பாச்சி

கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது. சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.