அ. முத்துலிங்கம் நேர்காணல்

ஆங்கிலேயர்களில் ஒரு வழக்கம் உண்டு. வைன் குடிப்பதற்கு ஒருவித கிளாஸ். சாம்பெய்னுக்கு வேறு ஒரு கிளாஸ். பியர் என்றால் கைப்பிடி வைத்த பெரிய கிளாஸ். விஸ்கிக்கோ, பிராந்திக்கோ வேறொன்று. எந்தப் பாத்திரத்தில் குடித்தாலும் சுவை ஒன்றுதானே. ஆனாலும் எப்படி பருகுவது என்பதற்கு ஒரு முறை உண்டு. கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது? ஒருமையிலா, பன்மையிலா? தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது

வாசகர் தேவை

தமிழ் தட்டச்சு மெசினின் முழுப்பயனையும் ஒரு காலத்தில் நான் அனுபவித்திருக்கிறேன். பதின்ம வயதிலேயே நான் கவிதைகளும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்துவிட்டேன். என் கையெழுத்து மோசமாக இருக்கும். அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் யாரிடமாவது கெஞ்சி தட்டச்சு செய்யவேண்டும். அகில இலங்கை நாடகப் போட்டி ஒருமுறை நடந்தது. அதற்கு 100 பக்கத்தில் கையினால் ஒரு நாடகம் எழுதினேன். அதை ஒரு நண்பர் தட்டச்சு செய்து தந்தார்.

கணினியில் தமிழ் எழுதலாம் என்று வந்தபோது அதைவிட மகிழ்ச்சி அளித்த விசயம் எனக்கு அந்தக் காலத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்லலாம். அமெரிக்காவில் தமிழில் எழுதும் செயலியை ஒருவர் உருவாக்கிவிட்டார் என அறிந்து அவர் வீடு தேடிப்போனேன். சூரிய ஒளிபுகமுடியாத நீண்ட வீடு. இருட்டு தொடங்கும் இடத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் ஒரு செயலியை இலவசமாகத் தந்தார். நான் உழைப்புக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி 100 டொலர் தந்து அதை வாங்கினேன். அது என் வாழ்க்கையை மாற்றியது. கம்புயூட்டரில் தமிழில் எழுத ஆரம்பித்து விட்டேன். நானே ஆசிரியன்; நானே மாணவன். செயலியில் எல்லா வசதிகளும் இருந்தன. சொற்களைத் தேடலாம். மாற்றலாம். எண்ணலாம். நகல் செய்யலாம். வெட்டி ஒட்டலாம். மனைவி பொறாமைப்படும் அளவுக்கு அதனுடனேயே முழுநேரத்தையும் கழித்தேன்.

மறந்துவிட்டீர்களா?

வெ.சா ரொறொன்ரோ பல்கலைக்கழக அரங்கில் இயல் விருது ஏற்புரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு ஞானியிடமிருந்து மட்டுமே அப்படியான வார்த்தைகள் வெளிவரும். நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவருடைய அலுவலகம் அவருக்கு நாடு நாடாக சுற்றி பணியாற்றும் ஒரு வாய்ப்பை கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பின் பெறுமதி தெரியாத ஒருவர் கொடுத்த நிர்ப்பந்தத்தால் அந்த வேலையை அவர் இழக்க நேரிட்டது. ஆகவே அவருக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் பழகிப்போனவை. அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அவர் வாழ்க்கையில் ஒன்றையும் பெரிதாக எதிர்பார்க்காமலிருக்கப் பழகிக்கொண்டவர். அவர் யாருக்கும் பணியாமல் உண்மையை எழுதினார். அது அவருக்கு இயல் விருதை பெற்றுத் தந்திருக்கிறது.

கடவுளை ஆச்சரியப்படுத்து

ஒருநாள் மறுபடியும் மனேஜரிடம் போனான். ‘அவள் என்னை நிராகரித்துவிட்டாள். ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை அதிகம். என் வேலையைத் திருப்பித் தாருங்கள்.’ மனேஜர் ‘உன் வேலையா?’ என்றுவிட்டுச் சிரித்தார். தையல்காரர் அங்கம் அங்கமாக அளவெடுப்பதுபோல அவனை உற்றுப் பார்த்தார். ‘இனிமேல் உனக்கு வாடிக்கையாளர்களுடன் பேசும் வாய்ப்புள்ள வேலை கிடையாது. சாலட் பாரில் வேலை செய். இங்கேயிருந்து ஒருவர் துரத்தப்பட்டால் அவரை மீண்டும் வேலைக்கு எடுப்பதில்லை. உன்னை மன்னித்திருக்கிறேன். இனிமேல் ஒரேயொரு தவறு செய்தாலும் உன்னை நிரந்திரமாக வெளியே அனுப்பிவிடுவேன்.’

ஆற்றேன் அடியேன்

தமிழின் தொன்மையை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கும். அதே சமயம் ஒருவித சோகமும் வந்து கப்பிக்கொள்ளும். இதை தவிர்க்க முடியாமல் இருக்கிறது. 2012ம் ஆண்டு தொடக்கத்தில் விக்கிப்பீடியாவில் பல மொழிகளில் மொத்தமாக எத்தனை கட்டுரைகள் ஏறியிருக்கின்றன என்று தேடிப் பார்த்தேன். ஒரு கோடிக்கும் குறைவானவர்கள் பேசும் ஹீப்ரு மொழியில் 129,000 கட்டுரைகள் ஏறிவிட்டன. ஏழு கோடி மக்கள் பேசும் தமிழில் ஆக 43,000 கட்டுரைகள்தான். உலகத்தில் ஆக மூன்று லட்சம் பேர் மட்டும் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியில்கூட 36,000 கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. […] நான் பிறந்தபோது உலகத்தின் சனத்தொகை 2.3 பில்லியன். இன்று அது 7.0 பில்லியன், மூன்று மடங்காக வளர்ந்திருக்கிறது. ஆனால் பூமியின் அளவு அதேதான். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழின் வளர்ச்சி எப்படி இருக்கிறது. மூன்று மடங்கு வளர்ந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா? 2009ம் ஆண்டு யூன் மாதம் 16ம் தேதியை எல்லோரும் கொண்டாடினார்கள். என்ன விசயம் என்று கேட்டபோது ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை அன்று ஒரு மில்லியனை தொட்டுவிட்டது என்றார்கள். யாரோ கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்று யாராவது கணக்கு வைத்திருக்கிறார்களா?

பற்கள்

நுட்பமாக கதைகூறும் திறனும் கவித்துவ நடையும் அவருடைய முத்திரை. விருந்து மண்டபம் ஒன்றுக்கு ஓர் அழகி நேர்த்தியாக உடையணிந்து, அலங்கரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறாள். உடனே அங்கிருக்கும் அத்தனை பெண்களும் தங்கள் தங்கள் உடைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறார்கள். அப்படித்தான், தி.ஜாவின் எழுத்தை படிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை ஒருமுறை திரும்பவும் பார்த்துக் கொள்வார்கள்.

சாபம்

சிறிது நேரம் தன் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார். திடீரென்று ‘உங்கள் காரில் எங்கே சேதம்?’ என்று வினவினார். அங்கேதான் பிரச்சினை முளைத்தது. அவரிடம் கதைகொடுத்து நேரத்தை நீட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் இருந்தேன். காரில் இருந்து இறங்கி காரின் பின்பக்கத்தை காட்டினேன். யாரோ உயிருள்ள பெண் ஒருவரின் பின்பக்கத்தை ஆராய்வதுபோல நீண்ட நேரம் கூர்ந்து கவனித்தார்.

கடவுளின் காதுகளுக்கு

‘கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நிறைந்த மகிழ்ச்சியும் உங்களுக்கு’என்றேன். அவர் உணர்ச்சி வசப்பட்டு கண்களை மூடி தன் நெஞ்சைத் தொட்டு கைகளை மேலே காட்டி ‘உங்கள் உதட்டில் இருந்து கடவுளின் காதுகளுக்கு’ என்றார். சிறிது நேரத்தில் சமநிலை அடைந்து நன்றி என்றார். கைகளை நீட்டி என் கைகளைப் பிடித்து குலுக்கினார். நான் திரும்பி சில அடி வைத்த பிறகு ஏதோ நினைவுக்கு வந்து முழங்கால்கள் ஒன்றையொன்று இடிக்க வேகமாக ஓடி வந்து மோதி என்னைக் கட்டிப்பிடித்து மீண்டும் நன்றி என்றார். என் நெஞ்சு எலும்பு இரண்டு முறிந்தது போலிருந்தது.

பாகிஸ்தானில் பறந்த கிருஷ்ணப்பருந்து

கிருஷ்ணப் பருந்து நாவலில் ஓர் இடம். ‘ஆரம்பப் பாட மாணவன் 100,99,98 என்று தலைகீழாக எண்ணுவதுபோல’ என்று வரும். இன்று தமிழில் வருடாவருடம் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியிடப்படுகின்றன. கண்கவரும் அட்டைகளும், நல்ல தாள்களும், அழகான எழுத்துருக்களும் தமிழ் வாசிப்பை இனிய அனுபவமாக மாற்றிவிடுகின்றன. நிறைய இளம் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். இந்தச் சந்தடியில் மூத்த எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடைய உன்னதமான படைப்புகள் 100,99,98 என்று பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

வெளிச்சம்

அன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொரு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.

ஆச்சரியம்

கோப்புகளின் மேல் மட்டையில் ‘அவசரம்’ ‘மிக அவசரம்’ ‘உடனே’ போன்ற ஒட்டுப்பேப்பர் குறிப்புகளை அவரே ஒட்டி அனுப்புவார். அவருடைய கட்டளைகளை ஊழியர்கள் அவர் விதித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டுமானால் அவர்கள் அன்று வீட்டுக்கு போக முடியாது. அடுத்தநாளும் முடியாது. அவர்கள் கோப்புகள் கைகளில் கிடைத்ததுமே ஒட்டுப்பேப்பரை அகற்றிவிடுவார்கள். உடனே அவை சாதாரண கோப்புகளாக மாறிவிடும்.

தாமரை பூத்த தடாகம்

காருகுறிச்சி வாசிக்கும்போது அவருடைய கழுத்து படம் எடுக்கும் பாம்பினுடையதுபோல உப்பிப் பெருக்கும். ஒரு திகில் நாவல்போல அடுத்து என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். தவில் வாசிக்கும் தட்சிணாமூர்த்திக்குகூட அவர் என்ன வாசிப்பார் என்பது தெரியாது. என்னுடைய இசைப்பயிற்சியை வேலுச்சாமி அங்கேதான் நடத்துவான்.