தூக்கம் கலைந்த இரவுகளில் மட்டுமே நிலவையும் நட்சத்திரங்களையும் பார்க்க முடிகிறது. அதிகாலையில் எழுந்து கொள்ள முடிந்தது, அது ஒரு வாய்ப்பு பறவைகளின் மொழியை கேட்க. அவைகள் பேசும் குரல்களுக்கு மொழிகள் இல்லை ஆனால் நாம் இனிமையை இசையை கேட்கின்றோம். இல்லையென்றால் தேடுவது நம் இயல்பு. மழையை பார்க்க முடிந்தது. பகல்காற்று தொட்டு கொண்டே இருக்கும் தொடுதல் மறந்து பல நாட்கள் ஆகிறது. காலையில் மழைத் தூறல் கொட்டி கொண்டே இருந்தது. அதன் சத்தம் யாரோ மிக அருகில் நின்று அமைதியாக பாடுவது போல் இருந்தது. கொஞ்சம் கவனித்ததில் இரவில் விழுந்த மழைத்துளிகள் இலைகளில் தங்கி விட்டது. அந்த துளிகள் கண் விழித்து கொண்டது பறவைகளுடன். அவைகள் விழுந்து குதிக்கும் சத்தம் தான் பாடல்களாக கேட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு துணையாக தூறலின் பின்னணி இசையும் ஒளிந்து கொண்டு இசைப்பது போல தோன்றியது. மரங்களின் கிளைகள் நனைந்து இருந்தன. நம்மை போல் அதற்கும் குளிருமா தெரியவில்லை. ஆனால் சிரித்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போல் தான் தோன்றியது. தினமும் வரும் மரங்கொத்தி தன் முகத்தை மாட கண்ணாடியில் பார்த்து என்ன நினைத்ததோ தெரியவில்லை. அலகுகளில் கொத்தியது டக் டக் என்ற ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. கதவை யாரோ தட்டியது போல் இருந்தது. இந்த ஓசை பழகி விட்டதால் அமைதியாக இருந்தேன். ஆனாலும் அதன் அலகை காப்பாற்ற வீட்டினிலிருந்தே விரட்ட முயன்றேன். என் அதட்டலை அது பொருட்படுத்தவேயில்லை. மாடத்தின் கதவுகளை திறந்து கொண்டு மாடத்திலிருந்தே விரட்டினேன். மரத்தின் கிளைகளுக்கு சென்று தன் கால்களை ஊன்றி செங்குத்தாக நின்று கொண்டு என்னை திரும்பி பார்த்தது. கைகளில் கேமரா இருந்தால் அப்படியே முழுவதுமாக படம் எடுத்து இருக்கலாம். இப்போது எங்கிருந்தோ பறந்து வந்த அதன் துணையும் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டது. நான் விரட்டாமலேயே அவைகள் ஆனந்தமாக எங்கோ பறந்து சென்றது பாடிக் கொண்டே. பாதி மாடத்தில் மழைத்துளிகள் விளையாடி விட்டு சென்ற தடங்கள் தேன் துளியாக இருந்தது. மாடத்தில் தனியே ஆடிக் கொண்டிருந்த பிரம்பு ஊஞ்சலில் மெதுவாக உட்கார்ந்து ஆடாமல் இருந்தேன். பச்சைக்கிளிகள் மாடத்தை கடந்து சென்றது. அணில் ஒன்று பூப்போன்ற வாலுடன் மரத்தில் ஏறிக்கொண்டே உச்சிக்கு சென்றது. நீண்ட கயிறு போன்ற மணிபிளான்ட் தன் முகம் போன்ற இலைகளை இரும்பு ஜாலிகளின் வளைந்த பூக்களில் இருக்கும் துவாரங்களில் நுழைந்து குழந்தைகள் போல் வீட்டின் முன்னுள்ள சாலையை எட்டி பார்த்து கொண்டு இருந்தன. நினைவு வந்தவனாக அதன் பழைய தண்ணீரை அலுப்புடன் மாற்றினேன்.
மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறையா என்று தொலைக்காட்சியின் கீழ் ஓடும் செய்தியை பார்ப்பது ஒரு பழக்கமாக ஆகிவிட்டது. இன்று பள்ளிக்கு விடுமுறை இல்லை. வேறு சில மாவட்டங்களுக்கு தான் விடுமுறை. இன்று பள்ளிக்கு வண்டியில் செல்ல முடியாது. பேருந்து பிடித்து தான் செல்ல வேண்டும். தமிழ் ஐயா குமாரிடம் தான் கேட்க வேண்டும் எந்த நேரத்தில் பேருந்து வரும் என்று. ஒரே யோசனை எந்த வேலையும் ஓடவில்லை. அப்படியே பால்கனியில் செடிகளுடன் சாய்வு நாற்காலியில் ஆடம்பரமாக கால்களை நீட்டி அமர்ந்து இருந்தேன். வெண்ணிற வட்ட வடிவ சுவர் கெடிகாரம் யாருக்கும் காத்திருக்காமல் மூன்று முள்களையும் சுமந்து கொண்டு ஓடியது.
என்னுடைய யோசனையில் என்னென்ன வகுப்புகள் என்னென்ன வீட்டு பாடங்கள் மாணவர்களுக்கு என்னென்ன பாடம் எடுப்பது என்று மனதில் ஒரு சுவர் ஓவியம் வரைவது போன்று ஒவ்வொன்றையும் வரைந்து பார்த்து கொண்டு இருந்தேன்.
அருண் என்ன பெரிய யோசனை காபியா டீயா என்று தமிழ் அதட்டினாள். என்ன சொல்வது காபி என்றால் டீ போட்டு விட்டேன் என்பாள். டீ என்றால் தினமும் டீ தானே குடிக்கிறோம் காபி போட வா என்பாள். ஏதோ ஒன்று கொடு தமிழ். ஏதாவது கேட்டால் பதில் கூட கூற முடியாது உனக்கு. சரி காபி குடு. உன்னுடைய பில்டர் காபி குடித்து பல நாள் ஆகிறது. நீதான் எங்கோ காபி பவுடர் மாற்றி வாங்கிட்ட அதனால் தான் காபி போடாம டீ யா குடிக்கறேன். நானே சரவணாஸ்ல வாங்கிட்டேன்.
நீ வாங்குனா அதிக விலைக்கு உள்ள காபி தூள் தானே வாங்குவ. என்ட்ட சொல்லி இருந்தா நானே வாங்க மாட்டேனா.
சரி வாங்கியாச்சு பேச்சவுடு. என்ன ஸ்கூலுக்கு போறியா இல்லையா.
போகணும்.
ஏன் இழுக்கற
மழையா இருக்கு. அதான்.
ஏன் கரைஞ்சு போய்டுவியா.
கார் எடுத்திட்டு போ.
காசு செலவானாலும் பரவாயில்லை.
நான் பாத்துக்கறேன்.
எனக்கு பேங்க்ல வேலை இருக்கு. நான் லீவ் போட்டு இருக்கேன். நான் வேணும்னா கொண்டு வந்து விட வா.
இல்ல வேண்டாம்.
அவள் கொலுசு ஒளிகள் ஆசையாக இசைத்து கொண்டே சென்றது. காபியின் மணம் வீடே மணந்து கிடந்தது. அவள் போடும் பில்டர் காபிக்கே தங்க வளையல் போடலாம்.
காபி ரெடி என்றாள்.
நானே சென்று எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் திட்டுவாள். ஆற்றங்கரை பிள்ளையார் போல் நகராமல் உட்கார்ந்து இருக்கியே என்பாள். நானே சென்று காபியை எடுத்துக் கொண்டு வந்து குடிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே ஒரு உற்சாகம் வந்து விட்டது. எல்லா அலுப்புகளும் சலிப்புகளும் பறந்து போய்விட்டது. தமிழ் நீயும் கிளம்பு என்னை கொண்டு வந்து விடு. இப்போதே தாமதம் ஆகி விட்டது.
நீயே சொன்னால் தான் நான் செய்யணும் என்று விழிகளில் கோபத்தைக் காட்டினாள். அவள் விழிகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இருவரும் விரைவாக பள்ளிக்கு கிளம்பத் தொடங்கினோம்.
தமிழ் தான் விரைவாக கிளம்பி விடுவாள். எல்லோரும் புடவை கட்ட அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். ஆனால் தமிழ் மட்டும் விரைவாக பேண்ட் சர்ட் அணிவது போல சேலை உடுத்தி கொண்டு விடுவாள். யானை நிறத்தில் பூக்கள் போட்ட சேலை வெள்ளை நிறத்தில் சட்டை அணிந்து இருந்தாள். இது அவள் பிறந்த நாளுக்கு எடுத்தது. பளிச் என்று ஒளியுடன் இருந்தாள். நல்ல வேளை நானும் வெள்ளை சட்டையை ஏதேச்சையாக போட்டு இருந்தேன். அவளை பார்த்தவுடன் சேம் ஸ்வீட் என்றேன். உடனே அவள் சிரித்து கொண்டாள். மழை பெய்கிறது வெள்ளை சட்டையா என்றாள்.
அவளே என்னை அழைத்து கொண்டு சென்றாள். மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டினாள். மழை சிறு தூறலாக விழுந்து கொண்டே இருந்தது. வைஃபரை அவ்வப்போது போட்டு போட்டு அணைத்தாள். மழைத்துளிகள் விழுந்து மறைத்து பின் ஒதுங்கிக் கொண்டு ஓடியது சிறு அருவி போன்று. அதையே பார்த்தேன் ஒதுங்கி ஒதுங்கி செல்வதை. என்னை விட மிக இயல்பாக ஓட்டினாள். ஸ்கூட்டியில் ஒரு பெண் ஓரமாக எங்கள் முன்னே சென்று கொண்டு இருந்தாள். சட்டென்று என்ன நினைத்தாளோ குறுக்கே வந்தாள். தமிழ் உடனே பிரேக் போட்டாள். இடிக்கவில்லை. வண்டி நின்று விட்டது. நல்ல வேளை பின்புறம் வண்டி எதுவும் வர வில்லை. அந்த பக்கத்தில் வந்த வேறு வண்டி இடித்து விட்டது. நல்ல வேளை வண்டியில் வந்தவன் பிரேக் போட்டதால் அந்த பெண்ணுக்கு அடி இல்லை வண்டியில் கீறல் மட்டும் தான்.
நான் தமிழை பார்த்து போ என்றேன்.
நீ கண்ண துறந்து பாரு. அவ தான் குறுக்கே வந்தாள்.
யாரோ ஒருவர் கூறினார் நல்ல வேளை பிரேக் போட்டதால் தப்பித்தாள்.
ஏதுவும் பேசாதே பேசாம வா. ஸ்கூல் வர போவுது.
வண்டி சிக்னலில் நின்றது.
அருகே ஒரு வண்டியும் நின்றது. அதில் ஒரு சிறுமி பள்ளி செல்கிறாள். குட்டி தூக்கம் போட்டு கொண்டு இருந்தாள். ஏசி ஓடி கொண்டு இருந்தது. மருத்துவ குறியீடு போட்டு இருந்தது. என் மனதில் ஓடியது. இப்படி சுகமாக தூங்கும் சிறுமி தான் டாக்டருக்கு படிக்க விருப்ப பட்டோ அல்லது பெற்றோர்களின் ஆசைக்காக தடகள வீராங்கனை போல் வாழ்க்கை முழுவதும் ஓட போகிறவள் என்று எண்ணினேன்.
மரங்கொத்தி எழுப்பும் ஓசை போல் கேட்ட ஒலியால் திரும்பினேன்.
ஒரு சிறுமி கலையான முகம் ஒரு கையில் குழந்தையுடன் வந்து நின்றாள் மறு கைகளில் வின்டோ ஸ்கிரீன் வைத்திருந்தாள். இரண்டு வண்டி தள்ளி அவள் அம்மாவும் நின்ற வண்டிகளில் விற்று கொண்டு இருந்தாள். சிறுமி தமிழிடம் விற்பதற்கு கேட்டாள் சிரித்த முகத்துடன். அவள் பல் வரிசை மட்டும் ஒளியுடன் இருந்தது. தமிழ் அவளை பார்த்தவுடன் வின்டோவை இறக்கினாள். என்னிடம் ஏற்கனவே இருக்கு பாப்பா என்று இரண்டு மிட்டாய்களை கொடுத்தாள். அவள் வேண்டாம் என்றாள். அந்த குழந்தை ஆவலாக வாங்கி கொண்டது. சிறுமி எதுவும் மறுப்பு சொல்லவில்லை. சாப்ட் யா என்றாள் தமிழ். அவள் எதுவும் கூறவில்லை. நகர முற்படும் போது. பாப்பா சாப்பிட்டு இருக்க மாட்ட என்று ஐம்பது ரூபாய் கொடுத்து சாப்டுகோ என்று கொடுத்தாள். சிறுமி வேண்டாம் அம்மா திட்டு வாங்க என்றாள். அக்கா சொல்கிறேன் வாங்கிக்கோ என்று அவள் கைகளில் திணித்தாள். உடனே போய் சாப்பிடுமா தம்பிக்கும் வாங்கிக் கொடு என்றாள். சிறுமி அவளை பார்த்து கொண்டே நகர்ந்தாள் சாலையின் நடை மேடைக்கு.
அமைதியாக நின்ற வண்டிகள் ஒளியையும் ஒலியையும் எழுப்பி கொண்டு மெதுவாக நகர தொடங்கின. அவள் எதுவும் பேசாமல் கொஞ்சம் அமைதியாக இருந்தாள். நான் ஒரு நூறு ரூபா கொடுத்துருக்கலாம் என்றேன். சும்மா ஏதாவது சொல்லாத பொழுது போகலனு . நீயும் அமைதியாக தான் வேடிக்கை பார்த்த, கொடுக்க வேண்டியது தானே.
அருண் மாலை ஒரு மணி நேரம் பர்மிஸன் போட்டுட்டு வா. கோயிலுக்கு போகணும்.
என்ன வேண்டுதலா இல்ல பரிகாரமா .
ஏதோ ஒன்று.
இல்ல எனக்கு இன்னைக்கி மீட்டிங் இருக்கு.
அதெல்லாம் சரி, நீ எப்பவுமே உனக்கு ஸ்கூல் தான் முக்கியம். எனக்கு தெரியும்.
ஆனா இன்னைக்கு உனக்கு சாய்ஸ் கிடையாது. வந்தே ஆகணும். சரியா.
சரி பார்க்கரேன்.
சரி இறங்கு ஸ்கூல் வந்து விட்டது.
ரொம்ப தாங்ஸ் என்றேன்.
நனையாத, கொடைய பிடிச்சிக்கோ .
எப்போதுமே இந்த சாலை, இந்த நேரத்தில் கூட்டம் அதிகம். வரிசையாக ஒன்று இரண்டு பெரிய பள்ளிக் கூடங்கள் உள்ளது. குழந்தைகள் வண்ண வண்ண சீருடைகள். மழை என்பதால் வானவில் போன்று எண்ண முடியாத வண்ணங்களில் மழை கோட்டுகள். பூக்கள் சிரித்து கொண்டே நகர்வது போன்று சிறுவர் சிறுமிகள் உற்சாகமாக பள்ளி வகுப்புகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றார்கள். ஊட்டியில் உள்ள ரோஜா தோட்ட கண்காட்சி போன்று இருந்தது. தமிழ் அனைவரையும் பார்த்து கொண்டே நகர்ந்து கொண்டு இருந்தாள். வளாகத்தின் வெளியே நின்று மற்ற ஆசிரியர்கள் எல்லோரும் தமிழையே பார்த்து கொண்டு இருந்தார்கள். அவள் இறங்காமல் எப்போதும் போல குழந்தைகளுக்கு கை காட்டுவது போன்று கையை காட்டிக் கொண்டே வண்டியை திருப்பி வளைத்து கொண்டு நேராக சென்றாள்.
பள்ளியின் முகப்பில் மரங்கள் வரிசையாக பள்ளி சிறுவர்கள் அசெம்பிளியில் அமைதியாக நகராமல் நிற்பது போல் நின்று கொண்டு இருந்தது. இவ்வகை மரங்கள் நிழல் தருவதில்லை. ஆனால் பருவமடைந்த பெண்கள் போல் வனப்பாக இருந்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் ஒவ்வொரு மரமும் கொத்து கொத்தாக மொத்தமாக ஆயிரம் பழங்கள் பழுத்திருக்கும். இந்த பழங்களும் பயனற்றவை. ஆனால் மரங்களின் கால்களில் புதிதாக முளைத்திருக்கும் செடிகள் இளம்பச்சை நிறத்தில் இலைகள் வளைந்து நிற்கும். மரத்தின் பழங்கள் விழுந்தவுடன் மரத்தின் கொப்புகள் நூறு கிளைகள் வைத்திருக்கும். ஒரு முறை பள்ளிப் பருவத் தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் கர்ம ஸ்ரதாயக தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். குண்டூசி விழுந்தால் கூட அதன் ஓசை வெளிப்பட்டு விடும். அப்போது ஒரு குருவியின் சத்தம் கர்நாடக சங்கீதம் போல் ஏற்ற இரக்கத்தோடு ஈர்த்தது. என்ன குருவி என்று கவனித்தேன். சரியாக தெரியவில்லை. பியூன் சுந்தர் சூடான வடையும் டீயும் கொடுத்தார். உளுந்தின் மணமும் ஒரு வித கசப்பும் நாவை எட்டியது. வழக்கம் போல் டீ நாக்கில் பட்டவுடன் இனித்தது. அந்த குருவி தேன்சிட்டு, விரல் அளவே உள்ளது. மரத்தின் இலைகளிலிருந்து நூல் போன்று பிரித்துக் கொண்டு தன் அலகின் துணையுடனே நீரில்லா குளம் போல் வட்டமாகவும் சிறிது ஆழமாகவும் ஒரு அழகான கூடு ஒன்றை கட்டியது. கனிகள் உள்ள கொப்பு கனிகள் இல்லாவிட்டாலும் கூட்டை தாங்கிக் கொண்டு இருந்தது. இரண்டு மரங்கள் தள்ளி இன்னொரு கூட்டையும் கட்டி வைத்திருந்தது. இப்போது தேன்சிட்டு இரண்டு கூட்டிற்கும் மாறி மாறி பறந்து கொண்டு இருந்தது சிறு சிறு சத்தத்துடன். இப்போது அதன் துணையும் அதனுடன் சேர்ந்து பறந்தது. ஒரு மாணவன் ஏதோ ஒரு சந்தேகம் கேட்க இந்த காட்சியில் இருந்து விடுபட்டு வேறு வேலைகளுக்கு சென்று விட்டேன்.

வெளிச்சமும் குளுமையும் வகுப்பில் வீசிக் கொண்டு இருந்தது. வகுப்புகள் தொடங்கி விட்டது என்பதை முதல் மணி அறிவித்தது. பள்ளியின் பக்கத்தில் வயல்வெளிகளும் கரும்புத் தோட்டங்களும் வாழைத் தோட்டங்களும் நிரம்பி இருந்தன. கான்கிரீட் வேலிகள் பள்ளியையும் வயல்களையும் உறுதியாக பிரித்து வைத்திருந்தது.
எனக்கு முதல் பாடவேளை வருகை பதிவேட்டை ஒவ்வொரு வகுப்பாக அலுவலக உதவியாளர்
வருகைப் பதிவேட்டை வழங்கிக் கொண்டு வந்து கொண்டு இருந்தார். என்னைப் பார்த்தவுடன் முகமண் கூறிவிட்டு வருகைப் பதிவேட்டை கொடுத்துவிட்டு அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டார். நான் உள்ளே சென்றவுடன் மாணவ மாணவிகள் எழுந்து நின்றனர். அவர்களை அமரச் சொல்லிவிட்டு வருகைப் பதிவை எடுக்கத் தொடங்கினேன். ஒன்று இரண்டு பேர்கள் மட்டுமே வரவில்லை. வருகைப் பதிவேடு சாய்வுக் கோடுகளுடன் நிறைந்திருந்தன. இரண்டு சிவப்பு குறியீடு மட்டுமே கண்ணில் படுகிறது. சஞ்சனா ஒருவாரமாக வரவில்லை. அவள் அம்மாவிற்கு அடிக்கடி உடம்பு சுகம் இல்லாமல் போவதால் அவளால் சரியாக வர முடியவில்லை. நன்றாகப் படிக்கக் கூடியவள். அவளை ஒருமுறை பார்த்த போது அவள் அம்மாவிற்கு கர்பப்பையில் ஏதோ கோளாறு என்றாள். அதை நீக்குவது என்று முடிவு செய்து விட்டார்கள் போல. எனவே அவளால் ஒரு மாத காலம் வர முடியாது என்று நினைக்கிறேன். அவள் மிகவும் வருத்தப்பட்டாள் பாடத்தின் பொருட்டு. அவளிடம் நான் உறுதி கூறினேன் விடுபட்ட பாடங்களை மீண்டும் எடுக்கின்றேன் படித்துக் கொள்ளலாம். அவள் கொஞ்சம் ஓரளவு சமாதானம் ஆனாள். அவள் அப்பாவிற்கும் அதிகமாக விடுப்பு கிடைக்க வாய்ப்பில்லை. இவள் தான் பொறுப்பாக அவள் அம்மாவை பார்த்து கொள்கிறாள். அவளை ஒரு முறை சென்று பார்க்க வேண்டும். தமிழ் கூட சேர்ந்து செல்லலாம் என்றாள். பியூன் வந்து வருகைப் பதிவேட்டை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு சென்றார். நான் பாடத்தை எடுக்கத் தொடங்கினேன். அன்றைய பாடம் கணிப்பொறி அறிவியலில் உள்ள புரோகிராம் எழுதுவது தொடர்பான பாடம். டிராவர்ஸிங் பற்றிய பாடம் நடத்த தொடங்கினேன். நீல நிறத்தில் கரும்பலகையில் எழுதிப் போட்டேன். அதாவது கணிப்பொறி சேமிப்பில் உள்ள ஒரு பெயரை பதிவு செய்து விட்டு அந்த பெயரிலுள்ள ஒவ்வொரு எழுத்தாக எடுத்து சோதிப்பது பற்றி நடத்திக் கொண்டிருந்தேன். நான் நடத்தும் போது அனைத்து மாணவர்களின் கண்களும் என்னை நோக்கி விழிப்பாக இருந்தது. ஒரு புரோகிராம் நடத்தி முடித்தவுடன் ஒரு சில மாணவர்களை தவிர அனைவரும் அடுத்து எழுதப் போகும் புரோகிராம் பற்றி ஆர்வமாக இருந்தார்கள். அடுத்த தலைப்புக்கு இடையே ஒரு புரோகிராம் எழுத சொன்னேன். அனைவரும் எழுதத் தொடங்கினர். கொஞ்ச நேரத்தில் மாணவர்கள் ஒரு சில பிழைகளுடன் எழுதிவிட்டு என்னிடம் காட்ட ஆர்வமாக இருந்தனர். நான் ஒவ்வொரு வரிசையாக பருந்து பார்வையாக பார்த்துக் கொண்டும் சரியாக எழுதிய மாணவர்களை பாராட்டிக் கொண்டும் பாதி எழுதியவர்களுக்கு உதவிக் கொண்டும் நகர்ந்து வந்தேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது மாணவர்களின் முயற்சியை பார்த்து. அடுத்த பாடத்தை நடத்த தொடங்கினேன்.
முதல் இருக்கையில் இருந்த நித்யாவின் முகம் மட்டும் சற்று குழப்பமாக மாறியது. அவள் முகத்தில் ஒருவித பயம். அவள் வகுப்பின் முதல் மாணவி. அவள் எப்போதும் ஆர்வமாக இருப்பாள். அவள் நெற்றியில் சந்தனக் கோடுகள் பூத்து இருக்கும். அவளுக்கு திருப்தி இல்லையென்றால் அடுத்தடுத்த பாடத்திற்கு செல்லவிட மாட்டாள். எழுந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாள். அவளுக்கு பொறுமையாக பதில் சொல்லி பாடத்தை விளக்கி அவள் முகத்தின் சந்தேகக் கோடுகள் மறையும் வரை பொறுமையாக விளக்குவேன். பாடத்தை முடிப்பது பற்றிய எண்ணம் அவ்வப்போது வந்து வந்து போகும். இருந்தாலும் சந்தேகங்கள் தான் முக்கியம். ஆரம்பத்தில் எரிச்சலும் கோபமும் வரும். அவளின் ஆர்வமும் பணிவும் என்னை வெகுவாக மாற்றியது. எனக்கு ஒரு வித முதிர்ச்சியும் தந்தது சந்தேகங்களை நீக்குவது தொடர்பாக. இந்த முறையில் எனக்கு மாணவர்களிடம் பரவலாக நல்ல மதிப்பு உண்டு. இதற்கு காரணம் நித்யா தான். அவளிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்.
நித்யா இப்போது எழுந்திருக்கவில்லை. ஆனால் முகத்தில் குழப்பம் மட்டுமே இருந்தது. நானும் நடத்துவதை நிறுத்தாமல் சொல்ல வந்த கருத்தை முடிக்க வேண்டும் என்று நடத்திக் கொண்டே இருந்தேன். வலது புறத்தில் புவனா இருந்தாள். அவள் முகத்திலும் குழப்பம் இருந்தது. ஆனால் மற்ற மாணவர்கள் பாடத்தில் முழு கவனமும் எந்த மாற்றமும் இல்லாமல் ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிலர் எழுதுவதிலேயே கவனமாக இருந்தனர். அவர்களை பார்வையாலேயே நிறுத்தி எழுத விடாமல் கவனிக்க வைத்தேன். ஒரு சில மாணவர்களுக்கு இது பழக்கமாகவே ஆகிவிட்டது. கவனிப்பதும் எழுவதும் ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் மாற்ற முடியாது. அவ்வப்போது சுட்டிகாட்டிக் கொண்டே கட்டுப்படுத்தலாம். திரைப்படம் ஓடுவது போல் ஓடிக் கொண்டே இருந்தது. நான் நடத்தி கொண்டே சொல்லியவற்றை மனதில் ஓட்டி சரி பார்த்து கொண்டே இருந்தேன். எனக்கு பாடத்தில் எந்த குழப்பமும் இல்லை தண்ணி பட்ட பாடு. வகுப்பை முடித்து விட்டு அவர்களிடம் கேட்டு கொள்ளலாம் என்று நடத்துவதை நிறுத்தாமல் நடத்திக் கொண்டே இருந்தேன். நித்யா சிறிது நேரம் கழித்து எனக்கு கண்ணால் ஜன்னல் பக்கம் சைகை காட்டினாள். அரவம் ஒன்று ஜன்னலில் பிண்ணி கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தது. என்ன செய்வது என்று எனக்கும் தெரியாமல் அதை கவனித்து கொண்டும் பாடத்தை நீடித்துக் கொண்டும் இருந்தேன். இடைவேளைக்கு பத்து நிமிடங்கள் உள்ளது. வலது பக்கத்தில் உள்ள வெண்ணிற கடிகாரத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டும்.
எல்லோரும் வந்து விட்டால் என்ன செய்வது. வகுப்பறைக்குள் அது வந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணம் ஓடியது. பாடமும் சிறு சிறு தடுமாற்றத்துடணும் சமாளிப்புடன் ஓடிக் கொண்டு இருந்தது. இடது புறம் இருக்கும் இருக்கை வரிசையில் புவனாவை பார்த்தேன். அவளும் அங்கே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். வலது புறமும் இருந்த நித்யாவை பார்த்தேன். அவள் என்னையும் எனக்கு முன்னே கீழே உள்ள நடைமேடையையும் பார்த்தாள். நான் வகுப்பு மேடையின் கீழ் ஓரத்தில் இருக்குமோ என்று பயந்தேன். இப்போது நித்யா பெரு மூச்சு விட்டபடி கதவிற்கு வெளியே பார்த்தாள். அவள் முகம் அமைதி கொண்டது. நானும் குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பாடத்தை நடத்தி முடித்து விட்டேன். அரவம் வெளியே சென்று இருக்கும் என்று எண்ணினேன். இடைவேளை மணி அடித்தது. நான் வெளியே வராண்டாவை நோக்கி வேகமாக நடந்தேன். பியூன் நடராஜ மணி நின்று கொண்டிருந்தவர் என் பதட்டத்தை பார்த்து விட்டு ஓடி வந்தார். என்ன சார் என்றார். பாம்பு என்று மெதுவாக கூறினேன். சார் பயப்படாதிங்க நான் பார்த்து கொள்கிறேன். இங்கே உள்ள தோட்டத்தில் ஏதாவது பொந்தில் புகுந்து இருக்கும். தேடி கண்டு பிடித்து அடித்து விடலாம் என்றார். சரி என்று கூறி விட்டு ஆசிரியர் அறைக்கு சென்றேன். நித்யா ஓடி வந்தாள். சார் அது அப்போதே வெளியே சென்று விட்டது என்றாள். குட். தாங் காட் என்றேன். ஆனாலும் பீதி இருந்தது. அரவம் என்றால் பயம் தான். முதல்வர் வெளியே நின்று கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். எதுவும் கேட்கவில்லை. நான் ஆசிரியரின் அறை நோக்கி சென்றேன். குமார் ஐயா என்னைப் பார்த்தவுடன் சார், உங்கள்ட்ட ஒன்னு சொல்லணும். எதேச்சையாக ஜன்னலை பார்த்த போது காம்பவுண்டு ஓரத்தில் நீளமான பாம்பு ரொம்ப பெரிசு. முதல் பீரியடின் போதே பார்த்தேன். அது என்ன செய்தது என்றே தெரியவில்லை. இரண்டு மைனாக்கள் அதை விரட்டியது. அது தலையை தூக்கி ஓடுவதும் அதன் தலையை கால்களால் தட்டிய படியே பறந்தது. ஏதோ ஜேம்ஸ்பாண்டு பட சேஸிங் காட்சி பார்த்தது போல் இருந்தது. அது ஓடுவதும் மைனா தட்டுவதும் அது திரும்பி கோபம் கண்டு சீறுவதும். அது சீறி கொத்த வரும் போது பாதுகாப்பாக மைனாக்கள் மேலெழுந்து பறப்பதுவதுமாக இருந்தது. அதற்கு பிறகு எங்கோ போய் மறைந்து கொண்டது. முன்னாடியே சொல்ல வேண்டியது தானே. எனக்கு வகுப்பு இருந்தது. அதற்காக தயார் பண்ணுவதற்கு சென்று விட்டேன். அது சரி, அந்த பாம்பு தான் என் வகுப்புக்கு வந்து சென்றது. சார் என்ன சொல்றீங்க என்ன நடந்தது, நல்லவேளை எதுவும் நடக்கவில்லை ஓடி விட்டது. ஆனால் எப்போதும் வகுப்பு வகுப்பு என்று ஓடிக்கொண்டே இருக்காமல் கொஞ்சம் பொறுப்புடன் நடந்துக்கங்க. சாரி சார். அடுத்த வகுப்புக்கான மணி அடித்தது. அவருக்கு வகுப்பு இருந்தது. மீண்டும் ஒடத் தொடங்கினார். எனக்கும் வகுப்பு இருந்தது. நான் வகுப்பை நோக்கி சென்று கொண்டிருந்தேன். என்னை நோக்கி பியூன் ஏதோ சொல்ல வந்தார். சார் அந்த பாம்பை அடிச்சாச்சு யார் கிட்டேயும் சொல்லாதிங்க. பெரிய பிரச்சனை ஆகிடும். இந்த பிரச்சனை எல்லாம் சில நொடிகள் தான். அடுத்தடுத்த வகுப்புகள் அதற்கான தயாரிப்புகள் அடுத்து வரும் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் என்று இப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது அந்த நாளின் கடைசி மணி அடிக்கும் வரை. ஆலய மணி போல் அதன் ஓசை அதிர்வுகளை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் புற்றில் இருந்து கிளம்பிய எறும்புகள் போல் வரிசையாக வீடு நோக்கி சென்றனர். பள்ளி முடிந்து விட்டது. வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமானோம். வண்டியில் இன்று வராதது அப்போது தான் நினைவுக்கு வந்தது. எல்லாம் மறந்து மறந்து நினைவுக்கு வந்து மறையும் சூரியன் போல் நின்றது. என்ன செய்வது பாலாவை அழைத்தேன். அவன் என்னுடன் தான் படித்தான். கணித ஆசிரியராக இருக்கிறான். அவனைத் தேடினேன். வருகைப் பதிவில் கையொப்பமிட அவனே வந்தான். பாலா நான் வண்டி எடுத்துட்டு வரல, தெரியும் நான் காலையிலேயே பார்த்தேன் நீ தமிழுடன் வந்து இறங்கியதை என்றான் பாலா. என்னை வீட்டில் இறக்கி விடு. சரி சரி வா போகலாம்.
அவனுடன் வண்டியில் செல்லும் போது தமிழ் அழைத்தாள். நான் பாலாவுடன் வந்துட்டே இருக்கேன். நானே வந்து விடுகிறேன். அது சரி என்னை கொஞ்சம் பேச விடு. ஒரு முக்கியமான விசயம். ஒரு நல்ல செய்தி இருக்கு. உன்ட சொல்லணும். அப்புறம் கோயிலுக்கு போகனும். அதான் காலையிலேயே சொன்னியே. அது வேறு இது வேறு. என்ன ஆபீசுல புரோமோஷனா . அதிக பிரசங்கி. அத நேர்ல தான் சொல்லணும். சரி வா பாத்துக்கலாம். பாலா வேகமாக ஓட்டினான். மெதுவாக வந்தா போதும். பாலாட்ட சொல்லு. சரி சரி.
அருண் எப்படி தமிழ சமாளிக்கர. நல்ல பெண்ணு தான். அவளுக்கு, தான் தான் முதலில் இருக்க வேண்டும். ரொம்ப பிராக்டிகல். எதையும் நான் பெரிசா எடுத்துக்கறது இல்ல. சண்டை என்று வந்தால் நான் உடனே அந்த இடத்தை விட்டு கொஞ்சம் நகர்ந்து விடுவேன். அதுவாகவே எல்லாம் கொஞ்ச நேரத்தில் சரியாகி விடும் ஓடும் நதி எதையும் வைத்து கொண்டு செல்வதில்லை எல்லாவற்றையும் மறந்து புதிதாக புத்துணர்ச்சியுடன் ஒடுவது போல் நான் மறக்க வேண்டியவற்றை மறந்து விடுவேன். உங்க வீட்ல பரவாயில்லை எங்கள் வீட்டில் இருவரும் ஒரே அலைவரிசை தினமும் சண்டை தான் என்று பாலா கூறினான்.
சாக்கலேட் விளம்பரத்தை பார்த்தால் சில சமயம் கோபம் வரும். அது எப்படி எல்லாம் தானாக சரியாகி விடும் எந்த முயற்சியும் இல்லாமல் என்று. ஆனால் சில சமயங்களில் கொஞ்சம் யோசித்து பார்த்தால் அதுவும் சரி தான். பாலா என்னை தெரு முக்கிலே இறக்கி விட்டான். வீட்டிற்கு வா என்று அழைத்தேன். எனக்கான வேலை பட்டியல் என் வீட்டில் ரெடியாகி இருக்கும் என்றான் பாலா. சாத்திய வீட்டியின் கேட்டை திறந்தேன். அது எப்போதும் சத்தத்துடன் திறந்து கொண்டது. தமிழ் புதிதாக நாவல் பழ நிற பட்டில் வாசல் படியில் அமர்ந்து காத்து கொண்டு இருந்தாள். என்னை பார்த்தவுடன் அந்த பழைய புன்னகையுடன் எழுந்து வந்தாள் புதிதாக பூத்த மலர் போல. நான் கொஞ்ச நேரத்தில் ரெடியாகி விடுகிறேன் கோயிலுக்கு செல்லலாம் என்றேன். நான் இப்போதும் அவளிடம கேட்க மறந்து போனேன். நினைவு வந்தவுடன் என்ன நல்ல செய்தி என்றேன். அவள் எதுவும் கூறாமல் என் அருகிலே வந்து என் மீது சாய்ந்து கொண்டாள். மல்லிகையின் மணம் வீசியது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
