரைமணி நேரம் இருக்கும். அது அஸ்தமித்ததும் போட்டா போதும் என்றார் திலீப் ராவ்ஜி. 

ஆமா, சார், பல்ப் ஃப்யூஸ் இல்லேன்னு செக் பண்ணினேன் என்றபடி நூறு வாட்ஸ் பல்ஃபை அணைத்தான் படகு கேப்டன் ஸ்ராங்க். 

படகில் முதலில் வேனும் தொடர்ந்து காரும் உருண்டு ஏறியது. படகு சைரன் ஊதிக் கிளம்பியது. 

ஸ்ராங், எல்லோரும் ஒரே பக்கம் உட்காராதீர்கள் பிரிந்து உட்காருங்கள் என்று சத்தமாக மலையாளத்திலும், கன்னடத்திலும், கொங்கணியிலும் சொன்னான். 

ஏன் அப்படி என்றாள் தெரிசா. 

Load Balancing என்று சுருக்கமாகச் சொன்னாள் கல்பா. சரிதான் என்றாள் பகவதி. அறிவியலார் குழுக்குறி போல இருக்கு என்று திலீப் ராவ்ஜி கல்பாவைக் கேட்டார். அப்படித்தான்னு வச்சுக்குங்களேன் என்றாள் கல்பா. 

அக்கரையில் என்ன இருக்கு?

 சாரதா தெரிசா கேட்டாள். 

மாலை மங்கும் நேரம் பக்கவாட்டுத் தோற்றமாக அவள் ரொம்ப அழகாக இருக்கிறதாக பகவதிக்குத் தோன்றியது. அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். 

போட் பயணத்துக்கு எல்லாம் பயப்படக் கூடாது என்று தெரிசா வெள்ளந்தியாகச் சொல்ல, பகவதி சிரித்து ஓயவில்லை.

 அக்கரையில் நாம் இன்று ராத்திரி தங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. நாலு ரூம் இருக்கு. நாலையும் நாம் புக் பண்ணிட்டோம் என்று பிஷாரடி வேனுக்குள்  அறிவித்தார். 

அப்பா, கெருஸொப்பா இங்கேயா இருக்கு?

 திலீப் ராவ்ஜி பரமனைக் கேட்டார். அவர் மௌனமாக தாங்குகோல்களை எடுத்துக் கொண்டிருந்தார். 

திலீப் அவசரமாக இறங்கி அவர் கீழே தாங்குகோல்களை ஊன்றி வெளியே வர உதவி செய்தார். 

தரை மெல்லிய கீற்றாக இறங்கும் இருட்டில் கல்லும் செடியும் கொடியுமாக சமதளமின்றி இருந்தது. எறும்புகள் ஓரமாகப் புற்று வைத்து அமைதியான படையாக மெல்லிய வெளிச்சத்திலும் வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. 

கடிக்குமே என்று தெரிசா இறங்க தயக்கம் காட்டினாள். 

அது கிட்டே போகாமல் நாம் பாட்டுக்கு இன்னொரு ஓரமாக நகரந்தா ஒண்ணும் பண்ணாது என்றார் வேன் ஓட்டி வந்த ட்ரைவர் பாலன். 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பரமனின் தாங்குகோல் ஒன்று எறும்பு வரிசையில் ஊன்றிக் கடகடத்தது.

 ஐயோ எறும்பு மேலே கட்டைக்காலை வச்சுட்டேனே என்று பரமன் நடுநடுங்கிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்தப் பெரிய எறும்புகள் சின்னச் சின்னதாகச் சிறகு விடர்த்தின. 

அவை நமநமநம என்று கூட்டாக இறகு தாழ்த்தி உயர்த்தி மேலே எழும்பிப் பறந்தன. எந்த நேரமும் அவை பெரும்படையாக மேலே இறங்கிக் கடிக்கத் துவங்கும் என்ற நடுக்கத்தோடு எல்லோரும் நின்றார்கள். 

அணி அணியாக மேலே எழுந்து அவை தரைக்கு  ஆறடி உயரம் பறந்தபோது இவர்களையும் வாகனங்களையும் தவிர்த்துப் போனதைக் கண்டார்கள். 

அபூர்வமாக ஒன்று இரண்டாக, சட்டை காலரிலோ புறங்கையிலோ இறங்கியவை பரம சாதுவாக ஊர்ந்தன. 

யாரும் சத்தம் போடவோ அதிகமாக உடல் அசைத்து நடக்கவும் வேணாம். இதெல்லாம் இப்போ போயிடும்

ட்ரைவர் பாலன் சொன்னபடி இரண்டு நிமிடத்தில் எறும்புப் படை காணாமல் போனது. 

எல்லா எறும்பும் இப்படி சாதுவா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனாலும் ஒண்ணு சொல்லலாம். கடிக்கற எறும்பு கட்டாயம் இறக்கை விரிச்சுப் பறக்காது. 

பரமன் சொன்னார் மெல்லத் தாங்குகோல் ஊன்றி நடந்தபடி.

 திலீப் ராவ்ஜியின் தோளில் கைவைத்து அணைத்து நின்றார் ஒரு வினாடி. 

நான் இங்கே வந்திருக்கேன் என்று முணுமுணுத்தார்.  

தெஜாவூ-ன்னு சொல்றது இதுதான் என்று திலீப் ராவ்ஜிக்குக் கூடுதல் தகவலாக மிகுந்த பிரயாசையோடு சொன்னார் பரமன். அவர்கள் கூட்டமாக விருந்தினர் மாளிகைக்குள் பிரவேசித்தார்கள். 

வாசலில் நின்றிருந்த மாளிகைப் பணியாளர்கள் இருவர் திலீப் ராவ்ஜி கொடுத்த அனுமதிக் கடிதத்தைப் படித்துத் திருப்தியடைந்தார்கள். 

இந்த வனப் பிரதேசத்தில் வந்து சிதிலமான பழைய நகரைப் பார்க்க அரசாங்க அனுமதி வேணும் என்று திலீப் ராவ்ஜி மற்றவர்களுக்கு விளக்கினார். 

இவர்களுக்காகத் தயாராக வைக்கப்பட்ட அறைகளைப் பூட்டுத் திறந்து உள்ளே அழைத்தனர்.

 மங்கிய இருபத்தைந்து வாட்ஸ் பல்புகள் லைட் ஷேட் அணைப்பு இல்லாமல் ஹோல்டர்களில் நிர்வாணமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பரமனை ஒரு அறைக்கு இட்டுப்போய் திலீப் ராவ்ஜி கட்டிலில் படுக்க வைத்தார். படுத்ததுமே உறங்கியிருந்தார் பரமன். 

முண்டாசு கட்டிய ஒரு பராமரிப்பு ஊழியர் முதல் அறையின் கோடியில் வைத்திருந்த பாத்திரங்களைச் சுட்டிக்காட்டிச் சொன்னார் –

 நீங்க கேட்டிருந்தபடி பத்து பேருக்கு சாப்பாடு தயார் பண்ணியிருக்கு. சாப்பிடறீங்களா? 

ரொம்ப சீக்கிரம் சாப்பிடணுமா? கல்பா கேட்டாள்.

ஏழு மணிக்கு அப்புறம் கொசு, ஈசல், எறும்புன்னு படையெடுக்க ஆரம்பிச்சுடும். ஜன்னல் கதவை மூடி வயர்மெஷ் போட்டு மூடியிருக்கு. இருந்தாலும் ஒண்ணு ரெண்டு வாயில் போக வாய்ப்பு இருக்கு என்றார் அந்த ஊழியர்.

 ரோம் நகரில் ரோமானியன் போல. சமண ஸ்தலத்துக்கு வந்தால் சமண முனிவர் போல் ராச்சாப்பாட்டை வெகு முன்னரே முடிச்சுக்கணும். பிஷாரடி சொன்னார். 

ராத்திரி எங்க ஆட்கள் யாரும் இங்கே இருக்க மாட்டாங்க. தண்ணி, சாப்பாடு, இதோ இங்கே இருக்கு. கூடுதல் லைட் பல்ப் இங்கே இருக்கு. விளக்குமாறு இதோ ஓரமா இருக்கு. அது கரப்பு வந்தால் அடிக்கறதுக்கு. நாலு அறைக்கும் சேர்த்துப் பொதுவா இங்கே ரெண்டு கழிவறை இருக்கு. கதவு சரியாக சார்த்தாது. கவனிச்சு அட்ஜஸ்ட் பண்ணி உபயோகிக்கணும். சாப்பாட்டுக்கு இப்பவே பணம் கொடுக்கணும். கொடுக்கறீங்களா சார்? 

எவ்வளவு தரணும்? 

பிஷாரடி ஜோல்னாபையில் இருந்து வேலட்டை எடுக்க, திலீப் ராவ்ஜி அவரைத் தடுத்து தன் பர்ஸை எடுத்தார். 

ஐநூறு ரூபா சாப்பாட்டுக்கு, சமையல், கொண்டு வந்து கொடுக்க முன்னூறு. ஆக மொத்த எண்ணூறு ரூபா என்று கராராகச் சொன்னார் அந்த ஊழியர். 

என்ன கொண்டு வந்திருக்கீங்க? கல்பா கேட்டாள். 

பத்து பேர் தாராளமாக சாப்பிடற அளவு சப்பாத்தி, தேங்காய் துவையல் கொண்டு வந்திருக்கேன் என்றார் அவர். 

சப்பாத்திக்கு கூட தேங்காய்த் துவையலா? 

தெரிசா ஒன்றுக்கு இரண்டு தடவை கேட்டுச் சிரித்தாள். 

அதென்ன இந்தப் பக்கத்துலே இப்படித்தான் சிம்பில் சப்பர் மெனு இருக்கும் போலே என்றாள் பகவதிக் குட்டி. 

நூறு நூறு வருஷமா இப்படித்தான் இங்கே ராத்திரி போஜனம். சந்தேகம்னா யாரையும் கேட்டுப் பாருங்க என்றார் ஊழியர். 

அதெல்லாம் வேணாம் என்று சொல்லி  திலீப் ஆயிரம் ரூபாய் ஊழியரிடம் அந்த அதியற்புத உணவுக்காகக் கொடுத்தனுப்ப, வாசல் வரை போன அவர் அவசரமாக உள்ளே வந்து மேஜைக்குக் கீழே இருந்து இரண்டு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் கோகோ கோலாவை எடுத்து வைத்து, ’அது கடிக்க, இது குடிக்க’ என்றார். 

நூறுநூறு வருஷம் புராதன பானமான கோகோ கோலாவை மேஜை மேல் வைத்துவிட்டு விடை பெற்றார் அந்த ஊழியர். 

புது இடம் கொஞ்சமாவது பழகினால் அல்லாமல் இயல்பாக இருக்க முடியாது என்பதால் பரமனைத் தவிர மற்றவர்கள் அறை அறையாகப் புகுந்து புறப்பட்டு, இருட்டு வானத்தில் அடர்த்தியாகத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து வியந்து கொண்டு குரலைச் சற்றே உயர்த்தி இது சகஜமான சூழ்நிலை என்று அவரவர்க்கு அவரவரே கற்பித்து அதுவும் இதுவும் பேசியபடி இருக்க நிலா சகல சௌந்தர்யத்தோடும் வானத்தில் புறப்பட்டது.

 பௌர்ணமியா இன்னிக்கு என்று பகவதிக்குட்டி கேட்டாள். 

பௌர்ணமிக்கு இன்னும் மூணு நாள் இருக்கே என்றாள் தெரிசா. 

அப்பாவை எழுப்பி சாப்பிட வைக்கலாமே. தெரிசா சொன்னாள். 

பரமன் பாதி நித்திரைக்கு மாறி இருந்தார். அவர் வாய் முணுமுணுத்துக்கொண்டே இருந்ததை பிஷாரடி கவனித்தார். கெருஸொப்பா என்று திரும்பத் திரும்பச் சொன்னார் அவர் உறக்கத்தில். 

திலீப் ராவ்ஜி அவருக்கு ஊட்ட நினைத்த சப்பாத்தியை வாயில் வைத்திருந்து உமிழ்ந்து விட்டார். துவையலை மட்டும் ஐந்து பெரிய ஸ்பூன், உறங்கியபடியே சுவைத்து உண்டார். 

மிளகு போடவில்லை என்று யாரிடமென்று இல்லாமல் பொதுவான புகாரைச் சொல்லியபடி படுத்தவர் கெருஸொப்பா என்றபடி மறுபடி உறங்கினார். 

அவரை உறங்க விட்டு மற்றவர்கள் சேர்ந்து உட்கார்ந்து அந்த வினோதமான சப்பாத்தி தேங்காய்த் துவையல் ராச்சாப்பாட்டை கோகோ கோலா சகிதம் சுவைத்து உண்டார்கள். 

மருது கான்வாஸ் பையை காரில் இருந்து எடுத்து வந்தான். மெட்டல் டிடெக்டர் என்றான்  உள்ளிருந்து எடுத்த இரண்டு உலோகக் கண்டுபிடிப்பான் கருவிகளை நாற்காலியில் வைத்து.

நாளைக்கு விடிந்து எழுந்து கெருஸொப்பா நகரம் சிதிலமடைந்து என்ன இருக்கோ அதை எல்லாம் பார்க்கறோம். பரமன் தாத்தாவுக்கு அதைப்  பார்க்கும்போது பழைய கெருஸொப்பா நினைவு வரலாம். இதுவரை அதிகமாக அகழ்வு செய்யாத பூமி இது. தரைக்கு ஆழத்திலே புதைத்து வைத்த   புராதனப் பொருளாக,  ஏதாவது கிடைக்கலாம். மெட்டல் டிடெக்டர் அதுக்குத்தான். 

அப்படிக்கூட புதையல் கிடைக்குமா? கல்பா கேட்டாள்.   –

எல்லாம் பரமன் நினைவு வைத்திருப்பதைப் பொறுத்து.

 பிஷாரடி தேங்காய்த் துவையல் புரட்டிய சப்பாத்தியை ரசித்து உண்டபடி சொன்னார். 

என்ன எல்லாம் இருக்கு பார்க்க என்று கல்பா கேட்டாள். மருதுவுக்கும் இப்போது ஆர்வம் பற்றிக் கொண்டது. 

நாலைந்து கட்டிடங்கள்   சிதிலமடைந்து, அதெல்லாம் நானூறு வருஷம் முன்பு மனுஷர் வசித்த சிறு மாளிகைகளாக இருக்கலாம். விளக்குத் தூண் தெருச் சந்திப்பில் இருந்து விழுந்ததாக இருக்கலாம். அப்போது அங்கே சந்தித்துப் பிரியும் சாலைகள் இருந்திருக்கலாம். அப்புறம் சிதிலமடைந்து ஜ்வாலாமுகி கோவில். மகா முக்கியமாக சதுர்முக  பஸதி, கிட்டத்தட்ட சிதிலமடையாமல். 

சதுர்முக பஸதின்னா? தெரிசா கேட்டாள். 

நாலு கதவு நாலு திசையிலும் இருக்கப்பட்ட சமணக் கோவில். நாளைக்கு எல்லாம் பார்க்கப் போறோம். பார்க்கக் கிடைக்காவிட்டாலும் பழைய நினைவுப்படி கெருஸொப்பாவை அங்கே இருந்தவர்ங்கிறதாலே பரமன் வாய் வார்த்தையாக விரிவாகச் சொல்வார்னு எதிர்பார்த்துத்தான் இங்கே வந்திருக்கோம். புதையல் ஏதும் கிடைத்தால் சர்க்காருக்குத் தரணும். இங்கே வர்றதுக்குக் கொடுத்த அனுமதிக் கடிதத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கு. கிடைக்கும். கொடுப்போம். 

பிஷாரடி சொல்லிவிட்டுக் கை அலம்பப் போனார். உண்ட களைப்பு தீர சற்றுப் பக்கத்தில் நடந்து விட்டு வரலாம் என்று மருது புறப்பட்டான். 

போய்த்தான் ஆகணுமா என்று திலீப் ராவ்ஜி தன் மெல்லிய மறுப்பை வெளியிட்டார். 

மலையும் வனமுமாக இன்னும் இயற்கை விடைபெறாத பிரதேசம். பண்படுத்தப்படாத தரை, மேலே நட்சத்திரங்களும் சந்திரனும் மூடிய ஆகாசம். பார்த்தால் போதாதா, நடந்து அந்த அமைதியை ஏன் குலைக்கணும்? அப்பா அப்படி நினைக்கறார் என்றாள் கல்பா. 

நான் இவ்வளவு நேர்த்தியாக கோவையாக நினைக்க மாட்டேன். ஆனாலும் கிட்டத்தட்ட இதெல்லாம் நினைவுலே வந்தது என்றார் திலீப் ராவ்ஜி. 

ராவ் அங்கிள், ஆறு பேட்டரி செல் போட்ட பெரிய டார்ச் நாலு வச்சிருக்கோம். டிரைவர் பாலனுக்கு இது ரொம்பப் பழக்கமான இடம். நாளைக்கு பார்க்கறபோது கெருஸொப்பா இன்னும் தீர்க்கமாக அர்த்தமாகணும்னா இன்னிக்கு ராத்திரி அதில் கொஞ்சமாவது பார்த்துவிட்டு வரணும்னு கிளம்பினேன் என்ற மருதுவுக்குப் பின்னால் மற்ற எல்லோருமே நின்றார்கள். 

பரமன் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதால் அவரை அப்படியே உறங்க விட்டு கதவைச் சார்த்தினார் பிஷாரடி.  

தனியா இருக்கணுமே அப்பா என்று கவலைப்பட்டார் திலீப் ராவ்ஜி. 

அவர் என்ன குழந்தையா, யார் எங்கே எப்போது இருக்கறாங்கன்னு எல்லா பிரபஞ்சத்திலும் தகவல் இருக்குமே என்று பிஷாரடி சொல்ல, அதை ஏற்கனவே அவர் சொன்ன தேஜாவூ திலீப் ராவ்ஜிக்கு. 

இந்த பிரவேச அனுமதி ராத்திரியிலே இந்தப் பிரதேசத்தில் அலைந்து திரிய அனுமதி கொடுக்கலே என்றார் கடைசியாக திலீப். 

எந்த நேரத்தில் இங்கே நடக்கலாம்னு சொல்லாததாலே இருபத்து நாலு மணி நேரமும் பிரவேசிக்க, சுற்ற அனுமதி உண்டுன்னேன் என்றான் மருது. 

டார்ச் விளக்குகள் தரையில் பரந்த ஒளிவட்டங்கள் இட்டு நகர்ந்து போக, பிஷாரடி முன்னால் நடந்தார். வடக்கில் கை சுண்டியபடி மற்றவர்கள் பின்னால் மெல்ல வருவதால் அவர்கள் வந்து சேரச் சற்றே நின்றார் அவர். 

ஏனோ அவருக்கு இல்லாத நினைவெல்லாம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அதெல்லாம் அவர் அனுபவமும், எண்ணமும் சார்ந்து எழுந்த நினைப்புகள் இல்லை. அடுத்தவர் டயரியைப் படித்துத் தன்னை அவராக உணரும் விசித்திரமான மனநிலையில் அவர் இருந்தார். 

கைக்கடியாரத்தில் நேரம் பார்த்தார். இரவு பதினொன்று. 

மற்றவர்கள் வந்தபிறகு வடக்கில் கொஞ்ச தூரத்தில் சதுர்முக  பஸதி இருக்கிறது. நாளை அங்கே ஒரு மணி நேரமாவது செலவிடுவோம். அங்கிருந்துதான் நம் கெருஸொப்பா நடைப் பயணம் தொடங்கும். 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது பின்னால் இருந்து சத்தம். 

நாளைக்கு ஏன், இன்னிக்கு இப்பவே நடக்கலாம் வாங்க. நான் எல்லாம் காட்டித் தரேன் என்று பரமன் குரல். 

கட்டைக்கால்களை ஊன்றி நடந்தபடி பரமன். அவர் குரல் தெளிவாக இருந்தது. புதர் மண்டிய ஒற்றையடிப் பாதையில் அவர் நடக்க, அந்தப் பாதை இருப்பதை அப்போதுதான் கவனித்த மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். இது  வாணியர் தெரு. தனபாலன் செட்டியார் மாளிகை இதோ நிற்கிறது. பரமன் கூறினார். 

ஆனா, இங்கே என்று ட்ரைவர் பாலன் ஏதோ இடைமறிக்க பிஷாரடி உஷ் என்று வாயில் விரல் வைத்து சும்மா இருக்கச் சொன்னார். 

ஒருவர் பின் ஒருவராகப் போய்க் கொண்டிருக்க, பரமன் சொன்னார் – நாங்கள் தினசரி தேங்காயெண்ணெயும் நல்லெண்ணெயும் இங்கே வாங்கித்தான் ஜயவிஜயீபவ இனிப்பு செய்ய எண்ணெய்ச்சட்டி காய வைப்போம். 

ரோகிணியம்மாள் மிட்டாய்க் கடையிலே என்று எங்கேயோ பார்த்தபடி பிஷாரடி சொன்னார். 

ஆமா, நான் தான் தலைமை மடையன். இது ரதவீதி. என் வீடு இங்கே தான் இருக்கு. அதோ அந்த மேற்கிலே நாலாவது, அதான் என் வீடு. என் பெண்டாட்டி ரோகிணி எனக்கு வாடகைக்குப் பார்த்துக் கொடுத்த வீடு. 

அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு என்றார் பிஷாரடி முணுமுணுப்பாக.

 ரொம்பவே. நேமிநாதன் இல்லேன்னா என்னை நல்லா வச்சிண்டிருப்பா. குழந்தை மஞ்சுநாத்தையும் தான். 

இங்கே கிழக்கே நடந்தால் கோவில் வீதி. ராத்திரியிலே கோவில் எதுவும் திறந்திருக்காதே. பரமன் சோகமாக நின்றார். 

நாளைக்கு பார்த்துக்கலாம் என்றார் வெட்டவெளியைப் பார்த்தபடி பிஷாரடி. 

ஆமா, எங்கே ஓடிப் போகப் போறது எல்லாம் என்றபடி நடந்தார் பரமன். நின்றார். எல்லோரும் நின்றார்கள். 

திலீப் ராவ்ஜிக்கு அவர் சித்த சுவாதீனம் இல்லாத பிரகிருதியாக ஏதோ பிதற்ற, பின்னால் எல்லோரும் சிரத்தையாக வருவது அபத்தம் எனப் பட்டது. 

இங்கே இருந்து பாருங்க எல்லோரும். இதுதான் சதுர்முக பஸதி. 

அவர் காட்டிய வெளியில் நிலவொளியில் கம்பீரமான ஒரு கட்டிடம் எழுந்து நின்றது. நான்கு பக்கத்திலும் நான்கு கதவுகள் திறந்திருந்தன. 

சமணக் கோவில். உண்மைக்கு நூறு வாசல் உண்டு. இது தான் சத்தியத்தை நோக்கி  அழைத்துப் போகும் என்று மதமோ, இனமோ, மொழியோ இல்லை. எல்லாத் திசையில் இருந்தும் எல்லா நல்ல வழிகளில் பயணப்பட்டும் அதை அடையலாம். சதுர்முக  பஸதி. நான்கு வாசல் கோவில். நான்கு வாசல் நான்கு திசை குறிப்பது. வாருங்கள்.  எல்லாக் கதவும் திறந்திருக்கிறது.

 பரமன் இப்போது கூட்டத்துக்கு முன்னால் வந்திருந்தார். ஏதோ அசாதரணமான ஒரு சம்பவம் நிகழப் போவதாக எதிர்பார்த்து எல்லோரும் அவர் பின் நடந்தார்கள்.  

எத்தனை அழகான சத்திய ஆலயம். பரமன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கட்டிடம் மெல்லச் சுழலத் தொடங்கியது. 

நடுவில் அச்சு வைத்துச் சுழலும் சக்கரத்தின் மேல் அந்தக் கட்டிடம் நின்றிருந்தது.  பஸதியின் உள்ளே ஒவ்வொரு வாசல் வழியாகவும் வரிசையாக பரமன் பிரதிகள் நுழைந்து கொண்டிருந்தார்கள். 

ஒரு நிமிடம்  கெருஸொப்பா தெரு  பஸதிக்குள் தட்டுப்பட்டது. ஒரு பரமன் குதிரை வண்டியில் வேகமாக நகரும்போது எதிரே அரச அலங்காரங்களோடு ஒரு அறுபது வயது மூதாட்டி கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள். 

அந்தப் பரமன் வண்டியை ஓரமாக நிறுத்த, வந்தவள் ‘நீர் வரதனா’ என்று அவரைக் கேட்டாள். 

இல்லை மகாராணி, நான் பரமன் என்கிறார். நானூறு வருடங்கள் உங்கள் காலத்துக்கு அப்புறம் பம்பாயில் ஜீவிக்கிறவன். 

பம்பாயா? தலைக்கு சுகவீனம் போல என்றபடி அந்த மூதாட்டி போகும்போது நான் தான் வரதன் என்று இளைஞனாக இருக்கும் இன்னொரு பரமன் பிரதி  பஸதிக்குள் காட்சிப்படுகிறான். 

இளமையான அழகான பெண் ஒருத்தி, கோச்சில் வந்த அரசிதான் அது,  நேர்த்தியான தோட்டத்தில் ஓடிவர வரதன் என்ற பரமன் பிரதி அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு இதழ் கலந்து நிற்கிறான். 

உம்மை நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நாளை கோகர்ணத்தில் நமக்குத் திருமணம். என் மகன் மஞ்சுநாத்துக்கு ஒரு பிரியமான அப்பா வேணும். எனக்கு ஒரு கணவன் வேணும். மிக்க அழகான சற்றே உயரம் குறைந்த முப்பத்தைந்து வயதுப் பேரழகி ஒரு பரமன் பிரதியை நெஞ்சில் தடவிச் சாய்ந்தபடி சொல்கிறாள். 

பால் மணம் மாறாத ஐந்து வயதுச் சிறுவனோடு பட்டாம்பூச்சிகளைத் துரத்தி ஓடுகிறான் ஒரு பரமன் பிரதி. 

அப்பா அப்பா. 

குழந்தை மஞ்சுநாத் குரல். சுழன்று போன ஒரு வாசல் பார்வையை அடைக்க அங்கிருந்து அப்பா அப்பா என்று மஞ்சுநாத் குரல். 

இன்னொரு வாசல் பார்வையை அடைக்க அங்கே இருந்து அப்பா அப்பா என்று மஞ்சுநாத் குரல். அடுத்த வாசலோடு ஓடி வருகிறான் மஞ்சுநாத். 

 மஞ்சு வந்துட்டேண்டா. 

பிஷாரடியின் கைப்பிடியை உதறிச் சுழலும்  பஸதிக்குள் ஓடும் பரமனுக்கு இரு கால்களும் முழுமையாக இருந்தன. 

அப்பா அப்பா, 

திலீப் பரமன் பின்னால்  பஸதிக்குள் சாடப் பார்க்கிறார். பிஷாரடியும் பாலனும் அவரை இறுகப் பற்றி நிறுத்த சதுர்முக  பஸதி சுழற்சி நிற்கிறது. 

நிலவொளியை அடர்ந்த மேகம் மறைக்க இருட்டில் அவர்கள் மௌனமாக வந்த வழியே மெல்ல நடக்கிறார்கள்.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு – அத்தியாயம் 86 மிளகு – அத்தியாயம் 88

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.