மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று

1606 ஹொன்னாவர்

ரோகிணி படுக்கை அறைக் கதவைத் திறந்து வெளியே வர முயன்றபோது ராத்திரி மழையில் கொஞ்சம்போல் ஊதிப்போன அந்த மரக்கதவு திறப்பேனா என்று அழிச்சாட்டியம் பிடித்தது. 

கதவின்மேல் தோளை வைத்து ஒரு கோணத்தில் திரும்பி காலை அழுத்தித் தரையில் வைத்துத் தள்ளினாள். கதவு திறந்துகொண்டது. இனி வாசல் கதவும் தோள் சேவையை எதிர்பார்க்கும். 

படுக்கையறைக்கு வெளியே நிறுத்தியிருந்த நீளம் கூடி அகலம் குறைந்த நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள வெட்கினாள் அவள். ராத்திரி முழுக்க நேமி அவள் உடம்பு முழுவதும் கையெழுத்துப் போட்டு வைத்திருந்தான். 

அவன் உடலின் வீர்யம் அவளில் இறங்கி நிறைத்திருக்க அவன் வாடைப் படலமாக ரோகிணியோடு வெளியே வந்திருந்தது ரோகிணிக்குப் பிடித்திருந்தது. இந்த சுகம் இன்னும் எத்தனை நாளோ. 

அவளுக்கு அதிர்ச்சியான கணக்காக நேமியின் அடுத்த குழந்தையை அவள் சுமந்து கொண்டிருப்பது உண்மையா என்று இன்னும் இரண்டு நாளில் வைத்தியர் சொல்வார். கருப்பிடித்து வளர்ந்து வயிற்றில் உதைத்து ஒன்பது மாதத்தில் பிரசவமாகி வரத் தயாராக இன்னொரு உயிர் இங்கே இருக்கலாம். 

நேமியிடம் சொன்னால் மஞ்சுநாத் மேல் வைத்த பேருக்குக் காட்டும் பிரியம் கூட அந்தச் சிசுமேல் காட்டப் போவதில்லை அவன். ஆண்சிசுவை கருவிலேயே வதைக்க முன்கை எடுக்கும் கொடூரன் நேமிநாதன். அது பெண்சிசுவாக இருந்தால் சுமக்கும் வயிற்றில் தீவட்டி செருகி எரித்திருப்பான் அந்த காட்டுமிராண்டி. 

இருக்கட்டும். குளித்து விட்டு ஜெருஸூப்பா போய்ச் சேர்ந்து, ராத்திரி மஞ்சுநாதுக்கு உப்பிட்டு சமைத்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறாள் ரோகிணி. ராத்திரி மிட்டாய்க்கடை ஊழியர்களான திலகனும், மலையாளம் பேசும்  துப்புரவு ஊழியனும் படுத்திருக்க, நடுவில் குழந்தை மஞ்சுநாத் துயில் கொள்ளும் பெரிய ஹால்   மூத்திரவாடையோடு ஈரமாகக் கிடக்கிறது சகஜம். 

சித்திரம் :அருண்

மஞ்சுநாத் அவன் வயதுக்கு அதிகம் பேசினாலும், ராத்திரி சிறுநீர் கழிப்பதை முடித்து படுத்துக் கொள்ளச் சொன்னால் கேட்காமல் படுக்கை நனைக்கிறான். ரோகிணி அதை  குணப்படுத்த காலம் இனியும் இருக்கிறதா?  

வாசல் கதவை யாரோ இடிக்கிற ஓசை மெல்லியதாகக் காதில் கேட்டது. சூரிய உதயத்தில்  சக சயனம் செய்ய யாரையாவது நேமிநாதன் ஏற்பாடு செய்திருக்கிறானா என்று மற்ற நாளாக இருந்தால் கேட்டிருப்பாள். இது யுத்தம் வரப்போகும் காலம். கலந்திருக்க, சுகித்திருக்க, பாதுகாப்பாக அணைப்பில் ஒடுங்கி இருக்க இதுவே இறுதியான தினமாக இருக்கலாம்.

வாசல் கதவு திறக்க மாட்டேன் என்று படுக்கையறைக் கதவை விடப் பிடிவாதமாக நின்றது. தோளால் தள்ளி, கால் அழுத்தத் தரையில் வைத்து இருகை கொண்டு வெளியே நெம்பித் திறக்க முயன்று கதவைக் கை குவித்து இடித்து என்னென்னமோ செய்து பார்த்தாள். அது திறக்க மாட்டேன் என்றது. 

யாராக இருந்தாலும் கொஞ்சம் பொறுங்க. கதவு திறக்க மாட்டேங்குது என்று சொல்லியபடி கதவை இடிக்க சட்டென்று திறந்து ரோகிணி மோதிக்கொண்டது ஏலமும் கிராம்பும் சந்தனமுமாக நல்ல வாசம் பகர்த்தும் அழகான ஒரு பெண்மேல். ரஞ்சனாதேவி.

ரோகிணியின் விழிகள் வியப்பால் விரிய, வாங்க என்றாள் ரஞ்சனாவை. 

நீ வெளியே போய்க்கிட்டு என்னை வாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்? உன் கூட வரச் சொல்றியா? 

ரஞ்சனாதேவி இகழ்ச்சியில் உதடுகள் சுழிக்க பக்கவாட்டில் பார்த்துச் சொன்னாள். 

என் கூட யாரும் வரவேண்டாம். எனக்கு வழி தெரியும் என்றாள் ரோகிணி. 

உனக்குத் தெரிஞ்ச வழி எல்லாம் மறைக்க வேண்டிய உடம்பைக் காட்டி மயக்கி வஞ்சகமாக வழிநடத்தி  நாசமாகப் போக வைக்கறதுதான். தெருவில் ராத்திரி திரியற விலைமகள் கூட ஒரு வாடிக்கையாளனோடு கிடக்கறபோது இன்னொருத்தன் கிட்டே  வலைவீச மாட்டா. ஆனால் நீ” என்று கோபம் மேற்படச் சொல்லி நிறுத்தினாள் ரஞ்சனா. 

மன்னிக்கணும். தெருவில் திரியற விபச்சாரி எப்படி வலை விரிப்பான்னு எனக்குத் தெரியாது. ராஜகுமாரி அதுலே ரொம்ப தேர்ந்தவள் போல இருக்கு. அனுபவத்தை அவிழ்த்து விட்டா அடியேனும் கொஞ்சம் கேட்பேன்

 கிண்டலாகச் சொல்ல ரஞ்சனாதேவி கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டாள். 

அவள் ரோகிணி காதருகே போய் மிரட்டும் குரலில் சொன்னாள் –

 என் வீட்டுக்காரனை என்னத்தைக் காட்டி மயக்கினேன்னு கேட்க மாட்டேன். ஊருக்கெல்லாம் நீ காட்டறது தானே? அது ஒண்ணு மட்டும் உனக்கு இடுப்புக்குக் கீழே வாய்ச்சிருக்கா இல்லே  சந்திரன் மாதிரி உடம்பு முழுக்க அதுதான் இருக்கா?  

 சொல்லும்போதே வாயில் எழுந்த உமிழ்நீரை அப்படியே ரோகிணி முகத்தில் துப்பினாள். ரோகிணி முகத்தில் எச்சில் வடிய ரஞ்சனா அருகில் வந்து தாழ்ந்த சத்தத்தில் சொன்னாள் –

நீ துப்பினா நான் தொடச்சுப்பேன். அவ்வளவுதான். பதிலுக்கு உம்மேலே துப்ப மாட்டேன். உன் வீட்டுக்காரன் முகத்திலே துப்பி அதை வழிச்சு அவனைத் திங்கச் சொல்வேன். நான் சொல்லாமலேயே அதைச் செய்வான் அவன். ராத்திரி பூரா அவனை என்ன எல்லாம் செய்ய வைச்சேன்னு சொன்னேன்னா, நான் அவனை கோலுக்கு ஆடும் குரங்கு போல் எப்படி எல்லாம் செஞ்சு வச்சிருக்கேன்னு புரியும். நீயும் மிளகுக் கிழவியும் நாசமாகப் போங்க. உன் வீட்டுக்காரனை அதிவிரைவில் ஒண்ணுமில்லாதவனாக்கி கோமணத்தோட அது கூட இல்லாம நாற்சந்தியிலே என் காலடியிலே சுருண்டு கிடக்க வைக்கப் போறேன். பாரு. கூடவே நீயும் வந்து கிட. காலங்கார்த்தாலே எங்கே அரிச்சுதுன்னு இங்கே வந்தே? இல்லே பெத்ரோ துரையை வாயால் உபசரிக்க வந்தியா?

கையால் அசிங்கமான சைகை செய்தபடி ரஞ்சனாதேவியைக் கேட்டாள் ரோகிணி.  கோபம் மீதூர நின்றிருந்தாள் ரஞ்சனா. 

நான் உன்னைப் போல் பத்தினி பாஷை பேசமாட்டேன் தான். ஆனா உன்னை கணிகை மொழி பேசவச்சு அதிலேயே சிந்திக்க வச்சு பிரசன்ன விபசாரி ஆக்கிட்டேனே எனக்கு அதிலே தான் ஜெயம் என்று சிரித்தபடி கூந்தலை அள்ளி முடிந்தாள் ரோகிணி . 

ரஞ்சிதா தன் காலில் இட்டிருந்த செருப்புகளை மெல்லப் பாதத்திலிருந்து விடுவித்தாள். அவள் குனிந்து பாதரட்சையைக் கையில் எடுத்துக்கொண்டு திரும்ப ரோகிணி அவளுடைய சாரட்டில் ஏறிப் போயிருந்தாள். 

ரோகி என்ன சத்தம் என்று கேட்டபடி உள்ளே யிருந்து வந்த நேமிநாதன் கண்ணில் கோபத்தை அடக்கமாட்டாமல் கையில் ஒற்றைச் செருப்போடு நிற்கும் ரஞ்சிதா பட்டாள்.  

சௌக்கியமா? ரஞ்சனா கேட்க அமைதியாக நின்றான் நேமிநாதன். 

ரோகியாமே.   நீர் ரோகியா அவள் ரோகியா அல்லது ரெண்டு பேரும் சாக்கடையில் சேர்ந்து விழுந்து புரண்டு உடம்பெல்லாம் ரோகமா? குரலை உயர்த்தாமல் கேட்டாள் ரஞ்சனா

ரஞ்சி, எனக்கு எத்தனையோ முக்கிய வேலைகள் இந்த தினத்தில் இருக்கின்றன. உன்னோடு சச்சரவு வளர்க்க எனக்கு நேரம் இல்லை. நீ கோட்டையில் உன் வசிப்பிடத்துக்குத் திரும்பிப்போ. அதைவிட சிலாக்கியமானது, நீ உடுப்பிக்கு, உன் தாய் வீட்டுக்கே திரும்பலாம். அங்கே எவ்வளவு நாள், மாதம் முடியுமோ அவ்வளவு தங்கி இரு.   

மன்றாடும் தொனியில் கூறினான் நேமிநாதன். 

ஏன் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மிட்டாய் தேவரடியாளோடு குலாவ உமக்கு ஏது இடைஞ்சல்? 

இந்த இடத்தில் குரல் நடுங்க, ரஞ்சனா மெல்லக் குரலெடுத்து அழலானாள். 

உனக்கு என்னதான் வேணும் சொல்லு. விடியல் நேரத்திலே அழுது ஆர்ப்பாட்டம் செய்யணும்னே இங்கே கிளம்பி வந்திருக்கே. அப்படித்தானே? 

ஆமா அப்படித்தான். 

எதுக்காகவாம்? 

போன மாதம் பௌர்ணமிக்கு முந்திய ராத்திரி எனக்கு நீங்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கட்டாயப்படுத்தத்தான். வேறே எதுக்கு? 

போனமாசம் என்ன வாக்குறுதி கொடுத்தேன்? யாருக்கு?

நேமிநாதன் யோசித்துக் கொண்டிருந்தான். 

நினைவில்லையா அல்லது மறந்ததாக நடிக்கிறீர்களா? பெத்ரோ துரை மாளிகையிலிருந்து அந்த ராத்திரி என்னை அழைத்துக்கொண்டு சாரட்டில் வீடு திரும்பிய போதும், அங்கே என்னோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டு கிடந்தபோதும் என்ன சொன்னீர்களென்று நினைவு இல்லையா? 

நேமிநாதன் கையை அவசரமாகக் காட்டினான். சரி சரி அதுக்கென்ன இப்போது? 

ஒண்ணுமில்லே. அந்த ராத்திரியில் எனக்கு கர்ப்பதானம் அளித்து நான் பெற்றெடுத்த பெண்குழந்தை மல்லீஸ்வரி முகம் காண ஒருதடவையாவது மிர்ஜான் மாளிகை வந்தீரோ. 

நேமிநாதன் உறைந்து போய் நின்றான். என்னது இது புதுப் பிரச்சனை. யார் மல்லீஸ்வரி? நான் எப்போது? 

அவன் பாதி வாக்கியத்தில் நிறுத்தினான். 

ஏன் எப்போது நீர் என்னோடு ராத்திரி முழுக்க சுகித்துக் கிடந்தீரோ நினைவு வரவில்லையா, அந்த சுகம் எல்லாம் உம் போகம் என் போகத்தோடு முந்தாமல் இழைந்து ஒருசேர திரண்டு குழந்தையானது உமக்குத் தெரிந்திருக்கும், ஒரு தடவை வீட்டுக்கு வந்திருந்தால். 

நேமிநாதன் சங்கடத்தில் நெளிந்தான்.  ஏய் நீ ரஞ்சனா தானா, இப்படி வெட்டவெளிச்சமாகப் பேசமாட்டாளே என் ரஞ்சனா. அவள் மாதிரி வேறே யாரும் கிளம்பியிருக்காங்களா கெட்ட வார்த்தை தவிர மற்றது உச்சரிக்காத நாவோடு? 

அவன் சற்று உரத்துக் கேட்க, ரஞ்சனா பக்கத்தில் வந்து அவன் கையைப் பிடித்து தடதடவென்று உள்ளே கூட்டி வந்தாள். அவனைப் படுக்கையில் தள்ளிவிட்டு வாசல் கதவைத் தாளிட ஒரு நிமிடம் போராடி கதவைச் சாத்தியபோது உரக்க முணுமுணுத்தாள் – மிட்டாய் தேவடியா மாதிரித்தான் கதவும் போல. மூடறதே இல்லையோ..

அவள் படுக்கையில் நேமிநாதனை இறுக அணைத்துக் கொண்டு காதில் சொன்னாள் – அம்மாவோடு என்ன சண்டை? வீட்டுக்கு வாடா. 

நேமிநாதனுக்கு அவளுடைய அண்மையை விட அவள் அதிகாரம் பண்ணி இன்பம் அனுபவிப்பது போதை ஏற்றிக்கொண்டிருந்தது. 

ஏன் வராட்ட என்ன பண்ணுவே என்று அப்பாவியாக விசாரித்தான். 

பாய்ந்து அவன் உயிர்த் தலத்தைப் பற்றி ‘பிடுங்கி எடுத்துடுவேன்’ என்றாள். 

சென்னா அம்மாவுக்கு உடம்பு சரியில்லே. அவ இருக்கப் போறது இன்னும் கொஞ்ச காலம் தான். அது நிம்மதியும் சந்தோஷமுமாகப் போகட்டுமே. வீட்டுக்கு வா. வாடான்னா. 

பிடி இறுகியது. 

விட்டுடேன் முழுசா வரவேணாமா? அவன் கேட்டான் சிரித்தபடி.

அவனை மடியில் கிடத்திக்கொண்டாள் மெதுவாக. அவளுக்கு அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் ஒரு நிமிடத்தில் அபாரமான காதலும் பிரியமுமாகி இருந்தது. 

ரஞ்சி, அது யார் மல்லி? எங்கேயிருந்து வந்த யாருக்கு பிறந்த குழந்தை? 

அவன் பயப்படுவதுபோல் கேட்க நமக்கு அந்த ராத்திரி கொடுத்த பரிசுதான். உன்னோடு வந்து என்னோடு இருந்த பரிசு. 

நிஜம்தானா சொல்லு நான் உன் வயிறு மேடிட்டுப் பார்க்கவே இல்லையே. 

தேவகர்ப்பம். வெளியே தெரியாது.  இன்னிக்கு இன்னொண்ணு ஏற்படும்னு என் ஜாதகத்திலே எழுதி இருக்கு. சொன்னபடி அவள் பலமாகச் சிரிக்க, நேமி அவளை இறுக அணைத்தான். 

அவர்கள் பிரபஞ்ச நேரமெல்லாம் ஒழிவு நேரமானதாக சாவதானமாக சந்தோஷம் அனுபவித்தார்கள். காலை இரவாக மாறியதாக மயங்கி முயங்கினார்கள். 

முடித்துக் கிடக்க அவனுடைய தலையில் கையளைந்து ரஞ்சனா சொன்னாள் – சண்டை, யுத்தம், போர் எதுவும் வேணாம். நீங்களே இன்னும் ஒரு வருடத்தில் ஜெருஸுப்பாவுக்கு மன்னராகி விடுவீர்கள். 

எப்படி சொல்றே? நேமிநாதன் அவள் மார்பில் முத்தமிட்டு கேட்டான்

அவன் தலைமுடியை அளைந்தபடி ரஞ்சனா சொன்னாள் 

நான் சொன்னேனே அம்மா சென்னபைரதேவி ராணி பெரும் உதர ரோகத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிரோடு இருக்க இன்னும் ஒரு வருடம் முடிவுக்கோடு ஏற்பட்டிருந்தால் அதுவே அதிகம். 

ஏன் என்ன பண்றது அம்மாவுக்கு

முன் மாதிரி இல்லை. நின்றால் உட்கார்கிறார். உட்கார்ந்தால் சற்று நேரத்தில் சாய்ந்து உட்கார்கிறார். சாய்ந்தால் நீட்டி நிமிர்ந்து கிடக்கிறார். கிடந்தால் பக்கவாட்டில் திரும்பி வயிற்றைப் பிடித்துக்கொண்டு வலி பொறுக்க மாட்டாமல் வேதனையில் முனகுகிறார். 

மருந்து சாப்பிடவில்லையா?

வைத்தியர் மிர்ஜான் கோட்டைக்குள் வருவதில்லை. மிங்கு இறந்தபிறகு வீட்டையும் காலி செய்துவிட்டு இங்கே ஹொன்னாவரில் தங்கியிருக்கிறார். கொஞ்சம் தயவு செய்யுங்கள். அவரைப் பார்த்து அம்மாவுக்கு மருந்து வாங்கிப் போகத்தான் இப்போ நான் வந்தேன். அவர் வந்து சிகித்சை செய்யறேன்னு சொல்றார். அம்மாவுக்குத்தான் பிடிவாதம். 

எதுக்கு பிடிவாதம்?

நான் பார்த்து வளர்த்த பிள்ளை இப்போ என்ன ஏதுன்னு யோசிக்காமல் கெலடி வெங்கடப்ப நாயக்கரும் பில்கி திம்மய்யராஜுவும் சூழ்ச்சி பண்ணினா கூடப்போய் விரோதம் பாராட்டறானேன்னு அவங்களுக்கு வருத்தம். 

நான் என்ன பண்ணனும்னு சொல்றே?

அம்மாவை புறக்கணிக்க வேண்டாம். அவர் ஒரு வருடத்தில் உங்களுக்கு ஆட்சி உரிமை தராவிட்டால், மைசூருவில் இருந்து என் சிறியதகப்பனார் படைகளோடு வந்து வாங்கித் தந்துவிடுவார் 

ரஞ்சனா சொல்ல, மனதில் சிரித்துக் கொண்டான் நேமி. 

மைசூருவுக்குப் பக்கம் பத்து குக்கிராமப் பிரதேச நிர்வாகி ஆன ரஞ்சனாவின் சிற்றப்பனிடம் படை, துப்பாக்கி, பீரங்கி என்று ஏதும் இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள்.

அந்த மிட்டாய் தாசியை இனிமேல் படி ஏற்றவேணாம். அவள் போனாலே லட்சுமி வந்துடுவா. பராசக்தியும் சரஸ்வதியும் கூடவே வருவாங்க. இந்த விலைமகளை விட்டுட்டு வந்தா உங்களுக்கு எல்லா கிரகமும் உச்சத்தில்தான் என்று ஜோசியர் சொல்றார் நம்புங்க. 

எல்லாவற்றுக்கும் தலையாட்டியபடி கையில் பற்றிய கொங்கையைப் பார்த்தபடி இருந்தான் நேமி.

அது கையோடு வந்துவிடப் போகுது. வந்தால் மாட்டிக்க வேறே ஜதை கிடையாது

அவன் சிரித்தபடி ரஞ்சனவை அணைத்துக்கொண்டான்.

போய்க் குளித்து விட்டு வருகிறேன். உடம்பு முழுக்க எச்சில் பண்ணி வச்சிருக்கீங்க. இருங்க. ஓடிப் போயிடாதீங்க

வாசல் கதவைத் தள்ளித் திறக்க அது முழுக்க ஒத்துழைத்தது, நேமிநாதன் மாதிரி.

சாரட் ஓரமாக நின்று கொண்டிருந்தது. குதிரைகள் வீட்டுத் திண்ணைப்பக்கத்துக் கல் தூணில் கட்டப்பட்டிருந்தன. சாரட்டில் ஏறி உள்ளே இருந்து பிரம்புப் பெட்டியை நகர்த்துவதற்குள் ரதசாரதி மாமல்லன் ஓடி வந்து அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்து பெட்டியை ஓரமாக வைத்து வெளியேறினான். 

படுக்கையறையிலேயே இன்னும் உட்கார்ந்து கொண்டிருந்தான் நேமி. ரஞ்சனா அவன் தோளைத் தொட்டு அணைத்து, குளியல் முடித்து வரேன். போயிட மாட்டீங்களே என்றாள். 

நீ நச்சரித்துக்கொண்டே இருந்தால் ஓடிப் போயிடலாமான்னு நினைக்க ஆரம்பிச்சுடுவேன் என்றான். 

நீ ஓடுடா பார்க்கலாம். வல்லியை இல்லாமல் ஆக்கியிருப்பேன் என்றாள் ரஞ்சனா. 

யாரு வல்லி? 

மல்லிக்கு தங்கச்சி, இப்போ தான் பெயர் வைத்தேன்2 என்றபடி சிரித்து விலகி ஓடினாள். மல்லி மாதிரி இல்லே வல்லி, இன்னிக்கு அரைமணி நேரம் முன்புதான் உன்கிட்டே இருந்து என்கிட்டே பிரியத்தோடு வந்திருக்கா என்றாள் வாஞ்சையோடு.

கதவு தட்டும் ஓசை. வந்துட்டாளா என் சககளத்தி என்று கேட்டபடி தோளில் போர்த்திய துண்டோடு நின்றாள் ரஞ்சிதா. 

பட் ஏற்பாடு செய்த மடையன். காலை ஆகாரம் செய்து கொடுக்க வந்திருப்பான். 

பகலுக்கும் ராத்திரிக்கும்? ரஞ்சனா கேட்டாள். 

அது உசிதம் போல் நடத்திக் கொள்வதுதான் என்றான். 

உசிதம் போல அப்படீன்னா? மது பருகிவிட்டா அல்லது மது பருகும் முன்பா அல்லாமல் மது தான் உணவா? 

அதெல்லாம் விட்டுட்டேன் என்று ரஞ்சனாவின் தோளைப் பற்றியபடி அவள் கண்களைப் பார்க்காமல் தவிர்த்துச் சொன்னான். 

நம்பறேன். வேறே வழி. அப்படி ஏன் சிரமப்படணும். நீங்கள் சரி என்றால், அம்மா உங்களை விலக்கி வைத்த விளையாட்டை இன்றோடு முடித்துக் கொள்வாள். எனக்குத் தெரியும் என்றபடி வாசலுக்குப் போனாள். 

சமையல்காரன்  ஆனந்தராயன் பின்குடுமி ஆட நமஸ்காரம் என இருகையும் கூப்பி உள்ளே நுழைந்தபோது ரஞ்சனா குளியலறைக்குள் போயிருந்தாள்.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு  மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.