சின்னச்சின்ன தாஜ்மஹல்கள்

மீரா அதை ஆரம்பிக்கவில்லை.  அவனும் தான். சந்திப்பதற்கு முன்பாகவே,  அது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் அதைக் குறித்து இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற போதிலும்,  ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு பயத்தில், அதைத்  தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள்.  இந்த உறவுக்கு ஒரு நிரந்தரத் தன்மையை கொடுத்து விட முடியாதா என்று இன்னொரு முறை மீராவிடம் கேட்டு விடலாமா என்கிற எண்ணம் அவனது தொண்டைக்குழி வரை அடிக்கடி வந்து  போய்க்கொண்டிருந்தது. ஆனால்,  முன்பைப்போலவே,  அவள் தவறாக நினைத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது?அதற்குப் பிறகுதான் அவர்களிடையே எவ்வளவு மன அழுத்தமும் இடைவெளியும் ஏற்பட்டுவிட்டது!

ஏனோ தெரியவில்லை,  தாஜ்மஹால் அவனுக்கு என்றுமே அழகாகத் தோன்றியதில்லை. வெயிலில்,  அதன் வெண்பளிங்கு கற்களின் கண்களைக் கூசவைக்கும்  பிரகாசத்தில்,  அவன் எப்போதும் அதற்கு முதுகை காட்டியவாறுதான் அமர்வது வழக்கம். மீராவையும் தானே அந்த பிரகாசம் கண்களைக் கூச வைக்கக்கூடும்? ஒருவேளை அவளுக்கு தாஜ்மஹால் அழகாக இருப்பதாகவே தோன்றியிருக்கும்.  நிழல் யமுனை நதிப் பக்கம் விழுந்திருக்கலாம். ஆனால்,  இந்தப் பக்கம் வெறும் வெய்யிலில் பிரகாசிக்கும் வெண்பளிங்கு மட்டுமே. பொசுக்கும் வெயிலில் கொதிக்கும் பளிங்குக் கற்களின் மேல்  நடக்க வேண்டியிருக்கும் என்கிற நினைப்பே அவனது உடலில்  படபடப்பை உண்டாக்கியது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.ஒரு வித தடுமாற்றத்துடன், ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்துக் கொண்டே, ” ஆம் அதே இடம், அதே நாம்” என்கிறார்கள். மீரா சற்றே பளிச்சென தெரிகிற மாதிரி தோன்றியது. ஆனால் அவன்…. அவன்தான் எப்படி மாறிவிட்டான்! எத்தனை முழு வாக்கியங்களை,  எத்தனை கேள்வி பதில்களை,  எதிரிலேயே உட்கார்ந்திருந்த போதிலும்,  மனதுக்குள்ளாகவே மீராவிடம் கூறியிருப்பான்! எவ்வளவு ஆர்வத்துடன் அவளது எதிர்வினைக்காகக் காத்திருந்திருப்பான்! ஆனால்,  இப்போதோ தயக்கத்துடன்,   வலிய வரவழைத்துக் கொண்ட புன்முறுவலுடன்தான் அவளை வரவேற்க முடிந்தது.  ஏனோ தெரியவில்லை, அந்தக் கணத்திலேயே,  அவனுக்கு இச்சந்திப்பின் பொருளற்ற தன்மை புலப்படத் தொடங்கிவிட்டது. அப்படி இதுவரையிலும் பேசாத எந்த புது விஷயத்தை அவர்கள் பேசி விடப் போகிறார்கள்! ஆறு மாதத்திற்கோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ தத்தம் ஷேம லாபங்களை தெரிவித்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

புல் தரையின் மீது ஒரு கையையும், தனது முட்டியின் மீது ஒரு கையையும் வைத்தபடி மீரா அவன் முன் அமர்ந்தி ருந்தாள். மிக மென்மையான வாத்தியம் ஒன்றை இசைப்பவள் போல அவளது விரல்கள் மேலும் கீழும் இலக்கின்றி அசைந்து கொண்டிருந்தன. மீரா இரும்பு வளையம் ஒன்றை  அணிந்திருந்தாள. சனியின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இருக்கக்கூடும். அவன் மெதுவாக தனது  விரலை அவளது சுண்டு விரலோடு இணைத்துக்கொண்டு,   தனது இரு கைகளுக்கும் இடையே அவளது கையை  பொதிந்து கொண்டான். பின்னர்,  பேச்சு மெள்ள மெள்ளத் தொடங்கியது.

விஜயின் கவனம் மீராவின் கழுத்துப்பகுதியில் ரவிக்கைக்கு கீழே ஊர்ந்து கொண்டிருந்த,  பெரிய மீசைகள் கொண்ட ஒரு பூச்சியின் மீது படிந்தது.  தானே அதை அகற்றி விடலாமா அல்லது அவளிடம் சொல்லலாமா என்கிற தயக்கம் ஒருகணம் ஏற்பட்டது.  முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொண்டு,  புதர் மண்டியிருந்த செடிகளின் ஊடேதெரிந்ந நுழைவாயிற் படிகளைப் பார்க்க ஆரம்பித்தான். அதன் மேற்புற வளைவு மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. பார்வையை திருப்பி,  சற்று கூச்சத்துடன்,  கேரம் போர்டின் ஸ்டிரைக்ரை நகர்த்தும் லாவகத்துடன்,   அந்த பூச்சியை தன் விரலால் சுண்டி எறிந்தான். படிந்திருக்கும் அழுக்கை அகற்றுபவன் போல,  அந்த இடத்தை  விரலால் சுத்தம் செய்தான். இது குறித்த எந்த கவனமும் இல்லாமல் மீரா தன் தோழியின் திருமண விருந்துக்கு வந்திருந்த விருந்தினர்களை பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் ஒன்றும் பேசவில்லை. விஜயின் கரத்தை அகற்றவும் இல்லை.  விஜய், சுற்றும்முற்றும் பார்த்தவாறே அவளது காது மடல்களின் கீழே கைகளை வைத்து,  அவளை தன் அருகே இழுக்க முயற்சித்தான். மீரா இந்தக் கணம் கண்டிப்பாக சம்பவிக்கும் என்று முன்கூட்டியே அறிந்திருந்து,  அதற்காகவே காத்திருந்தவள் போலத் தோன்றியது.   அவளது நெற்றியில் கூர்மையான கோடுகளின் நிழல்கள் எழும்பி, பின் மெல்லிய புன் சிரிப்பு ஒன்று அலையெனப் பரவியது. அசாதாரணமான,  விரிந்து சுருங்கும் ஒளியும் நிழலும் மாறி மாறி  விளையாட்டு காட்டுகிற,  சீண்டுகிற புன்னகை. பாலைவனத்தில் தண்ணீருக்காக அலைந்து திரிபவன்,  தண்ணீர் பானையை இரு கைகளிலும் ஏந்தி தன் தாகத்தை தீர்த்துக் கொள்வதைப் போல,  இந்த புன்னகையை,  பைத்தியக்காரத்தனமான ஆவேசத்துடன் கடகடவென குடித்துக்கொண்டேயிருந்து,  பின் தரையில் கால் பாவாமல் விழுந்து விடவேண்டும் போல விஜய்க்கு ஒரு கணம் தோன்றியது.  அவளது மெல்லிய உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. அந்த போதை ததும்பும் கணத்திலும்,  மீரா தனது கண்ணாடியை கழற்றினால் நன்றாக இருக்கும் என விஜய்க்கு தோன்றியது. கண்ணாடி உடைந்து விடக்கூடும். இரண்டு மூன்று பசும் நீரூற்றுகள் போல நின்றுகொண்டிருந்த மரங்களுக்கிடையே இரண்டு முழு தாஜ்மஹால்கள் அவளது கண்ணாடியில் பிரதிபலித்துக் கொண்டிருந்ததை அவன் அப்போது பார்த்தான். யானை தந்தத்தால் செய்தது போன்ற  இரு வெள்ளை நிற சிறு பொம்மைகள்.

 தாஜ்மஹால் அவனுக்கு ஒருபோதும் பிடித்ததில்லை. இதற்கு எந்த காரணமும் இல்லை. தேவைப்படாத வயோதிகக் காவலாளியைப்போல,   தாஜ்மஹால், பின்னாலிருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருப்பது போல அவனுக்குத் தோன்றியது. பேச்சு மும்முரத் தில்,  அவன் அதை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தபோதிலும்,  பல்லிடுக்கில் சிக்கிய துணுக்கைப் போல,  மிகப்பெரிய,  பிரம்மாண்டமான அதன் நிழலில் தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பது அவனுக்கு திடீரென நினைவுக்கு வந்தது. இத்தனை பெரிய கட்டிடத்தின் மொத்த அழகையும் அவனால் ஒருபோதும் கற்பனைகூட செய்து பார்க்க முடிந்ததில்லை. ஒவ்வொரு பகுதியாக பார்த்தாலும் கூட, அது அவனுக்கு ஒருபோதும் அழகாகத் தெரிந்ததில்லை. மக்கள் தங்கள் மனம் ஒப்பிய கற்பனைகளையும் கவித்துவத்தையும் அதன் மீது வலியத் திணித்து மகிழ்ந்து கொண்டிருக்கக்கூடும். வாய்ப்பு  கிட்டும்போது விமானத்திலிருந்து அவன் தாஜ்மஹாலின் பூரண சவுந்தரியத்தைக் காண முயற்சி செய்வான். அப்படி பார்க்கையில், இதுவரை பார்த்திராத பல்வேறு  காட்சிகள் தோன்றக்கூடும். அந்த சூழலில் ஏதேனும் ஒன்று விசேஷமாக புலப்படவும் கூடும். ஆனால் இந்த மூக்குக் கண்ணாடியின் மீது,  வெயிலில் ஜொலித்துக் கொண்டிருக்கும் தாஜ் …..அவனது கிளர்ச்சி அந்த நொடியிலேயே அணைந்து போனது.  நீண்ட பெருமூச்சு விட்டவாறு மெதுவாக அவன் தன் கைகளை அகற்றிக்கொண்டான். 

 “வேண்டாம். இங்கு வேண்டாம். யாரேனும் பார்க்கக்கூடும்”

என்ன ஆயிற்று இவனுக்கு?

திடீரென மீராவுக்கு நினைவு திரும்பியது. பொங்கிவரும் வெட்கத்தையும் சங்கடத்தையும் மறைக்கும் வகையில்,  இங்குமங்கும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. பக்கத்தில் இருந்த சிகப்பு நிற மதிற்சுவரின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டிருந்தனர். உயரமான கொத்தளச் சுவரைச் சுற்றி குரங்கு போல ஏறி  ஓடுவது அவர்களுக்கு பழக்கமாகி யிருக்கும். புல்வெளியில் இருக்கும் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலையாட்கள் சிலரையும் கூட இப்போது காண முடியவில்லை. ஒருவேளை  சாப்பிடப் போயிருக்கக் கூடும். மீரா புடவையை சரி செய்து கொண்டாள். விஜய்,  செய்ய ஏதுமின்றி,  புல்லில் பூத்திருந்த பூ ஒன்றை பறித்து அதைத் தன் கண்களின் முன் வைத்து சுழற்றி கொண்டிருந்தான். மீரா கண்ணாடியை கழற்றி,  லேசாக ஊதி,  புடவைத் தலைப்பால் துடைத்தாள். மயிர்க் கற்றைகளை காதின் பின்புறம் ஒதுக்கினாள். கண்ணாடியை அணிந்து கொண்டு மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தை பார்த்தாள்.

இருவருக்கிடையேயும் கனத்த மௌனம் நிலவியது. அந்த மௌனம்,  அவர்களுக்கிடையே இதுவரையிலும்  உயிர்த்திருந்த மென்மையான ஏதோ ஒன்றை நசுக்கி விடக்கூடும். அதற்காகவேனும் அவர்கள் பேசிக் கொள்ளவேண்டியது அவசியம் என விஜய் நினைத்தான். கையிலிருந்த புல்லால் முக்கோணத்தையும் சிலுவையையும் செய்தவாறு,  வார்த்தைகளைத் திரட்டி,  “போகலாமா,  நேரமாகிவிட்டது” என்றான்.

எதையோ சொல்ல வந்து பாதியில் நிறுத்தியது போலவோ,  அல்லது அவன் சொல்ல விரும்பியும்  முடியாமல் போனதை கேட்கும் ஆர்வத்துடனோ,  மீரா லேசாக தலையசைத்தாள்.  மௌனம் தொடர்ந்தது. இருவருமே எழுந்திருக்க முயற்சிக்வில்லை. தன்னுடைய ஷூ லேசை கட்டியவாறு விஜய் எழுந்து நின்று,  பத்திரிகை தாளில் குவித்து வைத்திருந்த வேர்க்கடலை தோலிகள் மற்றும் ஆரஞ்சு பழத் தோலிகளை தூர வீசினான். உட்காருவதற்காக விரிக்கப்பட்டிருந்த கைக்குட்டையை  மடித்து எடுத்துக்கொண்டபின்,   இருவரும் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

கையில் கடிகாரம் இருந்த போதிலும்,  மணி பார்க்க சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு,  மணி சுமார் மூன்று இருக்கலாம் என அனுமானம் செய்தான். மூன்று மணியாகியும் கூட வெயில் கடுமையாக இருந்தது. ஓரிருமுறை கழுத்திலும் காதுகளுக்கு பின்னாலும் துளிர்த்திருந்த வேர்வையை துடைத்துக் கொண்டான். வரும்போது மணி பன்னிரண்டு ஆகி இருந்தது. சந்திக்கப்போகும் நேரத்தை கூட அவர்கள் எவ்வளவு வினோதமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்று யோசித்தபோது அவனுக்கு சிரிப்பு வந்தது.

இப்போதும் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டான்.  பன்னிரண்டு மணி… ஜூன் மாதம்… தாஜ்மஹால். அவன் முன்னதாகவே வந்து காத்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது மனம் அமைதி இழந்து தவித்துக் கொண்டிருந்த.து. நேரம் ஏன் இவ்வளவு மெதுவாகச் செல்கிறது? வெகு நாட்களாக சுத்தம் செய்யாததால்,  ஒருவேளை கடிகாரம் மெதுவாக ஓடுகிறதோ? இன்னும் அவள் வரவில்லையே? பெண்களின் இந்த பழக்கம் தான் எரிச்சல் மூட்டுகிறது. ஒருபோதும் அவர்கள் நேரம் காப்பதே இல்லை. காக்க வைப்பதில் அவர்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ! அவன் வேண்டுமென்றே,  அவள் வரும் வழியிலி ருந்து முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தான். திடீரென திரும்பி பார்க்கையில்,  அவள் வந்து கொண்டிருக்க கூடும் என நம்பினான். ஆனால் இரண்டு முறை அப்படி திரும்பி பார்த்தும் கூட அவள் வருவதாகத் தெரியவில்லை. அவனுக்கு தன் மீதே சிரிப்பு வந்தது. படியிறங்கி வருகிற மூன்று நபர்களை அவன் பார்ப்பான். அந்த மூவரில் ஒருத்தியாக அவள் இல்லாவிட்டால், அவன் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்து விடுவான். அவள் வருகிறபோது வரட்டும்! ஒன்று…இரண்டு… மூன்று. ஒருவேளை அடுத்தது அவளாக இருக்குமோ. வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். அவள் வரும் வரையில்,  இந்த மூன்று வருடங்களில் அவள் எப்படி மாறி இருப்பாள் என கற்பனை செய்துக் கொண்டிருக்கலாம். எந்த மாதிரியான உடை அணிந்து கொண்டு இருப்பாள்? ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது என்ன செய்வார்கள்? ஒருவேளை உணர்ச்சிவசப்பட்டு எதுவும் பேசத்தோன்றாமல்,  ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொள்வார்களோ? அப்படி நடக்க வாய்ப்பில்லை,  இருந்தாலும், யார் கண்டது!

ஒருவழியாக, அவள் வருகையில்,  அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடமிருந்து பார்வையை அகற்ற மிகவும் முயற்சித்து, எதேச்சையாக திரும்பிப்பார்த்து அவளைச்  சந்திப்பதில் கிடைக்கக்கூடிய சிலிர்ப்பை உணர முயற்சித்தான். எனினும்,  அவன் அவளைப் பார்த்தவாறே,  சம்பிரதாயமான குரலில், ” நமஸ்தே மீரா ஜி” என்றான். அவள் வெட்கத்துடன்  சிரித்தாள். வெயிலில் கன்னங்கள் சிவந்திருந்தன. பிறகு,  அவர்கள்,  உணர்ச்சிக் கொந்தளிப்போ,  படபடப்போ எதுவும் இல்லாமல்,  தினந்தோறும் சந்தித்துக்கொள்பவர்களைப் போல,  புல்தரையில் அமர்ந்து கொண்டனர்.

“ஒருவேளை நீ வர மாட்டாயோ,  மறந்திருப்பாயோ என நினைத்தேன்.”

 அதெப்படி, நீங்கள் எழுதியிருந்தது எப்படி மறக்கும்? என்ன,  சந்திக்கத் தேர்ந்தெடுத்த நேரம் தான் கொஞ்சம் விசித்திரமானது.”

“ஆமாம் குளிர்கால பௌர்ணமி நிலவு பொழியும் இரவு நேரம் இல்லை தான்” தன்னுடைய பரிகாரத்தின் பொருளற்ற தன்மையை உணர்ந்து,  சற்றே தீவிரமான குரலில், “இந்த நேரத்தில் இங்கு தனிமை சற்று அதிகமாக இருக்கும்” என்றான்.

“உண்மையிலேயே கொஞ்சம் வித்தியாசமான நேரம்தான்” மீராவுடன் திரும்பிக் கொண்டிருக்கையில் –  மதிய வெயிலும் காதல் வயப்பட்ட இரு நபர்களும் -என்ற சொற்றொடர்  மனதில் வந்து போனது.  “காதல் வயப்பட்ட இரு நபர்களும்” இதை அவன் மறுபடியும் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டான்.உண்மையில், இது காதல் தானா? பல வருடங்கள் கழித்து சந்தித்தும்,  பேசுவதற்கான விஷயங்கள் தீர்ந்துபோன இரு நண்பர்கள். வெள்ளைப் பளிங்கின் மீது வெயில் பட்டு கூசியதால்  முதுகைத் திருப்பிக்கொண்டாயிற்று. அவனுக்கு எரிச்சலாக இருந்தது. யாருடைய சாபத்தால் எங்கள் ரத்தம்,  எந்தவித ஆசா பாசமுமின்றி, இப்படி குளிர்ந்து போனது? எங்களுக்கு என்ன ஆயிற்று? உணர்ச்சிக் கொந்தளிப்போ, வேட்கையோ,  படபடப்போ தாபமோ ஏன் ஏற்படவில்லை? அப்படி என்னதான் மாறி விட்டது? மீரா முன்பைவிட சற்று நிறமாக இருக்கிறாள்…. உடலும் மெருகேறி இருக்கிறது…

இந்த அழுத்தமும் இறுக்கமும் எதனால் என்று,  திரும்பும்போது கூட அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருவரும் புற்களின் நடுவே பதிக்கப்பட்டிருந்த சிவப்பு கற்களின் மீது  நடந்து வாயில் வரை செல்வார்கள். அங்கு நின்று கொண்டிருக்கும் காவல்காரர்கள் மற்றும் வழிகாட்டிகளின் துளைக்கும் பார்வைகளை வலுக்கட்டாயமாகத் தவிர்த்தபடி, பிரதான சாலையில் இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் குதிரை வண்டியிலோ அல்லது ரிக்ஷாவிலோ ஏறி அமர்ந்து கொள்வார்கள். தெருமுனை திரும்பி யதுமே அனைத்தும் பின்னாடியே நின்றுவிடும்.

 நாளை அவன் எழுதுவான்…” என் அன்பான மீரா,  நேற்று என்னுடைய நடத்தையைப்  பார்த்து உனக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கக்கூடும். வருத்தமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால்…. ஆனால்….

பின்னர் கண்ணாடியில் பிரதிபலித்துக் கொண்டிருந்த தாஜ் மஹால்கள் அவனது கண் முன் விரிந்தன ” உன் கண்களில் நீந்தும் இரு தாஜ்மஹால்கள்”எத்தனை அழகான வரி! (இது என்ன, புதுக் கவிதை போலிருக்கிறதே) டாகூர் பார்த்திருந்தால் “காலத்தின் கன்னங்களில் உருண்டு வந்த கண்ணீர் துளிகள் ” என்று எழுதியிருக்க மாட்டான். மாறாக, “கன்னங்களில் உருண்டோடிய கண்ணீர் துளிகளில் எட்டிப்பார்க்கும் அழகான இரு வெள்ளி மீன்களின் நிழல்கள் என்று எழுதி இருப்பான். ஆனால் மீராவின் கண்களில் ஈரம் கூட இல்லை. எவ்வளவு இயந்திரத்தனமாக மாறி விட்டோம் நாம் இந்நாட்களில்! நாளை எழுதப்போகும் கடிதத்தில் அவன் எழுதுவான் – “ஹக்ஸ்லியை நான் காப்பி அடிக்கவில்லை. இருப்பினும்,  ஏனோ தெரியவில்லை எனக்கு தாஜ்மஹால் ஒருபோதும் அழகாகத் தெரிந்ததில்லை. ஆனால் முதல் முறை நான் உன் கண்களில் தாஜ்மஹாலின் பிம்பத்தைப் பார்த்தபோது,  பார்த்துக் கொண்டே நின்று விட்டேன். கடந்த நாட்களில் நிகழ்ந்த அசாதாரணமான விஷயம் ஒன்று எனக்கு அந்த நொடியில் நினைவுக்கு வந்தது.”

 அந்தக் கணம், ஏன் அவன் மிகவும் வருத்தமாக உணர்ந்தான் என்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. மறக்கக் கூடிய விஷயமா அது! எனக்கு அது ஒரு சாதாரண விஷயம்தான் என்று அவன் நாளை எழுதக்கூடும். யாரிடம் மனதோடு பேசிக் கொண்டிருக்கிறானோ,  யாருக்கு கடிதம் எழுத போகிறானோ அந்த நபர்  அவனோடு கூட நடந்து வந்துக் கொண்டிருக்கும்  இந்த மீரா அல்ல. அவள் வேறு யாரோ…. வெகு தொலைவில் இருப்பவள். நீ……ண்ட தொலைவில். அந்த மீரா தான் அவனது உண்மையான சொந்தமும் தோழியும். இவள்….இவள்… இவளை எப்போது சந்திக்க நேர்ந்தாலும், இப்படித்தான் வருத்தமடைந்துவிடுகிறான். ஆனால் அவனது கற்பனை மீராவை சந்திப்பதில் இருக்கும் ஈர்ப்பு,  அவனை இவளிடம் இழுத்துக் கொண்டு வந்து சேர்கிறது. இவளிடம் அவனுக்குப் பிடிக்காத/எரிச்சல் மூட்டுகிற பல விஷயங்கள் இருந்தன. அவை என்னவென்று அவன் யோசிக்க ஆரம்பித்தான். உதாரணத்துக்கு,  மீரா ஏன் கற்களின் மீது கால்வைத்து நடப்பதில்லை?   இடையிடையே ஏன் புற்களின் மீது நடக்கிறாள்?

இவற்றுக்கு நடுவே தான்,  இருவரும் அடுத்தவர் சொல்லப்போவதை கவனமாக கேட்க தயாராக இருந்தார்கள். அவனுக்குள் அப்போது  ஓடிய எண்ணம், உண்மையிலேயே அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. அவர்களுக்கு வயதாகும்போது, நாற்பது-ஐம்பது வயதாகும் போது,  தாங்கள் இளமையில் செய்த முட்டாள்தனங்களை எல்லாம் நினைவுகூர்ந்து,   எப்படியெல்லாம் சிரிப்பார்கள்! எப்படி  யார் கண்களிலும் படாமல் ஒளிந்து ஒளிந்து தாஜ்மஹாலில் சந்தித்தார்கள்! 

அது நடந்து நான்கைந்து வருடங்கள் ஆகியிருக்கும்…… அவன் மனதில் கடிதம் ஒன்று உருப்பெற்றுக் கொண்டிருந்தது. இதையெல்லாம் அவன் கடிதத்தில் எழுதப்போவதில்லை. இருப்பினும், வெறுமனே, வரிசைக்கிரமமாக நிகழ்வுகளை நினைவுகூர முயற்சித்துக் கொண்டிருந்தான் அவன், தேவ், ராகாஜி, முன்முன் ஆகியோர் இதே போலத்தான் மௌனமாக திரும்பிக் கொண்டிருந்தார்கள். துயரம் நிறைந்த துரதிர்ஷ்டமான மாலைப் பொழுது அது. அதனால் தானோ என்னவோ, தரையில் நிழல்களும் நீண்டு விழுந்திருந்தன.

நன்றாக நினைவிருந்தது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமாக இருக்கலாம். கல்லூரியிலிருந்து திரும்பி வந்து தேனீர் குடிக்க எண்ணி கோப்பையை வாயில் வைத்த அதேசமயம்,   யாரோ  ” உங்களை யாரோ அழைக்கிறார்கள்” என்று கூறினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தவாறே அவன் வெளியில் வந்தான்.

“நீங்களா?”

“என்னை அடையாளம் தெரியவில்லையா?”

“ஐயா, உங்களை அடையாளம் தெரியாமல் இருக்குமா? உண்மையில்,  அவனுக்கு அந்த நபரை அடையாளம் தெரிந்தி ருக்கவில்லை. கட்டாயம் எங்கோ பார்த்திருக்கிறான். ஒருவேளை கல்கததாவில் பார்த்திருக்கலாம். இப்படி பலமுறை நடந்திருக்கிறது. இருப்பினும் பேச்சைத் தொடர்கையில் ஏதாவது ஒரு பிடி கிட்டி அந்த நபரை அடையாளம் கண்டு கொள்ள முடியுமா என அவன் முயற்சித்தான். “உள்ளே வாருங்கள்” என்று அழைத்தான்.

“இல்லை மிஸ்டர் மாத்துர். உட்கார நேரமில்லை. வெளியில் என் மனைவியும் குழந்தையும் காத்திருக்கிறார்கள். அவர் மன்னிப்பு கேட்கிற தொனியில்,  “நீங்கள் ஏதேனும் முக்கியமாகச் செய்து கொண்டி ருந்தீர்களா?” என்று கேட்டார்.

“ஐயோ,  அவர்களை ஏன் வெளியே நிற்க வைத்துவிட்டு  வந்தீர்கள்? இங்கே கூட்டி வந்து இருக்கலாமே!”

“நாங்கள் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வந்தோம். அப்போதுதான் நீங்களும் இங்கே இருப்பது நினைவுக்கு வந்தது. வீடு சரியாக நினைவில்லாததால், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இங்குமங்கும் சுற்றும்படியாகிவிட்டது. எப்படியோ உங்களை சந்தித்துவிட்டேன். இப்போது உங்களுக்கு வேலை எதுவும் இல்லையென்றால்… நாங்கள் இன்றே திரும்ப வேண்டும்.”அவர் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். செருப்பை மட்டும் அணிந்து கொண்டு  புறப்படுங்கள்” என்றார்.

தெரு முனையில் கார் நின்றுகொண்டிருந்தது.  அதன் பின் பக்கக் கதவு திறந்திருந்தது. அடர் பச்சை நிற பெங்களூர் பட்டுப்புடவை அணிந்த ஒரு பெண்,  மட்கார்டின் மீது சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தா.ள். பெங்காலிப் பெண்களைப் போன்ற பெரிய கொண்டையும் அதன் நடுவே எண்கோண வடிவத்தில் வெள்ளி நட்சத்திரங்கள் பொதிந்த பதக்கத்தையும் அணிந்திருந்தாள். மட்கார்டின் மீது,  சுமார் நான்கு அல்லது ஐந்து வயது இருக்கக்கூடிய சிறுவன் ஒருவன்,  நழுவிக் கொண்டிருக்கும் காலணியைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். இருகைகளாலும் அவனைத் தாங்கிப் பிடித்தபடியே மட்கார்டினா மீது படிந்திருந்த தூசியில்,  அவனது சின்னஞ்சிறிய விரலைப்  பிடித்து T A J என எழுத வைத்துக்கொண்டிருந்தாள்.செருப்பு சத்தம் கேட்டு திரும்பிய அவள்,  வரவேற்கும் விதமாக புன்னகைத்தாள். சிறுவனை பத்திரமாக இறக்கி விட்டடபின்,  கரங்களைக் கூப்பி,  “பாருங்கள்,  உங்களிடம் முன்பே வாக்குறுதி அளித்திருந்தது போலவே..”

“இந்த பெரிய மனிதர் வரத் தயாராகவே இல்லை. நான் தான் வற்புறுத்தி..” அவர் இடைமறித்தார். பின்னர், ” ராகா,  வண்டியில்  அமர்ந்து கொள். இருட்டி விட்டால் எதையும் சரியாகப் பார்த்து அனுபவிக்க  முடியாது” என்றார்.

ராகா…ராகா…லேசாக நினைவுக்கு வந்தது. டிரைவருக்கு அருகே அமர்ந்ததும்,  அவரது பெயரை நினைவுபடுத்தும் குறிப்பு ஏதேனும் கிடைக்குமா என இங்குமங்கும் பார்த்தான். 

“எப்படி இருக்கிறீர்கள்? வெகுநாட்கள் கழித்து சந்திக்கிறோம். கல்கத்தாவில் சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதல்லவா? அன்றிரவு உங்களை மிகவும் தாமதப்படுத்தி விட்டோம்.” தங்க நிறம். காதுகளில் வளையம். பட்டும் படாத லேசான உதட்டுச்சாயம். முந்தானை காற்றில் பறக்காதிருக்க கதவின் மேல் முழங்கையை வைத்து தடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆம்!  இப்போது நினைவுக்கு வந்துவிட்டது! அவன் இவர்களை சந்தித்ததே ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான். நியூ மார்க்கெட்டில் ஒரு ஹோட்டலில், பொழுதுபோக்காக,  தத்தம் இசைத்திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர்களை ரசித்தவாறு அவன் அமர்ந்தி ருந்தான். பிறகு,   என்ன தோன்றியதோ, அவனும் இரவு வெகுநேரம் வரை மௌத் ஆர்கனில்  திரைப்படபட பாடல்களை வாசித்துக் கொண்டிருந்தான். அந்த சிறிய மேடையிலிருந்து  இறங்கி,  எந்த மேஜையில் அவன் அமர்ந்தானோ, அதே மேஜையில் தான் இவர்களும்… ராகாவும் மிஸ்டர் தேவம் அமர்ந்திருந்தனர்.

” நீங்கள் மிகவும் அருமையாக வாசித்தீர்கள். நன்கு பயிற்சி செய்திருக்கிறீர்கள்” என்றார் தேவ். மவுத் ஆர்கனைத் துடைத்து பாக்கெட்டுக்குள் வைக்கையில், ராகாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அவனை ஆச்சரியப்படவைத்தது.

“உங்கள் தேநீர்  இன்னேரம்  ஆறி விட்டிருக்கும். போகட்டும். இன்னொரு தேநீர் கொண்டு வரச் சொல்கிறேன்” என்றார் தேவ்.

அவன் மறுத்தும் தேநீர் வந்தது. “விடுமுறையில் ஊர் சுற்றிப்பார்க்க வந்துள்ளீர்களா? கல்கத்தா உங்களுக்கு பிடித்ததா? ஆமாம். பம்பாயோடு ஒப்பிட்டால் கல்கத்தா அழுக்கு தான். ஆனால் ஒருமுறை பழகிவிட்டால் பிறகு விட்டுப் போவது கடினம் என்றார் தேவ். பின்னர் லோயர் சர்க்குலர் ரோடிலிருந்த அவர்களது ஃபிளாட்டிற்கு அழைத்துச்சென்றார்.  இரவு வெகுநேரம் வரை  உணவும், காப்பியும் சங்கீதம் குறித்த சம்பாஷணைகளும்  தொடர்ந்தன. ராகாவுக்கு சித்தார் வாசிப்பது பிடிக்கும். ஏதோ ஒரு வெளிநாட்டு கம்பெனியில் மேலாளர் பதவியிலிருக்கும் தேவுக்கோ மேலைநாட்டு சங்கீதம் தான் இஷ்டம்.  குறிப்பாக ஸிம்ஃபனி வகை சங்கீதம் என்றால் உயிர். அவனது மவுத் ஆர்கன் இசைக்குப் பிறகு ராகா சிதார் வாசித்தாள். பிறகு தேவ் மிகவ அழகான பிளாஸ்டிக் உரையிலிருந்து வெளிநாட்டு இசைத்தட்டுகளை எடுத்தார். அரைமணிநேரம் செல்லக்கூடிய ஒவ்வொரு இசைத் தட்டிலும் மூன்று பாடல்கள். அவனுக்கு அந்த இசை அவ்வளவாக புரியாவிட்டாலும் உரையின் மீது எழுதப்பட்டிருந்த இசைக் குறிப்பையும் இசை கலைஞரின் படத்தையும்  பார்த்துக் கொண்டிருந்தான். செகாவ்ஸ்க்கி என்கிற பெயர் அடிக்கடி காதில் விழுந்தது. ஒவ்வொரு இசைத்தட்டும் நாற்பது ஐம்பது ரூபாய் விலை. நடுநடுவே, “கண்டிப்பாக ஆக்ரா வருவோம். குழந்தையாய் இருந்தபோது ஒரு முறை பார்த்தது. மனதில் இருக்கும் சித்திரத்தோடு இப்போதுள்ள உருவம் பொருந்தாமல் கூட போகலாம். திருமணத்திற்கு பிறகு ஒரு முறை வந்து பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் வெகுநாட்களாகவே தோன்றி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விடுமுறையிலும் இவள் என்னை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறாள். இவள் தாஜ்மஹாலை பார்த்ததில்லை. இவளுடைய குடும்பத்தினரும் இதே ஊர் தான்.அவன் தங்கியிருந்த விவேகானந்தா ரோடு வரையிலும் தன் காரிலேயே அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். வழியெங்கும் இறைஞ்சும் சிதார் இசையும்,  சோகத்தில் தோய்ந்து கமறும் சிம்ஃபனி இசையும் அவனை வாட்டின.

எத்தனை வினோதமான சந்திப்பு! எத்தனை மகிழ்ச்சியான தம்பதிகள்! இவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. குழந்தை பிற்பாடு வந்திருக்கலாம். பெயர் “முன்முன்”.

“பொருட்காட்சியில் எங்கள் கம்பெனி ஸ்டால் வைத்திருக்கிறார்கள். அதனால் நாங்கள் தில்லி வந்தோம். இவ்வளவு அருகில் வந்து விட்டு தாஜ்மஹாலை பார்க்காமல் திரும்புவது நன்றாக இருக்காது என நினைத்தோம். உங்களையும் வீணாக இழுத்துக் கொண்டு வந்து விட்டோம். உங்களுக்கு  வேறு வேலை ஏதும்..”

“இல்லை இல்லை” அவசரமாக மறுத்தான். மற்ற எல்லா விஷயங்களும் அவனுக்கு முழுமையாக நினைவு வந்துவிட்டபோதிலும் மிஸ்டர் தேவின் முழுப்பெயர் நினைவு வரவில்லை. எப்படி தெரிந்து கொள்வது?

மிகவும் தவிப்பாக இருந்தது. உங்களுடைய ஞாபகசக்தி மிக பிரமாதம் என்றான் விஜய். அதேசமயம் அந்த சந்திப்பில் அப்படி எதுவும் முக்கியமான விஷயம் நடந்துவிடவில்லை என்றும் அவனுக்கு தோன்றியது.

“நாங்கள் எப்போது தாஜ்மஹாலை பற்றி பேசினாலும் கண்டிப்பாக உங்கள் நினைவு வரும். சொல்லப்போனால், நாங்கள் தாஜ்மஹாலைக் குறித்து பேசாத நாளே கிடையாது”. பிறகு ராகாவைப் பார்த்தவாறு தாமாகவே சொன்னார் “இன்று எங்களது ஏழாவது திருமண நாள். நீங்கள் வரும்போது முன் முன் பிறந்திருக்கவில்லை”

“முன் முன்,  நீ மாமாவுக்கு வணக்கம் தெரிவிக்கவில்லையே. இன்று என் அம்மா அப்பாவின் ஏழாவது திருமண நாள் என்று மாமாவிடம் சொல்” ராகா முன் முனின் இரு கரங்களையும் சேர்த்துப்பிடித்து வணக்கம் தெரிவிக்க வைத்தாள். “ரொம்ப குறும்புக்காரன் நாள் முழுவதும் இவன் பின்னாடி அலைந்து இவனைக் கண்காணிப்பதிலேயே எனக்கு பொழுது போய் விடுகிறது. எதையாவது செய்துவைத்தால்  என்ன செய்வது?”

 “என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்” என்றான் விஜய். இருப்பினும்,  அனைத்தையும் தாண்டி, ஏதோ ஒரு அழுத்தம்,  கண்ணிற்கு புலப்படாத பணியை போல கனமான போர்வையென அவர்கள் மீது படர்ந்திருந்தது போல அவனுக்குத் தோன்றியது. அவனால் பொறுக்க முடியவில்லை. “உங்களைப் பார்த்தால் சோர்வாக இருப்பது போல தெரிகிறது. உங்கள் உடல்நிலை ஏதேனும்….”

“அப்படியெதுமில்லையே” என்றவாறே இரண்டு கைகளையும் தூக்கி தலையில் அணிந்திருந்த க்ளிப்பை சரி செய்துகொண்டு,  இயல்பாக புன்னகைக்க முயற்சி செய்தபடியே, “வண்டியில் உட்கார்ந்தவாறே ஐந்து மணிநேரப் பயணம். ஒரு மணிநேரம் உங்களைத் தேடி வேறு களைத்து போனோம்” என்றாள்.

“வாஸ்தவம் தான். குறைந்தபட்சம் நீங்கள் உள்ளே வந்து முகம் கை கால்களை கழுவிக்கொண்டு சோர்வை அகற்றி கொண்டிருக்கலாம்”

“அதனால் என்ன! மேலும் இன்றைக்கே திரும்ப வேண்டும் அல்லவா?”

பிறகு நாங்கள் அனைவரும் நிதானமாக தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தோம். முன் முன்னின் ஒரு கையை தேவும் மறு கையை ராகாவும் பிடித்துக் கொண்டிருந்தனர். பலமுறை அவர்கள் மூவரும் தங்களுக்குள்ளேயே ஆழ்ந்து  கிடந்ததில், இவர்களுக்கு நடுவே தான் ஒரு தடையாக வந்து விட்டோமோ என்று விஜய்க்கு தோன்றியது. கட்டிடத்தின் மேற்பகுதியில்  இருந்த கருப்பு வெள்ளை சதுரங்களாலான தாழ்வாரத்தில்,  தேவ்,  நாணயம் ஒன்றை உருட்டி விட்டு அதன் பின்னால் குழந்தையை ஓடவிட்டு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். மறுபுறம் ராகா விஜயுடன் ஜன்னல்களின் அமைப்பு,  கதவுகளின் மீது செதுக்கப்ப்பட்டிருந்த குரான் வாசகங்கள் மற்றும் பூ வேலைப்பாடுகளை ரசித்துக்கொண்டிருந்தாள். மாலை நேரத்து அஸ்தமன சூரியனின் இதமான இள மஞ்சள் வெயில்.  பச்சைப் புல்தரை கறுப்பாக மாறத் தொடங்கியிருந்தது. ஓங்கி வளர்ந்து,  மயிலிறகை போல விரிந்திருந்த பனைமரத்தின் நுனிகள்  மெழுகுவர்த்தியின் பசு மஞ்சள் ஒளி போல மினுங்கத் தொடங்கியிருந்தன. மைனாக்கள் சந்தோஷமாக சிறகடித்து பறக்கும்போது  தீப்பொறிகள் இங்குமங்கும் சிதறுவது போல போல இருந்தது. அவர்கள் நிலவறையில் சமாதிகளுக்கு அருகே நின்றுகொண்டு ஒருவர் பெயரை அடுத்தவர் உரக்கக் கூவி,  குரல்கள் அலைகளைப் போலப் பரவி எதிரொலிப்பதைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். மெல்லிய பட்டு நூலால் நெய்யப்பட்ட ஆடை காற்றில் சிலிர்த்தபடி மிதப்பது  போலவும்,  கடிகாரத்தில் பொருத்தப்பட்ட சிறிய ஸ்ப்ரிங்கைப் போல,  பேருருவம் கொண்ட ஏதோ ஒன்று மிக சிறியதாக சுருங்கி தேய்வதையும் கேட்டுக் கொண்டிருந்தனர். தேவ் ராகா… ராகா… ரா…கா என குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். ஒன்றின் மீது ஒன்று ஏறி செல்லும் வார்த்தைகள்… தூரத்து அறியாத பள்ளத்தாக்குகளின் ஆழங்களில்சென்று புதையும் ஒலிகள்…மூ…ன்…மூ…ஊ….ஊ..ன். தேவ்,  வெகுநேரம்  ஒலிகள் காற்றில் கரைந்து மறையும் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். அவரது மனதின் ஆழத்தில் புதைந்து கிடந்த ஏதோ ஒன்று இதன் மூலமாக உருக்கொண்டு வெளிப்படுவதைப் போலத்  தோன்றியது. அவர் ராகா அல்லது முன்முனின் பெயரை கூவிவிட்டு,  வெகுதூரத்தில் அப்பெயர்களின் ஒலி தேய்ந்து மறையும்வரை கேட்டுக்கொண்டிருந்தார். முடிந்தால் கையை நீட்டி அவற்றை திரும்பப் பிடித்துவிட விரும்புபவர் போலவும் தோன்றியது.  நிலவறைச் சமாதிகளில் அவருக்கு பெரிதாக ஆர்வம் எதுவும் இல்லை. வெகு நேரத்துக்குப் பிறகு மிகவும் சிரமத்துடன் அவர் அந்த சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு  வெளியே வந்தபோது  துக்கத்தில் மூழ்கியவர் போலவும், எங்கோ தொலைந்து போனவர் போலவும் தோன்றினார். விஜய்யிடமிருந்த முன்முனை தன்னருகே இழுத்து மார்போடு இறுகத் தழுவிக் கொண்டார்.

வெளியே,  ராகா,  நதிக்கரையை ஒட்டியிருந்த சிறிய கோபுரத்தின் அருகில் நின்று,  தூரத்தில் விரிந்து கிடக்கும் நகரத்தையும் ரயில் பாலத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சிந்தூர வண்ண ஆகாயத்தில் அடர் ஸ்லேட் நிற மேகங்கள்,   நதியின் மீது வண்ணம் தீட்டியது போலப் பரவியிருந்தன. சிறிய கோபுரத்திலிருந்து நடுவில் இருந்த சமாதி வரை பரவியிருந்த கருப்புவெள்ளை சதுரங்க தரையின் மீது அஸ்தமன சூரியன்   சாய்ந் த வாட்டில் விழுந்திருந்தது. காற்றில் படபடத்த புடவை அவளை இறுகத் தழுவியிருந்தது. காதருகே ஒரு முடிக்கற்றை 

காற்றில் அலைந்து கொண்டிருந்தது. அறிமுகமற்ற நபரை பார்ப்பது போல, தேவ் ராகாவை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிரம்மாண்டமான வெண்பளிங்குச் சிறையில்,  சபிக்கப்பட்ட ஒரு ஜலதேவதையை தனியே பரிதவிக்கவிட்டுப் போவதுபோல். இந்த இடமும் இச்சூழலும் அப்படிப்பட்டதுதான் என விஜய் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு,  வேறு திசையில் நடக்கத் தொடங்கினான். ஒருவேளை ராகா மும்தாஜின் காதலைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க லாம். இறந்த பிறகு தனக்கு யாரேனும் இப்படி ஒரு நினைவுச்சின்னம் கட்டுவார்களா என்று யோசித்தி ருக்கலாம் அல்லது ஒன்றுமே யோசிக்காமலேயே கூட இருந்திருக்கலாம். பாலத்தின் மீது விரையும் ரயிலின் ஜன்னலின் வழியாக இந்த நினைவுச் சின்னத்தின் மொத்த அழகையும் பார்த்தால் எப்படியிருக்கும் என்று கூட நினைத்துக் கொண்டிருக்கலாம்.

முன்முன் குட்டை சுவர் ஒன்றின் அருகே நின்றுகொண்டு நதியை பார்த்தவாறு, கீழே ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை நோக்கி கையசைத்து கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. விஜய் முன் முன்னுக்கு அருகே சென்று சுவற்றின் மீது கையை ஊன்றிக்கொண்டு எதிரிலிருந்த நதியையும் மரக்களையும் அவற்றின் அடர்த்தியான இலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தான். தேவ் எப்போது வந்து அருகில் நின்றார் எனத் தெரியவில்லை. காற்றில் படபடத்த புடவையைக் கையில் பிடித்தவாறு, ராகா, வெகுநேரம்வரை சிறிய கோபுரத்திற்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.

“நிலவறையில் நம் குரல்கள் எதிரொலிப்பதை கேட்கும்போது ஒருவிதமான வினோதமான அனுபவம்  ஏற்படுகிறது இல்லையா? திக்குத் தெரியாத காட்டில்,  நமக்கு மிகவும் தெரிந்த நபர் ஒருவர் தொலைந்து போய்விட்டது போலவும், நாம் அவரைத் தேடி அழைக்க முயற்சிக்கையில், நம் குரல்கள் அவரை எட்டாது கடந்து போவது போலவும் தோன்றுகிறது இல்லையா? நீங்கள் நேசித்த நபரும் திரும்பி வருவதில்லை. யுக யுகங்களாக ஏதோ ஒரு சபிக்கப்பட்ட ஆத்மா தனக்கு நெருக்கமானவர்களை குரலெடுத்து கூவி அழைத்து, அலைந்து திரிந்து கொண்டிருப்பது போலவும்,  அதன் குரல் அவர்களை எட்டாது இடையிலேயே தேய்ந்து ஆழங்களில் நழுவி விழுந்து புதைந்து, பொருளற்று போவதைப் போலவும் தோன்றுகிறதில்லையா?”

நதியில் தாஜின் அடர் நிழல், அலைகளில் சிக்கி சிதறிக் கொண்டிருந்தது. தேவின் கண்களில் தன்னிச்சையாக கண்ணீர் வழிந்தது.

“இந்த  சோகமான சூழலில் இப்படித்தான் நடக்கும்” என விஜய் தனக்குத்தானே சொல்லிக் கொண்டே, “நாம் ஒருவரை மனதார நேசிக்கும்போது, இத்தகைய அழகான ஆனால் துரதிருஷ்டம் நிரம்பிய இடங்களுக்கு வர நேரிடும்போது, மனதில் பெரும்பாலும் இம்மாதிரியான உணர்வுகளே தோன்றும்.  புல்தரையில் கொஞ்சநேரம் முன்முனுடன்  சந்தோஷமாக சிரித்து விளையாடினோ மென்றால் எல்லாம் சரியாகிவிடும்” என்றான்.

தேவ் நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு விஜயை கூர்ந்து நோக்கினார். ஏதோ சொல்ல வந்து நிறுத்தி கொண்டார். இருவரும் மௌனமாக நடந்தவாறே தாஜ்மஹாலின் முன்புறத்தை வந்தடைந்தனர். முன்முன் ராகாவுடன் இருந்தான். படிகளில் இறங்கும்போது தேவ் விஜய்யின் தோளில் கை வைத்தார். அவரது உதடுகள் எதையோ சொல்லத் துடித்தன “உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர் விஜய்? அவரது குரலும் தொனியும் விஜயைத் துணுக்குறச் செய்தன.

“ப்ச்! ஒன்றுமில்லை!”

பச்சை நிற புடவை நுணி கண்ணில் பட்டதும் பேச்சை நிறுத்திக் கொண்டு இருவரும் படிகளில் கீழே இறங்கினர். காலணிகளை அணிந்தவாறே,”திடீரென இப்படி நாங்கள் உங்களையும் இழுத்துக் கொண்டு வந்தது குறித்து உங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம்”என்றார்.

“அப்படி ஒன்றும் இது பெரிய விஷயம் இல்லை” என்று விஜய் பணிவுடன் கூறினான்..

“ஆம். சொல்லப்போனால் ஒன்றுமில்லாத விஷயம் தான். ஆனால் மிகப் பெரிய விஷயம்.” மறுபடியும் நீண்ட பெருமூச்சு.

உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் ஒன்று தேவின் உள்ளத்திலி ருந்து வெளிப்பட தவித்துக்கொண்டி ருப்பதுபோல விஜய்க்கு தோன்றியது. அச்சூழலின் விசித்திரத் தன்மை குறித்து அவன் முதல்முறையாக யோசித்தான். நடுவேயிருந்த மேடையை வந்து சேரும் வரை இருவரும் மௌனமாக இருந்தனர். மேடையின் ஓரங்களில் சூரியன் கனலெ ன கழன்று கொண்டிருந்தான். இருட்டத் தொடங்கியிருந்த வானத்தில் ஆரஞ்சு மற்றும் மிட்டாய் வண்ண மேகங்கள்,  கொக்குகள் இறங்கி வந்ததைப் போலச் சிதறி இருந்தன. கவிழ்ந்திருந்த தாஜின் நிழல், உயிர் விடப்போகிற பாம்பு,  படம் எடுப்பது போல,  அவர்கள் காலடியில் நெளிந்தது.  வெயில்,  சிறிய கோபுரங்களில் வந்தடங்கியிருந்தது.  தேவ் வெகுநேரம் அக்கோபுரங்களைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார். எதிரே ராகா முன்முனுடன் வந்து கொண்டிருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. விஜய் இருவரையயும், தூரத்தில் தண்ணீர் சுமந்து, பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டு வரும் நீராவி எஞ்சினையும் மாறி மாறிப் பார்த்தான்.  தேவ்,  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வார்த்தைகளை உந்தித் தள்ளி சொன்னார், ” இந்த நிலை…விரிசல் விட்டு உடைந்து போகிற நிலைக்கு வந்துவிட்ட  இந்த நிலைமை…மன அழுத்தம்…எங்களுடைய கடைசி சந்திப்பின் சாட்சியாக எவரேனும் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்பினோம்.அழுத்தம் உச்சமடைந்து உறவு முறியும் கணத்தின் பெருஞ்சுமையை, அணைக்கப்படுவதற்கு முன் ஒளிரும் சுடரின் நடனத்தை, நடைமுறைகளில் சிக்கித்தவிக்கும் உறைந்த முகமூடியை கிழித்தெறியும் நொடியை எங்களால் தனியாக எதிர்கொண்டி ருக்க முடியாது. அது எங்களை பெரும் சுமையாக அழுத்தி இருக்கும். இவற்றிலிருந்து எங்கள் கவனத்தை அகற்றவும் முடியப் போகிற உறவின் மௌன சாட்சியாகவும் இருக்க எங்களுக்கு மூன்றாவது நபர் ஒருவர் தேவைப்பட்டார்.”

“எனக்கு ஒன்றும் புரியவில்லை,  மிஸ்டர் தேவ்” விஜய் பதறினான்.

தேவ்,  உடலின் கனத்தை ஒரு காலிலிருந்து மற்றொரு காலுக்கு மாற்றிக் கொண்டு, விஜயைப் பார்த்து அமைதியாக சிரித்தார். “மிஸ்டர் விஜய்,  இது எங்கள் கடைசி மாலை. விஜய் மேற்கொண்டு எதுவும் கேட்பதற்கு முன்பாகவே அவர், “நானும் ராகாவும் பிரிவதென முடிவு செய்து விட்டோம். இருவருமே ஒருவரையொருவர் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாத இடத்திற்கு வந்து விட்டோம். இந்த அழுத்தம் எங்களை பைத்தியமாக்கி விடும் அல்லது செய்யக்கூடாத எதையேனும் செய்துகொள்ள தூண்டிவிடும். இதை விட இருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது. அவள் விரும்பினால் வேறொருவருடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளட்டும். முன் முனை தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினால் வைத்துக்கொள்ளட்டும். எப்போதாவது அவனை இடையூறாக கருதினால், எந்த சங்கோஜமும் இன்றி அவனை என்னிடம் அனுப்பி விடட்டும்.”

விஜய்க்கு தலைசுற்ற ஆரம்பித்தது. அவன் மௌனமாக நதியின் ஆழத்தில் துடித்துக்கொண்டிருக்கும் தாஜின் நிழலை வெறித்தான்.

“ஆனால் நீங்கள் இருவரும் முயற்சி செய்திருக்கலாமே”… விஜய் சொல்ல நினைத்தான்.

அவனை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்து தேவ்,  “எல்லாம் முடிந்து விட்டது. எல்லா முயற்சிகளும் செய்து பார்த்து விட்டோம். கடைசி மாலையை  சந்தோஷமாகக் கழித்துவிட்டு நண்பர்களைப்போல சிரித்தவாறே பிரியலாம் என முடிவு செய்தோம்.” சற்று நேர மௌனத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்தார் “ராகா தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள். திருமணம் ஆன முதல் நாளே இங்கு தேனிலவுக்கு வர வேண்டும் என அவள் விரும்பினாள். ஆனால்…. ஆனால்…எங்களது ஏழாவது திருமண நாளில்….. விசித்திரமான தற்செயல் இல்லையா?”

விஜய்,  பாலத்தின் கைப்பிடிச் சுவரை பிடித்துக் கொண்டு,  அடியில் கொப்பளித்துக்கொண்டு ஓடும் நீர் சுழலைப்பார்ப்பது போல உணர்ந்தான். தலை சுற்றியது. இல்லை இது வெறும் கனவுதான். அவனிடம் யாரும் எதைவும் சொல்லவில்லை. இவற்றையெல்லாம்  அவன் தானாகவே கற்பனை செய்து கொண்டிருக்கிறான். ஒருவேளை இவை எல்லாம் நிஜம்தானோ தேவின் குரல் அவனது சிந்தனையை கலைத்தது. “மும்முனை நிறுத்து ராகா. தோட்டக்காரர்கள் ஆட்சேபிக்கப் போகிறார்கள். முன்முன் ஓடாதே,” அவரது குரல் மிகவும் மென்மையாக இருந்தது. ஓடிப்போய் முன் முன்முனை இருகைகளாலும் அள்ளிக்கொண்டு அவனது வயிற்றில் வாயைப் பதித்து ஊதினார். முன்முன் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தான். வாஞ்சை நிறைந்த கண்களோடு அவர்களைப் பார்த்தவாறு ராகாவும் சிரித்துக் கொண்டிருந்தாள். இல்லை அவன் இதுவரை கேட்டதனைத்தும் இவர்களிடையே நிலவும் உறவை குறித்த எதுவும் இல்லை. இருக்கவும் முடியாது

 விஜய் ராகாவின் முகத்தை பார்க்க பலமுறை முயற்சி செய்தான். ஆனால் அவளோ அச்சூழலின் அனைத்து சௌந்தர்யத்தையும் பருகி தன்னை நிறைத்துக் கொள்வதில் ஆழ்ந்திருந்தாள். கூடடையும் பறவைகள் கீச்சிடத் தொடங்கி விட்டிருந்தன.

அவர்கள் கற்களின் மீது மௌனமாக நடந்து கொண்டிருக்கையில், தேவ் அருகில் வந்து மெதுவாக,  “ராகாவிடம் இதைப்பற்றி எதுவும் கேட்காதீர்கள்” என்றார்

ராகாவிடம் அவன் என்ன கேட்டு விட முடியும்?

“மன்னித்துவிடுங்கள். உங்களையும் வீணாக இழுத்துக் கொண்டு வந்து விட்டோம்.”

இந்த முறை,  விஜய் அவரை கூர்ந்து பார்த்தான். எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்….

இது நடந்து நான்கைந்து வருடங்கள் ஆகியிருக்கும் இருப்பினும் நேற்றுதான் நடந்தது போலப் பசுமையாக நினைவிருக்கிறது. அவன்,  தேவ,  ராகா மற்றும் முன்முன் இதேபோலத்தான் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மௌனமாக… கவலையாக… துரதிஷ்டம் நிரம்பிய அந்த மாலை மெல்ல மெல்ல இரவாக மாற தொடங்கியிருந்தது

 சூறாவளியில் சிக்கி தவித்து பல வருடங்கள் கழித்து வீடு திரும்புபவர்கள் போல அவர்கள் மூவரும் தாஜ்மஹாலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள். மரங்கள் மற்றும் கட்டிடங்களின் நிழல்கள் மிகவும் நீண்டு விழுந்திருந்தன.பசும் புல்தரையின் மையிருளில் வெண்ணிறப் பூக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

மீராவின் கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தாஜ்மஹாலின் நிழல் அவனுக்கு பழைய நிகழ்வை நினைவூட்டியது. தாஜ்மஹாலின் முன்புறம் இருந்த நீள் செவ்வக வடிவ நீர் தொட்டியில் பிரதிபலித்த தாஜின் பிம்பமும், தன் மன உளைச்சலை மிகுந்த சிரமத்துடன் பகிர்ந்துகொண்ட தேவும் நினைவுக்கு வந்தனர். இன்று தேவ் எதிரில் இருந்தால் அவன் என்ன சொல்லி இருப்பான்? அவர்களும் அதே போல பிரியப் போகிறார்களா?

துணுக்குற்று அவன் மீராவை பார்த்தான். அவள் ஏதோ கூறியது போல அவனுக்குத் தோன்றியது. “நீ ஏதேனும் சொன்னாயா?”

நானா? இல்லையே! மீண்டும் அதே மௌனம்.  துயரிலமிழ்ந்த அதே கனத்த கம்பளி பின் தொடர்ந்தது.

இறந்துபோன கணம் ஒன்றை ஒருபுறம் மீராவும் மறுபுறம் அவனும் பிடித்துக் கொண்டிருப்பது போல அவனுக்குத் தோன்றியது.அவர்கள் அக்கணத்தைத்தை,  இரவின் மோனத்தில்,  யாருக்கும் தெரியாமல் புதைக்கப் போவது போலிருந்தது. யார் கண்ணிலும் அவர்கள் பட்டுவிடக் கூடாது. யாருக்கும் அவர்கள் கொலைகாரர்கள் என தெரிந்துகொண்டு விடக்கூடாது என்ற பயமும். ஏதேனும் ஒரு அடர்ந்த புதரின் பின் இறந்த கணத்தை வீசிவிட்டு, மணம் வீசுகிற கைக்குட்டையால் ரத்தத்தை இறுகத் துடைத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். கூட்டத்தில் தொலைந்து விடுவார்கள். ஒருவரை ஒருவர் பார்க்க பயப்படுவார்கள். குற்றம் சாட்டுகிற கண்கள் கொலைப் பழியை ஏற்க வற்புறுத்தி விடுமோ என அஞ்சுவார்கள்.

வெளியே வந்ததும் அவர்கள் குதிரை வண்டியில் ஏறுவார்கள். விருட்ட்டெனத் திரும்பி குதிரைவண்டி பிரதான சாலையில்  வேகமாக ஓட ஆரம்பிக்கும். தாஜ்மஹால் பின்னாடியே நின்றுவிடும். “நல்லது” என வறண்ட உதடுகளிலிருந்து வெளிவரும் கனத்த சொல்லை,   புன்னகை சவச்சீலையால் போர்த்திவிட்டு, இருவரும் விடைபெற்றுக் கொள்வார்கள்.

***

Series Navigationஇருள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.