- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை

ஹொன்னாவர் 1605
நான் நேமிநாதன்.
காற்றில் அலைக்கழிக்கப்பட்டு துடுப்புகள் தவறி விழுந்து கடலோடிய படகு போல் நாற்பத்தைந்து வயதிலும் இலக்கு இன்றிச் சுற்றிச் சுற்றி வருகிறேன். அலைகள் என்னைச் சுற்றிச் சீறிச் சினந்து எழும்பிப் படகைக் கவிழ்த்து என்னையும் நீர்ப்பெருக்கில் அடித்துப் போகவைக்க ஆடிவருகின்றன. நேமிநாதன் துரோகி என்று அவை ஏசலைக் குரலுயர்த்தி ஒரே குரலில் பாடுகின்றன. காதுகளைப் பொத்திக்கொள்ள வைக்கும் இரைச்சல். திட்டு. வசவு. துரோகி என்கின்றன அவை என்னைத் திரும்பத் திரும்ப.
சென்னபைரதேவி மகாராணியின் மகன் என்ற பெருமையும் சங்கடமும் எனக்கு வாய்த்தன என்று இந்த ஒரு வருடமாகத்தான் தெரிந்து கொண்டேன். வளர்ப்பு மகன் என்ற உறவை யாராவது என் காதுபடச் சொன்னால், சத்தம் இன்றி உதடுகளை அசைத்து உச்சரித்தாலும் எனக்கு உட்செவியில் கேட்டு அருவருப்பு ஏற்படுகிறது.
வளர்ப்பு நாய், வளர்ப்புப் பூனை போல் வளர்ப்பு மகன் என்பது ஐந்தறிவு கொண்ட ஒரு பிராணியாக என்னைக் காட்டுகிறது. நேராநேரத்துக்கு சோறு போட்டு, தண்ணீர் கொடுத்து, உடுக்க உடை கொடுத்து, குளிக்க வென்னீர் விளம்பி வைக்க, குளித்துவிட வேலைக்காரர்களை நியமித்து, கழுத்தில் ஒரு சங்கிலியையும் போட்டுக் கட்டி வைத்தால் தான் வளர முடியும் போல் இருக்கிறது.
அம்மா அம்மா என்று எஜமானியம்மாளின் காலைச் சுற்றும் நாய்க்குட்டி போல் விசுவாசமும் பிரியமுமாக மனதில் வாலாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தாயே, எப்போது விலகி ஓடி வந்தாய் என்று என்னைத் தெரிந்தவர்கள் மட்டுமின்றி தெரியாதவர்களும் கேட்கிறார்கள். ஏதோ அந்தக் கேள்விக்குக் கிடைத்த பதிலை வைத்து என்னைப் பார்த்து கோபிப்பதா, பரிதாபப்படுவதா அல்லது வெறுத்து எச்சில் உமிழ்வதா என்று தீர்மானத்துக்கு வர அது அத்தியாவசியமான தகவல் என்ற நிச்சயம் செய்துகொண்டு. சொல்கிறேன். அதைக் கேட்டு இத்தனை அற்பமான காரணத்துக்காகவா வளர்த்த அன்னை மேல் வன்மம் வளர்த்துக் கொண்டு வழிப் பிரிவு ஏற்படுத்திக் கொண்டாய் என்று சிரித்தாலும் எனக்குச் சம்மதமே.
எல்லாம் என் வளர்ப்பு தாயார் மிளகு மகாராணியின் அறுபதாம் பிறந்தநாளன்று தொடங்கியது. அந்தப் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாட நானும் என் மனைவி ரஞ்சனாவும் பிறந்தநாள் வருவதற்கு ஒரு மாதம் முன்பே திட்டமிடத் தொடங்கி விட்டோம்.
பாக்குமரப் பட்டையிலும் வாழைப் பட்டையிலும் குடுவை செய்து அதில் அதுவும் இதுவுமாக உணவைத் தனித்தனியாக வைத்து மேலே அதே பட்டையை வளைத்து மூடி பிறந்தநாள் விருந்தை ஜெர்ஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் ஏழைப்பட்ட அத்தனை பேருக்கும் விநியோகித்தேன். மிகப் பெரிய வரவேற்பு அதற்கு இருந்தது.
ஹொன்னாவரில் விருந்து விநியோகிக்கும்போது ஒரு தெரு விடாமல் நான் என் சாரட்டில் போய் நின்று ஏதாவது குறைபாடு இருக்கிறதா, மக்கள் எப்படி இதை எதிர்கொண்டு பாராட்டுகிறார்கள் என்று கவனித்தேன்.
எல்லா இடத்திலும் பாராட்டு தான். இவ்வளவு புலவுச் சோறா? அதுவும் நெய் பெய்து, கூடவே இனிப்பும் வைத்து என்றுதான் உண்ண முடியாமல் வயிறு நிறைந்து வாழ்த்திய வாழ்த்தொலிதான் எங்கும்.
அந்த வார்த்தைகள் எல்லாம் மிளகுராணியம்மா தீர்க்காயுசா இருக்கட்டும் என்று மட்டும் வாழ்த்தின. நேமிநாதனா? யாரவன்? மிளகுராணியாவது என் பங்களிப்பைப் பொதுவில் அடையாளம் கண்டு பாராட்டியிருக்கலாம். செய்யவில்லை. அவர்களுக்கு மிளகு ஏற்றி விற்றுக் காசு பார்க்க அவசரம்.
அன்று ஹொன்னாவரின் நீண்ட பெரிய வீதியான ரதவீதியில் பத்து இருபது பேர் உணவுக் குடுவைக்காக முட்டி மோதிப் பரபரப்பாக நின்று கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் உணவு கிடைக்கும், முட்டி மோத வேணாம் என்று நான் குரல் கொடுத்தபடி அந்தக் கும்பலுக்கு முன்னால், விநியோகம் செய்கிறவர்கள் அமர்ந்திருந்த ரதத்தின் அருகே போனேன்.
அப்போது கூட்டத்தில் ஒரு வயதானவர் சொல்கிறார் – மகாராணி ரொம்ப நாள் ஆயுசும் ஆரோக்கியமுமாக இருக்கட்டும், அவங்க சொன்னபடி நடக்குதான்னு இன்னும் கொஞ்சம் சுத்தி வந்து மேற்பார்வை இடணும் வளர்ப்பு மகனான நீர். அதுக்குத்தான் இருக்கீர், புரியுதா? இது என்னைப் பார்த்து அலட்சிய பாவத்தோடு அந்த கிழவன் கேட்டது. அவன் கொட்டையை நெரித்து அந்த நிமிடமே பரலோகப்ராப்தி வாங்கிக் கொடுக்க பெரும் கோபம் எழுந்தது.
ஆக, நேமிநாதனை தெரு ஓரத்தில் கிடக்கும் மாட்டுச் சாணி போல் அருவறுத்துப் பார்த்து விலகிப் போனார்கள் எல்லாரும். இந்த விழாவில் உணவு விநியோகத்தால் நேமிநாதன் வாழ்க என்று என்னை நாடு முழுக்கக் கொண்டாடுவார்கள் என்று நான் நினைத்திருக்க வயோதிக ராணி தான் எல்லா இடத்திலும் முக்கியத்துவம் பெற்றாள்.
எனக்குக் கிடைக்கும் பிரபலமும் புகழும் ராணி கட்டாயம் கவனிப்பாள், என்னை உடனே அரசாங்கத்தில் முக்கிய அங்கமாக ஆக்குவாள் என்று நினைத்திருந்த என் கனவெல்லாம் மண்ணாகிற்று.
முக்கியப் பிரதானியான நஞ்சுண்டையா என்னிடம் சொன்னது தான் என் கண்ணைத் திறந்தது. நேமிநாதரே, அம்மா திட்டமிட்டபடி நீர் மிக அற்புதமாக பிறந்ததின விருந்தை அரண்மனையிலும், தெருமுனையிலும் எண்ணற்ற பேருக்குப் போய்ச்சேர வழி செய்தீர். அம்மா நினைத்தால் அருமை மகன் செய்து காட்டுவான் என்று நீர் நிரூபித்தது என்றும் ஆற்றல் மிகுந்த ரெண்டாம் இடத்து பதவி உமக்கு வரப்போகிறது என்று காட்டுகிறது என்றார்.
முழுமூடனாக நான் அவர் சொன்னதைக் கேட்டு உலகமே என் ஆதிக்கத்துக்குக் கீழ் வந்ததாக சந்தோஷப்பட்டேன். அப்புறம் தான் புரிந்து கொண்டேன், நஞ்சுண்டையா பொடி வைத்துப் பேசியிருக்கிறார் என்று.
நீ என்னதான் ஓடி ஓடித் திட்டமிட்டு அதை உயிரைவிட்டு நிகழ்த்தினாலும், முழுமுதல் பாராட்டும் புகழும் உனக்குக் கிடைக்கப் போவதில்லை, எல்லாப் புகழும் மிளகுராணிக்குப் போக, மிச்ச சொச்சமாகச் சிந்தியதெல்லாம் உனக்குக் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு ஆட்சி மாற்றம் நிகழ்த்தி சென்னா மகாராணி உமக்கு அரியணையை ஒழித்துக் கொடுப்பார் என்று நினைத்தால் உம் போல் முட்டாள் யாரும் உலகில் இல்லை. இதுதான் நஞ்சுண்டையாவின் இரண்டாம் தகுதிக்கு அர்த்தம்.
நான் அவர் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். உண்மைதான். இப்போது வயது நாற்பது. இனி இருக்கும் மீதி வாழ்நாள் கணக்கு பார்த்தால் இருபது வருஷங்கள் இருக்கக் கூடும். மிளகு மகாராணி எப்படியும் எண்பது வயதாவது, அதாவது இன்னும் இருபது வருடம் நலமாக சக்தியோடு உயிர்த்திருப்பார்.
ஆக நான் அறுபது வயதில் வளர்ப்பு மகன் இளவரசனாக அரசியாரின் எண்பதாவது பிறந்த நாள் கொண்டாட வாழைப்பட்டை குடுவை செய்து கொண்டு உட்காந்திருப்பேன். அப்படியே இறுதி மூச்சையும் விடுவேன்.
வளர்ப்பு மகன் இயற்கை எய்தினார், மிளகு மகாராணி அனுதாபப் பட்டார் என்று ஒரு பெரிய கூட்டம் ஒரு நிமிடம் வருந்திக் கலைந்து போகும். அந்த ஈ எறும்பு வாழ்க்கை போதுமா எனக்கு?
யோசித்துப் பார்த்தேன். நிச்சயம் இல்லை. நேமிநாதனை ஜெர்ஸோப்பாவின் ஆற்றல் மிகுந்த கிட்டத்தட்ட இளவயது அரசராக நாடு வரவேற்க வேண்டும். சென்னா மகாராணி சற்று ஓய்வு எடுக்கட்டும். முழு ஓய்வு எடுக்கட்டும். கிழவி கிடக்கட்டும். புது ரத்தம் பாய்ந்து அரசாங்கம் செயல்படட்டும்.
நான் இந்தத் தீர்மானத்துக்கு வந்தது முதல் என் வளர்ப்பு தாயார் சென்னா மகாராணியை சந்திப்பதையும், அவர் ஏற்பாடு செய்யும் அரசாங்க நடைமுறைக் கூட்டங்களையும் தவிர்க்கத் தொடங்கினேன்.
என் மனைவி ரஞ்சனா தேவியையும் ராணியோடு சந்திப்பைத் தவிர்க்கச் சொல்லி நிர்பந்தம் செய்தேன். ரஞ்சனாவின் அடக்கமான ராஜபரம்பரையின் வழி வழி வந்த கம்பீரமான அழகை முதலீடு செய்து நான் விரைவில் அரசாள ஏற்பாடு செய்து கொள்வேன் என்று விரிவாக மனதில் திட்டமிட்டேன்.
எப்படி அதைப் பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மௌனப் புயல்போல் ரோகிணி என் வாழ்க்கையில் பிரவேசித்தாள். யார் அவள்? எந்த ஊர்? பெற்றோர் யார்? உற்றோரும் தோழியரும் யாரார்? எனக்கு இளையவளா, மூத்தவளா?அகவை எத்தனை? எந்தக் கேள்வியும் கேட்காமல் ரோகிணி என்ற வசீகரமான பெண் பைசாசத்தின் பேரழகுக்கு ஆளானேன்.
அது ஆராதிக்கச் சொல்லும் அழகில்லை. போற்றிப் புகழ்ந்து புல்லரித்து அடுத்து நின்று பணிவிடை செய்ய, அடிமைத்தனம் பண்ண ஆசை எழுப்பும் அழகில்லை. நெருக்கி அணைத்து உடலைத் துன்பம் கொள்ள வைத்து கசக்கி முகரச் செய்யும் அழகுமில்லை. சற்றே பனிச் சிதறலை சந்தனப் பதுமை மேல் சீராக உடல் முழுதும் பூசினாற்போல கனம் கொண்ட ஆகிருதி.
கண்ணில் மின்னும் சிரிப்பைக் கொண்டே நலம் விசாரித்து, என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டு, உன்னால் முடியாது என்று புறம் தள்ளி, முடியும் என்று மெய்ப்பிக்கும் வினாடி பிரமாதம் என்று பாராட்டி, அப்புறம் என்ன செய்யப் போகிறாய் என்று அழைத்து, ஓடத் தயாராக இருப்பதாக பொய்ப் பயம் காட்டி, திரும்ப அணைப்பில் வர நாணி, உதடு பிரியாமல், கண் இமை பிரிந்து சிரிக்கும் ரோகிணியை முதலில் சந்தித்ததும் ஒரே வருத்தம் தான். இந்த அழகை இவ்வளவு நாள் எப்படிச் சந்திக்காமல் போனேன்!
அவளே நானும் நானே அவளுமாக சில நாட்கள் பிரிய, ரஞ்சனா சங்கதி தெரிந்து ரோகிணியை நேரே ஹொன்னாவரில் ரோகிணியின் இனிப்பு அங்காடிக்கே போய்க் கண்டித்து விட்டு வந்தாளென்று ரோகிணியும் சொல்லவில்லை, ரஞ்சனாவும் சொல்லவில்லை.
என் தாயார் மிளகு மகாராணியார் என்னைக் கண்டிக்கக் கூப்பிட்டு விட்டு நான் போகாததால், எப்போது நான் மிர்ஜான் கோட்டையில் என் இல்லத்துக்கு வந்தேனோ அப்போது தானே நேரில் வந்துவிட்டார். அவர் வழக்கமான மென்மையான குரலில் நலம் விசாரித்து விட்டு விஷயத்துக்கு வந்து விட்டார்.
நேமி, நீ அரசாங்க குழு கூட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால் வருந்துகிறேன். என்னோடு காலையுணவுக்கு வர மாட்டேன் என்று என்னைத் தவிர்த்தால் துயரமடைகிறேன். ஆனால், ரஞ்சனாவை புறக்கணித்து ஹொன்னாவரிலும் ஜெரஸோப்பாவிலும் மிட்டாய் அங்காடி நடத்தும் விதவையும் பேரிளம்பெண்ணும் பாதி போர்த்துகீச இரத்தமும் மீதி கொங்கணி குருதியும் ஓடும் பெண்ணோடு கண்மண் தெரியாக் காமத்தில் வீழ்ந்துகிடப்பதைக் கேட்டு கோபமடைகிறேன். இதற்காக உன்னை ஒரு அம்மா என்ற தகுதியில், நீ எனக்கு அந்தத் தகுதியை அளித்தாலும் இல்லாவிட்டாலும் நான் உரிமையோடு எடுத்துக்கொண்டு, தவறு செய்யும் மகனை அடித்துக் கேட்கும் தாயாக இருந்தால் என்ன என்று யோசிக்கிறேன். இது உன் அந்தரங்கம். என்றாலும் இதனால் ஜரஸோப்பா நிலப்பரப்பின், மிர்ஜான் கோட்டையின் பாதுகாப்பில் பங்கம் ஏற்பட்டு விடும் என்ற நிலை உருவானால், கண்டிப்பான நடவடிக்கை உன் மேல் எடுக்கத் தயங்க மாட்டேன். ரஞ்சனாவுக்கு நீ இழைக்கும் துரோகம் தவறு என்று உன்னிடம் உரிமையோடு சொல்கிறேன். வேண்டாம், கூடா நட்பு மட்டுமில்லை, தவறான காமமும் கெடுதிதான்.
இப்படியும் இன்னும் நிறைய இதே தொனியிலும் பேசினார் மிளகுராணி. வெடியுப்பு ஏற்றுமதி நிர்வாகத் தலைமையை எடுத்துக் கொள் என்று பதவி ஆசை காட்டினார் அவர்.
வெடியுப்பு எவ்வளவு உற்பத்தியாகிறது, எவ்வளவு விற்குது, யாருக்கு, எவ்வளவு ஏற்றுமதி, எங்கே ஏற்றுமதி, யாருக்கு, யார் இங்கே செய்யறாங்க இப்படி எல்லா தகவலும் மாதம் ஒரு தடவை அனுப்பி வைக்க வேண்டிய குற்றேவல் தான் அது. பாதுகாப்பு மந்திரி- சுரக்ஷா பிரதானின்னு அது ஒரு பெரிய பதவியாம்.
இந்த ஏமாற்றுக்கெல்லாம் நானா மசிவேன்? எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று பட்டவர்த்தனமாகச் சொல்லி அந்த ஆசைகாட்டுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். நான் புன்சிரிப்பு சிரித்தும் முகத்தை சிரத்தையாகக் கேட்பதாக வைத்தும் அப்புறம் ஒரு வார்த்தை பேசவில்லை.
அவர் திரும்பும்போது ஜெய் மகா காளி சென்று வாருங்கள் என்றேன். இந்த விளி புதிதாக உள்ளதே, நீ குருதி பூஜை செய்யும் கூட்டத்தோடு இருக்கிறாயா என்று கேட்டார் சென்னா ராணி.
ஏன் உங்கள் ரகசியத் தகவல் சேகரிப்பு துறை இதை உங்களுக்குச் சொல்லியிருப்பார்களே என்று குறும்பாகக் கேட்டேன்.
என்ன சொல்லியிருப்பார்கள்? நீ குழுவில் உண்டா என்றா இல்லை என்றா?
அவர் குரலை சற்றே உயர்த்திச் சொன்னார். நான் புன்னகையே பதிலாக விடைகொடுத்தேன். இது போன மாதம் பௌர்ணமியன்று நடந்தது.
அன்றைக்கு நான் ஹொன்னாவர் போகவில்லை. ரஞ்சனாவுக்கு ஒரு பிரப்பந்தட்டு நிறைய மல்லிகைப் பூ கொண்டு வரச் சொல்லியிருந்தேன். சிருங்காரத்தைத் தூண்டி அடிமட்ட விலங்கு உணர்ச்சியை மேலே எழுப்பிக் கொண்டு வந்து இரவு அதிகம் பூடகமான பின்புலம் ஏற்றிக் கொடுக்க இணை விழையும் அமைதியும் குளிருமான பொழுது அது.
அந்த ராத்திரியில் ரஞ்சனா எனக்கு எனக்கு மட்டுமேயான ரதிதேவியாகி இருந்தாள். அன்றைய உறவு நிதானமாகக் கடந்து போக வீட்டு மாடிக்கு அவளைக் கூட்டிப் போய் பௌர்ணமிச் சந்திரன் பார்க்க இன்னொரு தடவை கூடினோம்.
அடுத்த நாள் ரோகிணியிடம் இதைச் சொல்ல, என்னோடும் அதேபடிக்கு இப்போதே விளையாடுங்கள் என்று நச்சரித்தாள். பௌர்ணமிக்கு நான் எங்கே போவேன்?
ஆனால் அப்புறம் ரோகிணியோடு தான் அமாவாசையும் பௌர்ணமியும். அவள் தான் ரஞ்சனாவை, அவள் அழகை முதலீடு செய்யலாம் என்று யோசனை சொன்னவள். அதற்கு முன் இன்னும் சில செய்திகளைச் சொல்லியாக வேண்டும். என்னை முதலில் ராஜகுமாரர் என்று அழைத்தவள் ரோகிணி தான்.
சந்திரனில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன் அவளுடைய முதல் கணவன் மாதிரி ஒரு பார்வைக்கு இருந்ததாகச் சொல்லி போகம் முந்தாமல் பார்த்துக் கொண்டாள் அந்தச் சிறுக்கி.
போர்த்துகல்கார ஐரோப்பியனான அவன் ஜெர்ஸுப்பாவோடு கப்பலில் வந்த போர்த்துகல் வீரர்கள் மோதித் தோற்ற சிறு யுத்தத்தில் இறந்து போனானாம். ஊமத்தை யுத்தம் என்ற அந்த யுத்தம் பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன்.
அவனை ராஜா என்று நகைச்சுவையாகக் கூப்பிடுவாளாம் ரோகிணி. என்னை உண்மையாகவே அப்படி அழைப்பதாகச் சொல்லி மனதை மகிழ்வித்தாள் அவள்.
நான் உங்களை ராஜா என்று அழைத்த நல்ல வேளை நீங்கள் ஜெரஸோப்பா அரசராகப் போகிறீர்கள் என்று பூடகமாகச் சொன்னாள்.
போர்த்துகல் நாட்டு கார்டெல் குழுவை எனக்கு அறிமுகப் படுத்தியவள் ரோகிணிதான். கார்டல் கொடுத்த உத்வேகத்தில் தான் நான் எப்படியாவது மிளகுராணியிடம் இருந்து ஆட்சியைப் பறித்து அடுத்த தலைமுறை பதவிக்கு வரச் செயல்பட்டேன்.
ஆபத்து இல்லாத, கலவரத்தை ஏற்படுத்துவது மட்டும் நோக்கமாகக் கொண்ட வெடிவைப்புகள் மூலம் சென்னா மகாராணி அரசின் மேல் விருப்பமின்மை ஏற்படும், அது வெறுப்பாக மாறும். நாடே அடுத்த தலைமுறை ஆட்சிக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும்.
இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் நடந்து இன்னும் நேமிநாதனைப் பரவலாகத் தெரியவில்லை. தெரிந்ததும் நல்லவன் இல்லாதவன் என்று தான் எப்போதாவது பேச்சில் அடிபடும் நேரத்தில் சித்தரிக்கப் படுகிறேன்.
போர்த்துகல்லில் இருந்து கார்டெல் நிதிக் குழுமம் அனுப்பிய உறுப்பினர் அல்வாரிஸ் நேரடியாகக் கேட்டார் – நேமி ராஜா சாகேப், உங்கள் மனைவியை வைத்துப் பகடை ஆட நீங்கள் எப்போது தயாராகப் போகிறீர்கள்? அந்தக் காயைக் கொண்டு வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய எதிர்ப்பக்கத்துக் காயும் செயலாக இருக்கிறது. எப்போது காய் நகர்த்தப் போகிறீர்கள்?
மதுவின் போதையில் ஏதோ உளறுகிறான் என்று நான் சிரித்துவிட்டுச் சும்மா இருந்தேன். அப்போது தான் அந்தத் தனியறைக்கு வந்த ரோகிணி என் அருகில் அமர்ந்து காதில் சொன்னாள் –
பெத்ரோவை வெட்டி வீழ்த்த ரஞ்சனாவை முன்னால் நகர்த்தி அவரை வசீகரிக்க வேண்டும். எப்போது அதைச் செய்யப் போகிறீர்கள் ராஜா சாகேப்?
இந்தப் பக்கம் ஆல்வாரிஸும் இன்னொரு பக்கம் ரோகிணியும் தூபம் போட நான் நேராக இல்லம் திரும்பியதும் தூங்கி விழித்திருந்த ரஞ்சனாவை கூண்டுக் கிளியைப் பார்க்கிறது போல் கழுத்தில் கை வைத்துப் பார்த்து, சொன்னேன் –
முகம் கழுவிக்கொண்டு வாடி.
நான் நடுராத்திரிக்கு வந்து அவளையும் எழுப்பிவிட்டது கூட அவளை வருத்தமும் கோபமும் அடையச் செய்யவில்லை. டி என்ற தொண்டச்சியை விளிக்கும் இழிவு தான் அவளை ரொம்பவும் பாதித்தது.
மதுசாலைக்குப் போய் நிரம்ப மது பருகி தாறுமாறாக நடக்க வந்திருக்கிறீர்கள் என்றால், உடனே வெளியேறுங்கள். அம்மா மகாராணியிடம் புகார் அளிப்பேன் உங்கள் நடத்தை குறித்து.
அவள் தீவிழி விழித்தாள். நான் பதவி போதையும், அதைத் தூண்டி முதன்மைப்படுத்தும் திராட்சை மதுவின் போதையையும் உச்சம் தொட்டு ஊசலாடியபடி உளறினேன் –
வாடி தேவடியாளே, உன்னைக் கொண்டு போய் விடணும் காத்திருக்கான் உனக்காக ஒருத்தன், போர்த்துகல் அரச பிரதிநிதி பெத்ரோ காத்திருக்கான் ஐரோப்பிய வித்தை எல்லாம் கத்துக் கொடுப்பான் நீ பெத்ரோவோடு கட்டில் ஏறினால் தான், நான் சிம்மாசனம் ஏறி ஜெருஸூப்பா ராஜாவாக முடியும் நான் ராஜாவானால் தான் ஜெருஸுப்பாவுக்கு ஆபத்தும் பேரிடரும் வராமல் இருக்கும்
இப்படி நான் ஏதேதோ குழறிக்குழறிச் சொல்ல அவள் பக்கத்தில் இருந்த குரிச்சியை என்மேல் எறிந்தாள். ஏதோ தோன்ற குசினிக்கு ஓடி கையில் மூடியிட்ட செப்புக் குழல் பாத்திரத்தோடு வந்தாள்.
கை நிறைய மிளகுப் பொடியை அதிலிருந்து அள்ளி என் உடுப்பை வயிற்றுக்குக் கீழே நெகிழ்த்தி, அதை என் பிரத்தியேக இடத்தில் பூசினாள். மிஞ்சிய பொடியை என் கண்ணிலும் பூச வந்து, சே பிசாசே போ என்று தரையில் போட்டாள்.
எரியுதே என்று நான் கூச்சலிட என்னை வாசலுக்குக் கொண்டு போய்த் தள்ளினாள். ஒலியெழக் கதவையும் என் முகத்துக்கு நேராக சாத்திவிட்டாள்.
நடுராத்திரியில் குருடன் போல் தட்டுத்தடுமாறித் தோட்டத்தில் வீட்டுக் குளத்துக்கு ஊர்ந்தேன். அந்தத் தண்ணீரும் நீண்ட நேரம் பீஜத்தில் பட்டு எரிச்சலை மிகைப்படுத்தியது. அப்புறம் அது தணிந்து வர என் போதையும் விலகியது.
ரஞ்சனா என்று விளித்தபடி இல்லத்தைச் சுற்றி வர, எல்லா கதவுகளும், ஜன்னல்களும் அடைத்து பாதுகாப்பாக இருந்தது வீடு. பிச்சைக்காரனைப் போல், சரியாகச் சொன்னால் அப்பக்கா மகாராணியின் கணவர் வீரு போல் என்னை உணர்ந்தேன் ஒரு கணம். வீரு ராஜ்யம் இல்லாத ராஜா. நானும் தான்.
ஆனால் வீருவின் மனைவி எல்லா சக்தியும் வாய்ந்த, சென்னா மகாராணி போல் மக்களால் விரும்பப்படும் அரசி அப்பக்கா. ரஞ்சனாவை இனிமேல் தான் அறிமுகப்படுத்த வேண்டும்.
பெத்ரோவுக்கு முதலில் ரஞ்சனாவை அறிமுகப்படுத்தி அவனை கார்டெல் பக்கம், ரோகிணி பக்கம், என் பக்கமாக இழுக்க வேண்டும். எத்தனை நாள் அவனும் பெண்டாட்டி பக்கத்தில் இல்லாமல் வேலைக்காரி கஸாண்ட்ராவின் மடியில் கிடந்து அலுத்திருப்பான். ராஜவம்ச ரத்தமும் அழகு நிரம்பி வழியும் வழுவழுத்த சதையுமாக வலம் வரும் ரஞ்சனாவை எடுத்துக் கொள்ளட்டும். போர்த்துகல் அரச பிரதிநிதிக்கு ரஞ்சனா ஒரு அழகான தூண்டில்.
இதற்கு அப்புறம் ஒரு வாரம் முழுக்க மிர்ஜான் கோட்டையில் என் இல்லத்துக்கே போகாமல் ஹொன்னாவரிலேயே ரோகிணியோடு தங்கி விட்டேன். ரஞ்சனா முகத்தில் விழிக்க சங்கடம், பயம்.
நேற்றைக்கு ராத்திரி நடந்ததைச் சொல்லத்தான் நான் இதை எல்லாம் சொல்லத் துணிந்தேன். என் வாழ்க்கையில் முக்கியமான தினமானது நேற்று.
வழக்கத்துக்கு முன்னதாக எட்டரை மணிக்கே இனிப்பு அங்காடி கதவடைத்து, ராத்திரி ஒன்பது மணிக்கே ரோகிணியோடு சல்லாபம் தொடங்கினேன்.
பெத்ரோ வீட்டு வாசலில் வந்து நின்ற சாரட் என் சொந்தச் சாரட் போல் தெரிந்தது. ரோகிணியிடம் சொல்ல, அவள் உடனே பதிலளித்தாள் – மகாராஜா, ஊரில் ஓடும் வண்டி எதைப் பார்த்தாலும் உங்கள் சாரட் என்று தோன்றுவது முதல் கட்ட உன்மத்தம் என்று அடக்கத்தோடு சொல்லிக் கொள்ள விழைகிறேன். இதன் மத்தியக் கட்டம் ஊரில் உள்ள பெரிய, சிறிய கட்டிடம் எல்லாம் உம்முடையது என்று தோன்றும். இதன் கடைசி கட்டம் ஊரில் கண்ணில் பட்ட பெண் எல்லோரும் உமக்கான பெண்டிர் என்று தோன்றும். நீர் எந்த தரத்தில் உள்ளீர்
இப்படிக் கேட்டபடி சிருங்காரக் கேளிக்கைகளை ஆரம்பித்து வைத்தாள். பிரான்சிலிருந்து வந்த திராட்சை மதுவும், போர்த்துகல்லில் இருந்து வந்த பெண் மயிலும் என்னோடு கலக்க வேறு நினைவு எல்லாம் அகன்று போனது.
சிறிது நேரம் சென்று அடைத்திருந்த இனிப்பு அங்காடியின் கதவை யாரோ தட்டும் மெல்லிய ஓசை. ரோகிணியின் கரங்கள் என்னை இறுக்கிப் பிடித்திருக்க, எழுந்து என்னவென்று பார்க்க முடியாத மயக்கம்.
ரோகிணி, யாரோ அவசரமாகக் கதவு தட்டுகிறார்கள் என்றேன் அவள் செவி மடலில் முத்தமிட்டபடி. அவளுடைய அணைப்பு இன்னும் அதிகமாக இறுக, மூச்சு முட்டியது எனக்கு. போர்த்துகல் வாசனையும், கோழிக்கோடு அத்தரும், திருச்சி ஜவ்வாதும், ரோகிணியின் சொந்த வாசனையுமாக என்னைத் தொடர்ந்து கிறங்கடித்துக் கொண்டிருக்க வெளியே கதவு தட்டும் சத்தம் மெல்ல அதிகரித்தது.
எந்த நாயோட படுக்கறவன் வேணுமாம் இந்த ராத்திரியிலே என்று ரோகிணி அலுத்துக்கொண்டு எழுந்து மேகம் போல் பரவியிருந்த கூந்தலை அள்ளி முடித்துக் கொள்ளும்போது கலவி வேட்கை எங்கே எங்கே என்று வர அவளை உடனே கூடினேன்.
அந்த கதவு தட்டும் சத்தம் பின்னணி தாளம் அளிக்க. பதினைந்து நிமிடத்தில் எல்லாம் அமைதியானது. கதவு தட்டப்படவில்லை. ரோகிணி மெல்லிய குறட்டை ஒலியோடு உறங்கிப் போயிருந்தாள். நான் மெல்ல எழுந்து நின்றேன். அடுத்து இருந்த பெத்ரோவின் மாளிகையில் பார்வை பட்டது. நடுநிசி என்றாலும் வழக்கத்துக்கு மாறாக தீபங்களும், மெழுகுவர்த்திகளும் ஒளிவீசிக் கொண்டிருந்தன. ஜன்னல் கதவுகள் திறந்திருக்க, வாசல் படிகளில் இறங்கி நின்று என் இருப்பிடத்தைப் பார்த்தபடி சில வினாடிகள் நின்றாள் கஸாண்ட்ரா. திறந்து வைத்திருந்த மாளிகை வாசல் கதவுகள் ஏதோ பிரச்சனை என்று சொல்லாமல் சொல்லின.
திறந்த மார்போடு புறப்பட வேண்டாம் என்று அங்கவஸ்திரத்தை தோளில் அணிந்தேன். நான் திரும்பிப் பார்த்தேன். ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் ரோகிணி. மெல்ல நடந்து மாடிப்படி இறங்கி வாசல் இரும்புக் கதவையும் திறந்து வெளியே வந்தேன். பெத்ரோவின் மாளிகைக்கு நடந்தேன்.
வாசலில் நின்ற கஸாண்ட்ரா என்னைப் பார்த்தாள். நான் அவளருகே போய் என்ன ஆச்சு என்று விசாரித்தேன். நான் தான் கதவை இடித்தேன் என்றபடி என் தோளில் ஒட்டியிருந்த மல்லிகை இதழ்களை எடுத்துக் கீழே போட்டாள் சுவாதீனமாக.
ஏன் என்ன விஷயம் என்று விசாரித்தேன். மகாராணி வந்திருக்காங்க என்றாள் கஸாண்ட்ரா. மிளகு மகாராணிக்கு அறுபது வயதில் ராத்திரி அலைச்சல் எதற்கு? அதுவும் பொலிகாளை போல நடுவயதைத் தொட்டுத் திமிர்த்துத் திரியும் இமானுவல் பெத்ரோவைத் தேடி வந்திருக்க என்ன காரணம் இருக்கக் கூடும்?
பெண்ணே, மகாராணி போர்த்துகலுக்கு மிளகு ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை பற்றி விவாதிக்க வந்திருப்பார். என்னை எழுப்பி நான் என்ன பண்ணப் போகிறேன் என்று விஷமமாகச் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
மெழுகுவர்த்தி ஒளியில் கஸாண்ட்ரா இச்சையைக் கிளப்பிக் கொண்டிருந்தாள். நீ எங்கே தங்கியிருக்கிறாய் என்று அவளைக் கேட்டேன். எல்லாத் தகவலும் ஒரு நாள் தேவைப்படும். கஸாண்ட்ரா மாளிகைக்குப் பின்னால் சிறு குடில் போன்ற இடத்தைக் காட்டினாள்.
நான் அதைப் பார்த்தபடி நிற்க, ரஞ்சனா மகாராணி வந்திருக்காங்க என்றாள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் அவசரமாக பெத்ரோ வீட்டு வாசல் படிகளை முதல் தடவையாக ஏறினேன்.
விசாலமானதாக கலைநயத்தோடு அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த மாளிகையின் நேர்த்தியில் ஈடுபடாமல் உள்ளே எப்படிப் போகவேண்டும், முக்கியமாக ரஞ்சனா எங்கே என்று அறிந்து அவள் இருக்குமிடம் உடனே போக மனம் ஒருமைப்பட்டது.
சின்ஹோர் சின்ஹோர்.
பின்னாலிருந்து சத்தம். கஸாண்ட்ராதான். சின்ஹோர். என்னைத் தான் அழைக்கிறாள்.
வலது பக்கம் இருக்கும் கதவைத் திறந்தால் மண்டபத்துக்குப் போகலாம். பெத்ரோ சின்ஹோர் அங்கே தான் விருந்தினரை உபசரித்துக் கொண்டிருக்கிறார் என்றாள். எந்த விருந்தினர் என்று பொறுமை இல்லாமல் கேட்கிறேன். மகாராணி ரஞ்சனா தான் என்று வியப்பு விலகாமல் சொல்கிறாள்.
ரஞ்சனா அங்கு வந்திருப்பதை, அதுவும் நடுராத்திரிக்கு வந்திருப்பதை அவளால் நம்பவே முடியவில்லை என்று அவள் இமைகள் படபடத்து குரல் நடுங்கத் தெரியப்படுத்தினாள். நான் வேகமாக நடந்து அந்தக் கதவைத் திறந்து தள்ளினேன். அசைய மாட்டேன் என்கிறது. இன்னொரு முறை பலத்தை எல்லாம் பிரயோகித்து தள்ள, பின்னால் இருந்து கஸாண்ட்ரா குரல் வந்தது –
சின்ஹோர், இந்தக் கதவை உங்களை நோக்கி இழுக்க வேண்டும். தள்ளக் கூடாது.
இழுத்து உடனே கையை விடுவிக்க, பின்னால் வந்து கொண்டிருந்த கஸாண்ட்ரா மேல் அடிப்பது போல் வேகமாக மோத, அவள் வாகாகப் பிடித்து சார்த்தி விட்டு என்னைத் தொடர்ந்தாள்.
சிவப்பு சாட்டின் ஆசனங்கள் போட்டிருந்த மண்டபம் அவசரமாக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி ஒளியோடு மெழுகு உருகும் வாடையும் மூக்கில் குத்த பிரம்மாண்டம் காட்டியது.
அது தவறான தகவல் அம்மா, முற்றிலும் தவறானது என்று ரஞ்சனாவிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் பெத்ரோ துரை. ரஞ்சனா அழ ஆரம்பித்து அழுகையூடே சொன்னாள் – எப்படியோ, நான் சேவை சாதிக்க வேண்டும் என்றால், அப்படி இருந்தால் தான் மகாராணிக்கு ஆபத்து ஏதும் இருந்தால் நீங்கும், என்னுடைய உடல் உங்களுக்கு கிட்டினால் தான் இந்த ஜெரஸூப்பா நிலப் பிரதேசத்துக்கு வரும் இடர் தீருமென்றால், என்னை எடுத்துக் கொள்ளுங்கள். என் வீட்டுக்காரர் என்னைப் போல் தான் இந்த விஷயமாக ஒரே சிந்தனை கொண்டவர், அவரும் புரிந்து கொள்வார். எங்கே நான் கட்டில்..
அவள் குரலெடுத்து அழத் தொடங்கும் முன் நான் அவசரமாக அடி எடுத்து வைத்து அவர்களுக்கு முன் நின்றேன். பெத்ரோ துரை எழுந்து நின்று கை கூப்பி கை குலுக்கி போர்த்துகீஸ் மொழியில் சொன்னார் –
மதிப்புக்குரிய ராஜகுமாரரை நடு இரவு சம்பிரதாயமான மரியாதைகள் ஏதுமின்றி வரவேற்கிறேன். உங்களுக்கும் இளைய ராணி ரஞ்சனாதேவியவர்களுக்கும் என் பணிவும் பரிவும் கலந்த வரவேற்பு உரித்தாகிறது.
நிறுத்தி மேஜையில் மடித்து வைக்கப்பட்டிருந்த சிவப்புத் துணியால் முகத்தில் பூத்த வியர்வையை ஒற்றி எடுத்தபடி சிரிக்கிறார்.
நடுராத்திரியில் சிரித்தபடி நிற்கும் ஐரோப்பியரை நான் இதுவரை பார்த்ததில்லை. என்னைப் பார்த்ததும் என் அருகே வந்த ரஞ்சனா, துரை பேசி முடிக்கும் வரை பொறுத்து என் கையை அவள் கரங்களோடு பிணைத்தபடி நின்றாள்.
நீங்கள் சொன்னது தான். முகம் கழுவி பெத்ரோ துரையை சந்திக்க வேண்டாம் என்று குளித்து விட்டே புத்துணர்ச்சியோடு புறப்பட்டு வந்தேன். என் உயிர் எங்கும் போகட்டும். இந்த உடலை நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள். துரையிடம் அவர் பாஷையில் சொல்ல வேண்டாம். அவர் புரிந்து கொள்வார் என்றாள்.
நான் தர்மசங்கடப்பட்டுப் போனேன். என்னை மன்னிக்கச் சொன்னேன். போதை அதிகமாகி என்ன பேசினேன் என்று நினைவு இல்லை. அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுக்காதே என்று அவள் பாதம் தொட்டு வணங்கினேன்.
விதிர்விதித்து என்னை அவள் எழுப்பி கைகூப்பி நிற்க, பெத்ரோ துரை துல்லியமாகச் சொன்னார் – ஆக நான் இதில் எங்குமே வரவில்லை. நீங்கள் கணவர் மனைவிக்கு நடுவே உள்ள அந்தரங்கத்தை நான் மதிக்கிறேன். சற்று அமர்ந்து போங்கள். கஸாண்ட்ரா பழச்சாறு எடுத்து வா என்று உபசரித்தார்.
வேண்டாம் இன்னொரு நாள் வருவோம் நன்றி என்று நான் சொல்லி அவரை வணங்கி நல்லிரவு வாழ்த்து சொல்லி ரஞ்சனாவோடு வெளியே வந்தேன்.
அவள் வந்த சாரட் புறப்படத் தயாராக இருந்தது. நான் இனிப்பு அங்காடி மாடியைப் பார்த்தேன். இருட்டில் துயின்று கொண்டிருந்தது அது.
ரஞ்சனாவின் கரங்களைப் பற்றியபடி எங்கள் சாரட்டில் ஏறினேன். ரஞ்சனாவை அணைத்தபடி அமர்ந்திருக்க, கஸாண்ட்ரா ஜன்னல் வழியே பார்த்து பாதுகாப்பாகப் போய் வாருங்கள் நல்லிரவு என்று வாழ்த்தி நடந்தாள்.
பெத்ரோ மாளிகைக் கதவுகள் அடைபட்டுக் கொண்டிருக்க, மெழுகு வர்த்திகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டு இருள் மெல்லக் கவிந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
