சுகாவுக்குப் பூசினது

ஒரு அறுபது வயதுக்காரனாக நான் திரும்பிப் பார்க்கிறவற்றை, நாற்பது வயதுக்காரராக அவர் திரும்பிப் பார்க்கையில், இரண்டு பார்வைகளுக்கும் இடையில் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு பேரும் எல்லோரையும் அப்படியே ஆவி சேர்த்துக் கட்டிக் கொள்கிறோம். சுகா அப்படிக் கட்டிக் கொள்வதற்கு முன் அல்லது பின் அல்லது முன்னும் பின்னுமே ஏதாவது கிசும்பும் கிண்டலும் கேலியுமாக நிறையப் பேசுகிறார். அந்த நகைச் சுவை அவருடைய வம்சா வழிச் சொத்து. என்னுடைய பத்திரத்தின் தபசிலில் அது ஒரு இணுக்கு கூட இல்லை. அப்படி மந்திரம் மாதிரி வாய் ஓயாமல் ஏதாவது சொல்லச் சொல்ல, உருவேத்தினது போல, அந்தச் சொல்லுக்குள்ளிருந்து புடைப்புச் சிற்பங்களாக ஆட்கள் மேலெழுந்து வருகிறார்கள். ஆட்களின் எடைக்கு எடை. பேர்பாதியாக அவர்களுடைய திருனவேலி பாஷையையும் சேர்த்து நிறுத்துப் போடப் போட, அவர் எடுத்த மேற்படி புகைப்படங்கள் தத்ரூபமாக நம் முன்னால் நடமாட ஆரம்பித்து விடுகின்றன. இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது.

பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

மொட்டை மாடி அழகாகவே இருந்தது. யாராலும் மொட்டை மாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை, சிறியதோ, பெரியதோ அது அடைசலும் புழுக்கமும் அற்ற திறந்த வெளியில் நம்மை நிறுத்திவிடுகிறது. நிச்சயம் காற்று இருக்கும். பளிச்சென்று நம்மைச் சுற்றி வானம் வெள்ளையும் நீலமுமாக இறங்கும். இடம் வலம் எங்கு திரும்பினாலும் மேகமாக இருப்பது நம்மை என்னவோ செய்யாமல் இராது. மொட்டை மாடியில் வைத்து யாராவது கோபப்பட்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. மேலும், மழையும் வெயிலும் அடித்து அடித்து இந்தத் தளச் செங்கல்களுக்கு நேர்ந்திருக்கிறதை உற்றுப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடவும் கூடும்.