- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
மிர்ஜான் கோட்டை 1606

பெத்ரோ பிரபு மிர்ஜான் கோட்டை வாசலுக்கு வந்தபோது எந்தப் பரபரப்பும் இல்லாமல் அந்தப் பெருவெளி இருந்தது.
திட்டிவாசலைத் திறந்து யார் வந்திருப்பது என்று பார்க்கும் பெரிய மீசை வைத்த காவலாளி இல்லை. இன்னார் வந்திருக்கிறார் என்ற செய்தியை உள்ளே தெரிவிக்க கோட்டை அலுவலகத்துக்கு ஓடும் வீரன் இல்லை. என்றாலும் கோட்டைக் கதவுகள் சார்த்தியிருந்தன.
சிக்கன நடவடிக்கையாக கோட்டை ஊழியர்கள் சிலருக்கு அரை ஊதியத்தில் விடுமுறை கொடுத்து வீட்டுக்குத் தற்காலிகமாக அனுப்பியிருப்பதாகக் கேட்ட வதந்தி பெத்ரோவுக்கு நினைவு வந்தது. கருவூலப் பணம் இருப்பு குறைந்திருப்பதாகக் கேட்டது நிஜமாக இல்லாதிருக்கலாம்.
ஓஓஓ என்று யாரோ கோட்டையை அணைத்து எழுந்த கொத்தளத்தில் இருந்து ஒலி எழுப்பியதுபோல் கேட்டது பெத்ரோவுக்கு. நிமிர்ந்து பார்த்தார். அங்கே சாதாரணமாக முரசு அறைவோர் இருப்பார்கள். வாசலில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளே வருகிறார் ஒரு வெளியார் என்று கோட்டையில் இருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்ல அந்த முரசு முழங்கும். வந்தவருக்கு மரியாதை செலுத்தும் முறையும் அதுவாகவே இருக்கும்.
இன்றைக்கு முரசு மேடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. ஓவென்று குரல் எழுப்பியது யாராக இருக்கும்? பெத்ரோ பார்த்துக் கொண்டிருந்தபோது அரண்மனை வைத்தியர் பைத்யநாத் உள்ளிருந்து வந்து ஓஓஓ என்று கையைக் குவித்து வாயருகில் வைத்துப் பெரும் பறவை கூவுவதுபோல் ஒலி எழுப்பினார்.
உள்ளே இருந்து சேடிப் பெண்டிர் இருவர் வந்து பார்த்துவிட்டு நின்றார்கள். வைத்தியர் பெத்ரோவின் நான்கு குதிரை சாரட்டைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்ல அந்தப் பெண்கள் உள்ளே ஓடினார்கள். உடன் திரும்பி வந்து அவரிடம் ஏதோ தெரிவித்துப் போனார்கள்.
வைத்தியர் கொத்தளத்தில் நின்றபடி பெத்ரோவின் கவனத்தைக் கவர, கணேச கௌஸ்துபம் ஆடுவதற்கு வெகு அருகில் வரும் அடவுகளை, அடுத்தடுத்து அபிநயித்தார். பெத்ரோ கையசைத்துத்துத் தான் கவனிப்பதாகப் புரியவைத்தார். வைத்தியர் ஒரு வினாடி உறைந்து நின்று இரு கரமும் உள்ளும் வெளியும் கவாத்து செய்கிறதுபோல் சமிக்ஞை காட்டி அடக்கமாகச் சற்று குனிந்து அங்கிருந்தபடியே பெத்ரோவை வணங்கினார். பெத்ரோவுக்கு ஆட்டபாட்டத்தோடு அனுமதி கிடைத்திருக்கிறது உள்ளே வர.
சாரட்டை விட்டு இறங்கி கோட்டை வளாகத்தின் ஈசான்ய மூலையில் காத்திருக்குமாறு அனுப்பிவிட்டு கோட்டை வாசல்களை நோக்கி நடக்க ஆரம்பித்தார் பெத்ரோ.
வெளிமண்டபத்தில் போட்டு வைத்திருந்த குரிச்சிகள் வரிசை குலைந்து இருப்பதைப் பார்க்க ஏனோ மனதுக்கு வருத்தமாக இருந்தது பெத்ரோவுக்கு. அந்த பிரம்பு நாற்காலிகளின் மேல் மெல்லிய தூசிப் பூச்சு காணப்பட்டதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.
வெளிமண்டபம் முழுவதும், உள்மதிலுக்கு அருகே தோட்டத்தில் பிரம்மாண்டமாக வேர்விட்டு நின்றிருந்த ஆலமரத்தின் உதிர்ந்த இலைகள் காற்றில் அடித்து வரப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றும் ஒதுங்கி உலர்ந்து கிடந்தன. அவை மண்டபத்துக்கு கூடுதல் சோபை அளித்தன.
கோட்டை அலுவலகர்கள் பெரும்பாலும் அவர்கள் அளவில் கொண்டு வரப்பட்ட விஷயத்தில் தீர்வு சொல்லி அனுப்புவது வெளிமண்டபத்தில் வைத்துதான். உள்மண்டப சந்திப்பு ஏதாவது தரப்பட்ட நேரம் கடந்து நீளும்போது, அடுத்த சந்திப்புக்காக வந்து சேர்ந்தவர்களை இருக்க வைப்பதும் வெளிமண்டபத்தில் தான்.
தீபங்களும் லாந்தர்களும் ஒளியூட்ட அநேக முறை பெத்ரோ கலந்து கொண்ட நேர்காணல் சந்திப்புகள் மாலை மங்கி இரவாகும்போதும் நடந்து கொண்டிருப்பது வாடிக்கை. வெளிமண்டபத்திற்கு அவ்வப்போது உள்ளே இருந்து வந்து அற்பசங்கை தீர்க்க, குவளையில் எடுத்துப் பானைத் தண்ணீர் குடிக்க என்று ஐந்து நிமிடம் ஈடுபட்டு, மறுபடி உள்ளே போவதும் வாடிக்கை.
அந்த வெளிமண்டபம் இப்படி சோபை இழந்து காணப்பட்டதில்லை இதுவரை. பெத்ரோ வெளிமண்டபத்தின் வழியே நிதானமாக நடந்து உள்ளே போனார். கதவுகளும் ஜன்னல்களும் பாதுகாப்பு கருதியோ என்னவோ அடைத்து வைத்திருந்ததால் பகல் நேர பகுதி இருட்டும் அந்த இருட்டுக்கே உரிய புழுக்கமான வாடையுமாக வெளி, உள் மண்டபங்கள் குமைந்துகொண்டிருந்தன.
உள் மண்டபத்தில் இருந்து ராணியம்மாளின் அலுவலகமும் அங்கிருந்து கோட்டை அலுவலகங்களுக்குப் போகும் பாதையும். ராணியம்மாவின் தங்குமிடமான கோட்டை அரண்மனைக்கு நீளும் தோட்ட வீதியும் ஆள் நடமாட்டம் சிறிதுமின்றிக் கிடந்தன.
வழியில் ஓரமாக இருட்டில் நின்ற சின்ன பூனையின் கண்கள் இருட்டில் ஒளிர நீண்ட பற்கள் பெத்ரோவுக்குப் பயமுண்டாக்கின. அவர் தயங்கி நிற்க, வாருங்கள் என்று உள்ளிருந்து அழைப்பு.
ஜன்னல்களைத் திறக்கச் சொல்லி பணிவாக அருகில் நின்ற சிப்பந்திக்குக் கட்டளையிட்டபடி ஆசனத்தில் அமர்ந்து, பெத்ரோவையும் பக்கத்து நாற்காலியில் இருக்கச் சொன்னவர் நஞ்சுண்டையா பிரதானி. தலையில் குல்லா தரிக்காததால் யாரென்று அடையாளம் காண சற்றே சிரமப்பட்டார் பெத்ரோ. தொப்பி தரிக்காத போர்த்துகல் மன்னர் போல வழுக்கை ஓடிய தலையோடு வித்தியாசமாகத் தெரிந்தார் நஞ்சுண்டையா.
நலம் விசாரிப்பு வழக்கம்போல் நடந்தேறியது. ஒரே தெருவில் அடுத்தடுத்த மாளிகைகளில் வசித்தாலும் இப்படி எப்போதாவது சந்திக்கிற அளவு நகர வாழ்க்கை பரபரப்பானதாக இருப்பதாக எப்போதும் மொழியப்படும் அங்கலாய்ப்புகள் வந்து போயின.
உள்கதவு திறக்க மகாராணியின் தாதி உள்ளே வந்து பெத்ரோ பிரபு மிளகு ராணியை சந்திக்கலாம் என்றாள். நன்றி சொல்லி பெத்ரோ நஞ்சுண்டையாவை நோக்கினார். மொழிபெயர்ப்பாளராக துபாஷி பணி செய்ய அவர் இல்லாமல் கொங்கணி பேசும் சென்னபைரதேவி மகாராணியும் போர்த்துகீஸ் மொழி பேசும் இமாலுவேல் பெத்ரோவும் நேர்காணலோ, ஆலோசனையோ, பேச்சு வார்த்தையோ நடத்த முடியாதே.
நஞ்சுண்டையா குனிந்து பெத்ரோ காதில் சொன்னார் –
நீங்கள் கடந்த ஐந்து ஆண்டில் கொங்கணியில் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டீர்கள். எங்கள் போர்த்துகீஸ் மொழியறிவு தான் கொஞ்சம் குறைவு. அதை ஈடு செய்ய ராணியம்மா போர்த்துகீஸ் மொழியிலேயே பேச முயல்வார். பிரபு, நீங்கள் சற்று வேகம் தவிர்த்து மெல்லப் பேசினால் நல்லது.
நிச்சயமாக என்றார் பெருமகிழ்வோடு பெத்ரோ.
ராணி சிரித்தபடி தயங்கினால் வேறு எளிய சொற்களைப் பயன்படுத்தி பேச்சு தடம் மாறாமல் நேர்கோட்டில் பயணம் செய்ய முன்கை எடுக்கக் கோருகிறேன் என்றார் பின்னும் நஞ்சுண்டையா பிரதானி சிரித்தபடி.
முயற்சி செய்கிறேன் சென்ஹோர் நஞ்சுண்டய்யா. நீங்கள் இல்லாமல் எப்படி நடக்குமோ என்று விசனத்தைக் களைகின்றேன்.
கவலைப்படாதீர்கள், சமாளிக்க முடியாமல் போனால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக நான் இங்கேயே இருப்பேன் என்றார் பிரதானி.
பெத்ரோ வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே போக முற்பட, அவரைக் கையைக் காட்டி ஒரு வினாடி நிறுத்தினார் நஞ்சுண்டய்யா.
பிரபு, தங்கள் காலணிகளை கதவருகில் விட்டுச் சென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.
ஓ மறந்துவிட்டேன் என்று கூறியபடி காலில் கையை வைத்து நடனமாடுகிற மாதிரி காலணிகளைக் களைய முற்பட்டார். ஒரு வினாடி கீழே விழுகிறது போல தள்ளாட, நஞ்சுண்டய்யா அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
உள்ளே இருந்து சிரிப்பு சத்தம்.
பெத்ரோ பிரபு ஆடிப் பாடி இந்த சந்திப்புக்கு வர உத்தேசித்தது போல் தெரிகிறது. அப்படித்தானே? என்னால் ஆட முடியாது. வயதாகிவிட்டது.
சிரித்தபடி அரசி தாம் அமரும் சிறப்பு ஆசனத்தில் இருந்து எழுந்து நிற்க பெத்ரோ இருகரமும் சேர்த்துக் கூப்பி வணங்கினார். சென்னபைரதேவி மகாராணியோ ஐரோப்பிய பாணியில் வலதுகையை நீட்டி பெத்ரோவோடு அன்போடு கைகுலுக்கினார்.
பெத்ரோவுக்கு முன்னொரு பொழுதில் மகாராணி அவருக்குக் கைகொடுத்து விட்டு உடனே கை அலம்பிக் கொண்டது நினைவு வந்தது. இப்போதும் கைகழுவத் தண்ணீரோடு சேடிப்பெண் அல்லது தாதியோ வரலாம் என்று எதிர்பார்த்திருக்க யாரும் வரக்காணோம்.
சூழல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல், கலாசார சமன்பாடுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. பெத்ரோ ஐந்து வருடம் முன்பு மிளகு ராணி சென்னபைரதேவி என்று சொல்லக்கேட்டு பிரமிப்பும், வியப்பும், மனதில் படபடப்புமாக முதல் தடவையாக மிர்ஜான் கோட்டையில், தன்னை போர்த்துகீஸ் அரசர் விவேகன் பிலிப் அரசப் பிரதிநிதியாக நியமித்து எழு,திய கடிதத்தைக் கொடுத்தபோது அவருடைய கரங்கள் நடுங்கியது நினைவு வந்தது. அண்மையில் தலைமை அரசப் பிரதிநிதியாக பதவி உயர்வு பெற்றதை அறிவிக்கும் ராஜாங்க லிகிதத்தைக் கொடுத்தபோதும் அப்படித்தான்
மூச்சு பேச்சு நீங்கி தரையில் கிடத்தி விடுமோ மேனி நடுக்கமும், தலை சுற்றுதலுமாக உடல் நிலை என்று பயம் உண்மையிலேயே ஏற்பட்ட நேரம் அது. போர்த்துகல் அரசின் வருடாந்திர செலவில் கணிசமான தொகையை ஏற்றுமதி வருமானமாகத் தொடர்ந்து பெற்று வரும் மெலிந்த இந்துஸ்தானத்துப் பெண்மணியாக மிளகு ராணியைச் சந்தித்ததில் ஏற்பட்ட வியப்பை விவரிக்க அவரிடம் வார்த்தையில்லை. .
அதற்கப்புறம் மிளகு விலை நிர்ணயித்தல் பற்றிக் கறாராக மகாராணி பேசிய பல நேர்காணல்கள், யாருக்கு எவ்வளவு லாபம் என்று தெளிவாகத் தெரிந்து செய்தி பகிர்ந்து உரையாடும் திறமை, அபாரமான நகைச்சுவை ரசனை, வாசிப்பு ரசனை என்றெல்லாம் பெத்ரோவை ஆச்சரியப்படுத்தியவள் சென்னா மகாராணி.
ஆற்றலும் அதைக் கொண்டாடும் பாங்கும் இரண்டு பக்கமும் உண்டு. வியந்து கரகோஷம் செய்து வணங்கி வானம் நோக்கி வியப்பைப் பகிர்தல் மட்டும் இல்லை. சென்னா என்ற மனிதப் பிறவி பற்றி, சொந்த வாழ்க்கையில் சுகப்படாத, தேசம் தேசம் என்று மிளகு மூட்டையை மனதில் எப்போதும் சுமந்து விற்று அதிகக் காசு வரவழைத்து வருமானத்தை அதிகப்படுத்துவதிலேயே கண்ணாக இருக்கும் மூதாட்டி மேல் பரிவும் அனுதாபமும் பெத்ரோ மனதில் இப்போது மேலெழுகின்றன.
வாருங்கள் பெத்ரோ நான் இன்றைக்கு முழுக்க போர்த்துகீசில் தான் உங்களோடு உரையாடப் போகிறேன். உங்களுக்கு விரோதம் ஏதுமில்லையே
யுவர் எக்ஸலென்ஸி, நீங்கள் எம் மொழியில் இந்த சந்திப்பில் பேசப் போகிறீர்கள் என்பது எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும். உங்கள் பேச்சு மிக அருமையாக, லிஸ்பனில் மகாராணி மற்றும் மகாராஜா ஆகியோரின் மேட்டுக்குடி அரச உச்சரிப்பு கொண்டுள்ளது. நன்றி மகாராணி. நன்றி மிளகு மகாராணி என்று மெதுவாகச் சொன்னார், பெத்ரோ.
சென்ஹோர் பெத்ரோ, உங்கள் வயது என்ன?
சென்னபைரதேவி மகாராணி உரையாடலைத் தொடங்கிய விதமே பெத்ரோவுக்கு ஆச்சரியகரமானதாக இருந்தது. லிஸ்பனில் இருந்து இங்கே பெத்ரோ பணி நிமித்தம் வந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மிர்ஜான் அரண்மனைக்கு வந்து மகாராணியோடு எவ்வளவோ தடவை விரிவான நேர்காணலும், குறிப்பிட்ட காரிய காரணங்கள் பற்றி சிறு சந்திப்பும் உரையாடலுமாக அலுவல் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்.
இதுவரை சென்னபைரதேவி மகாராணி பெத்ரோவின் சொந்த வாழ்க்கை பற்றிக் கேட்டதே இல்லை. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் பெத்ரோ குடும்பம் பற்றிய குற்றச்சாட்டு இங்கே பேச்சு நடக்கும்போது அடிபட்டது. பெத்ரோவின் மாமனார் கோழிக்கோட்டில் விவசாயத் தொழிலாளிகள் மூலம் மறைமுக மிளகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதை விசாரித்துக் கடுமையாக எச்சரித்தார் மகாராணி. அதுவும் முழுக்க அரசுப் பணி சார்ந்ததுதான்.
வயது என்ன? பெத்ரோவுக்கு ஐம்பத்தைந்து வயது. சென்னபைரதேவி மகாராணிக்கு அறுபதாம் ஆண்டு விழா மாநிலமே கொண்டாடி இப்போது அவர் வயது அறுபத்தைந்து என்று அனைவரும் அறிவர். பெத்ரோவை விட பத்து வயது மூத்தவர் அவர்.
சிரித்தபடி ”யுவர் எக்சலென்ஸி, நான் மகாராணியாரை விட பத்து வயது இளையவன். அனுபவத்திலும் திறமையிலும் வைத்துப் பார்த்தால் இன்னும் பிறக்கவே இல்லை. யுவர் எக்ஸெலன்சியிடம் பார்த்து, கேட்டு, உரையாடி, கற்றுக்கொள்ள வேண்டியவன்” என்று தலை வணங்கிச் சொன்னார்.
”உங்கள் வயதில் எனக்கு ஒரு இளைய சகோதரன் இருந்தான். மகாமாரி நோய்த் தொற்று ஐம்பது வருடங்களுக்கு முன் உத்தர கர்னாடகப் பிரதேசத்தில் நிறைய உயிர்களைக் காவு வாங்கியபோது அவனும் நோய் கண்டு இறந்து போனான். போகிறது. நீங்கள் இப்போது என் இளைய சகோதரனாக இருக்கிறீர்கள்”.
ராணி பெருமூச்செறிந்து ஒரு நிமிடம் தரையைப் பார்த்தபடி இருந்தாள். பெத்ரோ அரசியல் சந்திப்புகள் பலவற்றையும் பல பிரமுகர்களோடு நடத்தி இருக்கிறார். மரியாதை விலகாமல் அதே நேரத்தில் பேசும் பொருளை, பேச்சு நடக்கும் போக்கினை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் கொண்டு செலுத்துவதாக இருக்கத் தேவையான பயிற்சி கொடுத்துத்தான் இந்துஸ்தானத்துக்கு அனுப்பியுள்ளார்கள். ஆனால் இது போல் ஒரு சூழ்நிலையை அவர்கள் கற்பனை செய்தும் பார்த்திருக்க முடியாது.
இந்த நேர்காணல் எந்த திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்றே அனுமானிக்க முடியவில்லை. பெத்ரோ அவருக்குப் பழக்கமான உரையாடல் போக்கை சற்றே மாற்றி நிறுத்திவிட்டு ஆத்மார்த்தமாக உரையாட முடிவு செய்தார்.
ராணிக்கு இளைய சகோதரன், ரத்த பாசம் அடிப்படையான உறவின் வார்ப்பு தான். அந்த அன்பை கூடப்பிறக்காவிட்டாலும், சகோதரி என்ற பிரியம் வெளிப்பட பெத்ரோ திரும்பச் செலுத்துவார். இதில் ராஜாங்கம் ஏதுமில்லை.
எனின், அரசர்களும், அரசிகளும், இளவரசர்களும் இளவரசியரும் மிகுந்த உலகில் பெத்ரோ எப்போதும் அரசராக மாற முடியாது. செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக ஒரு பதவி கிட்டினாலும் அது ஆள வழி செய்யாது. செயல்படுவதைக் கட்டுப்படுத்துவதும் புதுக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் அப்படியான மக்கள் பிரதிநிதி தேர்வுகளால் சாதிக்க முடியும். சரித்திர நாடகம் எழுதி மேடையில் நடித்தால் தவிர அவர் அரசராக மாட்டார்.
சகோதரரே, உங்கள் மனைவி குழந்தைகள் நலமாக உள்ளார்களா?
மிளகுராணி கேட்டது ஒரு அளவில் தன் போர்த்துகீஸ் பேச்சு ஞானத்தைச் சோதித்துக் கொள்வதற்கான சொற்றொடர் அமைப்புப் பயிற்சி போல தெரிந்தாலும், ராணி வினவிய கேள்விகள் தகுந்த பதில் சொல்ல வேண்டியவை என உணர்ந்த பெத்ரோ, ”யுவர் எக்சலண்சி, என் மனைவியும் இரு குழந்தைகளும் கடந்த ஞாயிறன்று ஹொன்னாவரில் என் வீட்டுக்குத் திரும்பினார்கள். அவர்கள் அனைவரும் நலம்” என்று பணிவோடு பதில் சொல்லி அடுத்த கேள்வியை எதிர்பார்த்திருந்தார்.
ராணியின் தாதி கையில் ஏந்திய சிறு குப்பியில் மருந்து மணக்கும் ஏதோ ரசாயனத்தை எடுத்து வந்திருக்க, இதோ வருகிறேன் என்று பெத்ரோவிடம் சொல்லிவிட்டு ராணி வாசலுக்குப் போனாள்.
ராணி திரும்பி வந்து கேட்கப் போகும் கேள்விகள் எப்படி இருக்கும்? பெத்ரோ யோசித்தார் – உங்கள் மாளிகையில் வளர்க்கும் பசுக்கள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் பொழியும் பால் சுவையாக இருக்கிறதா? சனிக்கிழமை பகலில் கருப்புக் குடை பிடித்து காய்ச்சிய பால் பருகுகிறீர்களா?
பொருள் இருக்கிறதோ இல்லையோ, புது மொழியைக் கற்றுக்கொள்ள இப்படியான உதிரிக் கேள்விகள் மூலம் மொழிப் பயன்பாட்டைப் பரிச்சயம் செய்து கொள்வதே எளிய வழி என்று கேள்விப்பட்டிருக்கிறார் அவர். இந்தக் கேள்விகளுக்கு அதே போல அல்லது இதைவிட அபத்தமாகப் பதில் சொல்வதும் நினைவு வந்தது.
ஆரஞ்சு வர்ணப் பசுக்கள் புதன்கிழமை பால் ஈந்தன. வியாழனன்று பிற்பகலில் தாடி வைத்த, சரிகைப் பிடவை அணிந்த அரசாங்க அதிகாரிகள் சருக்கரை சேர்த்து பாலைச் சுண்டக் காய்ச்சி எனக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அதை உம்மிடம் சொல்ல மறந்து போனேன். மன்னிக்கவும்.
இந்த பதிலை மனதில் ஓட விட்டு சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தார் பெத்ரோ. ராணியம்மாள் தாதி கொண்டுவந்த மருந்தை அருந்திவிட்டுத் திரும்பி வரும்போதே வினாத் தொடுத்தபடி வந்தாள் – லிஸ்பனில் பிற்பகல் நேரத்தில் இப்போது மழை இருக்காதோ?
ஆம் இது மழைக்கொண்டல் மேகங்கள் வெளிவாங்கும் காலம் என்பதால் அப்படி நடக்கும் என்று பதில் சொன்னார் பெத்ரோ.
வெளிவாங்கும் என்ற சொல்லுக்கான பொருள் புரியாமல் அதை இருமுறை உச்சரித்தாள் மகாராணி அவர்கள். அதிலிருந்து வெளியே வருவது என்று பெத்ரோ சொல்ல, அதிலிருந்து வெளியேறுவது. நல்லது அதிலிருந்து வெளியேறுவது என்று திரும்பத் திரும்பச் சொன்னாள் சென்னபைரதேவி,
வெளிவாங்கினேன். உறவில் இருந்து வெளிவாங்கினேன். லிஸ்பன் பயணம் செய்து கண்டு வர நினைத்த ஆசையிலிருந்து வெளிவாங்கினேன். சொல்லியபடி பெத்ரோவை நோக்கிக் கனிவாகச் சிரித்தாள் சென்னா.
வளர்ப்பு மகன் நேமிநாதனை அரச மாளிகையிலிருந்து வெளியேற்றியாகி விட்டது. வாழ்க்கையில் ஒரே ஆசை கடல்மேல் பயணப்பட்டு ஐரோப்பாவில் லிஸ்பன் சென்றடைந்து தன் சரிசமனான அந்தஸ்து உள்ள போர்த்துகல் அரசரோடு மிளகு ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றியும் மிளகு தருவோம் மிளகாய், வெங்காயம் கொடுங்கள் என்று பண்ட மாற்று வணிகத்துக்கு வழி வகுத்திருக்கலாம். ஆனால் இப்போது எந்தப் பயணமும் இல்லை. எல்லாவற்றில் இருந்தும், எல்லோரோடுமிருந்தும் வெளிவாங்கி விட்டேன். துன்பம் ஏற்படுத்தும் எல்லாவற்றிலிருந்தும் வெளிவாங்கி விட்டேன். இன்பம் தரும் எல்லாவற்றிலிருந்தும் வெளிவாங்கி விட்டேன்.
சிரிப்பு வெளிவாங்காத மனம் முகத்தில் பிரதிபலிக்கச் சொன்னாள் மிளகு ராணி.
பெத்ரோ நின்றபடி குனிந்து மரியாதையோடு சொல்லத் தொடங்கினார் – அம்மா, உங்களை சம்பிரதாயங்கள் மீறி அன்புச் சகோதரி என்று அழைக்கிறேன் இந்தச் சந்திப்பின் மிகுதி நேரத்தில் மட்டும். சகோதரி, நான் சந்திப்பு என்றதும் நீங்கள் லிஸ்பன் பயணத்தைத் தள்ளிப்போடுவது பற்றி பேசத்தான் அழைக்கிறீர்கள் என்று மனதில் பட்டது. நீங்கள் சந்தித்திருக்கும் இடர்களை ஒரு அரசரோ அரசரில்லாது தனியே வாழும், ஆளும் ராணியோ எப்படிச் சமாளிப்பார்கள் என்று வியப்படைகிறேன். உங்களுக்கு இதைத் தாங்க மனதில் துணிவையும், பலத்தையும், உடல் நலத்தையும் எங்கும் பரந்த இறை அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
பெத்ரோ முழங்காலில் மண்டியிட்டு பிரார்த்தனையை உரக்கச் சொல்லி எழுந்தார். இந்தப் பிரார்த்தனையை அவர் மனதிலிருந்து செய்தார்.
சகோதரி, நீங்கள் கட்டாயம் லிஸ்பன் பயணத்தை மேற்கொள்வீர்கள். சற்று தாமதமாகப் புறப்படலாம். சரியான காலத்தில் சரியான நேரத்தில் சென்றடைவீர்கள். ஆண்டவன் அருள் உங்களுக்குண்டு.
முழுக்க பாதிரியாராகத் தன்னை உணர்ந்தார் பெத்ரோ.
அதிகாரபூர்வமாக பயணத்தை ரத்து செய்து லிகிதம் எழுதியனுப்ப வேண்டுமானால் எப்படி எழுதுவது என விசாரிக்க நினைத்திருந்தேன். ஆனாலும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை மீதியுண்டு என்று உங்கள் வாக்கிலிருந்து எனக்கும் நம்பிக்கை முழுக்க அழியவில்லை. தொண்ணூறு வயதில், இன்னும் இருபத்தைந்து வருடம் சென்று கண் பார்வை பழுதுபட்டும், வாயில் பல் எல்லாம் உதிர்ந்தும், காது சரியாகக் கேட்காமலும் இருப்பேன். எனினும் கப்பலேறி லிஸ்பனும் லண்டன் அடைய டோவரிலும் நான் போய் இறங்குவேன். இன்னும் அதிகம் என் நாட்டு வாசனை திரவியங்கள் ஏற்றுமதியாக வழி செய்வேன். முடித்து அப்போது ஜெர்ஸோப்பாவின் அரசரிடம் யாராக இருந்தாலும் சரி பொறுப்பை ஒப்படைத்து நிம்மதியாகக் கண் மூடுவேன்.
கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்ததைத் துடைக்கக் கூடச் செய்யாமல் எதிரே விளக்குத் தூணை உற்றுப் பார்த்தபடி இருந்தாள் சென்னா.
நான் விடை வாங்கிக் கொள்ளலாமா மகாராணி? பணிவோடு கேட்டார் பெத்ரோ பிரபு. அவரை உடனே உற்றுப் பார்த்து சென்னபைரதேவி கேட்டாள் – புறப்பட்டு விட்டீர்களா? நான் உங்களைப் போகச் சொல்லவில்லையே.
இது பெத்ரோவுக்குப் பழக்கமான சென்னபைரதேவி. ஒரு நிமிடம் கருணையும் பரிவும் அடுத்த நிமிடம் அரசாளும் வம்சத்துக்கே உரிய மேட்டுமைத் தனமும், கண்டிப்புமாக உரையாடும் ஜெர்ஸோப்பா மகாராணி.
பெத்ரோ பிரபு குனிந்து வணங்கி மன்றாடும் குரலில் கூறினார் – மன்னிக்க வேண்டும் மன்னிக்க வேண்டும்! மகாராணி அவர்கள் ஓய்வெடுக்கும் நேரத்தில் அவருக்கு தொந்தரவு அளிக்கக் கூடாது என்று நானே முடிவு செய்து புறப்பட்டிருக்கிறேன். என் தவறுதான். மன்னிக்க வேண்டும்.
அவர் நாற்காலியில் அமர்ந்து பேசுவதா, நின்றபடி உரையாடுவதா என்ற தீர்மானத்துக்குவர முடியாமல் குனிந்து நிமிர்ந்ததைக் காண சென்னபைரதேவிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
பெத்ரோ சகோதரா, இப்படி வேணுமானால் செய். ஒரு ஐந்து நிமிடம் நின்று பேசு. அடுத்து நாற்காலியில் அமர்ந்து பேசு. தொடர்ந்து தரையில் இன்னொரு ஐந்து நிமிடம் சம்மணம் கொட்டி அமர்ந்து பேசு, முடிந்தால். எப்படி வேணுமானாலும் இருந்தோ நின்றோ பேசு. ஆனால் பேசு. சென்னாவுக்கு கூடப் பேச யாராவது வேணும் சகோதரா.
இன்றைய எல்லாம் மாறிய சென்னா மறுபடி வந்து விட்டாள் என்று பட்டது பெத்ரோவுக்கு.
சகோதரரே, ஹொன்னாவரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பொதுவாகக் கேட்டாள் சென்னபைரதேவி மகாராணி.
நாட்டு நடப்பை ஹொன்னாவர் குடிமக்கள் எப்படி சீர்தூக்கி எடைபோட்டுப் பேசுகிறார்கள், நடக்கும் சம்பவங்கள், நடக்க வேண்டிய ஆனால் நடக்காத சம்பவங்கள் குறித்து மக்கள் கருத்தென்ன என்றுதான் ராணியம்மாள் கேட்கிறாள் என்று பெத்ரோவுக்குப் புரிந்தது.
பெத்ரோ சற்று தயங்கினார். யோசிக்க வேணாம். உங்கள் காதில் விழுந்ததை விழுந்தபடி பகிர்ந்து கொண்டால் நன்றி. உங்களுக்கு கொங்கணி தெரியாது என்ற நினைப்பில் உங்கள் முன்னால் ஜாக்கிரதை குறைவாகப் பேசுவார்கள் ஜனங்கள், அதைத்தான் நினைவிருந்தால் சொல்லுங்கள் என்றாள் சென்னா மகாராணி.
சகோதரி, நான் என் காதில் விழுந்த சில அபிப்ராயங்களைப் பற்றி மட்டும் கூடியவரை ஒரு சொல்லும் மாற்றாது எடுத்துச் சொல்கிறேன். அவை எதுவும் என் கருத்து இல்லை. சரிதானா?
பெத்ரோ எங்கிருந்து தனக்குள் இவ்வளவு நன்மை வேண்டுதலும், தைரியமும், வாக்கில் தயக்கமில்லாத தெளிவும் வந்து சேர்ந்தது என்று தெரியாமல் ஆச்சரியப்பட்டார்.
சென்னபைரதேவி போன்ற நியாயமும் கண்ணியமும், திறமையும், தன்னையே தியாகம் செய்து தேசத்துக்கு நன்று இதென்றும் அன்று அதென்றும் பிரித்து நல்லவை நிறைவேற உழைப்பும் பொறுப்புமாக வாழ்வை நடத்திப் போகும் அரச பரம்பரையினர் யாரையும் பெத்ரோ பார்த்ததில்லை.
சென்னா எப்படியும் இந்தத் துன்பம் சூழ்ந்த காலத்தின் ஊடாக வெகுவிரைவில் வெளியே வந்து இன்னும் பத்து ஆண்டுகளாவது சிறப்பாக ஆட்சி செய்யவேண்டும் என்று அவர் திடமாக நம்பினார், அந்த அடிப்படையில் ஊர் நிலவரம் சொல்ல ஆரம்பித்தார்.
ஊர்க் கொச்சை கொங்கணி அவருக்கு சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆனால் முகபாவமும், கைகால் அசைவும் அதற்கு ஈடு செய்து பேசியது பேசிய மாதிரி புரிந்துகொள்ளப்பட கொஞ்சம் போல் உதவின. அப்புறம் போர்த்துகீஸ் மொழியிலும் மொழிபெயர்த்து, கூற வேண்டியதைக் கூறினார்.
தெருவில் பொரி உருண்டை விக்கறவன் சொன்னது – அவங்க நல்லவங்க தான். ஆனா எல்லாருக்கும் நல்லவங்களா இருக்கணும்னு பார்க்கறாங்க. அது ராமச்சந்திர பிரபு திரும்பி வந்து ஆட்சி செய்ய ஆரம்பிச்சாக்கூட நடக்காது.
இந்த மாதிரி கொங்கணி பாஷை கொச்சையாக பேசினது எல்லாம். அது இல்லாமல், யார், எங்கே, எப்போது பேசினது என்ற தகவல்களைத் தவிர்த்துப் பேசட்டுமா சகோதரி? பெத்ரோ அனுமதி கேட்க, நடக்கட்டும் என்று கையசைத்தாள் சென்னபைரதேவி மகாராணி.
இவங்க, யாராவது தன் ஆட்சியைப் பற்றி குறை சொன்னா அவங்களுக்கு உடனே மிட்டாய் கொடுக்கறதை ஒரே வழியாக வச்சிருக்காங்க. சமணர்கள் சிவன் கோவில்லே நரகல் சட்டியை விட்டெறிஞ்சதா ஊர்ஜிதம் ஆகாத தகவல்கள் சொன்னா, உடனே சைவர்களுக்கு ஒரு புது கோவில் அல்லது விக்ரகத்துக்கு அல்லது கோபுரத்துக்கு பொன் வேய்ந்து தர்றதா வாக்குதத்தம்.
நிறுத்தி, மேலே போகட்டுமா என்று சைகையால் வினவினார் பெத்ரோ. போ என்றாள் சென்னா.
சமணன் குற்றம் சொன்னா, பஸதியிலே பத்து திகம்பர தீர்த்தங்கருக்குப் பதிலா பதினைந்து பேர் சிலை. சொல்லப்போனா ஒரு தீர்த்தங்கரருக்கும் இன்னொருத்தருக்கும் வித்தியாசமே தெரியாமத்தான் சிற்பிகள் கொத்தி வச்சுட்டுப் போயிடறாங்க. பத்து பதினஞ்சாகிறதால் பெருசா ஒண்ணுமில்லே.
மிளகு வித்தோம் லிஸ்பன்லே. வர்ற பணத்திலே கணிசமாக வரி எடுத்து மீதியை ஏற்றுமதி செஞ்சவங்களுக்கு வெகுமதி, வருமானமாக எடுத்துக்க விட்டுடறாங்க. அவங்க, அரண்மனை தவிர வேறே எல்லா இடத்திலேயும் வருமானம் குறைஞ்சிருக்கு.
அரசாங்கத்திலேயே பணம் எல்லாம் நிர்வாண சாமிகளுக்கு உபசாரம் செய்ய போயிட்டிருக்கு. பிறந்த பிள்ளைக்கு பால் கொடுக்க பிரசவித்த அம்மாவுக்கு உடம்பிலே சக்தி இல்லே. அவங்க கையிலே பூஜை பிரசாதத்தை ஒரு நெல்லிக்காய் அளவு கொடுத்து பசிக்கு இதைத் தின்னுன்னா நியாயமா?
மதமும் மிளகும் தவிர ராணியம்மா கவனிக்க வேறே எதுவுமே இல்லைன்னு நினைக்கறாங்களா?
பணம் படைச்சவன் வீட்டை, நிலத்தை, காசு பணத்தை எல்லாம் பொன் ஆக்கி ஜாக்கிரதையாக பதுக்கி வச்சுப்பான். நம்ம கிட்டே இருக்கறது சட்டி பானை, ஓலைக் குடை, கூழ் காய்ச்சி வார்த்து குடிக்கற கும்பா, அழுக்கு வேட்டி, கிழிஞ்ச பிடவை, கழுத்திலே பாசிமணி மாலை, குடிசைக்கு பின்னாடி ரெண்டு வெங்காயச் செடி. இதை எடுத்துக்கிட்டு யார் தங்கம் கொடுப்பாங்கன்னு தேடிக்கிட்டிருக்கேன். யாரும் இதுவரை கிடைக்கலே. கோட்டைக்குள்ளே போய் ராணியம்மா கிட்டே தான் விசாரிக்கணும்.
சண்டை வரும், யுத்தம் வருது. இதைத்தான் எல்லோரும் சொல்றாங்க. யாரு யாரோட யுத்தம் செய்யப் போறாங்க? யாரு யாருக்கு ஆதரவு தரப் போறாங்க?
இருந்த பழைய வீட்டை எல்லாம் இடிச்சு வச்சுட்டு போறதை அவனவன் எதிர்பார்த்துக்கிட்டிருக்கான். இருக்கற குடிசையைப் பிரிச்சு துரத்திவிட்டா, பஸதியிலே போய்த் தங்க விடுவாங்களா, கோவில் பிரகாரத்திலே உறங்க விடுவாங்களா?
ராணி அம்மா கிட்டே சிப்பாய், குதிரைப்படைன்னு நூறு பேர் கூட இல்லையாம். பத்து குதிரை, ஐம்பது காலாட்படை, இதை வச்சுக்கிட்டு சம்பளம் கொடுத்து பராமரிக்கறதே மகா சிரமமாக இருக்க யுத்தம் செய்ய வாளை வச்சுக்கிட்டு இன்னமும் பழைய காலத்திலே இருக்க முடியாது.
பீரங்கி, துப்பாக்கி, கண்ணிவெடி இதெல்லாம் வாங்கி வச்சிருக்காம யுத்தத்துக்கு போனா, அது யாரோட போனாலும், வெற்றி கிடைக்கிறது கடினம்ங்கறது உனக்கு தெரியுது எனக்கு தெரியுது ராணியம்மாவுக்கு தெரியலியே.
உலகம் முழுக்க அடுத்த தலைமுறை, அதுக்கு அடுத்த தலைமுறைன்னு பதவிக்கு வந்துட்டாங்க. இவங்களுக்கு அப்படி என்ன பிடிவாதம்? அறுபத்தைந்து வயசிலேயும் மிளகுராணின்னு பட்டம் வாங்கி கழுத்திலே மாட்டிக்கணும். நாலு வேலையத்தவன் மிளகுராணி வாழ்கன்னு எல்லா மொழியிலேயும் கூப்பாடு போடணும். ஒரு பசதியிலே சங்கு ஒலிச்சு கல்கண்டும் உலர்ந்த திராட்சையும் பிரசாதமாக கொண்டு வந்து தரணும், இன்னொரு கோவில்லே இருந்து மிளகுப் பொங்கல் பிரசாதம் வரணும், தாதி மிங்குவோடு ஓடிப் பிடிச்சு விளையாடணும், நிம்மதியா தின்னுட்டு தூங்கணும். யார் எக்கேடு கெட்டா மிளகுராணிக்கு என்ன போச்சு?
ராணி மகாராணியா நாற்காலியை இறுகப் பிடிச்சுக்கிட்டு பதவி போதையிலே, அதிகார போதையிலே, புகழ் போதையிலே இருக்கணும், மகனே ஆனாலும் ராஜ பதவி எல்லாம் தர முடியாது. மூணு வேலை நெய் விட்டு சாப்பிட்டுவிட்டு வயத்தைத் தடவிக்கிட்டு நிம்மதியாக உறங்கி உறங்கி மோர்க்குழம்பிலே போட்ட சேப்பங்கிழங்கு மாதிரி வழவழ கொழகொழன்னு ஏதாவது பேசிக்கிட்டிருக்கணும். அதான் ராணியம்மாவுக்கு வேண்டியது.
மகன்னு இல்லே, நாளைக்கே பேரனை அந்தப் பொண்ணு ரஞ்சனாதேவி பெத்துப் போட்டா கூட அப்பவும் தொண்டு கிழவியா மிளகுப் பொம்பளை தான் சர்வத்துக்கும் தலைமை.
சரி ஊரூரா பசதியைக் கட்டு கோவிலைக் கட்டுன்னு பிடிவாதமா அலைஞ்சிட்டிருக்காங்களே. நாளைக்கே இவங்க திடீர்னு செத்துக்கித்து போயிட்டா என்ன ஆகும் ஜெருஸொப்பா மாநிலத்துக்கு? அரை குறையா நிக்கற அந்தக் கோவில்களும் பசதிகளுமெல்லாம் என்ன ஆகும்? அதுக்கு இதுவரை செலவழித்த பணம் நஷ்டக் கணக்குலே காட்டுவாங்களா?
ஏதாவது ஒரு கோவில் எங்கேயாவது கோவில் இல்லாத இடத்திலே கட்டு அது நியாயம். ஒரே நேரத்துலே எட்டு பசதி, ஏழு கோவில். அவங்க அப்பன் வீட்டு காசா? மிளகு சாகுபடின்னு வெய்யில்லே வாடி, மழையிலே நனைஞ்சது அவங்களா? நாங்க. அந்தப் பணம் முழுக்க எங்களுக்கு வரணும். நாங்க பார்த்து அவங்களுக்கு ஏதாவது தரணும். அப்படி இருந்தா, தண்டச் செலவு ஒரு துட்டு போகாது.
வரத்தான் போகுது அந்தக் காலம், பார்த்துக்கிட்டே இரு. எப்படி பதவி சிரமமில்லாமல் தேர்ந்த கைக்கு மாறும், நடவடிக்கை எல்லாம் எப்பவும்போல் கிரமமாக நடந்தேறும்னு எந்த சிரமமும் இல்லாம கைமாற என்ன திட்டம் பண்ணி வச்சிருக்காங்க?
மிளகை லிஸ்பனுக்கு கூடையிலே அனுப்பி, காசு வாங்கிப் போட ஏற்பாடு செஞ்சா போதும். உலகத்திலேயே வேறே காரியம் எதுவும் இல்லையா என்ன?
பெத்ரோ தேர்ந்த நடிகனாக தன் குரலிலும், வார்த்தைகளிலும் ஹொன்னாவர் தெருக் காட்சிகளைச் சித்தரித்தது மிளகுராணியை மனத்து அளவில் அங்கே அழைத்துப் போய்ச் சுற்றிக் காட்டியது.
பெத்ரோ நினைத்துக் கொண்டார் –
அரசியார் ஹொன்னாவர் தெருவில் நடமாடி இருக்க மாட்டார்தான், அப்படி நடக்க வந்தாலும் அவர் காதில் பட அவர் மேல், அவருடைய ஆட்சி மேல் வைக்கும் விமர்சனங்கள் எழாது. மன்னர் வாழ்கவே, ராணி வாழ்கவே வாழ்த்தும் ஆரத்தியும் ஆரத்தித் தட்டில் இனாமாக ஒரு வராகன் காசுமாக அந்தத் தெருவிஜயம் நடந்தேறி இருக்கும்.
மிளகுராணி தெளிவான குரலில் சொன்னாள் –
இதெல்லாம் சீராக பத்து வருஷமாவது ஆகும். ஆரம்பிச்சு வச்சுட்டேன். முடிக்கணும். மகாராணி ஆமாம் என்ற பதிலை யாசிப்பதாக நோக்கினாள்.
பெத்ரோ ஆம் என்று தலையசைத்தார். சென்னா இன்னொரு பத்து வருடம் செயலோடு இருந்தால் பெத்ரோவுக்கு, போர்ச்சுகல்லுக்கு, மிளகுக்கு லாபம்.
பெத்ரோ சகோதரரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மகாராணி அடுத்துக் கேட்பார் என்று எதிர்பார்த்திருந்தார் பெத்ரோ. அதற்கான மறுமொழியையும் சித்தம் செய்யத் தொடங்கி இருந்தார் – என்னதான் நண்பர், சகோதரன் என்று உரிமை எடுத்துக் கொண்டாலும், நான் அந்நியன். அதை இனி மாற்றியமைக்க முடியாது. இப்படிச் சொல்வார் அவர்.
எனில் அதற்கான வாய்ப்பை சென்னபைரதேவி மகாராணி அவருக்கு அளிக்கவில்லை.
ராணி நேரம் சுருக்கவோ என்னமோ பெத்ரோவிடம் தெருக் காட்சிகளில் அவர் மேல் வைக்கப்பட்ட விமர்சனம் பற்றித் துளைத்துக் கேட்காமல் அடுத்து கேட்டது பெத்ரோவைத் தூக்கிவாரிப் போடச் செய்தது.
யுத்தம் வருமா?
தனக்குத்தானே பேசுகிற முணுமுணுப்பாகக் கேட்டாள். பெத்ரோ ஏதும் சொல்வதற்குள் சென்னபைரதேவி தொடர்ந்தாள் –
போர் வரும். அரசாள ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருந்த என் வளர்ப்பு மகன் நேமிநாதன் சும்மா இருக்க மாட்டான். கெலடி வெங்கடப்ப நாயக்கரும், பில்ஜி அரசன் திம்மையாவும் அவனுக்கு உடனே ஆதரவு தருவார்கள். எனக்கு ஆதரவுக்கு யாருமில்லை. அப்பக்கா ராணியை எனக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து மாற்றிக்கொள்ளக் கட்டாயப்படுத்தி விட்டார்கள். அவள் நல்ல தோழி ஆனால் இந்த முறை அரசியலில் காயப்பட்டு ஒதுங்கி விட்டாள் அப்பக்கா. ஆக நான் காசு கொடுத்து ராணுவம் சேர்க்க வேண்டி உள்ளது.
குத்திருமல் காரணமாகப் பேச சிரமப்பட்டாள் மிளகுராணி. வாசலில் மிங்கு வந்து நின்றாள் ஒரு சிறு குப்பியில் மருந்தோடு. அவளே நேரே உள்ளே நடந்து வந்து ராணிக்கு மருந்தைப் புகட்டிவிட்டு வெளியே போனாள்.
என் பக்கம், என் பட்டாளமாக யுத்தம் செய்ய போர்த்துகல் அரசு முன்வருமா? எனக்குக் கோரிக்கை லிஸ்பனில் இருந்து படை வரவேண்டும் என்பதில்லை. கோவா பஞ்சிமில் நீங்கள் நிறுத்தி வைத்து ஊர் ஒழுங்கைப் பராமரிக்க பயன்படுத்தும் அந்த ஐநூறு வீரர்களை துப்பாக்கி சகிதம் இரண்டு வாரம் ஹொன்னாவருக்கு கப்பலில் வந்து நங்கூரம் பாய்ச்சி நிற்கச் சொல்ல வேண்டும். அது போதும்.
பெத்ரோவைக் கூர்ந்து பார்த்தபடி ஒரு வினாடி மருந்துக் குப்பிக்காகக் கை நீட்டினாள் சென்னா. மிங்கு ஓடிவந்து சிசுவுக்குச் சங்கில் மாந்தத்திற்கு மருந்து புகட்டுவது போல் புகட்டித் தாயாகத் தலையைத் தடவிப் போனாள்.
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு நாளைக்கு இரண்டு வராகன், உணவு விலையின்றித் தரப்படும். இப்படி என் பக்கம் போர்த்துகல் இருந்தால் நிச்சயம் நான் வெல்லுவேன். குறைந்த பட்சம் இன்னும் பத்து வருடம் அரசாளுவேன். அதற்குள் கையில் எடுத்த கோவில், பஸதி கட்டுமானப் பணிகளோடு சாலை பராமரிப்பு, புது சாலை இடுதல், சாக்கடைத் திட்டம், குடிநீர் திட்டம் என்று ஊர்தோறும் நல்லன செய்வேன். பண்டகசாலை அமைத்து மிளகு தவிர சாயம் தோய்த்த கைத்தறித்துணி, ஏலம், பலத்த கண்காணிப்போடு வெடியுப்பு என்று வேறு பொருள் மிகுந்த ஏற்றுமதிக்கும் வழிசெய்து வருமானம் பெருக்க, அது கடைசிக் குடிமகனுக்கும் போய்ச்சேர வழி செய்ய எப்படியும் பத்து ஆண்டுகள் தேவைப்படும். யுத்தத்தில் நான் போர்த்துகல் அரசு ஒத்துழைப்போடு வென்றால் இதைக் கட்டாயம் நடத்தி முடிக்கலாம்.
இருமல் மறுபடி எட்டிப்பார்க்க, தாதி மிங்கு மருந்தோடு வந்தாள்.
எந்த ஆதரவும் கிடைக்காத பட்சத்தில் எனக்கு ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்று விலகிக் கொள்வேன்.
சென்னா சொல்லியபடி பெத்ரோவைப் பார்த்த பார்வையில் ‘சரிதானா?’ என்ற வினா தொக்கி இருந்தது. பெத்ரோ புன்முறுவலித்தார்.
சகோதரரே பெத்ரோ, உங்களுக்கு அரச தலைமைப் பிரதிநிதியாக மிக உயர்ந்த பதவி அளித்து உங்கள் அரசர் அனுப்பியிருக்கிறார். உங்கள் பஞ்சிம் துறைமுக படையை இரண்டு வாரம் இரவல் தருவீர்கள் தானே?
பெத்ரோ சற்றும் எதிர்பார்க்காத கேள்வி அது. அதை அரசியல் வாய்ப்பாக அவர் கருதலாம். போர்த்துகல் அரசரும், அரசாங்கமும் என்ன நினைப்பார்கள்? அரசத் தலைமைப் பிரதிநிதி பதவி மட்டும் போதாது இது தொடர்பாக முடிவு செய்ய என்று பட்டது பெத்ரோவுக்கு.
என்ன சகோதரரே, நான் கேள்வி கேட்டு ரெண்டு நிமிடமாகி விட்டது. கோவாவில் இருந்து போர்த்துகல் படையை எப்படி ஹொன்னாவர் கொண்டு வரலாம் என்ற சிந்தனையில் மூழ்கி விட்டீர்களா? யோசியுங்கள். நாளை மறுநாள் தகுந்த மறுமொழியோடு வாருங்கள்.
உள்மண்டபத்துச் சுவரை அலங்கரித்த சுவர்க் கடியாரம் பதின்மூன்று முறை அடித்தது. பெத்ரோ தன் இடுப்பு வார் கடியாரத்தைப் பார்த்து மாலை ஐந்து மணி பதினெட்டு நிமிடம் என்று தனக்குள் முணுமுணுத்தார்.
மகாராணி, சிறு பழுதுதான். நான் எடுத்துப்போய் கோழிக்கோட்டில் என் மாமனாரின் வர்த்தக நிறுவனத்தில் பிழை திருத்த ஏற்பாடு செய்கிறேன் என்று கடியாரம் மாட்டியிருந்த சுவர்ப் பக்கம் போனார் பெத்ரோ.
இருக்கட்டும், சகோதரர் பெத்ரோ, அந்தக் கடியாரமும் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்றாள் சிரித்தபடி மகாராணி.
மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து அதன் தலைப் பகுதியை இறுகப் பிடித்தபடி மிங்கூ மிங்கூ என்று சத்தம் தாழ்த்தி அழைத்தாள் சென்னபைரதேவி மகாராணி. தாதி மிங்கு உள்ளிருந்து வந்து நாற்காலியைத் தள்ளியபடி உள் நோக்கிப் போனாள். அப்போது தான் நாற்காலியின் இரு பக்கமும் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்ததை பெத்ரோ கவனித்தார்.
அரசியார் அலுவலகத்தில் ஒளிர்ந்த ஒற்றை தீபத்தை எடுத்துப் போன பெண் ஊழியர் பெத்ரோவுக்குத் தலை வணங்கி அவர் வெளியேறும் நேரம் என்று நினைவு படுத்தினாள். பெத்ரோ மிளகுராணியின் கோரிக்கையை மனது முழுக்க நினைத்தபடி வெளியே வர, இன்னும் மறையாத மாலைச் சூரியன் வானமெங்கும் சிவப்பு பூசியபடி அடிவானத்தில் இறங்கிக் கொண்டிருந்தான்.
இணைப்பு
போர்த்துகீசிய மகாமன்னர் விவேகன் பிலிப் இந்துஸ்தானத்துக்கான போர்த்துகீசிய தலைமை அரசப் பிரதிநிதி சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அவர்களுக்கு விடுத்த உத்தரவு லிகிதம் (பகுதிகள்)
இந்துஸ்தானப் பெருநிலத்துக்கு எம் தலைமைப் பிரதிநிதியாக நியமித்து அனுப்பிய சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அறிந்திடுக-
மகாராணி சென்னபைரதேவி அரசாளும் ஜெர்ஸோப்பா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனை குறித்து பெத்ரோ ஆகிய நீர் அறிந்திருக்கலாம். இது குறித்து எமக்கு உடனே விரிவாகத் தகவல் தெரிவித்து லிகிதம் அனுப்பியிருக்க வேண்டியது உம் கடமை. அதிலிருந்து நீங்கள் வழுவிவிட்டீர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியார் அந்த அரசியல் பிரச்சனை தொடர்பாக நாம் கோவா பகுதி பஞ்சிம் துறைமுகத்தில் நிறுத்தியிருக்கும் ஐநூற்றைம்பத்தாறு போர்த்துகீஸ் கடற்படையினரை ஒரு மாதம் இரவல் கேட்டு உம்மிடம் வரலாம் என்று எமக்குக் கிட்டிய துப்புகள் தெரிவிக்கின்றன. இதுவும் நீர் பெற்று எமக்கு அனுப்பிவைத்திருக்க வேண்டிய முக்கியமான செய்தி. செய்யத் தவறி விட்டீர்கள் என்பதில் பெருவருத்தம் அடைகிறோம்.
சென்னா மகாராணி அப்படி நம் படைகளை இரவல் கேட்டு வந்தால் நீர் செய்ய வேண்டியது
- படையினரை ஒரு மாதத்துக்கு இரவல் தர முடியாது. இரண்டு ஆண்டுகள் குறைந்த பட்ச கால அளவு அவர்கள் அனுப்பப் படுவார்கள்
- ஒவ்வொரு வீரருக்கும் தினசரி காவல் கூலியாக ஐந்து வராகனும், உணவு, உடுப்புக்காக தினசரி ஒன்றரை வராகனும் தரப்பட வேண்டும்
- ஒரு வருடத்துக்கான காவல் கூலி, மற்ற செலவினங்களுக்கான பணம் முன்கூட்டியே கொடுக்கப்பட வேண்டும். அந்தத் தொகை பணமாக அன்றி முன்கூட்டி நாம் நிர்ணயித்திடப் போகும் மிளகுக் கொள்முதல் விலை விகிதத்தின்படி மிளகாகக் கொடுக்கப்பட வேண்டும்.
- மாநிலத்தில் மிளகு பயிரிட போர்த்துகீஸ் அரசர் சார்பில் பெத்ரோவாகிய உமக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்.
- மாநிலத்தில் அரசு மாற்றங்களுக்கு பிலிப் மன்னரான எமக்குத் தெரியப்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது.
- உதவிப் படைகளை கோவாவில் இருந்து கொண்டு வருவதா, லிஸ்பனில் இருந்து அனுப்புவதா என்பதை போர்த்துகல் அரசு தீர்மானிக்கும்
- படைகள், தளவாடங்கள் நகர்த்துவதற்கான அனைத்து செலவும் தளவாடங்களின் பராமரிப்பு செலவும் ஜெருஸோப்பா அரசே ஏற்கவேண்டும்.
- இரவலாக அனுப்பப்படும் படைகளை எந்த நேரத்திலும் பின்வாங்கிக் கொள்ள போர்த்துகீஸ் அரசுக்கு முழு உரிமை உள்ளது. தளவாடங்களையும் திரும்ப எடுத்துப் போக உரிமை போர்த்துகல் அரசுக்கு உண்டு.
- படைகளையும் தளவாடங்களையும் ஆள், பொருள் மாற்றத்துக்கு (ஒருவனுக்குப் பதிலாக இன்னொருவன், ஒரு பொருளுக்குப் பதிலாக அதே தோற்றம், குணம், பயன்பாடு உள்ள மற்றொரு பொருள் என) உட்படுத்த போர்த்துகல் அரசுக்கு முழு உரிமை உண்டு.
- கோழிக்கோடு சாமுரின், அவருக்குத் தொடர்புள்ள கடல் கொள்ளைக்காரர்களான குஞ்ஞாலிகள் ஆகியோருடன் ஜெர்ஸோப்பா நேசம் பாராட்டக் கூடாது.
- போர்த்துகல் இரவல் ராணுவம், சூழ்நிலை அடிப்படையில் போர் நடப்பதற்கான சந்தர்ப்பம் எழும்போது ஜெர்ஸூப்பா அரசின் சார்பில் அவர்களுடைய ராணுவத்தோடு சேர்ந்து போரிட முயற்சி எடுக்கப்படும். அந்தப் போர்களில் எம் படையினர் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை. வெற்றி பெற்றால் இருபது சதவிகிதம் கூடுதல் ஊக்க வருமானம் அவர்களுக்கு ஜெர்ஸோப்பா அரசு தரவேண்டும். வெற்றி பெறவில்லை என்றால் நஷ்ட ஈடு எதுவும் போர்த்துகல் அரசால் தரப்படாது.
- இந்த ஷரத்துகளுக்கு உடன்பட்டால் அதிக பட்சம் இன்னும் ஒரு மாதத்தில் அதை பெத்ரோவாகிய உம்மிடம் ஜெருஸோப்பா மகாராணி தெரிவிக்க வேண்டியது. அதன் பின்னரே போர்த்துகீஸ் படை ஜெர்ஸோப்பா, ஹொன்னாவருக்கு நகரும்.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
