பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

நேகமாக வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளுமே எனக்கு மனப்பாடம். அவரது கதைகளிலேயே என் மனதுக்கு நெருக்கமான சிறுகதையாக நான் கருதுவது, ‘பற்பசைக்குழாயும், நாவல்பழங்களும்’ என்ற கதையைத்தான். வண்ணதாசன் தனது சிறுகதைகளில் பெரும்பாலும் கதை சொல்ல முனையமாட்டார் என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம். நினைவிலிருந்தே என்னால் சொல்ல முடிகிற ஒரு நல்ல கவிதை, இந்தக் கதையில் உள்ளது.

‘கோகுலமும் குழல் ஒலியும்
கோபியரும் கண்ணனுமாய்
ஆகும் ஒரு காதல்
அட்டவணை எனக்கில்லை’.

வண்ணதாசன் அண்ணாச்சியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, ‘ஒங்க கதைகள்லயே எனக்குப் புடிச்ச கத, ‘பற்பசைக்குளாயும், நாவல்பளங்களும்’தான் அண்ணாச்சி’ என்றேன். நான் சற்றும் எதிர்பாராதவண்ணம், எழுந்து வந்து என்னைச் செல்லமாக அணைத்துக் கொண்டு சொன்னார். ‘எளுதுறவனோட மனசுக்கு நெருக்கமா ஒண்ணு ரெண்டு கத இருக்கும்லா? அப்பிடி ஒண்ண சொல்லிட்டெ. ரொம்ப சந்தோஷம்’.

மேற்சொன்ன சம்பவத்துக்குப் பிறகு ‘பற்பசைக்குழாயும், நாவல்பழங்களும்’ சிறுகதை என் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது.

வண்ணதாசன் தனது சிறுகதைகளில் கூடுமானவரை கதை சொல்ல முனைவதில்லை. மனிதர்களை, அவர்களின் மனங்களைச் சொல்ல வருகிறபோது கதைக்கு அங்கே என்ன வேலை? அதுபாட்டுக்கு அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றுவிட வேண்டியதுதானே! அப்படித்தான் வண்ணதாசன் ஒவ்வொரு மனுஷாளையும் பார்த்துக் கொண்டு நின்று விடுவார். அவரது எழுத்துகளைப் படிக்கும்போது நாமும் நம்மையறியாமலேயே அவருடன், அவர் பார்த்துக் கொண்டிருக்கிற மனிதர்களுடன் போயேவிடுவோம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் அவ்வளவு பெரிய தேரோட்டத்தை, வீட்டு வேலை செய்யும் ஒரு சிறுமியின் வாயிலாக நமக்கு படம் போட்டுக் காண்பிக்கும் இந்த ‘நிலை’ என்ற சிறுகதையை, தன்னை பாதித்த மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளில் ஒன்றாக அமரர் சுஜாதா ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி, கதையைப் படித்து முடித்த பின் அடிபட்டுப் போய்விடும்.

சுகா

புறப்பட வேண்டியதுதான்.

செருப்புப் போடவேண்டியதுதான் பாக்கி. அந்த நேரம் பார்த்து ‘நவ்வாப் பழம்’ என்று சத்தம் கேட்டது. நாவல் பழம் விற்கிறவர்களுக்கு உலகம் முழுவதும் ஒரே மாதிரிக் குரல்கள் போல. அந்தந்தப் பழம் அப்படியொரு குரலை எல்லோர்க்கும் கொடுத்து விடும் என்று தோன்றியது.

தலையில் இருக்கிற நார்ப் பெட்டி, நார்ப் பெட்டி உள்விலாவில் இருக்கிற நாவல் பழக் கறை, கருத்த பழைய காலத்து இரும்பு உழக்கு, பழத்தை அளந்து போடுகிற அந்த மனுஷியின் உறுதியான விரல்கள், “உங்ககிட்ட கூடுதலா விலை சொல்லி நாங்க என்ன மச்சுவீடாம்மா கட்டப் போகிறோம்!” என்ற பேச்சு எல்லாமே இருபது முப்பது வருஷத்துக்கு முன்னாலிருந்து பெயர்ந்து வந்து, இந்த தினத்துடன் அப்பிக் கொண்டது போல இருக்கிறது.

களக்காட்டுச் சாய்பு ஒருத்தர்தான் எங்கள் வாசலில் நாவல் பழம் கொண்டு வந்து விற்பார். ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸீசன் இருப்பதுபோல நவ்வாப் பழத்துக்கும் ஒரு ஸீசன் உண்டல்லவா? சாய்புவை ஆவணி புரட்டாசியில் மட்டும்தான் பார்க்கலாம். நாவல் பழம் விற்றே ஒருவன் காலம் தள்ளிவிட முடியுமா? தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் நிறைய விஷயம் இருக்கிறது. வெறும் அரைஞாண் கயிறு விற்றுக் கொண்டே மேம்பாலத்துக்குக் கீழ், கண்ணம்மன் கோவில் தெரு முக்கில் அல்லது எஸ்.ஆர்.எஸ். கடையிலிருந்து சாலைக் குமாரசாமி கோயில் தூரத்துக்குள் நிற்கிற அந்த இளைஞனின் ஞாபகம், இரண்டு வருஷத்திற்கு முன் நசிருதீன் ஷா திரைப்படம் ஒன்றைப் பார்க்கும்போது வந்தது. ‘இருப்பத்தஞ்சு காசு’ என்பதை ‘இருபத் தஞ்ச்….காஸ்’ என்று உச்சரிக்கிற குரலும் கொடிகொடியாக இடதுகையில் தொங்குகிற பட்டுக் கயிறுகளுமாக வாழ்க்கையைக் கழித்துவிடுகிற அவனைவிட நான் என்ன பெரிதாகக் கிழித்திருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. கிழிப்பதற்கு அப்படியொன்றும்… சொல்லப்போனால் நிஜத்தில் ஒன்றுமில்லை என்பது வேறு இருக்கிறது.

“ஒருத்தி நவ்வாப் பழம் விற்றுவிடக் கூடாது. பனங்கிழங்கு விற்றுவிடக் கூடாது. உடனே ஒரே தவ்வாத் தவ்வி, எங்க ஊரு எங்க ஊருன்னு போய் உட்கார்ந்துக்கிட வேண்டியது. ரூபாயை எடுத்துக் கொடுங்க. அவளை அனுப்பட்டும். நாலு இடத்துக்கும் போயி அவ விற்கணும். நம்ம வீட்டு நடையிலேயே கால்படி நவ்வாப் பழத்துக்குக் காத்துக் கிடந்தால் போதுமா?”

“கூட ஒரு கால் படி வேணும்னா வாங்கேன். பிள்ளைகள் செழிப்பாகத் திங்கட்டும்.” எனக்கு அடுத்த வருடம் உலகத்தில் நாவல் பழங்கள் இருக்குமா என்று சந்தேகம் வந்துவிட்டது. இப்படி நிறையச் சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

பசலிக் கொடி இருக்குமா என்று சந்தேகம் வந்து ரொம்ப நாளாகிவிட்டது. அரசடிப் பாலத்தெரு வாய்க்காலே சாக்கடை மாதிரி ஆகிவிட்ட பிறகு, அதிலும் சிமெண்ட் தளம் வேறு போட்டுவிட்டார்கள் – தாமரைப் பூக்களும், மீன்களும் எப்படி மிஞ்சும்? வாய்க்காலே இல்லாவிட்டால் படையாச்சித் தாத்தா எப்படி மீன் பிடிப்பார்? எப்படி எனக்குத் தூண்டில் கட்டிக்கொடுப்பார்? இது ‘உபயோகி தூக்கி எறி’ காலமாகிவிட்டது. இன்னும் கொஞ்ச காலம் போனால் ஐம்பத்தி ஐந்து வயது ஆகிவிட்டது அல்லவா என்று அலுவலகம் தூக்கி எறியும். மெத்தென்று நாலைந்து உதிர்ந்த ரோஜா இதழ்கள், தேய்ந்து ஓடாகிப் போன சம்பிரதாயப் புகழ்ச்சிகள், “அண்ணாச்சி சுந்தரம் ஓய்வு பெற்றாலும், அவர் விட்டுச் சென்றிருக்கிற நிர்வாகச் சுவடுகள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கணிப்பொறிச் சந்ததியினருக்குக்கூட முன்னுதாரணங்களை அடக்கியது.” என்று பிசுபிசுப்புடன் வீட்டு வாசலில் கிடப்பேன்.

அப்புறம் ரேஷன் வாங்கவும், பால் கவர் வாங்கவும், மின்கட்டணம் கட்டவும் கொஞ்ச காலம். வழிவிடு முருகா அல்லது வரசித்தி விநாயகர் என்று ஏதேனும் ஒரு கோவில் பட்டர் மாத்திரம் எதிரே வந்தால் சிரிப்பார். மருந்துக் கடைப் பையன் போய் நிற்கிறதற்கு முன்னாலே மாத்திரையை எடுத்து வைத்துவிடுவான். இந்த ஊரில் உட்கார்த்தி வைத்து மேளம் அடித்துக் கொண்டு போவதையே பார்த்துப் பார்த்து நாற்காலியில் தனியாக உட்கார்வதைக்கூட வெறுக்கத் தோன்றும். வல்ல நாட்டுப் பொத்தை தாண்டினால் ஒரு மண்டபம் இடிந்து கிடக்கும். அதில் உட்கார்ந்திருக்கிற கிழட்டுக் கழுகின் ஞாபகம் வரும். அது ரொம்ப காலமாகவே அங்கே இருக்கிறது. முனிசிபல் தண்ணீர் டாங்கின் கீழ் சிமெண்ட் பெஞ்சில் ஒருத்தர் உட்கார்ந்திருப்பாரே, அவரையும் யாராவது உபயோகித்துவிட்டுத்தான் எறிந்திருக்கவேண்டும். ஒருத்தர் மாற்றி ஒருத்தரைப் பிதுக்கிப் பிதுக்கி உபயோகித்துக் கொண்டே இருக்கிறோம்.

“இதைத் திங்கறதுக்கே நாதி இருக்காது. இன்னொரு கால் படி என்னத்துக்கு?” என்று சொல்கிற இவளைப் பார்க்கும்போதும் நசுங்கின பற்பசைக் குழாய் மாதிரித்தான் இருக்கிறது. நான்தான் அதிகமாக நசுக்கியிருக்க வேண்டும். சட்டென்று அவள் மீது ஒரு அனுதாபம் வந்தது. அவளுக்கு ஆறுதலாக என்னவாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. “நீ சொல்கிறதும் சரிதான்.” என்று சொன்னேன். அவ்வளவுதான் முடிந்தது. ஆனால் எல்லாம் சொல்லிவிட்டது போலவும் இருந்தது.

“கிளம்பினதுதான் கிளம்பினோம். அப்படியே போய்விட்டு வந்துடுவோம். இந்த ஊருக்கு வந்து மூணு மாசத்துக்கு அப்புறம் இன்றைக்குத்தான் முகூர்த்தம் வாய்த்திருக்கிறது. நாலு வருஷம் அடுத்தடுத்த வீட்டில் இருந்துவிட்டு எட்டிக்கூடப் பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்காது. என்னை விட நீதான் ரொம்பக் கசிஞ்சுக்கிட்டு இருந்தே. உனக்கு வரணும்னு தோணலையா?”

அவளுக்குத் தோன்றவில்லை என்றுதான் படுகிறது. கொஞ்ச நாளாவே எங்கேயும் போக வேண்டும்; யாரையும் பார்க்க வேண்டும் அவள் சொல்லவே சொல்லாதது ஆச்சரியமாக இருந்தது. இது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்பதை விடத் துக்கப்பட வேண்டிய விஷயம் என்று பட்டது. ஒவ்வொரு கதவாக அவளாகவே சாத்திக் கொள்வது போல இருந்தது. அவளுக்கு எந்தக் கதவையும் நான் திறந்துவிடாதது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, எந்தக் கதவையும் நான் பூட்டவில்லை என்பதும்! இதுவெல்லாம் அடுத்தவர் திறந்து பூட்டுகிற காரியமா என்ன? நாற்பது நாற்பத்தைந்து எல்லாம் ஒரு வயது என்று எப்படிச் சொல்ல முடியும்? கொஞ்சம் நிறைய முடி கொட்டியிருக்கிறது. சதை போட்டதனால் வளர்த்தி கம்மியாகத் தெரிகிறது. குண்டெல்லாம் ஒன்றுமில்லை. சொல்லப்போனால் சிரிப்பு முன்னைவிட, கன்னச்சதை திரள நேர்த்தியாகத்தான் இருக்கிறது.

“வா, போவோம்.” என்று தோளில் கை வைத்துச் சொன்னேன். அவளை எங்கேயாவது சற்றுத் தொட்டுக் கொண்டு இதைச் சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது. சுண்டு விரலையாவது பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்தபடி இதைச் சொல்ல வேண்டும். பைத்தியக்காரத்தனம்தான். அதற்குப் பஞ்சமா என்ன உலகத்தில்!

பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது நான் இப்படித் தோளில் கை வைத்தது அவளுக்குக் கூச்சமாகவும், சந்தோஷமாகவும் இருந்திருக்க வேண்டும். “என்ன?” என்று செருப்பைப் போட்டுக் கொண்டே குனிந்தாள். “நல்ல கூத்து போங்க!” என்று நடை இறங்கும் போது சிரித்தாள். மூன்றாவது வீட்டுக் கோலத்தைப் பார்த்து, “எவ்வளவு நல்லா இருக்கு!” என்று பாராட்டினாள். “என்ன தாத்தா, சாப்பிட வரலாமா?” என்று ஒற்றை ஆளாகச் சமையல் பண்ணிக்கொண்டிருந்த வாட்ச்மேன் தாத்தாவைப் பற்றி விசாரித்தாள்.

ஈயப் பானையில் உலை வைத்துக் கொண்டு, அடுப்பை ஊதிக் கொண்டிருந்த அவருடைய முகம் திரும்பி இவளைப் பார்த்து உடனே ஒன்றும் சிரித்துவிடவில்லை. மறுபடியும் கடுகடுவென்று அடுப்பை ஊதுவதற்குக் குனிந்தது.

“அவர் அழகு அழகா விசிறி எல்லாம் செய்வார் தெரியுமா?” என்று கேட்டதற்கு, உதட்டைப் பிதுக்கினேன்.

“எல்லாத்துக்கும் தலையை அசைக்க வேண்டியது அல்லது உதட்டைப் பிசுக்க வேண்டியது. நாலு வார்த்தை கலகலன்னு உண்டு, இல்லைன்னு பேசினால் என்ன! அபராதம் யாரும் போட்டாங்க என்றால் நான் சொல்லிகிடதேன்.”

ஈஸ்வரி மீண்டும் ஈஸ்வரி ஆகிவிட்டது மாதிரி இருந்தது.

மாநகராட்சி குப்பை கொட்டுமிடம். எருக்கலஞ் செடி, நீர்க்கருவைப் புதர், ஒரு சத்துணவுக் கூடம் எல்லாம் தாண்டி ஒரு வழியாக அந்தக் காலனியும், காலனியில் அவர்கள் கட்டியிருந்த வீட்டையும் கண்டுபிடித்து விட்டோம்.

“ஈஸ்வரி அத்தை!” என்று சொல்லிக் கொண்டு, இரண்டு பையன்களும் மாடியில் இருந்து ஓடி வந்தார்கள். “என்ன ஸார், அபூர்வமாக இருக்கு!” என்று சிரித்துக்கொண்டே பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு வழியாக அவர் இறங்கி வந்தார். கையில் ஒரு பெரிய நூல்கண்டு இருந்தது.

“என்ன தினகரியம்மா. எப்படி இருக்கீங்க?” என்று நேராக ஈஸ்வரியிடம் போனார்.

‘குண்டாக இருக்கேன்!’ ஈஸ்வரி சிரித்தாள்.

அவர் பலமாகச் சிரித்தார். சிரிப்புத்தான் அவர் அழகு.

“எவ்வளவு நாளாச்சுப்பா, இந்தச் சிரிப்பைக் கேட்டு!” ஈஸ்வரி சொல்லி, அதற்கும் அவர் சிரித்தார். மேல் சட்டையற்ற உடம்புடன், கைலியைத் தளரவிட்டுக்கொண்டு, சிறுபையன் போல நூல்கண்டும், கையுமாக அவர் சிரிக்கும்போது அவருடைய முகம் சொல்லமுடியாத அழகாகிக் கொண்டு போனது.

“அடேயப்பா!” என்று சொல்லிக் கொண்டே, சுனில் அம்மா இறங்கிக்கொண்டிருக்க, ஒரு பக்கத்து முடியும் சேலைத்தலைப்பும் காற்றில் அலைந்தது. அகலமான நெருங்கிய பற்களுடன் சிரிப்பு முகம் முழுவதும் பெருகியது. விட்டுக் கொண்டிருந்த பட்டம் மார்போடு இருக்க; பட்டத்தின் வால் படபடத்தது. மொட்டை மாடிக்கு மேற்பகுதியின் காற்றோட்டம் தளர்ந்து படிகளின் வழியாக இறங்கி அருகில் வர வர, பறந்த சிகையும், சேலையும் படிந்து அடங்கியதுபோல அகன்று சிரிப்பும் கனத்த உதடுகளில் திரும்பிவந்து அமர்ந்தது.

“என்ன, பட்டம் விடுறீங்களா?” கேட்கும்போது சொல்ல முடியாத ஒரு பரவசத்தை நான் அடைந்திருப்படுதுபோல இருந்தது. குரல் கணகணவென்று அதிர்ந்து பட்டாம்பூச்சி சிறகு மாதிரி அசைந்து கொண்டேபோனது.

“அதுதான் இவரைக் கட்டிக்கிட்ட அன்றைக்கே விட்டுட்டேனே!” என்று சொன்னதும், அவர் ஓவென்று அதற்கும் சிரித்தார். “சிரிப்பைப் பாரேன்!” என்று அவரை அடிக்கிறது போலக் காகிதப் பட்டத்தை ஓங்கிக்கொண்டே ஈஸ்வரியின் கையைப் பிடிக்கும் போது. “எப்பவும் தான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறோமே. மேலே காற்றடிக்கும் என்றால் எல்லோரும் மேலே இருப்போமே.” என்று ஈஸ்வரி சொன்னாள்.

”நீங்க வேப்ப மரத்தடியிலே உட்கார்ந்ததுக்கு உண்டான வாடகை பாக்கி அப்படியே இருக்கு!” என்று அவர் சொல்லிவிட்டு, அதற்கும் சிரித்தார். முன்பு இருந்த ஊரில் அவர்கள் வீட்டுப்பக்கம் மாத்திரம் குடை மாதிரி ஒரு பெரிய வேப்ப மரம் சாய்ந்திருக்கும். ஈஸ்வரிக்கு அந்த வேப்ப மரம் பிடிக்கும். தேடித் தேடி எப்போதுமே அந்த நிழலில்தான் உட்கார்வாள்.

“உங்க ஊர்க்காரங்களை நம்ப முடியாதுப்பா. காற்றுக்குக்கூட வாடகை கேட்பீங்க!” என்று சொல்லிக் கொண்டே ஈஸ்வரி மேலே போனாள்.

“நம்ம ரெண்டுபேரும் பட்டம் விடலாமா, அத்தை?” என்று அம்மா கையில் இருந்த காற்றாடியை வாங்கிக் கொண்டே, சுனில் போனான். சுனில் என்னைத் தாண்டித்தான் போக வேண்டும். போக விடாமல் மச்சுப் படிக்கும் கைகளுக்கும் இடையில் அமுக்கின போது, சுனில் சிரித்துக் கொண்டே திமிறினான். சுனில் சிரிப்பு, கன்னத்துக் குழி எல்லாம் அம்மா ஜாடை.

“எங்கேடா ஓடுகிர?” என்று மேலும் நெருக்கி, நெகிழ விட்டதும், அவன் ஈஸ்வரியின் பக்கம் போய், அவளையும் முந்தி மொட்டை மாடிக்கு ஓடினான்.

மொட்டை மாடி அழகாகவே இருந்தது. யாராலும் மொட்டை மாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை, சிறியதோ, பெரியதோ அது அடைசலும் புழுக்கமும் அற்ற திறந்த வெளியில் நம்மை நிறுத்திவிடுகிறது. நிச்சயம் காற்று இருக்கும். பளிச்சென்று நம்மைச் சுற்றி வானம் வெள்ளையும் நீலமுமாக இறங்கும். இடம் வலம் எங்கு திரும்பினாலும் மேகமாக இருப்பது நம்மை என்னவோ செய்யாமல் இராது. மொட்டை மாடியில் வைத்து யாராவது கோபப்பட்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. மேலும், மழையும் வெயிலும் அடித்து அடித்து இந்தத் தளச் செங்கல்களுக்கு நேர்ந்திருக்கிறதை உற்றுப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடவும் கூடும்.

சற்றுப் பாசி பிடித்த, சுண்ணாம்பு விட்டு ஆற்றிய இந்தச் சிவப்புசதுரங்களில் இருந்து கற்றுக்கொள்வதைவிட என்னிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவுமிருக்கும் என்பது வேடிக்கை. பழைய ரேடியோ ஏரியல்கள் எல்லாம் என்ன ஆகியிருக்கும்? ஏரியல்களுக்குக் கட்டின மூங்கில் கழிகள் இற்றுப் போய் இன்னும் பழைய வீடுகளில் அனாதியாக நிற்கும்தானே! ஒரு ஆந்தை அல்லது மீன்கொத்தியாவது உட்காரும் அல்லவா அதில். கங்கைகொண்டான் சப்ரிஜிஸ்டிரார் ஆபிஸில் புரட்டின ரேகையும் மசியும் அழிந்து போனாலும் பழைய காரை வீட்டு ஞாபகமும் பிலிப்ஸ் ரேடியோ வாங்கி ஏரியல் கட்டினதும் மறந்தா போகும்? ரேடியோவை ஜெசுமணி ஸார் வீட்டுக்குக் கொடுத்தோம். ஜெசுமணி ஸார் இறந்து போய்விட்டதாகச் சொல்கிறார்கள். அவரெல்லாம்கூட இறந்துபோக முடியுமா என்ன?

“அப்புறம் உங்கள் கவிதையை ஏதாவது ஒலிப்பரப்பினார்களா?” சப்தத்தில் திடுக்கிட்டு எல்லாம் கலைந்து திரும்பியபோது சுனில் அம்மா, தட்டில் தின்பண்டங்களுடன் நின்று கொண்டிருந்தார்கள். காதோரம் முடியை ஒதுக்கிக் கொண்டார்கள். அது அவசியம் போலவும் இருந்தது. அவசியமற்றும் இருந்தது.

“கோகுலமும் குழல் ஒலியும்
கோபியரும் கண்ணனுமாய்
ஆகும் ஒரு காதல்
அட்டவணை எனக்கில்லை”

என்னுடைய கவிதையின் முதல் வரிகளை மீண்டும் சுனில் அம்மாவால் சொல்ல முடிந்தது.

“அந்த காஸெட் இன்னும் நாங்க வச்சிருக்கோம்!” என்று சொல்வதைக் கேட்கச் சந்தோஷமாக இருந்தது. நான் கவிதைகள் எழுதுவேன் என்றும், ஒலிப்பரப்பாகியிருக்கின்றன என்றும் ஈஸ்வரி ஒரு தகவல்போலச் சொல்ல, வெகு காலத்துக்கு முந்திய அந்தக் கவிதை நோட்டுடன் அவர்கள் வீட்டு வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து வாசிக்க, அதைப் பதிவு செய்த நல்ல தினம் ஞாபகம் இருக்கிறது. கவிதையின் ஏற்ற இறக்கங்களைவிட நாங்கள் முன்பின்னாகப் பேசிய பேச்சுக்களும், நாற்காலி நகர்த்துவது, செருமித் தொண்டையைச் சரி செய்து கொள்வது, ‘மாமா எழுதியதாப்பா?” என்று சுனில் கேட்பது, தெருவில் சென்ற கார் ஹார்ன் சப்தம், “யார் வீட்டிலேயோ உப்புமா கிண்டுறாங்க!” என்கிற ஸாரின் குரலும் அதைத் தொடர்ந்த சிரிப்பும் அதில் பதிவாகி இருந்தன.

“அதைப் போய் இன்னும் வச்சுகிட்டு!” என்று சுனில் அம்மாவைப் பார்க்கத் திரும்பியபோது, இவ்வளவு நேரம் வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த என் முகம் திரும்பக் காத்திருந்ததுபோல ஒரு முகம் அவர்களிடம் இருந்தது. முகங்களின் பிரத்யேக அழகுகள், அதன் மீதான வசீகரங்களை எல்லாம் தாண்டின மனநிலைக்கு வந்துவிட்ட பிறகும் கூட, அந்த முகம் அழகாக இருப்பதுபோலத் தோன்றியது. தொலைந்து போன வருடங்களின் அனுபவங்களை எல்லாம் சலித்தெடுத்து வைத்துக்கொண்டு, அப்படி மிஞ்சினவற்றை எனக்கு எதிர் வருகிறவர்களிடம் பொருத்திப் பார்த்துக் கொள்வது போலிருந்தது. கடைசிவரை இது இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது.

“நீங்க இங்கே வந்தது பி.எட். படிக்கப் போகிறதாகச் சொன்னீங்க, இல்லையா?” சுனில் அம்மா முகத்தைப் பார்த்தேன்.

“பசங்க படிச்சாச் சரிதாங்க!” எல்லாவற்றையும் தூர விலக்கி வைத்து விடுகிற சவுகரியமான சிரிப்புடன், தின்பண்டத் தட்டுடன் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

“குடிப்பதற்கு ஏதாவது கொண்டுவர்றேன்.” என்று சுனில் அம்மா திரும்புப்போது “ஹோ” என்று ஒரு கூச்சல் கேட்டது. சுனில், ஸார், ஈஸ்வரி மூன்று பேரின் குரல்களின் திரளாக எவ்விய அதில் ஈஸ்வரி விடுகிற பட்டம் காற்றில் சரசரவென்று ஏறுவதற்கான சந்தோஷம் வெடித்தது.

“அடேயப்பா… என்னா குஷி!” சுனில் அம்மா திரும்பினார்கள்.

திரும்பும்போதே அவர்களுக்கும் சந்தோஷம் தொற்றியிருந்தது. கண்ணில் ஈரம் பூசி ஜொலித்தது. முன் சிகை அலைந்தது. அவர்களிடம் எதையாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

“புறப்படும்போது நவ்வாப் பழம் வாங்கினோம்!” என்று சொன்னேன்.

One Reply to “பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்”

Comments are closed.