நம்மில் பெரும்பாலோர் ஒன்றிரு நாட்களில் மதிப்பிழந்து ம(றை/ற)ந்து போகும் வாட்ஸப் தகவல்களை படித்து மிகப்பொறுப்பாக ஃபார்வார்டு செய்து கொண்டிருக்கையில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத, பாதை பிறழாத விக்கிரமாதித்தனாய் பயணித்து வரும் பூமியின் தூதுவன் வாயேஜர்-1 கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதை பற்றி நினைவு கூற வேண்டிய தருணம் நெருங்கி விட்டது!.

இந்திராகாந்தி ஆட்சியில் பிரகடனப் படுத்தப்பட்ட எமர்ஜென்ஸி, 21 மாதங்களுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் ஆட்சிக்கு வந்திருந்த சமயம் இப்போது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதே 1977 வருடம் அடித்த ஒரு புயலில் தமிழ்நாட்டிலும் ஆந்திரப்பிரதேசத்திலுமாக சுமார் ஐம்பதாயிரம் பேர் இறந்து போனார்கள். பதினாறு வயதினிலே படம் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. அப்போது வெளிவந்த ஒரு விகடன் துணுக்கில், ஒரு படிக்காத பாமரர் ரயில் நிலையத்தில் அருகே நிற்கும் படித்தவரிடம், “ஏங்க, கிழக்க போகும் ரயில் எப்பங்க வரும்?”, என்று கேட்க, அவர் பாரதிராஜாவின் வினோத பெயர் கொண்ட அடுத்த படத்திற்கான போஸ்டர் சுவற்றில் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டு, “இப்பதான் தயாரிக்கறாங்களாம். அடுத்த வருஷம் வரும்” என்று பதில் சொல்வார்! அமெரிக்காவின் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர். பராக் ஒபாமா அப்போதெல்லாம் தனது தாத்தா பாட்டியுடன் ஹவாயில் உள்ள ஹானலுலுவில் வசித்துக்கொண்டு ஒரு உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்! அந்த செப்டம்பர் 1977 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட பிரபஞ்ச தூதுவன் வாயேஜர்-1.
வாயேஜர்-1 இன் வாழ்க்கைக் கதையை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இப்படி சுருக்கலாம்:
- பிரபஞ்சத்தில் எங்கேயாவது எப்போதாவது யாராவது தன்னை சந்தித்தால், அவர்களிடம் தெரிவிப்பதற்காகவே, மனிதகுலத்தைப் பற்றிய பல விவரங்களை ஒரு தங்கத்தட்டில் பதித்து ஏந்திக்கொண்டு,. நமது சூரியக் குடும்பத்தையே தாண்டி வெளியே செல்லும் நிச்சயமான குறிக்கோளுடன் பயணத்தை துவக்கிய முதல் விண்வெளிப் பயணி.
- வியாழன் கிரகத்தின் நிலவுகளை நெருக்கமாகப் புகைப்படம் எடுத்த முதல் விண்கலம்.
- உலக வரலாற்றிலேயே வியாழனை கடந்து பயணித்த இரண்டாவது விண்கலம்.
- நமக்கு தெரிந்தவரை வளிமண்டலத்தைக் கொண்ட ஒரே நிலவான சனியின் டைட்டனை ஆய்வு செய்த பெருமையும் இதற்குண்டு..
- அதற்கப்புறம் சுமார் முப்பது வருடங்கள் தொடர்ந்து பறந்து, 2012இல் நமது சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறி, இன்னொரு பன்னிரெண்டு வருடங்களுக்கு அப்புறமும் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது,
- நம்மால் வடிவமைக்கப்பட்டு ஏவப்பட்ட விண்கலங்களிலேயே மிகத்தொலைவு பயணித்த பெருமை இதற்குதான். நம் வாழ்நாட்களுக்குள் எதிர்காலத்தில் இதன் இந்த சாதனையை வேறு எந்த விண்கலமும் முறியடிக்கும் சாத்தியம் இல்லை!
குறைந்தது மூன்று ஆண்டுகளாவது தாக்குப் பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட வாயேஜருக்கு ரொம்பவே வயதாகிவிட்டது. மூன்று ஆண்டுகள் எங்கே, நாற்பத்தியாறு ஆண்டுகள் எங்கே! நூறு வயது வரை வாழவேண்டிய ஒரு மனிதன் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் வரை வாழ்வதற்கு ஒப்பு இது என்று கூட சொல்லலாம். அது அப்படியொரு வியத்தகு கர்மவீரனாக செயல்பட்டாலும், காலம் யாரைத்தான் விட்டு வைக்கிறது? வாயேஜர் தான் இயக்குவதற்கான சக்தியை அதற்குள்ளிருக்கும் ஒரு கதிரியக்க ஜெனரேட்டரில் இருந்து பெறுகிறது. பூமியை மட்டும் சுற்றும் செயற்கைக்கோள் என்றால் வெறும் சோலார் பேனல்களை வைத்தே சமாளிக்கலாம். இவர் சூரியக்குடும்பத்தை விட்டே வெளியே போகிறேன் என்று கிளம்பியதால், அத்தகைய பயணத்திற்கேற்ப இவருக்கு வேறு மாதிரியான கட்டுசாதம் செய்து கொடுத்திருந்தார்கள். நாற்பத்தி சொச்சம் வருடங்களுக்கப்புறம் அந்த கதிரியக்க சாப்பாடெல்லாம் தீர்ந்து நீர்த்துப் போய் வெறும் ஈயப்பாத்திரமாகிக் கொண்டிருக்கிறது! ஆண்டுதோறும் அந்த ஜெனரேட்டரின் சக்தி குறையக்குறைய, நாசா, வாயேஜரின் கருவிகளை ஒன்றொன்றாக அணைத்து, மின்சார சாப்பாட்டுத் தேவைகளைக் குறைத்து வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அதில் இருக்கும் இயந்திரங்கள் உறைந்து விடாமல் காக்கும் ஹீட்டர் அமைப்புகளை அணைத்தார்கள். அப்போதே அதன் வாழ்வு முடிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் நினைத்ததை பொய்ப்பித்தது வாயேஜர்! விண்கலத்தின் வெப்பநிலை ஐஸ் கட்டிகளின் நிலைக்கும் கீழே போய், திரவ நைட்ரஜனை விட குளிர்ந்தபோதும் கூட விடாப்பிடியாய் வேலை செய்து கொண்டே இருந்தது.
அதன் தரவுகள் சேகரிக்கும் டிஜிட்டல் டேப் ரெக்கார்டர் போன்ற கருவிகள் இப்படிப்பட்ட வெப்ப நிலையில் எல்லாம் வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டவை அல்ல. ஆனால் எப்படியோ அவை தொடர்ந்து வேலை செய்து சாதிக்கின்றன!
வாயேஜர் பயணித்திருக்கும் தூரத்தைப் பற்றி கொஞ்சம் யோசித்துக் பார்க்க வேண்டும். இப்போது அது 15 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தை தாண்டி இருக்கிறது என்று சொல்லலாம். இப்படி வெறும் ஒரு எண்ணைச் சொன்னால் நம்மால் இந்த தூரத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாது. எனவே, நமக்கு தெரிந்த சில தொலை தூரங்களுடன் இதை ஒப்பிட்டு பார்ப்பது நல்ல ஐடியா. நமக்கு ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் என்பது தெரியும். அந்த வேகத்தில் பயணித்தால், நாம் சந்திரனைச் சென்றடைய ஒன்றரை வினாடிகள்தான் ஆகும். அடுத்து சூரியனை நோக்கி வண்டியை விட்டால், அதை சென்றைய சுமார் 8 நிமிடங்கள் ஆகும். ஒளியின் வேகத்தில் பயணித்தாலே 8 நிமிடங்கள் ஆகுமா? என்று பிரமிக்கத் தோன்றுகிறதல்லவா? சூரியனுக்கு பதிலாக, நேராக வாயேஜரைப் பிடிக்க ஒளியின் வேகத்தில் ஓடினால், போய்ச் சேர இருபத்தி இரண்டு மணிநேரம் ஆகும்! இன்னொரு முறை இந்த எண்களை கூர்ந்து கவனித்து மனதில் நிறுத்திக்கொள்வது அவசியம். சூரியன் 8 நிமிட தூரத்தில் இருக்க, வாயேஜரைப் பிடிக்க 22 நிமிடங்கள் அல்ல, 22 மணிநேரம் ஒளியின் வேகத்தில் ஓட வேண்டி இருக்கிறது! எனவே திங்கட்கிழமை அலுவலகம் போய் கொஞ்சம் வேலை செய்து, லஞ்ச் சாப்பிட்டுவிட்டு மதியம் ஒரு மணிக்கு “இந்தத் தந்தி கிடைத்ததை எனக்கு உடனே தெரிவிக்கவும்” என்று ஒரு மெசேஜ் அனுப்பினீர்களானால், “தந்தி கிடைத்தது”, என்று அது உடனே போட்ட பதில் உங்களை வந்து சேர்வதற்குள் செவ்வாய் முடிந்து, வீட்டிற்கு போய் தூங்கி எழுந்து, புதன்கிழமை காலை 8 மணிக்கு ஆபீஸ் வந்திருப்பீர்கள்!
நாற்பது வருடங்களுக்கு முன்னே இருந்த பெரிய ஆய்வகம், பல விஞ்ஞான சேவகர்கள் எல்லாம் இப்போது அதற்கு இல்லை என்றாலும், விடாமல் வயதான சில நாசா பணியாளர்கள் இப்போதும் அதன் உடல் நிலையை கவனித்து, எவ்வளவு நாள் இந்த தூதுவனை உயிரோடு வைத்துக்கொள்ள முடியும் என்று பார்த்து விடுவோம் என்று முயன்று கொண்டிருக்கிறார்கள்.

வலையில் தேடினீர்களானால் வாயேஜெருக்கு பல விசிறிகள், பக்தர்கள் எல்லாம் இருப்பது தெரியும். முடிந்தால் இந்த பாட்காஸ்ட் எபிசோட் ஒன்றைக் கேட்டுப் பாருங்கள். அந்த திட்டத்தின் ஒரு இயக்குனராக பணியாற்றியவரும், பிரபல எழுத்தாளர் கார்ல் சேகனின் மனைவியுமான ஆனி துர்யன் அதை பற்றி விவரிப்பதை கேட்கலாம். மனித சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்ற நோக்குடன் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான வருடங்கள் அது அண்டவெளியில் பயணித்தாலும் உருக்குலைந்து விடாமல் இருக்கும்படியும், அது ஏந்திச்செல்லும் தங்கத்தட்டில் (Golden Record) பதிக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நாடு, மக்கள் பற்றி இல்லாமல், புவியைப்பற்றிய உன்னதமான, நாம் வேறு எவருக்கும் தெரியப்படுத்த விரும்பும் தகவல்களாகவும் இருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.

பதியப்பட்டிருக்கும் ஒலி, தகவல்களை எப்படி டீகோட் செய்து புரிந்துகொள்வது என்ற குறிப்புகளும் அறிவியலுக்கு பொதுவான ஒரு வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உங்களிடம் VR headset இருந்தால், இந்த 360 டிகிரி யுட்யூப் காணொளியை பார்க்க முயலலாம். பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒலி சாம்பிள்களில், உலகின் பல்வேறு வகையான இசைத் துணுக்குகள், ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் முத்தத்தின் சத்தம், பல்வேறு விலங்குகள், திமிங்கிலங்கள் போடும் சத்தங்கள், இதயத்துடிப்பு, என்று பல ஸ்வாரஸ்யமான விஷயங்கள் அடங்கும். இந்தக்கலத்தைப் பிடித்து, தங்கத்தட்டில் பதிந்திருக்கும் செய்திகளை கேட்டு, பார்த்து புரிந்துகொள்ள, மனிதர்கள் அளவாவது வளர்ந்து முன்னேறி இருக்கும் கிரகவாசிகள் அவசியம். பல விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் என்று எங்காவது இருந்தால், அவை சின்ன கிருமிகள் அளவில் இருந்தாலே அதிகம், சினிமாவில் வருவதுபோல் பச்சைநிற குட்டி மனிதர்கள் எல்லாம் எங்கும் கிடையாது என்கிறார்கள். ஏன் நம்மைப் போன்ற வளர்ந்த உயிரினங்கள் வேறு எங்காவது இருக்க முடியாது என்று இன்னும் கொஞ்சம் யோசித்து பார்க்க விரும்பினீர்களானால், பெர்மி பாரடாக்ஸ் பற்றிய இந்த நீண்ட கட்டுரையில் வரும் மூன்று கட்ட சல்லடை பற்றிய விவரங்கள் உங்களுக்கு நல்ல மூளைத் தீனியாக அமையலாம். அந்த தங்கத்தட்டில், பிரபஞ்சத்தில் பூமி எங்கே இருக்கிறது என்றும் சொல்லப் பட்டிருப்பதால், அதைப் பார்த்துவிட்டு நமது எதிரிகள் யாராவது படையெடுத்து நம்மை அழித்து விடுவார்களோ? எதற்கு இந்த “தவளை தன் வாயாற்க்கெடும்” என்பதை உறுதிப் படுத்த முயலும் விஷப் பரீட்சை என்று கேட்டவர்களும் உண்டு
வாயேஜர் நமக்கு கொடுத்திருக்கும் பல பரிசுகளில், எப்படிப் பட்ட ஆணவக்காரரையும் தலையில் குட்டி மூலையில் உட்கார வைக்கும் இந்த ஒரு புகைப்படமும் அடங்கும்.

1990 வாக்கில், வாயேஜரின் கேமரா கண் நிரந்தரமாக மூடப்படுவதற்கு சற்று முன்பு, நாசா விஞ்ஞானிகள் அதை ஒருமுறை பூமியை நோக்கித் திரும்பிப் பார்த்து ஒரு படமெடுத்து அனுப்பும்படி பணித்தார்கள். அப்போது முடிந்த அளவு ஜும் செய்து அது எடுத்து அனுப்பிய படம் இது! இதில் பூமி எங்கே இருக்கிறது தெரியுமோ? படத்தில் சிவப்பு, பச்சை, வெள்ளை வண்ணங்களில், மேலும் கீழுமாக மூன்று பட்டைகள் இருக்கின்றன அல்லவா? அவற்றில் வலப்பக்க வெள்ளைப் பட்டையைக் கூர்ந்து பாருங்கள். அதில் பாதிக்கு கீழே, ஒரு குண்டூசி முனைப் புள்ளி தெரிகிறதா? அதுதான் பூமி! இந்த பூமி படத்தைப் பற்றிய பிரபல விஞ்ஞான எழுத்தாளர் கார்ல் சேகனின் (மேலே இருக்கும் புகைப்படத்தில் தன் மனைவியுடன் போஸ் கொடுப்பவர்தான்) ஒரு மேற்கோள் மிகவும் அழகானது. இதோ அதன் தமிழாக்கம்:
“அதுதான் இங்கே. அதுதான் வீடு. அதுதான் நாம். அந்த புள்ளிக்குள்தான் நீங்கள் விரும்பும் அனைவரும், உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாவரும், நீங்கள் கேள்விப்பட்ட ஒவ்வொருவரும், இவ்வுலகில் இருந்த ஒவ்வொரு மனிதரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். நமது மகிழ்ச்சி மற்றும் துன்பங்களின் தொகுப்பு, ஆயிரக்கணக்கான நம்பிக்கை மிகுந்த மதங்கள், சித்தாந்தங்கள் மற்றும் பொருளாதார கோட்பாடுகள், எல்லாம் அதற்குள் அடங்கி இருக்கின்றன. ஒவ்வொரு வேட்டைக்காரனும், கிடைத்ததை வைத்து வாழ்பவனும், ஒவ்வொரு வீரனும், கோழையும், பல்வேறு மனித நாகரீகங்களை உருவாக்கியவர்களும், அழிப்பவர்களும், ஒவ்வொரு அரசனும்/அரசியும், குடிமக்களும், விவசாயிகளும், ஒவ்வொரு இளம் ஜோடியும், ஒவ்வொரு தாய் மற்றும் தந்தையும், நம்பிக்கையோடு சிரிக்கும் குழந்தையும், ஆய்வாளரும், கண்டுபிடிப்பாளரும், ஒவ்வொரு ஒழுக்கநெறி ஆசிரியர்களும், ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதிகளும், ஒவ்வொரு கலை நட்சத்திரங்களும், புரட்சி வீரர்களும் தலைவர்களும், ஒவ்வொரு புனிதரும், பாவியும் அங்கேதான் வாழ்ந்து மனித வரலாற்றில் பங்கேற்றனர். அது – சூரிய ஒளியில் ஒரு ஓரமாய் மிதந்து கொண்டிருக்கும் ஒரு தூசியின் தூசி.”
– கார்ல் சேகன்
அந்தப் படம் எடுக்கப்பட்டதே 34 ஆண்டுகளுக்கு முன்பு! வாயேஜர் இன்னும் விரைந்து கொண்டிருக்கிறது! அது சூரியனின் ஈர்ப்பு விசையின் பிடியை விட்டு வெளியேறி விட்டதால், அது பாட்டுக்கு பயணித்துக் கொண்டேதான் இருக்கும். நாசா இந்த விண்கலத்தை அனுப்பி வைத்த அதே வருடம் வாயேஜர்-2 என்ற இன்னொரு விண்கலத்தையும் அனுப்பியது. ஆனால் அதன் குறிக்கோள், சென்ற பாதை எல்லாம் வேறு. எனவே அது இன்னும் கோடிக்கணக்கான கிலோமீட்டர்கள் பின் தங்கி பறந்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சிக்கப்புறம் அமெரிக்கர்களோ, ரஷ்யர்களோ, சீனர்களோ, ஜப்பானியர்களோ, இந்தியர்களோ, யாருமே இது போன்ற விண்கலங்களை சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேறும் வகையில் அனுப்பி வைக்க முயலவில்லை. இனிமேல் அனுப்பினாலும், பாதைகளை மாற்றி அமைத்தாலும், தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், வாயேஜர்-1 சென்ற தூரத்தை கடந்து சென்று அதன் சாதனைகளை இன்னொரு விண்கலம் முறியடிப்பது நம் வாழ்நாட்களில் இயலாத காரியம்!
வாயேஜரை அனுப்பி வைத்த விஞ்ஞானிகள், அதன் வாழ்வு எப்படி முடிவடையும் என்ற கேள்விக்கு நம்மைப் பொறுத்தவரை ஒரே விடைதான் என்று நினைத்திருந்தார்கள். அதன் ஜெனரேட்டர் தரவிழையும் சக்தி படிப்படியாக குறையக்குறைய, தவிர்க்க முடியாமல், இயங்கும் கருவிகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படும் அல்லது இயங்க முடியாமல் நின்று போகும். அதிலிருந்து நமக்கு வரும் சமிக்ஞைகள் (Signal) அனைத்தும் மங்கிக்கொண்டே வரும். இறுதியில் முழுதும் சக்தியற்ற நிலையில் கடைசி கருவி தோல்வியடையும், அல்லது சமிக்ஞைகள் வருவது முற்றிலுமாய் நின்று விடும். இப்படித்தான் அதன் முடிவு இருக்கும் என்று துளியும் சந்தேகம் இல்லாமல் கணித்திருந்தார்கள். ஆனால் அதற்கு பதிலாக அதென்னவோ அவ்வப்போது பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொண்டு உளறிக்கொட்டி குழப்படியான, புரிந்து கொள்ள முடியாத தகவல்களை கூட அனுப்பி இருக்கிறது! ஒ.. பேசுவதை வெறுமனே நிறுத்துவதற்கு பதில், இப்படி மூளை பிசகி உளறிக்கொட்டிவிட்டு மறையப் போகிறதோ, என்று நினைத்தபோது, அதன் டாக்டர்களாக இன்னும் செயல்படும் விஞ்ஞானிகள், ஓரிரு முறை ஏன் அப்படி செய்கிறது என்று கண்டுபிடித்து, 44 மணி நேர சமிக்ஞைகள் மூலமே மருந்து கொடுத்து சரிசெய்தும் சாதனை படைத்திருக்கிறார்கள். உதாரணமாக, போனவருடம் ஏதோ ஒரு காரணத்தால், சாதாரணமாக அது செய்தியனுப்ப உபயோகிக்கும் கம்ப்யூட்டருக்கு பதிலாக, பல வருடங்களுக்கு முன்பே பழுதாகிவிட்டது என்று நினைத்து அணைத்து வைத்திருந்த இன்னொரு கம்ப்யூட்டர் வழியாக அது செய்தியனுப்ப ஆரம்பித்திருக்கிறது! அது பழுதாகிப்போன கணினி என்பதால் வந்த செய்திகளும் உளறலாக இருந்தன! திரும்பவும் ஒழுங்காக வேலை செய்யும் கம்ப்யூட்டருக்கு அதை மாறச் சொன்னதும், செய்திகளும் சுத்தமாக வர ஆரம்பித்தன! அது ஏன் கம்ப்யூட்டரை மாற்றியது? அதுவே ஒரு மூளை பிசகலோ என்று இன்னும் தலையை சொறிந்து கைகளை பிசைந்து ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்!
வரும் ஓரிரு வருடங்களில் ஒரு கட்டத்தில் அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். அது வரை முயல்வார்கள். யோசித்தால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர் பட்டம் அந்த விஞ்ஞானிகளுக்கும், டான் கிஹோட்டே பட்டம், பெரிய லட்சியங்களை அடைய முயலும் முயற்சிகளிடையே அவ்வப்போது கொஞ்சம் வேடிக்கையாகவும், கிறுக்குத்தனமாகவும் நடந்துகொள்ளும் வயதான வாயேஜருக்கும் பொருந்துமோ என்னவோ, தெரியவில்லை! சொல்வனம் என்கிற காட்டுக்குள்ளேயே தேடிப் பார்த்தால் கூட பத்து வருடங்களுக்கு முன்னால் இருந்தே வாயேஜர் சில தடயங்களை காலப்பெட்டகம் போல் விட்டுச் சென்றிருப்பதை பார்க்கலாம்! எனவே நாம் எல்லோரும் இவ்வுலகை விட்டு மறைந்து பலகாலம் ஆனபின்பும் இந்த டான் கிஹோட்டே தன் பழுதடைந்த குதிரையில் விடாமல் ஓடிக்கொண்டு இருப்பதன் சாத்தியம் மிக அதிகம் என்றுதான் தோன்றுகிறது!
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

Excellent article. மிக எளிய நடை, அற்புதமான தகவல்கள்..Thank you Sundar.
மிக மிக தெளிவாக புரியும் படியும், பல இந்த கால விஷயங்களை இடை செருகி சுவாரசியம் குறையாமலும் இருந்தது. பாராட்டுகள்.
மிக அருமையான கட்டுரை
அரிய தகவல்களை எளிதில் புரியும்படியான நடையில் எழுதியதற்க்கும் , சிறப்பான தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
வாயேஐர் பற்றிய அரிய தகவல்களை எளிதில் புரியும்படியான நடையில் எழுதியதற்க்கும் தங்களின் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்
வாயேஜர் பற்றிய அரிய தகவல்களை எளிதில் புரியும்படியான நடையில் எழுதியதற்க்கும் சிறப்பான தங்களின் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.
வருடத்தை குறிப்பிட்ட ஒவ்வொரு முறையும், அந்த கால கட்டத்தில் நம் தமிழ் நாட்டில் எந்த விஷயம் Trendingல் இருந்தது என்பதை தெரிவித்த முறை கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது. பாராட்டுகள்
Wonderful article. Amazing Tamil language. Proud of you Sundar
அருமையான நடையில் தெரியாத தகவல்களை எளிதாய் அறிய வைத்ததற்கு நன்றி