மிளகு – அத்தியாயம் 86

2000 அம்பலப்புழை

சித்திரம் : அருண்

கேட்டு விடலாம். அப்படித்தான் நினைத்தார் திலீப் ராவ்ஜி.

 வாசல் படியில் தான் அப்பா உட்கார்ந்திருக்கிறார். அவர் பக்கம் நடந்து போக ஐந்து வினாடி ஆகலாம். அவ்வளவுதான். 

ஆனால் கேட்க ஆரம்பித்து முடிக்க முடியாமல் போகலாம். 

என்னவென்று கேட்க? 

அப்பா நீங்கள் அப்பா தானா? எந்த பிரபஞ்சத்தில் இருந்து வந்தீர்கள்? எந்தப் பிரபஞ்சத்தில் எந்த நட்சத்திரத் தொகுதியில் எந்த நட்சத்திர மண்டலத்தில் இடம் பெற்ற எந்த கிரகத்திலிருந்து எந்தக் காலவெளியில் இருந்து வந்தீர்கள் என்று கேட்கலாமா? அவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்குமா?

 தெரிந்திருந்தால் சொல்வார் என்று என்ன நிச்சயம்? அவர் ஷாலினி மோரேயோடு கூடி திலீப் ராவ்ஜியைப் பிறப்பித்த பரமன் இல்லையென்றால் யாராயிருப்பார்? எந்த ஷாலினி மோரே?  

காப்பி குடிச்சேளா அப்பா? 

அவர் இதற்கு மேல் தயக்கம் நீட்சி பெறாமல் கேள்வியைக் கேட்டுவிட்டார். 

ஆச்சுப்பா, ஹோட்டல்லே இருந்து தெர்மோஸ்லே கொடுத்து அனுப்பியிருந்தாங்க. ஆமா, நான் தான் ஃபோன் பண்ணினேன். 

எனக்கு எடுத்து வைச்சேளா? திலீப் ராவ்ஜி கேட்டபடி சுற்றுமுற்றும் பார்க்க பக்கத்தில் ஏகப்பட்ட கோப்பை காப்பியை சூடாக எடுத்துப் போய் வழங்க ஹோட்டல் கேடரிங் யூனிட் உபயோகப்படுத்தும் ஜயண்ட் சைஸ் ப்ளாஸ்க் தென்பட்டது. 

தேங்க்ஸ் அப்பா என்றபடி உள்ளே போய் பெரிய பித்தளைத் தம்ளரை எடுத்து வந்தார் திலீப் ராவ்ஜி. ஆவி பறக்க அந்தக் குவளை துளும்பி வழிய காப்பியை நிறைத்துக்கொண்டார். 

வாசல் படியில் பரமன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகே அமர்ந்து பராக்கு பார்த்தபடி காப்பி குடிக்க ஆரம்பித்தார் திலீப் ராவ்ஜி. 

அப்பாவிடம் கேட்க அவருக்கு இன்னும் வேறே விஷயம் உண்டு. அப்பா வேறே பிரபஞ்சத்து அப்பாவாக இருந்தாலும் அங்கே ஒரு திலீப் அவர் மகனாக இருக்கும் பட்சத்தில் அப்பா மகன் உறவு சிறப்பாகவே இருக்கும் என்று தோன்றியது. 

அந்தப் பிரபஞ்சத்தில் திலீப் அப்பாவாகவும் பரமன் மகனாகவும் இருக்கக் கூடும். அல்லது அந்த திலீப் விமானத்தில் பயணம் செய்து விமானம் கடத்தப்பட மாட்டிக் கொள்வார். அந்த பிரபஞ்சத்து தெரிசாவை காமம் கனக்கக் காதல் சொல்லி அவளோடு இன்பம் துய்ப்பார். 

வேண்டாம், உடல் ஒரு உருப்படாத வடிவம். அந்த தெரசாவை இந்த தெரிசாவாகக் காட்டுகிறது அது வீங்கி விதிர்த்து. புனைந்த நினைவுகளை அழிக்க எழுந்து நின்றார். 

அவர் அப்பா மீது கொண்ட தன் அன்பை ஒரு பெரிய இனிய அனுபவமும் அனுபவ வெளிப்பாடுமான ஆனந்தமாகக் கற்பனை செய்தார் – 

எலுமிச்சை ரசம் சேர்த்த நன்னாரி சர்பத், ரம் சேர்த்து வேகவைத்த ப்ளம் கேக்,  கஸெட்டா ஐஸ்க்ரீம் பெரிய பந்தும் கூடவே சுடச்சுட கேரட் அல்வாவும் என்று சாப்பிடும் இனிப்புப் பொருளாகவே அந்த அன்பை உருவகிக்க முடிகிறது என்பதில் சின்ன வயதில் படித்த வள்ளலார் திருவருட்பா நினைவு வந்தது –

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி

அதை ராகத்தோடு பாடத் தோன்றியது. டில்லி சின்னச்சங்கரன் போன விமானத்தைத் தீவிரவாதிகள் ஹைஜாக் செய்தபோது பிணையக் கைதியாக இருந்து அப்புறம் உயிர் பிழைத்து வந்த பிறகு சித்தம் கலங்கிய நிலையில் சுவரமும் தாளமும் தவறப் பாடிக் கொண்டே இருப்பாரே அவருடைய அனுபவத்தை நினைவுபடுத்தும் இந்தப் பாட்டுப் பாடும் இச்சை. 

அப்பா தலையில் துண்டு ஒன்றை முண்டாசு மாதிரிக் கட்டியிருந்தார். தெப்பக்குளப் பாசி வாடையும், தெரு ஓரத்தில் கழிவுநீரை அசுத்தம் பிரித்துக் கொட்டும் பம்ப் வேலை செய்வதால் ஏற்படும் அடர்த்தியான கழிவுநீர் வாடையுமாக காற்றில் மணம் பரவியிருந்தது.

 கூடவே ஒரு சின்னக் குளிர்காற்று அதையெல்லாம் அழித்துப் போட்டு மெல்லென வீசியது. குளிர்காலம் பிறந்து விட்டதென்று ஊர் முழுக்க வயோதிகர்கள் மப்ளரும் கையில் கையுறைகளுமாக வலம் வர இன்னும் நாட்கள் மீதியுண்டு. 

அப்பா இந்தச் சின்னக் குளிர் பொறுக்காமல் முண்டாசு கட்டினார் போல. திலீப் ராவ்ஜி அவரைச் சமாதானமாகக் கேட்டார். அப்பா கொஞ்சம் அசட்டுத்தனமாகச் சிரித்தபடி முண்டாசை அவிழ்த்தார்.

ஷேவ் பண்ணிண்டேன். அது வரைக்கும் சரிதான். காது மேல் பிரிமணை மாதிரி வெள்ளைமுடி மண்டிக் கிடக்கே அதைக் களைஞ்சா என்னன்னு தோணினது. ஷேவிங் சோப்பைத் தடவி வழிச்சா கை வழுக்கி காதுமடல்லே உரசி ரத்தம் கோரம். 

நாளைக்கு வரப்போகிற பரமன் – பிரதி, இன்னும் இரண்டு நாள் வரக் கூடிய பரமன் – பிரதிகளுடைய பொது நினைப்பிலும் ஞாபகத்திலும் இதைப் பதிவு செய்திருக்க வேண்டும். யார் இதை சிரத்தை எடுத்துச் செய்கிறார்களோ அவர்களுக்கும் கூடுதல் வேலை. 

ப்ளாஸ்டர் ஸ்பாட் இருக்கு தரட்டா என்று திலீப் ராவ்ஜி அப்பாவைக் கேட்க அவர் அது என்ன சமாசாரம் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். 

திலீப் காப்பி கோப்பையைப் படியில் வைத்துவிட்டு எழுந்து நின்றார். வேட்டியைத் திரைத்துக் கொண்டு வலது தொடையில் விரல் சுண்டிக்காட்ட அங்கே ஒரு ரூபாய் நாணயம் போல், வட்ட வடிவ பிளாஸ்டரைக் கண்டு புரிந்தது என்று தலையாட்டினார் பரமன். 

கலகலவென்று சிரித்தபடி இளம்பெண்களின் கூட்டம் ஒன்று தெப்பக்குளத்தில் குளித்து அம்பலம் தொழப் போனது. ’தாத்தா ஷேம் ஷேம்’ என்று அதில் ஒருத்தி சொல்ல இதமான குளிராக அந்தச் சிரிப்பு அடுத்த அலை எழுந்து பரவியது. பொய்க் கோபத்தோடு முட்டி மடக்கிக் காட்டிவிட்டு திலீப் ராவ்ஜி அந்தப் பெண்களைப் பார்த்துச் சிரிக்க ஏண்டா அதுகளை பயமுறுத்தறே என்று பரமன் பலமாக நகைத்தார். 

இவர் திலீப்புக்கு பிறந்ததிலிருந்து பழக்கமான அப்பா தான். அப்போ எப்படி நூற்றுப் பதினொன்று வயது ஆகி இன்னும் உயிரோடு இருப்பார்? அவரே அவர் வயதை நூற்றுப் பதினொன்று என்று போன வாரம் ஒரு சின்ன கண்ணாடிக் கோப்பையில் வெள்ளை ஒயினை அணுஅணுவாக ரசித்தபடி திலீப்புக்கும் பிஷாரடிக்கும் விஸ்கி ஆன் தி ராக்ஸ் குடிக்க ஆதரவு கொடுத்தபடி கூறினார். 

அதுவும் பொது நினைவில் இருந்து வந்ததாக இருக்கக் கூடும். சரி சிரித்துக் கொண்டிருக்கும்போதே தொடங்கி விடலாம். 

அப்பா. 

என்ன திலீபா? 

இந்த வாரக் கடைசியிலே கர்னாடகம் போய்ட்டு வரலாம்னு கல்பா சொன்னா. லீவுக்கு நாளைக்கு வரப் போறா. 

பேஷா போய்ட்டு வரட்டுமே. நீ வேண்டாம்னு சொல்லிடாதே. அமெரிக்காவுக்கும் இங்க்லண்டுக்கும் எந்த ஆட்சேபமும் இல்லாமல் அனுப்பறபோது இங்கே இருக்கற கர்னாடகத்துக்கு அனுப்பிவைக்க மீனம் மேஷம் எல்லாம் ஏன் பார்க்கணும்? 

இல்லேப்பா நான் அவள் போறதைப் பத்தி ஒண்ணும் சொல்லலே. கல்பா, சாரதா தெரிசாம்மா மகன் மருது, சங்கரன் சார் மகள் பகவதி, இப்படி யூத் மூணு பேரும் பிஷாரடி வைத்யர் நடத்தற வரலாற்றுப் பயணமாக உத்தர கன்னடத்துலே ஹொன்னாவர், பழைய இடிபாடுகளோடு கெருஸொப்பா, உள்ளால், கோகர்ணம் இப்படி போய்ட்டு வர உத்தேசம். நானும் அவங்களோடு போறேன். 

பரமன் முகம் உடனடியாக வாடியதை திலீப் ராவ்ஜி கவனிக்கத் தவறவில்லை.

 நீயும் போறியா? நல்லது போய்ட்டு வா. உனக்கு எப்போதிருந்து ஹிஸ்டரியிலே ஈடுபாடு வந்தது? 

அதுக்கென்ன வயசு எல்லாம் அப்பா? திடீர்னு சில ஈடுபாடு வரும். வடக்கு கன்னட பிரதேசம், ஏன் கொங்கணிக் கடற்கரை முழுக்க எனக்கு ஈடுபாடு உள்ள பிரதேசமாயிடுச்சு. ஹொன்னாவர், கெருஸொப்பா. 

அங்கேல்லாம் சதா மழை பெய்யும். ரோடு சரியாக இருக்காது. 

அப்பா நீங்க போயிருக்கேளா? கனவிலே கெருஸப்பா வந்ததுன்னு சொல்லியிருக்கேளே.

சதுரங்கத்தில் செக் வைத்தமாதிரி எக்களிப்போடு கேட்டார் திலீப் ராவ்ஜி. 

போனாத்தானா, படிச்சிருக்கேனே. நீ தானே புத்தகம் வாங்கிக் கொடுத்தே.

அப்போ சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட் ஆக நீங்களும் வாங்களேன். நேர்லேயே பார்க்கலாம் எல்லா இடமும். பிஷாரடிக்கு எல்லாம் தெரிஞ்ச துணை ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும்னு பேசிட்டிருந்தோம். 

கிடுக்கிப்பிடியாகப் போட்டுவிட்டார் திலீப் ராவ்ஜி. 

எந்த பிரபஞ்சத்திலே, எந்த நட்சத்திரத் தொகுதியிலே எந்த நட்சத்திர மண்டலத்து கிரகத்துலே இருந்து வந்தீர் ஓய் பரமேஸ்வர ஐயரே. நீர் என் தகப்பனார்ங்கிறது நான் உங்க மகன்கறது எல்லாம் எந்தப் பிரதி யார்னு நிச்சயிக்க முடியாம போறதே. 

திலீப் ராவ்ஜிக்கு தான் யார் என்று ஒரு வினாடி தத்துவமும் ஆன்மிகமும் விரவிய சந்தேகம் வந்து சூழ்ந்தது. 

நான் எதுக்குடா, இந்தக் கட்டைக்காலை வச்சுண்டு எனக்கும் கஷ்டம் உங்களுக்கும் கஷ்டம். 

ஏம்ப்பா இந்தக் காலை வச்சுண்டு தானே தாங்கனீகாவும் கென்யாவும் போனேள். 

அது வேறே மாதிரி. அவ்வளவு சரியா நினைவு இல்லே. வயசாறதே.

ஓ அது உம்ம அனுபவம் இல்லே. வேறே யாரோ ஒரு பரமனுக்கு கிடைச்சது. அதை பொது நினைவுலே கிளறறீங்களா. செய்யும் என் தகப்பனாரே. 

பரமன் ஆழ்ந்த சிந்தனையில் அமிழ, திலீப் ராவ்ஜி சொன்னார் –

 பெரிய ஏர்கண்டிஷன் லக்‌ஷுரி வேன் கூடவே என் கார் எடுத்துண்டு வந்துடறேன். உங்களை கவனிச்சுக்க நாங்க எல்லோரும் இருக்கோம். 

இல்லேப்பா திலீப் அது வந்து காடு மலை எல்லாம் போகணும்னா..

ஒண்ணுக்கு ரெண்டுக்கு. மூணுக்கே போற காலம்னு பழைய ஜோக். 

அப்படியா? 

பின்னே இல்லியா, மனுஷன் நிலவிலே போய் இறங்கி நடந்தாச்சே, உங்களுக்குத் தெரியாதா என்ன? 

ஆமா ஆமா. 

அப்பா ஆமாம் போட்டுக் கொண்டிருந்தபோதே  குளிக்கக் கிளம்பி விட்டார் திலீப். சாயந்திரம் எடின்பரோவில் இருந்து கல்பா வந்து சேர்ந்தாள். 

தாத்தாவுக்கு நமஸ்காரம் என்று அழகாக தரையில் அவருக்கு முன்னால் குனிந்து வணங்கிட, பரமன், எந்தப் பரமனோ, மனதில் பாசமும் பிரியமும் ஆர்த்தெழ கண்ணீர் சுரந்த விழிகள் விழிப்படலம் நீரில் நனைந்து பார்வை திரிய மனதார வாழ்த்தினார், பரமன் – 

நன்னா இரு குழந்தே. ரொம்ப பிரமாதமாக இரு.

 தாத்தா, மில்க் சாக்லெட் எடுத்துக்குங்க. 

கல்பா சாக்லெட்டை எடுத்து நீட்ட பரமன் ஆசையோடு வாங்கிக் கொண்டார். 

நான் தான் என் பேத்திக்கு வாங்கித் தரணும். நான் உனக்கு ஒண்னும் வாங்கிண்டு வரல்லே. வயசுக்கு ஒண்ணா உன் குழந்தைப் பருவத்திலே இருந்து வாங்கித் தந்திருக்கணும்.

 தாத்தா அதுக்காக இப்போ எனக்கு ப்ளாஸ்டிக் பொம்மை வாங்கித் தரப் போறீங்களா? 

பரமனின் முன்வழுக்கைத் தலையில் முத்தமிட்டு குழந்தை பொம்மையைப் ப்ரியத்துடன் அணைத்துக் கொள்வது போல் அணைத்துக் கொண்டாள். 

கண்ணீர் வழிய பரமன் இருக்க, அதில் ஒரு அணு கூட செயற்கை இல்லை என்று பட திலீப் ராவ்ஜி ஆதரவாக பரமன் தோளில் தட்டி அன்பைச் சொன்னார்.  

அகல்யா இருந்து இதெல்லாம் பார்த்திருக்கணும். திலீப் ராவ்ஜி குரல் கமறச் சொன்னார். தாத்தா அம்மாவை பார்க்கக் கொடுத்து வைக்கலே அம்மாவுக்கு என்றபடி கல்பா பிரயாணப் பெட்டிகளை அறைக்கு உருட்டிப் போனாள். 

அப்பா இதுலே நீலப் பெட்டி நான் நம்ப டூருக்கு எல்லாம் எடுத்து வச்சது. அதை அப்படியே நாளை மறுநாள் எடுத்துப் போகணும். சிவப்புப் பெட்டி அன்றாடம் துணிமணி, இன்னும் கொஞ்சம் சாக்லெட், தாத்தாவுக்கும் உனக்கும் மஃப்ளர், ஸ்வெட்டர். நீயே திறந்து எடுத்துக்கோயேன். 

திலீப் ராவ்ஜியிடம் கூடுதல் பவ்யமாக சாவியை நீட்டிச் சிரித்தாள் கல்பா. இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பழைய பயணம் ஒன்று நினைவு வந்தது. 

அகல்யா எடுத்து வைத்த துணிகளோடு நீல ட்ரங்க் பெட்டியை எடுத்துக் கொண்டு ரயிலில் போகும்போது திலீப் ராவ்ஜி வேறே யார் பெட்டியையோ எடுத்துக் கொண்டு இறங்கி விட்டார்.

ஆலப்புழையில் ஏறியபோது நீலமாக, புதியதாக அவர் பெட்டி நினைவில் இருந்தாலும், மதறாஸில் இறங்கியபோது நினைவுக் குறைபாட்டாலோ என்னமோ கொஞ்சம் சின்ன நீலப் பெட்டி பழையதாக அவருக்குத் தட்டுப்பட்டது. 

அதற்கு முக்கியக் காரணம் அகல்யாவின் பெட்டியை மதறாஸ் வரும் முன்னரே அரக்கோணத்திலோ ஆவடியிலோ யாரோ தூக்கிக்கொண்டு போயிருந்தார்கள். 

அவர்கள் விட்டுப்போன பழைய பெட்டியை பத்திரமாக வைத்திருந்தாள் அகல்யா. ரயில்வேயில் புகார் கொடுத்துக்கூட கிணற்றுக்குள் கல்லாக அந்தப் புகார் விசாரிக்கப்பட முடியாமல் ஏறக்கட்டி வைக்கப்பட்டது. 

எட்டு வருஷம் கழித்து அந்தப் பழைய நீலப்பெட்டியை சாவி செய்து திறந்து பார்த்தபோது உள்ளே நாலு செட் பெண் குழந்தை உடைகளும், கீ கொடுத்தால் ஓடும், இயங்கும் சிங்கப்பூர் பொம்மைகளும் இருந்தன. 

கல்பா அப்போது ஹையர் செகண்டரி பள்ளி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். பொம்மைகளையும், உடையையும் தவற விட்ட அந்தப் பெண்குழந்தையும் கல்பா வயதுதான் இருப்பாளாக இருக்கும். 

அகல்யா தவறவிட்ட நீலப் பெட்டி அந்தப் பெண் குழந்தை கைக்குக் கிட்டியிருந்தால், கொஞ்சம் ஆடம்பரமான ஜரிகை வைத்த பட்டுப் பாவாடை இரண்டு, அகல்யாவின் பச்சையில் கிளி கொஞ்சும் பட்டுப் புடவை, திலீப் கல்யாணம் காட்சிக்கு மட்டும் அணிந்து போகும் ஜரிகை வேஷ்டி என்று ஒரு பொதி அந்தப் பெட்டிக்குள் இருந்தது. கூடவே ஐநூறு ரூபாய் பணமும் பெரிசு பெரிசாக அந்தக் கால பத்து ரூபாய் நோட்டுகளாக ட்வைன் நூலால் கட்டியது. 

அந்தக் குழந்தைக்கும் அவள் பெற்றோருக்கும் பெரிய நிதி கிட்டியமாதிரி இருந்திருக்கும் என்றாள் அகல்யா ஆறவே மாட்டாமல். 

அது எல்லாம் ஹைபோதெடிகல் பேச்சு தான். அவங்க தான் உன் பெட்டியோட போயிருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?  உனக்கு என்ன பணமும் புடைவையும் தானே வேணும்? மெட்றாஸிலே வாங்கித் தரேன்.

 வாங்கியும் கொடுத்தார் திலீப் ராவ்ஜி தன் பிரிய மனைவிக்கு.  

தவறுதலாக எடுத்துப் போன பெட்டிக்கு மாற்றாக அதையும் தவறுதலாக எடுத்து வந்த பெட்டி இன்னும் வீட்டின் பரணில் பத்திரமாக உள்ளது. 

திலீப் ராவ்ஜி தன் அப்பாவிடம் சொன்னபோது அப்பா வேறே பிரபஞ்சத்து மனுஷர் என்றால் நிச்சயம் அறிவு அதிகமான அந்த பிரபஞ்சத்துத் தகவலைத் துருவிப் பெட்டியைக் கண்டுபிடிப்பார் என்று தோன்ற அவரையே பார்த்தபடி ஒரு வினாடி நின்றார். 

அவர் நினைப்பின் அபத்தம் புலப்பட அப்பா நீங்க ப்ரேக்பாஸ்ட் சாப்ட்டு குளிதானே என்று அப்பா ஏதும் சொல்வதற்குள் அவரை டைனிங்க் டேபிளில் அமர்த்தினார். 

அப்பா யாரோடும் பேசவில்லை. கண்கள் மூடியிருக்க, உடல் விறைத்திருக்க கட்டையைக் கிடத்தியதுபோல் அமர்ந்திருந்தார். கைகள் நடுநடுங்கிக் கொண்டிருந்தன. இடது கால் தடதடவென்று ஆட, பின்னமான வலது கால் இருந்தவரை அதிர்ந்து மற்றக் காலுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தது.

 மஞ்சுநாத், நீலப் பெட்டி 

இப்படி சரியாகப் பாடப்படாத பாடல் போல் கிரீச்சிட்டும், கனத்தும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. அவர் உதடுகள். ஓயாமல்.

 அவர் கண் திறந்து பார்த்துச் சொன்னார் –

நானும் உத்தர கன்னட பிரதேச டூருக்கு வர்றேன்.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு – அத்தியாயம் 85 மிளகு – அத்தியாயம் 87

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.