வீணையும் மீசையும்

வீணையைத் தவில் போலவும், தவிலை மிருதங்கம் போலவும், வாய்ப்பாட்டை நாகஸ்வரம் போலவும் வாசிக்கிறவர்கள் சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஒரு பிரபல வைணிகர் பல துறைகளில் தேர்ந்தவர். ஆனால் அவர் வீணையைக் கேட்கும்போது மீசை முளைத்த பெண் பிள்ளையைப் பார்ப்பது போலிருக்கிறது. ஆண்களுக்குச் சரிநிகர்தான் பெண்களும். அவர்களும் குதிரை ஏறலாம். ஆனால் மீசை முளைத்தாலோ வளர்ந்தாலோ நமக்கு அருவருப்பு வருகிறது; பயம் கூட உண்டாகிறது.

இசையில்லாத இசை

அன்று ஒரே மேடையில் ஒருவர் குழல் ஊதினார். சல்யன் கர்ணனுக்குத் தேரோட்டிய மரபில் ஒருவர் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்தார். இருவரும் ஒரே தினுசான இசைப் பயிற்சி உடையவர்கள். ஸ்வாராளி, ஜண்டை வரிசை, அலங்காரம் என்று தொடங்கி பால பாடம், முன்னேற்ற பாடம், விசேஷ பாடம் எல்லாம் இருவருக்கும் நடந்திருக்கின்றன. இருவரும் தத்தம் வாத்யங்களை உழைப்போடு பயின்றிருக்கிறார்கள். ஆனால் ஒருவரது வாத்யம் இசைக் கருவி போலவும், இன்னொருவரது வாத்யம் ஆயுதம் போலவும் ஒலிக்கிறது. ஒன்று இசையாகவும் இன்னொன்று இசை ஊடின ஓசையாகவும் கேட்கிறது, ஏன்?

குழந்தைக்கு ஜுரம்

“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு? வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு? ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா?” வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை. முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.

ஆயிரம் பிறைகளுக்கப்பால்

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்று ஒரு வித்வான் வந்தார். அவர் ரொம்ப சிக்கனம். ராகம் மூன்று நிமிஷம் பாடுவார். கீர்த்தனம் நாலு நிமிஷம் பாடுவார். சுரம் மூன்று ஐந்து நிமிஷம் அடிப்பார். எனக்கும் சந்தோஷம். நவருசி சாக்லேட் டப்பா மாதிரி எல்லோருக்கும் திருப்தியாக ராகம், பாட்டு, சுரம், நிரவல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாடுவார். “காதை ரொப்பரேடா ராமானுஜம்!’ என்று அவரைப் பார்த்துக் கூத்தாடுவார் லோகநாதய்யர். அவரைப்பார்த்து, பிறகு வந்த வித்வான்களும் விதூஷிகளும் காதை ரொப்ப ஆரம்பித்தார்கள்.

மதுர மணி

கச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.

இசைப் பயிற்சி

சென்னையில் ஜார்ஜ் டவுனில் பன்னிரண்டு குடிகளுக்கு நடுவில் ஒரு குடியாக, கீழே சமையலறையும் மாடியில் படுக்கையறையுமாகக் குடித்தனம் செய்த காலத்தில் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஒரு பயல் பாடிக்கொண்டு போவான். அவன் ஒரு மோட்டார் கார் க்ளீனர். கிட்டப்பா, ராஜரத்னம், பாகவதர் என்று நாடக, சினிமாப்பாட்டுக்கள், ராகங்களையெல்லாம் அச்செடுத்துப் பாடுவான். குரலில் ஒரு கம்மல் – அவர் பொறாமைப் படுகிற தெளிவு, புரளல், ரவைகள்…

கரிச்சானின் கீதம்

கு.ப.ராவின் ஒரு பெரிய குணத்திற்கும் இந்தக் கரிச்சான் காதலுக்கும் சம்பந்தமுண்டு. இளம் எழுத்தாளர்களுக்கு அவர் பெரிய ஆதரவாக இருந்தார். அவர்கள் எழுதி வாசித்துக் காட்டிய ஆயிரக்கணக்கான கட்டுரை, கதைகளை அலுப்பில்லாமல் சுணங்காமல் கேட்டுத் திருத்தங்களைச் சூசித்துக் கொண்டே இருப்பார். இந்த இளம் ஹிருதயங்களை முன்னுக்குக் கொண்டு வந்த ஆர்வம் கரிச்சானையும் முன்னுக்குக் கொண்டு வந்தது. ஆனால் கரிச்சானைத் திருத்த வேண்டிய அவசியம் மட்டுமிருக்கவில்லை. அது பிறக்கும்போதே மகாவித்வானாகத்தான் பிறக்கிறது.

சிறுகதை எழுதுவது எப்படி?

எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும்.

மோகமுள் – நாவல் பிறந்த கதை

“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.

செய்தி

“மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. எதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது, அந்தப் போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு வேகம் அடங்கவில்லை. செய்திதான் அது. எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி அது!”