மிளகு: அத்தியாயம் அறுபது

லண்டன்   2000

சித்திரம்: அருண்

நான் கல்பா என்ற கற்பகம். அம்பலப்புழை ஜான் கிட்டாவய்யர் சைவ உணவக் பகுதி அதிபர் திலீப் ராவ்ஜியின் மகள். அம்பலப்புழை ஜான் கிட்டாவய்யர் உணவக இன்னொரு பகுதி அதிபர் கொச்சு தெரிசா, தெரிசாவை வைப்பாட்டியாகக் கொண்ட, ஓய்வு பெற்ற கேபினட் காரியதரிசி அரசூர் சங்கரன் இவர்களின் புத்திரன் மருதுவின் காதலி நான்.  

நான் அமி என்ற அமிலி. கொச்சு தெரிசாவின் முன்னாள் கணவர் இங்கிலாந்து மேற்கு யார்க்‌ஷயர் மாநிலம் கால்டர்டேல் நகரில் Fish and Chips சாப்பாட்டுக்கடை நடத்தும் முசாபர் அலியின் இப்போதைய மனைவி. தன் காதலன் மருதுவோடு உறவு கொண்டதற்காக கல்பாவால் கையும் களவுமாகப் பிடிபட்டவள். வார இறுதியில் எப்படியோ அந்த உறவு ஏற்பட்டது.  இது ஒரு இந்திய சூப்பில் தொடங்கியது.

நான் கல்பா. போன வார இறுதியில் நீண்ட விடுமுறைக்காக வெள்ளியன்று பிற்பகலில் நான் ந்யூக்ளியர் ஃபிசிக்ஸ் கற்பிக்கும் எடின்பரோ பல்கலைக் கழகத்திலிருந்து புறப்பட்டு எடின்பரோ வேவர்லி சந்திப்பில் ரயில் ஏறினேன். 

வழக்கமாக இந்த நீண்ட விடுமுறை நாட்கள் அதுவும் சனி, ஞாயிறு, அடுத்து வரும் திங்கள்கிழமை வரை விடுப்பு உள்ள காலம் நாடே காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு விடுமுறை அனுபவிக்கப் பயணம் போகும் காலம். இந்த வாரமோ திங்கள் மட்டுமில்லை, அடுத்த செவ்வாய்க்கிழமையும் விடுமுறை நாள் தான். 

நான்கு நாட்கள் வங்கிகளையும் தொழிற்சாலை, அரசு அலுவலகங்கள் என்று அரசாங்கம் தொடர்பான பலவற்றையும் மூடி வைப்பதில் ஏற்படும் நஷ்டம், அசௌகரியம் பற்றியும் பிபிசியில் வயதானவர்கள் பேசிப்பேசி மாய்ந்தார்கள். 

யாரென்ன பேசினாலும் நீண்ட விடுமுறை நிஜம்தான். நான் எடின்பரோ வேவர்லியில் இருந்து லண்டன் கிங்க்ஸ் க்ராஸ் என்ற யூஸ்டனுக்குப் போய்ச் சேர்வது நிச்சயம். நிச்சயம் தான். ஆனால் எப்போது போய்ச் சேருவது என் கையில் இல்லை என்பது தெரிய வந்தது பயணம் தொடங்கிய பொழுதுதான். 

எடின்பரோ – லண்டன் ரயில் பாதையிலும் மின்சார இணைப்புத் தடத்திலும் சில திடீர் பழுது நோக்கல், நீண்ட வார விடுமுறைக்கால பராமரிப்பு என்று மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ரயில் சேவை தாமதப்படலாம் என்று ரயில் ஓடத் தொடங்கியபோது அறிவிக்கப்பட்டது. 

 பிற்பகல்  மூன்று மணிக்கு எடின்பரோவை விட்டுப் புறப்பட்டு இரவு ஒன்பதுக்கு லண்டன் போய்ச் சேருவது வாடிக்கையானது. இன்றைக்கோ வேல்ஸ் ஜங்க்‌ஷனில் ஒரு மணி நேரம் ரயில் வண்டி நின்று போனது. 

லண்டன் நகரில் மின் தடை ஏற்பட்டு நகரமே பிற்பகல் நாலரை மணியில் இருந்து ராத்திரி எட்டு வரை எல்லா இயக்கமும் உறைந்துபோன நாள் என்று ஊடகங்களில் சதா மொழியப்பட்ட அந்த தினத்தில் நான் ஃப்ளையிங் ஸ்காட்ஸ்மேன் என்ற நூறு வருடப் பிரபலம் மிகுந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்  அடைபட்டிருந்தேன். 

அன்றைக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு லண்டன் டார்க் ஹார்ஸ் ரோடு அபார்ட்மெண்டில் மருதுவை சந்தித்து நாலுநாள் புருஷன் பெண்டாட்டியாக உறவாடித் திரும்பத் திட்டம். 

நான் இப்படி ஏதோ உறவு ஏற்படுத்திக் கொள்வது என் அப்பா திலீப் ராவ்ஜிக்குத் தெரியாவிட்டாலும் எப்படியோ அரசல் புரசலாக அறிந்திருந்தார். 

மருதுவைக் கண்டதும் நான் தெருவோரக் கழிவு போல் பார்ப்பதையும், என்னைப் பார்த்ததும் கோழிக் கழிச்சல் தின்னக் கிடைத்தவன் முகபாவம் அவனுக்கு ஏற்படுவதையும்   யார் கண்டாலும் புரிந்து கொள்வது, உராங்க் உடான் குரங்குகளின் காதல் நாட்டியத்தைப் பார்த்து இவை அஜீர்ணத்தால் தொல்லைப்படும் குரங்குகள் என்று விளங்கிக் கொள்வது போன்றது.

நான் அமி. கால்டர்டேலில் இருந்து காரில் லண்டன் வரத்தான் திட்டம் போட்டிருந்தோம் நானும் முசாபரும். எங்கள் பிஷ் அண்ட் சிப்ஸ் கடைக்கான  மீன் பொறிக்கும் மின்சார அடுப்பு, உருளைக்கிழங்கை வரவரச் சன்னமாகச் சீவி சீராகப் பொறித்துக் கொண்டே இருக்கும் சமையல் அமைப்பு இவற்றை போன மாதம் வந்தபோது நானும் முசாபிரும் பார்த்து வைத்திருந்தோம். அவற்றுக்கான முன்பணமாக ஐயாயிரம் பவுண்ட் இன்று தருவதாகப் பேச்சு. அந்தப் பணத்தை நானும் முசாபிரும் பாதிபாதி பகிர்ந்து கொள்கிறோம்.

 முசாபிர் வராவிட்டாலும் லண்டன் சௌத்ஹால் வந்து கொடுத்துவிட்டு எப்போது சமையலறை நிறுவப்படும் என்று விசாரித்து அதையும் கண்டிப்பாக நிறைவேற உறுதிமொழியும் யந்திர வினியோகஸ்தரிடம் வாங்க நான் மட்டும் மெனக்கடணும். 

முசாபிரின் மென்மையான உருது கலந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலீஷ் கேட்பவர்களை மயக்குவதோடு இம்மாதிரி வியாபார ஒப்பந்தங்களை கைச்சாத்து இடுவதையும் மிக எளிய செயலாக்குவது வாடிக்கை. 

இன்று முசாபர் சார்பில் நான் அதெல்லாம் செய்ய வேண்டி வந்தது. நானும் முசாபரும் பயணம் போகும்போது காரை அவன் தான் செலுத்துவது வழக்கம். அதுவும் நீண்ட தொலைவு பயணங்கள் அவனுக்கு வெகு விருப்பமானவை. 

எனினும் இன்று காலை எழுந்திருக்கும்போதே அவன் சிறு காய்ச்சலோடு எழுந்தான். யார்க்‌ஷயரில் இருந்து லண்டன் காரோட்டிப் போக, ஏன் பயணியாகப் பயணம் போகக்கூட அயர்வும் களைப்பும் அதிகமாக இருப்பதால் என்னை மட்டும் லண்டன் போய் வரச் சொன்னான். 

அப்போது தான் கடந்த இரு வாரமாக நான் கடைப்பிடிக்கும் இந்திய மருத்துவம் நினைவு வந்தது. இந்தியாவில் எரணாகுளத்தில் இருந்து வந்து லண்டன் ஈஸ்ட் ஹாமில் ஆயுர்வேத மருத்துவமனையும் ஆயுர்வேத மருந்து விற்பனை நிலையமும் வைத்திருக்கும் அச்சுதன் வாரியர் போன தடவை வந்தபோது என்னைப் பரிசோதித்து விட்டு மருந்து எழுதிக் கொடுத்தார். 

தினசரி மாலை ஆறு மணிக்கு தக்காளி சூப்பில் நிறைய மிளகுப் பொடி தூவி, கூடவே நான் கொடுக்கும் மருத்துவப் பொடியையும் கலந்து பருக ஒரு வாரத்தில் உங்கள் உடம்பில் கனம் ஆகக் குறையும். போகப்போக கொஞ்சம் மெல்ல கனம் இன்னும் குறைந்து இரண்டு மாதத்தில் உங்கள் உருவம் ஒரு இடத்திலும் தசை கூடாமல் இருக்க வேண்டிய அளவே இருக்கும். இது நடக்கும். நடக்காவிட்டால் நான் லண்டன் க்ளினிக், ஆயுர்வேத மருந்துக்கடை எல்லாவற்றையும் மூடிவிடுகிறேன் என்றார் வாரியர். 

அவர் சொன்னதை நான் நம்பியதாலோ என்னமோ ஒரு வாரத்தில் இரண்டு பவுண்ட் எடை குறைந்ததை நானே உணர்ந்தேன். அந்த சீலத்தை இரண்டு வாரம் முடித்தாகி விட்டது. இன்றைக்கு லண்டன் போவதால் செய்யாமல் போகலாமா? 

ஏன் கைவிட வேண்டும்? படுத்தபடியே முசாபிர் மருதுவுக்குத் தொலைபேசி இன்று சாயந்திரம் மருதுவின் டார்க் ஹார்ஸ் ரோடு அபார்ட்மெண்டில் சூப் தயாரித்து மருதுவுக்கும் குடிக்கக் கொடுத்து ராத்திரி ஒன்பது மணி கால்டர்டேல் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று திட்டம். 

மருது தக்காளிப் பழங்களை டெஸ்கோவில் வாங்கித் தயார் நிலையில் இருந்தான். நான் அவன் அபார்ட்மெண்டில் சாயந்திரம் ஐந்து மணிக்கு பிஷ் அண்ட் சிப்ஸ் யந்திரங்களுக்கான முன்பணம் அடைத்து திருப்தியாக படி ஏறினேன்.

நான் கல்பா. வேல்ஸ் ஸ்டேஷனில் ரயிலேறிய ரயில்வே அதிகாரி முகபாவம் கொண்ட ஒரு வயதான மனிதர் மூக்கை உறிஞ்சியபடி சொன்னார் – Problem with 275 KV system…  a cable feed from the national grid in the Wimbledon area  failed என்று எனக்கு electricity production and distribution சம்பந்தமாக கரதலப்பாடமாகத் தெரியும் என்று கற்பித்துக்கொண்டு குரல் தாழ்த்தி ராணுவ ரகசியம் போல் என்னிடம் சொன்னார். 

இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் எல்லாம் சரியாக என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் எல்லா விளக்குகளும் சீராக எரிந்து ரயில் கிளம்பியது. 

ராத்திரி ஒன்பதுக்கு வரவேண்டியவள்  பத்தரைக்கு கறுப்பு குதிரை வீதி பலமாடிக் குடியிருப்பில் மருதுவின் அபார்ட்மெண்ட்க்காக மாடிப் படி ஏறினேன். 

கதவு பாதி சார்த்தி வைத்திருந்தது. உள்ளே விளக்குகள் ஜகஜ்ஜோதியாக எரிந்து கொண்டிருந்தன. மருது என்று மென்மையாக அழைத்தபடி உள்ளே போனேன். 

அவன் என்னைக் கண்டதும் என்ன சொல்வான் என்று கற்பனை செய்ய சுவாரசியமாக இருந்தது. கேரள அரசியல், இங்கிலாந்து கால்பந்து அணி ஈரோப்பியன் கோப்பை கால்பந்தாட்டத்தில் விளையாடும் முறை அல்லது காதல் செய்ய எளிய முறைகள் என்று சொல்லாமல் அமைதியான படுக்கை அறை. முனகல் தொடர்ந்து அங்கிருந்து வந்து கொண்டிருந்தது. 

காய்ச்சல் வந்து கஷ்டப்படுகிறானா? தனியாக இருப்பதால் டாக்டரை அழைக்கக் கூட உதவி கிட்டாத நிலைமை. நான் வந்துட்டேன் டா. உள்ளே கதவைத் தள்ளினேன். 

பெரிய உருவத்தோடு அமி படுக்கையில் கிடக்க, மேலே படுத்து மருது கூடியவரை வெள்ளைக் குதிரையை அடக்கிக் கொண்டிருக்கிறான். வந்த முனகல் அவளுடையது.

எடின்பரோ பல்கலைக் கழகத்தில் நியூக்ளியர் பேராசிரியர் கல்பா திலீப் ராவ்ஜி நான். என் காதலன் ஓர் குன்றுக்குக் கள்ளக் காதலன் ஆகியிருப்பது கோபத்தை வரவழைக்கிறது. 

  மருதுவும் அவனைவிட, மகா உபரி கனம் வாய்ந்த பத்து வயதாவது அவனைவிட மூத்த பேரிளம் பெண் மேல் படர்ந்திருப்பதற்கான காரணம் தெரியாதவள் நான். உடல் உறவுக்கான இச்சை எழத் தனிமையில் இருக்கும்போது கிட்டும் பெண் துணை பெரும் பங்கு வகிக்கிறது என்பதை கல்பா ஆகிய நான் உணர்ந்தேன்.    அமியின் எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் உள்ளாடையை அவள் மேல் விட்டெறிந்தேன். 

ஒரு புதிர் அமி. நீ என்ன இனத்துப் பெண்நாய் என்பதைத் தவிரவும் ஒன்று. மருதுவின் அம்மா தெரிசா முசாபரின் அந்தக்கால மனைவி. நீ அவருடைய இந்தக்கால மனைவி. உனக்கும் மருதுவுக்கும் என்ன உறவு? அது எதுவாகவும் இருக்கட்டும். இந்த வெண்ணெய்க்கட்டி போன்ற அபரிமிதமான உடலை அவன் எப்படி விளையாட உபயோகித்தான் சொல்லு அமி. அவன் திருடன். சொல்ல மாட்டான். 

மருது வாய் திறந்தான். கட்டறாத காமம். அமியும் என் அம்மா தெரசாவும் சக்களத்திகள். நான் என் சித்தியோடு இன்பம் அனுபவித்தேன். 

அவன் நிறுத்தாமல் சிரித்தான். என்னமோ தோன்ற நானும் சிரித்தேன்.  அமி அடுத்து கைகளை வீசிச் சிரித்தாள். சிரிக்காதேடி தேவடியாளே என்றேன் நான் சிரித்தபடி. அமி அதற்கும் சிரித்தாள். மருது எழுந்து உடை உடுத்தி வெளியே போனான். அமி எழுந்து உடைகளை கட்டிலில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து அணிந்து கொண்டிருந்தாள். 

நான் குசினியில் புகுந்து சாப்பிட ஏதும் இருக்கிறதா எனத் தேடினேன். ஒரு பெரிய பாத்திரத்தில் தக்காளி சூப் மட்டும் காய்ச்சி  அடுப்பில் இருந்தது. நான் பெரிய துடுப்புக் கரண்டியை குசினி அலமாரியில் இருந்து எடுத்து மூன்று கிளாஸ் தம்ளர்களில் வார்த்து தட்டில் ஏந்தி வந்தேன். 

அமியும் மருதுவும் இன்னொரு முறை கலவி செய்ய ஒத்தாசை செய்து எல்லா சௌகரியமும் செய்து கொடுக்கும் வேலைக்காரியாக என்னை உணர்ந்தேன். அழுகை கட்டுப்பாடில்லாமல் வந்தது. அது சிரிப்பானது.  

அமியும் மருதுவும் என் அருகே கட்டிலில் அமர்ந்தார்கள். அடுத்த ஆட்டம் சினிமா ஆரம்பிக்கப் போறீங்களா நான் உடம்பு வியர்வை துடைத்து விடட்டா என்று மருதுவைக் கேட்டேன். 

இன்னொரு முறை அமி நெஞ்சார வருத்தப்பட்டு அதைத் தெரிவித்தாள். இருட்டு, நெருக்கம், வெளியே மிதமான தட்பவெட்பம். ஒன்றும் ஒன்றுமாக எல்லாம் கலந்து நான் உறவில் ஈடுபட்டேன். இனி இப்படி நடக்காது, அது தவறானது. 

இதுவும் இது போல் இன்னும் நிறையவும் சொல்லி வருத்தம் தெரிவித்தாள். அதைக் கேட்டபடி இருந்தபோது என் உடல் நடுங்க ஆரம்பித்தது.   கண்களை உருட்டி விழித்தேன். கண் இருட்டி வந்தது. கடற்கரையில் படகு எல்லாம் புறப்பட்டுப் போனபின் ஓடி வந்து ஒரு சின்னப் பையன் அப்பா அப்பா என்று கேட்பது என் காதில் விழுந்தது. அவன் அழத் தொடங்கினான். 

அப்பா பசிக்குது அப்பா தாகமாக இருக்கு. எங்கே போனீங்க. ஏன் என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க? என்னைச் சுத்தி ஒரு பட்டாம்பூச்சி பறக்கறது. சித்ரசலபம். அதைத் தவிர வேறே ஒரு உயிர் இங்கே இல்லே. நான் யார் கூட விளையாடணும்? முதல்லே எனக்கு யார் சோறு போடுவாங்க? எங்கே நான் உறங்கறது? தனியாக நான் என்ன செய்யணும்? அப்பா அப்பா அம்மா எங்கே போயிட்டாங்க? அம்மா இல்லாமல் கூட இருக்கப் பழக்கிக்கிட்டேன். அப்பா, நீங்க இல்லாமல் நான் என்ன பண்ணுவேன்? 

அந்தப் பையன் குரல் என் கண்ணீரை வரவழைத்தது. என் உடல் மிளகு சாப்பிட்டால் வரும் ஒவ்வாமை மிகுந்து முகம் வீங்கி வீர்க்கத் தொடங்கியது. 

நான் அமி. நான் ஏற்படுத்திய தக்காளி சூப்பில் நிறைய மிளகுத்தூளும் வால்மிளகுப் பொடியும் போட்டிருக்கு. அதை செய்து குடிக்கத்தான் நான் இங்கே வந்தேன். கல்பா இங்கே வருவதை எனக்கு மருது சொல்லவில்லை. அவளுக்கு மிளகு ஒவ்வாமை இருப்பதையும். ஒவ்வாமைக்கு ஏதாவது எதிர்வினை உணவோ மருந்தோ இருக்குமே. 

நான் கல்பா. ஒரு மிளகு உண்டாலே இந்த கொடுமையான அலர்ஜி எனக்கு ஏற்படும். ஒரு கப் நிறைய மிளகுத்தூள் கலக்கிய சூப் சாப்பிட்டிருக்கேன். என்ன ஆகுமோ. சூன்யத்தில் அந்தச் சிறு பையன் இன்னும் அழைக்க உடலில் சக்தி இல்லாமலோ என்னமோ கடற்கரையில் நிறுத்தியிருந்த ஒரு படகில் ஏறி உறங்கி விட்டான்.

நான் அமி. அவசர அவசரமாக மருதுவின் கருப்புக் குதிரை அபார்ட்மெண்டில் லிஃப்டில் ஏறினேன். ரெண்டாம் மாடி என்று நினைவு இருந்தது. இல்லை, அது மூன்றாம் மாடியா? இரண்டு, மூன்று இரண்டு எண்ணையும் அழுத்தினேன். லிப்ட் நகர ஆரம்பித்தது. 

அது ஒன்றாம் மாடிக்கு மேலே போகும்போது கரகரவென்று கிரேன் ஒலிக்கிற சத்தம். இருட்டு வேறே. லிஃப்ட்  நின்று போயிருந்தது. 

தெரியாத பிரதேசத்தில் யாரும் கவனிக்காத போது ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில் தனியாக லிஃப்ட் ஏறி அது அந்தரத்தில் நிற்கிறது. எப்படி சத்தம் போட்டு யாரை அழைப்பது? மின்சாரம் எப்போது வரும்? 

இருட்டு அச்சமூட்டுவதாக என்னைச் சுற்றிச் சூழ்ந்து விழுங்க வருவதாக பிரமை. நான் ஓவென்று அழுதேன். லிப்ட் கதவுகளை தடதடவென்று அடித்தேன். இல்லை, யாருக்கும் கேட்காது. மின்சாரம் எப்போது வருமோ அப்போது தான் மற்றவர்கள் கவனத்துக்கு நான் வருவேன். அதுவரை? 

எப்போது அது நிகழலாம்? யாருக்குத் தெரியும்? சட்டென்று நினைவு வந்தது. மருதுவின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தால் என்ன? நேரம் பார்த்தேன் என் மொபைலில். சாயந்திரம் ஆறரை மணி. 

பாளம் பாளமாக சூழும் இரவு எங்கோ நாயோ பூனையோ கழிந்த வாடையோடு வந்து சேர்ந்திருக்கிறது. 

மருது அழைப்புக்கு அவசரமாக பதில் சொன்னான். லண்டன் முழுக்க மின்சாரம் நின்று போயுள்ளது. மருதுவின் மொபைல் ஃபோன் சார்ஜ் கிட்டத்தட்ட வடிந்து போய்விட்டது. அவன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கோவண்ட் தோட்டம் பாதாள ரயில் நிலையம் கடந்து போன ரயில் வண்டியில் சுரங்கப் பாதையில் அகப்பட்டிருக்கிறான். 

அமி, சத்தம் போடு. யாராவது கேட்கலாம். 

மருது குரல் தேய்ந்து மறைய என் இருப்பின் பயமூட்டும் தன்மை முழுவதாக என்னைத் தாக்கியது. இந்த மின்சாரக் கூண்டில் இருந்து நான் வெளியே வரப் போவதில்லை. சராசரி ஐரோப்பியப் பெண் போல் இரண்டு மடங்கு உடல் கனமும் ஆறடி உயரமுமாக லிப்டில் அப்படி இப்படி திரும்பி நிற்க முடியாமல் நான் இந்திய ஆனை போல் நிற்கிறேன். 

அறைக்குள் இருக்கும் ஆனை வர்த்தக உரையாடலில் வரும் – பிரத்தியட்சமாகத் தெரியும் நிஜ நிலவரத்தைக் கவனியாமல் வேறு ஏதாவது அற்ப விஷயம் குறித்து சர்ச்சை செய்வது போன்றதைச் சொல்ல ஆனை அறைக்குள் வரும். ஏற்கனவே வந்திருக்கும்.  நான் லிப்டில் மாட்டிய ஆனை.  என்னை நானே பாடி ஷேமிங்க் body shaming செய்து கொள்கிறேன்.  

வியர்வை பெருகி உடல் நாற ஆரம்பித்துள்ளது எனக்கே தெரிகிறது. ஹலோ ஹலோ என்று லிஃப்ட் கதவில் கையைக் குவித்துக் குத்தியபடி தரையில் சரிந்தேன்.  

விழிப்பு வந்தபோது லிப்ட் கதவு திறந்து மருதுவும் இன்னும் யாரோ எல்லாமும் என்னை லிப்ட் உள்ளே இருந்து வெளியே கொண்டு வர முயல்வது புரிந்தது. மருதுவின் கைகள் என் தொடையை இறுகப் பிடித்து இருக்க என் மார்பை அவன் நெஞ்சில் சாய்த்தபடி மெல்லப் பின்வாங்கினான் அவன்.

 மெழுகுவர்த்தி அமர்த்திய புகை சூழ்ந்த லிப்ட்டில் மங்கலாக மின்சார விளக்கு எரிய நான் வெளியே வந்தேன்.  மருது கூட இருந்த அபார்ட்மெண்டின் துப்புரவு நிர்வாகி கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு லிப்ட்டை கீழே எடுத்துப் போக பொத்தான் அழுத்த நானும் மருதுவும் ஃப்ளாட்டுக்கு உள்ளே வந்தோம். 

அவன் என்னை அவனுடைய கட்டிலுக்கு உந்திப் போனான். அசதியோடு நான் படுத்தேன். தேங்காய்ப்பூ துவாலை கொண்டு என் உடலில் இருந்து ஆறாகப் பெருகிய வியர்வையைத் துடைத்துக்கொண்டிருக்க, மறுபடி மின்சாரம் நின்றுபோனது. 

துணை விட்டுப் போய்விடலாம் என்ற பயம் மேலெழ மருதுவை நான் இறுகத்தழுவி கட்டிலில் சரிக்க, அவன் என் மேல் படர்ந்தது தான் தெரியும். நேரம் போனதே தெரியாமல் இருட்டில் ஒரு நீண்ட கலவி. 

எந்த இருளையும் எந்த பயத்தையும் நான் சமாளிப்பேன் என்று உடல் பரவசத்தோடு மனதிடம் சொல்ல கும்மாளி கொட்டி ஆடியது மனம். வயதும் உருவமும் உறவும் இனமும் நேரமும் காலமும் சூழலும் வேறு எதுவும் பாதிக்காத இரண்டு மனங்கள் முழுக்க இயக்கும் உடல்கள் சேர்ந்திருந்த நேரம் அது. 

நாங்கள் ஓய்ந்து கிடக்க, மின்சாரம் வந்தது. என் அன்பு முசாபரின் நினைவு வந்தது. 

Railroad, steamboat, river and canal

Yonder comes a sucker, 

And he’s got my girl

And she’s gone, gone, gone

And she’s gone, gone, gone

என்று ஜிம் ரீவ்ஸின் குரலைப் பகர்த்தி எடுத்துப் பாடிக்கொண்டு கடந்து போனதைத் தவிர அவன் வேறேதும் செய்யவில்லை.

ஷவரில் குளித்து எதற்கும் இருக்கட்டும் என்று ப்ரீப் கேசில் கொண்டு வந்த ஒரு செட் உடுப்புகளை உடுத்தி பரிசுத்தமானவளாக சூப் காய்ச்சி மிளகுப் பொடியும் ஆயுர்வேத வைத்தியப் பொடியும் கலந்து நானும் மருதுவும் ஆளுக்கு ஒரு குவளை அருந்தினோம். இதைக் குடித்து முடித்தால் இன்னொரு தடவை கட்டிலேறச் சொல்லும்  போலிருக்கு என்றேன். வியர்க்கத் தொடங்கியது.

 மருது என் அக்குளில் தன் கைவிரல்களை வைத்து பிரட்டி முகர்ந்து கொண்டு சொன்னான் –

உன் கையிடுக்கில் காட்டுப்பூக்கள் பூத்துப் பரத்தும் ஆதி வாசனை கிறங்க அடிக்குது பெண்ணே.

ஒரு மாமிச மலை போல இருக்கிறேன். என்னிடம் என்ன கண்டாய் சிறுவா? 

என் கேள்விக்கு அவன் சொன்ன பதில் – காமத்துக்கு எந்த இலக்கணமும் இல்லை. நமக்குள் காமம் எழுவது இயற்கை. காதல் எழுந்தால் அபூர்வம்.

 அவனுடைய பெண் சிநேகிதியும் ஊர்க்காரியுமான கல்பா வந்து கொண்டிருக்கிறாள், மின்சாரத் தடையால் வருவது தாமதப்படுகிறது என்று மொபைலில் செய்தி அறிந்து என்னிடம் எதற்கோ பகிர்ந்து கொண்டான். 

அழகான, இந்திய இளம் பெண். நானும் சேர்ந்து கட்டிலை தூய்மைப் படுத்தி அவனோடு சேர்ந்து சலவை செய்த விரிப்புகளை விரித்தேன்.  அடுத்த படுக்கை அறையில் இருந்து தலையணைகளை எடுக்க வேண்டும். அது வாசல் கதவுக்கு நேரே திறக்கும் படுக்கையறை. 

அங்கே போய் வெள்ளைத் தலையணைகளை அணைத்து எடுக்கும்போது மறுபடி மின்சாரம் போனது. என் பிடரியில் மருதுவின் மூச்சுக் காற்று வெப்பமாக இதம் காட்டியது. 

நான் உடுத்தியிருந்ததை பத்திரமாக அகற்றி அறைக்குள் கட்டியிருந்த துணிகள் உலர்த்தும் கொடியில் வரிசையாகத் தொங்கவிட்டேன். எனக்காகக் காத்திருந்த மருது சீக்கிரம் சீக்கிரம் இதோடு இந்தக் கொண்டாட்டம் முடிவடையும் என்று அவசரப்படுத்தினான். 

அவனை அணைத்து, முத்தமிட்டுப் புரண்டு என்னிலாக்கி இயங்கியபோது வாசல் கதவு திறந்து, கல்பா நின்றாள்.

நான் கல்பா. விழிப்பா கனவா என்று தெரியாத சூழலில் கடற்கரையில் தனியாக ஓடி வந்த சிறுவன் படுத்திருந்த படகுக்குள் எட்டிப் பார்த்தேன். அவன் கண்கள் திறந்து படுத்திருந்ததால் என்னை கூர்மையாகப் பார்த்தான். யார் அவன்? வணங்கச் சொன்னது ஒரு மனம். குழந்தையாக அன்பு செலுத்தச் சொன்னது இன்னொரு மனம். 

பரிதி, நடேசா, கண்ணா, கவிதா, உஷை,மது,  காத்தி, செலுவி, ஈசு, டேவிட், அமுதா, கணேசா, சின்னா, சென்னா

அவன் சிநேகிதர்களின் பெயர்களாக இருக்கும். ஒவ்வொன்றாக அப்பெயர்களை அழைத்தான். 

என்னை விட்டுவிட்டு ஒளிஞ்சு பிடிச்சு விளையாடறீங்களா? எங்கே ஒளிஞ்சீங்க? என்னாலே கண்டு பிடிக்க முடியலே. நான் தோத்துப் போய்ட்டேன். வெளியே வாங்க.  வெளியே வாங்க.

அவன் விசும்பலோடு கானம் பாடினான். விளையாட்டில் குழந்தைகள் பாடுவது –

மிளகு தரேன் ஏலம் கொடு

வேணாம் போ வேணாம் போ

மிளகு தரேன் கிராம்பு கொடு

வேணாம் போ வேணாம் போ

மிளகு தரேன் லவங்கம் கொடு

வேணாம் போ வேணாம் போ

மிளகு தரேன் கடுக்காய் கொடு

வேணாம் போ வேணாம் போ

மிளகு தரேன் சீரகம் கொடு

இங்கே வா இங்கே வா

மிளகு தரேன் சீரகம் கொடு

இங்கே வா இங்கே  

அவன் பாதிப் பாட்டில் கண் மூடி மறுபடி துயிலத் தொடங்கினான்.   எனக்கு ஏதோ புரிந்து சமையலறைக்கு ஓடினேன். மைக்ரோஅவனில் அறுபது வினாடி சீரகம் கலந்த வெந்நீர் சுடவைத்து ஒரு குவளை அவசரமாக அருந்தினேன். மிளகு-ஒவ்வாமை தந்த உடல் வீக்கம் விரசாக வடிந்தது. 

மிளகு தரேன் சீரகம் கொடு

இங்கே வா இங்கே  

 உடம்பெல்லாம் வியர்வை. தேங்காய்ப்பூத் துவாலையை எடுத்தேன். ஈரமாக இருந்தது. முகர்ந்து பார்த்தேன். அதைக் கீழே போடு என்றான் மருது. நான் அமியைப் பார்த்துச் சிரித்தேன்.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது மிளகு – அத்தியாயம் 61 & 62

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.