இவர்கள் இல்லையேல் – ராம்லால்

(டோக்ரி மொழி நாவலின் தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

அத்தியாயம் 2

ஜம்முவில், என் பெரிய அத்தையின் திருமணம், சரித்திரப் புகழ் வாய்ந்த, அந்த காலத்து அரசின் பிரதான மந்திரி பதவி வகித்த, ஜல்லா பண்டித்தின் கொள்ளுப்பேரனோடு நடந்தது. அத்தையின் வீடு, எங்கள் வீட்டுக்கு மிகவும் அருகில் தான் இருந்தது. அவருடைய பேத்திகள், நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே, என்னை அவர்கள் வீட்டிலிருந்து போகவே விடமாட்டார்கள். நான் அங்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருப்பேன். அவர்களுடைய வீட்டில் ராம் லால் என்ற பெயருடைய  வேலைக்காரர்  ஒருவர் இருந்தார்.வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்வதோடல்லாமல், வெளி வேலைகளையும் அவர் தான் கவனித்து வந்தார்.

கடைத் தெருவில்,  கடை போட்டிருக்கும் தொழில் முறை  தையற்காரரே ஆச்சரியப்படும் அளவுக்கு, ராம்லால் தையல் மிஷினில் மிக அழகாக துணிகளைத் தைப்பார். .  ராம் லால், மெஷினில் துணியைத் தைக்கும் போது, நான் அதன் கைப்பிடியை சுழற்றுவேன். இன்றும், நான் மிஷினில் ஏதாவது தைக்கும் போது, ராம்லாலைப் போலவே, மெஷினை விருட்டென்று ஒரே நொடியில் ஓட்டி விடுவேன. தையல்  மெஷினை  ஓட்டும் போதெல்லாம், எனக்கு ராம் லால் கட்டாயம் நினைவுக்கு வருவார்.

 ஒருமுறை, டைஃபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டதில், என் முடி முழுவதும் கொட்டி விட்டது. அத்தையின் மூத்த மகனான பண்டித் மகேந்திரநாத் சர்மா, எனக்கு ‘கௌரய்யா’ என பெயர் வைத்து, அப்படியே அழைக்கவும் தொடங்கினார். டோக்ரி மொழியில்  கடரி. இதன் பொருள் குப்பை என்பதாகும். (நம் பக்கங்களில் யாரேனும் சாகப்போகிற மாதிரி நோய்வாய்ப்பட்டு பிழைத்தாலோ அல்லது அடுத்தடுத்து குழந்தைகள் இறந்து பிறக்கும்போது, உயிரோடு பிறக்கும் குழந்தைக்கு குப்பன்/ குப்பம்மா அல்லது பிச்சை என்று பெயர் வைப்பது போல தான்.) எல்லோரும் என்னை கடரிஎன்றே அழைக்க ஆரம்பித்தனர். அந்த ராம்லால் கூட என்னை கடரி என்றுதான் அழைத்தார்.. ஒருநாள், அவர் என்னிடம் வந்து, மெதுவான குரலில், “பெண்ணே, எனக்கு ஒரு தபால் அட்டை எழுதித் தருவாயா?” என்று கேட்டார். அவர்  என்னை கடரி என்று அழைக்காமல், பெண்ணே என்று அழைத்ததிலேயே எனக்கு உச்சி குளிர்ந்து விட்டது. நான் அவருக்கு தபால் அட்டை எழுதித் தந்தேன். ராம்லால், “நான் கிராமத்துக்கு வருகிறேன். ஐந்தாறு நாட்கள் இருப்பேன்,”  என்று எழுதச் சொன்னார். பிறகு , அவர் தன் கிராமத்துக்குச் சென்று விட்டார். அங்கிருந்து திரும்பியதுமே, “எங்கே கடரி?”  என்று கேட்டுக்கொண்டே  நேராக என் வீட்டிற்கு வந்தார். அச்சமயம் நான் என் அம்மாவோடு இருந்தேன். என்னவென்று கேட்பதற்காக நான் வெளியே வந்ததும், அவர், , “கடரி, , நீ தபால் அட்டையில் என்ன எழுதினாய்?”  என அதட்டினார்..  நான் வாயடைத்துப்போய்  நின்றேன். ஒருவாறு சமாளித்துக்கொண்டு, நீங்கள் என்ன எழுதச் சொன்னீர்களோ அதைத் தான் எழுதினேன்.  நான் அதிகப்படியாக வேறு என்ன எழுதிவிட முடியும்?” என்று பதில் அளித்தேன். எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தன் சோகக் கதையை, ராம்லால் ஏற்கனவே எல்லோரிடமும் சொல்லிவிட்டிருந்தார்..  தன் சட்டைப்பையில் இருந்த  தபால்  அட்டையை  எடுத்து, “இந்த அட்டையைப் படியுங்கள். இந்த கடரி  என் விடுமுறை நாட்களை நாசம் செய்து விட்டாள். ஊருக்குப் போனதில், பெயர் கெட்டுப்போய் திரும்பியதுதான் தான் மிச்சம். கேளுங்கள், தபால் அட்டையில் என்ன எழுதினாள்என்று அவளிடமேகேளுங்கள் ” என்று கோபத்துடன் கூறினார்.

“நான் என் கிராமத்திற்கு போகும் போதெல்லாம், பேருந்து நிறுத்தத்திலேயே பலர் எனக்காக காத்திருந்து என்னோடு வீடு வரை வருவார்கள்.  இந்த முறை என்னோடு ஒருவரும் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. யாரைப் பார்த்தாலும் முகத்தை திருப்பிக்கொண்டு, கண்டும் காணாதது போல நகர்ந்து விட்டார்கள். நான் வீடு போய்ச் சேர்ந்ததுமே , என் தந்தை முகத்தை திருப்பிக் கொண்டு வராந்தாவுக்குச்சென்று, அங்கிருந்த  ஹூக்காவின் குழாயை வாயில் சொருகிக் கொண்டு அமர்ந்துவிட்டார். அம்மா, என்னை பார்த்ததுமே, தொண்டை கிழிய அழ ஆரம்பித்து விட்டாள். யாரும் என்னை ஒரு மரியாதைக்கு உட்காரக்கூடச் சொல்லவில்லை. நானும் பிடிவாதமாய் கட்டிலில் சென்று அமர்ந்தேன் .வீட்டில் நடக்கக் கூடாதது ஏதாகிலும் நடந்துவிட்டதோ, யாரேனும் செத்து கித்து தொலைத்து விட்டார்களோ  என்றெல்லாம் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தேன். யோசித்துப் பார்த்ததில், வீட்டில் வயதானவர்களோ, நோயாளியோ எவரும் இல்லை என்று தெரிந்தது. நான் அம்மாவிடம் , கோபமாக, “யாரேனும் இறந்து விட்டார்களா என்ன? விஷயம் என்னவென்று சொன்னால் தானே தெரியும்?” என்று சத்தமிட்டேன்.  அம்மா அழுதவாறே, “வேறு யார் சாகணும்?  இந்த மாதிரி ஒரு பிள்ளையைப்  பெற்றதற்கு நான்தான் சாகணும். கடவுளே என்னை ஏன் இன்னும் உயிரோடு  விட்டு வைத்திருக்கிறாய்? என்னை எடுத்துச் செல்வது தானே?”

என்றெல்லாம்  புலம்பினாள். “என்ன நடந்தது என்று தெளிவாக ஏன் சொல்ல மாட்டேன் என்கிறாய்” எனக் கேட்டேன்.  அம்மா, துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த தபால் அட்டையை கொண்டு வந்து என் முன் நீட்டினாள்.  “இந்த அட்டையைப்  பார்.  நீ என்ன எழுதி இருக்கிறாய் என்று பார்,” என முகம் சுளித்தபடி கூறினாள்.

என் பிரியமான லாடிஜி! (என் பிரியமான மனைவியே)

பிறகு அம்மா தலையில் அடித்துக் கொண்டு, “அவ்வளவு பிரியம் என்றால் கூடவே கூட்டிக் கொண்டு போயிருக்க வேண்டியதுதானே? வீட்டுவேலைகளை என்னால் தனி ஒருத்தியாகவே செய்து கொள்ள முடியும். இம்மாதிரியான  நாடகம் எதுவும் எனக்குத் தேவையில்லை.  மிகச் சுலபமாக எங்கள் இருவரின் வாழ்க்கைப் பாட்டை, என்னால் தனியாகவே கவனித்துக் கொள்ள போதுமான சக்தி,  என் வயோதிக எலும்புகளில்  இன்னமும் மிச்சம் இருக்கிறது” என்றாள். அதே சமயம், உள்ளே நுழைந்த தந்தை, எரிகிற கொள்ளியில், தன் பங்குக்கு, இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றினார். “ராம் வாலின் அம்மா,  இந்த மாதிரி  ஒரு கேடுகெட்ட மகனைப் பெற்றெடுத்திருக்கிறாயே, நான் என்ன சொல்ல? என் முன்னோர்கள் எவரும் பகலில் மனைவியின் முகத்தை கூட பார்த்ததில்லை. மனைவியிடம் பேசுவது என்பதெல்லாம் கற்பனையில் கூட யோசித்துப் பார்க்க முடியாத விஷயம்.  இந்த மகாராஜாவைப் பார்.  மனைவிக்கு கடிதம் எழுதுகிறாராம் – என் பிரியமான மனைவியே – வெட்கங்கெட்டவன். கிராமம் முழுவதும் வெளியில் தலை காட்ட முடியாமல்  பெயர் கெட்டு போனது தான் மிச்சம்,” என்றார்.

“நீங்களே சொல்லுங்கள், நான் வேறென்ன செய்திருக்க முடியும்? கையில்  தபால் அட்டையை பிடித்துக் கொண்டு, வெட்கங்கெட்டவனைப் போல உட்கார்ந்திருந்தேன். மனதிற்குள்ளேயே இந்த குட்டிப் பிசாசை  வாய்க்கு வந்த வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்தேன்.”

எவருமே நான் சொல்வதை கேட்கத் தயாராக இல்லை. எல்லோரும் சிரிப்பதைப் பார்த்த ராம்லால், எரிச்சலுடன் “உங்களுக்கெல்லாம் சிரிப்பாக இருக்கிறது. ஆனால், எனக்கு என் நிலைமையை நினைத்து அழத்தான் தோன்றியது. இங்கு  நான் இந்த கடரிக்குத்  தையல் மெஷினில் துணி தைக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  இவள் என்னடாவென்றால், அங்கு என் மானத்தை கப்பல் ஏற்றி விட்டாள். இவள் எழுதிய கடிதம் இவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்று யார் கண்டது?  என் மனைவி என்னுடன் பேசக் கூட தயாராக இல்லை.  கண் விழித்ததிலிருந்து  இரவுவரை அதிகம் ஏச்சும் பேச்சும் அவளுக்குத் தான் கிடைத்தது.  என் பிரியமான மனைவி!!  இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதென்பது எத்தனை  பரிதாபகரமான விஷயம்! பாவம் என் மனைவி! அழுதுகொண்டே இருந்தாள். எப்படியோ ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி விட்டேன். ஆனால் இனி ஒருபோதும் இந்த கடரியை விட்டு கடிதம் எழுத சொல்லக்கூடாது என்று சபதமே செய்து கொண்டு விட்டேன். இனிமேல் இந்த குட்டிப் பிசாசின்  எந்தத் துணியையும் நான் தைத்துத் தர மாட்டேன். அது மட்டுமல்ல, என்  தையல் மெஷின் மீது  இவள் கை வைக்கக் கூட அனுமதிக்க மாட்டேன். அங்கு கடைத்தெருவில் எல்லோரும் என்னை தங்கள் மனம் நிறையும் அளவுக்கு கேலி செய்தார்கள். தப்பித்தேன் பிழைத்தேன் என்று நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.”

என் அத்தையின் வீட்டில் ராம்லாலை எல்லோரும் கிண்டல் செய்ததோடல்லாமல் அடிக்கடி அவரை சீண்டவும் செய்தார்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் ராம் லாலுக்கு புரிந்துவிட்டது.  அத்தை வீட்டு நாயை நடை பயிற்சிக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது சொல்லிக் கொள்வார்  –  ” நான் ஒரு வடிகட்டின முட்டாள்.  இந்த  பரம்பரையே   யானையால் மிதிக்கப்பட்டு, மூளை கலங்கிப் போன குடும்பம் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.” ராம்லாலின் சம்பளம் வெறும் ஏழு ரூபாய் தான்.  ஆனால் முழு வீட்டின் மீதும் அவரது கோலே ஓங்கி நின்றது.

Series Navigation<< இவர்கள் இல்லையேல்இவர்கள் இல்லையேல் – 3-4 >>

One Reply to “இவர்கள் இல்லையேல் – ராம்லால்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.