மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு

1606 மிர்ஜான் கோட்டை

நான் திருத்தக்கன். 

ஹொன்னாவர் வாசி. தமிழ்ப் புலவன். கன்னட கவிஞன். போர்த்துகீஸ் மொழி எழுதப் படிக்கத் தெரியும். தமிழிலும் கன்னடத்திலும்   முறைப்படி இலக்கணம் படித்திருக்கிறேன். தச்சுத் தொழில் செய்கிறேன். இப்போது சென்னபைரதேவி மிளகு ராணியின் அரசு அணி போர்வீரன். 

தயார்நிலைப் போர்வீரனாக இருந்து இந்த வாரம் அரசுப் படைவீரனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன். 

எங்கள் அணியில் என் போன்ற தயார்நிலை போர்வீரர்கள், அரசு காவல்படை வீரர்கள், போர்த்துகல் அரசு கட்டணம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்த ஆப்பிரிக்க இனத்து போர்த்துகீஸ் போர்வீரர்கள் என்று மூன்று பகுதி உண்டு. எங்களில். 

போர்த்துகீஸ படைவீரன் என்றால் இடுப்பில் இரண்டு பக்கமும் வெள்ளை றெக்கை முளைத்தவர்கள். முளைத்து மட்டுமில்லை அதைப் பரத்திப் பறப்பவர்கள். கால் நடப்பதற்காக ஏற்பட்டவர்கள் இல்லை அவர்கள். 

நேரம்  பார்த்து வேலை ஆரம்பிப்பார்கள்.  நேரம் முடிந்தால் அதற்கு அப்புறம் ஒரு க்‌ஷணம் கூட வேலையைத் தொடர மாட்டார்கள். காலை ஒன்பதுக்கு யுத்தம் புரிய ஆரம்பித்தால் சாயந்திரம் எதிர்த் தரப்பில் வந்த படைவீரனைத் துரத்துவதில் ஈடுபட்டிருக்கும்போது சாயந்திரம் ஆறு என்று சங்கு ஊதக் கேட்டு உடனே துரத்துவதை நிறுத்தி நடந்து வந்து விடுவார்கள். 

சித்திரம் : அருண்

சாயந்திரம் போரிட்டு வந்து கோட்டைக்குள் நிற்கும்போது ஆளாளுக்கு இரண்டு குவளை நாட்டுச் சாராயமோ கள்ளோ தரப்பட மற்ற வீரர்களுக்குப் பானகம் வழங்கப்பட்டாலே ரொம்ப அதிகமான உபசரிப்பு அது. 

அவர்களுக்காக போர்த்துகீஸ் அரசு சார்பில் கோவாவில் இருந்து வந்திருக்கும் அதிகாரி, இத்தனை நாள் சீரும் சிறப்புமாக தலைமை பிரதிநிதியாக இருந்த இம்மானுவேல் பெத்ரோ பிரபுவை ஓரம் கட்டிவிட்டு ஜோசப் பவுலோஸ் என்ற இவரே சகலமும் என்று இந்த ஊதியத்தை மிளகாக படியால் அளந்து தினசரி சாயந்திரம் வாங்கிப் போகிறார். 

பவுலோஸ் துரைக்கும் சாராயம் விளம்பப்படும். வந்ததுதான் வந்தீர் மிளகு இருக்கட்டும். உம்மை ஆகாயத்தில் பறக்க வைக்கும் மங்கலாபுரம் நாட்டுச் சாராயம் ஒரு குவளை பருகிவிட்டுப் போம் என்றோம். வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 

வேண்டாமா கொஞ்சம் கம்மி போதை நல்ல வாசனை, ருசியாக ஷெண்டி என்று நாங்கள் தினம் ருசித்து மதம் கொண்டு மிதந்திடச் செய்யும் தேங்காய்க் கள்ளு நாலு லோட்டா குடித்துப் போம் என்று சகலரும் உபசரித்து முட்டமுட்டக் குடிக்க வைத்து அனுப்பினோம்.

 பெத்ரோ பிரபு ’என்ன கண்றாவி என்றாலும் கம்புக்கூட்டில் இடுக்கிக்கொண்டு ஆரியக்கூத்து ஆடுங்கள், நான் லிஸ்பனுக்குத் திரும்பப் போகிறேன்’ என்று மெழுகு பொம்மையாக உட்கார்ந்திருக்கிறார். அவர் லிஸ்பனுக்கு கோழிக்கோடு வழியாகப் போகப் போகிறதாகக் கேள்வி. 

பெத்ரோ செயலாக இருந்தாலாவது போர்த்துகீஸ் படையினர் தலைதிரிந்து ஆடுவதை நிறுத்திப் போட்டிருப்பார். அல்லது கட்டுப்படுத்தியிருப்பார். அவருக்குத் தெரியும், போர்த்துகீஸ் படைவீரனை விட வலிமையிலும் போர்த் திறத்திலும் அதிகமாக முன்னே நிற்பவர்கள் உள்நாட்டு வீரர்கள். 

அதுவும் காவல் படை போன்ற கட்டுக்கோப்பான அமைப்பில் வீரர்கள் கொஞ்சம் கூடுதலாக வயதானவர்களாக இருந்தாலும், நம்பி யுத்தபூமியில் இறங்கலாம். அவர்களிடமிருந்து போரை ஒரு கலையாக மற்றவர்கள் கற்றுக் கொள்ளலாம். போர் அறனையும் அவர்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம்.   

நடந்தும் ஓடியும் போர் செய்கிற ஒரு படைவீரன் எதிரணியில் அதே போல் வந்த காலாட்படை வீரனோடு பொருதுதல் தான் அடிப்படை போர் தர்மம் என்று செயல்மூலம் கற்றுத் தருவார்கள் காவல் படையினர். 

எதிரணியோ இதற்கு நேர்மாறு. நேற்றைக்கு சாயந்திரம் இருள் அப்பிக்கொண்டு வரும் அந்திக் கருக்கலில் எதிரணி காலாட்படை வீரன் ஒருவன் போர் செய்து தளர்ந்து குதிரைமேல் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் காவல்படை வீரருக்குப் பின்னால் இருந்து கடப்பாறையை எறிந்து ரத்தக் காயம் உண்டாக்கியதை வீரப் பிரதாபமாக எதிரணியே ஆரவாரம் செய்து வரவேற்றது. 

யுத்த தர்மம் என்ற சொல்லே அவர்கள் அகராதியில் இல்லை போலிருக்கிறது. ஆனாலும், அரசுப்படையில் இருக்கும் இந்தியன், போர்த்துகீஸ் வீரன் என்ற தனித்தனியான கவனிப்பு எதிரணியில் கிடையாது. எல்லோரும் ஒரே மாதிரித்தான். 

அதுவும் இளைஞர்கள் என்பதில் தான் அவர்கள் மேலே இருக்கிறார்கள்.  

இன்னும் சிறிது நேரத்தில் இன்றைய யுத்தம் தொடங்கி விடும். இரண்டு பக்கத்திலும் இரண்டாயிரம் பேர் கிட்டத்தட்ட பங்குபெறும் பெரிய யுத்தம் தான் இது. இன்று ஐந்தாம் நாள்.

ஆனால் என்ன? அரசு அணியோ எதிரணியோ எந்தப் பக்கத்தில் யுத்தம் செய்தாலும், எதற்காக சண்டை போடுகிறாய், ஜெயித்தால் என்ன ஆகும், தோற்றால் என்ன ஆகும், உயிர் பிரிய நேர்ந்தால் என்ன ஆகும் என்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாது இரண்டு ஜனப் பிரவாகமாக சண்டை நடக்கிறது. இரண்டு அணியாகப் பிரித்து இறப்பு வந்து இணைத்துச் சேர்கிறது. 

நான் வஜ்ரமுனி. 

நான் ஜெரஸோப்பா யுத்தத்தில் பங்குபெரும் காலாட்படை வீரன். பில்கி அரசர் அனுப்பிப் பங்குபெற வைத்த பில்கி பிரதேசத்து விவசாயி. 

நேற்றைய யுத்தத்தில், என் காலில், எங்களுக்கு விரோதியான அரசு அணி வீரர் ஒருவர் விட்டெறிந்த, வழியில் கிடந்த கத்தி கிழித்து,  காயம் உண்டாக்கியது. மன்னிக்கவும். நேற்று வந்ததும் எங்களுக்கு படைத் தலைவரான ஒரு தளவாய் பாடமாகக் கற்றுக்கொடுத்தபடி கத்தி என்று சொல்லக் கூடாது. வாள் என்பதே சரியான வார்த்தைப் பிரயோகமாம்.

நேற்று இரவு எங்களுடையதான எதிரணியின் பெருந்தலைவர் நேமிநாதர் எம் படையினர் அனைத்துப் பேரும் வந்து நின்றிருக்க சொற்பொழிந்தார். 

ராத்திரி மருத்துவன் என் காலில் காயத்தைக் கழுவி சாராயத்தை எரிய எரியத் தடவி வெள்ளைத் துணியைக்கிழித்துக் காயத்தின் மேல் கட்டுப் போட்டுக்கொண்டிருந்தபோது எல்லோரும் அவசரமாக முன்வசத்துப் பொட்டலில் வந்து குழும வேண்டும் என்று தண்டோரா முழக்கிப் போனார்கள். 

எனக்கு அவசர அவசரமாகக் காலில் கட்டுப் போட்டு விட்டு மருத்துவச் செக்கன் என்னமோ அவனை தனியாக வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தமாதிரி விழுந்தடித்துக்கொண்டு ஓடினது மட்டுமில்லாமல் நீயும் வா என்று என்னையும் நிர்பந்தித்தான். 

ஐந்து நிமிடம் முன்னால் தான் ஆழப் பதிந்த கத்தி கிழித்து ரத்தம் பெருகிய காலை எடுத்து வைத்து நான் எப்படி ஓடுவது? நடக்கிறது நடக்கட்டும் என்று நான் பொட்டலுக்குப் போகாமல் கூடாரத்திலேயே ஒரு ஓரமாக வாழை இலைக் குவியலுக்கு அப்புறம்  தலைக்கு அண்டக்கொடுத்து ஒரு பெரிய பரங்கிக்காயை வைத்துக்கொண்டு நன்றாகத் தூங்கி விட்டேன். 

நடு ராத்திரிக்கு என் காலில் குளிர்ச்சியும் வலியுமாக சேர்ந்து ஒரு கதம்ப அனுபவம். நன்றாக முழிப்பு வந்து பார்க்க,  இரண்டு எலிகள் கால்கட்டைத் துருவி ருஜித்துத் தின்றுகொண்டிருந்தன. 

அவை காயத்தை நாவால் நக்கும்போது ஈரமும் குளிர்ச்சியும் பல்லால் குடைந்து பிறாண்டி எடுக்கும்போது வலியுமாக அனுபவத்தை இனியும் எத்தனை நாள் இருக்கப் போகிறேனோ அதுவரை மறக்க முடியாது. 

எனக்கு நேர் கீழே விரிப்பு விரித்து இரண்டு பில்கி பிரதேசத்து வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தர் காலருகே முக்கால் வாசி குடித்து முடித்த ஷெண்டி கள்ளுக் குடுவை. அதை மெல்ல அவர்களை எழுப்பாமல் எடுத்துப்போய் கால் காயத்தைக் கழுவிக்கொண்டு வந்து படுத்தேன்.  

அவள், தமயந்தி, என் அன்பு மனைவி, இன்னும் அழுது கொண்டிருப்பாள். யாரோ ஆட்சியை மாற்ற எதற்காக எந்த சம்பந்தமும்  இல்லாத நீ வாளேந்திப் போரிட வேண்டும் என்று கூர்மையான வினாத் தொடுத்தாள். எல்லா யுத்தமும் சம்பந்தமில்லாதவர்களால் செய்யப்படுகிறது, வெற்றியும் தோல்வியும் வேறு தளங்களில் வேறொரு கும்பலால் நிச்சயிக்கப் படுகிறது என்றேன் அவளிடம். தமயந்தி, நான் வரும்போது நீ இருப்பாயா? போவேனா?

திரும்பப் போவேன் என்று எனக்கு நானே காயத்தைப் பார்த்துச் சொன்னேன். காயம் ரணமானாலும், நொண்டி நடந்தாவது தமயந்தியை முத்தமிட திரும்பி வந்துவிடுவேன். இனியும் ஒரு போர் வேண்டாம் எனக்கு.

புலரும் காலை நேரம் இது. இதோ எழுந்து மலசலாதிகள் முடித்து ஷராவதி நதியில் குளித்து போர் உடுப்பை அணிந்து கூடாரத்துக்கு வந்திருக்கிறேன். எல்லோருக்கும் இட்டலிகள் உணவாகத் தரப்படுகின்றன. ராத்திரி இரண்டு மணிக்கே இட்டலி வார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். 

ஒவ்வொருவருக்கும் எட்டு இட்டலிகள் கொடுத்து சமையல்காரன் சொன்னான் – 

உமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ராத்திரி கறிச்சோறு இல்லையென்றால் நாளைக்குப் பால்சோறு என்றான். 

அவனிடம் நீ கவிஞனாக இல்லாமல் போனாய். இட்டலி பண்ணாமல் கவியாகி இருந்தால் ரெண்டு விதத்திலும் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று அறிவுறுத்தினேன். தமயந்தி, போர்க்களத்திலும் கவிதையுண்டு பார்த்தாயா?

 ஒன்றுக்கு இரண்டாக இட்டலித் துணியை அவனிடம் வாங்கிக்கொண்டு வந்தேன். அவற்றில் ஒன்றை இடுப்பில் முடிந்து கொண்டு மற்றதை கால் காயத்தின் மேல் இறுக்கக் கட்டினேன். 

கூடார ஓரத்தில் கத்தி, அதுதான் சொன்னேனே, ஒவ்வொருத்தருக்கும் வாள் ஒன்று எடுத்துக் கொடுத்து ஜயவிஜயிபவா சொல்லி அனுப்புகிறார்கள். சாயந்திரம் மறந்து விடாமல் கொடுக்கவும் என்று நேமிநாதரின் உத்தியோகஸ்தன் சொல்லும்போது சிரித்தேன். 

வாங்கிய வாளை வீசிப் பார்த்தேன். அந்த வாள் வைத்த இடத்துக்கு அருகே நின்று வாள் வாங்கிப் போகிறவர்கள் அதை நின்று வீசிப் பார்க்க மறப்பதில்லை. நான் என் வாளை வீச அது ஒச்சை நாற்றம் அடித்தது. ரத்த வாடை அது. கொஞ்சம் வேகமாகச் சுழற்ற கைப்பிடி தனியாக வந்து விழுந்தது. உடனே அதை மாற்றி பழுதில்லாத வாள் ஒன்று வாங்கிக் கொண்டேன். ரத்த வாடையும் ருசியும் அறிந்திருக்காது அந்த வாள்.

நேற்றைக்கு வாளோங்கி நாள் முழுக்க யுத்தம் செய்து எப்போதோ மாலை மயங்கும்போது பின்னாலோ முன்னாலோ வந்த அரசுப்படை வீரர் ஆழக் குத்தி இறக்க வைத்த வாளை திரும்பக் கொடுத்தபோது அந்த உயிர் படிந்த வாள் உத்தியோகஸ்தனால் கவனமின்றிப் பின்னால் எறியப்பட்டது.  அவ்வீரன் இறந்திருந்தால் நேற்று இரவில் அவன் தகிக்கப் பட்டிருப்பான்.

  வாளுக்கு மட்டுமில்லை, அதை எடுத்துப் போரிட்டவன் நினைவும் விரைவில் நிணம் சார்ந்த கூட்டு வழிபாடு ஒன்றை உயிர் நீத்த எல்லா வீரர்களுக்கும் பொதுவாக நடத்தி மறக்கப்படும். 

இதை யோசித்தபடி நிற்க, அடுத்து தளவாயை சந்திக்கச் சொன்னார்கள். இருமியபடி வசம்பு இட்ட வென்னீரால் வாய் கொப்பளித்தபடி நின்ற தளவாய் முகத்தை கொஞ்சம் அசைத்து, வருகிறேன் என்று ஓரமாகத் துப்பி வந்தான். 

நேற்று என் போர் நிகழ்வு திருப்திகரமாக இருந்ததால் எனக்கு இன்று பின் வரிசையில் இருந்து முதல் வரிசைக்கு இடம் மாற்றி நான் கௌரவப்படுத்தப் படுகிறேன் என்று கூறினான் அவன். கோட்டை வாசலுக்கு நேர் முன்னே வாளோங்கி வென்று வரச் சொல்லி அனுப்பினான். வருவேனா?

மறுபடியும், நான், திருத்தக்கன். 

மறுபடி இன்றும் காலை உணவாக கம்பங்களி. எந்த விரோதமும் எனக்குக் கம்பங்களிமேல் இல்லை. என்றாலும் மூன்று நாளாகத் தினமும் காலையிலும் ராத்திரி போஜனமாகவும் களி தின்ன வேண்டும் என்ற கட்டாயம் மனதில் ஒரு எரிச்சலை உண்டாக்குகிறது. 

இதுவும் இல்லாமல் பட்டினியோடு யுத்தம் புரிய முடியாது. வீடா என்ன இது, காலை உணவு கொள்ளாவிட்டால் உடனே சாப்பிட்டு விட்டு மற்ற காரியம் பாருங்கள் என்று கட்டாயப்படுத்தும் மனைவியும், முட்டை உடைத்து ஊற்றிய தோசை ஆசையோடு வார்த்து மேலே மிளகுப்பொடு கொஞ்சம் தூவித் தரும்போது எச்சில் கை கண்ணு வேறே உனக்கு அம்மாவை சுட்டுத்தரச் சொல்றேன் என்று சொன்னதைக் கேட்காமல் என் தட்டில் இருந்தே பிய்த்துத்தரும் ஒண்ணரை வயது மகனும் இனி எப்போதும் நினைவுகள் மட்டும்தானா? 

எனக்கு என் மனைவி தான் மிளகுராணி. என் மகன் தான் மிளகு இளவரசன். யாரும் ஜெயிக்கட்டும். யாரும் தோற்கட்டும். இன்றோடு நான் ஓய்வு பெறப் போகிறேன். 

இன்று இரவு மிர்ஜான் கோட்டைக்குப் போகப் போவதில்லை. நண்பனின் கோச் வண்டியில் குடும்பத்தோடு ராமுழுக்க பயணப்பட்டு தமிழ் சுவாசிக்கும் ஓசூருக்குப் போய்ச் சேர்ந்து இனி எப்போதும் அங்கே வசித்திருக்க விரிவாக, நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறேன். 

மிளகுக் குடும்பம் எப்படியும் போகட்டும். அது சரியாமல் அண்டக்கொடுக்கிற வெல்வெட்டுத் தலகாணியாக நிறைய உழைத்தாகி விட்டது. வரியும் தவறாமல் கட்டிவிட்டாகி விட்டது. இனி எனக்காக, என் குடும்பத்துக்காக உழைக்கப் போகிறேன். 

எந்தக் குதிரை வேண்டும்? என்னிடம் குதிரை   பராமரிப்பு ஊழியர் கேட்டார். 

இல்லை, நடந்தும் ஓடியும் யுத்தம் புரியும் காலாட்படை வீரன் நான் என்றேன். குதிரை ஏறத் தெரிந்த சிப்பாய்களில் நூறு பேரை குதிரைவீரர் ஆக்கியிருக்கிறார்களாம். அவர்களில் நானும் ஒருவனாம். 

குதிரை ஏற்றம் தெரியும் என்று அரசவை உத்தியோகத்தில் வரும்போதே அறிவித்து விட்டு வந்திருக்கக் கூடாது என்று இப்போது தோன்றியது.  

என்னைப் போலவே சாதுவான ஒரு குதிரை, வயது சென்றது அது, எனக்குக் கொடுத்தார்கள். லகானை இழுத்துச் சொன்னபடி திரும்ப, ஓட, நிற்க படித்த குதிரை. அதெல்லாம் தெரியாமல் இருந்திருக்கலாமே என்று அந்தக் குதிரையும் என்னைப் போலவே அங்கலாய்த்திருக்கும். 

எந்த நிலையில் குதிரையோடு போய் யுத்தம் புரிய வேண்டும்? குதிரைப்படை தளவாயிடம் கேட்டேன். நீயும் இன்னும் இருபத்துநான்கு பேரும் போர்ச்சுகீஸ் படைக்கு முன்னே போக வேண்டும். மீதி இருபது பேர் அந்த படைக்கு பின்னால் வரவேண்டும். 

எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. என்ன ஐயா, புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேலே படுங்கன்னு பழமொழி சொல்வாங்க தமிழ்லே அது மாதிரி அந்த சும்பன்களுக்கு பாதுகாப்பாக நின்னு நான் சண்டை போடணுமா என்று கேட்டபடி குதிரையோடு நகர்ந்தேன். 

பின்னே, நானும் நடுவிலே நிக்கறேன்னு அடம் பிடிக்கவா முடியும்? 

ஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் மிச்சம் இருக்கும்போது கோட்டையில் இருந்து சங்கு பிடிக்கும் சத்தம் கேட்கும். இன்றைய யுத்தம் தொடங்குகிறது என்று முத்திரை காட்டும் சூசனை அது. இன்றைக்கு ஒன்பதும் ஆகி, ஒன்பது மணி பத்து நிமிடமும் ஆச்சு. சங்கு பிடிக்கவில்லை. 

என்ன காரணம் என்று பக்கத்தில் குதிரை மேல் ஆரோகணித்திருந்த சக குதிரைவீரனிடம் கேட்டேன். கல்யாண மாப்பிள்ளைகள் வந்து சேரலை என்றான் அவன். 

கேடுகெட்ட போர்த்துகீஸ் படை ராத்திரி சுதி ஏற்றிக்கொண்டது இன்னும் இறங்காமல் கொஞ்சம் மிச்ச சொச்ச போதையும். கொஞ்சம் தூக்கமுமாக கையில் பன்றி இறைச்சி உருளை உருளையாக உருட்டிப் பிடித்துக் கடித்தபடி வருகிறவர்கள் அவர்கள்.  கொடுக்கப்பட்ட வாள்களை அலட்சியமாக எடுத்து வீசினார்கள். 

எனக்குப் பின்னால் நின்ற அங்கோலா – போர்த்துகீஸ் படையணியின் கருப்பு இன இளைஞன் என்னைக் கேட்டான் – குதிரையை ராத்திரியே கொடுத்துட்டானுங்களா?

 நான் சாவதானமாக, இல்லை என்றேன். 

பின்னே ஏன் நொண்டுது? ராத்திரி பூரா நீ ஏறிட்டிருந்திருப்பேன்னு நினைச்சேன் 

மோசமான பொருள் தொனிக்க என்னை கேலி செய்து வம்புக்கிழுத்தாலும், நான் இப்போதுதான் கவனித்தேன், என் குதிரை பின்னங்கால் இடது கொஞ்சம் நொண்டித்தான் நடக்கிறது. 

சங்கொலி. இன்றைய சாவுகளுக்கு முன்கூட்டி ஊதித் துக்கம் கொண்டாடிய சூசனை கோட்டை வெளியில் சூழ்ந்தது. 

நான் என் குதிரையை மெல்ல நகர்த்தினேன். ஓ என்று பெரிய சத்தம். அரசு எதிரணிப் படை எங்களை நோக்கி வேகமாக பெருவெள்ளமாக ஓடி வந்தது. 

முன்னால் எதிர்கொண்டு அல்ல. எம் பின்னால் இருந்து.  

நிலை குலைந்து போன நடுவில் வரும் போர்த்துகீஸ் படை திரும்பி நின்று தாக்காமல் எல்லா திசையிலும் ஓட ஆரம்பித்தார்கள். அவர்கள் போர்த்துகீஸ் மொழியில்  கூவியது சண்டை போட வேண்டாம், எதிரி நம்மைவிட அதிகமாக இருக்கிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டியதாக இருந்தது. 

பத்தரை மணிக்குள் போர்த்துகீஸ் படை கிழக்கே சமுத்திரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததை நம்ப முடியாமல் கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதானிகள் பார்த்துக் கொண்டிருந்த காட்சி தட்டுப்பட்டது. 

எங்களுக்குப் பின்னால் எதிரணியின் காலாட்படை ஓவென்று கூச்சலிட்டு மிர்ஜான் கோட்டையை நோக்கி ஓடி வந்தது. இந்தக் களேபரத்தில் என் குதிரை கனைத்தது. முன்கால் இரண்டும் தூக்கி அது நிற்க, பலகீனமான பின்கால் வழுக்கி கீழே விழுந்தது.  

அரசுப் படை தினசரி அறிக்கை 

இன்று உயிர்த்தியாகம் செய்த காலாட்படையினர் நூற்று முப்பத்தெட்டு பேர் . குதிரைப் படையினர் பத்து பேர். அவர்கள் பட்கல் வாயுசேனன், ஹொன்னாவர் திருத்தக்கன், கோகர்ணம் மல்லையா மற்றும். ஜயவிஜயிபவ.

எதிரணிப் படை தினசரி அறிக்கை 

கேலடி அரசரின் போர்த் தந்திரம் வென்ற நாள் இது. நம் படையினர் அரசுப் படையினரை கோட்டைக்கு நேர்பின்னே நிலை எடுத்து அதி விரைவில் சூழ்ந்து பின்னால் இருந்து தாக்கிக் கிடைத்த வெற்றி இது. இன்றைய போர் முடிவில் கேலடி அரசர், பில்கி அரசர், நேம்நாதர் தலைமையில் உள்ள அணி மிகப் பெரும் வெற்றி. 

இன்று இருநூற்று முப்பத்தேழு வீரத் தோழர்கள் தங்கள் இன்னுயிர் நீத்தார்கள். நேற்று வாள் காயம் சிரித்தபடி ஏற்ற வஜ்ரமுனி என்னும் கேலடி மாநிலப் பெரும் வீரர்   காயம் புரைபிடித்து, சிகிச்சையில் அதிக ரணமாகி இன்று போரிடும்போது அகால மரணமடைந்தார். போரில் நேரடியாக அன்றி களம் கண்டு துஞ்சிய வீரர்களின் இன்றைய எண்ணிக்கை எண்பத்தெட்டு. 

இன்று மாலை கேலடி அரசர் வெங்கடப்ப நாயக்கரும், பில்கி அரசர் திம்மராஜுவும் படைகளைச் சந்தித்து பேசி, நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பங்கு கொண்டார்கள். ஜயவிஜயி பவ.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு அத்தியாயம் எழுபத்தேழு மிளகு  அத்தியாயம் எழுபத்தொன்பது

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.