குமார சம்பவம் மஹா காவ்யம் – 6

அத்யாயம்-6

கௌரி, தன் சகிகளை அழைத்து விஸ்வாத்மாவை அறிமுகம் செய்து வைத்தாள்.  இவருக்குத் தான் என்னைத் தர வேண்டும் என்பதை தன் பெற்றோரிடம் பிரார்த்தனை செய்யச்  சொன்னாள்.  இதைக் கேட்ட அந்த சகி மிகவும் மகிழ்ந்தவளாக சகியை அணைத்துக் கொண்டாள்.  அவள் மூலம் செய்தியை அனுப்பி விட்டு பார்வதி மன நிம்மதி அடைந்தாள்.  மாமரத்தின் கிளையில் அமர்ந்து கோகிலம், தன் பிரியமான வசந்தனை கூவி வசந்த காலத்தை அறிவிப்பது போல.  

 சகி மூலம் செய்தி அனுப்பியதையறிந்து சங்கரன்,  தானும் சப்த ரிஷிகளைத் தியானம் செய்தார். பின் கௌரியிடம் விடை பெற்று கிளம்பினார். அவளை விட்டுப் பிரியும் மனம் சஞ்சலப்பட்டது.

அருந்ததியும் உடன் வர, சப்த ரிஷிகளும் உடனேயே மஹேஸ்வரனின் எதிரில் ப்ரகாசமாக வந்து நின்றனர்.  அடுத்த ஏழு ஸ்லோகங்களால் சப்த ரிஷிகளை வர்ணிக்கிறார். 

ஆகாய கங்கையில் நீராடி விட்டு வந்தனர்.  கல்ப வ்ருக்ஷத்தின் மலர்களை தள்ளிக் கொண்டுச் செல்லும் கங்கையின் வேகம்,  திக் கஜங்களின் மத ஜலம் விழுந்து அதன் மணமும் கலந்து சுகமான அனுபவத்தைத் தரும் கங்கை நீரின்  பிரவாகத்தை ரசித்தனர்.  முப்புரி நூலும் பொன் நிற மரவுரி ஆடையும் அணிந்தவர்கள்,  இரத்தினங்களால் ஆன ஜபமாலைகள் இவைகளுடன் அண்டியவர்களுக்கு ஆசிகள் அளிக்கும் கற்பக மரம்   போன்றவர்கள்.  

ஆதவனின் ஒளி  மண்டலத்திற்கும் மேல் உள்ளது சப்த ரிஷி மண்டலம். அதனால் அவர்கள் கீழ் நோக்கிப் பார்த்து  உதயம் ஆகி விட்டதையும்,  குதிரைகள் பூட்டிய ரதத்தின் கொடியை  தானாகவே தழைத்து அவர்கள் செல்ல வழி  விட்ட நற்குணத்தை வாழ்த்தியபடி இறங்கினர். 

மகா ப்ரளய காலத்தில் தன் ஒற்றைக் கொம்பினால் பூமியை தூக்கி காப்பாற்றிய வராக பெருமானை வணங்கி, அந்த சமயம் தாங்களும் அந்த ஒற்றைக் கொம்பில் விஸ்ராந்தியாக அமர்ந்து இருந்ததை நினைவு கூர்ந்தவர்களாக  பூமியில் இறங்கினர். (ஓரு யுகம் முடிந்த பின் பிரளயம் வருவதும்,  மூவுலகமும் நீரில் மூழ்குவதும், பின் மறு முறை உலகம் தோன்ற வசதியாக உலகின் அனைத்து உயிரினங்களையும், தாவரங்களின் விதைகளையும் பாதுகாத்து, சப்த ரிஷிகளையும் ஒரு ப்ரும்மாண்ட படகில் வைத்து, தான்  பன்றி உருவத்தில் ஒரு கொம்புடன் வந்து பகவான் ஸ்ரீ மகா விஷ்ணுவே இழுத்துச் சென்று பாதுகாத்தார் என்பது வரலாறு. (பின் குறிப்பு 3   )

வியாசர் முதலான ரிஷிகள், புராணங்களில் விஸ்வயோனி, விஸ்வத்தை படைப்பவர் என்ற பொருளில் படைப்புத் தொழிலைச் செய்யும்  ப்ரும்மாவுடன் சேர்த்து சப்த ரிஷிகளையும்  அழைத்தனர்.  அத்தகைய பெருமை மிக்க ரிஷிகள் வந்தனர்.

முன் பிறவிகளில் செய்த தவங்களின் பலனாக சப்த ரிஷி மண்டலத்தில் வாசம் செய்யக் கிடைத்தும் தங்கள் தவம், நியமங்களை கை விடாத உத்தமர்கள். பகவான் சங்கரனின் எதிரில் வந்து நின்றனர்.  அவர்களுடன் வந்த அருந்ததி- வசிஷ்டர் தம்பதி, மற்ற ரிஷிகளுடன் மத்தியில் நின்றனர்.   சாதனைகளின் பலன் என்பதே நேரடியாக வந்து விட்டது போல அவளைக் காணவே, காண்பவர் மனதில் மரியாதை தோன்றியது.  அவளுடன் சேர்த்து முனிவர்களை வணங்கினார்.  ‘गुणा: पूजास्थानम् गुणिषु न स लिन्गम् न स वय: – குணா: பூஜாஸ்தானம் குணிஷு ந ச லிங்கம் ந ச வய: –  ‘ மரியாதைக்குரியது ஒருவரின் குணமே. ஆண், பெண் என்பதோ, வயதோ அல்ல. அருந்ததியைக் கண்டதும் பெண் குலத்திடமே தனக்கு மிகவும் மதிப்பும் நல்ல எண்ணமும் தோன்றி விட்டதாக உணர்ந்த பகவான் சங்கரனுக்கு,  இல்லறத்தில் ஈடுபாடும் வந்தது.  காமனோ முன்னால் தான் அபராதப் பட்டதும் வீண் அல்ல, தன் காரியம் ஜயமே என்று மகிழ்ந்தான்.  

ரிஷிகள் எதையும் வெளிப்படையாக பேசாமலே ஆசீர்வதித்தனர். 

இன்று, ப்ரும்மா வேதங்களை உபதேசித்ததும், நாங்கள் அக்னியில் நியமங்களுடன் ஹோமங்கள் செய்ததும், தவம் முதலான சாதனைகளைச் செய்ததும் பரி பூர்ணமாக பலனைக் கொடுத்து விட்டது என்றனர்.  என்ன பலன்? 

உலகில் எங்களை தலைமை பொறுப்பில் இப்பொழுது நியமித்து விட்டாய்.  உன் மனோரதம் நிறவேற எங்களை அழைத்து மிகப் பெரிய அனுக்ரஹம் செய்து விட்டாய். தேடிச் சென்று அடைய வேண்டியவன், தானாக எங்களை அருகில் வரச் செய்த உன் அரிய செயலை பாராட்டுகிறோம்.  இதை மிகப் பெருமையாக உணர்கிறோம்.

உன்னை மனம் ஒன்றி நினைப்பவர்கள் புண்யம் செய்தவர்கள். அதை விட உன் மனதில் நீயாக நினைக்கும் பேறு பெற்றவர்கள் அதை விட மேலான புண்யசாலிகள்.  ப்ரும்மாவையே படைத்த பரம் பொருள் மனதில் எங்களுக்கு இடம் கிடைத்ததே மகா பாக்யம்.  எங்கள் இருப்பிடம் தான் ஸூரிய சந்திர மண்டலங்களுக்கு மேல் இருந்தது. தற்சமயம் மதிப்பிலும் அவர்களை விட உயர்ந்த ஸ்தானம் கிடைத்து விட்டது.  உங்கள்  மனதில் எங்களை  நினைவு கூர்ந்ததே பெரும் பாக்யம். உங்கள் அருள்.  ஹே ப்ரபோ!  பெரியவர்களிடம் சம்மானம் பெறுவது தங்களிடமே பாராட்டு பெறுவதற்கு சமம்.  பாராட்டு பெறுபவனும் தன்னம்பிக்கை பெறுகிறான். 

ஹே விஸ்வ நாதா!  நீங்களே அழைத்த பின், எங்கள் மனதில் உத்சாகம் பெருகி உள்ளது. எதைச் சொன்னாலும் செய்ய சித்தமாக இருக்கிறோம்.  எங்களால் ஊகிக்க முடியவில்லை. அதனால்  தயவு செய்து சொல்.  மகேஸ்வரா!  உன் உயரம் எங்களுக்கு எட்டாதது. அதனால் சந்தேகமின்றி சந்தோஷமாக சொல்.  கண் எதிரே நாங்கள் கண்டு மகிழும் உருவம் தான் ஸ்ருஷ்டி செய்கிறது. பாலனம் செய்கிறது, பின் சம்ஹாரம் செய்கிறது -அவற்றில் இது எந்த ரூபம்? 

அல்லது, இதில் என்ன விவாதம். எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். மிகப் பெரிய வேண்டுதல் ஏதோ உள்ளது. பகவானே! நீங்கள் மனதால் எங்களை எண்ணியதால் வந்தோம்.  ஆணையிடுங்கள். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.  அவரும் சொல்ல ஆரம்பித்தார்.

சந்திரனின் ஒளிக்கும் மேலான அவர் பற்களின் ஒளி திகைக்க வைத்தது. உங்களுக்குத் தெரியும். என சுயநலம் எதுவும் இல்லை.  அதனால் என் எட்டு வித மூர்த்திகளால் இதை தெளிவாக்கி இருக்கிறேன். ஒவ்வொரு ரூபமும் என்னை ஒவ்வொரு விதமாக அறிவிக்கும். தாகத்துடன் தவிக்கும் சாதக பறவைகளின் தாகத்தை தீர்க்க மழை தான் வேண்டும். வேறு எந்த வித உபாயமும் செல்லாது. எதிரிகளால் தோற்கடிக்கப் பட்டு செல்வ சம்பத்துகளை, பதவிகளை இழந்த தேவர்கள் என் மகனை வேண்டுகிறார்கள்.  அதனால் பார்வதியை விவாஹம் செய்து கொள்ள விரும்புகிறேன். யாக அக்னி வேண்டி  அந்த யஜமானர்களாக உள்ளவர்கள் அரணிக் கட்டையைக் கடைவது போல என் மகன் பார்வதியிடம் தோன்றவேண்டும். 

இமவானின் மகள். அதனால் நீங்கள் என் சார்பாக அவரிடம் பெண் கேட்டுச் செல்ல வேண்டும்.  பரஸ்பரம் பெரியவர்கள் பேசி நிச்சயம் செய்த சம்பந்தங்கள் இடையூறின்றி சிறப்பாக அமையும். 

உன்னதமான, திடமான மலையாக உருவம் கொண்டுள்ள இமவான் உலகனைத்தையும் தாங்குபவன்.  அவருடன் சம்பந்தம் செய்து கொள்வது எனக்கு பல விதத்திலும் நன்மையே.  இப்படி பேசுங்கள், கன்யாவை யாசியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.  உங்கள் பெருமையை அறிந்தவர்கள் தான். நீங்களே  அனுசரித்து காட்டியவைகளே ஆசார நியமங்கள்.  आर्या-  ஆர்யா- மதிப்புக்குரிய பெண், அருந்ததியும் வந்திருப்பதால் என்ன செய்ய வேண்டுமோ, அவள் அறியாததா,  அதன் படி செய்யுங்கள். இது போன்ற   மங்கள காரியங்களில் பெண்களை  முன்னிட்டுக் கொண்டு செய்வது சிறப்பு. 

அதனால் கிளம்புங்கள். ஔஷதி ப்ரஸ்தம் எனப்படும் இமயமலையின் மகா கோசி என்ற அந்த ப்ரதேசத்து நதியை வைத்து வழி அறிந்து கொள்ளுங்கள். அது அருவியாக விழும் இடம்.  நீங்கள் பேசி முடித்து விட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன் என்றார்.  அவர்களும் அப்படியே என்று சொல்லி, கிளம்பினர். 

அந்த ரிஷிகள், தன்னடக்கம் மிகுந்தவர் எனப்படும் மஹாதேவனே இல்லறத்தை நாடும் சமயம் நாம் அதை குறைவாக எண்ண வேண்டியதில்லை என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொண்டவர்களாக பேசிக் கொண்டே சென்றனர். சற்றுப் பொறுத்து மஹா தேவனும் மஹாகோஸீ என்ற அந்த அருவி இருக்கும் இடம் சென்றார். 

மனோ வேகத்தில் பரம ரிஷிகளான அவர்கள் நீல வானைக் கடந்து இமாலயத்தின் ராஜதானியை அடைந்தனர்.  

அடுத்து வரும் பத்து ஸ்லோகங்களும் இமய மலையின் வர்ணனை. 

அலகா என்ற அந்த நகரம். பலவிதமான செல்வங்கள்  உடையது. குபேரனுடைய  அந்த வாசஸ்தலத்தில் நுழைந்து வெளி வந்தனர். மனதில் தங்கள் இருப்பிடமான  சுவர்கத்துடன் ஒப்பிட்டு பேசியபடியே சென்றனர். அலகா நகரை விட औषदिप्रस्तम् ஔஷதிப்ரஸ்தம் – மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் நிரம்பிய இடம் என்ற இமவானின் ராஜதானி மற்றொரு சுவர்கம் போலவே இருப்பதாக உணர்ந்தனர்.  கங்கையின் பிரவாகம் நகரை  சுற்றிலும்  பிராகாரம் போல ஓடி அந்த உயர்ந்த தாவரங்கள் செழித்து வளரச் செய்திருந்தன.  இரவில் அந்த பச்சிலைகளின் பளபளப்பே தாரகைகள் போல கண் சிமிட்டின.  பெரும் சிலைகள் மாணிக்கம் என்ற மணிகள் போல பளிச்சிட்டன. அவை பாதுகாப்பு அரண்கள் போலும். 

யானைகளும் சிங்கங்களும் அதிகமாக தென்பட்டன. ஒன்றோடொன்று விரோதம் இல்லாமல் வளைய வந்தன.  அஸ்வங்கள் வேறு எங்கும் இல்லாத அதிசயமாக குகைகளில் தென்பட்டன. யக்ஷர்களும், சித்தர்களும், பிரசித்தமாக இருந்தனர். கிம்புருஷர்கள், கின்னரர்கள் என்று ஊர் ஜனங்கள்.  வனதேவதைகளோ எனும் படி  பெண்கள் அனைவருமே வனப்புடன் இருந்தனர்.  

மாளிகைகளின் மேல் மண்டபங்களில் மேகம் பரவி நின்றது. அதன் இடியோடு போட்டியிடுவது போன்று மாளிகைகளின் உள்ளே இருந்து ம்ருதங்க பணவ வாத்யங்கள் இசைப்பது கேட்டது.  கற்பக மரங்களும்  அதைச் சுற்றியிருந்த கொடிகளும் கொடி கம்பமும் அதில் கட்டிய கொடியும் போல இருந்தன.  இரவு முழுவதும் ஸ்படிக மண்டபங்களில் பான பூமி எனப்படும் மதிராலயங்கள், கேளிக்கைஸ்தலங்கள்,   அவைகளும் பூக்களால் ஆன தோரணங்களுடன் விளங்கின. 

வழிகாட்டுவது போல பச்சிலைச் செடி கொடிகளே ஒளி விட்டன.  இரவில் சஞ்சாரம் செய்வது மிக எளிதாக இருந்தது.  இரவின் அந்தகாரம் என்பதே இல்லை போலும்.  அந்த நகரில்  அனைவரும் இளைஞர்களாகவே இருந்தனர்.  நரை திரை அங்கு தோன்றுவதே இல்லை போலும்.  எந்த வித கவலையுமின்றி நீண்ட நேரம் உறங்கி எழுந்தனர்.  தம்பதிகளின் ப்ரணய கலஹம் மட்டுமே கலஹம். 

ஊரைச் சுற்றி உபவனம் அதன் நல்ல மணம் நிறைந்த மலர்களால் கந்த மாதனம் – வாசனையால் மயக்கும் என்று பெயர் பெற்றது.  ( ராமாயணத்தில் வரும் கந்த மாதன மலை வேறு – உரையாசிரியர்)  யாத்திரையாக வந்திருந்தவர்களும், மற்றவர்களும் அந்த வனத்திலேயே உறங்கினர்.  கற்பக மரங்களும் அங்கு  நிழல் போல இருப்பதாகச் சொல்வர்.  அந்த முனிவர்கள் ஊரை சுற்றி வலம் வந்து அதிசயித்து சுவர்கம் கூட வேண்டாம், இந்த  ஔஷதி ப்ரஸ்த நகரிலேயே இருந்திருக்கலாம்.  சுவர்கம் எதற்கு.  நமது புண்ய பலன்கள் காரணமாக சுவர்கம் அடைந்ததாக  நினைத்தோமே என்றனர்..   

அரண்மனை வாசலுக்கு வந்து சேர்ந்தனர்.  திடுமென ப்ரகாசமாக இறங்கிய ஒளி போல வந்தவர்களைக் கண்டு மலையரசன் இமவான்  அர்க்யம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு எதிர் கொண்டு வரவேற்றார். 

இமவானை ஜங்கம-ஸ்தாவர – அசையும் அசையா பொருட்களாக வர்ணித்து மற்ற சாதாரண மக்களைப் போல அல்லாமல் விசேஷமானவர் என்று சொல்கிறார்.  கவியின் கற்பனை.

தாது தாம்ரதர:- தாதுக்களினால் சிவந்த நிறம் -மலை, சிவந்த அதரங்கள் கொண்டவர் அரசர் இமவான்.

தேவதாரு மரம் நிறைந்த மலை. அந்த மரத்தின் கிளை போன்ற புஜங்கள் உடையவர் அரசர்.   பாறை போன்ற மார்பு ப்ரதேசம், மலையின் பக்ஷத்தில் இயல்பான பெரும் பாறைகள் கொண்டது. 

இப்படி இருந்த இமவான் எதிரில் வந்து நின்றார். 

முறைப்படி அதிதி சத்காரங்களைச் செய்து, தானே வழி காட்டி மாளிகையின்  உட் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.   தூய்மையான  இடம், தூய்மையான செயல்களுடன்  உள்ளவர் மட்டுமே ப்ரவேசிக்க அனுமதிக்கப் படும்  அரச குடும்பத்தினர் வாழும் இடம் சுத்தாந்தம் -அந்த:புரம்.

மனதால் எண்ணிக் கூட பார்க்க முடியாத எதிர் பாராத அனுபவம். மேகமே இன்றி திடுமென மழை பெய்தால் வரும் சந்தோஷம் இவைகளை இந்த இடத்திற்கு வந்த ரிஷிகள் அனுபவித்தனர்.  அதே போல இமவானும்  உங்கள் வரவும், தரிசனமும் எங்களுக்கு பூத்த உடனேயே மரங்களில் பழங்கள் வந்தது போன்ற அதிசயமான சற்றும் எதிர்பாராத அனுபவம் என்றார். 

இந்த அனுபவம் சாதாரணமானதல்ல.  மூடன்- அறியாதவன் எனப்பட்டவன் திடுமென புத்திமானாக ஆகி மதிப்பு பெறுவது போலவும், இரும்பு பொன்னானது போலவும், பூலோகத்திலிருந்து அனாயாசமாக சுவர்கம் கிட்டியது போலவும்  ஞானிகளான உங்கள் காலடி பட்டு இந்த ப்ரதேசமே பெருமை பெற்று விட்டது என்றார். 

இன்றிலிருந்து இந்த தேசம் புண்ய க்ஷேத்ரமாக அறியப் படும்.  இங்கு யாத்திரையாக வருவதே பெரும் பயன் என்று மக்கள் உணருவார்கள்.  நற்குணம் மிக்க சான்றோர் நடமாடி பூமியை புனிதமாக்குகிறார்கள். அது தான் தீர்த்தம் புனிதமான இடம். இதுவரை என் மேல் கங்கை ப்ரவஹிப்பதால் நான் சுத்தமானதாக நினைத்திருந்தேன். தற்சமயம்  தங்கள் வரவால் இரட்டிப்பு மகிழ்ச்சி. உங்கள் பாதங்களில் விடும் நீர் இந்த பூமியை மேலும் பாவனமாக்கும்.

ஹே முனிவர்களே! எனக்கு இரண்டு ரூபம். அசையும் அசையா பொருட்களாக நான் ப்ரசித்தமானவன். அசையும் ஜீவனாக இமவானாக எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.   உங்களை மூவுலகும் அறியும்.  அதனால் உங்கள் வரவினால் என் மகிழ்ச்சி பல மடங்காகிறது.  இருண்டு கிடக்கும் குகைகள் போல மனித மனம். உங்கள் வரவு எங்கள் மனதின் அந்தகாரம்-  அறியாமை என்ற இருட்டு அதையும் நீக்கட்டும். 

பெருமை மிக்க உங்களுக்கு நான் செய்யக் கூடியது என்னவோ?  என்னிடம் எதுவும் பயனுள்ளதாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  ஆணையிடுங்கள்.  உங்கள் தவப் பலனே அனைத்தையும் தர வல்லது. என்னை உய்விக்க வந்ததாகவே கருதுகிறேன். சேவகனுக்கு யஜமானனின் ஆணையே அருள்.  அது அவர் அவனிடம்  ப்ரசன்னமாக இருக்கிறார் என்பதன் அறிகுறி. 

இதோ என் மனைவிகள். என் மகள். எங்கள் குல விளக்கு. எங்கள் அனைவருக்கும் உயிரானவள்.  பற்றுகளைத் துறந்தவர்கள் நீங்கள். இருந்தும் இரத்தினங்களோ, உலகியல் பொருட்களோ எதுவானாலும் சொல்லுங்கள்.   இப்படி அவர்கள் எதிரில் சொன்னதே குகைகளில் எதிரொலி கேட்பது போல தங்கள் மனதில் சொல்ல வந்ததைச்  சொல்லி விட்டது போல அந்த முனிவர்கள் அதிசயித்தனர். 

தங்கள் முன்னோடியான ஆங்கிரஸ முனிவரை மற்ற ரிஷிகள் வேண்டினர்.  அரசனுக்கு பதில் சொல்ல அவரே ஏற்றவர். அவர் சொன்னார்:

உன் சிகரங்களின் உயரம் போலவே உன் சொற்களும் எண்ணமும் உயர்வாகவே இருக்கின்றன. அது தகுந்ததே. இந்த  உயர்ந்த ஸ்தானம் உனக்கு ஏற்றதே என்று பகவான் விஷ்ணுவே அங்கீகரித்து  சராசரங்களின் மடியான (குக்ஷி-வயிறு) பூமிக்கு ஆதாரமாக நியமித்திருக்கிறார்.     (பின் குறிப்பு-3)

உன்னிடம் தோன்றி மலைச் சரிவுகள் வழியாக பூமியில் இறங்கி பிரவாகமாக  சென்று பூமியை வளம் செய்தபடி சமுத்திரத்தில் கலக்கும் நதிகள், கங்கை போன்றவை உலகை பாவனமாக ஆக்குவது போலவே உன் கீர்த்தியும் உலகில் புனிதமாகவே எண்ணப் படுகிறது.  கங்கை முதலிய புண்ய நதிகளில் நீராடி பெரும் நன்மையை உன் சிகரங்களில் யாத்திரை செய்தும் அடைவர்.  பகவானின் பாதத்தில் இருந்து வந்தவள் என்று கங்கையை புகழுவது போலவே உன் தலையிலிருந்து இறங்குகிறாள் என்றும் புகழப் படுகிறாள். 

சர்வ வ்யாபியான பகவான், குறுக்கும், நெடுக்கும், மேல் நோக்கியும் பாதங்களால் அளந்தார். அது ஒரே ஒரு சமயம் தான். எப்பொழுதும் இல்லை.  இயல்பாகவே நீ வ்யாபகமாக- பரவி நிற்கிறாய்.  (பின் குறிப்பு-4)  இந்திராதிகளின் மத்தியில் பொன் மயமான சிகரத்துடன் நீயும் பதம் வகிக்கிறாய். அசையா பொருட்களில் கடினமான தன்மை உன்னிடம் முழுமையாகவே இருக்கிறது.  வணங்காத தன்மை உன் இயல்பு. அதுவே தற்சமயம் உன்னுடைய அசையும் உருவமாக பக்தியினால் வணங்கி நிற்கிறது. 

எனவே நாங்கள் வந்த காரியத்தைச் சொல்கிறோம். கேள். உண்மையில் உன் பொறுப்பே.  நாங்கள் அதில் பங்கு ஏற்பவர்களே.   சுப காரியங்கள்  நடை பெறும் பொழுது அதன்  பலன்கள் பலரையும் நன்மை பெறச் செய்கிறது.  உன்னைச் சார்ந்த சுப காரியம் நாங்கள் இடையில் உபதேசம் அல்லது தூது வந்தவர்களே. 

அணிமாதி குணங்கள் என்று சொல்லப் படும் சித்திகள், அஷ்டைஸ்வர்யம் முதலியவை எவரை சார்ந்து அமைந்துள்ளனவோ,  தனக்குவமை இல்லாதான்,  பரம ஈஸ்வரன், சந்திரனைச் தலையில் வைத்துள்ளவன், 

த்ருதி- உறுதி முதலான குணங்கள் ஒன்றோடொன்று இணைந்து அவைகளின் திறமைகளை பகிர்ந்து கொண்டு அஷ்ட மூர்த்தியாக  தானே எட்டு விதமான உருவங்கள் எடுத்துக் கொண்டு படைத்த  மஹேஸ்வரன், தானே  அந்த லோகங்களை காத்தும் வருகிறான்.   பொதுவாக சாலைகள்  பிரயாணம் செய்ய பயன்படுபவை.  அவைகளில் மனிதர்கள்,  குதிரைகள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் அவை தாங்குகின்றன என்பது வெளிப்படையாக தெரியாதது  போல. 

யோகிகள் இவரைத் தேடுகிறார்கள், ஒவ்வொரு புண்ய க்ஷேத்திரத்திலும் இருப்பவன்.  शम्भू சம்பூ என்ற இவரின் பதம் சுலபமாக கிடைக்காது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  பிறவியற்ற நிலையை பெறுவதே இவரை அடையும் வழி.  அதற்கான சாதனைகளை விடாமல் செய்வர். 

அவர் உன் மகளை  தன் உலகங்களை பாதுகாத்தல்  என்ற செயலுக்கு  உடன் இருப்பவளாக வர வேண்டும் என்று விரும்புகிறார். அவரே வரதன் – வரம் அருளுபவர்.  தன் விருப்பத்தை எங்கள் மூலம் சப்த ரூபமாக சொல்லி உன் மகள் பார்வதியை விவாகம் செய்து கொடுக்கும் படி வேண்டச் சொல்லியிருக்கிறார். 

இந்த சொல், அவருடையதே. அதனால் யோசிக்காமல்  உன் மகளையும் அவரையும் இணைத்து வை.  உன் மகள் நல்ல கணவனை அடைந்து சௌபாக்யவதியாக இருப்பாள்.  மகளைப் பெற்றவர்கள்  தங்கள் பிரியமான  மகளை தகுந்த வரனுக்கு கொடுத்தே அதிக  திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவார்கள். அது இயல்பு. (  वागर्थाविव संपृक्तौ – रघुवंशम्  – சொல்லும் பொருளும் போல இணை பிரியாமல் இருப்பவர்கள்) 

மேலும், அவர் இந்த சரா சரங்கள், பஞ்ச பூதங்கள் உட்பட உள்ள ஜகத்தின் பிதா – தந்தை ஸ்தானத்தில் உள்ளவர்.  அதனால் உன் மகள் ஜகன்மாதா எனப் பெருமை பெறுவாள்.  தேவலோக வாசிகள், தந்தையான சிதிகண்டனை வணங்கி விட்டு தாயாக இவளை வணங்குவர். அவர்களுடைய கிரீடங்களின் மணிகளின் ஒளிக் கிரணங்களால்  இவள் பாதங்கள் அலங்கரிக்கப் படட்டும்.  

சம்பூ, 

உமா வதூ- மணப் பெண் , நீ கொடுப்பவன், நாங்கள் தான்  யாசிப்பவர்கள் ஆவோம்.  மணமகன் போதாதா, உன் குலத்தையே இந்த சம்பந்தம் மேம்படுத்தும்.  விஸ்வ குருவுக்கே குருவாக ஆவாய்.  அனைவரும் துதிக்கும் , பாடகர்களுக்கு பாடு பொருளாக உள்ளவனை சம்பந்தியாக, பெண் கொடுத்தவன் என்ற பெருமையால் அவரே உன்னை வணங்கும் தகுதியை அடைவாய்.

இந்த சம்பாஷனைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி எதுவும் பேசாமல் தன் கையிலிருந்த பூவின் இதழ்களை   எண்ணியபடி இருந்தாள்.  கேட்டுக் கொண்டிருந்தாலும் வந்தவர்கள் ரிஷிகள், மரியாதைக்குரியவர்கள் என்பதால் தங்கள் உணர்ச்சிகளை காட்டக் கூடாது என்ற நியமத்தை கடை பிடித்தாள்.

சைலேந்திரன் தனக்கு பூரண சம்மதமே என்றாலும் மேனா முகத்தைப் பார்த்தார்.  கன்யாவின் மனதை அறிந்தவள் தாயாரே என்பது இல்லறத்தார் அறிந்ததே.  அவளும் தன் சம்மதத்தை கண்களாலேயே தெரிவித்தாள்.  மேலும் மேலும் யோசித்து இது பல வகைகளிலும் நியாயமே, நன்மையே என்று நினைத்து மங்கல அலங்காரங்கள் செய்வித்து மகளை  அழைத்து வந்து தருவதாக வாக்களித்தார். 

அதன் பின் மகளை அழைத்தார் இமவான். மகளே! வா, விஸ்வாத்மா -மூவுலகத்தின் சகல உயிரினங்களுக்கும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கும் தலைவனே  உன்னை வேண்டுகிறார். நாங்களும் சம்மதிக்கிறோம்.  முனிவர்கள் வந்து யாசிக்கிறார்கள். இல்லறத்தானுடைய கடமை இது.  தகுதி வாய்ந்தவர்களுக்கு வேண்டியதை தருவது எனப்படும். அதிலும் உத்தமமான  கன்யா தானம் என்ற மிகப் பெரிய பாக்யம் கிடைத்துள்ளது. பின் ரிஷிகளைப் பார்த்துச் சொன்னார், இவள் त्रयम्बकन्  த்ரயம்பகனுடைய வருங்கால மனைவி. உங்கள் அனைவரையும் நமஸ்கரிக்கிறாள், என்றார். 

மகத்தான செயல் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ந்த ரிஷிகள், அவரை பாராட்டினர்.  பார்வதியையும் ஆசீர்வதித்தனர்.  அருந்ததி அவளை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டாள்.  கண் கலங்க நின்றிருந்த தாயார் மேனாவையும் ஆசீர்வதித்தார்.   அவள் மகளிடம் கொண்ட பாசத்தால் பிரிய மனமின்றி இருப்பதையறிந்து,  குணவானான வரனுக்கு மகளைத் தருகிறாய். வருந்தாதே என்று  சொல்லி சமாதானம் செய்தாள்.   

விவாக தேதியைப் பற்றி பேசினர்.  ரிஷிகள், அடுத்து வரும்  நாலாவது நாள் நன்றாக இருப்பதாகச் சொல்லி விடை பெற்றனர். திரும்பி வந்து   பகவான் மகேசனிடம், விவரங்களைச் சொல்லி விட்டு ஆகாய மார்கமாக தங்கள் இருப்பிடம் சென்றனர். 

பசுபதியும், மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டுமே என்பது போல பொறுமையிழந்தவராக ஆனார்.

(இது வரைஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யவத்தின்  उमा प्रदानो – உமா ப்ரதானோ என்ற ஆறாவது அத்யாயம்)

குமார சம்பவம் - மஹா காவ்யம்

குமார சம்பவம் மஹா காவ்யம் – 5 குமார சம்பவம் மஹா காவ்யம்- 7

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.