மிளகு – அத்தியாயம் 85

 2000 அம்பலப்புழை

அனந்தம் அக்ஞாதம் அவர்ணநீயம்
ஈலோக கோளம் திரியுன்ன மார்க்கம்
அதின்கலெங்காந்து ஓரிடத்திருந்நு
நோக்குன்ன மர்தயன் கதயெந்தறிஞ்சு (நாளப்பாட்டு நாராயண மேனோன்)

சித்திரம் : அருண்

ராத்திரியில் கேட்கும் கவிதை இது. நகர்ந்தபடி சொல்லப்பட்ட கவிதை.

வேம்பநாட்டுக் காயலில் இரவு நேரத்தில் அந்த மோட்டார் படகு நிதானமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. பிஷாரடி வைத்தியர் என்ற எழுபது வயதான பேராசிரியரும். அவருக்கு அடுத்ததற்கு அடுத்த தலைமுறை இளையோரான கல்பா, மருது, பகவதிக்குட்டி ஆகியோரும், திலீப் ராவ்ஜி, சாரதா தெரசா என்ற இரண்டு அறுபதுக்காரர்களும் சென்று கொண்டிருக்கும் ராத்திரிப் படகு யாத்திரை.

 ராத்திரி படகு யாத்திரை என்றால் எனக்கு ராப்பாடி நினைவு வருது. ஒன்றைக்கூடக் காணோமே என்றாள் கல்பா. 

ராப்பாடி என்றால்? பகவதிக்குட்டி கேட்டாள். ராப்பாடி என்றால் nocturnal singing bird என்றான் மருது. ராத்திரியில் பறந்து இரைதேடும், பாடும் பறவை.  மருது அடுத்துக் கூறினான். 

எனக்கு குமாரன் ஆசான் நினைவு வருகிறார் என்றார் பிஷாரடி. கவிதையா என்று கேட்டாள் கல்பா.

பிஷாரடி சொன்னார் – 

பௌர்ணமிக்கு முந்திய ராத்திரி  காயலில் போகும் நேரத்தில் கவிதையும் இருந்தால் இன்னும் நன்றாகவே இருக்கும் தான். குமாரன் ஆசான் கவிதை நினைவு வருதோ என்னமோ, ராத்திரி இப்படி படகேறி பல்லண நதிப் பயணமாக ஆலப்புழை போகும்போது படகு கவிழ்ந்து மகாகவி குமாரன் ஆசான் இறந்தது நினைவு வருகிறது. 

பிஷாரடிதான் இந்த ராத்திரிப் படகுப் பயணத்தை ஏற்பாடு செய்தவர்.  கல்பாவின் சகோதரன் அனந்தனும் வரலாம் என்று சொல்லியிருந்தார். அனந்தனால் வரமுடியாமல் போய்விட்டது. 

 கல்பாவின் தந்தை திலீப் ராவ்ஜியும், மருதுவின் அம்மா சாரதா தெரிசாவும் நாங்களும் வருவோம் என்றார்கள். வேண்டாம் என்று தவிர்க்கப் பார்த்தார் பிஷாரடி. வருவேன் என்று ஒரே பிடிவாதம். சரி வாங்க.  

பகவதிக்குட்டியின் அப்பா (மருதுவின் தந்தையும் கூட) சின்ன சங்கரன் ‘போட் யாத்திரை ஒழிவாக்கணும் அபகடம் பற்றும்’ என்று எந்தக் காலத்திலோ பகவதிப் பாட்டியிடம் கற்ற மலையாளத்தில் ஜாக்கிரதையாக வார்த்தை கோர்த்துச் சொன்னார்.  அவர் வரவில்லை

நாளப்பாடு நாராயண மேனோன் கவிதையை அதைப் படிப்பதற்கே உரிய பாட்டுக்கும் பேச்சுக்கும் இடைப்பட்ட குரல் எடுத்துச் சொன்னார் அவர் – அனந்தம் அக்ஞாதம் அவர்ணநீயம்.

கவி சொன்னது பூமி என்ற இந்தச் சிறு கிரகத்தின் இயற்கை பற்றி.

பிஷாரடி தொடர்ந்தார் –  

 சூரியனைச்  சார்ந்து சுழலும் பத்து கிரகங்களில் ஒன்றான பூமியில் இருக்கும் நாம், நம் பூமி, பூமி அடங்கிய சூரிய மண்டலம் Solar System, சூரிய மண்டலம் இடம் பெற்ற பால்வீதி என்ற விண்மீன் மண்டலம் Milky Way Galaxy, இன்னும் பலப்பல விண்மீன் மண்டலங்கள். 

அத்தனையும், எல்லாமும், எப்போதும்  இடம் பெற்ற பிரபஞ்சம் Universe. 

இந்தப் பிரபஞ்சத்தின் தூசிக்குத் தூசியான தூசிக்குத் தூசியான உயிர்கள் நாம். 

இந்தப் பிரபஞ்சம் போல் இன்னும் எத்தனை பிரபஞ்சம் விண்வெளியில் உண்டோ அதிலெல்லாம் எத்தனை எத்தனை சூரிய மண்டலமோ, அந்தச் சூரிய மண்டலங்களில் எவ்வளவு பூமிக் கிரகமோ, அவற்றில் நம்மின் பிரதிகளாக எத்தனை நானோ, நீங்களோ.  

அவர்கள் நம்மின் பிரதிகளா, நாம் அவர்களின் பிரதிகளா? எவற்றின் பிரதிகள் நாம்? 

இந்தப் பால்வீதிப் பிரபஞ்சத்தில் நாம், நாம் என்றால் பிஷாரடியான நானும், மருது, கல்பா, கொச்சு பகவதி, திலீப் ராவ்ஜி, தெரசாம்மா ஆகிய நீங்களும் இப்போது, இந்தப் பௌர்ணமி இரவில் வேம்பநாட்டுக் காயலில் படகில் போய்க் கொண்டிருக்கிற இதே நேரத்தில் வேறு வேறு பிரபஞ்சங்களில் நம்மின் பிரதிகள் படகோட்டிக் கொண்டிருப்பார்கள் அல்லது சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள் அல்லது இன்பம் துய்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது காதைக் குடைந்து கொண்டிருப்பார்கள் அல்லது வேறேதாவது செய்து கொண்டு உயிர்த்திருப்பார்கள். அல்லது பிறக்கக் காத்திருப்பார்கள். அல்லது ஆடி முடித்து அடங்கி ஒன்றுமில்லாமல் போயிருப்பார்கள். 

இதே நேரம் என்று சொன்னேனா, காலமும் கன பரிமாணம் போல் ஒரு பரிமாணமாக, நான்காவது பரிமாணமாகத் திகழ்வது. 

இன்றைய நாம், நேற்றைய இன்னொரு பிரபஞ்சத்து இன்னும் பல நாம், நாம் இல்லாத ஐநூறு வருடம் முந்திய பௌதீக வெளி என்று எல்லாமே, எல்லாரும், எப்போதும் வேறுபாடுகளோடு இந்தக் கணத்தில் உறைந்திருக்கலாம்.  

பூமியின் குழந்தைகளான நாம் இந்த மாற்று பிரபஞ்சங்களை (alternative universe)   பலவான பிரபஞ்சங்களாக (multiple universes – multiverse) உணர்ந்ததுண்டோ! அவற்றின் இருப்பு சாத்தியமா என்று கூட அறியாமல், ஒரு ஓரத்தில் அறிவியல் ஆய்வு, மற்ற ஓரத்தில் புனைகதையில் கற்பனைச் சித்தரிப்பு என்று அம்பலப்புழை பால் பாயசத்தோடும், மில்க் சாக்லெட்டோடும் கலந்துகட்டியாகச் சுவைத்துக் கொண்டிருக்கிறோம். 

மாற்று பிரபஞ்சங்கள், கணிதமொழியில் சொன்னால் ten to the power of ten to the power of sixteen எண்ணிக்கையில் இருக்கிறதாம். 

கிட்டத்தட்ட கணக்கற்றவை. அநந்தம்.

 வேறு யாரோ எதுவோ, நம் பிரபஞ்சத்திலோ வேறேந்தப் பிரபஞ்சத்திலோ, நம்மில் சிலரை, அவர்களின் பிற பிரபஞ்சப் பிரதிகளை, நான்காவதான கால வெளியில்,  முன்னும் பின்னும் அசைத்து இயக்கி, என்ன ஆகிறதென்று பார்க்கிறார்கள். அதுதான் இப்பொழுது நடக்கிறது.

 முக்கியமாக கல்பா மற்றும் அனந்தனின் தாத்தாவான பரமன் என்ற பரமேஸ்வர அய்யரை இப்படிக் காலவெளியில் இயக்குகிறார்கள். 

இந்த நாடகத்தில் பரமன் என்ற முக்கியப் பாத்திரத்தை ஒவ்வொரு நேரத்தில் ஒருவராக பரமன் – பிரதிகள் ஏற்று இயங்கி, வந்த சுவடு தெரியாமல் திரும்புகிறார்கள். ஒரு பரமன் பிரதி போகும்போது மற்றவர் அடுத்து ஆட வந்திருக்கிறார்.  ஓரிடத்திருந்நு நோக்குன்ன நமக்குக் கதையெந்து அறிஞ்ஞு?

நாம் மேலே பேசுவதற்கு முன் ஒன்றைப் புரிந்துகொண்டு மனதில் இருத்த வேண்டும். 

பிஷாரடியான நான் இருப்பில் ஒரு பிஷாரடி மட்டுமில்லாதது போல், பரமனும் பல பரமன். 

இங்கே இதுவரை எத்தனை பரமன் வந்தாரோ, வரப் போகிறார்களோ தெரியாது.  ஆனால் ஒரு நேரத்தில் ஒரு பரமன் மட்டும் வந்த, வரும் சூழல் இது.

இதில் யாரும் ஏமாற்றுகிற, ஆள் மாறாட்டம் செய்கிற பரமன் இல்லை. எல்லோரும் பரமன் தான். யாரும் யாரோ ஒரு திலீப் ராவ்ஜிக்கு தகப்பனான பரமனாக இருக்கும். இந்த உறவு இல்லாத மற்ற பரமன்கள் இந்த விளையாட்டில் பங்குபெற மாட்டார்கள்.  விளையாடு விதி செய்தது யாரோ, ஏனோ, அறியோம்.

ஒரு பரமன் –பிரதி மகன் திலீப்பை உயிருக்கு உயிராக நேசிக்கிறவராக இருக்கலாம். இன்னொருவர்  மகனை வெறுப்பவராக இருக்கலாம். அவர்களை இந்த பிரபஞ்ச நாடகத்தில் வெவ்வேறு சமயங்களில் கொண்டு வந்து சேர்த்து ஆட விட்டு வேடிக்கை பார்த்துத் திரும்ப அனுப்பப்படச் செய்வது யார்?

ஆட வந்தவர். இந்தப் பூமியின் குழந்தையான, காலப் பிரவாகத்தில் இந்த ஆண்டு 2000, மாதம், நாள், மணி, நிமிடம், வினாடியில்  உயிர்க்கும் பரமனாக இருக்கலாம்.

அல்லது மற்றவோர் பிரதியாக, இப்போது இல்லாமல் போய்.  மற்றவோர் காலக்கோட்டில்  உயிர்த்திருக்கலாம். 

நாற்பதாண்டு முன் தில்லியிலிருந்து பம்பாய் புறப்பட்ட பரமன் நம் திலீப் ராவ்ஜியின் அப்பாவாக இருக்கலாம். இல்லாமல் இன்னொரு திலீப் ராவ்ஜியின் தந்தையான பரமனாக  இருக்கலாம். அவர் நாக்பூரில் தன் பங்கெடுப்பு முடிந்து இன்னொரு பரமனிடம் பொறுப்பைக் கொடுத்துத் தான் எந்த பிரபஞ்சத்திலிருந்து வந்தாரோ அங்கே திரும்பியிருக்கலாம்.  பம்பாயும் தில்லியும், நாக்பூரும், வருடக் கணக்கும் பரமன்களின்  பொது நினைவில் அடிப்படை அனுபவத் திரளாக வந்தேறி இருக்கலாம். பரமனாக ஆடி இன்னும் அனுபவம் செறிவாக, பொது நினைவு அவற்றைக் கொண்டு இற்றைப்படுத்தப் படுகிறதாக uptodate ஆனதாக இருக்கக் கூடும்.

அந்தப் பரமனோ அவரின் வேறு பிரதியோ கெருஸொப்பாவில் 1600-ஆம் ஆண்டிறுதியில் காலப் பிரவாகத்தில் எதிர்நீச்சல் போட்டு  சென்னபைராதேவி ஆண்ட  பதினாறாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரை போயிருக்கலாம். 

அல்லது நாம் இப்போது செல்வது காலப் பிரவாகத்துக்கு எதிர்நீச்சலிட்டு என்பதாக இருக்கலாம். 

பரமனாக அனுப்புவதற்கு முன் இன்னும் முப்பது ஆண்டு பின்னே போய், பரமனின் முன்கூட்டிய பிரதியான வரதனாக, சரித்திரக் காலம் புதுக்கி அனுப்பி வேடிக்கை பார்த்திருக்கலாம். பார்த்திருக்கிறார்கள். யார்? எது? 

ஏன் என்பதற்கு பதில் இல்லாவிட்டாலும் எப்படி என்பதை ஓரளவு எண்ணெய்ச்சாய ஓவியமாக இல்லாவிட்டாலும், கோட்டோவியமாகத் தீட்ட முயல்கிறேன் நான். 

அத்தனை பிரதிகளும், பிரபஞ்சங்களூடே இருப்பையும் வெளியையும் காலத்தையும் இற்றைப்படுத்தப்பட்ட பொது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாலும் அவரவருக்குத் தனி ஆளுமை சார்ந்த மனம், எண்ணம், கற்பனை. இயல்பு ரூபமாகத் தனித்தனியானவை. அதுவில்லாத, தனித்தன்மை ஒழிந்த பிரபஞ்ச இருப்பு ஏற்படும் பட்சத்தில், யந்திரகதியில், ஆன்மா இல்லாத  யந்திரமாக உருவாகி, யந்திரங்களில் ஒன்றாக நடமாடி, இயக்கம் நின்று போகும். 

நம்மிடையே இப்போது இருக்கும் பரமனை ஹிப்நாட்டிஸ ஓய்வு நிலையில் வைத்து அவர் இருப்பு பற்றிய நினைவுகளாக மனதைக் கெல்லி அறிந்து கொண்டதின் அடிப்படையில், நடந்ததை வரிசைப்படுத்துகிறேன் நீங்கள் சுலபமாகப் புரிந்து கொள்ள-

1960-ஆம் ஆண்டு, அதுவரை திலீப்போடு பம்பாய் பாண்டுப் பேட்டையில் குறுகலான ஒற்றை அறை வீட்டுக் குடித்தனத்தில் இருந்த,  வலது கணுக்காலுக்குக் கீழ் இழந்த பரமன் தில்லிக்குப் புறப்பட்டுப் போகிறார். 

போய்ச் சேர்ந்தவர்  மாற்றுப் பிரபஞ்சத்திலிருந்து ஒரு பரமன்-பிரதி. 

புறப்பட்ட பரமனுக்குச் சமையல் தெரியாது. அடுத்து வந்த பரமன் சமையலில் தேர்ந்தவர். அந்த அனுபவம் மற்றும் ஆற்றல், பரமன் பிரதிகளின் பொது நினைவில் சேர்த்துக்கொள்ளப் படுகிறது.

தில்லியிலிருந்து நாக்பூர் வழியாக மீண்டும் பம்பாய்க்குப் புறப்பட்டு வந்தவர் இன்னொரு பிரபஞ்சத்து பரமன்-பிரதி. அவர், காலத்தில் கிட்டத்தட்ட நானூறு வருடம் பின்னோக்கி நகர்த்தப்பட்டார். களமும் பம்பாய், டில்லி, நாக்பூராக இல்லாமல், நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கெருஸொப்பா நகரமாகி விட்டது.   இப்போது சிறு கிராமமாக இருக்கிறது அந்த நகரம்.

காலத்தில் பின்னால் போய். அவருக்குக் கால்  முடமாகாமல், கால் இழக்கச் செய்த அந்த மின்சார ரயில் விபத்து நடக்காமல், காலக் கோட்டில் மாற்றி வைத்து, முகத்திலும், உருவத்திலும் வயோதிகம் தெரியாமல் சற்றே இளமையாக்கப்பட்டு, பரமனின் பொது நினைவுகளோடு கெருஸொப்பா கொண்டு சேர்க்கப் பட்டார்.

 காலக்கோட்டில் நிகழ்வுகளை அழிப்பதும் மாற்றி வைப்பதும் அபாயகரமானது. எனினும் தேர்ந்த உயிரினம் ஏதோ அந்த விளையாட்டை நிதானமாக ஆடிக் களிக்கிறது. விளைவுகள் என்ன ஆகுமோ தெரியாது.

திருத்தப்பட்ட பொது நினைவுகளால் இணைக்கப்பட்ட அத்தனை பரமனும் பொதுமை இழக்கக் கூடுமா அல்லது தனித்தன்மை இல்லாமல் போவார்களா என்பதை விளையாட்டாக ஆராய யாரோ முற்பட்டிருக்கலாம். ஏன் விளையாட்டு என்றால் அதுவும் தெரியாது. அங்கே, எங்கே, அந்த மாற்றுப் பிரபஞ்ச வெளியில் யாருக்கோ கல்லூரி ப்ராஜக்ட் செய்ய வேண்டி விளையாடியிருக்கலாம் என்று வைத்துக் கொள்வோமே. இப்போ என்ன போச்சு?

 ஆக கெருஸொப்பா போன பரமன்-பிரதிக்கு அவருடைய பாண்டுப் சால் வாழ்க்கையும், மகன் திலீப்பும், மனைவி ஷாலினியும் நினைவில் இருப்பார்கள். கால் போன மின்சார ரயில் விபத்து நினைவு இருக்காது.  நினைவில் வந்தால் அது தனி நினைவும் பொது நினைவும் முரண்பட்டு இரண்டும் விழித்திருப்பதாலாகலாம்.

ஒவ்வொரு பரமன் பிரதிக்கும் எங்கே இருந்து வந்தேன் என்பது பொது நினைவில் பம்பாயாக இருக்கலாம். தனி நினைவிலோ அவருடைய பிரபஞ்சம்  சார்ந்ததாக இருக்கலாம். எனில் இரண்டும் முரண்படும்போது, பொது நினைவே இயக்கத்தைக் கொண்டு செலுத்தலாம்.

ஏற்கனவே ஆடிக்கொண்டிருக்கும் பரமன் பிரதியிடமிருந்து இன்னொரு பரமன் பிரதிக்கு இருப்பும் இயக்கமும் சென்றடைவது எப்படி நிகழ்கிறது, எப்போது நிகழ்கிறது என்பதற்கெல்லாம் என்றாவது பதில் கிடைக்கலாம். இப்போது இல்லை.

எத்தனை பரமன்-பிரதிகள் இந்த பிரதி நாடகத்தில் பங்கெடுத்துப் போனார்களோ, இன்னும் வந்து கொண்டிருக்கிறார்களோ, தெரியாது. 

சுழலும் சதுர்முக  பஸதியும், என்றால் சுழலும் நான்கு வாசல் கோவில், இந்த விளையாட்டில் பங்கு பெறுகிறது. சமண திகம்பர முனிவர் நிர்மல முனி-பிரதியும், ஆம், அவரும் பிரதி ரூபங்களாக இந்த இருத்தல் விளையாட்டில், யாரோ எதுவோ வேண்டிக் கோரிக்கை வைத்ததாலோ என்னவோ, பங்கெடுத்திருக்கிறார்.

அடுத்து, இந்த நாடகத்தை மீண்டும் காலமும் களமும் மாற்றி ஆண்டு 2000 மற்றும் இதோ இந்த வேம்பநாட்டுக்காயலும் அம்பலப்புழையும் வரும் தற்காலத்துக்கு பரமன்-பிரதி அனுப்பப் பட்டிருக்கிறார். அவருக்குக் கால்கள் ஊனமானவை.  அடுத்தடுத்து வர, பரமன் – பிரதிகளின் காணா ஊர்வலம்

காலமும் களமும் இப்போதையதாக மாற்றப்பட்ட போது பொது நினைவு தப்பி,  பரமன் – பிரதிகள் தவித்துக் குழம்பித் தெளிந்திருக்கிறார்கள். 

கெருஸொப்பா நிகழ்வுகளும், அனுபவங்களும் பொது நினைவில் வைக்கப்பட, அவை அவ்வப்போது கனவாக இங்கே வரும் பரமன் – பிரதிகள் மனதிலிருந்து வெளிப்படுகின்றன. ஒரு பரமன் – பிரதியோடு நான் ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்துக்குப் போகும்போது, அவருக்குத் தெரிந்திருக்காத, என் குடும்பத்துக்கும் அம்பலப்புழை சமையல் குடும்பத்துக்கும் தெரிந்த, ’ஆலப்பாட்டு வயசன் பறந்து கோவில் கொடிமரத்தை அசுத்தப்படுத்திய’ நூறு ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வு,  என் பொருட்டு சில வினாடிகள் அம்பல வெடித்தரையில் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. 

பரமன் – பிரதிகளை அனுப்பி விளையாடும் யாரோ, எதுவோ, தன் ஆற்றலை வெளிப்படுத்தவோ என்னவோ, என்னோடு விளையாடிய சம்பவம் அது. 

நானூறு வருடம் முந்தைய கெருஸொப்பா காலத்தில் ரோகிணி என்ற பெண் சிநேகிதம் கிடைக்கிறது. அவள் தன் ஆசைநாயகன் நேமிநாதனோடு உறவு கொண்டு  பெற்றெடுத்த மஞ்சுநாத் என்ற சிறுவனின் பிள்ளைப் பிரியமும் கிடைக்கிறது. 

யாரும் கவனிக்காமல் போன சிறுவன் மஞ்சுநாத். பரமன் சதுர்முக  பஸதி வழியாக நானூறு ஆண்டும் நிகழ்வெளி கெருஸொப்பாவும் கடந்து நம் காலத்துக்கு, அம்பலப்புழைக்கு வந்த போது அவனைத் தொடர்ந்து மஞ்சுநாத் வந்ததைக் கவனிக்கவில்லை.

 அல்லது அப்படியாக சூழ்நிலையை இந்த பிரபஞ்ச விளையாட்டை ஆடும் யாரோ எதுவோ உருவாக்கி மஞ்சுநாத்தை அப்பா அப்பா என்று அழைத்தபடி பரமனைத் தேடி அலைய வைக்கிறது. 

நாலு நூற்றாண்டுகள் கடந்து அவன் குரல் மட்டும் முன்னால் வருகிறது. பரமனுக்கு மட்டுமில்லை,   திலீப் ராவ்ஜி குடும்பத்தோடு சம்பந்தமிருக்கும் தெரசா, சின்னச் சங்கரன் குடும்பத்தாருக்கும் மஞ்சுநாத்தின் குரல் கேட்கிறது. அப்பா அப்பா அப்பா அப்பா.

அவன் மூலமாக  நிகழவேண்டிய சம்பவங்களாக, தெரசா வீட்டில் நாலு நூற்றாண்டு முந்திய பேய்மிளகு கடந்து வருகிறது. என் வீட்டிலும்தான். சின்னச் சங்கரன் நாசியில்  மிளகு வாடை தவிர வேறு ஏதும் தட்டுபடாமல் போகிறது. கல்பாவுக்கு மிளகு ஒவ்வாமை அதிகமாகிறது. திலீப் ராவ்ஜி மறைந்த மனைவிக்கு திவசம் கொடுக்கும்போது மிளகாய் மிளகு ஆகிறது.

ஆளொழிந்த கெருஸொப்பா நகரில் அப்பா அப்பா என்று அழைத்தபடி நானூறு வயது முந்தைய அந்தச் சிறுவன் அலைவது சங்கரன் மனைவி வசந்திக்கு உள்-கண்ணில் தெரிகிறது. கல்பாவுக்கும் அப்படித்தான். 

பரமனைத் திருமணம் செய்துகொண்டு, தொடுப்பாக இருக்கும் நேமிநாதனிடமிருந்து மஞ்சுநாத்தைக் காப்பாற்றும் ரோகிணி, பரமனின் உபயோகம் முடிந்து போனதாகக் கருதி அவரை, அந்தப் பரமன் பிரதியைக் கொல்ல முயல்கிறாள். 

காலப் பிரவாகத்தில் அந்த ஒரு திருத்தல் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்த விடாமல் அவள் ஓடிப்போக, ஒரு பரமன்-பிரதி அம்பலப்புழையில் பிரத்யட்சமாகிறார். 

இந்த நிமிடத்தில் அவர் போய் வேறு பரமன்-பிரதி வந்திருக்கலாம். நாளை அவர் வேறொரு பரமனாக திலீப் ராவ்ஜியோடு அப்பா மகன் வாஞ்சையோடு பேசிக் கொண்டிருக்கலாம். அந்த வாஞ்சை எப்படி ஏற்பட்டிருக்குமென்று தெரியாது. காலத்தின் எந்த நுண்நொடியில் இந்தப் பிரதி மாற்றம் நிகழ்கிறதென்று யாரும் அவதானிக்க இயலாது.

 காலை உணவு உண்ண அமரும் பரமன், முடித்துக் கையலம்பும் பரமனில்லை என்று, ஆமாம், ஹைபாதெடிகலாக hypothetical ஆக இருக்கலாம். என்றாலும் அனுபவங்களை பொது நினைவில் கொண்டு போய்ச் சேர்த்து இற்றைப்படுத்துவது எப்போதும் சீராக, மிகச் சரியாக நடைபெறவில்லை.

 தாங்கனீகாவிலும், கானாவிலும் இன்காக்னிடோ incognito திரை மறைவு வெளிவிவகார ஆலோசகராக பரமன் பணி புரிந்ததாகச் சொன்னதை நம்ப முடியவில்லை என்று மருதுவும் அனந்தனும் சொன்னது தவறாக இருக்கலாம். 

அது ஒரு அல்லது ஒரு சில பரமன்-பிரதிகளின் பிரத்தியேக நினைவறைகளில் உள்ள வாழ்வனுபவம். பரமன்-பிரதிகளின் பொது நினைவுக்குக் கொண்டு போகப்பட்டது. எனினும் வேறு முக்கியமான தகவல் பொது நினைவில் உண்டு.

 கெருஸொப்பாவில் ரோகிணியும் மற்றக் குடிமக்களும் புதைத்து வைத்த தங்கமும் வெள்ளியும் குறித்து எல்லா பரமன்-பிரதிகளுக்கும் ஆழமானதாக இல்லாத பொது நினைவு உண்டு என்று நம் நேற்றைய மற்றும் இன்றைய பரமனிடமிருந்து அறிந்து கொண்டேன். 

மகுடி நாதம் கேட்டு நாகப் பாம்பு படமெடுத்து ஆடுமென்பார்கள். உண்மையா தெரியாது. எனினும் அம்பலத்தில் எடக்க மீட்டி வாசித்து மாரார் பாடும் சோபான சங்கீதம் பரமன்-பிரதிகளை மயக்கியிருக்கிறது. அந்த இசை கேட்டு கோவிலுக்கு என்னோடு வந்த பரமன் ஹிப்நாடிஸ உறக்கத்தில் ஆழ்ந்து உள்மனம் என்னோடு எல்லா செய்தியும் பகிர்ந்து கொண்டது. அவர் ஒரு பிரதி என்பதை அந்தப் பேச்சில் தான் அறிந்து கொண்டேன்.

டேப் ரிகார்டரில் எடக்க இசையையும் மாரரின் சோபான சங்கீதத்தையும் இசைத்து, அப்புறம் அவரோடு இடைபடும் பொழுதெல்லாம் அவரை ஹிப்னாடிஸ உறக்கத்தில் ஆழ்த்தி இத்தனை தகவலும் தெரிந்துகொண்டேன்.

அந்தப் புதையலை, ரோகிணி பதுக்கியதை மட்டுமாவது அவர் மூலம் மீட்டெடுக்க முயலலாம். 

பிஷாரடி நிறுத்தாமல் பேசியது ஓய, அமைதியான காயலில் மோட்டார் படகின் யந்திர எஞ்சின் சத்தம் படபடவென்று நீர்த்தாவரங்களை விலக்கி முன்னேறியது. 

கல்பா கைதட்ட, பகவதியும் மருதுவும் தொடர்ந்தார்கள். 

பிஷாரடி ப்ரபசர் சார், நீங்க இந்த கிரகத்துக்காரர் தானே? கல்பா கேட்டாள். 

இல்லாமல்தானே உன்னைக் கூட்டிக்கொண்டு கருப்புகுதிரை வீதிப்பக்கம் மருது அபார்ட்மெண்டைத் தேடி அலைந்தேன். சின்னப் பசங்கள் ஹோலி ஹோ என்று டிசம்பரில் ஹோலி கொண்டாடி என் சட்டையை நனைத்தார்களே அது புத்தியுள்ள பிஷாரடியாக இருந்தால் நடந்திருக்குமா?

பிஷாரடி சிரித்தபடி கேட்டார். 

You have a point there. கல்பா அவர் தோளில் தட்டிச் சொன்னாள். 

நீ எந்த கிரகத்திலேயும் இல்லாத கல்பா என்றான் மருது. சிரிப்பொலி காயல் ஊடாக நீரை ஊடுருவிப் போய்க் கேட்டது.

படகுக்காரன் தொலைக்காட்சியை இயக்க, கேபிள் டிவியில் கரிமுகில் காட்டிலே என்று காயல் பயணம் குறித்த சினிமா. கொளுத்திவைத்த லாந்தர் படகின் நடுக்கம்பத்தில் ஒளி சிதற, பேரிளைஞனாக பிரேம் நசீர் லுங்கியுடுத்தி பீடி புகைத்து காயலைப் பார்த்தபடி நிற்கிறார். 

கேபிள் டிவி ஓய்வெடுக்க, திரை இருண்டு ஓரங்களில் சிறு இழையாக ஒளிர்கிறது. பிரேம் நசீர் புகைக்கும் பீடியின் நெடி இங்கே அடித்தது போல் பிஷாரடி மூக்கைக் கைக்குட்டையால் மூடிக்கொள்கிறார். 

படகு சீராக நகரக்  கண்ணுக்கெட்டும் தூரத்தில் அலையெறிந்து ஆர்பரிக்கும் அரபிக் கடல் வாவா என்றபடி காயல் பிரவாகத்தை வெறித்தது.

கரிமுகில் காட்டிலே ரஜனிதன் வீட்டிலே
கனகாம்பரங்கள் வாடி கடத்துவள்ளம்
யாத்ரயாயி யாத்ரயாயி
கரையில் நீமாத்ரமாயி.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு மிளகு – அத்தியாயம் 86

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.