மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை

சின்ன முள், பெரிய முள், வினாடி முள், மணி நேரத்துக்கான அரேபிய எண்கள், மணி பார்ப்பது என்ற இரண்டே நிமிடத்தில் கற்றுக்கொண்டாள் அரசி. சங்கிலிக் கடியாரத்தை முள் முன்னே பின்னே போக வைத்து நேரம் என்ன என்று சொல்ல இன்னும் இரண்டு நிமிடம் பயிற்சியும் ஆனது.
மகாராணியிடம் கிராம்பும் ஏலமும் பச்சைக் கற்பூரமும் கலந்த வாசனையும் அதை மீறி மெல்லிய வெங்காய வாசனையும் அடித்தது கவனிக்க பெத்ரோவுக்கு ஆசுவாசமாக இருந்தது. மிளகை கொடுத்துவிட்டு சபோலா, என்றால் வெங்காயம், மற்றும் மிளகாயை இங்கே கொண்டு வர எல்லோரும் ஆர்வம் காட்டுகிறதாக அவருக்குத் தோன்றுவது சரிதான் என்று இப்போது புலப்பட்டது.