மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று

2000 லண்டன், தில்லி

முசாபர் அலி என்ற முசாபர் ஒரு பக்கமும், முசாபரின் போன வாரம் மனைவியான அமி என்ற அமிதா இன்னொரு பக்கமும் ஆறுதல் சொல்ல, சாரதா தெரசா அழுதுகொண்டிருந்தாள். முசாபரின் அன்பு சிநேகிதியும், அவருடைய முப்பது வருடம் முந்திய மனைவியும் ஆன அறுபத்திரெண்டுக்காரி. வெளியே பனி பெய்து கொண்டிருந்த ராத்திரி.

”முசி, அவனைக் கொன்னிருப்பாங்க”.

அவள் சத்தம் அதிகமாக, மருது எழுந்து அவளுடைய நாற்காலிக்கு அருகே நின்றான். சாரதா, கம்போஸ் யுவர்செல்வ்ஸ் என்று திரும்பத் திரும்பச் சொல்லியபடி சாரதா தெரிசா தலையை வருடினாள் அமி.

”இல்லே, அவனை கத்தியாலே குத்திக் குத்தி கொலை பண்ணியிருப்பாங்க அமி. நான் இங்கே இருந்தே பார்க்க முடியறது. சங்கரனை வயித்துலே கத்தியால் குத்தி அப்புறம் நெஞ்சு வழியா வெளியே எடுத்திருப்பாங்க. ரத்தம். ப்ளேன் முழுக்க ரத்தம். சங்கரன் ரத்தம். நான் போகணும். ரத்தம் காயறதுக்குள்ளே போகணும்”.

அவளை அப்படியே குழந்தை மாதிரி தூக்கிச் சுமந்து கட்டிலில் விட்டார் முசாபர். மருதுவிடம் ரகசியமாகக் கேட்க, தலையாட்டியபடி உள்ளே போனான் அவன். அடுத்த நிமிடம் மன அழுத்தத்தைக் குறைக்கும், உறக்கம் வரவழைக்கும் இரண்டு குளிகைகளை எடுத்து வந்து முசாபரிடம் கொடுத்தான். டம்ளர் தண்ணீரில் அவற்றைக் கரைய விட்டு, சாரதாவுக்குப் புகட்டினார்கள். நான் போகணும், போகணும் என்று புலம்பியபடியே இருந்தாள் சாரதா. பத்து நிமிடத்தில் அந்த குளிகைகளின் தீவிரம் தெரிய ஆரம்பித்தது. அப்புறம் சாரதாவின் சத்தமே இல்லாமல் போனது.

இரண்டு வேளை கூட்டமாக இருந்து உண்டு மகிழ்ந்து உறவாடிய வீடு சிறுபனிச் சிதறலாகவும், அம்பாரமாக எச்சில் தட்டுகளும் காப்பிக் கோப்பைகளுமாகவும், சாப்பிட்டு மீந்த சோறும் கறியும் பிட்சாவுமாகவும், நீல பக்கெட்டில் வைத்த சாம்பார், இலைகளில் கட்டி வந்த புளித்துப் போன சட்னியாகவும், ஆளொழிந்த வீட்டில் வந்தவர்கள் மிச்சம் வைத்துப் போன மூச்சுக் காற்றுமாகவும் கிடந்தது.

க்ரைடனுக்குப் புறப்பட வேண்டியவர்கள் மட்டும் புறப்பட்டுப் போயிருக்க, கல்பாவை வால்தம்ஸ்டவில் பிஷாரடி சார் இல்லத்துக்கு அனுப்பி வைக்க கொஞ்சம் நேரமானது. சாரதாம்மாவை இப்படி ஒரு நிலைமையில் விட்டுவிட்டுப் போகமாட்டேன் என்று அடம் பிடித்தாள் அவள். மருதுவும் முசாபரும் அமியும் அவளிடம் எடுத்துச் சொல்லி போய் நாளை வரச் சொல்லி அனுப்பி வைக்க ராத்திரி பதினொன்று மணி. முசாபர் தன் காரில் கொண்டு போய் விட்டு வந்ததால் பாதுகாப்பு, கார் ஏற்பாடு செய்வது எல்லாம் தீர்ந்து போன பிரச்சனைகள் ஆனது.

மருது முசாபரை அனுப்பி வைத்து விட்டு, தில்லியில் பகவதிக்கு ஃபோன் செய்ய, அதிகாலைக்கும் முந்திய புலரிப் பொழுதான மூன்றரை மணி தில்லியில். அவளும் அவள் அம்மா வசந்தியும் ராத்திரி சாப்பிடக் கூடப் பிடிக்காமல் காப்பி மட்டும் யாரோ போட்டுத்தரக் குடித்து தில்லியின் அதிகார வம்சத்தை அசைத்து உதவி கேட்டபடி இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. வீடே நண்பர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் வந்து வந்து போய்க்கொண்டிருக்க சந்தடி மிகுந்து இருந்ததாக பகவதி சொன்னாள்.

லண்டனில் இந்திய தூதரக உயர் அதிகாரி சின்னச் சங்கரனின் நண்பர் தான். அவரை மருது தொடர்பு கொள்ள முடியுமா என்று பகவதி கேட்க, தனக்கும் சின்னச் சங்கரனுக்குமான அப்பா பிள்ளை உறவு அபத்தமாக வெளியே சொல்லிக் கொள்ள முடியாததாக சங்கரனும், சாரதாவும் அதைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் விட்டுவிட்டதாக மருதுவுக்கு வருத்தம் உண்டு.

பள்ளிக்கூடத்தில் யாராவது கேட்கும்போதும் அவன் முன்பின் தெரியாத முசாபர் பெயரையே அப்பாவுடையதென்று சொல்லியிருந்தான். பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது கூட சாரதா தெரிசா முசாபர் பெயரை சாதாரணமாக உபயோகித்திருந்தாள். தந்தை, கார்டியன் இரண்டு இடத்திலும் அந்தப் பெயர்தான் இட்டிருந்தாள். முசாபரின் அன்பும் சாரதா தெரிசா மேல் அவர் வைத்த நேசமும், பிரியமும் வயதாக ஆக கூடிக்கொண்டுதான் வருகிறது.

இத்தனை வருடத்தில் மருதுவும் பகவதியும் பிரியமும் பாசமும் நிறைந்த அண்ணா தங்கை உறவில் இருக்க முடிந்ததற்கு பகவதியின் ஆழ்ந்த புரிதலே காரணம் என்று மருதுவும் அவனுடைய திடமான சகோதர பாசமே காரணம் என்று பகவதியும் சொல்லாத நாள் இல்லை. மற்றவர்கள் யாரும் லட்சியம் செய்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உறவு தழைத்து வளர்ந்துதான் வரும்.

ஆனாலும் லண்டனில் இந்திய ஹை கமிஷனரை ராத்திரி பதினோரு மணிக்கு மருது தொடர்பு கொண்டு சின்னச் சங்கரனின் மகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு உதவி கேட்க முடியாது. அந்த உறவு பற்றிச் சொல்லாவிட்டால், அவன் கோரிக்கை எந்த பின்னணியும் இல்லாத அடுத்தவர் பற்றிய அக்கறை காரணமானது என்று கருதப்பட்டு புறம் தள்ளப்படும்.

“பரவாயில்லே மருது அண்ணா, நீங்க அவருக்கு ஃபோன் பண்ணுங்க. பிரான்ஸ் இந்திய தூதரும் அப்பாவுக்கு நல்ல ப்ரண்ட் தான். நம்பர் தேடித் தரேன். அவர் கிட்டேயும் பேசிடுங்க”.

பகவதி முறையிடுவதுபோல் சொன்னாள். தெரிசாம்மா எப்படி இருக்காங்க? அவள் கேட்க, தூங்க வைத்திருக்கிறோம் என்று சொல்லி பேச்சை முடித்தான் மருது.

மணி பார்த்தான். ராத்திரி பதினொன்று பத்து நிமிடம். பகவதி கொடுத்த இந்திய ஹை கமிஷனர் தனி எண்ணுக்கு தொலைபேசினான் மருது. ஒரு முறை அழைப்பு போனதுமே ஹலோ என்று ஹை கமிஷனர் தொலைபேசியில் பேச வந்துவிட்டார்.

“சார், நான் ரிடையர்ட் காபினெட் செக்ரட்டரி மிஸ்டர் சங்கரனோட ஃபர்ஸ்ட் கசின். அவர் மகள் பகவதி உங்க நம்பரைக் கொடுத்தா. ஒரு எமர்ஜென்சி”.

“தெரியுமே ஹைஜேக் ஆன ப்ளேன்லே சங்கரன் இருக்கார் அதானே?”

“ஆமா சார். ப்ளீஸ் நீங்க செய்யக் கூடியது ஏதாவது”.

“நான் தலையிடவே முடியாத ஏரியா ஆச்சே இது. ரொம்ப சென்சிட்டிவ் வேறே. ஆமா, நீங்க அவரோட கசின்னு எப்படி எனக்கு தெரியும்?”

“அதைச் சொல்லத்தான் சார், பகவதி உங்க நம்பருக்கு இந்தியாவில் இருந்து கூப்பிட்டிருந்தாள்”.

“நான் வெளியே போயிருந்தேன். சரி உறங்கணும். எங்க நட்பு வட்டத்திலே இந்த செய்தியை பரப்பியாச்சு. யாராவது ஏதாவது செய்ய முடியுமா பார்க்கலாம். ப்ரைம் மினிஸ்டருக்கு red alert அதிக எச்சரிக்கையா செய்தி போய் அவர் கவனிச்சிட்டு இருக்கறதா செய்தி. பார்க்கலாம். குட் நைட்”. அவர் இணைப்பைத் துண்டித்து விட்டார்.

பகவதி பிரஞ்ச் எம்பஸி பாரீஸ் நம்பரைக் கொடுக்க மருதுவைக் கூப்பிட்டபோது அவள் சொன்னது – ”லண்டன் அம்பாசடர் இப்போதான் பேசினார். கசின் பேசினார்னு சொன்னார். நீ தானே? ப்ரைம் மினிஸ்டர் கிட்டே பேசினாராம். PM is gravely concerned”.

“சரி, நமக்கு அது என்ன ஆக்‌ஷனா வந்து சேரும்?” மருது கேட்டான்.

“தெரியல மருதா, சாரதா அம்மா எப்படி இருக்காங்க?”

“இன்னும் ஆறு மணி நேரம் கவலை இல்லே. எழுந்தா ஒரே பல்லவி தான் – நான் போகணும் நான் போகணும். எங்கே போகணுமாம் தெரியலே. தில்லிக்கு போகணும், காம்ரேட் ஜ்யோதிர்மய் மித்ராவை பார்த்து பேசணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருக்காங்க. அவங்களுக்கு சிடிசன்ஷிப் வாங்கிக் கொடுத்தவர் காம்ரேட் தானாம். அவரை சந்திச்சு அப்பா விஷயத்துலே ஏதாவது ரிசல்யூஷன் கிடைக்குமான்னு பார்க்கறங்க போல”.

“காம்ரேட் ஜ்யோதிர்மய் மித்ராவா, அடடா, அவர் அக்டோபர் கடைசியிலே கொல்கத்தாவிலே இறந்து போயிட்டாரே. சரி வசந்தி அம்மா இங்கே முழிச்சிக்கிட்டாங்க. என்னன்னு பார்த்துட்டு வரேன். கூப்பிடறேன் மருதா”. பகவதி பேசி முடித்து ஃபோனை வைத்தாள்.

வாசலில் அழைப்பு மணி. மருது போய்க் கதவு திறந்தான். முசாபர் உள்ளே வந்தபோது அவருடைய பிரம்மாண்டமான ஆளுமை காரணமாக எல்லாம் சந்திக்கவும் சமாளிக்கவும் முடிந்த பிரச்சனைகள் தான் என்று தோன்றுவதாக மருது அமியிடம் சொன்னான்.

முசாபர் வந்ததுமே தெரிசா எப்படி இருக்காங்க என்று தான் கேட்டார்.

“குளிகை எஃபக்ட் இன்னும் நாலு மணி நேரம் வரும். அப்புறம் தான் என்ன பண்றதுன்னு பார்க்கணும்’ என்றான் மருது.

“என்ன பண்றதுன்னா? அவங்க சொல்ற மாதிரியே நாளைக்கோ மறுநாளோ டெல்லி போகறது. அங்கே போய் எப்படி போயிட்டிருக்குன்னு பார்த்து தீவிரவாதிகளை சந்திக்கணும்னா அதையும் போய் பார்த்துட்டே வர்றது”.

அவர் ரொம்ப சாதாரணமாகச் சொல்லிவிட்டார்.

”இத்தனையும் உங்க பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை வச்சுக்கிட்டு பண்ணப் போறீங்களா”? என்று மருது கேட்டான்.

பல வருஷம் முன்பு தெரிசாவோடு இந்தியா போக அவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு பட்ட சிரமம் பற்றியும் அமேயார் பாதிரியாரின் உதவி பற்றியுமெல்லாம் மருதுவிடம் சொல்லியிருக்கிறார்.

”நான் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டுக்கு எப்பவோ மாறியாச்சு. நான் இப்போ இங்க்லீஷ்காரன். பாகிஸ்தானி இல்லை”.

அவர் சொல்லியபடி பாத்திரத்தில் இருந்து பகலுக்கு வந்த சாம்பார் சாதம் மிச்சத்தை வழித்துத் தின்னத் தொடங்கினார். பாகிஸ்தானிக்கு பசிக்காது. இங்க்லீஷ்காரனுக்கு யமப் பசி. முசாபர் சாப்பிட்டு முடிக்கும் வரை எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

மருது பாரீஸுக்கு அங்கே இந்திய தூதரின் தனி தொலைபேசி எண்ணுக்கு மறுபடி தொலைபேச முயற்சி செய்தான்.

ராமதுரை என்று பெயர். தென்னிந்தியராக இருக்கலாம். தமிழர் அல்லது பாலக்காட்டு தமிழர். தமிழும் மலையாளமும் கலந்த ஒரு மொழியில் சிடுசிடுக்கவோ தன்னைத் தவிர புத்திசாலி உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்பது போல் கருணையும் அறிவும் கிள்ளித்தருகிறவராகவோ இருக்கக் கூடும்.

ஃபோன் எடுக்கப்படும் சத்தம். வளையல் சத்தம். பெண் இருமல். ராமதுரை சார் எப்படி இருப்பார்? வேஷ்டி அணிந்திருப்பார். அது கூட இல்லாமல் இருந்தால் ஃபோனை எடுத்திருக்க மாட்டார். இருமலுக்கு நடுவே கலவி சுகம் தேடிக் கொண்டிருப்பார். இருமலோ தும்மலோ இந்த குளிர்கால ராத்திரிக்கு தேவையானது உடம்பு சூடு தான். மருது கல்பாவைப் பற்றி நினைத்தான். எதிரில் தான் இருக்கிறாள். அவள் உடம்பின் இதமான பெர்ப்யூம் வாடை.

ஹலோ என்று பெண்குரல். ”ராம்துலாரி சின்ஹா ஹியர்”.

மருதுவும், பகவதியும் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தூதர் ஆணில்லை. பெண். ராமதுரை இல்லை, ராம்துலாரி.

மிகுந்த துக்கம் தன் குரலில் ஏற, சுபாவமாகத் தொடங்கினான் மருது –”நள்ளிரவுக்கு அப்புறமான இந்தக் குளிர்கால இரவில் உங்களைத் தொல்லைப் படுத்துவதற்கு மருது என்ற லண்டனில் வசிக்கும் இந்தியக் குடிமகனான தான் மன்னிக்கக் கோருகிறேன்”.

அந்தக் குரல் டீக் ஹை டீக் ஹை என்றபடி கேட்டு வந்தது. ரிடையர்டு கேபினட் செக்ரட்டரி சங்கரன் என்றவுடன் என்ன ஆச்சு சங்கரனுக்கு என்று கேட்டது.

“மேடம் காத்மாண்டுவில் இருந்து தில்லி வந்துக்கிட்டிருந்த விமானம் ஹைஜாக் ஆயிடுத்து. மிஸ்டர் சங்கரன்..”.

“ப்ளேன் ஹைஜாக் ஆச்சுன்னா சங்கரனுக்கு என்ன? அதுக்குள்ளே இருந்தாரா சங்கரன்? எப்படி அங்கே போனார்?”

தூக்கக் கலக்கத்தில் அவரிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது என்று தோன்ற, மேடம், சாரி, காலையிலே கூப்பிடறேன் என்று போன் இணைப்பைத் துண்டித்து விட்டான் மருது.

இதை பகவதியிடம் சொல்ல வேண்டாம் என்று நினைத்தபடி ஹாலுக்கு வந்தான். அமீ எல்லோருக்கும் தேநீர் போட்டுக்கொண்டிருந்தாள்.

“டீயா காப்பியா அமி?”

“மருது உனக்கு காபி வேணும்னா இன்ஸ்டண்ட் காபி டப்பா எங்கே இருக்குன்னு சொல்லு. கலந்து தர்றேன்” என்றாள் அமி.

“வேணாம் அமி சும்மா கேட்டேன். டீ போதும்”.

முசாபர் தேநீர்க் குவளையோடு அமியிடம் சொன்னான் – ”உனக்கு உறக்கம் வந்தா கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்க. சாரதா எழுந்துட்டா தூங்க முடியாது. அவ ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா”.

சொல்லியபடியே முதல் படுக்கை அறைக்குப் போய் உறங்கியபடி இருந்த சாரதாவை பிரியத்தோடு பார்த்தான். குனிந்து அவள் உச்சந்தலையில் மென்மையாக முத்தமிட்டான் முசாபர். அவளை உடலாக மட்டும் ஒருபோதும் அவன் பார்த்ததில்லை என்பது நினைவுக்கு வரக் கண்ணில் நீர் பூத்தது. முப்பது வருஷம் முன் கல்யாணம் ஆன தினத்தில் மாலை நேரம் கூடலும் அது முடிந்து அவளுடைய முந்தைய கணவனைப் புதைக்க சவப்பெட்டி வாங்கிய வகையில் மீதிப் பணம் அடைத்து விட்டு குளித்து வந்தபோதும், ஃபிஷ் அண்ட் சிப்ஸ் உணவுச்சாலை நடத்தி மீன் வாடையோடு குறுக்கும் நெடுக்குமாக அலைந்தபோதும் அவள் தெரிசா. நல்ல மனசுக்காரி. முசாபரிடமிருந்து விவாகரத்து கிடைக்கக் காத்திருக்காமல் சின்னச் சங்கரனோடு உறவு வைத்துக்கொண்டு மருது உருவானபோது முசாபரிடம் மருதுவுக்குக் கொஞ்ச நாள் தந்தை ஸ்தானத்தில் பெயரைப் பயன்படுத்த அனுமதி கேட்டபோது மகிழ்ச்சியோடு சம்மதித்தார் முசாபர். அவர் சாரதா தெரிசா மீது கொண்ட அன்பு அவ்வளவு ஆழமானது.

பக்கத்தில் அமி வந்து நின்று அவர் கையைப் பற்றிக் கொண்டாள்.

“சாரி அமி, கல்யாணம் ஆகி இப்படி விநோதமான சூழ்நிலையிலே உன்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கேன். இன்னும் என்ன என்ன எல்லாம் இருக்கோன்னு பயப்படவில்லையே’.

அப்படி எல்லாம் ஒண்ணுமில்லே என்றாள் அமி. ”நான் கொஞ்சம் படுத்து எழுந்திருக்கறேன். சாரதா எழுந்து கூப்பிட்டா நீ என்னைக் கூப்பிடு” என்றபடி முசாபரின் உதட்டில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு ஹாலுக்கு போனாள் அமி.

சாரதா தலைமாட்டில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து அவளுடைய நாடி பிடித்துப் பார்த்தார் முசாபர். சீராக இயங்கிக் கொண்டிருந்தது ஆறுதலாக இருந்தது. சாரதா வலது பக்கம் திரும்பிப் படுத்தபடி ஏதோ முணுமுணுத்தாள். முசாபர் அவள் வாய்க்கு அருகே காது வைத்து கவனமாகக் கேட்டார். மிளகு என்றாள் சாரதா. அமி உள்ளே வருவது அவளுடைய பிரஞ்ச் செண்ட் வாடையாக முன்னால் வந்து சேர்ந்தது.

”என்ன முஸி முழிச்சுட்டாங்களா?” இல்லை என்றார் முசாபர்.

காலை மூன்று மணி என்றது கடியாரம். சற்றே உறக்கத்தில் ஆழ்ந்து போகத் தரையில் டூவெட்டை விரித்து இன்னொன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த முசாபர் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, அமியும், மருதுவும் உறங்கிக் கிடக்க, தெரசாவோடு வீடே உறங்கிற்று.

எழுந்தபோது தட்டுப்பட்ட சாரதா தெரிசா முன்னிரவில் அழுது கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் பிடிவாதத்தோடு இருந்த சாரதா தெரிசா இல்லை. எல்லோரோடும் அழகான புன்சிரிப்போடு பேசினாள் அவள். சின்னச் சங்கரன் எப்படியாவது தப்பி வந்துவிடுவான் அல்லது பிரதமர் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்பார் என்று கிருஷ்ணன் அருள் பொழிய நல்லதெல்லாம் நடக்கும் என்பதில் நம்பிக்கையோடு நடமாடினாள் அவள்.

அவளுக்குத் தான் செய்ய வேண்டியது என்ன என்று தெளிவாகத் தெரிந்திருந்தது. ”மருது, என் கிரெடிட் கார்டுலே இன்னிக்கு ராத்திரி நான் இந்தியா திரும்ப, தில்லி போக பயணச் சீட்டு வாங்கிக் கொடுக்கறியா ப்ளீஸ்?” என்று மகன் என்றாலும் உதவி கேட்கிற தொனி மாறாது வேண்டினாள்.

”அம்மா நீங்க தான் வந்தீங்க. ஒரு மாசமாவது என்னோடு தங்கியிருக்கப் போறேன்னு சொன்னீங்க. இப்போ பத்து நாள்லே திரும்பப் போகணும்னு சொல்றீங்களே. நீங்க போய் என்ன பண்ணப் போறீங்களாம்?

”என்ன செய்ய மருது. உங்க அப்பாவுக்கு லைஃப்லைன் நின்னு போக வைக்கற எமர்ஜென்ஸின்னா எனக்கு உடம்பிலே உயிர் இருப்பு கொள்ள மாட்டேங்குதே”.

அவள் சொன்னபோது தன்னையறியாமல் முசாபரை நோக்கினான் மருது. நான் இல்லை என்பதுபோல் புன்னகைத்தார் முசாஃபர்.

ராத்திரி ஏர் இந்தியா ஃபிளைட்டில் இடம் இருந்ததால் அந்த விமானத்திலேயே பயணச் சீட்டு வாங்கி ஹீத்ரூவில் பயணம் வழியனுப்பி வந்தார்கள் மருதுவும், முசாபரும், அமியும்.

சாரதா அடுத்த பத்து மணி நேரத்தில் தில்லியின் கடுங்குளிரில் தில்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தாள்.

அம்பலப்புழையில் கற்றுக் கொண்டபடி நயமான இந்தியில் டாக்சி பிடிக்கவும், மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யவும் அவளால் இயல்பாக முடிந்தது. அது குறித்து, கர்வமோ சந்தோஷமோ அடைய முடியாமல் போன ஒரு தினம்.

கொண்டு வந்திருந்த கம்பளி ஷாலும் ஸ்வெட்டர்களும் ஸ்கார்ஃபும் போதுமோ என்று சந்தேகம். போதாது என்று தெரிந்தால் உடனே வாங்கிக் கொள்ள தில்லியை விட வேறெங்கே போக? அதுவும், ஆகக் குறைந்த விலைக்கு கரோல்பாக்கிலும் பாலிகா பஜாரிலும் கொட்டி வைத்தல்லவோ விற்பார்கள் குளிர் வந்ததும்.

சாரதா தெரிசா கம்பெளி ஸ்வெட்டர் வாங்க இல்லை தில்லி வந்தது. சங்கரன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரு குளிர் நாளில் முப்பது வருஷம் முந்தி ஏற்பட்ட உறவு. இந்தக் குளிரோடு முடியப் போகிறதோ.

என்ன செய்தார்கள் சங்கரனை அந்தத் தீவிரவாதிகள்? சாரதாவுக்கு பயமாக இருந்தது. கோபமாக இருந்தது.

விட்டு விடுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்வாள். கை குவித்து அவர்கள் முன் தெண்டனிடுவாள். நாற்காலி கேட்டு வாங்கி உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அவனை விட்டுடுங்கடா என்று அதிகாரம் செய்வாள். அவர்களை சாட்டையால் அடித்து விரட்டுவாள்.

சங்கரனை மட்டும் இல்லை. விமானத்தில் பயணம் செய்த நூற்றிருபது பேரையும் சிறு குழந்தைகள், சிசுக்கள் கூட உண்டு எல்லாரையும் காப்பாற்றிக் கூட்டிப் போவாள் பத்திரமாக. எங்கே?

சங்கரனின் பெரிய அபார்ட்மெண்ட் இருக்கும் கல்காஜிக்கு. இதோ கல்காஜி வந்தாகி விட்டது. சங்கரனுக்கு அரசு கொடுத்த இல்லம். ரிடையர் ஆனபோது கூடுதல் பணம் அடைத்து அவர் பெயருக்கு உரிமை மாற்றப்பட்ட வீடு இது.

டாக்சியை அனுப்பி விட்டு காம்பவுண்ட் கதவைத் தள்ளித் திறந்தபோது வசந்தி என்ன சொல்வாள் என்று அவள் மனதில் கேட்டது – ’இங்க்லீஷ்காரி பாவாடை பாப்பாத்தி வந்துட்டா’.

வசந்திக்கு அரசல் புரசலாகத் தெரிந்த, சாரதாவும் சங்கரனும் வளர்த்திருந்த உறவு, இன்னும் சங்கரனால் சொல்லப்படவில்லை. சாரதாவும் குடும்ப நண்பர், குடும்பத் தோழியாகத்தான் இன்னும் இருக்கிறாள்.

ஆனால் இந்த உறவு கண்ணில் தெரிவதற்குப் பின்னால் வேறு பரிமாணம் எடுத்துள்ளது எல்லோருக்கும் புரிகிறது.

வசந்தியின் தம்பி பஞ்சாபகேசன் சாரதாவின் முதுகுக்குப் பின்னால் அவளைப் பாவாடை பாப்பாத்தி என்று கேலி செய்தது சாரதா காதுக்கு எடுத்துப் போகப்பட்டது சங்கரன் மூலம்.

’பாவாடை பாப்பாத்தியை பார்க்கப் போறீங்களா மாப்ளே?’ என்று, கணக்கே இல்லாத கேரளப் பயணங்களில் ஒன்றின்போது சங்கரனிடமே கேட்டிருக்கிறார் பஞ்சாபி என்ற பஞ்சாபகேசன் .

அம்பலப்புழையில், அந்தரங்கமான நேரத்தில் மனம் லேசாகிப் பறக்க ஜின்னும் ரம்மும் பருகிய முன்னிரவு நேரங்களில் ஒன்றின்போது சங்கரன் தெரிசாவை பாவாடை பாப்பாத்தி என்று அழைத்தார். அவளுக்குச் சிரிப்பு வந்தது. இன்னும் அப்படித்தான்.

சாரதாவை வாசலில் பார்த்ததும் பகவதி, ”சாரதா ஆண்ட்டி.. அப்பா அப்பா” என்று கேவியபடியே அவளை ஓடி வந்து கட்டிக் கொண்டாள். வாசலில் சத்தம் என்ன என்று பார்க்க வந்த வசந்தியும், ”சாரதா இதைப் பார்த்தேளா?” என்றபடி சாரதாவுக்காக இரண்டு கையும் விரித்து நீட்டினாள்.

இந்த நிமிடத்தில் அவளுக்கு இன்னொரு பெண், உறவோ நட்போ, அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது.

சாரதா வசந்தியை அணைத்துப் பிடித்து ”வசந்தீம்மா ஒண்ணும் கவலைப்படாதீங்க. பகவதியும் மருதுவும், கல்பாவும் சேர்ந்து உலகம் பூரா எல்லாக் கதவையும் தட்டிக்கிட்டிருக்காங்க. எல்லாம் சரியாகி விடும்” என்று தானே நம்பப் பிரயத்தனப்பட்டுக்கொண்டு ஆறுதல் சொன்னாள்.

உள்ளே இருந்து பிரம்மாண்டமான காபி மக்கில் காபி பருகியபடி வந்த பஞ்சாபி ஏதும் அச்சானியமாகச் சொல்வதற்குள், “பஞ்சு மாமா, தெரிசாம்மா மார்க்சிஸ்ட் எம்.பியை சந்திக்க வந்திருக்காங்க. கேரளத்திலும் அவங்க இருக்கறதாலே அம்பலப்புழையிலே காரியம் ஆகணும்னா தில்லியிலே வங்காளி எம்பியையோ பெங்காலி ஆபிசரையோ பார்த்தா போதுமாம்” என்றாள் பகவதி சிரிக்க முயன்றபடி.

பஞ்சாபி சார் அலட்டல் குறையாமல், ”எனக்கு ரொம்ப நல்ல ஃப்ரண்ட் ஜ்யோதிர்மய் மித்ரா இருக்காரு. அவர் இங்கே உட்கார்ந்து ஒரு ஃபோன் போட்டா அங்கே கேரளத்துலே எல்லாரும் ஆடுவாங்க. போன வாரம் கூட பார்லிமெண்ட் வாசல்லே பார்த்தபோது, சேர்ந்து டீ குடிச்சுட்டுத்தான் போகணும் பஞ்சு மோஷய்ன்னு ஒரே பிடிவாதம்” என்றார்.

“மாமா, ஜ்யோதிர்மய்.. மை காட்.. சும்மா இருக்கேளா”. பகவதி சிரிப்பை அடக்க முயன்று டவலால் துடைத்துக்கொண்டு அதில் முகம் மறைத்தாள்.

வாசலில் அம்பாசடர் கார் வந்து நிற்க, எந்த அமைச்சரோ கவனமாக நடந்து வீட்டுக்குள் வந்தார். மூன்று பெண்கள் நிற்பதால் யார் இதில் சங்கரன் சார் மனைவி என்று குழம்பி ஒரு தீர்மானத்தோடு சாரதா தெரிசாவைப் பார்த்து ”ரொம்ப வருத்தப்படுகிறேன் அம்மா உங்க கணவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை பற்றி” என்றார்.

தெரிசா ஒரு கணம் சந்தோஷப்பட்டு அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டு வசந்தியைக் காட்டி ”அவங்கதான் சங்கரன் மனைவி” என்று நல்ல ஆங்கிலத்தில் சொன்னாள்.

“ஓ அப்படியா, அவங்க சங்கரன் சார் மகள்னு நினைத்தேன்” என்று சாமர்த்தியமாகச் சொல்ல வசந்திக்கு அடுத்த ஒரு கணம் சந்தோஷம் வாய்த்தது.

பஞ்சாபி அவரோடு ஜன்மாந்திர உறவு என்பதுபோல் அந்நியோன்யமாகப் பேசிக்கொண்டு அவரை உள்ளே அழைத்துப் போனார். சீக்கிரம் வரக் கேட்டுக் கொள்ளப்பட்ட சமையல்மாமி பில்டர் காப்பி கலந்து டபரா டம்ளரில் எடுத்து வரும்போது மடிசார் தலைப்பை அடக்கமாகப் போர்த்திக்கொண்டு வந்து போனாள்.

“கடத்திண்டு போனதுக்கே இவ்வளவு பேர். ஏதாவது ஏடாகூடமா ஆகியிருந்தா முழு காபினெட்டும், லோக்சபாவும், ராஜ்யசபாவும் வந்திருப்பா” என்று அசட்டுச் சிரிப்போடு பஞ்சாபி சார் சொன்னது பகவதி முறைக்க நின்றது.

”இவர் எட்டாவது அமைச்சர் காலையில் இருந்து வந்ததுலே” என்றாள் பகவதி சாரதாவிடம். அமைச்சரின் கார் திரும்பப் போகும்போது அடுத்த அம்பாசிடர். இரண்டு அரசியல்வாதிகள்.

பகவதி பார்த்து விட்டு சாரதாவிடம் கிசுகிசுத்தாள் : ”ஒருத்தர் ஆளும் கட்சி எம்.பி. மற்றவர் எதிர்க்கட்சி. ரெண்டு பேரும் நண்பர்கள். பெட்ரோல் செலவு மிச்சம் பிடிக்க ஒண்ணா வந்திருக்காங்க போல இருக்கு”.

பகல் வரை வந்துகொண்டே இருந்தார்கள். விமானம் ஆப்கானிஸ்தான் போனதும் பயணிகளில் பத்து பேர் விடுவிக்கப்பட்டதும் செய்திகளாக வீட்டு ஹால் டெலிவிஷனில் வந்து போனது.

பஞ்சாபி என்ற பஞ்சாபகேசன் தூர்தர்ஷனை நம்பாமல் பிபிசி டெலிவிஷன் செய்திகளுக்கு சானல் மாற்றி இங்கிலீஷ் உச்சரிப்பு புரிபடாமலோ என்னவோ திரும்ப தூர்தர்ஷனிடம் தஞ்சமடைந்தார்.

”முழு மடையன் ஆனா கரோல்பாக்கிலே ரெண்டு வீடு, ஒரு கடை, லாஜ்பத் நகர் செண்ட்ரல் மார்க்கெட்டுலே இன்னொரு கடை”. சங்கரனை விடப் பல மடங்கு செழிப்பானவன் என்று சாரதாவிடம் சங்கரன் சொல்லியிருக்கிறார்.

முயங்கும்போது மச்சினன் சொத்து விவரமா சொல்வது என்று தெரிசா அவர் தோளில் கடித்துச் சிரிக்க, கலவி நேரத்தை நீடிக்கத்தான் என்று சொல்லி அவளுடைய பொய்க் கோபத்தை ரசித்திருக்கிறார். எல்லாம் நேற்றுக் காலையில் தான் நடந்த மாதிரி இருக்கிறது. ஆச்சு, முப்பது வருஷம்.

சமையல்மாமி காரசாரமாக ரசமும் வெஜிடபிள் குருமாவும் ருமாலி ரொட்டியும் சாதமும் சமைத்திருந்தாள். வசந்தி கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தாள். முடித்து வசந்தியோடும் பகவதியோடும் கான் மார்க்கெட் வழியாக இடதுசாரி கட்சி செண்ட்ரல் கமிட்டி ஆபீசுக்குப் போனாள் தெரசா.

ஜ்யோதிர்மய் மித்ரா இல்லாவிட்டாலும், ஆலப்புழ எம்.பியும் கொச்சி எம்பியும் இருந்தார்கள். அவர்களிடம் சங்கரனுக்காக உதவச் சொல்லி வேண்டினாள் தெரசா. சங்கரன் அம்பலப்புழை பூர்விகம் கொண்ட ரிடையர்ட் சீனியர் மத்திய சர்க்கார் அதிகாரி என்று மறக்காமல் சொன்னாள் வசந்தி.

கட்சியின் வேறு மாநில எம்பிக்கள் அங்கே டெலிவிஷனில் ஹைஜாக் செய்தியைத்தான் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். தில்லி முழுக்க, இந்தியாவே இந்த ஒற்றை செய்தியில் அமிழ்ந்திருப்பதை சாரதாவால் உணர முடிந்தது.

மார்க்சிஸ்ட் எம்பிக்களும், கட்சி கூட்டத்துக்காக கேரளத்தில் இருந்து வந்த முதல் அமைச்சர் ஈ.கே. நாயனாரும் அமைச்சர்களும் பிற்பகலில் பிரதம மந்திரி வாஜ்பேயை குழுவாகப் போய்ச் சந்திப்பது என்று திட்டமிட்டிருந்தார்கள்.

“ப்ளேன் ஹைஜாக்கோ? ஆய்கோட்டே, நிங்ஙள் கரயேண்டதில்ல பெங்கள. உடன் தன்னே எல்லாம் சரியாக்கும்”. நாயனாரின் நம்பிக்கை கொஞ்சம் போலவாவது இந்த மூன்று பெண்கள் மேலும் படர்ந்தது.

ராத்திரி சீக்கிரம் கவிந்து வர, எல்லா விளக்குகளும் மங்கலாக ஒளிதர, பனி மூட்டத்தில் மறைந்தும் வெளிப்பட்டும் தில்லி இருப்பை நிலைநிறுத்திக் கொண்டிருந்தது. வசந்தி கார் ஓட்டிக் களைத்துப் போக, தெரிசா கொஞ்ச நேரம் அந்த அம்பாசிடர் காரை ஓட்டினாள். பக்கத்தில் உட்கார்ந்து பகவதி வழிகாட்ட பின்சீட்டில் வசந்தி உறங்கி விட்டிருந்தாள்.

வீட்டில் கதவைத் திறந்ததும் அணைக்காமலேயே விட்டுவிட்டு வந்த டெலிவிஷன் மத்திய அமைச்சர் அளவில் தீவிரவாதிகளோடு பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக நல்ல வார்த்தை சொன்னது. விமானத்தையும் அதைச் சுற்றி துப்பாக்கி பிடித்து நின்ற தாலிபான்களையும் அவர்களோடு விமானம் கடத்திய தீவிரவாதிகளையும் திரும்பத் திரும்பக் காட்டிய தொலைக்காட்சி நடுவில் லாங்க் ஷாட்டில் பிரயாணிகளையும் காட்டியது. கறுப்பு பேண்டும் டையுமாக மங்கலாகத் தெரிந்த மூக்குக்கண்ணாடிக்காரர் சங்கரனாக இருப்பார் என்று வசந்தி சொல்ல, தெரிசா அடக்க மாட்டாமல் வசந்தியின் தோளை அணைத்தபடி அழுதாள்.

நம்பிக்கை தரும் விடியற்காலை நேரங்களும், அரசாங்க நடைமுறைச் சிக்கல்களில் சுவாசம் முட்டும் முற்பகல்களும் வந்து போயின. ஊரோடு நிலக்கடலை கொறித்தபடி தெருவில் நின்று, ’ஹைஜாக் செஞ்ச ப்ளைட்டுலே எல்லாரையும் போட்டுத் தள்ளிட்டாங்களாமே’ என்று பொய்ச் செய்தி பரப்பும் ஏதோ காரியாலய எழுத்தர்களும், ’தாலிபன்னை இந்திரா காந்தி அனுப்பினாளாமே’, என்று உருளைக்கிழங்கும் வெங்காயமும் வாங்கும்போது கடைக்காரன் பேசிய அரசியலை எதிரொலித்துப் பேசும், பிடரியில் கடுகெண்ணெய் பூசிய பெண்களும் செயல்பட, ஒன்றை அடுத்த மற்றொன்று என ஏழு நாட்கள் மெல்ல நகர்ந்தன.

தினம் சமையல்மாமி விதம்விதமாக சமைத்துப் போட்ட தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, மகாராஷ்ட்ரா, பஞ்சாபி சைவ உணவுகள், வாழ்க்கையில் நம்பிக்கை வைக்க சின்னதாகவாவது விருப்பத்தை ஏற்படுத்தின.

எட்டாம் நாள் காலையில் மிக ரகசியமாக வசந்தியிடம் மட்டும் செய்தி தெரிவித்துப் போக ஒரு உயர்நிலை அதிகாரி வந்திருந்தார். அவர் தெரிவித்த செய்தி – ’இன்றைக்கு சங்கரனும் மற்ற பிரயாணிகளும் விடுவிக்கப் படுவார்கள். தில்லிக்கு கந்த்ஹாரில் இருந்து தனி விமானம் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு வந்து சேரும். இது ராஜாங்க ரகசியம். யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்’. .

அதேபடிக்கு அரை மணி நேரம் ரகசியமாகப் பொத்தி வைத்து வசந்தி பகவதிக்கும் தெரிசாவுக்கும் சமையல்மாமிக்கும் மட்டும் தெரியப்படுத்தியபோது பிபிசி டெலிவிஷனில் தீவிரவாதிகளுடைய நிபந்தனைகள் எல்லாவற்றுக்கும் அரசாங்கம் சம்மதித்தது விரிவாக சொல்லப்பட்டது. அவர்கள் கேட்டபடி காவலில் இருக்கும் மூன்று தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டு கந்த்ஹாருக்குக் கூட்டி வரப்பட்டு கை மாற்ற அமைச்சரவை சம்மதித்ததாகவும் வெளியுறவு அமைச்சர் அவர்களை கந்த்ஹார் கூட்டிப்போவார் என்றும் செய்தி அடுத்து வெளியானது.

மூன்றரை மணிக்கு தில்லி பாலம் விமான நிலையத்தில் வானத்தைப் பார்த்தபடி அழுகையும் சிரிப்பும் நிச்சயமின்மை ஒலிக்கும் குரல்களுமாக நின்ற கூட்டத்தில் வசந்தியும், பகவதியும் தெரிசாவும் இருந்தார்கள்.

பிற்பகல் நான்கு மணி பதினேழு நிமிடம் ஆனபோது கந்தார் சிறப்பு விமானம் இறங்க இருப்பது அறிவிக்கப்பட்டது. குழந்தைகளோடு பெண்கள், வயதான ஆண்கள் என்று ஒவ்வொருவராக வர, விமானப் பயணம் முடிந்து கன்வேயர் பெல்ட்டில் ஊர்ந்து வரும் மூட்டை முடிச்சுகளை அடையாளம் கண்டு இழுத்துப் பக்கத்தில் வைத்துக் கொள்வது போல் வந்தவர்கள் கூடி நின்ற உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு அழைத்துப் போகப்பட்டார்கள். வாரக் கணக்காகக் குளிக்காமல், உடை மாற்றாமல், பரட்டைத் தலையும் சோர்ந்த கண்களும் நிதானமாக எடுத்து வைக்க முடியாதபடி நடுங்கும் காலடிகளுமாக இன்னும் பயம் தெளியாமல் சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி டிசம்பர் 24 காத்மாண்டுவிலிருந்து புதுதில்லிக்குப் பறந்திருக்க வேண்டிய விமானத்தின் பயணிகள் கடந்து போனார்கள்.

அப்பா அப்பா பகவதி ஓவென்று குரல் உயர்த்த, ஏன்னா ஏன்னா என்று வசந்தி பிரலாபித்தபடி கூடவே ஓடி சின்னச் சங்கரனைக் கட்டியணைத்துக் கொள்ள அவர் அணைப்பில் இருவரும் மனம் விட்டுக் கரைந்தபடி இருந்தார்கள். சாரதாவைப் பார்த்து தலையசைத்து பக்கத்தில் வரச் சொன்னார் சங்கரன். வசந்தி சாரதா தெரிசாவை இழுத்து அந்த மகா அணைப்புக்குள் சேர்த்துக் கொண்டாள்.

(விளையும்)

Series Navigation<< மிளகு அத்தியாயம் இருபத்திரண்டுமிளகு  – அத்தியாயம் இருபத்துநான்கு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.