மிளகு அத்தியாயம் எழுபத்தேழு

1606 உள்ளால்

போர்த்துகீஸ் படை வந்து சேர்ந்தது. 

எங்கே வரவேண்டும் என்று தெரிவிக்கப் படாததால் உள்ளால் துறைமுகத்துக்கு வந்து நங்கூரமிட்ட பத்து சிறு கப்பல்களில் வந்த ஐநூறு பேர்   படகுகளை அமர்த்திக்கொண்டு கரைக்கு ஏக கோலாகலமாக வந்து சேர, அப்பக்கா மகாராணிக்கு உடனடியாகச் செய்தி அறிவிக்கப்பட்டது. 

அப்பக்கா உடனே போர்த்துகல் அரசின் தலைமைப் பிரதிநிதியான சின்ஹோர் இம்மானுவல் பெத்ரோ அவர்களை துரிதமாக உள்ளாலுக்குப் புறப்பட்டு வரச்சொல்லி ராஜாங்க தூதன் மூலம் லிகிதம் அனுப்பினாள். 

இது  போர்த்துகீஸ் அரசின் கோவா பிரதிநிதி அல்வாரீஸால் நிர்வகிக்கப்படும் என்று திருப்பிவிட நினைத்தாலும், தான் கோழிக்கோடு வழியாக லிஸ்பனுக்குத் தாயகம் திரும்ப இருக்கிற இந்த நேரத்தில் எல்லோருக்கும் நட்போடு செயல்பட்டிருக்கத் தீர்மானித்தார் பெத்ரோ.

அவர் வரும்வரை போர்த்துகீஸ் படையினரை திரும்ப கப்பலுக்கே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

போர்த்துகல்  ஆக்கிரமித்து அடக்கி ஆட்சி செய்யும் ஆப்பிரிக்கக் காலனி அங்கோலாவிலிருந்து புறப்பட்டு வந்த அந்தக் கடற்படை திரும்பக் கடலுக்குப் போகச் சொன்னதற்காக கோபித்துக் கொண்டார்கள். 

கையில் கிடைத்த பொருட்களைப் பிடுங்கி அழித்து ஆட்சேபத்தை வெளிப்படுத்தவோ என்னமோ அவர்கள் பார்க்க கடற்கரை மணல் தவிர கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதையும் காணோம். 

இங்கே போகச் சொல்லி இருக்கிறார்கள் எங்களை மாண்புமிகு போர்த்துகீஸ் அரசர் என்று ஒரு பழைய கிழிந்த வரைபடத்தில் அவர்கள் கைசுண்டிக் காட்டியது தில்லியை ஒட்டி விரிந்த பெருமணல் வெளியை. அங்கே கப்பல் ஓட்டிப் போக முடியாது என்று அப்பக்காவின் அரசு அதிகாரிகள் பொறுமையாகச் சொன்னபோது கொஞ்சம் புரிந்து தலையசைத்தார்கள்.

 ஆனாலும் திரும்ப கப்பலுக்கு போகமுடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்கள்.  அப்பக்காவின் அதிகாரிகள் அடுத்து செய்வதென்ன என்று அறியாமல் அரசியைப் பணிந்து கைகட்டி நிற்க, விருந்தினராக வந்த போர்த்துகீசியர்களுக்கு உணவும் தண்ணீரும் இந்த ஒரு காலை வேளைக்கு கடற்கரையில் வைத்து தரவும், அவர்கள் அதற்கு அப்புறம் கப்பலுக்கு திரும்பினால் மூன்று நாள் மும்மூன்று ஒன்பது வேளைக்கான ஆகாரமும் தண்ணீரும் போனால் போகிறதென்று கொஞ்சம் சாராயமும் தென்னங்கள்ளும் அவர்களுக்குக் கப்பல் உள்ளே வந்து அன்பளிப்பாகத் தரப்படும் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்கள் அரசு அதிகாரிகள். 

சித்திரம் : அருண்

அதுவும் சரி, முடிந்தால் சாராயத்தை உடனே தந்தருளச் செய்தால் உயிர் உடம்பில் இருக்கிறவரை கடப்பாடு உடையவர்கள் ஆவோம் என்று அந்த படையணியின் தலைவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சென்ஹோர் பெரைரா வேண்டியது அப்பக்கா மகாராணியால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

அவர்கள் போக வேண்டிய துறைமுகம் அதிகத் தொலைவில் இல்லாமல் மேற்குக் கரையோடு வரும் ஜெருஸுப்பா அல்லது ஹொன்னாவர் துறைமுகமாக இருக்கக் கூடும் என்றும் புரியவைக்கப் பட்டது. 

கப்பலுக்குப் போனதும்   படைத்தலைவர் என்று சொல்லப்பட்ட பெரைரா உடனே சாராயம், ஆகாரம் வருவதை எதிர்பார்த்திருக்க, படையினரில் பத்து பேர் மட்டும் எப்படியோ கடற்கரையில் கிடந்த படகுகளுக்குள் மறைவாக இருந்து, உள்ளால் நகரத்துக்குள் புகுந்தார்கள். அவர்கள் அப்பக்கா மகாராணியின் அதிகாரிகளால் உடனே பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 

ஒன்பது வேளை ஆகாரம், தண்ணீர், சாராயம் எல்லாம் அன்பளிப்பாக வந்து சேர, நின்று, மண்டியிட்டு, தரையைத் தலையால் தொட்டு, விதவிதமாக நன்றி தெரிவித்து கப்தான் பெரைரா பாய்மரம் ஏற்றி ஒன்றன் பின் ஒன்றாக பத்து சிறுகப்பல்களைச் செலுத்திப் போனபோது, அனுபவம் இல்லாத காரணத்தால் தன் படையணி எண்ணிக்கையைச் சரிபார்க்கத் தலை எண்ணாமல் போனார். 

உள்ளாலில் தப்பிப் போன படையினர் பத்து பேரும் மலிவாகக் கிடைத்த வலுவான ஆப்பிரிக்கப் பாதுகாவலர்களாக உடனடியாக அப்பக்காவின் காவல்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

பெத்ரோவுக்கு லிகிதம் கொண்டுபோன தூதுவன் சடுதியில் திரும்பி வந்து பெத்ரோ துரை கோவாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல் சொன்னான். லிகிதத்தை வாங்கி உடன் அழித்தாள் அப்பக்கா.

கோவாவில் இருந்து வந்து சென்னபைரதேவியின் அரசு அணியில் சேர்ந்து போரிட இருக்கும் போர்த்துகீஸ் படையில் சேர்க்க,   டய்யு மற்றும் டாமனில் உள்நாட்டுக் காவல் படையில் மேலதிகம் பேர் இருக்கிறார்களா எனப் பார்வையிட்டார் பெத்ரோ. ஏழு பேரே தேறினார்கள். அதிகம் ஆள்படை அதிகம் மிளகு என்ற மந்த்ரோபதேசத்தை கோவா பிரதிநிதிக்கு அருளினார் பெத்ரோ. அவர்கள். ஆனால் அந்த ஏழு பேரும் நாற்பது வயது கடந்தவர்கள். 

அவர்களை படைக் கவாத்து பழக வைத்து படைவீரர்களாக நிறுத்துவதற்கு பதிலாக லிஸ்பனிலிருந்து அனுப்பி வைத்த போர்த்துகீஸ் படை வந்து சேர பொறுத்துக் கொண்டிருக்கலாம் என்று பெத்ரோ நினைத்துக் கொண்டார்.  அது உள்ளாலுக்கு வந்து சேர்ந்த விவரம் அவருக்குத் தெரியாது.

இரவெல்லாம் கண் விழித்து இரு கோச் வண்டிகள் மாற்றி காலை ஒன்பது மணிக்கு அவர் மாளிகைக்கு வந்து சேர கதவு எல்லாம் அடைத்துச் சார்த்தி வைத்திருந்தது. மனைவி மரியா, குழந்தைகள் மற்றும் கஸாண்ட்ராவைக் காணவில்லை. அவர் வசம் மாளிகைத் திறவுகோல் இல்லாத காரணத்தால் வாசலில் நின்று காத்திருக்க, எதிரே முட்டை வணிகம் செய்யும் கிருஷ்ணப்பா, அவர்கள் இன்று ஞாயிறென்பதால் தேவாலயம் போயிருப்பதாகத் தெரிவித்தான். 

ஞாயிற்றுக்கிழமை பரமபிதா அண்ட சராசரங்களைப் படைத்து ஓய்வெடுத்த வார முதல் நாள். பெத்ரோ மட்டும் அரசு காரியமாக அலைய வேணும் என்று விதித்தவன் சாத்தானாக இருக்கும் என்று மனதில் பழித்தார் அவர்.

 உத்தேசமாக தலையில் கொம்போடு மனதில் சாத்தான் உருவம் உருவாக்கினார். பாதி கவுட்டின்ஹோ பிரபு சாயலிலும், மீதி பெத்ரோவின் மாமனார் சாயலிலும் மனதில் வந்த அந்த சாத்தான், நரகத்தைவிட கோரமாக இருந்த ஸ்திதியை எண்ணி பெத்ரோ வியந்து நிற்க, வாசலில் கோச் வண்டி வந்து நின்றது. 

பெத்ரோவின் மனைவி மரியாவும். குழந்தைகளும் கஸாண்ட்ராவும் இறங்க, மரியாவோடு கைகோர்த்து கஸாண்ட்ரா வந்த அந்நியோன்யம் கண்டு சகோதரிகளோ என்று பார்த்தவர் ஆச்சரியப்படுவர் என பெத்ரோவுக்குத் தோன்ற, கொஞ்சம் சந்தோஷமும், மீதி அந்த அவசரமான கூட்டணி குறித்து ஆச்சரியமுமாக அவர்களை வரவேற்றார். 

மரியாளுக்கு உதட்டில் முத்தம் தந்து கஸாண்ட்ராவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது அவரே முக்கியப் பங்கு பெறும் ஒரு நாடகத்தின் அந்தம் அரங்கேறுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி பெத்ரோவுக்குத் தோன்றியது. 

நாளை இதே நேரம் மரியாவும் குழந்தைகளும் பயணம். வேறெங்கே, கோழிக்கோட்டில் மரியாவின் தாய்வீடுதான். இது அவசியமானதாகக் கருதப்படும் பயணம். அவளும் பெத்ரோவும் யோசித்து முடிவெடுத்த ஒன்று. 

தாய்வீட்டுக்குத் திரும்பவும் குடும்பத்தோடு போய்ச் சேருவதில் அடக்க முடியாத சந்தோஷம் மரியாவுக்கு. நாளை பெத்ரோவும் மரியாவோடு கோழிக்கோடு போகிறார். அங்கே தற்காலிகமாகத் தன் பணியிடத்தை மாற்றிக் கொள்கிறார். 

 யுத்தத்தில் இறப்பு அதிகரிப்பும், கலவரமான சூழ்நிலையும் ஹொன்னாவரில் இருந்து பணிபுரிவதைச் சிக்கலாக்கும். ஹொன்னாவரில் இந்த போர்த்துகீஸ் அரச தலைமை பிரதிநிதி மாளிகை இப்போதைக்கு பூட்டி வைக்கப் பட்டிருக்கும். கோவாவில் இருந்து ஜெருஸூப்பா நிலைமை கண்காணிக்கப்படும். 

கஸாண்ட்ரா? கஸாண்ட்ரா ரொம்ப யோசித்து எடுத்த முடிவு அவள் மிர்ஜான் கோட்டைக்குள் வசிப்பிடத்தை மாற்றிக் கொள்கிறாள். மிங்குவின் அகால மரணத்தைத் தொடர்ந்து பைத்யநாத் வைத்தியர் வீட்டில் இருப்பாள். வைத்தியரும் குழந்தை கோணேஸ்வரனும், மருத்துவச்சி ராஜம்மாளும் கூட இருக்க தோழியின் குழந்தையைக் கவனித்துக் கொள்ள கஸாண்ட்ரா அங்கே குடிபுகுவாள் நாளை. வைத்தியரோடு பேசி விவாதித்து அவருடைய இல்லை, குழந்தையின் நன்மைக்காக எடுத்த முடிவு அது. 

வைத்தியருக்கு, யுத்தத்தில் எந்தக் கட்சி வென்றாலும் பணியும் ஆயுளும் கெட்டி. ஒரு மாதத்திற்குள் நிரந்தரத் தேர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்போது வைத்தியர் கஸாண்ட்ராவைக் கல்யாணம் கழிப்பார். அவளுடைய இறந்த காலத்தைத் துடைத்து தூரப் போட்டு விட்டு வரப்போகிறாள் கஸாண்ட்ரா. அவரும் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. 

கஸாண்ட்ரோ கடந்து போன வியாழக்கிழமை சாயந்திரம் பெத்ரோவோடு நிறையப் பேசினாள். மடாலய வீதி போர்த்துகீஸிய மற்றும் உள்ளூர் சிநேகிதிகளிடம் யாத்திரை சொல்லி வரப் போயிருந்தாள் மரியா. குழந்தைகளையும் தன்னோடு கூட்டிப் போயிருந்தாள் அவள். 

வேலைக்காரர்கள் எல்லோருக்கும் கணக்கு தீர்த்து மூன்று மாத ஊதியம் கூடுதலாகவும் அளிக்கப்பட்டு விட்டது. வீட்டில் ஆழ்ந்த மௌனம் நிலவியது. 

மரியா ஏறிப்போன கோச் வண்டி நகர்ந்ததும் பெத்ரோ கஸாண்ட்ராவை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார். 

என் கண்ணே, உயிரின் உயிரே, நீ மட்டும் சரின்னு சொல்லு, எல்லாவற்றையும் எல்லாரையும் விட்டு நீங்கி உன்னோடு நான் வருவேன். வா ரெண்டு பேரும் எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய் ஏதாவது சிறிய வேலை பார்த்து பிழைக்கலாம். அப்படித்தானே சொல்லப் போறீங்க சின்ஹோர் பெத்ரோ. 

அவரை உதட்டில் கடித்து முத்தமிட்டபடி கஸாண்ட்ரா சொல்ல, பெத்ரோ மயக்கம் போட்டு விழாத குறைதான். கஸாண்ட்ரா அவர் பக்கத்தில் அமர்ந்தாள். இன்னொரு ஆலிங்கனம். அமைதி. அதைக் கிழித்தபடி கஸாண்ட்ரா சொன்னாள் – 

நான் இங்கே மாளிகை நிர்வாகியாக நானாக வரல்லே. அரசியார் சென்னபைரதேவி கட்டளைப்படி, முக்கிய பிரதானி நஞ்சுண்டய்யா சுவாமி ஏற்பாடு செய்து நான் இங்கே வந்தேன். காரணம், நான் அரசாங்க வேவுத்துறையில் கௌரவ அங்கம் வகிக்கிறவள். உங்களால், உங்கள் மூலம், போர்த்துகல் அரசால் சென்னா மகாராணியின் ஜெருஸுப்பா அரசுக்கு ஏதும் இடர் ஏற்பட சாத்தியம் இருக்கிறதா, உங்களை தினசரி சந்திக்க யார் யார் வருகின்றார்கள் என்ற விவரம் எல்லாம் நான் அரசுக்கு அறிவிக்க வேண்டிய கடமை. ஆனால் நான் வந்த இரண்டு மாதத்தில் எனக்கு பணி விலக்கு தரப்பட்டது. காரணமாகச் சொல்லப்பட்டது இது – 

பெத்ரோ துரையால் ராஜாங்க ரகசியம் எதுவும் வெளியேறாது. அவர் சாது பிராணி. நல்லொழுக்கம் கொண்டவர். ஒரே போதைப் பழக்கம் பெண் சிநேகிதத்தில் அசாத்தியமான ஈடுபாடு. செல்வி கஸாண்ட்ரா அதை ஏற்றுக்கொண்டால் ஜெரஸூப்பா அரசு அதைப் பற்றிக் கரிசனம் காட்டுவதை நிறுத்திக் கொள்ளலாம். 

ஆக உங்கள் காதலும் காமமும் நான் உங்கள் மேல் வைத்த காதலும் அரசாங்க விஷயங்கள். 

பெத்ரோ ஒரு சிரிப்போடு கேட்டார் –

அது அரசாங்க விஷயமாகவே இருக்கட்டும் என் கண்ணின் கண்ணே. உனக்கு என்னை பிடித்து வந்தாயா அரசாங்க கட்டாயத்தின் பேரில் என்னோடு ஒட்டிக் கொண்டு பழகினாயா என் இதயமே? 

கஸாண்ட்ரா அவர் தோள்களில் மாலையாகத் தன் வளையணிந்த வனப்பான கரங்களை இட்டு வளைத்தாள். அவள் உதடு துடித்தது. கண்ணில் நீர் திரண்டது. 

நான் அடுத்த பிறவி என்றிருந்தால் உம்மோடு உயிர் வாழ்வேன். இப்போது என் அன்பு சிநேகிதி மிங்குவின் குடும்பத்தோடு மிர்ஜானின் வசிக்கப் போகிறேன். 

அதிர்ஷ்டக்கார மூலிகை மனுஷன் என்று மட்டும் சொல்லி பெத்ரோ எழுவதற்கும் வெளியே போயிருந்த மரியாவும் குழந்தைகளும் திரும்ப வந்து சேரவும் சரியாக இருந்தது.

அந்த உறவாடல் உயிர் இருக்கும்வரை பெத்ரோவுக்கு  உடலில் ஒவ்வொரு திசுவிலும் நினைவாகத் தங்கி இருக்கப் போகிறது. கஸாண்ட்ராவோடு அவருக்கு ஏற்பட்ட இந்த சிநேகிதமும் எப்போதும் நினைவு வந்து வதைக்கப் போகிறது அவரை.

கி ஃக்யுண்டா ஃபெய்ரா (que quinta-feira)- என்ன அற்புதமான வியாழக்கிழமை என்று முணுமுணுத்தபடி படுக்கை அறையில் நுழைந்தார் பெத்ரோ. அயர்வு அசாத்தியமாக அழுத்த உறங்கிவிட்டார் அவர்.

அவர் எழுந்தபோது மாலை ஐந்து மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் என்று அவருடைய இடுப்பு வாரில் தொங்கிய கடியாரம் அறிவித்தது. பசியும் தாகமும் இல்லை அவருக்கு. மரியா கட்டாயப்படுத்தி ரொட்டித் துண்டுகளை அனலில் வாட்டி வெண்ணெய் தடவிக் கொடுத்தாள். 

அதில் பாதியை உண்ட பெத்ரோ, மிர்ஜான் போய் வரேன் என்று பொதுவாக சொல்லிக்கொண்டு கோச் வண்டியில் தாவி அமர்ந்தார். அவரே செலுத்த வேகமாக நகர்ந்தது கோச் வண்டி. 

பழகிய பாதை என்பதாலோ என்னமோ அவர் திரும்புவதற்காக லகானை வலிக்கும் முன் குதிரைகளே தன்போக்கில் திரும்பி, மேடு பள்ளம் பார்த்து ஓடி மிர்ஜான் கோட்டை வளாகத்துக்குள் வரும்போது ஆச்சரியமாக அவர் கவனித்தது இது – 

முற்றுகை இடப்படும் கோட்டை என்ற எந்த அடையாளமும் இன்றி கோட்டை ஆளரவமற்ற வெட்டவெளியில் நின்றிருந்தது. வெட்டவெளிக்குக் கிழக்கே ஒழுங்கின்றி எழுந்திருந்த கூடாரங்களில் ஆளரவம் காணப்பட்டது. 

இன்றைக்கு படைநடத்தல் இல்லையோ? அல்லது ஞாயிறன்று யுத்த விடுமுறையோ? அதுவும் இல்லையென்றால், மாலை ஆறு மணிக்குப் போர் நின்று மறுநாள் தொடருமா? பெத்ரோவுக்குப் புரியவில்லை. 

காதலிலும் யுத்தத்திலும் எதுவும் சரியானது தானே. தொடர்க என்றால் மேலே தொடரலாம். நிற்கலாம் என்றால் நிற்கலாம். யுத்தம் தற்காலிகமாக ஓய்ந்த யுத்த பூமி காண என்ன ஆச்சரியம்?

கோட்டையின் சுரங்கப் பாதையின் தோட்டத்து வழி நுழைவாசலில் பரபரப்பு தட்டுப்பட்டது. மிக அதிகமாகக் காயம் அடைந்த ஒரு வீரனை உருளை பொருத்திய பலகைப் படுக்கையில் வைத்து இரண்டு பேர் தள்ளிக்கொண்டு  இருந்த குருதியைத் தடுக்க இயலாமல் ஒரு மருத்துவ உதவியாளன் அந்த வீரனைத் தொடையில் தாங்கி இறுதி மூச்சை விடுவதை இயலாமையோடும், தவிப்போடும், துக்கத்தோடும், பாசத்தோடும், பரிவோடும், அன்போடும், இரக்கத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஓம் நமசிவாய. 

பெத்ரோ கடந்து போகும்போது பின்னால் அந்த உயிர் கைலாச யாத்திரைக்குப் புறப்பட்டதைத் தெரிவிக்கும் குரலாக மருத்துவ உதவியாளன் குரல் எழுந்து அழுகையில் கரைந்தது. 

கோட்டை மதிலின் உள்சுவர் தெப்பக்குளத்துக்கு அருகே வளைந்து திரும்பும் இடத்தில் தரையில் வெண்துணி பரப்பி காயமடைந்த வீரர்கள் நால்வர் படுத்திருக்க முழங்காலில் மூலிகைப் பற்று தன்மையான வெப்பத்தில் பூசப்பட அவர்கள் வலியில் துடிக்கும் ஒலியைக் கடந்து ஊர்ந்தது கோச்.

லாகவமாக கோச் குதிரைகளை சற்றே மேடாக வளைந்து திரும்பும் பாதையில் செலுத்தி கோட்டை அலுவலகத்துக்கு முன் வண்டியை நிறுத்தி உள்ளே நுழையப் போகும்போதுதான் அவருக்கு நினைவு வந்தது –குதிரைகளுக்கு ஓய்வும் உணவும் தண்ணீரும் தரவேண்டுமே என்று. 

கோச்சில் திரும்ப ஏறி, அரசு குதிரை லாயத்தில் நுழைந்தார் அவர். வணக்கம் சொல்லி அவருடைய கோச்சை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தினார் லாயத் தலைமைக் காவலர். 

வண்டிக்குள் விலை மதிப்புயுர்ந்த ஏதும் இல்லையே என்று அவர் கேட்க, நான் தான் இருக்கிறேன் என்று பெத்ரோ சொல்லிச் சிரித்தார். லாயத் தலைமைக் காவலர் தானும் சேர்ந்து சிரிப்பது மரியாதையாக இருக்காது என்று நினைத்தோ என்னமோ முகத்தைக் கரிசனம் காட்டாமல் வைத்துக்கொண்டு குதிரைகளை அவிழ்த்து உள்ளே நடத்திப் போனார். 

அந்தி சூரியன் சிவப்பு பூசியிருந்த கோட்டையின் பிரம்மாண்டமான சுவர்களைப் பார்த்தபடி உள்ளே நடந்தார் பெத்ரோ.

சற்றே வேகமாக நடந்து வெளிமண்டபம் கடந்து உள்ளே போக, யாருமில்லை அங்கே. அரச வசிப்பிடத்தில் மேற்கில்  இருந்து பாத்திரங்கள்  உருள, உணவு பாகம் பண்ணும் ஒலியும் வாடையும் கலந்து வந்தது. 

பெத்ரோ ஆசனத்தில் அமரும் முன் பார்த்தார் – அது சென்ற முறை வந்தபோது இருந்தது போலன்றி, சுத்தமாக இருந்தது ஒரு தூசு இன்றி.  மறையும் ஆதவன் சாளரங்கள் வழியே விடைபெற,  அந்த மாளிகை, பகுதி வெளிச்சம் பூசி, மீதி இருளை வரவேற்று நின்றது காண, ஏனோ துயரமாக இருந்தது பெத்ரோவுக்கு.

டொக் டொக் என்று கட்டைகளைத் தரையில் மோதினால் வரும் ஒலி. உள்கதவு திறந்து கைத்தடியை ஊன்றியபடி மிளகுராணி ஜெர்ஸுப்பா மகாராணி சென்னபைரதேவி தளர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் அவளுடைய தளர்ச்சியும் வயதும் இருமடங்கு அதிகரித்திருந்ததாக பெத்ரோவுக்குப் பட்டது. தன்னையும் முதுமையும் தளர்ச்சியும் தொற்றி, தசை, நாளங்களூடாக பீடித்ததாகத் தோன்றியது.

வரிசையாக ஏழு தீபங்களை ஏற்றி சூழலை பிரகாசிக்க வைத்து விட்டு ஒரு பணிப்பெண் உள்ளே போனாள்.

எழுந்து மரியாதையோடு வணங்கினார் பெத்ரோ. அவரைத் திரும்ப அமரச் சொல்லி விட்டு பெத்ரோ அருகில் இருந்த நாற்காலியைச் சற்றே திருப்பி பெத்ரோ முகத்தைப் பார்க்க வசதியாக நகர்த்தியபடி அமர்ந்தாள் சென்னா. 

பெத்ரோ மண்டியிட்டு அவள் கையில் மரியாதையோடு முத்தமிட்டு தலைகுனிந்து இருக்க   அன்னைபோல் அவர் தலையில் கைவைத்து ஆசியருளினாள் சென்னா. 

பெத்ரோவுக்கு அடக்க முடியாமல் கண்ணீர் சுரக்க, கண்கள் கலங்கி. எல்லா வண்ணமும் மேலோடி, குவியம் காணாத விழிகளைத் திரை மறைக்க, உருவங்கள் குழம்பித் தெரிய, சமாளித்துக்கொண்டு எழுந்தார். தன் இருக்கையில் அமர்ந்தார். 

அரசி  அவரைக் குறிப்பாகப் பார்த்துச் சொன்னாள் – காலையில் செய்தி வந்தது. நீங்கள் கோவாவுக்கு போயிருக்கிறீர்கள் என்று. 

பெத்ரோ நிதானமாகச் சொன்னார் – 

ஆம் அம்மா. எவ்வளவு விரைவில் போர்த்துகல் படையாக நான் தங்களுக்கு அனுப்பித்தர முடியுமோ அவ்வளவு விரைவில் அனுப்பினால் பல விதத்திலும் நன்மை உண்டாகுமே. அதனால்தான் நானே நேரில் போய்வந்தேன். இன்று இரவுதான் திரும்புவதாக இருந்தேன். ஆனால் அங்கே இருப்புக் கொள்ளாமல் நேற்று இரவெல்லாம் பயணம் செய்து காலையில் வந்து சேர்ந்தேன். அசதியில் கண்ணயர்ந்து விட்டேன். விழிப்பு வந்ததும் தங்களை தரிசிக்க இங்கேதான் ஓடி வந்திருக்கிறேன் என்றார் பெத்ரோ. 

தரிசனம். அது ரொம்ப பெரிய வார்த்தை பெத்ரோ சின்ஹோர். நான் வெறும் மனுஷி. என்னைச் சந்திக்க நீங்கள் வந்திருக்கிறீர்கள். தரிசிக்க இல்லை. நான் இறந்தால்கூட, சொந்தமும் நட்பும் விரும்பினால், உடல் காட்சிக்கு வைக்கப்படும். தரிசனத்துக்கு வைக்கப்படாது. 

பெத்ரோ இருகை கூப்பி, நீங்கள் இன்னும் பல ஆண்டு ஜீவித்திருப்பீர்கள் என்றார். சென்னா சிரித்தாள். 

இறப்பு பற்றி இப்போதெல்லாம் நினைவு வந்துகொண்டே இருக்கிறது. இழப்பு பற்றியும் தான். பேரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த யுத்தத்தால் என்ன பிரயோஜனம்? நேற்று மட்டும், நூற்று அறுபத்திரண்டு பேர், போர் என்ற, தெய்வங்கள் ஆடிக் களிக்கும் குரூர விளையாட்டில் இறந்து போனார்கள். இரண்டு பக்கமும் சேர்த்த சாவு எண்ணிக்கை இது. எல்லா யுத்தங்களையும், பேரிழப்பையும், போரிழப்பையும் களைந்த உலகம் வர பகவான் மகாவீரரை பிரார்த்திக்கிறேன். 

சென்னா கைகூப்பி கண்மூடிப் பிரார்த்திக்க, பெத்ரோ தானும் கைகூப்பி இருந்தார். இனி இவர் பேசுவாரா? அரசியைக் கவனித்தார். உறக்கமோ, அயர்வோ, பிரார்த்தனை ஆழ்ந்திருந்தாரோ சென்னா அசையவில்லை. 

இதற்கு மேல் பேச ஏதுமில்லை பெத்ரோவுக்கு. அவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கூறினார் – 

மன்னியுங்கள். நான் திரும்பப் போய் போர்த்துகீசிய படைகள் பற்றி செய்தி உண்டா என்று பார்த்து வரட்டுமா? 

அவசரமாக எழுந்து அனுமதியின்றிப் புறப்பட்டதற்காக கண்டிப்பான வார்த்தை வாங்காமல் இருக்க நாற்காலியின் முனையில் தொற்றியபடி இருந்தார். 

போர்த்துகீஸ் படைகள் வந்துவிட்டன. 

சென்னா நிதானமாகச் சொல்ல பெத்ரோவால் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

வந்துடுத்தா? எனக்குத் தெரியாமலா? 

ஆமாம் அங்கோலா படைகள். தில்லி பக்கம் கப்பலை நிறுத்தி இறங்க வரைபடத்தைப் பார்த்துக்கொண்டு உள்ளல் துறைமுகத்துக்கு வந்தார்களாம். அவர்களை ஹொன்னாவர் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறாள் என் பிரியமான தோழி அப்பக்கா. 

சென்னா ஒற்றர் அணி கொண்டுவந்த தகவலை முன்பைவிட நிதானமாக அறிவித்தாள். ஆச்சர்யம் விலகாமல் கையிரண்டையும் உயர்த்தி, இது அதிசயமானது என்று பொருள் தர பெத்ரோ நின்று நடனக் கலைஞன் போல் அபிநயிக்க, சென்னபைரதேவி இருந்தபடியே குறுநகையோடு, அதேபோல் அபிநயித்தாள். அவளுடைய ஊன்றுகோல் தரையில் ஓசையெழுப்பி விழுந்தது. 

பெத்ரோ அமர்ந்து சொன்னார் –

சரி அம்மா! நான் உங்கள் அனுமதியோடு கோழிக்கோடு செல்லப் போகிறேன். அங்கிருந்து என்னை இயங்கச் சொல்லி கோவா செயலகம் மூலமாக உத்தரவு வந்திருக்கிறது. போர் நின்றதும் திரும்ப அனுமதி உண்டு. 

தெரியும் பெத்ரோ. ஆனால் நீங்கள் வரப் போவதில்லை. லிஸ்பனுக்குக் குடும்பத்தோடு திரும்பிவிடுவீர்கள்.

 பெத்ரோ தலைகுனிந்து சென்னபைரதேவி காலில் விழுந்து இந்துஸ்தானி பாரம்பரியத்தின் படி சர்வாங்கமும் நிலம் தொட வணங்கி எழுந்தார். 

ஆயுஷ்மான் பவ. ஜெயவிஜயிபவ. முன்கூட்டிய ஆசிர்வாதங்கள் என்றாள் மகாராணி. பெத்ரோ கைகூப்ப அவள் சொன்னாள் – 

முன்கூட்டியே போர்த்துகல் படைக்கு ஊதியம் அதுவும் மிளகாகத் தரவேண்டும். அதை நீங்கள் தரச்சொல்லி கேட்கவில்லையே. போகிறது. நாளை நஞ்சுண்டார் படை எண்ணிக்கை, தகுதி சரி பார்த்து அளிப்பார். 

பெத்ரோவுக்கு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அரசாளுதல் ஈதன்றி வேறு உண்டோ. அவருக்குத் தெரியாது.

கண்ணைக் கண்ணீர் மறைக்கப் புவி ஈர்ப்பு இல்லாத பூமியில் நடப்பதுபோல்  தடுமாறிக் காலடிகளை எடுத்து வைத்து இருள் படியும் முன்மண்டபத்துக்கு நடந்தார். ஏதோ  தோன்றப் பின்னால் திரும்பிப் பார்த்தார். அங்கே மகாராணி சென்னபைரதேவி நின்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருகையும் கூப்பி வணங்கி பெத்ரோ தொடர்ந்து நடந்தார். இனி மிளகுராணியைச் சந்திக்கப் போவதில்லை என்று அவருக்குத் தோன்றியது.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு அத்தியாயம் எழுபத்தாறு மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.