குமார சம்பவம் மஹா காவ்யம்- 7

அத்யாயம்-7

அதன் பின், ஹிமவான், தன் பந்துக்களுடனும், பெரியவர்களுடனும் கலந்து ஆலோசிக்கலானார். சுக்ல பக்ஷம்.  லக்னத்திலிருந்து ஏழாவது இடத்தில் இருந்த திதியில்,  விவாஹ காரியங்களை ஆரம்பித்தார்.  ராஜ்யத்தில் ஒவ்வொரு வீடும் தோரணங்களாலும், கொடிகள், விளக்குகள் இவைகளால் அலங்கரிக்கப் பட்டன.  உத்சாகமாக ஊர் ஜனங்களும், அரச பரிவார பெண்களும் இணைந்து ஊரையே அழகு படுத்தினர்.  

பூக்களும் பட்டு வஸ்திரங்களும், கொடிகளும் மாலைகளும், பொன் மயமான தோரணங்களும், ஔஷதிப்ரஸ்த நகரமே ஜோதி மயமாக ஆயிற்று.  நகரமே மேரு சிகரத்திலிருந்து சுவர்கம் வரை சென்று விட்டது போல இருந்தது. பலர் பார்வதிக்கு முன்னும் பின்னுமாக உடன் பிறந்தவர்கள் இருந்தனர். அதில் முதன் முதல் திருமணம் பார்வதியுடையது என்பதால் அனைவரும் மகிழ்ந்தனர்.  மாற்றி மாற்றி அவளை வீட்டுப் பெரியவர்கள் தழுவிக் கொண்டும், உச்சி முகர்ந்தும் ஆசீர்வதித்தனர்.  வித விதமான ஆடையலங்காரங்கள் அன்பளிப்பாக வந்து சேர்ந்தன.  அந்த மாளிகையே அன்பில் மூழ்கியது போல திகழ்ந்தது. 

உத்தர பால்குண முஹூர்த்த நாளில். ஸுரிய உதயத்திற்குப் பின் மூன்றாவது முஹூர்த்தம், நல்ல நேரம் என்று பதி புத்ரர்களுடன் கூடிய பந்துக்கள், பெண்கள் மங்களமாக பார்வதிக்கு அலங்காரம் செய்ய வந்தனர்.  கௌசேயம் என்ற உயர்ந்த பட்டு வஸ்திரம் பூக்களும் தூர்வாங்குரம் என்ற மங்கள பொருட்களும் சேர்த்து இடுப்பில் கட்டினர்.  சுக்ல பக்ஷ சந்திரனை மிஞ்சிய அழகியாக அவளை ஒவ்வொருவரும் வர்ணித்தனர். வாசனைப் பொருட்கள் கலந்த ஸ்னானத்துக்குரிய எண்ணெய்  தடவி பின் உலர்ந்த மணம் மிகுந்த பொடிகளும் சேர்த்து ஸ்னானத்திற்கான வஸ்திரங்களுடன் முழுக்காட்டினர்.   ஸ்னான க்ருஹமும் முத்து மாலைகள் கட்டி நான்கு ஸ்தம்பங்களுடன் இருந்து.  மேடையில் அமர்த்தி, வாத்யங்கள் இசைக்க தாங்களும் பாடிக் கொண்டே  எட்டு தங்கத்தால் ஆன கும்பங்கள் நிரம்ப  முன்னரே மந்திரங்களாலும் பரிசுத்தமாக்கப் பட்ட ஜலத்தால் முழுக்காட்டினர். 

கேசத்தை துடைத்து, தூபங்களால் உலர்த்தி, பின் புஷ்பங்கள் ஸூட்டினர்.  அகரு, சந்தன  மணம் கமழ்ந்தது.முதல் மாலையாக தூர்வா முதலிய குறிப்பிட்ட பச்சிலைகளும், மதூக பூவுமாக அணிவித்தனர். சரீரம் முழுவதும் வெண்ணிற அகரு பூசி, கோரோசனா என்ற பொருளால் சித்ரங்கள் வரைந்தனர்.  கங்கையின் ப்ரவாஹம் போன்ற கேசத்தில் மலர்கள் அணிவித்தனர்.  சந்திர பிம்பம் போன்ற முகத்தில்  கருமையான புருவங்கள். கண்களில் மையிட்டு திருஷ்டி கழித்தனர்.  கன்னங்களில் பிரதி பலிக்கும் படி உயர் மணிகளால் காதுகளில் குண்டலங்களை பூட்டினர்.  அதரங்களில் வண்ணம் சேர்த்தனர்.  இயல்பாகவே அழகிய அதரங்கள்.  அத்யந்த அழகியான அவளுக்கு அதற்கும் மேல் அலங்கரிக்க ஏற்ற வஸ்துவே இருக்கவில்லை.    

பாதங்களில் லாக்ஷா ரஸம் எனும் செங்குழம்பை பூசிய சகிகள், அயி சகே, இந்த பாதங்கள் உன் மணாளன் தலையில் உள்ள சந்திரனை தோற்கடிக்கட்டும், (உதைக்கட்டும்) என்று பரிகசித்தனர்.  எதுவும் சொல்லாமல் பார்வதி பூ மாலையால் அவளை செல்லமாக  தட்டினாள்.  

புது பட்டாடைகள், ஆபரணங்கள், பூமாலைகள் என்று மணமகளுக்குரிய அலங்காரங்களைச் செய்தனர்.

பூத்துக் குலுங்கும் கொடி போலவும், இரவில் நக்ஷத்திரங்கள் ப்ரகாசிக்க இருக்கும் வானம் போலவும் , சக்ரவாக பக்ஷிகள் மெள்ள ஊர்ந்து செல்லும் குளங்கள் போலவும், ( பத்மராக, இந்த்ர நீல என்ற உயர்ந்த மணிகள்- பூக்கள் நிறைந்த கொடி எனவும், இரவின் தாரகைகள் வெண்மையான முத்துகள் எனவும், சக்ரவாக பக்ஷிகள்- பொன்னிறமுடையவை- சுவர்ண ஆபரணங்கள், எனவும் உவமைகள்)  

 தன்னையே கண்ணாடியில் பார்த்து சகிகளின் கை வண்ணத்தை பாராட்டினாள்.  ஹரனை அடைய அவள்  மனம் நிறைந்த அன்பே போதும், இவை சகிகளின் ஆசைக்காக.  அவர்கள் அன்புடன் செய்த அலங்காரம், அவர்கள் திருப்தியும் தன்னிடம் நெருங்கி இருந்தவர்கள் என்பதால் ஏற்பட்ட ஒட்டுதலுமே காரணம். 

 தாயார் மேனா கையில் மங்கள பொருட்கள் நிறைந்த தாம்பாளத்துடன் வந்தாள்.  ஆரத்தி (மஞ்சளும் சிவப்பும் கலந்த நீர்) மன:ஸிலா என்ற விசேஷமான தாது, இவைகளை சுட்டு விராலாலும்  நடு விரலாலும் தொட்டு அவள் முகத்தை நிமிர்த்தி  விவாஹ தீக்ஷா என்ற திலகத்தை நெற்றியில் இட்டாள்.  சிறுமியாக இருந்த நினைவும், அவள் குமரியாக ஆனதும், அந்த நிலையிலேயே அவள் மனோரதத்தை தான் அறிந்து கொண்டதும் அவள் நினைவில் நிறைந்தன.  அவள் மனோ ரதம் நிறைவேற வேண்டும் என்று ஆசீர்வதித்து திலகத்தை இட்டாள். 

கண்களில் பெருகிய நீர் மறைக்க அவள் இட்ட திலகத்தை அருகில் இருந்த தாத்ரி- பணிபெண் சீராக்கினாள். 

சகிகள், வெண் பட்டாடை அணிந்திருந்த மணமகள் சரத் கால பூர்ண சந்திரன் போல இருப்பதாக பேசிக் கொண்டனர்.  குல தேவதையை வணங்க  அழைத்துச் சென்றனர்.  அவளை கொண்டு சென்ற பெண்கள் இயல்பான அழகே மேல், இந்த அலங்காரங்களால் அவளுக்கு சிறப்பாக எதுவும் நாம் செய்ய முடியவில்லை என்று பேசிக் கொண்டனர்.    குல தேவதையை புஷ்பங்களால் ஆராதிக்கச் செய்து, கூடியிருந்த மூத்த ஸ்த்ரீகளையும் வணங்கி ஆசிகள் பெறச் செய்தாள்.  மேனா இந்த வழிபாட்டு முறைகளை நன்கு அறிந்தவள் என்பதால் மணமகளாக பார்வதி  செய்ய வேண்டியவைகளை செய்வித்தாள். 

தங்களை வணங்கியவளை, அவர்களும் குறைவில்லாத பதியின் அன்பைப் பெறுவாய், தீர்க சுமங்கலி பவ என்றும் ஆசிகள் வழங்கினர்.  பின்னால் அவள் பதியின் அங்கமாக அர்த்த நாரியாக இருக்கப் போகிறாள் என்பதை யார் அறிவர்? 

அறிஞர்களும், ஹிமவானுக்கு நெருங்கிய பந்துக்களும் குடும்ப சகிதமாக வந்து நிறைந்த சபையில் , ஸ்ரீ சங்கரனின் வரவை எதிர் பார்த்து அமர்ந்திருந்தனர்.  குபேர சைலம் என்ற இடத்தில் பவன் – வந்து பார்வதியை பாணி க்ரஹணம் செய்ய லௌகீகமான மங்கள பொருட்கள் மூத்த பெண்கள் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். 

மணமகனும் வந்தார்.. உபசாரமாக வைக்கப் பட்டிருந்த மங்கள பொருட்களை கைகளால் தொட்டார். எடுக்க வில்லை.  இயல்பான அவருடைய பஸ்மமும், கபாலமும் கூடிய ரூபமே அவருக்கு அலங்காரமாக ஆயிற்று. வைத்திருந்த அங்க ராகம் முதலியவைகளே இவ்வாறாக மாறி விட்டன.

தவ முடிவில் பார்வதிக்கு காட்சி கொடுத்த அதே ரூபமும் வேஷமும். வெண் நிற பஸ்மம் பூசிய உடலில் கஜ சர்மா- யானைத் தோலாடை,, சங்கத்தின் உள் புறம் போன்ற மூன்றாவது கண் திலகத்தின் இடத்தை எடுத்துக் கொண்டது. எப்பொழுதும் போல் புஜங்கங்களும்- சர்ப்பங்கள், கைகளுக்கு கங்கணம் என்ற  ஆபரணங்களாக ஆயின.  அவைகளின் தலையில் இருந்த ரத்னங்களே ஒளி வீசியபடி இருந்தன.   சந்திரனே தலையில் ப்ரகாசமாக இருக்க ஸூடாமணிகள் எதற்கு? அருகில் வந்த பூத கணங்களின் கையில் இருந்த வாளில் தன் ப்ரதி பிம்பத்தை பார்த்தார்.  (வீர புருஷர்கள் அப்படித்தான் செய்வார்களாம்- கவியின்  சொல்) தன் வ்ருஷப வாகனத்தில், நந்திகேஸ்வரர் பக்தியுடன் கொண்டு வந்து கொடுத்த சால்வையை அணிந்து கொண்டு ருஷபத்தில் ஏறிக் கொண்டு கைலாசத்தில் இருப்பது போலவே இருந்தார்.  அவர் பின்னே சப்த மாதாக்கள் -ஏழு தாய் மார்கள் என புகழ் பெற்ற பெண்களும் வந்தனர். அவர்கள் வாகனங்களும், அவர்களின் உடைகளும் அதே போல கைலாசத்தில் இருப்பது போலவே இருந்தன.

கனக ப்ரபா- பொன் போன்று ஒளியுடன் இருந்த அவர்களுக்குப் பின்னால், தேவி மகா காளி, தன் கரு நிற வஸ்திரங்களுடன்,  பெரிய பற்களுடன் கூடியவள் – அவளும் வந்தாள்.  தூரத்தில் பளிச்சிடும் மின்னல் போன்று இருந்தாள்.  ஸுலங்களை ஏந்திய பூத கணங்கள்,  மங்கள வாத்யங்களை வாசித்தபடி முன்னால் சென்றனர்.  

தேவர்கள் வந்தனர். அவரவர் தங்களுடைய மதிப்பு மிக்க பொருட்களை பரிசாக கொடுத்தனர். ஸூரியன், த்வஷ்ட்ர- விஸ்வகர்மா – அவரால் தயாரிக்கப் பட்ட புதிய குடையை கொடுத்தார்.  அது பகவானின் தலையில் மற்றொரு கங்கா போல அழகிய பட்டு வஸ்திரம் அவருடைய கிரீடத்தை ஸூழ்ந்து நின்றது. 

கங்கா யமுனா உருவத்துடன் வந்தனர்.  சாமரங்களை வீசியபடி உடன் வந்தனர்.  சமுத்திரம் நோக்கிச் செல்லும் தங்கள் பிரயாணத்தைக் கூட சற்று நிறுத்தி வைத்தனர் போலும்.  அதன் பின் முதல் ப்ரும்மா, ஸ்ரீ வத்ஸ அடையாளத்துடன் புருஷோத்தமனும் நேரிடையாக வந்தார். ஜய சப்தம் எங்கும் நிறைந்தது.  நெய் விழுந்தவுடன் பளிரென்று ஜ்வாலை எழுவது போல ஜய சப்தமும் வாழ்த்துக்களும் எழுந்தன.

ஒரே மூர்த்தி, படைத்தல், காத்தல், மறைத்தல் என மூன்று விதமாக ரூபம் எடுத்து மூன்றாக காட்சி தருகிறார்.  

லோக பாலர்கள், முக்யமான புரோஹிதர்கள், அவரை வணங்கினர். , சத்ர சாமரங்கள், மற்ற தங்கள் செல்வ சம்பத்தைக் குறிக்கும் எதுவும் இல்லாததால், நந்திகேஸ்வரரை  அழைத்து இந்த்ரன் முதலான தேவர்கள் தங்களை சபையில் இவர் இன்னார் என்று அறிமுகப்படுத்தச் சொன்னார்கள்.  மகேஸ்வரனிடம் சென்று அவரை வணங்கினர். .

அவரும் நான்முகனை தலையசைத்தும், ஸ்ரீ ஹரியை வாக்கினால், இந்திரனை மென் முறுவலால், மற்ற தேவர்களை கண்ணால் பார்த்தே சன்மானம் செய்தார். 

ஜய கோஷம் வானளாவ எழுந்தது.  சப்த ரிஷிகள் ப்ரதானமாக இருந்தனர். அவர்களை தன் விவாக காரியங்களை செய்ய பணித்தார்.  மெள்ள சிரித்தபடி நீங்கள் தானே ஆரம்பித்து வைத்தீர்கள், அப்பொழுதே தீர்மானித்து விட்டேன் நீங்கள் தான் என் பக்ஷத்து அத்வர்யூ- தலைமை புரோஹிதர்கள் என்றார்.

விஸ்வாவசு முதலான கந்தர்வர்கள் பாடிக்கொண்டும், வீணை வாசித்துக் கொண்டும் முன் சென்றனர்.  பின்னால் மணமகன் சிவ பெருமானும், அவருடன் மற்ற தேவதைகளும் சென்றனர்.  ஸ்ரீ சங்கரருடைய வாகனம், மேகங்களுடன் விளையாடுவது போல தன் கழுத்தில் கட்டியிருந்த சிறு மணிகளை அசைத்து கிங்கிணி நாதம் செய்து மகிழ்ந்தபடி சென்றது. 

முஹூர்த்த நேரத்தில் அந்த ஊர்வலம் ஹிமவானின் ஊரை அடைந்தது. நீலகண்டனும், குதூஹலத்துடன் கூடியிருந்த ஊர் ஜனங்களை பார்த்தபடி வந்து பூமியில் இறங்கினார்.  பந்து ஜனங்கள் அனைவருமே செல்வ செழிப்புடன் கிரி சக்ரவர்த்தியின் ஆட்சியில் நல்ல முறையில் பாதுகாப்பாக வளமாக வாழ்கிறார்கள் என்பது கண்ட உடனேயே தெரிந்தது. வரவேற்க யானைகளின் அணிவகுப்பும் காணப் பட்டது.  ஹிமவானும் நல்ல வஸ்திரங்கள், ஆபூஷணங்கள் தரித்தவராக முன்னால் வந்தார். 

தேவ சமூகத்தின் கோலாஹலம் ஒருபுறம், ஹிமவானின் வரவேற்பு வைபவங்களால் எழுந்த வாத்ய மற்றும் மக்களின் ஆராவாரம் ஒருபுறம் இரண்டும், இரண்டு நதிகள் பிரவாஹமாக ஓடி வந்தவை ஓரிடத்தில் இணைந்து ஒன்றானது போல் கோட்டை வாசலில் சந்தித்தனர்.  பரஸ்பரம் அறிமுகங்கள்,  வாழ்த்துக்கள், வரவேற்புக்கள் என்று அந்த இடமே மகிழ்ச்சி நிறைந்ததாக காணப் பட்டது. 

மூவுலகமும் வணங்கும் ஸ்ரீ ஹரன் பெண்ணின் தந்தை என்ற மரியாதை நிமித்தம் வணங்கினார். ஹிமவான் அதனால் லஜ்ஜை, அடைந்தார், (ஹிமவான்-ஹ்ரீ-வெட்கம் காரணமாக ஹ்ரீமான் ஆனார்)  தானும் முன்னரே தலை வணங்கி நின்றிருந்தார்.  இருவரும் முகத்திலேயே பரஸ்பரம் மதிப்பும் அன்பும் தெரிய நின்றனர். கிரி ராஜன் மணமகனை சபைக்குள் அழைத்துச் சென்றார். 

வழி முழுவதும் மலர்களும் அலங்கார பொருட்களுமாக நிறைந்திருந்தன. அதன் வழியே, ஊரில் இருந்த அழகிய பெண்கள் அவரைக் காணும் பொருட்டு மற்ற வேலைகளை விட்டு அங்கு கூடியிருந்தனர்.  மாளிகைகளின்  மேல் பகுதிகள் நிறைந்து இருந்தன. மணமகனைக் காணும் ஆசையால் கிடைத்த இடங்களில் ஊரார் நின்று பூக்களை மழையாக பொழிந்தனர்.   தங்களும் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு போக விரும்பியவர்கள் பாதியில் விட்டு ஓடி வந்தார்கள்.  கேசத்தை முடிந்து கொண்டிருந்தவர்கள், காலில் பாதி செம்குழம்பு பூசிக் கொண்டிருந்தவர்கள்,  எதிரில் வராமல் ஜன்னல்கள் அருகிலேயே நின்றபடி  ஊர்வலத்தைக் கண்டனர்.   பரபரப்பும் ஆவலுமாக ஆண்களும் பெண்களுமாக அனைவரும் வந்து சேர்ந்தனர்.  சதாசிவனும் அந்த கோலாஹலத்தில் பங்கெடுப்பது போல ப்ரசன்னமான முகத்துடன் அவர்களைப் பார்த்து அங்கீகரித்த படிச் சென்றார். பகல் பொழுதேயானாலும் அவர் தலையில் இருந்த பிறைச் சந்திரன் தன் பங்குக்கு குளுமையாக காந்தியை பரவ விட்டான். ஒரு க்ஷணம் கூட கண்களைத் திருப்பாமல் அந்த ஊர்வலத்தையும், மணமகனான ஸ்ரீ சதா சிவனையும் கண்டபடி இருந்தவர்களின் கண்  என்ற புலன் ஒன்றே பெரும் பயன் பெற்றது, மற்ற புலன்கள் இருப்பதே தெரியாமல் அடங்கி விட்டன. 

அபர்ணா – தேவி உமா, செய்த தவம் பலித்தது. ஏற்ற கணவன் அவளுக்கு வாய்த்து விட்டான் என்று பேசிக்கொண்டே கலைந்தனர்.  இருவரும் ஒருவருக்கொருவர் என்றே அமைந்தவர்கள்.  ப்ரும்ம தேவன் இந்த இருவரையும் இப்படி சிறந்த ரூப, குணங்களுடன் படைத்து விட்டு சேர்த்து வைக்காமல் விட்டிருந்தால், இவர்களின் இந்த அழகும், சிறப்பும் வீணாக போய் இருக்கும் என்று பேசிக் கொண்டனர்.   

இவர் கோபத்துடன் காமனை எரித்தார் என்பர். ஆனால் இவர் அப்படி செய்யக் கூடியவரில்லை. அவனுக்கே வெட்கமாக இருந்திருக்கும். இவருடைய சுந்தரமான ரூபத்தைப் பார்த்து  வெட்கம் ஸூழ்ந்திருக்கும். அதனால் தானே யோக அக்னியில் மாண்டிருப்பான். 

நம் அரசன் ஹிமவான்  பிரிய மகளுக்கு அவளும் விரும்பி, தனக்கும் பிடித்தமான  உயர்ந்த சம்பந்தம் கிடைத்து விட்டதால் மகிழ்ச்சியில் மேலும் உயரம் அதிகமாக ஆவார். பூமியைத் தாங்குபவர் அல்லவா?

இதற்கிடையில் ஔஷதிப்ரஸ்த நகரில் ஊர்வலம் அரச மாளிகையை எட்டியது. மங்களமாக அவர் மேல் தூவப் பட்ட லாஜ- அரிசிப் பொரிகள், கூட்டத்தில் விழுந்து பொடியாயின. அச்யுதன் கை கொடுக்க,  சரத் கால மேகம் போன்ற வெண் நிற ருஷபத்தில் இருந்து இறங்கி அவருடன் ப்ரும்மா முதலானோரும் முன்னரே ஏற்பாடு செய்திருந்த மாளிகையினுள் நுழைந்தார்.  இந்திராதி தேவர்களும், சப்த ரிஷிகளும், மற்ற கணங்களும்  அவரை பின் தொடர்ந்து சென்றனர். 

ஹிமவான் வந்து உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தார்.  ரத்னங்கள் நிறைந்த ஆசனம், தேன் கலந்த தயிர், இரண்டு புது வஸ்திரங்கள் இவற்றை அளித்தார்.  வேத மந்திரங்களுடன் விவாக முறைப்படி அவைகளை ஈஸ்வரனும் பெற்றுக் கொண்டார்.  பட்டாடைகளை அவர்  அணிந்த பின், மணமகள் இருந்த மணமேடையை அடைந்தார்.  சந்திர கிரணங்கள் தன் மேல் விழவும், , சமுத்திரம்  நுரைகளை அலைகளால் கரையை நோக்கி தள்ளுவது போல இருந்தது அந்த சபை.

பார்வதியைக் கண்டதும் ஈஸ்வரனின் முகம் மலர்ந்தது.  அவளும் பூர்ண சந்திர முகி. குமுதம் மலருவது போல இவர் முகமும் மலர்ந்தது என்று கவியின் வர்ணனை. தந்தையான ஹிமவான் அவள் கரத்தை பற்றி அழைத்து வந்து அஷ்டமூர்த்தியான ஈஸ்வரனுக்கு அளித்தார்.  காமன் நிம்மதி பெருமூச்சு விட்டான்,  அவன் ஆரம்பித்த செயல்,  தாமிர நிற ஈஸ்வரனின் விரல்கள், சிவந்த பார்வதியின் கைகளைப் பற்றிய சமயம் அவனை தூது அனுப்பிய தேவர்களின் விருப்பம்  சீக்கிரமே நிறைவேறும் என்ற நம்பிக்கையை அளித்து விட்டது.  இருவருக்கும், தங்கள் மனோரதம் நிறைவேறியது என்ற மகிழ்ச்சி அவர்கள் முகத்திலும், உடலிலும் தெரிந்தது. 

இருவருமாக அக்னியை ப்ரதக்ஷிணம் செய்தனர்.  இரவும் பகலும் ஒன்றானது போல இருந்தது. (மேரு மலையின் ஒரு பாகம் இரவும், மறு பக்கம் பகலுமாக இருப்பது போல )

மூன்று முறை அக்னியை வலம் வந்த பின், புரோஹிதர்கள் அவைகளை லாஜ ஹோமம் என்பதை செய்ய வைத்தனர்.  (புகையாலோ, கைப் பற்றி சுற்றி வந்ததால் வெட்கத்தாலோ என்று கவியின் கற்பனை) லாஜம்-பொரியைப் போட்டதும் அக்னி குபீரென்று எழுந்து முகத்தை சிவக்கச் செய்தது. (புரோஹிதர் சொன்னதால் பொரியின் மணத்தை முகர்ந்து பார்த்தாள் பார்வதி – அந்த சமயம் ஜ்வாலை அவள் கன்னங்களை ப்ரகாசிக்கச் செய்யும் குண்டலங்கள் போல ஆயிற்று)

சிவ-பார்வதி இருவரையும் சேர்த்து நினைத்த மாத்திரத்திலேயே வ்ருத்தி-வளர்ச்சி யை பெறுவார்கள் எனும் பொழுது இருவரும் கைகளை கோர்த்துக் கொண்டு நின்ற பொழுது அதன் சோபையை வர்ணிக்கவா முடியும்.மேரு மலையே தன் அனைத்து பாகங்களும் பகலா இரவா என அறிய முடியாதடி பிரகாசமாக ஆக்கிக் கொண்டு  விட்டதோ- அப்படி அலங்கரிக்கப் பட்டிருந்தது. 

புரோஹிதர் பார்வதியைப் பார்த்துச் சொன்னார்: வத்ஸ! குழந்தாய், அக்னி சாக்ஷியாக நீ ஸ்ரீ சங்கரனின் பத்னியாகி விட்டாய். ஸஹ தர்ம சாரிணீ- தர்ம காரியங்களில் அவருடன் சேர்ந்து இருக்க அனுமதி பெற்று விட்டாய், என்று சொல்லி வாழ்த்தினார்.  (ப்ராஜாபத்ய விவாகம் என்பது எட்டு விதமான திருமணங்களில் ஒன்று.) இதைக் கேட்டு பார்வதி கடும் கோடைக்குப் பின் பூமி மழைத் துளியை பெற்று மகிழ்வது போல மகிழ்ந்தாள். 

அதன் பின் த்ருவ நக்ஷத்திரத்தை காண புரோஹிதர் அவர்களை அழைத்துச் சென்றார். வானத்தை நோக்கிய முகத்துடன் த்ருவ நக்ஷத்திரத்தை இருவருமாக கண்டனர்.  பார்த்து விட்டோம் என்றனர்.  இவ்வாறு விவாக விதிகளை புரோஹிதர் சொன்னபடி செய்து இருவருமாக அவரையும், பிதாமஹரான ப்ரும்மாவையும் வணங்கினர். 

விதாதா அவளை’ஹே! கல்யாணி, வீர ப்ரஸவா பவ’ ஹே! கல்யாணி, வீரனான மகனுக்குத் தாயாவாய் என்று ஆசீர்வசித்தார்.  வாசஸ்பதியாக தான் இருந்தும், அஷ்டமூர்த்தியான பரமசிவனுக்கு தான் யார் ஆசி அளிக்க என்று எண்ணி சிரித்தபடி சொன்னார். 

விவாக மேடையை வேதியை ப்ரதக்ஷிணம் செய்த படி இருவரும் கனகாசனம் – பொன்னால் ஆன ஆசனத்தில் அமர்ந்தனர். உற்றாரும் உறவினரும் வந்து  அக்ஷதைகள் தூவியும், நெற்றியில் திலகமிட்டும் வாழ்த்தினர்.  லக்ஷ்மி தேவி, தளிருடனும் தண்டுடன் கூடிய வெண் நிற தன் பத்மம் போன்ற வடிவிலேயே இருந்த வெண் குடையைக் கொடுத்தாள்.    சரஸ்வதி, சம்ஸ்க்ருத ப்ராக்ருத மொழிகளில் தன் வாழ்த்துச் செய்தியை வாசித்தாள்.  அவள் வாழ்த்து துதியாகவே அமைந்தது. சுத்தமான மொழியும், (இலக்கண விதி மாறாமல்),பலவிதமான ராக சஞ்சாரங்களுடன் (ஸ்ருங்காரம் முதல் உணர்ச்சிகளை விளக்கும் ராகங்களுடன்) உடன் வந்த அப்சரஸ்கள் அதை நாட்டியமாக ஆட (நாடக மாகவும்) இயல், இசை, நாடகம் மூன்றும் வெளிப்பட மதுரமான வாக்குகள். – இரண்டு மணி நேரம் அந்த நிகழ்ச்சி நீண்டது. 

அதன் பின் தேவர்கள் வந்தனர். கிரீடங்கள் தரையில் பட விழுந்து வணங்கினர்.  சாபம் கொடுத்ததால் உருவின்றி ஆன மன்மதனுக்கு சாப விமோசனம் தர ப்ரார்த்தித்தனர்.   பகவானும் அந்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்டார்.  விவாகம் ஆகி ப்ரசன்னமாக இருந்த சமயம்  அதை விட நல்ல சமயம் வேறு ஏது? தன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால், கொடுப்பவர் மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரமாக போய் கேட்க வேண்டும் என்பது பொதுவான நியதி. 

அவர்களை அனுப்பி விட்டு பகவானும் பார்வதியை கரம் பற்றி அழைத்துக் கொண்டு, அலங்கரிக்கப் பட்ட சயண க்ருஹம் சென்றார். அந்த அறை பலவித பூக்களாலும், பொன் கலசங்களுமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. புது மனைவி, வெட்கமும், மகிழ்ச்சியுமாக, வேடிக்கையும் விளையாட்டுமாக  சகிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அனுப்பி விட்டு ஹரனிடம் வந்தாள். 

(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தின் உமா பரிணாமோ என்ற ஏழாவது அத்யாயம்)

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம் – 6 குமார சம்பவம் மஹா காவ்யம்- 8

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.