மிளகு  அத்தியாயம் எழுபத்தொன்பது

1606 மிர்ஜான் கோட்டை

விடியற்காலையில் ஜெருஸூப்பாவின் சென்னபைராதேவி மிளகு ராணியின் படை எதிரணியான நேமிநாதனின் படைகளிடம் தோல்வி அடைந்ததை அறிவித்தது. 

மிர்ஜான் கோட்டை உள்ளே இருந்து வெள்ளைக் குதிரை மேல் வெள்ளைக்கொடி பிடித்து மூன்று அரசு தரப்பு படையினர் எதிரணியின் தாவளத்துக்குப் போனபோது அந்த அணியின் வீரர்கள் ஒரே குரலில் ஜெய்ஹோ என்று முழங்கினார்கள். 

போர் முடிந்தது என்று தோல்வியை சென்னபைரதேவி ஏற்றுக்கொண்ட கடிதம் நேமிநாதனுக்கும், அந்தப் போர் நிறுத்தத்தை அங்கீகரித்ததாக நேமிநாதன் சம்மதித்ததை அவனுடைய பதில் லிகிதம் சென்னா ராணிக்கும் அளிக்கப்பட்டன. 

மிர்ஜான் உள்ளே அரசு அணியினர் தோல்வியால் முகம் கருத்து அவமானம் முகத்தில் அட்டையாக ஒட்டியிருக்க விதிர்விதிர்த்து கோட்டை மதிலை ஒட்டி வரிசையேதும் இல்லாது நின்றனர். 

கோட்டை அரச மாளிகைக் கதவுகளும், சாளரங்களும் உள்ளே இருந்து சாத்தப்பட்டிருந்தன. மணி சொல்லும் முரசறைதலும் இல்லை. 

கோட்டைக்கு வெளியே எதிரணி கூடாரங்களில் காவல் மிகுந்த ஒன்றில் கேலடி பேரரசர் வெங்கடபதி நாயக்கரும், பில்கி அரசர் திம்மராஜுவும், நேமிநாதனும் ஆலோசனையில் மூழ்கி இருந்தனர். 

நேமிநாதனுக்கு சுருக்கமாக வாழ்த்து சொன்னார் கேலடி அரசர் வெங்கடபதி நாயக்கர். உப்புசம் பாரித்த வயிறு இன்னும் சரியாகவில்லையோ என்னமோ, பில்கி அரசர் திம்மராஜு முகத்தில் வேதனை தெரிய அமர்ந்திருந்தார்.

 மாமா, உங்க படை கடைசி ஈடு இருநூறு பேர் முந்தாநாளே கிளம்பிட்டாங்கன்னு சொன்னீங்களே. அவங்களுக்கு இன்னும் வேலை இருக்கா என்று நேமிநாதன் சிரித்தபடி கேலடி அரசரைக் கேட்டான். 

அவங்க வந்தாச்சு என்றார் நாயக்கர் அமர்த்தலாக. 

நேரே கோட்டைக்குள்ளே போய்ட்டாங்களா மாமனாரே என்று பில்கி அரசர் வினவினார். 

உன் கொட்டைக்குள்ளே போயிட்டாங்க. நம்ம கண்ணுலே படாம எப்படி மாப்ளே கோட்டைக்குள்ளே போக முடியும் என்றார் வெங்கடபதி நாயக்கர். அவங்க வந்து சேர்ந்தது ஜெருஸூப்பாவிலே. நான் கடைசி நிமிஷத்துலே போர்த் தந்திரத்தை கொஞ்சம் மாற்றி விட்டிருக்கேன். 

பூடகமாக சிரித்தபடி நேமிநாதனை உற்று நோக்கினார் அவர்.

 நேமிநாதனுக்கு அவர் தன்னிச்சையாக படை நடமாட்டத்தை மாற்றியது தவறு என்று பலமாகத் தோன்றியது. அவர்கள் கேலடி படையினர் தான். ஆனால் இந்த யுத்தத்தில் பங்கெடுக்கும்போது ஒரே பெயர் தான். நேமநாதன் அணி. அப்படி இருக்க அவனுக்கு தெரியாமல் எப்படி ஜெருஸுப்பா போவது? 

என் தந்திரம் ரொம்ப சிக்கலானது எல்லாம் இல்லே. நீ சின்னப் பையன். மிட்டாய் தின்பே. மிட்டாய்க்காரி  பிருஷ்டத்தை தடவுவே. இதைத் தவிர போரும், ஓய்வும், போர்க்கால நடவடிக்கையும் நான் வழி நடத்தறேன். பார்த்து கத்துக்கோ. 

அவர் மெல்லிய குரலில் அழுத்தமாகச் சொல்ல நேமிநாதன் முகத்தில் சிரிப்பு உறைந்தது. 

மாமா இது நல்லா இல்லே சொல்றேன். உங்க சொல் கேட்டு எதுவும் தவறாமே ஜெயிச்சு வந்திருக்கேன். இனிமே என் ஆட்சியை என்னை செய்ய விடுங்க. உங்க ஆட்சியை நீங்க பண்ணுங்க. படை நடத்தி வந்ததுக்கு நன்றி.  

அட அப்படி நன்றி சொல்லிட்டு குண்டியிலே மண்ணைத் தட்டி விட்டுக்கிட்டு போயிடறதுக்கா நீ கூப்பிட்டதும் ஏதோ சின்னப் பையன் கூப்பிடறான்னு உதாசீனப்படுத்தாம வந்தேன். சொல்லு. 

நாயக்கர் கேட்டபடி உட்கார்ந்திருந்தார். 

அது என்ன மாமனாரே, அஞ்சு நிமிஷத்துலே  ரெண்டு பிருஷ்டம் வந்துடுச்சு. ஒண்ணும் விசேஷமில்லையே என்று கேட்டபடி பில்கி திம்மராஜு கேட்டபடி வயிற்றைத் தடவியபடி எழுந்து கூடாரத்தின் நடுவில் நாட்டியிருந்த தாங்குகம்பமான மூங்கில் கழியில் சாய்ந்தபடி   ஒலியும், வாடையுமாக அபானவாயு வெளியிட்டார். 

நேமிநாதன் முகத்துக்கு நேரே அவர் பின்புறம் ஒரு வினாடி உரசிப் போக அவன் தர்மசங்கடமாகப் பார்த்தான். 

இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து உதவிக்கு வரச் சொன்னவன் நேமிதான். வந்த பிறகு தான் யுத்தம் ஒரு ஒழுங்குக்கு வந்து ஜெயிக்க முடிந்தது. அதற்காக ஜன்மம் முழுவதும் தோலை செருப்பாகத் தைத்துப் போடுவேன் என்றெல்லாம் அடிபணிந்து நன்றி சொல்ல மாட்டான் நேமி. 

யப்பா நேமி, இங்கே வந்து உட்கார். திம்மன் அடுத்து போடறதிலே கம்பம்,  கழி, கூடாரத்துணி எல்லாம் சுருண்டு விழ  போவுது. அதுக்குள்ளே நான் என்ன பண்ணியிருக்கேன்னு சொல்லிடறேன். கெலடி அரசர் சொன்னார். 

யுத்தம் முடிஞ்சு போச்சு. சென்னபைராதேவி தோல்வி கண்டு துவண்டு கிடக்காள் கோட்டைக்குள்ளே. இருக்க விடலாமா மாமனாரே என்று ஊடுருவினார் பில்கி அரசர் திம்மராஜு. 

கேட்டுட்டு சொல்லு மாப்ளே என்று அவரை நிறுத்தச் சொன்னார் வெங்கடபதி. 

சித்திரம் : அருண்

மிர்ஜான் கோட்டை லட்டு மாதிரி ஒரு செங்கல் கூட உடையாமல் நம்ம கைக்கு வரணும். வரும். நம்ம படை     மிர்ஜானுக்குள்ளேயும் வேண்டாம். ஹொன்னாவர் உள்ளேயும் வேண்டாம். இன்னிக்கு முழுக்க இங்கேயே கோட்டைக்கு வெளியே இருக்கட்டும். முடிஞ்சா நாளைக்கும். சென்னா படையை கலைந்து போக வைப்போம். அவங்க கலவரம் பண்ணினா ஹொன்னாவர்லே மட்டும் தான் அவங்க உள்ளே போக முடியும். நம்ம படைகளை ஹொன்னாவர் பக்கமா நிறுத்தி அதையும் முறியடிச்சுடலாம். ஆக, நாம் கவனிக்க வேண்டுவது மிர்ஜான் கோட்டையைத்தான். நாம் மிர்ஜானை அழிக்கப் போகிறதில்லே. ஹொன்னாவரையும் சிதிலமாக்கப் போறது இல்லே. அப்படி அப்படியே எல்லா தளத்திலும் ஆட்சி கைமாறும். 

வெங்கடப்ப நாயக்கர் சொல்லியபடி நேமிநாதனைப் பார்க்க அவன் நன்றி சொன்னான். 

என் படை மீதி இருக்கப்பட்ட இருநூறு பேரையும் நான் ஜெர்ஸூப்பா போகச் சொல்லிட்டேன். அவங்களை என் மகன் வெங்கடலட்சுமணன் நடத்தி போறான். 

வெங்கடப்ப நாயக்கர் மாறாத புன்சிரிப்போடு பேச்சை முடிக்க நேமி முகத்தில் கலவரம் தெரிய உட்கார்ந்திருந்தான். 

மாமா அது சரிப்படாது. ஜெர்ஸுப்பா மிளகுராணியே ஆளட்டும். மிர்ஜானும் ஹொன்னாவரும் போதும் எனக்கு என்றான் சமாதானமாக. 

மிர்ஜானும் ஹொன்னாவரும் உனக்குன்னு யார் சொன்னது? வெங்கடபதி சிரிப்பு இல்லாத முகம் விகாரமாக வீங்கி வீர்த்துவரச் சொன்னார். 

என்ன சொல்றீங்க? நேமிநாதன் புரியாமல் கேட்டான். 

திம்மராஜு இவனுக்கு விளக்கமா சொல்லுப்பா. நான் வெளிக்கு இருந்துட்டு வந்துடறேன். வரும்போது இருந்தாகணும். இல்லேன்னா அடச்சுக்கும் எழவு;

நாயக்கர் கச்சம் கட்டிய வேட்டியைத் தரைத்துக்கொண்டு நின்றார். வெங்கடப்பா நாயக்கரும் திம்மராஜுவும் தெலுங்கில் வேகமாக பேசிக் கொண்டார்கள். நாயக்கர் ஒஸ்தானு என்று வெளியே நடந்தார். 

நேமி உன் நல்லதுக்குத்தான் சொல்றார் நாயக்கர். விஜயநகர பேரரசர் கிட்டேயும் சொல்லி ஒப்புதல் வாங்கிட்டார். நீ ஆட்சி அனுபவம் இல்லாமல் இருக்கறதாலே இன்னும் ஒரு  வருஷம் எப்படி ஆட்சி நடத்தறதுன்னு நாயக்கரையும் என்னையும் பார்த்து கத்துக்கலாம். அவர் மிர்ஜான் கோட்டை, ஹொன்னாவரை ஆளப் போறார். நான் ஜெருஸூப்பாவை நிர்வகிக்கப் போறேன். ஒரு வருஷம் பனிரெண்டே மாசம். அது போதும் நீ கத்துக்க. கற்பூர புத்தியாச்சே உனக்கு. 

வேசி மகனே, உதவிக்கு கூப்பிட்டா முதலுக்கே மோசம் பண்றியா? 

நேமிநாதன் சிலிர்த்துக் கொண்டு இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்து ஓங்கியபடி திம்மராஜுவை நோக்கி ஓடினான். அவன் பின்னால் இருந்து ஒரு   சத்தம். வேகமாகப் பாய்ந்து வந்த கட்டாரி ஒன்று நேமிநாதன் முதுகைத் தாக்க அவன் சரிந்து விழுந்தான். 

பில்கி அரசன் திம்மராஜுவின் பாதுகாப்பு காவலன் கட்டாரி வீசியது.

 என்னப்பா வெளிக்கு போய்ட்டு வரதுக்குள்ளே அடிச்சுக்கிறீங்க என்றபடி தொந்தியைத் தடவியபடி உள்ளே வந்தார் வெங்கடப்ப நாயக்கர். 

அவர் சொல்லி அனுப்ப குதிரை வீரன் ஒருவன் மிர்ஜான் கோட்டையை நோக்கிப் போய் கோட்டைக்காவலரிடம் ஏதோ சொன்னான். அடுத்த பத்தாவது நிமிடம் நேமிநாதன் குற்றுயிரும் குலையுயிருமாக மிர்ஜான் கோட்டைக்குள் எடுத்துச் செல்லப்பட்டான்.

 மிர்ஜான் கோட்டை நேமிநாதனின் அரச  குடும்ப மாளிகை

கருத்த துணியைக் கழியில் பறக்க விட்டுப் பிடித்தபடி குதிரையில் வந்த வீரன் நின்றான். அவனுக்கு அடுத்து இரட்டைக் குதிரை கோச் வண்டி மெல்ல ஊர்ந்து வந்து நின்றது. மிக ஆழமாக ரத்தக் காயம் அடைந்த நேமிநாதனை படுக்கையோடு சுமந்து இறக்கிய வீரர்கள் மௌனமாக உள்ளே எடுத்துப் போனார்கள். 

ரஞ்சனா தேவி கூக்குரலிட்டு அழுதபடி ஓடி வந்தாள். நேமிநாதனின் கண்கள் விழித்திருந்தன. வைத்தியர் வேகமாக உள்ளே படியேறி வர, குதிரை வீரர்கள் விலகி நின்றார்கள். 

நஞ்சுண்டய்யா பிரதானியும் வேகமாக மாளிகைக்குள் வந்து கொண்டிருந்ததை நேமிநாதன் கவனித்தான். ரஞ்சி என்று அவன் உதடுகள் உச்சரித்தன. ரஞ்சனா தேவி பார்த்துக் கொண்டிருக்க அந்தப் படுக்கை தரையில் தாழ்த்தி வைக்கப்பட்டது. 

நஞ்சுண்டய்யா பிரதானி அங்கே இருந்த மற்றவர்களை வெளியே போகும்படி சைகை செய்துகொண்டு அவரும் வெளியே வந்தார். வைத்தியர் திரும்பத் திரும்ப நேமிநாதனைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றார். அவர் கண்ணுக்கு முன்னால் ஓர் உயிர் உடலை விட்டு நீங்குகின்றது. ஒரு வைத்தியராக, சக மனிதராக ஏதும் செய்ய முடியாது நிற்கும் கையறுநிலை அவருக்கு இரண்டாவது முறையாக ஏற்பட்டிருக்கிறது. 

மிங்குவும் நேமிநாதனும் உயிரையும் கொடுத்து வாங்கியது எதை? யாருக்கும் எதுவும் அவர்கள் பெற்றுத் தந்திடவில்லை. ரத்தம் சிந்தி, கண்கள் மேலே செருக நேமிநாதன் ரஞ்சி ரஞ்சி ரஞ்சி என்று திரும்பத் திரும்பச் சொன்னான். அவன் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வெளிப்பட்டது. 

உனக்கு நான் செய்த துரோகத்துக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று தட்டுத் தடுமாறிச் சொன்னான். 

மறுபடியும் ரஞ்சி ரஞ்சி ரஞ்சி.

 மஞ்சுநாத் என் மகன் உன் மகன் இனிமேல். ரோகிணி துரோகி லிஸ்பன் ஓடியிருப்பா. ரஞ்சி ரஞ்சி ரஞ்சி. அம்மாவை கொல்ல கார்டெல்  அதிகப் பணம் கொடுத்தாங்க. அம்மாவோட விருந்துலே வாளோடு வந்த பெண் நான் அனுப்பியவள் தான். அம்மா என்னை மன்னிக்கணும். ரஞ்சி ரஞ்சி ரஞ்சி.

 அவன் கண்கள் விடை பெற்றுப் பார்வை அவளை வருடியது. மூடிய அந்த விழிகள் அப்புறம் திறக்கவே இல்லை. 

வாசலில் பரபரப்பு தெரிந்தது. ரஞ்சனா நீர் நிறைந்த விழிகளோடு வாசலைப் பார்க்க காலில் பாதரட்சைகள் இன்றி வெறுங்காலோடு ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்து கொண்டிருந்தாள் மிளகு ராணி சென்னபைரதேவி. 

நேமி என்று அவள் அலறியது கோட்டைச் சுவர்களில் மோதி சில வினாடிகளில் எதிரொலித்தது. 

உள்ளே ஓடி வந்த வைத்தியர் நேமிநாதனின் முதுகில் இருந்து கட்டாரியை அசைத்து எடுக்க, அந்த இடம் முழுக்க ரத்தம் பிசுபிசுத்து ஓடியது. ரத்தத்தில் கால் நனையாதபடி ஜாக்கிரதையாக உள்ளே வந்த கேலடி அரசர் வெங்கடபதி சுற்று முற்றும் பார்த்தார். தரையில் அமர்ந்து அடக்க முடியாமல் அழப் பிரயத்னப்படும் சென்னா மகாராணிக்கு பக்கத்தில் அமர்ந்தார்.  

’சென்னம்மா செல்லி. அஞ்சு நிமிஷம் வெளியே போயிருந்தேன்.. என்னமோ ஆயிடுச்சு. போறவங்க போயாச்சு. இருக்கறவங்க இருக்கலாம். போறது போ’ என்று சென்னபைரதேவிக்கு அபத்தமாக ஆறுதல் சொன்னார். எல்லாவற்றுக்கும் மௌனசாட்சியாக நேமிநாதனின் உயிர் நீத்த உடல் கிடந்தது. 

ஏன் வந்தீர் அண்ணவாரே, இனியும் நேமிநாதனை என்ன செய்து கூட இருந்தே குழி பறிக்க வந்தீர்? 

உட்கார்ந்தபடி வெங்கடப்ப நாயக்கரை உற்று நோக்கி கோபத்தோடு சொன்னாள் சென்னா.  நேமிநாதனின் முகத்திலும் தலைமுடியிலும் கைவிரல்கள் கொண்டு மெல்லத் தொட்டு தடவிவிட்டு நேமி நேமி என்று அதே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டாள் அவள். 

 சட்டென்று எழுந்து நின்று வெங்கடப்ப நாயக்கரிடம் சொன்னாள்- எவ்வளவு செயற்கையான மனுஷர் நீங்கள். தெலுங்கில் கவிஞர். இத்தனை அசுத்தம் நிரம்பிய இதயத்தில் எப்படி கவிதை பிறக்கும்? என் அறுபதாம் பிறந்தநாளுக்கு எழுதிக் கொண்டு வந்து படித்தீர்களே அதை பொன்னே போல் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். போய்க் கீறி எறியப் போகிறேன். 

வைத்தியர் பொறுமை இழந்து தலையைக் குலுக்கிக்கொண்டார். பெரிய இழவாக நேமி போய்விட்டிருக்கிறான். சென்னாவின் மனம் அதை நினைக்க திராணியில்லாமல் ஏதோ சின்னச் சின்ன நிகழ்வுகளை மீண்டும் மனத் திரையில் பரத்தி அவைதான் இன்றைய பிரச்சனைகள் என்று புனைந்து நிறுத்துகிறது. இது இப்படியே போனால், சென்னா சீக்கிரம் மனநோயாளியாக, இறந்தகாலமும், நிகழ் காலமும், வரப் போகிறது என்ற நம்பிக்கையில் கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தையும் குழப்பி மனதை செலுத்தப் போகிறது. அதற்கு ஏது மருந்து? 

வெங்கடப்ப நாயக்கர் சென்னாவின் கையைப் பற்றி, என் அன்புத் தங்கையே, கவிதை கிடக்கட்டும். என்னோடு வா. உனக்கு பாதுகாப்பான வாழ்க்கை முக்கியம் இப்போது என்றபடி பின்னால் யாருக்கோ கைகாட்டினார். சென்னாவை நாலு கேலடி வீரர்கள் இழுத்துப் போனார்கள். 

கையை எடுங்களடா நானே வருகிறேன். வெங்கடப்பாவை நோக்கி உமிழ்ந்துவிட்டு சென்னா நடந்தாள்.

(தொடரும்)

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு மிளகு அத்தியாயம் எண்பது

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.