கோபே, (Kobe) ஜப்பானில் மார்ச் 9,1957ல் பிறந்து தற்சமயம் கேம்ப்ரிட்ஜில் வசிக்கும் க்யோகோ மோரி (Kyoko Mori) எழுதிய Stone Field, True Arrow நாவலைப் பற்றிய ஒரு பறவைப் பார்வை.

அதற்கு முன் சிறிதாக அவரைப் பற்றி சில வார்த்தைகள். 1977ல் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த இவர், ஆங்கில மொழியிலும், அதன் இலக்கியத்திலும் தன் மனதைப் பறிகொடுத்தார். ப்ரிக்ஸ் கோப்லேன்ட்டில், (Briggs Copeland) படைப்பூக்க எழுத்து (Creative Writing) என்பதைப் போதித்து வரும் பேராசிரியை இவர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். குடியரசு கட்சியின் ஆதரவாளர், பெண்ணிய சிந்தனை கொண்டவர், விவாகரத்து ஆனவர். அவரது தாயான டாகாகோ (Takako) தற்கொலை செய்து கொண்டதும், கோபேயின் மலைகளும், நதிகளும் அவரைப் பாதித்த விஷயங்கள். கவிஞரும், உரை நடையாளருமாகிய இவர் அபுனைவுகள், புனைவுகளில் குறிப்பிடத் தகுந்த இடத்தில் உள்ளார். பல விருதுகள் பெற்றுள்ளார். அவரது எழுத்துக்களில், ஜப்பானிய தொன்மங்களும், உலக மனிதர்கள் அதிலும் குறிப்பாகப் பெண்கள் கொள்ளும் தனிமையும் இடம் பெறுகின்றன.
இவரது நாவல்களின் சிறப்பு என்பது கதைமாந்தர்கள் ஆசிரியரின் குரலில் பேசாதது. எந்தப் பாத்திரத்தைப் பற்றியும், எந்தவிதத் தீர்ப்புமோ, இவர் நல்லவர், அவர் தீயவர் என்ற பேதமோ இவர் காட்டுவதில்லை. அப்படியே ஒரு நபரின் குணத்தைச் சொல்ல வேண்டுமென்றால், அதை மற்றொரு கதாபாத்திரத்தின் மூலம் சொல்கிறார். இவருடைய படைப்பூக்கம், நுண்மதி, இயல்பான நிகழ்வுகள், இயற்கை அனைத்துமே அழகாக இந்த நாவலில் வெளிப்படுகிறது.
ஆசிரியைக்கு, வண்ணம் தீட்டுதல், துணி நெய்தல், பறவைகளைப் பார்த்தல், விண்மீன்களை அவதானித்தல், இசை, இயற்கை என்று பல துறைகளில் தெளிவான அறிவு இருக்கிறது. தகுந்த இடத்தில், தகுந்த கதை மாந்தர் மூலம் இதை அவர் வெளிக்காட்டுகிறார். அதே போல, மனித உணர்ச்சிகள், வினைகள், எதிர்வினைகள், மகிழ்ச்சி, தனிமை, நட்பு, காதல் அனைத்தும் திறமையாகக் கையாளப்படுகின்றன.
மாயா என்ற பெண்ணைச் சுற்றி ஒரு கதை அருமையாக நெய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் அவளின் வட்டத்தில் செயல்படுபவர்கள். இதில் பல ஜோடிகள் வருகிறார்கள், மாயா & ஸ்காட், மாயா &ஜெஃப், மாயா & எரிக், ஜெஃப் & நான்சி, மாயா & யாகோ, யாகோ & டான், டான் & மெரிடித், பெக்& லார்ரி, நேட் & கே, கே & பில், ஜெஃப்பின் பெற்றோர்கள், எரிக்கின் பெற்றோர்கள், கே & மாயாவின் தந்தை. இத்தனை நபர்கள் இடம் பெறும் நாவலில் எந்தப் பாத்திரமும் மற்றவரை நகலெடுத்தது போல் இல்லை என்பதுதான் இதன் வெற்றி.
நாவலின் மைய இழை புலம் பெயர்தலும், தனிமையும்
ஒசாகா, ஜப்பானில், மாயாவின் தந்தை இறந்த செய்தியுடன் நாவல் துவங்குகிறது. மாயா தன் இளம் வயதில், தன் அன்னை வசிக்கும் அமெரிக்காவிற்குப் புலம் பெயர்கிறாள். மாயாவின் அன்னை, மாயாவின் தந்தையை விவாகரத்து செய்துவிட்டு, இருமுறை அமெரிக்காவில் மணம் செய்து கொண்டு வாழ்கிறார். தன் மகளிடம் அவருக்கு பாசத்தை விட, அவளுக்கான பொறுப்புக்களால் எரிச்சல் தானிருக்கிறது. மேலும், மாயா தன் குணங்களைக் கொள்ளாமல், செல்வத்தில் நாட்டமில்லாமல், புதுச் சூழலில் உள்ள வேலை வாய்ப்புக்களைப் பயன் படுத்தாமல், நெசவு செய்வது அவருக்குப் பிடித்தமாகவேயில்லை.
மாயாவும், அவள் தாயான கேயும் இரு துருவங்கள். கேயை வெளி உலகம் சமைக்கிறது, மாயாவை அவளது உள் உலகம் வடிவமைக்கிறது. மிகு செல்வம் என்பதில் நாட்டம் கொண்டவர் கே; நிறைவே செல்வம் என்பது மாயா. தன் விருப்பங்களை ஓங்கி ஒலித்து நிறைவேற்றிக் கொள்பவர் கே. மாயா முதிர்ச்சி அடைந்தவள், அதனால் தேவையான நேரங்களில் மட்டும், அதுவும் அளவாகப் பேசுபவள். கே, ஜப்பானை, உலகின் தனிமையான இடம் என்று சொல்கிறாள்; மாயாவிற்கு அவள் தந்தையே ஜப்பான்.
சிறு வயதில் தந்தையைப் பிரிந்து தூர தேசத்திற்குப் புலம் பெயர்ந்தது மாயாவிற்குச் சிக்கலான கேள்விகளையும், நிறைவற்ற பதில்களையுமே தருகிறது. “கடற்கரையின் கண்ணாடிக் குப்பிகளைப் போல, கடந்த காலத்தின் சிதைவுண்ட நினைவுகள், காலப்போக்கில் முனைகள் மழமழவென்றாகி, இன்னமும் அழகாகிவிடுகின்றன. சிறந்தவற்றை சில தாவரங்கள் காலத்தின் இறுதிக்காக வைத்திருக்கின்றன.” இப்படி சிந்திக்கும் மாயா தான், தன் கடந்த காலத்தில், தன் தந்தைக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதாததையும், அவர் ஆர்வம் கொண்டிருந்த ஓவியத்திலும், வண்ணம் தீட்டுதலிலும் தான் ஈடுபடாமல், நெசவுத் தொழிலில் இறங்கியது ஏன் என்றும் எண்ணுகிறாள். மனதின் விசித்திரம் இதுதான். அவள் சூழ்நிலைகள், அவள் குணத்தைக் கட்டமைத்திருக்கலாம்.
விபத்தில் கைமுறிவு ஏற்பட்ட அன்னையை மாயா பார்க்க வரும்போது அன்னைக்கும், மகளுக்குமான உரையாடலில் இங்கிதம் இருக்காது. அப்போது அவள் அன்னையின் மூன்றாவது கணவரான நேட், ஒன்று சொல்வார். “உங்கள் இருவருக்குமிடையே பல பிறவிகளாக கடன் சுமை இருந்து கொண்டேயிருக்கிறது- ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொடுத்து வாங்கிக் கொள்கிறீர்கள்.”
தன் தந்தையின் இறப்பைப் பற்றி மாயா அறியும்போது ஒரு கறுப்பு அங்கியில், நீண்ட நிழலென அவரை அவள் நினைக்கிறாள். அவள் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டவள்; அவளுடைய எதிர்காலத்திற்காக தன்னை விட்டுச் செல்ல அவராலேயே அனுமதிக்கப்பட்டவள். மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகளை வாரிச் சென்று அதைப் பொடிப்பொடியாக்கும் இயந்திரத்தைப் பற்றி ஆசிரியை காட்சிப்படுத்துகிறார். உறவின் நிலையாமை, வாழ்வின் நிலையாமை நம் கண் முன்னே தெரிகிறது. தன் மரணப்படுக்கை அருகே அவளில்லாமல் அவர் இறக்கிறார்; அவர் சொன்ன நாட்டுப்புறக் கதைகளில் வரும் விண்மீன்களில் ஒருவராக அவர் மறைந்து போனதாக அவள் நினைக்கிறாள்.
அவள் அவருக்கு எழுதிய கடிதங்களை அவர் பிரிக்காமலேயே திருப்பி அனுப்புகிறார்- ஒன்றே ஒன்றைத் தவிர. அது மாயாவின் வண்ண ஒவியங்களைக் காட்சிப்படுத்தும் ஒரு நிகழ்விற்கான அழைப்பிதழ். இந்த ஒன்று போதும், அவரை நாம் முற்றிலும் புரிந்து கொள்ள. தான் விரும்பிய கலைக்காக வாழ்ந்தவர்; செல்வம் அதனால் பெற்றவரில்லை; தன் மனைவியின் பொருளாதாரச் சிந்தனைகளில் அவருக்கு உடன்பாடில்லை; தன் மகள் தன் கண் முன்னே வளர்ந்து, தன் மூலம் பயிற்சி பெறுவதையும் இழந்தவர் அவர். அன்பு என்பது இறுக்கிப் பிடிப்பதில்லை, அது விட்டுக் கொடுப்பது. அதுதான் மாயாவின் குணமாகவும் இருக்கிறது.
பொதுவாக அவளை இஷிதா மயூமி என்று குறிப்பிடும் அவர், அவளது வண்ணக் கண்காட்சிக்கு வாழ்த்துச் சொல்லும் போது இஷிதா மினோரு என்றே குறிப்பிடுகிறார். முன்னது கல் வயல், உண்மை அம்பு என்றால், பின்னது கல் வயல் அறுவடை என்று ஜப்பானிய மொழியில் பொருள் படும்.
“புவியியல் வரைபடங்களிலிருக்கும் கோடுகள் போல, பச்சை முட்டைக்கோஸின் இலை நரம்புகள் இருக்க, அவற்றைக் கத்தரிக்கும் போது. இணைக்கோடுகள் அனைத்தும் மையத்தை நோக்கிச் செல்வதைப் போல” என்ற அழகான உவமை, உறவுகள் அன்பை நோக்கி இணையாகச் செல்வதையும், செல்லாததையும் சொல்லாமல் சொல்கிறது. காலம் என்பது மாயாவைப் பொறுத்த அளவில், தொலைவு என்பதாக நிலைக்கிறது; இழந்துவிட்ட நேரம் என்பதாக அவள் எண்ணவில்லை.
மனத்துடிப்பிற்கும், வேதனைகளுக்கும் உடனடி நிவாரணம் இருக்கிறதா, என்ன?
அவளுக்கென்று ஒரு நூற்கும் இடம், (கை நெசவும், இயந்திரங்களும்), தறி, தையல் இயந்திரங்கள், மேஜை இருக்கின்றன. அவளுடன் அவள் காப்பாற்றிய பூனையான கேஸ்பர் இருக்கிறது. அவள் இனிமையான பெக் &லார்ரியின் இடத்தில் தன் நூற்பு மையத்தை வைத்திருக்கிறாள். அவளுக்கும், ஜெஃபிற்கும் மணமாகி விட்டது. இருவரிடையே ஒத்த எண்ணங்களோ, விருப்பங்களோ இல்லை. அவளுக்கு சிறு வயது முதல் ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கொண்டாடத்தக்க ஒரு தோழி யாகோ இருக்கிறாள். ஒத்த அலைவரிசைப் பயணம். அப்படியிருந்தும், யாகோ எதையுமே மறைக்காமல், மாயாவுடன் பகிர்ந்து கொண்டாலும், மாயா, தான் எரிக்கைக் காதலிப்பதையும், அவனோடு ஒரு முறை உறவு கொண்டதையும், எனினும், அவனோடோ, ஜெஃப்போடோ வாழப் போவதில்லை என்பதையும் கடைசியில் தான் சொல்கிறாள். யாகோ சிறிது வருத்தமடைந்தாலும், உடனே சமாதானமுமாகிறாள். “சென்ற நவம்பரில் அவர்கள் இருவரும் பார்த்த பறவைகள், பருந்துகள், வடவைக் காற்றில் மிதந்து, தெற்கை நோக்கி பயணிக்கையில், எந்தவித சிரமமான முயற்சியும் இன்றி தண்ணீரில் சறுக்கிக் கொண்டு, சிறகுகளை அடித்துப் பறக்காமல், ஆனால், விரித்து வைத்துக் கொண்டு, காற்றில் செல்வதை மட்டுமே நோக்கமெனக் கொண்டு…” இதுதான் யாகோ, மாயா இருவருக்குமிடையே இருக்கும் நட்பு. யாகோ தன் வருத்தம், மகிழ்ச்சி, விவாகரத்து, தன் குடும்பம், தன் இசை என்று எல்லாவற்றையுமே சொல்கிறாள். மாயா, எரிக்குடனான தன் நட்பு, காதல், காமம் அனைத்தையும், தனது புனிதமென, தனக்கேயான ஒன்றெனக் கருதுகிறாள். ஆணிடம் பெண் கொள்ளும் நட்பு, பெண்களுக்கிடையேயான நட்பு இரண்டும் சம எடை கொண்டதல்ல என்பது மாயாவின் எண்ணம். எனக்கு ஒன்று தோன்றியது- ஒரு ஆண், தன் நெடுங்கால நண்பனிடம், தன் அமரக் காதலைப் பற்றிச் சொல்லத் தயங்க மாட்டான். அது, அவனுக்கு வாழ்வின் பிற இனிய தருணங்களைப் போல கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. அவனுக்கு, காதல், வாழ்வின் ஒரு முக்கிய பகுதி; பெண்ணிற்குக் காதலே வாழ்க்கை, மேன்மையானது, தனிப்பட்டது.
அதே நேரம், மாயா, திருமணமான பெண்களைப் புலம் பெயர்ந்தவர்கள் என்று நினைக்கிறாள். “இலையுதிர்கால, வசந்த காலப் புலம் பெயர்தலில், தன் வாழ்விடத்திற்குத் திரும்பும் இளம் பறவைகளில் எட்டில் ஒன்றுதான் பிழைக்கிறது. தனிப்பட்ட மரணங்களுக்கு அவ்வளவெல்லாம் முக்கியத்துவம் கிடையாது.” இது, திருமணம் என்பது பெண்ணின் புலம் பெயர்தலாக இருப்பதைச் சொன்னாலும், அவள் தந்தையை விட்டு இளம் சிறுமியாக வந்த நிலையையும் சுட்டுகிறது. “பெண்களுக்கு தனிமையிலிருந்து, கல்யாணத்திற்கும், பின்னர் தனிமைக்குமாக பெயர்தல் நடக்கிறது.” இது அதிகமாகப் பெண்களுக்குப் பொருந்தினாலும், ஆண்களுக்கும் ஏற்படும் ஒன்றுதான். அர்த்த நாரீஸ்வர தோற்றத்தில் ஒரே உடலில் சிவன்- சக்தி இருந்தாலும், இடது பாகம் சக்தியினுடையது என்று அந்தக் குழலும், இடையும், காட்டும் என்று தமிழின் இணையற்ற எழுத்தாளர் தி ஜா எழுதியிருப்பார்.
இந்த நாவலில் பல ஜோடிகள் வருகிறார்கள் என்று பார்த்தோம். மூத்த தலைமுறையினரான ஜெஃபின் பெற்றோர்கள், எரிக்கின் பெற்றோர்கள், திருமண பந்தத்தின் மகிழ்ச்சியையும், அதன் கட்டளைகளையும், துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்கிறார்கள். எரிக்கின் பெற்றோர் வீட்டில் இருக்கும் குளிர்பதனப் பெட்டியில் நீரும், திறக்கப்படாத உணவுப் பெட்டிகளும் தானிருக்கின்றன. அவன் அம்மா, உடல் நலமற்ற அவனது தந்தையின் மரணத்திற்காகக் காத்திருப்பது போலவும், தான் எதிர்கொள்ளப் போகும் தனிமையின் விரக்தியால் ஆட்கொள்ளப்பட்டது போலவும் இக்காட்சி அமைப்பு இருக்கிறது. யாகோவிடம் கருணை மிகக் கொண்டிருந்தாலும், டான், அவளை விவாகரத்து செய்துவிட்டு, மெரிடித்தை மணக்கிறான். கே & பில் விவாகரத்து செய்துகொள்கின்றனர். கேயின் மூன்றாவது கணவன் நேட் வயதில் இளையவன்- ஆனால், கல்யாணத்திற்குப் பிறகு முதுமையாகத் தோற்றமளிக்கிறான். கே எதையும் தன்னை முன்னிலைப் படுத்தித்தான் செயல்படுவாள். ஆயினும், நேட், கே ஒரு பொக்கிஷம், அனுதாபதிற்குரியவள், என்றும் பேணப்பட வேண்டியவள், என்று சொல்கிறான்.
மாயாவும் ஜெஃப்பும் விநோத ஜோடி. இருவருக்கும் வெவ்வேறு ஆர்வங்கள். “மளிகைக் கடையில் கோதுமை மாவு வாங்கும்போது அதில் முட்டைகளாக, லார்வா பருவத்தில் இருக்கும் பூச்சிகள் தென்படுவதில்லை. ஆறு மாதங்கள் சென்ற பிறகு பார்க்கையில், அவை சிறகு முளைத்து எழும். அந்த மாவை உட்கொண்டே அவை வளர்ந்திருக்கின்றன.”
ஜெஃபிற்கு, தாராளத்திற்கும், நியாயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் புலப்படுவதில்லை. தன் மனைவியான மாயா தன்னை நேசிப்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறான். அவனது முன்னாள் மனைவியான நான்சி மீண்டும் அவனுடன் வாழ விழையும் போது, அந்தச் சிக்கலிலிருந்து விடுபட அவன் மாயாவின் உதவியை நாடுகிறான். அதுவும் எப்படி? ‘போகாதே, போகாதே, என் கணவா. நீ என் வாழ்க்கை’ என்று மாயா சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். சிக்கலான சூழ்நிலையில், முடிவெடுப்பதைத் தள்ளிப் போடுவதில், தவிர்ப்பதில், எதிராளியே சொல்லட்டும் என நினைக்கும் பொதுவான ஆண்களின் குணத்தை ஆசிரியை இங்கே காட்டுகிறார். மாயா மெளனமாக இருக்கிறாள். அவள் சந்தித்த எரிக் அவளை ஈர்க்கிறான். ஆனால், அதுவல்ல முழுமுதற் காரணம். விவாகரத்து என்ற முடிவை எடுக்கக்கூட ஜெஃப், மாயாவிடம் குறை கண்டுபிடிக்கப் பார்க்கிறான். அவனது முன்னாள் மனைவி, அவர்களது மகள் என்ற ஒரு சிறுமியைக் காட்டும் போது அவனது சிறிய எதிர்ப்பும் இல்லாமலாகிறது. ஆனால், அவனால், மாயாவைப் பிரிய முடியுமா என்றும் அல்லாடுகிறான். மாயா முன்னர் அம்பு தைத்த ஒரு கனடா வாத்தை, அதன் உயிர் வாதையிலிருந்து காப்பாற்றுவதற்காக வனக் காவலர் ஒருவர், அந்த அம்பை விடுவித்து அதை அமைதியாக இறக்க அனுமதித்ததை நினைக்கிறாள். தான் எரிக்குடன் நெருக்கமாக இருந்ததைச் சொல்கிறாள். ஜெஃபின் பாவனைகள் மாறுகின்றன. யாகோ மாயாவின் உடல் துணையென்றும், மாயா ஒரு குளிர்ந்த பெண் என்றும் சொல்கிறான். எத்தனைதான் கணிக்க முடியாதவளாக இருந்தாலும், காதலை வெளிப்படையாகச் சொல்லும் நான்சியே பரவாயில்லை என்று ஏசுகிறான். தன்னை யாகோவின் பெண் துணை என்று அவன் சொல்வதில் காயப்பட்டாலும், தான் சொல்ல நினைத்த ஒன்றை அவள் சொல்லாமல் சென்று விடுகிறாள். “எந்தக் குழந்தையை தன் மகள் என்று ஜெஃப் வளர்க்கப் போகிறானோ, அது அவன் மகள் அல்ல என்று பிற்பாடு தெரிய வரும் போது, அவனால் ஒன்றுமே செய்ய முடியாது.”
ஆசிரியை ஒன்று சொல்கிறார்: அழகியல் கற்பனாவாதிகள் தவறாகச் சொல்லிவிட்டர்கள், மற்ற திறன்களைப் போலவே, கற்பனையும் தோல்வியுறும்.
ஆனால், மாயா, தன் உண்மையானக் காதலை எரிக்கிடம் கண்டு கொள்கிறாள். அவனது ஓவியங்கள், வண்ணக் கலவைகள் அவளை ஈர்க்கின்றன. அவனுக்கு அவளுடன் வாழ வேண்டும் என்ற பேராவல். அவளும், அவன் தன்னுடன் இருக்க ஆசைப்பட்டாலும், அவன் அழைத்துச் சென்ற அவனது பெற்றோர்களின் வீடும், அதன் சுற்றுப் புறங்களும், அதற்குச் செல்லும் பாதைகளும் அவளை ஓவியம் வரையும் அளவிற்குத் தூண்டினாலும், காலம் செல்லச் செல்ல ஒருவர் மற்றவருக்கு அலுத்து விடலாம், அல்லது உணர்வுகளில் பேதம் ஏற்படலாம் என்ற சிந்தனை மாயாவை பீடிக்கிறது. தான் படித்தபோது தான் வரைந்த ஓவியம் அவளுக்கு நினைவிற்கு வருகிறது- ஒரு நிலப்பரப்பு-தைல வண்ணம்- நடவு நடக்காத பரப்பு- அதில் கற்குன்றுகள்- வருடம் தோறும் மேற்பரப்பில் எழும்பி…. “கல்லின் மீது கத்திரி சில கீறல்களை ஏற்படுத்தலாம். காகிதம் கல்லை மூடினாலும், அது கிழிந்து விடும். காகிதத்தைத் துண்டுகளாக்கும் போது கத்திரி இரண்டாகப் பிளவுபட்டு விடும்.”
தன் ஓவியங்களிலும், வண்ணங்களிலிம் மாயாவின் தந்தை காட்டிய யுகாந்தரத் துயரை. ஆயத்த ஆடைகளின் நெசவு மூலம் அவள் ஈடு செய்ய முயன்றிருக்கிறாள். அன்பும், உண்மையான நேசமும் கூட விலகிச் செல்ல ஒரு காரணியாக இருப்பதை ஆசிரியை அற்புதமாகக் காட்டியிருக்கிறார் “விலகிச் செல்லலாம்-ஆனால் சிறிது சிறிதாக விட்டுச் சென்றே, அன்பை மட்டும் தக்க வைத்துக் கொண்டே..” அவளது தந்தை அவளது சட்டையில் மூன்று சதுரங்களில் கல் வயல் உண்மை அம்பு என்று தையலிட்டுக் கொடுத்திருந்தார். அவள் அந்தச் சதுரங்களிலிருந்து உண்மை என்பதைக் கத்தரித்து, அவள் எரிக்கின் கடிதத்தின் மேல் வைக்கிறாள். அன்பை எதிர் கொள்வதைவிட அது இல்லாமல் போய்விடுமோ என்ற துயர எண்ணம் அவளை எரிக்கிடமிருந்து விலக்குகிறது. அவனுக்கு எழுதிய கடிதப் பெட்டகத்தை தபால் நிலையத்தில் கொடுத்த பிறகு, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஆவலும் அவளுக்கு மேலெழுகிறது. ஆனால், அவள் அதைச் செய்யவில்லை. ‘எரிக் புரிந்து கொள்வான், வரப் பார்க்கலாம், என்றென்றைக்குமாக அவள் அவன் வாழ்க்கைத் துணையில்லை என்றும் நினைக்கலாம்’ என்றெல்லாம் சிந்திக்கும் இவளிற்கு அவன் வர வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அவள் தந்தை காட்டிய நிலப்பரப்பைப் போல் அவளது தனித்த வாழ்க்கை- வண்ணங்கள், வடிவங்கள்- ஆனால், சூர்யனின் ஒரு ஒளிக்கீற்று இல்லை, அழகான நீல மரங்கள் இல்லை; அது வழக்கமான ஒன்றாக இல்லாமல், சாதாரணத் தன்மையில்லாத, அழகோவியம். முரட்டு நிலப்பரப்பில், மென்மையைக் காண்பது எப்படி? அவள் எரிக்கின் வண்ணத் தீற்றல்களை நினைக்கிறாள்- கறுப்புத் தீற்றல்கள், கையெழுத்து போலிருக்க, வெள்ளை நிறத் தீற்றல்கள், மென்மையாக, சிறகின் மென் வருடலாக, நாசூக்காக இருக்கின்றன. அவளால் ஒரு மிகச் சிறிய சாம்பல் நிற கூழாங்கல்லை பிளக்க முடியுமென்றால், எத்தகையதொரு வெளிச்சம், வெளிப்படும்!
தமிழின் மற்றொரு சிறந்த எழுத்தாளரான லா ச ராவின் சிறுகதை ஒன்றில் பூர்வா என்றொரு பெண் பாத்திரம் இடம் பெறும். சில வித்தியாசங்களைத் தவிர, பூர்வாவும், மாயாவும் குணங்களில் ஒத்தவர்களே! சில ஆண்டுகளுக்கு முன் நான் பதாகை இணைய இதழில் எழுதியதின் சிறு பகுதியை இங்கே தருகிறேன்.
“பூர்வா நீர் நிறைந்த குடம். தன்னுள் தானே மூழ்கும் சிலை. மௌனமே இயல்பு. பேசும் அபூர்வ தருணங்கள் கலக்கமே! வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அதைப் பற்றி பெருமையுமில்லை, நிறைவுமில்லை, குறையுமில்லை. கணவன் கூட நுழையமுடியாத உள் ஆழம். இந்த உலகைப் படைத்த பின்னர் கடவுள் கொண்ட மௌனம். இரு பாதியெனப் பிரித்த பின்னர் சேர்க்கும் விளையாட்டில் அவன் கொண்ட ஆசை! அதில் வென்றும், தோற்றும் இருள், ஒளியென அவன் காணும் காட்சி.
வலி என்பதையே வெளிப்படுத்தாத பூர்வா ஒரு அபூர்வா! அமைதியாக அனுபவித்துக் கொள்ள அவளால் முடிகிறது. தன் முடிவை அறிந்த மௌனமோ அது!.
பூர்வா புன்னகையின் புதிர். கதாநாயகன் நினைத்துக் கொள்வான், “நான் இவளை மணந்தேனா அல்லது இவள் புன்னகையை மணந்தேனா?” என்று. அவள் “பொருள் புரியாப் புன்னகையுடன்” உட்கார்ந்திருப்பாள். “அவள் பத்திரம் என் மனதின் நிம்மதியைக் குலைத்தது” ஆனாலும் அவள் பால் கொண்ட காதல் குறையவில்லை.”
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
