முகங்கள்

நீங்கள் ஓமானியா என்று தெரியாமல் கேட்டு விட்டேன். நம்பர் ஒன் ஓமானி என்றார். அப்படியே விட்டுவிட முடியுமா ? அப்படியானால் நம்பர் டூ ஓமானி யார் என்று கேட்டேன். ரிங்பாரி என்று ஏதோ சொன்னார். நிச்சயம் கெட்ட வார்த்தையாக இருக்க வாய்ப்புள்ளது.

அம்மா

மறுநாள் சாயங்காலம் வீட்டிற்கு கிளம்ப தயாரானான். துணியுடன் சேர்த்து பாட்டி கொடுத்த மாதுளம்பழமும் எடுத்துக்கொண்டான். பாட்டி ஒரு தடவை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள். பாட்டி கிட்ட எப்பவும் இந்த விக்கோ வஜ்ராதந்தி வாசன. அவனுக்கு அப்போ அது புடிச்சு இருந்துது. மாமா அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டுவிட்டுச் சென்றார்.

டபுள் டாக்டர்

சில புதிர்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால் அவரைப் பற்றிய எங்கள் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர் யார் ? எங்கிருந்து வந்தார் ? பிள்ளைகள் உண்டா ? தம் அடிப்பாரா ? ஏன் டிபார்ட்மெண்ட் ஆசிரியர் அறையில் போய் உட்கார்வதில்லை. எப்பொழுது பார்த்தாலும் லைப்ரரிக்கே போய் விடுகிறார். ஏன் டூருக்கு வரமாட்டேங்குறார். ஏன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படி முக்கியமான கேள்விகளுக்கு விடை கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம் தான். இருக்கட்டும் . பாடம் நன்றாக எடுக்கிறார் அல்லவா?

இருப்பு

உண்மையில் நான் இருப்பது கற்பனை செய்யமுடியாத அதிமகத்தான ஒரு மனித மூளையின் எண்ணற்ற மடிப்புகளுக்கிடையில் ஏதோ ஒரு இடுக்கில் என்று அறிந்தேன். மேலே கவிழ்ந்த அரைக்கோளமாய் மண்டை ஓடு தொட்டுக்கொண்டிருப்பதையும் மங்கலாகக் காணமுடிந்தது. இது என்னால் கொஞ்சம்கூட ஊகிக்கப்படவே முடியாதது என்று புரிந்தபோது மெல்ல என் திண்மையழிந்து, எடையிழந்து நான் இல்லாமலாவதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். மூளைக்குள் நானிருக்கிறேன் என்றால் என் உடல் எங்கே என்று கேட்டுக்கொண்டேன். அல்லது நான் என்பதே வெறும் எண்ணம் தானா?

கதைப் புத்தகம்

நேற்று வரை கதவு அங்கிருந்த ஞாபகம் இல்லை. எதுவரை நேற்று வரை என்பதே வெறும் மனக்கணக்கு தான். ஞாபகம் பற்றி கேட்கக்கூட வேண்டாம். ‘காலம்’ என்பது கட்டுப்படுத்தப்பட்டு, தண்ணீர், மின்சார விநியோகம் போல, தினப்படி வழங்கப்படும் போது, ‘காலக்கிரமமான நிகழ்வுகளின் தொகுப்பான ஞாபகம்’ என்பதற்கு அர்த்தமேயில்லை. உச்ச செயல் துறையிடம், ‘நேற்றை’ ‘நாளை’யாகவும், ‘ இன்றை’ ‘நேற்றா’கவும, ஒன்றை என்றாகவும் மாற்றும் தனிப்பிரிவு இருந்தது.

ஒரு மரம்; தனி மரம்

என் அறையில் நான். உறாலில் அவள். உள் அறையில் அவன். வீடே ஒரு நூலகமாய்த் தோன்றுகிறது. ஏகாந்த அமைதி. பல மணி நேரங்கள் இந்த வீடு இப்படி இருப்பதற்கு அனுபவப்பட்டிருக்கிறது. என் வீட்டிற்குப் பெயா; சாந்தி இல்லம். அது என் மனதை ஈர்த்த ஒரு ஏழைப் பெண்ணின் ஞாபகமானது. முட்டி முட்டிக் கேட்டிருக்கிறாள் சத்யா அது யார் என்று? அது என்னோடு தோன்றி என்னிலேயே அழியக் கூடிய ரகசியம்.

மானிடர்க்கென்றுப் பேச்சுப்படில்!

சித்தி பெயருக்கேற்ற கோதைதான், 75 வயதிலும் அழகும் மெருகும் குலையாமல், சிக்கென, சின்னப் பெண்போல காரியங்களைக் கண்ணும் கருத்துமாகச் செய்வாள். எப்போதும் யாராவது உறவினர் வீட்டு கல்யாண கலாட்டா நிரம்பிய சமையலறையிலோ, இல்லை குழந்தைப் பேற்றுக்காக அழைத்து வரப்பட்ட உறவினர் வீட்டுச் சமையலறையில் பத்திய உணவு தயாரிப்பதிலோ, பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி, சீராட்டி, தாலாட்டுவதிலோ தன்னை மறந்திருப்பாள்.

பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

மொட்டை மாடி அழகாகவே இருந்தது. யாராலும் மொட்டை மாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை, சிறியதோ, பெரியதோ அது அடைசலும் புழுக்கமும் அற்ற திறந்த வெளியில் நம்மை நிறுத்திவிடுகிறது. நிச்சயம் காற்று இருக்கும். பளிச்சென்று நம்மைச் சுற்றி வானம் வெள்ளையும் நீலமுமாக இறங்கும். இடம் வலம் எங்கு திரும்பினாலும் மேகமாக இருப்பது நம்மை என்னவோ செய்யாமல் இராது. மொட்டை மாடியில் வைத்து யாராவது கோபப்பட்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. மேலும், மழையும் வெயிலும் அடித்து அடித்து இந்தத் தளச் செங்கல்களுக்கு நேர்ந்திருக்கிறதை உற்றுப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடவும் கூடும்.

கைகழுவப்பட்டவன்

பாவம் டாக்டர் இன்னாசு. மருத்துவ விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இவரா பைத்தியம்? வெளியில் இருக்கும் படித்த பெரிய டாக்டர்கள்தான் பைத்தியம், என்ற உறுதியான எண்ணம் தெரசாவிற்கு ஏற்பட்டது. அதே நேரம் டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று வந்த ஒரு டாக்டரே இவரைக் கேலி பேசியபோது கிட்டத்தட்ட அவர் கழுத்தை நெறிக்கவே செய்து விட்டார் டாக்டர் இன்னாசு; இரண்டு மூன்று காவலாளிகள் சேர்ந்து அவரை எப்படியோ பாடுபட்டு அடக்கினார்கள்.

லீலை

தங்கள் மூதாதையர், காலத்தை வெல்ல, காலமே இல்லாத ஓரிடத்தில் வந்து நிலைபெற்றனர் என்பது மெல்ல மெல்லப் புரியும் தோறும் தேஜாவின் உடல் ஒளி வெப்பமாக அடங்காத அலைகளாக வெளியேறியது. தனக்கு முன் யாரும் இவற்றை உணர்ந்திருக்கிறார்களா என்று தேடி தன் ஆழ்மன அடுக்களில் இறங்கி தங்கள் ஒளிர்கிரகத்தின் நியமங்களில் நகர்ந்தான். அறிந்தவர்களின் மன அலைகள் இன்னும் ஆழத்தில் கிடப்பதை அவன் மனம் கண்டுகொண்டது. ஒருவேளை அவர்கள் எல்லாம் மனவிலக்கம் அடைந்து பிலத்திற்குள் சென்று விட்டார்களோ என்று நினைத்துக் கொண்டான்.

வம்ச விருட்சம்

தலைவர் வீட்டின் முற்றத்தில் உள்ள சாவடியில் அம்மாவையும் , அப்பாவையும் கட்டி வைத்துவிட்டார்கள். அண்ணன் சொன்னது மாதிரிச் செய்து விட்டான். அவனுக்கு எங்கள் சாதி மீது வெறுப்பா சாதிகள் மீதே வெறுப்பா என்று தெரியவில்லை. எங்கள் பக்கம் ஜாதியைச் சொல்லும் போது பிள்ளைமார் , நாய்க்கமார் , தேவமார் என்று மார் சேர்த்துச் சொல்வோம். அண்ணன் எல்லாவற்றையும் சொல்லி, எல்லாம் விளக்கமாறு என்பான். அப்பொழுது சிரித்தோம்.

விவல் அக்கா

அப்போதெல்லாம் நவராத்திரிக்கு எங்கள் அரைகுறை அக்ரஹாரத்து சிறுவர் சிறுமியர் அலங்கரித்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று தெரிந்தது தெரியாதது அறிந்தது அறியாதது என்ற பாகுபாடற்று சொல்லியும் பாடியும் சுண்டல் அள்ளிக் கொண்டு வருவோம். இப்படி இருந்த அக்ரஹாரத்தில் ஒரு தென்றல், ஆடவர் அனைவரையும், ஏன் பெண்டிரையும், மௌனமாக, ஆனால் ஒரு ஆழிப் பேரலையின் தீவிரத்துடன் தாக்கியது.

திறப்பு

சுருதி சுத்தத்தை கவனிக்கப் பழக்கப்பட்ட ஜெயந்திக்கு பாடுபவரே இசையாக மாறிய விந்தையை நம்ப முடியவில்லை. பக்தி பாவத்தை உணரப் பிரயத்தனப்பட்ட அவளது பயிற்சிகள் தன் முன் சிதறுவதைக் கண்டாள். பக்தியையும் தாண்டி அவரது பாடல் வேறெங்கோ சஞ்சாரிப்பதை உணர்ந்தாள். பாடலைக் கொண்டு நிறுத்தியிருந்த நிலையில் ஒவ்வொரு ஸ்வரமும் தனி இசைவெளியாக ஒலிக்கத் தொடங்கியது. எத்தனை அன்பையும், உணர்ச்சியையும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பாடகர் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்க நினைக்க ஜெயந்தியின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் சுரந்தது.

ரிஸ்க்

கார் சிறுகுன்றின் மேல் ஏறும்போதே நசி கவனித்தாள். தொலைவில் நீலநிறக்கோடு. வறட்சியில் தவித்த ஹியுஸ்டனிலிருந்து வந்த அவளுக்கு அது இனிய காட்சி. உணவகத்தில் நுழைந்ததும் உட்காரவைக்க பரிசாரகி வரவேண்டும். அதில் சற்று தாமதம். அதற்குள் நசிக்கு அவசரம். இருட்டுவதற்குள் பார்த்துவிட வேண்டும். நழுவிச் செல்கிறாள். வயதுக்கு சிறிய வடிவாக இருப்பதில் ஒரு லாபம். யார் கண்ணிலும் படாமல் மனிதர்களுக்கு நடுவில் புகுந்து, மேஜைகளுக்கு கீழே குனிந்து ஓகிறாள். ஆறு தெரியவேண்டுமே. எதிர்ப்புறத்தில் தடியான பிளாஸ்டிக் திரை. அதை ஒதுக்குகிறாள். அங்கும் மேஜை நாற்காலிகள்.

இயலாமை

என்னுள் உண்டான மாற்றங்களின் நீட்சியான மனிதன் இன்று என்னையே அழிக்கிறான். வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அதீதமான வளர்ச்சியாலும், வலிமையாலும், நான்கு கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் இருத்தல் இன்று அபாயத்தில் இருக்கிறது.

வயிறு

உடலைக் கிடத்திய போதும் லெட்சுமிக்கு அழுகை வரவில்லை. இந்த மாதிரிச் சமயங்களில் யார் அழுகிறார்கள் யார் அழவில்லை என்பதைக் கணக்கெடுக்க ஒரு கூட்டம் இருக்கும். கொஞ்ச நாளைக்குப் பேசுவதற்கு விசயம் வேண்டும் இல்லையா. கல்நெஞ்சம் என்று பட்டம் கொடுக்க. குறிப்பாக மகன்கள் , மருமகள்கள் அழுகிறார்களா என்பதுதான் கவனிக்கப் படும். அவர்களுக்குத்தான் அளந்த துக்கம். லெட்சுமியே அழவில்லை என்பது அவர்களுக்கு புரிந்தும் புரியாத விசயமாகவே இருந்தது.

தர்ப்பணம்

அப்பா எல்லாவற்றையும் அப்படி பத்திரமாக வைத்துக் கொள்வார். அதில் டென்ஷனும் இருக்காது. தன் உடம்பைத்தான் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது அவரோட அப்பா அம்மா கொடுத்தது. சின்ன வயசில் கால் முட்டி வலியோடு ஜுரமும் வந்திருக்கிறது. யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘முட்டியை நக்கிய கிருமி இதயத்தை கடித்து’ விடுமாம். பின்னால் ‘ருமாடிசம்’ என்கிற அந்த வியாதி பற்றி எங்கோ படிக்கையில் தெரிந்துகொண்டான். சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஆபீஸிலிருந்து திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அப்பா எதற்கோ அவர் பர்ஸை எடுக்கச் சொன்னார். அவன் நல்ல லெதர் வாசனை இப்போதும் அடிக்கும் அந்த பழங்காலத்துப் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தான். “என் கிட்டே ஏன் கொடுக்கற. இனிமேல் நீதான் பர்ஸ் பணம் எல்லாம் வச்சுக்கணும்; அப்பாவையும், அம்மாவையும் பாத்துக்கணும்.காலேஜ் சேர்ந்தாச்சு” என்று புன் முறுவல் பூத்தவாறே சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டினான். அந்த முறுவல் அவனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் போது மட்டும் விசேஷமாக வரும்.

மேகமூட்டம்

உண்மையில் பெரிய கவலை இருந்தது. இரண்டு வயது அஷ்வினை ஆஸ்பெர்கர் மையத்தில் விட்டு அரை மணி ஆகிவிட்டது. அதற்குள் விளையாட்டு, பேச்சு, பார்வைத் தொடர்பு என்று பன்னிரண்டு கோணங்களில் அவனை சோதித்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன், அஷ்வினின் பதினாறாவது க்ரோமோசோமை சோதித்தபோது ஒருசில உயிரணுக்கள் சாதாரணத்திலிருந்து அதிகமாகவோ குறைவாகவோ இருந்தன. அந்த வேறுபாடு ஆடிசத்துக்கு அடையாளமாக இருக்கலாம் என்பது சரவணப்ரியாவின் கருத்து.

சுற்றம்

துளசி மாடம் வீட்டுக்கு வேண்டும் என்று சொல்லி என் மனைவிதான் அதனை வாங்கி வைத்தாள். அபார்ட்மெண்ட்டுகளில் துளசி மாடத்தை எங்கே வைப்பது என்று நான் எத்தனை சொல்லியும், துளசி மாடம் வேண்டும் என்று உறுதியாக இருந்து, அவளும் என் அம்மாவும் போய் சிறிய மாடம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டின் பின்னால் வைத்துக்கொண்டார்கள், அதற்குப் பக்கத்தில்தான் கழிவுநீர் தேங்கும் தொட்டியும் இருந்தது. கழிவுநீர்த் தொட்டி நிரம்பி தண்ணீர் வெளியே வரும்போதெல்லாம் பயந்து போய் ‘துளசி மாடத்துக்கு என்னாச்சு’ என்று பார்க்க ஓடுவோம். மெல்ல அதனை நகர்த்தி வேறு இடத்தில் வைப்போம்.

தர்ப்பை

குழாயைத் திறந்து இரு கைகளையும் சேர்த்து பரபரவெனத் தேய்த்தான். எவ்வளவு முறைத் தேய்த்தும் கையில் இருந்த சிகப்பு தீற்றல் போகவில்லை. தர்ப்பை போல வேண்டிய நேரத்தில் எடுத்து மாட்டி வேண்டாதபோது தூக்கி எறியும்படி எல்லாமே இருந்தால் எவ்வளவு நன்னா இருக்கும் என நினைத்துக்கொண்டான்.

அப்ரஞ்ஜி

பெண் பிரசவத்தின்போது. ‘அப்ரஞ்ஜி… பச்ச உடம்பு, பொண்ண பாத்துக்க’ என்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து – குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். – அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.

ஸ்குரில்

அந்த வார இறுதியில் ஸ்குரில் குடும்பம் எங்கள் ப்ளாட்டிற்கு வந்திருந்த போது அந்த சின்ன பையனின் “வால்தனத்தின்” கடுமை பிடிபட்டது. சோபாவின் மேலிருந்து உணவு மேசைக்கு ஒரு சாடல்; அங்கிருந்து பக்கத்து சன்னலுக்கு மறு சாடல்…ஸ்குரிலும் மனைவி ஸ்குரிலும் அவனை ரொம்ப கண்டுக்கவே இல்லை.மூன்றாவது தாண்டலில் சன்னல் திரையை பற்றிக்கொண்டு கீழே விழுந்துவிட்டான். மறு நிமிடத்தில் துள்ளி சமையலறையில் ஓடிப்போனான்; இரு நிமிடங்கள் கழித்து உள்ளே போன மீரா அலறி காஸ்ஸை அணைத்துவிட்டு பையனையும் கொஞ்சம் இறுகவே அணைத்து, இருண்ட முகத்துடன் வந்தாள்…

இரண்டாம் படி

பஸ் ஒரு தொழிற்சாலை, ஒரு கடை, சில விடுகள் என் சின்னச் சின்ன பகுதிகளை கடந்து சென்று கொண்டிருந்தது. பலவகை தொழிற்சாலைகள் இருந்தன. மருந்து வாசனை, மண்வாசனை, புகைவாசனை என கலவையாக வந்து கொண்டிருந்தன. கன்னனூர் என்ற பகுதியில் இறங்கி சற்றுதூரம் நடந்ததும் அவன் சொன்ன சிமெண்ட் பேக்ட்ரி வந்தது. கடற்கரக்கு சென்று வந்தது போல் எல்லோர் சிகையும் தாறுமாறாய் கலைந்திருந்தது. தியாகு தவிர அனைவரிடமும் சீப்பு இருந்தது உடனே வாரிக் கொண்டபடி உள்ளே நுழைந்தனர்.

குழந்தைக்கு ஜுரம்

“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு? வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு? ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா?” வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை. முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.

ஆயிரம் பிறைகளுக்கப்பால்

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்று ஒரு வித்வான் வந்தார். அவர் ரொம்ப சிக்கனம். ராகம் மூன்று நிமிஷம் பாடுவார். கீர்த்தனம் நாலு நிமிஷம் பாடுவார். சுரம் மூன்று ஐந்து நிமிஷம் அடிப்பார். எனக்கும் சந்தோஷம். நவருசி சாக்லேட் டப்பா மாதிரி எல்லோருக்கும் திருப்தியாக ராகம், பாட்டு, சுரம், நிரவல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாடுவார். “காதை ரொப்பரேடா ராமானுஜம்!’ என்று அவரைப் பார்த்துக் கூத்தாடுவார் லோகநாதய்யர். அவரைப்பார்த்து, பிறகு வந்த வித்வான்களும் விதூஷிகளும் காதை ரொப்ப ஆரம்பித்தார்கள்.

இசைப் பயிற்சி

சென்னையில் ஜார்ஜ் டவுனில் பன்னிரண்டு குடிகளுக்கு நடுவில் ஒரு குடியாக, கீழே சமையலறையும் மாடியில் படுக்கையறையுமாகக் குடித்தனம் செய்த காலத்தில் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஒரு பயல் பாடிக்கொண்டு போவான். அவன் ஒரு மோட்டார் கார் க்ளீனர். கிட்டப்பா, ராஜரத்னம், பாகவதர் என்று நாடக, சினிமாப்பாட்டுக்கள், ராகங்களையெல்லாம் அச்செடுத்துப் பாடுவான். குரலில் ஒரு கம்மல் – அவர் பொறாமைப் படுகிற தெளிவு, புரளல், ரவைகள்…

உருகும் நொடிகள்

ஓவியமோ பல கடிகாரங்களைக் காட்டியது. நிதானமாகப் பார்த்தான். மூன்று கடிகாரங்கள் இருந்தன… வட்டமாக, நீல நிறத்தில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டிக் கொண்டு. ஆனால் ஏனோ எல்லாம் மடங்கி இருந்தன. ஒன்று மேஜை மேல், இன்னொன்று ஒரு மரக் கிளையின் மீது, மூன்றாவது மீன் போல தரையில் கிடக்கும் ஒன்றின் முதுகுப்பகுதி மீது. உற்றுப் பார்த்த போது தான் தெரிந்தது. அந்த கடிகாரங்கள் எல்லாம் உருகிக் கொண்டிருந்தன. அதுவும் மூன்றில்லை. நான்கு. ஆனால் அந்த நான்காவது நீல நிறத்திலும் இல்லை, வட்டமாகவுமில்லை, உருகுவதாகவும் தெரியவில்லை.

ஸ்னேக் ப்ரேக்

தாத்தா வீட்டுக்கு போறப்போ மணி ஒம்பது ஆயிடுத்து. நாங்க கேட் கிட்டெ போறப்பவே பைக் சத்தம் கேட்டு வெள்ளியும், சுப்பியும் ஓடி வந்துடுத்து. பைக் பின்னாடியே ஓடி வந்துது ரெண்டும். கூடவே அந்த புது பப்பியும் காலுக்கு நடுலே ஓடி வந்தது. கறுப்புக் குட்டி. கால்லே மாத்ரம் ஸாக்ஸ் மாதிரி வெள்ளை. அதை கைலெ தூக்கிண்டு வீட்டுக்குப் பின்னாடி போனேன். தாத்தா கார்த்தாலே ஆறு மணிக்கே பின்னாடி அனிமல்ஸ் கிட்டே போயிடுவார்.

வன்மம்

நாகர்கோயிலுக்கு வரும் பெரும் தலைவர்கள், அதற்கு முன்னதாக முத்தம் பெருமாள் அண்ணாச்சியின் அழைப்பின் பேரில் ஊரில் ஒரு அரை மணி நேரம் பேசி விட்டுப் போனார்கள். இயக்கத்தின் கோட்டையாக ஊர் மாற ஆரம்பித்தது. காங்கிரஸ்காரர்களின் பிள்ளைகளும் இரகசியமாக இயக்கத்துக்கு ஓட்டுப் போடப் போவதாகப் பேசிக் கொண்டார்கள். இயக்கத் தலைவரே நாகர்கோவிலில் பேச வரும் போது, “நாஞ்சில் நாட்டில் நான் கண்டெடுத்த முத்துதான் இந்த முத்தம்பெருமாள்” என்று தூக்கி வைத்து பேசினார். அண்ணாச்சிக்கு பிரச்சாரம் செய்ய “அறிவுலக மேதையே” ஒருமுறை மெனக்கெட்டு வந்து போனார்.

ரெசுமே

நான் ஏபெக்ஸ் கோவில்லே பத்து வருஷமா அர்ச்சகராக இருந்தேன். கோவில் பூஜையெல்லாம் சுந்தரேசன் மேற்பார்வைலே. உங்களுக்குத்தான் தெரியுமே, அவர் நல்ல பக்திமான், விஷயம் தெரிஞ்சவர். அவர்தான் என்னை மன்னார்குடிலேர்ந்து அழைச்சிண்டுவந்து விசா வாங்கிக்கொடுத்தார். தினப்படி பூஜை, அர்ச்சனை. அது தவிர அப்பப்ப கோவில்லே கல்யாணம், யாகம் நடக்கும். அவ ஆத்திலே பண்ணின லட்டு, மிக்ஸ்சர், பிசைந்த சாதம் வித்து கொஞ்சம் வருமானம். கோவில் பக்கத்திலேயே ஒரு மோபில் ஹோம். இப்படி காலம் ஓடிண்டிருந்தது.

உதிரம்

கும்மிருட்டுக்கு மனித உருவம் கொடுத்தது போல் நிற்கிறாள். கூந்தல் பின்காலைத் தொட்டுப் புரள்கிறது. பத்து கைகள். நெருங்க நெருங்க இன்னும் உருவம் தெளிவானது. கழுத்தில் போட்டிருக்கும் செவ்வரளி மாலை விம்மி நிற்கும் முலை மேடுகளில் லேசாக மடிந்து கால் முட்டுகளைத் தொடுகிறது. சூலம், அம்பு, சூரிக்கத்தி என எட்டு கைக்கும் ஒவ்வொரு ஆயுதம். ஒரு கையில் கொப்பரையில் குங்குமம். தரை வரை நீளும் ஒரு கையில் துண்டிக்கப்பட்ட தலையை முடியைப் பிடித்து தூக்கி வைத்திருக்கிறாள். எந்த யுகத்தில் கொல்லப்பட்ட எந்த அரக்கனோ? அறுபட்ட கழுத்தில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கைகளில் எல்லாம் சீமந்தம் முடிந்த சூலிக்கு அடுக்கியிருப்பது போல் வளையல்கள். இன்னும் நெருங்கிய போது அந்த கருமையான முகத்தில் செவ்வரியோடிய வெள்ளை விழிகள் பளிச்சென தெரிகின்றன. முகத்தில் சாம்பிராணி தைலம் பூசப்பட்டிருந்தது. அதன் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கில் பேசரி பளிச்சென மின்னுகிறது. காதுகளில் குண்டலங்கள். இரத்த சிவப்பில் வாய். உக்கிரமான பத்திரகாளி வந்து விட்டாள். உலகம் அழியப் போகிறது. தன்னையறியாமல் கையை எடு்த்துக் கும்பிட்டார். கண்ணில் நீர் தாரை தாரையாகப் பாய்ந்தது.

அக்கூ குருவி

யாழ்பாணத்தில் கலவரம் ஆரம்பித்தது. எல்லாம் பாழாய் போச்சு. ஒரு நாள் ராஜன் ஊரில் இல்லை. எங்கள் ஊரில் ராணுவத்தினர் வீடுகளில் புகுந்து சோதனை நடத்துகிறார்கள் என்று செய்தி. இதற்கு முன்னால் இதுபோல் நடந்த சில இடங்களில் ராணுவம் நுழைந்தபோது நடந்திருந்த பயங்கரங்களைக் கேள்விப்பட்டிருந்த்தினால் ஏதும் தவறு செய்யவில்லை என்றாலும் கூட ரொம்ப பயந்து போனேன்.

வெறுமை

லேசா இராகம் வாசிச்சதும் ஆபேரியோணு நெனக்கதுக்குள்ள ஹிந்துஸ்தானி மாதிரி கேக்கு. பீம்பிளாசப் போட்டு உருக்கிட்டாரு. இவரு வாசித்ததும் தவிலுல உருட்டுச் சொல்லு அடிச்சுட்டு, கையைப் பொத்தி வலந்தலையிலே ஜிம் ஜிம்முன்னு ஒரு முத்தாய்ப்பு வைச்சான். யாரு? சண்முகவடிவேலுதான். கந்தன் கருணை புரியும் வடிவேலுண்ணு இவரு எடுத்தாரு. மதுரை மணி பாடி எத்தனை தடவைக் கேட்டிருக்கேன். “வடிவேல்” என்று அவர் பாடுகையில் பழனி சுப்புடு மிருதங்கத்தில் பிளாங்குனு ஒரு சாப்பு கொடுப்பாரு. அது ஒரு அனுபவம். காருக்குறிச்சி வேறு தினுசு. ஒவ்வொரு வரியும் வாய்ப்பாட்டு மாதிரியே கேக்கு.

பிப்ரவரி மழை

மஞ்சுநாத் அவளை தினமும் பனர்கட்டா சாலையில் மீனாக்ஷி கோயிலுக்கு பக்கம் இருக்கும் ஹுல்லிமாவு என்ற இடத்தில் அவளது வீட்டில் விடும் டிரைவர். எஃப் எம் போட்டுவிட்டு, ரியர் மிரர் வியூவை சரிசெய்து பார்த்த போது திவ்யா போட்டிருந்த உள்ளாடை மீது அவன் கண்கள் சில வினாடிகள் அதிகப்படியாகத் தங்கியது. திவ்யா செல்பேசியில் பேசிக்கொண்டு ஒரு சாக்லெட் பட்டையை தின்றுகொண்டு இருந்தாள்.

பிஸ்கட்டு, பழம்

சாப்பாட்டுக்கு அலைந்து, பிச்சை எடுத்து, திருடி…, போன‌ புதிதில் சேர்க்கை ச‌ரியில்லை. வாழ்க்கையில் சாதிக்காமல் ஒரு கடிதம் எழுதவும் மனம் இல்லை. போலிஸில் மாட்டி அப்புறம், ஓர‌ள‌வுக்கு ப‌ய‌ம் தெளிந்து, டில்லியிலிருந்து மும்பை, அங்கிருந்து பங்களூரு என்று வ‌ந்து, கூலி வேலை செய்து இன்றைக்கு ஒரு முதலாளியிடம் ஆட்டோ ஓட்டுகிறேன்.

பாஸ்கலின் பந்தயம்

என் அப்பா சரித்திர ஆசிரியர் என்பதால் எனக்கு வரலாறு விருப்பப்பாடம். பாடத்துக்கு அவசியமில்லாத புத்தகங்களையும் படிப்பது வழக்கம். ஆதிகால இடப்பெயர்ச்சிகளில் ஒட்டகவரிசைகள் பயன்படுத்தப்பட்டன என்று பைபிளில் சொல்லப்படுகிறது. முப்பது நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ஒட்டகங்கள் அந்த அளவுக்கு புழக்கத்தில் இல்லை. ஏப்ரஹாம் எகிப்து சென்றதும் அங்கிருந்து திரும்பியதும் கற்பனை என்றால் பைபிளில் வேறெது சரித்திரத்துக்கு முரண்பாடாக இருக்கும் என்று ஆராய ஆரம்பித்தேன்.

பிராந்து

முப்பிடாரி அம்மன் கோயில் கொடைக்கு கும்பாட்டம் வேண்டாம் என்று சொல்லி, இசைத்தட்டு நடனம் நூலகத் திடலில் ஏற்பாடாகி இருந்தது. திடல் நிறைய இருசனக் கூட்டம். பாட்டும் ஆட்டமும் நெரிபிரியாகப் போய்க் கொண்டிருந்தது. கன்னித்தமிழ் போன்றவளே என்பது போல் ஒரு பாட்டு. தொடையை இறுக்கிய காலாடையும் முலைகளைத் துருத்திய மேலாடையும் அணிந்த ஒருத்தி விரகத்தில் நெளிந்தாள். கண்ணைத் துன்புறுத்தும் நிறங்களில் உடையணிந்து, தொப்பிவைத்து, இரவிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவன் இடுப்பை புணர்ச்சி விதிகளில் ஒன்றின்படி அசைத்துக் கொண்டிருந்தான்.

பாச்சி

கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது. சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.

ஷ்ரோடிங்கரின் பூனை

வீட்டுச் சாப்பாட்டின் ருசி இன்னமும் நாக்கிலிருந்து விலகாத முதல் செமஸ்டரின் ஓர் இரவு. ரூம்மேட் செந்திலுடன் எதைப்பற்றியோ பேசிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து செல்கையில், திடீரென்று எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக் கொண்டான் அவன். வந்தவன் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தான். அவனை நான் அப்போது இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். அதற்கு முன்பு, ஏ விங் சீனியர்களின் ராகிங் பொழுதில் நாங்களெல்லாம் இடுப்பால் காற்றில் உயிர் எழுத்துக்களை எழுதிக் கொண்டிருக்க, இவன் மட்டும் கிதார் வாசித்துக் கொண்டிருந்தான்.

ஆதலினால் காமம் செய்வீர்

மனோரி கரையில் இறங்கியவர்களை மீன்காரர்கள், ஆளுக்கொரு மீனை கையில் வைத்துக்கொண்டு விலைசொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிலும் கவனம் செலுத்தாமல் இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவர்களுக்காகவே அவதரித்து காத்திருந்தது போல் ஒரு பாறை இருந்தது. மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. இருவரும் வாகாய் பாறைமேல் உட்கார்ந்தார்கள். கடல் காற்று அவர்களை வருடிக் கொண்டிருந்தது.

வெளிச்சம்

அன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொரு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.

நகரும் வீடுகள்

எங்களின் சிறு வயதிலிருந்து பார்த்த பொறுமையும், அடக்கமும், மரியாதையும் இன்னும் இம்மியும் குறையவில்லை அப்பாவிடம். பகலில் கட்டிலிருக்குக் கீழே அமர்ந்துகொண்டு பாட்டியிடம் சமாச்சாரம் பேசிக் கொண்டிருப்பார் அப்பா. எதுவானாலும் தன் அம்மாவிடம் சொல்லியாக வேண்டும் அவருக்கு. பாட்டியிடம் சொல்லும்போது அம்மா கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

விஷ்ணுக்ராந்தி

இன்று ஏதோ சாடிலைட் என்கிறார்கள், மேலே இருந்து படம் எடுக்கும் என்கிறர்கள், அதை வைத்து மொத்த வரைபடம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அவன் பார்த்தது கிடையாது. ஏதோ இண்டெர்னெட் ஓட்டவேண்டுமாம். ஆனால் பழய காலத்தில் எப்படி மகாராஜா இங்கு தான் கோட்டை வேண்டும் என்று தீர்மானித்தார். இங்கு தான் குளம் வேண்டும் என்றார்.இங்கு ஊர் அமைத்தார். எப்படி முடியும்.

தெரியாதது

பிரபஞ்சத்தை அறிய முயற்சி. மண்ணாங்கட்டி. ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தாலே சரி என்றுதான் தோன்றுகிறது. என்ன வித்தியாசம்? ஒன்றும் இல்லை. நான் SETI ஆய்வுக்கூடத்தில் வேலை பார்க்கிறேன். அந்த ஆய்வுக்கூடத்தில் ஒரு கழிவறை இருக்கிறது. அதை சுத்தம் செய்யும் ரோபோவிற்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? எதற்கு இருக்கிறோம்? இந்த உலகமே ஒரு அபத்தமா? absurd piece of crap? oh God, தலைவலி… I need a painkiller”

ஆவி கதை

பதினொரு மணி இருக்கும். மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்து டம்பளரைத் தேடினேன். கிடைக்கவில்லை. பாட்டில் மூடியை போர்டின் நடுவில் வைத்து என் விரலை நடுக்கத்துடன் அதன் மீது வைத்தேன். நகரவில்லை. கண்களை லேசாக மூடிக்கொண்டேன். சாமியை வேண்டிக்கொள்ளலாம் என்று யோசித்தேன். சாமிக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? சாமிக்கும் ஆவிக்கும் ஆகாது என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.

தரிசனம்

இப்போது மண்டபத்தின் மத்தியில் சன்னதியை நோக்கியவாறு கூப்பிய கரங்களோடு ராஜா நின்றார். இரண்டு படி கீழே ராஜாவைப் பார்த்தவாறு பூசாரிகள் இருவரும் நின்றனர். இன்னும் சன்னதி திறக்கவில்லை. சில சடங்குகள் முடிந்ததும்தான் திறப்பார்கள் போலும். ஒரு பூசாரியின் கையில் இருந்த தட்டில் பன்முக விளக்கும் கற்பூரமும் எரிந்தன. மற்றொருவர் தட்டில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. எதிர் பிரகாரத்தில் இருந்தவர்கள் தாமே ஒருவர் பின் ஒருவராக சீரான வரிசையில் முற்றத்தில் இறங்கி மண்டபம் நோக்கி நகர்ந்தனர்.

ஆண்பெண் போட்டி

பெண் வீட்டுக்குவந்தா செல்லுலே அரட்டை, இல்லாட்டா காதிலே ஐ-பாட். நாலுதடவை கத்தினாத்தான் திரும்பிப் பாப்போ. பையன் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்தான்னா ஒரே இரைச்சல். ரெண்டுபேரும் எது கேட்டாலும் நீ பேசறது ஒண்ணும் புரியலியேன்னு முகத்தை வச்சுப்பா. ஷேக்ஸ்பியர்லேர்ந்து பெர்னாட் ஷா வரைக்கும், நாம படிக்காத இங்க்லீஷா?

காலம்

ஏன் இன்னும் வரவில்லை? அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வாட்டி வயிற்று வலியோடு ஜுரம் வந்துவிட்டது. குளிர் வேறு. பனியன், முழுக்கைச் சட்டை, லுங்கி, மேலே போர்வை. எல்லாவற்றையும் மீறி குளிரியது. கையைச் சட்டைக்குள் விட்டுக் கொள்ளலாம் என்றால் அசைக்கவே முடியவில்லை. நடு நெஞ்சில் என்னவோ உறுத்தியது, நீளமான பல்லி மாதிரி. அது ரொம்ப காலமாக நகராமல் அங்கேயே இருந்த மாதிரி தோன்றியது.

புரை

பள்ளி வாயிற்காவலர் வைத்திருக்கும் வெளியே செல்லும் மாணவர்களைக் குறித்துவைத்துக்கொள்ளும் கோப்பிலும் அவள் பெயர் இல்லை. கவலையாக இருக்கிறது என்றார். உடனே கவனிக்கிறேன் என்று கூறினாலும் இப்போது எனக்கு ஒரு சிறு பதற்றம் வந்துவிட்டது.

அறன் வலி உரைத்தல்

மனிதரில் பத்து சதவீத புண்ணியவான்களுக்கு இப்படியொரு சாமர்த்தியம். எஞ்சியிருக்கிற 90 சதவீதத்தினர் செக்குமாடுகள்போல சாவகாசமாக வாழ்க்கையை சுற்றிவரபழக்கப்பட்டவர்கள். அந்த அசட்டு மந்தையில் நானும் ஒருவன். இப்படி எப்போதாவது எதையாவது உளறிக்கொண்டிருக்கிறேன். நியாயங்களை அல்லது நியாயங்களென்று நம்புவதை கேட்பாரற்ற(?) வெளிகளில் உதறிவிட்டு, கோடைகால காவிரிப்படுகைபோல ஈரம் காணாமல் வெப்பத்தை உண்டு பசியாறுகிறேன்.