றெக்கை அத்தியாயம் 28 & 29 (இறுதிப் பகுதி)

This entry is part 28 of 28 in the series றெக்கை

விடிந்தது முதல் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முதல் மழை. பார்த்துப் பார்த்து  நூற்றுக்கணக்காக சிற்றரங்குகளை முழுக்க நனைத்து வெடிச்சிரிப்பு சிரிக்கிறது. மேட்ரிட் நகர் முழுக்க  போன ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்னும் இரண்டு ஞாயிறு வரை நீளும் கார்னிவலுக்காக தாற்காலிகமாக கட்டி எழுப்பி நிறுத்தப்பட்ட தார்ப்பொலின் கூடாரங்கள்.

இந்த ஆண்டு கார்னிவல் ஆட்டமும் பாட்டமும் அசாத்தியமானவை. உலகம் முழுக்க ஏதோவொரு நாட்டிலேயாவது மொச்சு மொ ச்சு வென்று தின்னக் கூடிய தரமான உணவு   ஸ்பெயினில் கார்னிவல் தெரு விருந்தாகப் படைக்கப்பட்டு உத்வேகத்தோடு  ஆகாரமாகின்றன.விட்டில் பூச்சி, வெட்டுக் கிளி, வயதான கரப்பு இவற்றை தக்கபடி பாகம் பண்ணி சயாம் நாட்டு பலகாரம். மண்புழு சீன நாட்டிலிருந்து உயிரோடு கொண்டு வரப்பட்டு அந்த ஸ்பெஷல் மாமிச  இடியாப்பம் நாடு முழுக்க பிரபலமானது. கார்னிவல் மகாத்மியம் இது.

நிர்மலா இந்த வாரத்துக்கான டயரி குறிப்புகள் எழுதும்போது நினைவு வைத்துக் கொள்வாள். சங்கீதம் போல். கர்னாடக சங்கீதத்தில் சாஹித்யம் உருவாக்கின உடனே அதை இஷ்டப்படி மாற்றி அந்த கீர்த்தனையை குப்பையில் போக வைப்பது சில தெருத்தெண்டிகளின் காரியம். தடுக்க செய்ய வேண்டியது சீனப் பெருஞ்சுவர் மாதிரி வளைந்து நெளிந்து போகும் சிட்டை சுவரத்தை கையோடு கட்டியமைக்க ஆற்றொழுக்கு போன்ற சாஹித்திய வெள்ளத்தின் வேகத்துக்குத் தடையிடாமல் அனுசரணையாக  ஒருமித்திருக்கும். வேகத்துக்கு ஏற்ற விவேகத்தோடு முன்னேறும். 

நிம்மி டாக்டர் எஜமானி.

முத்தச்சி குரல் மாடியேறி வந்தது. அதை விடச் சத்தமாக முரசுகளின் ஒலி. முத்தச்சி தன்னிச்சையாக  ஆட ஆரம்பித்திருந்தாள். கானா தேச முரசுகள் அதிர நிர்மலா கைகட்டி வெறுமையில் பார்வை நட்டு இசையில் ஒன்றியிருந்தாள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இசையை ரசிக்கிறார்கள். நிர்மலாவுக்கு ஊர் நினைவு வந்தது, அம்பலப்புழை திருக்கோவிலில் மாரார்  செண்டை வாசிக்க ஆரம்பித்தால் போதும். பகவதி அத்தையின் உற்ற தோழி தொடுப்புழ நாராயணி சேச்சி அழ ஆரம்பித்து விடுவாள்.இந்தோ பெய்கிற மழை மாதிரி,

மூன்று முரசறைகிறவர்கள். செண்டை புடைக்க இன்னொருத்தன். இலைத் தாளம் தட்டியபடி மற்றுமொருவன்.

தாளம் நிற்க, நிர்மலா சுவாரசியமாகப் பார்த்தாள்.இலைத் தாளக் காரன் குரலை உயர்த்தினான், அவன் அறிவித்தது-

மகா கனம் பொருந்திய  மாநகர் வாசிகளே. யொருபா தெய்வம் அவர் ஆசிகளோடு என்னை, எங்களை அனுப்பியிருக்கிறார். இங்கு கார்னிவல் மகா கடவுள் அவர். இன்று மாலை டௌன்டவுண், சி அப்டவுன் சிற்றரங்கம் ஒன்று விடாமல் பவனி வந்து அருள் பொழிகிறார். அடாத மழை பெய்தாலும் விடாது யொருபா.

நாள் முழுக்க, வருடம் முழுக்க உருண்டு விழுந்து நாக்கை அறுத்து குறி சிதைத்து கும்பிட வேண்டிய பிரதான தெய்வமோ உப கடவுளோ  இல்லை யெருபா. அவரவர் சவுகரியப்படி பிரார்த்திக்கலாம். காலை கடன் தீர்க்கும்போது அல்லது குசினியில் மீன் செதில் நீக்கும்போதோ அல்லது அபூர்வமாக குளிக்கும்போதோ அதுவுமன்றியில் ஒரு பெரிய குவளை லாகர் பியர் அருந்தும்போதோ அதுவுமல்லாது கலவி முடிந்த போதோ மனதில் வழிபடலாம். வருடம் பனிரெண்டு மாதம். ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாள் மட்டும் யெரூபாவை பூசிக்கலாம்.

 யெருபா, யொரூபா, யொருபா, யருபா, யேருபா, வெங்காயம்  -எப்படி அழைத்தாலும் ஓடிவரும் பேர்வழி அது.

எஜ்மானி, ப்ரேக்ஃபாஸ் நான்  செஞ்சுடட்டா? முத்தச்சி  ஆட்டத்தை நிறுத்தி .உற்சாகத்தோடு கேட்டாள்.

இந்த மழைக்கு குரிச்சி போட்டு உட்கார்ந்து ரொட்டி, பட்டாணி கூட்டும் ஓட்ஸ் பாயசமுமாக சாப்பிட்டபடி சமயமாம் ரதத்தில் ஞான் சொர்க்க யாத்ர செய்யுன்னு பாடலாம். அதிலுமொரு ரசமுண்டு.

நிர்மலா மனதுக்குள் சொல்லிப் பார்த்தாள். நன்றாக இருந்தது. இன்னும் எழுதி முடிக்கப்படாத அவளது நாட்குறிப்பில் இது கட்டாயம் சேர்க்கப்படும் .         

ஓட்ஸ் கீர், ரொட்டி,வேவிச்ச பட்டாணி . க்ராய்ஸண்ட். நேத்து தின்னது போக பத்திரமா வச்ச கேக், இதெல்லாம் போதாதுன்னா புட்டுமா, உப்புமா. சொல்லுங்க எஜமானி. என்ன சாப்பிடறீங்க?

ஒரு வார காலை உணவு இத்தனையும் சேர்த்தால். வேணாம் மகாராணி முத்தச்சி.

மகாராணி முத்தச்சியா? வேணாம் எஜ்மானி. நீங்க விளிச்சதை நான் கேட்கிறதே பாவம். 

உணர்ச்சிவசப்பட்டாள் முத்தச்சி. நிர்மலா ஆறுதல் வார்த்தை சொன்னபடிஅவள் கையைப் பிடித்துக்கொண்டு கூடிய  மட்டும் பிரயத்தனம் செய்து இரண்டு துளி கண்ணீருகுத்தாள். ஒரு விடுமுறைநாள் பொழுது புலர்ந்தபோதே கண்ணீர் நனைந்திருக்க அவளுக்கு விருப்பமில்லை. கிழவியும் அப்படித்தான் நினைத்திருக்கக் கூடும்.

அது இருக்கட்டும். யானையை எப்படி மறைய வைக்க முடியும்? இணக்கத்தோடு கேட்டாள் முத்தச்சி.

அதுவா ரொம்ப ஈஸியாச்சே, ஒரு மர ஸ்டூல் எடுத்து ஆனை பக்கம் போய் அந்த முக்காலி மேல் ஏறி நின்னு ஆன  காதிலே சொல்லணும் -ஆன ஆன உனக்கு முன்னாலே இத்தனை மனுஷா திரியறாளே இவா எல்லாரும் இன்னும் பத்து நிமிஷத்திலே,  மொட்டக்கட்டயாக ஆகிடுவாங்க. யெரூபா  தெய்வத்துக்கு முடி காணிக்கை தருவா. 

பாதிக்கு    நனஞ்சு படியேறிக் கொண்டிருந்தான் லெவி நிர்மலாவை நோக்கிச் சிரித்தபடி வந்தான். அவன் வருவதைப்  பார்த்ததுமே வேகமாக வெளியே போனாள் முத்தச்சி. மாடிப்படி வளைவில் கால் தடுமாறி லெவி மேல் நேர் முன்னாக மோதிக்கொண்டாள்.

கிழட்டுத் தேவரடியாளே உன் கள்ள புருஷனுக்கு உபசாரம் செய்ய ஓடுறியா? அதட்டியபடி மேலே வந்தான் லெவி.

வீட்டுக்காரன் என்ன பண்றான்? மருந்து எடுத்துக்கிட்டானா? நிர்மலாவின் இடுப்பை வளைத்து தன்னோடு பிணைத்தபடி இதழ் தேடினான்.நிர்மலா அவனை புறம் தள்ளிவிட்டு உரக்க விளித்தாள் – 

ஆல்பி, யார் வந்திருக்காங்க  பாரு டியர்

அல்பி நல்லா உறங்கினியா நேத்து ராத்திரி? நிம்மியை உபத்ரவம் பண்ணலை தானே? ஆகாரம் கழிச்சே இல்லே?

ஆல்பி சிரமப்பட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து மெலிந்த கரங்களை நீட்டி தன் தோழன் லெவியை வரவேற்றான். லெவி கை குலுக்க ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியதை நிர்மலா கவனிக்கத் தவறவில்லை. 

நாற்பத்தைந்து நாளாச்சு, வீட்டு வாசலை கடந்து  தெருவை அதன் சகல நாற்றத்தோடும் முகர்ந்து, இதுவும் ஒரு ரசம் தான் என்று ரசிக்க இனி எப்போது வாய்க்குமோ  தெரியலே லெவி,

குரல் இடற லெவியின் தோளில் ஆதூரத்தோடு சாய்ந்து விம்மிய தன் சிநேகிதன் ஆல்பியை அணைத்து ஆறுதல் தந்தான் லெவி. அந்த ஒரு நிமிடத்தை நிஜமான பெரும்பொழுதாக உணர்ந்து ஆல்பியின் சிரத்தை மெல்ல வருடினாள் நிர்மலா. அவளது கரங்கள் மேல் வெப்பமாகக் கவிந்தன லெவியின் காத்திரமான தோள்கள். பதுங்கி வந்த குத்திருமல் அல்பியைக் குலைத்துப் போட மருந்து, மாத்திரை, ஸ்வைப், வெந்நீர் என்று அடுத்த அரை மணி கடந்து போனது.

அல்பி மறுபடி  உறங்கிப் போனான்.அதிவேகத்தில் நிர்மலாவும் வெளியே நகர்ந்தாள் .  

 என்ன சொல்லாம கொள்ளாமல் நழுவறே? லெவி நிர்மலாவின் கையைப் பற்றி இழுத்தான்.

மடையா, குசினியிலே ஏகப்பட்ட வேலை இருக்கு. இன்னிக்கு வீட்டுலே நான் மட்டும் தான் இருக்கேன். ஆல்பி கணக்கிலே வர மாட்டான் இப்போது குசினி சுத்தம் பண்ணலேன்னா வேறே சந்தர்ப்பம் கிடைக்காது, 

நிர்மலா ஆப்ரனை பிடைவை மேல் சுற்றிக்கொண்டு சொன்னாள். வெளியே செண்டை மேளம் உச்ச சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. நிர்மலா விரைந்து ஜன்னல் வழியே கீழே பார்த்தாள். தார்ச்சீலை கட்டி எழுப்பிய சிற்றரங்கு, வாசலில் பலகையில் ஸ்பானிஷ் மொழியில் ஏதோ எழுதியிருந்தது,

யொரூபா அருள் மையம். 

 பின்னால் நெருங்கி நின்று பின் கழுத்தில் வெப்பம் பட லெவி சொன்னான். மதம், சமுதாயம், உணவு, மகளிர்  போன்ற விஷயங்களில் அவன்   வாசாலகனாக இருப்பதாக நிர்மலாவுக்கு தோன்றியது.குளித்து தலைமுடி ஈரம் காயாமல் இருந்த கூந்தலில் இருந்து ஒரு துளி நீர்  லெவி புறங்கையில் விழுந்தது. பேசியதை பாதியில் விட்டு நிர்மலாவை தீர்க்கமாகப் பார்த்தான், 

 அல்பியின் நோகாளிக் கிடக்கை கிடந்த விருந்தாளிப் படுக்கையறையில் வெறுமை அப்பியிருந்த  மற்ற கிடக்கையில் முதுகில் உப்பு மூட்டையாக சுமந்து வந்த நிர்மலாவை  மெல்ல இட்டான்.

ஐயோ வேண்டாம்டா அல்பியை பக்கத்திலே வச்சுக்கிட்டே விளையாட  வேணாம்டா, சொல்லச் சொல்ல

வேணாம்னு சொல்ல சொல்ல வேணும்னு எதிர்பார்க்கிறே இல்லை?,
               
அடித்துப் பெய்யும் மழையின்  தாரைகள் கனமான நீர்த் திரை எழுப்ப அவர்கள் உடல் கலந்தார்கள். 

பெற்றது யார் கொடுத்தது யார் என்ற மயக்கத்தில் முயக்கம் முந்தியது. உச்சம் தொட்டு நிமிடம் சில அங்கு நிலைத்து இதற்குத்தானா என்று சுயம் இகழ்ந்து சும்ம்மா கிடந்தான். நக்னமாய் சக சயனம் செய்து எழுந்தவள் ஈரமான படுக்கைப் பரப்பில் கொண்டை ஊசி தேடி அணிந்து கொண்டாள். 

அன்பே அழகுப் பெண்ணே,   இன்னொரு முறை உன் கொங்கை மலை ஏறிக் குதித்து ஆழ்பெரும்  தடாகத்தில்

வீழ்ந்து கிடக்க ஆசை, கண்ணை மறைக்கும் காமம், 

இன்னொரு முறை விஸ்தாரமான உடலாட்டு . பெற்றதும் கொடுத்ததும் யாரென்று  தீராத சுகமான குழப்பம்

உச்சம் மறுபடி தொட்டபோது குத்திருமல் சத்தம்.

ஆல்பி இருமலோடு சிரமப்பட்டு எழ, முடியாமல் குழைந்து கிடக்கிறான்

நிர்மலா கண்களில் அச்சம் அப்பியிருக்க நடுங்கும் கரம் கொண்டு தடாகம் மறைக்க முயன்றாள். தோற்றாள்.

அல்பி அவளைப் புறக்கணித்து  அவனது நண்பன் லெவி மேல் எரிமலை எறிந்தான்.

கஷ்டப்பட்டு கண் மலர்த்தி இது ரசமில்ல என்றான். உறங்கலானான்.

அவசரத்தில் கட்டிலுக்குக் கீழே கழட்டி வீசி இருந்த லெவியின் சட்டையை  எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு  குனிந்து பிடவையை முன் மறைவாகப் பிடித்தபடி குசினிக்கு ஓடினாள். பின்னாலேயே லெவியும்.

முழுக்க உடுத்து அவர்கள் அல்பி நோயோடு போராடும் இரண்டாவது படுக்கையறைக்கு திரும்பினர்.

அல்பியை காணோம்.

வெறி பிடிச்ச நாயே, அல்பியை என்ன பண்ணினேடா? 

நிர்மலா ஆவேசத்தோடு லெவியின் தலைமுடியை  இறுகப் பற்றினாள். இது உடலாட்டு இல்லை. வெஞ்சினம். அவன் தலையை சுவற்றில் மோதினாள்.

லெவி வலியை பொறுத்துக் கொண்டு இரு கரம் உயர்த்தினான். வார்த்தைகள் அவனிடம் வசப்படாமல் வழுக்கி ஓடின, பின் அவை ஒலி மறந்து வெற்று விம்மலாக திசையெங்கும் நீண்டன.

இரண்டு பேரும் ஒரே குரலில் கூச்சலிட்டது – அல்பியைக் காணோம்.

நிர்மலா சாவுச் செய்தி தருகிற மயான நிசப்த்தத்தில் குற்றம் சொல்கிறவளாக சொன்னாள் –

அவன் பார்த்திருக்க தொட்டு விடும் நெருக்கத்தில் மனக் குமைச்சல் இல்லாமல் நாம் ரெண்டு பேரும் அவனுக்கு துரோகம் பண்ணினோம். நேரே நரகம் தான் போவோம். தனித்தனியாக.

சீன பிரம்புக் கூடையில் புஷ்டியான நாட்டுக் கோழி முட்டைகள் வைத்து அடுக்கிக்கொண்டு முத்தச்சி அவளது இருப்பிடத்துக்கு போய்க் கொண்டிருந்தாள்.  மேல் மாடிப் படியில் நின்று முத்தச்சி என்று சத்தம் கூட்டி கூப்பிட்டது  தலை தெறிக்க ஓடும் சாரட்களின் இரைச்சலில் மறைந்து போனது. 

நிர்மலா நாலைந்து தடவை அல்பி அல்பி என்று அலறியது மட்டும் கிழவி காதில் சற்றே படிந்தது. ஏதோ புது வார்த்தை விளையாட்டு என்று கருதி அவள் லோ லோ கார்னிவல் லோ லோ என்று முட்டைக்கூடையோடு குலவையிட்டாள். தடுமாறி விழுந்து தரையில் முட்டை உடைந்த வெண்ணாறு ஓட வைத்தாள். அப்புறம் என்ன செய்யணும் என்ற நிச்சயம் இல்லாமல் ஆட ஆரம்பித்தாள். மழையும் மறுபடி தொடங்கியது.

அவள் ஆட, தெருவோடு போனவர்கள் கார்னிவல் என்ற வார்த்தை கேட்டு குடை விரித்து ஆடலானார்கள்.

இங்கே அல்பியை தேடுவது வீண் என்று நிர்மலா வீட்டுக்குள் பார்த்தே லெவி லெவி எனக் கூவினாள். வாசல் கூட்டம் பாட்டை மாற்றிப் பாடலானது-

கட்டாந்தரையடா லெவி லெவி

கட்டில் போட்டு படுக்கலாம் வாடி வாடி

பிள்ளை பெத்த உடம்புடா லெவி லெவி 

மெள்ள மெள்ள கிடக்கலாம் வாடி வாடி

ஆப்பிரிக்க மருலா  பழங்கள் அழுகிக் கிடந்த புளித்த நெடி காற்றோடு வந்தது. அல்பி இருந்தால் இதிலும் ஒரு ரசமுண்டு என்று மூக்கை உறிஞ்சி வாடை பிடித்துக்கொண்டு நின்றிருப்பான், டர்ட்டி பெல்லோ.

தன்னையே மறந்து, தன் நிலை  மறைந்து, தன் இடம் மறந்து அல்பி அல்பி என்று சத்தமின்றி குரலெழுப்பி நாலு தெரு வெறுங்காலோடு சுற்றினாள் நிர்மலா .

நாலு வீtதி  நாலு வீதி சந்திக்கும் ரவுண்டானாவில் அந்த நாலும் கிடுகு என்ற தென்னங்கீற்று கொண்டு கூரை வேய்ந்து போர்த்தி, மழை நாள் பகல் ஆதி இருட்டில் உறங்கிக் கிடந்தன.

முகத்தோடு ஒட்டிய வராக முகம் மூடி அணிந்த சிலர் நிர்மலா அந்த நொடியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் கருப்புக் குதிரை மேல் சிறு தொகை கட்டினால் வீட்டில் சவரன் பொன்  கட்டிகள் மழை பொழியும் என்று ஆருடம் சொன்னார்கள். 

கூடாரத்தின் ஈசான்ய மூலையில் குத்தியிருந்தவன் முகத்தோடு ஒட்டிய முகம் மூடியை பிராண்டிப் பிய்ந்திட யத்தனம் செய்தது வியர்த்தமாகப் போக அலறி பயந்து அழுதான். 

மழை முழுக்க ஓய்ந்து வானம் வெளி வாங்கியது. நிர்மலா நிமிடத்துக்கு நிமிடம் பெருகிக் கொண்டிருந்த கார்னிவல் கூட்டத்தின் நடுவில் உந்தும் தள்ளுமாக அலைக்கழிக்கப் பட்ட கன்று போல் நகர்ந்தாள். பசித்தது. எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. உடனே வீடு திரும்ப வேண்டும். வசிக்கும் இடம் எது? அவள் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறாளா அல்லது வீட்டிலிருந்து போகிறாளா? லெவி, லெவி எங்கே? அல்பி எங்கே? இறகு முளைத்த இரண்டு குழந்தைகள் எங்கே?

நிம்மி  நிர்மலா

இரையெடுத்த பாம்பு போல் ஊர்ந்து கொண்டிருந்த கார்னிவல் கும்பல் நடுவே நிர்மலாவை அழைத்தது யார் என்று புலனாகவில்லை.நின்று நிதானித்து திரும்பிப் பார்த்து,புன்சிரித்து லோக க்ஷேம வியவகாரங்கள் விசாரிக்க மன ஈடுபாடு இல்லை.

கூரை வேயாமல் சுற்றி வளைத்து படுதா கட்டி தீனி விற்கும் வியாபார முனைக் கடை வாசலில் நின்று இரு இளம் பெண்கள் ஜாக்கெட் பொடேடோ என்று கூவிச் சிரித்தபடி, பரஸ்பரம் நெஞ்சை நீவிக் கொண்டிருந்தார்கள்.

இது இல்லே இன்னும் சூடாக வாங்கலாம். உள்ளே வாங்க

இளித்தபடி ஒரு ஜனக் கூட்டம் உள்ளே செல்ல சிறு இலைக் கோப்பைகளில் உறிக்காத உருளைக் கிழங்கு 

நிர்மலா. நிம்மி. டாக்டர் 

யாரும் கூப்பிடவில்லை,பிரமை தான். கார்னிவல் என்ற ஜனப் பெருங்கூட்டத்தில் வெறுமனே குரல் எறிந்து கரைப்பதும், வேறு யாரோ எங்கோ குரல் எழுப்பியதை ஏற்று வாங்கிப் பெருக்கவும் நிர்மலாவுக்கு ஆகாது. அவள் கணவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். அவன் அவளை தன் உற்ற நண்பனோடு ராஸ க்ரீடையில் திளைத்து இது ரசமில்லை என்று மனம் மறுக்க, கையும் களவுமாக மட்டில்லா இன்பம் துய்ப்பதை முழுக்கப் பார்த்தவன். 

வடக்கு வடமேற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் நோக்கி வர்ணமயமாகத் தூக்கி நிறுத்திய ஷமியானா  கார்னிவல் முதல் தினம்  அவள் பார்த்த ஸ்பானிஷ் கிடார் –  கரீபியன் முரசுகளின் கூட்டணி இசைக்கு அர்ஜெண்டின் அரம்பையர் நடனம் வைக்கும் அபூர்வமான குழு இங்கே ஆடுவதாக நிர்மலா ஊகித்தாள்.

ஸ்பானிஷ் கிதார்கள் புது மனைவியாக ராத்திரி  எங்கே போயிருந்தே என்று ஃப்லமிங்கோ பந்ததியில் விசாரிக்க ஜமைக்கா தாளவாத்தியக் கலைஞர்களின் எண்டிசையும் அதிர வைக்கும்  முரசுகள் காலிப்சோ பாணியில் ராத்திரி ஆப்பீஸ்லே ஓவர்டைம் செஞ்சேன் என தடாலடி பதில் சொல்வதுமாக சவால் -ஜவாப்  வடிவில் கச்சேரி முன்னேறியது.

ஜெமைக்கன் முரசுகள் தனியாவர்த்தனத்தில் முழங்க  காற்றில் விலம்கிய மெழுகுசீலை வாசல் படுதா வழியே தெரிய வந்தது, உள்ளே முரசொலிக்கு சுழன்றாடும் அன்னங்கள்  போன்ற மூன்று அரம்பையரின் துரிதமான கால் வண்ணமும், தோள் வண்ணமும், கண் வண்ணமும்.

உள்ளே போய் சௌகரியமாக உட்கார்ந்து பாரேன் நிம்மி

தெருவைப் பார்த்து நாற்காலி போட்டு அமர்ந்திருந்த யாரோ மெல்லிய சப்தத்தில் சொன்னார்கள்.

அது வாயில் பவ்வ்வ் என்று உறையூர் சுருட்டு புகைவிடும் எஸ்பானிய வயசன். இல்லை, ஆறடி உயரத்தில் வாட்ட சாட்டமாக கருப்பினப் பெண்.இல்லை, பஞ்சு மிட்டாய்க்காரன், இல்லை, யெரூபா பூசாரி.

நான் மாயா. மாயசண்டிகை.


அத்தியாயம்  29

மாயசண்டிகை மனதில் உரைத்தது

——————————————-

என் அக்கை காயசண்டிகை என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது? உயிரோடு தான் இருப்பாளா? கருங்கல் பொதியாக பனி பூசிய மலைகளும், எதிர்ப்படும் எல்லோரையும் சபித்து வாயு  பிரியும் முனிவர்களும் இருக்கும் வரை காயூ சுவாசித்திருப் பதே சிரமம் தான்  – காயசண்டிகை அக்கையை  செல்லமாகக் காயூ என்று  கூப்பிடுவது வழக்கம்-

காயூ ஒரு சிடுசிடு முனிவனால்  சௌபாக்கியம் ஏதும் இல்லாமல் போக சபிக்கப்பட்டாள். விஞ்சையளாக இருப்பதில் கொஞ்சம் போலவாவது ஆசுவாசம் பறக்க முடியும் என்பதில் உண்டாகிறது .ஆடுதல் சிறு மகிழ்ச்சி. என்னே இது. கூடுதல் ஆசுவாசம் எனில் சின்னச் சின்ன மகிழ்ச்சி.கை அதை எழுதப் போனால் கோணல் புத்தி கலவி வேண்டி உமிழ்நீரும் மற்ற திரவ பரிவர்த்தனையுமாக சிற்றின்ப மகிழ்வு பக்கம் கண்காட்டும். 

முனிவன் சபிக்க வாகாக பறக்கத் தெரிந்த அழகுப் பெண் காயூ. காயூ காய்ந்து மழை ஏற்று, பனி பூசி, மணல் சிதறி,யுகங்கள் கடந்து அங்கே நிற்க மலைக்குள் கல் மனித உரு கொண்டு கல் மானுடக் காதல் கடந்து சொட்டச் சொட்ட மானுடக் காமம் உடலை கல்லுக்குள்  உருக்கி காயூ கல்லுக்குள் மந்தியாகி, கல்லுக்குள் கர்த்தபமாகி, கல்லுக்குள் மயில் பேடாக உரு மாறி  மலையன் முலை தேடி அகப்படாமல் காயூ அடி வயிற்றில் ஓங்கி உதைக்க, அவள் உருவம் மாறியது. உச்சந்தலையில் யோனி முளைத்த .தாழம்பூ நெடியோடு கல்லனுக்கு  முத்தம் ஈந்த பெண், 

இந்த மலையன், இந்த கல்லன் தான் விஞ்சையனோடு எப்போதும் ரமிக்க நியமனம் உள்ள, அடுத்தவன் மனைவியோடு ஆறாத கலவியில் இருக்கிறான் என்றால் காயூ விண்ணில் எவ்விப் பறக்க விஞ்சையர் உலகின் உன்னதமான கடவுச்சொல்லை மறக்க வைத்த விருச்சிக முனிவன். பெருந்தேளன். பெருங்குறியன். தேளுக்கு கொடுக்கில் விடம் முனிக்கு வேறெங்கோ விடம் என்று ஊர்ப் பிள்ளைகள் சீண்ட சபிக்கப் போகிறேன் சபிக்கப் போகிறேன் என்று அந்தப் பையன்களின் கொட்டையை வருடும் விருச்சிக முனி. அல்பமான நாவல் பழத்தை கட்டாந்தரையில் விட்டுவிட்டு மஞ்சனமாட நீர் வற்றிய சுனையில் குளித்துவர தற்செயலாக அங்கே ஆடிப்பாடி  வந்த  ஆரணங்கு காயூவின் தந்தக் காலடி வைத்து குழைந்து போனதாம் முனிவனின் நாவல் கனி. எவரும் அவ்வினிப்புக் கூழை, கால் வழியே  கடத்தும் காமரசத்தை வேண்டாம் என்று விலகிப் போவாரோ. இருடி, எனில் தற்பவமாக ரிஷி.    ரிஷி பேரின்பம் துய்க்கிறான் அறிவாயோ சிறு பெண்ணே. இத்தனையும் சொல்ல முகாந்திரம் உனக்குச் சொல்ல வேணாம்.இரண்டு கன கம்பீர தேக இளையோர் கூட சுகம் தேட விஞ்சையர் அணங்குபோல் அதிட்டம் உனக்கும் உண்டடி ரகசியத் தேவரடியாளே. ரெண்டில் ஒன்று நோயில் கிடக்க மற்றவன் கூடுதல் நேரம்  உடலாட்டு நடத்த வேணுமடி உன்னை திருப்தியாக்க. இருக்கட்டும்.

நேற்று ஒரு கனவு கண்டேன். சூர்ய உதயத்தில் ரெண்டு மக்களோடு நீ நடந்து போகிற ஊர் மசங்கலாக தெரிந்தது. வளநாடு. தமிழ்ப் பெயராக தெரிகிறது தானே? அந்த ஊர் உனக்கு இதயபூர்வமாகப் பிடித்துப் போக, ஊராருக்கு நீ ஒவ்வொருவருக்கும் ஆத்ம சிநேகிதி ஆகப் போகிறாய். இதற்கு மேல் ஆரூடம் சொல்ல விஞ்சயர் சட்ட திட்டங்கள் இடம் கொடுப்பதில்லை.

இன்றைக்கு நாள் முழுக்க சுருட்டுக் கிழவனாக உருமாறி தெருத் தெருவாக கார்னிவல் எனில் வசந்த விழா  கொண்டாட்டம் என்கிற பெயரில் வயிறு நிறையத் தின்று தீர்த்தாகி விட்டது. நாலு இல்லை ஆறு தடவை ஜாக்கெட் பொடேடோ தொண்டையில் எதுக்களிக்கும் வரை ஆகாரம் ஆக்கியாகி விட்டது. நிம்மி உன் ஜாக்கெட் பொடேடோ  கிடைக்குமா? சுருட்டுக் கிழவா மந்திரம் சொல்கிறேன். ஷேப் ஷிப்ட். மறை.  சுருட்டு சுந்தரம் பிள்ளை மறைந்து மாயச்சண்டிகை மாயா ஆகி விடு நீ.’சுருட்டு சுந்தரம் பிள்ளையாகவே இருந்தால் கூட உன் பின்னால் ரெண்டு பேர் தொடர்வார்கள் என்பது திண்ணம். லோகோ பின்ன ருசி. இதிலும் ஒரு ருசி உண்டு.

நிர்மலா மனதில் உரைத்தது

—————————————

என்ன, பத்து பேரோடு கூடல் அலுத்து விட்டதோ அல்லது கார்னிவல்லில் நூறுபேர் கூடி அகல நீளம் போதமின்றி சுகம் காண ரத்ன கம்ப/ளம் விரித்துக் கூப்பிடுகிறார்களா? வந்தேன் என்று கச்சை கட்டி,அல்லது கச்சை அவிழ்த்துக் கிளம்பி விட்டாயா?

வந்தது தான் வந்தாய், நாலு வருடம் கழித்து வந்திருக்கே. பெற்றுப் போட்ட ஆண் குழந்தை பற்றி கேட்டாயா? மகளாகி உரு மாறி வந்த உன் அம்மாவைப் பற்றி விசாரித்தாயா? கேட்டால் கார்னிவல் வேடிக்கை விநோதம் காண வந்திருக்கேன் என்று சர்வ அலட்சியமாகச் சொல்வது எந்த வகை ஒழுக்கத்தில் சேரும்? நீ கேட்கவில்லை என்றாலும் நான் சொல்கிறேன் –

குழந்தைகள் ஒரு துன்பமும் அன்றி நலமாக இருக்கிறார்கள். நீ முத்தச்சனிடம் கொடுத்துப் போன பொன் நகையை தேவையே இல்லை என்று ஆல்பி தீர்மானித்து அதை பத்திரமாக பேங்க் பீரோவில் வைத்துவிட்டு தன் சொந்த செலவை குழந்தைகளுக்காக சந்தோஷத்துடன் செய்கிறான். கல்லுளிமங்கை மாதிரி முழிக்கிறது தவிர வேறு ஏதாவது பாவம் முகத்தில் காட்ட மாட்டாயா? தங்க நகையை திரும்ப வாங்கிப் போய் அகண்ட கார்னிவல் ஆயிரம் பேரோடு களிக்க யோசனையா? பொன் ஆபரணத்தை பத்திரமாக வைக்க எவ்வளவு சிரமம் எடுக்க வேண்டியிருக்கு தெரியுமா? தும்பிக்கை அசைய பிரமாண்டமாக நடந்து வரும் ஆனையைக் கண் முன் இருந்து காணாமல்  போகச் செய்யும் காலம் இது. நீ மறைந்து போக நானும், நான் காட்சிப் பிழையாக நீயும் ஏங்கினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. 

ஆப்தர்கள் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து போகும் காலம் இது. இன்று காலையில் இருந்து ரெண்டு பேர் காணாமல் போய்விட்டார்கள். அவர்களைத் தேடித்தான் புத்தி கெட்டு நாலு வீதி சந்தி  மண்டபத்தைச் சுற்றி சுற்றி ஐந்து நிமிட நேரமாக நடந்து வருகிறேன்.

ஆப்தர்களைத் தேடுவதை தெருக்கோடி யெரூபா அமைதி மய்யத்தில் ஆரம்பித்தேன். நாற்காலி போட்டு நாலு பேர் சட்டமாக உட்கார்ந்து ஆளுக்கொரு திசையில் வெறித்துக் கொண்டிருந்தார்கள் அங்கே.

அவர்களில் ஒருவர் யந்திரம்போல் சொல்ல ஆரம்பித்தார் –

வாங்க மேடம். நாங்க எதையும் மந்திரவாதம் செய்து மறைக்கவோ ,இல்லாத இடத்தில்  லாஜிக் இல்லாமல் நிர்மாணிக்கவோ  செய்யறதில்லே. நேத்து ஒரு யரூபா பக்தஜன ஜோடி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க சம்பிரதாயப்படி கல்யாணம் முடிந்ததும் கல்யாண பெண்ணும் வரனும்  வெறும் வயற்றோடு ரமிக்க, படுக்கையறைக்கு வெளியே சுற்றமும் நட்பும் நல்லா சாப்பிட்டபடி சத்தம் போட்டு வாழ்த்தணும். அதை செய்ய எனக்கு விருப்பம் இல்லே. யரூபா  அனுமதி கொடுத்தது தப்பு என்று அந்தக் கல்யாண விருந்துலே ஊறுகாய் பரணியிலே ஆவக்காய் ஊறுகாயோடு மிதந்த யுரோபாகிட் டே முறையிட்டேன். உடனடியாக மன்னிப்பு கேட்டார் என்னிடம். கதவைத் தட்டி மாப்பிள்ளை – பெண்ணு ஜோடியை வெளியே வரச் சொன்னேன். மாட்டேனுட்டாங்க.  யரூபாவால் முடிந்ததை அவர் செய்வார். மற்ற தெய்வங்கள் அவங்க பங்குக்கு நல்லதாச் செய்யட்டும். என்ன நான் சொல்றது?

அந்த யெரூபா நாகரிக ஆராதகம் உலகம் இனிது என்றபடி அசுத்தமான தரையில் விரல் தொட்டு நாக்கில் வைத்துக் கொண்டார்.

அப்புறம் ஒண்ணு டாக்டர் மேடம். யரூபா வழிபாடு ரெண்டு வகைப்பட்டது. ஒண்ணு நாம் பேசிக்கிட்டிருக்கும் விரல் மண் வகை. இன்னொன்னு இங்கே இல்லாத ராஜாளி வகை. நமக்கு அடையாளம் கருப்பு வஸ்திர உடுப்பு. நல்லது எல்லாம் கருப்பு. அல்லாதது பிற எல்லாம். ரெண்டும் ஒரே கூரைக்குக் கீழே வழிபடலாம் யெரூபாவை. 

யெரூபாதாசர் அரைப் பணம் கொடுத்து ஆடச் சொன்னால், ரெண்டு பணம் கொடுத்தால் தான் ஓயற வகை.

அடுத்து யானை முழுங்கி. அவன் கிட்டேயும் நேரடியாக கேட்டேன்.என்னப்பா உன் யானையோட கூட என் புருஷனையும் விழுங்கிட்டியா?

அவன் பக்கத்தில் புகையிலைக் கட்டை மென்றபடி நின்றிருந்த நாகசுவரக்காரன் நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று நினைத்தானோ என்னவோ சுற்றிலும் புகையிலை எச்சில் தெறிக்க சிரித்தான்.

ஐயோ டாக்டர் எஜ்மானி. எஜமானை நாங்க வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறோம். ஸ்டால் உள்ளே வாங்க, ஓரு நிஜம் காட்டித் தரேன்,

அங்கே உள்ளே அல்பி உறங்கிக்கிட்டிருக்கானோ எதுக்கும் போய்ப் பார்த்துடலாம் என்று உள்ளே போனேன்.. யானைக்காரன் முதுகுப்பக்கமிருந்து யானை லத்தி வாடை தூக்கலாக அடித்தது.

உள்ளே நவராத்திரி கொலு போல் விஸ்தாரமாக ஒரு நகரத் தெருவின் மாதிரி ஓரமாக வைத்திருந்தது.

வெவ்வேறு நாட்டிலே போர்ச்சுகல், க்யாடல்ம்பா, ப்ரசீல், அவுஸ்திரேலியா இப்படி பல நாட்டுலே, இந்துஸ்தானும் இப்போ சேரப்போற மகத்தான பட்டியல் நீண்டு வரும். இங்கே எப்படியோ எஜ்மானி நீங்களோ வேறே யாருமோ கேட்கலே -கடவுளை அவமதிக்கிறது கர்த்தன் படைப்பிலே வலிமையான யானையை நீங்க கிரேஸ் சொல்லாம அப்படியே வெண்ணெய் தடவி திங்கப் போறது. இப்படி கேள்வை எழுந்தால் உடனடியாக நாங்க சொல்வதெல்லாம் இது தான் – யானை, குதிரை, காண்டாமிருகம், நீர்யானை இப்படி எந்த விலங்கையும் பார்க்கிறவன் பார்வையை கட்டுப்படுத்தி, அதாவது கண்ணைக் கட்டி அது மறைந்து போக வைப்பது. இது தெரியாமல் போலீஸ்லே புகார் பண்ணி  யானைக்கார பாப்பானும் மத்தவங்களும் காவல்லே போக வச்சுடுவாங்க சில பேர் -புடாபெஸ்ட், பாரிஸ், பீஜிங் எல்லா நகரத்திலும் ஷோ நடத்த விடாமல் தய்யத்தக்கன்னு குதிப்பாங்க. அவங்களுக்கு முதல்லே இந்த மாடலை வச்சு யானை எப்படி காணாமல் போகும்னு வகுப்பு  எடுப்பேன். 

யானையின் எலும்புக்கூடு, மேல் மற்றும் உள் தசை, வயிறு பற்றி முதல்லே பார்ப்போம்.

அடுத்த பத்து நிமிடம் ஆடி ஆடி என்று ஆடி மயம்.ஆவணி வராது போலே இருக்கு. இந்த ஆடி மிரர். ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டது. இது மாடல். அங்கே அரங்கிலே பிரம்மாண்டமான கண்ணாடிகளை வச்சு, ஆடி… 

பிய்த்துக் கொண்டு கிளம்பினேன்.

நிர்மலா – மாயா உரையாடல்

——————————————–

 அடுத்த பிரசவம் எப்போது வைத்துக் கொள்ளப் போகிறாய்? பிள்ளைப் பேறு சம்பந்தப்பட்ட சகலமானதயும் ஏற்று வாங்கி நடத்திக் கொடுக்க என்னைப் போல் அப்பாவி டாக்டர் பெண்பிள்ளை கிடைத்ததா? 

இப்போதைக்கு பிரசவ வேதனை இல்லை. அ- சாத்தியம் சட்டென்று சாத்தியமானால் இருக்கவே இருக்கிறதே இரவல், உரவல் கர்ப்பப்பை.

பை மட்டும்தான் இரவலா

நிம்மி நீயா அப்பாவி? உன் ஜோடி மூணுபேர் வரக்கூடும்,அதில் ஒன்று ஆண் இல்லை.

மாயூ, உன் புருஷர்மார்க்கு என் சுபசோபன வாழ்த்துகள்.  ஷேப் ஷிஃப்ட் ஆரம்பமா? என்  காலில் உரசிப் போகிற பூனை நீயா? 

என்ன சந்தேகம் நிம்மி. நான் வெறும் பூனை  இல்லை, மாயா . வணங்கிக்கொள்.  அடுத்த நிமிடம் ஏதோ ரசித்துத் தின்னும் வராகமகி விடுவேன், அடுத்து கல் ஆமை ஆகிக்  கடற்கரையில் 300 வயது ஆமையைச் சேருவேன். வாழ்க்கை இனிது.

அவள் போய்விட்டிருந்தாள். 

அலைந்து திரிந்து நிர்மலாவை  அறியாமல் கால்கள் வீட்டு முகப்பில் படியேறின. 

******************************************

உள்ளே மெழுகுதிரி கொளுத்தப்படாமல் கண்ணை தகிக்கும் இருட்டு அலையடித்துக் கொ/ண்டிருந்தது.

முத்தச்சி, பசங்க உறங்கற நேரம் இல்லையே. ஆகாரம் கழிச்சிட்டு உறங்கினாங்க தானே?

ஓ அவங்களை லெவி எஜ்மான் கார்னிவல் விநோதமெல்லாம் பார்க்க கூட்டி போயிருக்காங்க.அல்பி எஜமானும் உடம்பு 

நேராகி அவங்களோடபோயிருக்கார். ஆளுக்கு நாலு பெரிய சாண்ட்விச் கழிச்சிருக்காங்க எஜ்மானி. இனி நாளை டின்னர் சாப்பிட்டா போதும்

இப்படி முத்தச்சி பதில் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக  இருந்திருக்கும்.

எஜ்மானி அல்பி எஜ்மான் காணவில்லைன்னு ஆனது இன்னும் அப்படித்தான் இருக்கு. லெவி எஜ்மான் உங்களையும் அல்பி எஜமானையும் தேடிப் போனது இன்னும் வந்து சேரலே. சாண்ட்விச் கொண்டு வரட்டா எஜ்மானி.

ஒண்ணும் வேணாம். எல்லா பெயர்லே இருந்தும் எஜ்மான் எஜ்மானி மண்ணாங்கட்டி இப்படி பின்னொட்டை நறுக்கி பன்றிக்கு போடுங்க.

நிர்மலா  தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.வெளியில்

வாசலில் நிழல் தட்டியது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள்  நிர்மலா.

 லெவி. 

டேய்ய்ய்ய்யெர்ந்ந்ர்ர்ர்ஜ்ட்ட். அவளால் புரிகிற மாதிரி பேச முடியவில்லை. அவனை நோக்கி ஓடினாள்.பொதுவெளியில் கணவன் அல்லாத ஒருவனை இறுக அணைத்து இதழ்களில் முத்தமிடுவது லஜ்ஜைக்குரியதாக ஏனோ அவளுக்குத் தெரியவில்லை.

லெவியை தோள்தொட்டு அவனுக்குப் பின்னால் எதையோ  தேடினாள்.

அவன் எங்கேடா? அவன் தான் அந்த ஸ்கவுண்ட்ரல் அல்பி வாசல்லே நிக்கறானா? உள்ளே வாடா. சுவர்லே எல்லாம் கோழயும் ரத்தமும் அவன் துப்பி வைக்கறான்னு சதா சொல்லமாட்டேன். நானும் முத்தச்சியும் நீ அசௌகர்யமா நினைக்காத படிக்கு எல்லாம் செஞ்சு தரோம்.என் தாயே முத்தச்சி எஜ்மானி சரிதானே?

இல்லை.  லெவி தனியாகத்தான் திரும்பி இருக்கிறான் . ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக வாயை இறுக்க மூடி வைத்திருக்கிறான்,

லெவி வாயைத் .திற. 

நிர்மலா அவன் கழுத்தில்  பிடித்து பலமாக அசைக்க அவன் உமிழ்ந்தது ஒரு மடக்கு ரத்தத்தை.

லெவி உரைத்தது

————————

இன்றைக்கு சாதாரணமாகத்தான் விடிந்தது. (நிர்மலா அவசரமாக குறுக்கிட்டாள் -எந்தக் கதையும் சொல்லவோ கேட்கவோ நேரம் இல்லை லெவி. ஐயோ மறுபடி ரத்தம்).நேரே இங்கே வந்தா, நிம்மி குளிச்சு தலையாற்றிக்கிட்டு கொப்பும் குழையுமா (நிர்மலா இடைவெட்டு -நேர் படப் பேசு) எல்லாம் நடந்து மறுபடி குளிக்க வேண்டி போச்சு.

போகட்டும். அல்பியை மேள தாளத்தோடு ஸோம்பியாக்க  அனுப்பி வைக்க இதுதான் சரியான நாள். 

ஸோம்பி. பெயரே  புதிராக, கவித்துவமாக இருக்கு இல்லையா? நடைப் பிணம்.

அல்பிக்கும் எனக்கும் ரொம்ப ஆர்வம் இந்தப் புது அறிவியல் பிரிவுக்கு ஸோம்பாலஜி –  சராசரி மனுஷனை, மனுஷியை  ஸோம்பி ஆக்கறது. ஸோம்பியை காமன் மேன் ஆக்கறது- ரெண்டும் அல்பி சொல்ற மாதிரி ரசமானவை. அவனும் நானும்  24 மணி நேரம் இருட்டு ரூமுக்குள்ளே படுத்துக்கிட்டு  கட்டிப் பிடிச்சுக்கிட்டு ஸோம்பி பற்றி பேசமுடியும். பேசியிருக்கோம். வெளியிலே இருக்கறவங்களுக்கு நாங்க கே- ஒரு பால் இனக்கவர்ச்சிக்காரங்கன்னு தோணும். 

அல்பியும் நானும் ஸோம்பாலஜியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போக மருந்து கண்டுபிடிச்சோம், லிஸ்பன்லே இன்னொரு டாக்டர்  ரிச்சர்ட் டிக் எங்களோடு சேர்ந்துக்கிட்டார். எச்ச சொச்ச அடிமை வர்த்தகம்  இன்னும் இருக்கப்பட்ட ஸ்பெய்ன் மொரக்கோ எல்லை சிறுநகரங்களில் ரெண்டு அடிமைகள் வாங்கினோம். அதுங்களுக்கு எங்க மருந்தை வலுக்கட்டாயமாக புகட்டினோம். ரெண்டு பேருக்கும் மோசமான விளைவுகள். அப்புறம் தான் அல்பி நாமே ஜாக்கிரதையா இதை சோதிச்சுப் பார்க்கலாம்ன்னு யோசனை சொன்னது.மருந்தின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி பொறுமையோடு இந்த பரிசோதனை செய்ய இன்னும் ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும் என்று தோன்றியது.பத்திரிகை விளம்பரம் செய்தோம். வந்தவங்க ஜோம்பின்னு உச்சரித்தபோதே இவர் சரிப்பட்ட மாட்டார்னு தெரிஞ்சு போச்சு.அப்போ தான் அல்பி ஷயரோகத்தில் விழுந்தது.

இருமல் சளி குணமாக வழக்கம் போல் சென்னாவும் மூலிகைகளும் கலந்த மகாமருந்தோடு ஸோம்பா மெடிசனும் சேர்த்து தினம் மூணுவேளை  கொடுத்தோம். இது லண்டன் பிகாடலி வீதியிலே யுனானி டாக்டர்  கி துகான் மருந்துக்கடையிலே வாங்கினது என்று சொல்லி வைத்தோம். அப்புறம் நிம்மி  எதுவும் கேட்கவே இல்லை.

இந்த நிமிடம் வரை அல்பியை ஸோம்பியாக செய்து சோதனை நடத்தியது கொடுமையானது என்று எனக்குத் தோன்றவே இல்லை. என் மனசுக்குள்ளே ஒரே ஒரு ஆசை, தீராத ஆசை, நிம்மி உன்னை  அல்பியிடமிருந்து பிரிச்சு நான் கல்யாணம் செய்து அவன் முன்னாலேயே சதா கூடிக் கலக்கணும்னு ஒரு வெறி,

ஸோம்பி மருந்து போல் முக்கியமானது ஸோம்பி அகற்றி. பரிசோதனை செய்த பின் அகற்றியை உடலில் ரத்தப் பிரவாகத்தில் கலக்க வைப்பது அவசியம். அப்படித்தான் ஸோம்பி விளைவு அற்றுப் போகும்.

நான் அல்பிக்கு புகட்டிய அகற்றி தேவையான அளவுக்குக் குறைவானது. அவன் வெறும் மனிதனாக இருப்பதைவிட ஸோம்பியாக இருந்தாலே எனக்கு நல்லது. இன்று காலை அவனுக்கு வந்தனோபசாரம் செய்து ஸ்பெயின் – மொராக்கோ எல்லைக்கு அனுப்பிய போது  ஸோம்பி அகற்றி  மருந்து புகட்டவே இல்லை. 

இன்று நானும் அகற்றி மருந்து பருகாமல் போனேன்.  வைத்திருந்த சீன பரணி சுக்கல் சுக்கலாக உடைந்து போனது.வேறு ஒரு பரணி கைவசம் உண்டு. அல்பியுடையது.

எனக்கு நெருங்கிய ஆனால் வெளியே தெரியாத நாலு சைனாடவுன் சீனர்கள் சகாயத்தோடு ரெண்டு நிமிஷத்தில் அல்பியை வீட்டிலிருந்து வெளியே கொண்டுவந்து சாரட்டை சைனாடவுனுக்கு அனுப்பினேன். யானையை மறைத்து போக வைத்தாச்சு. எப்படின்னு சைனாக்காரங்களுக்குத் தான் தெரியும்.

இறப்பு என்னை மெல்ல வருடிக் கொண்டு முன் நகர்கிறதை நான் உணர்கிறேன். நிம்மி இதிலும் ஒரு ரசமுண்டு. என் ப்ரிய நண்பன் சொல்வது போல. அவனுக்கும் என் கண்மணி உனக்கும் நான் பண்ணிய துரோகம் அளவிட முடியாதது. மன்னிக்க முடியாதது.

அல்பியை நாளைப் பகல் சீன மந்திரவாதிகளும் மருத்துவர்களும் முழுக்க ஸோம்பி ஆக்கியிருக்கக் கூடும். அவனை ஓர் அடிமையிலும் கீழாக நடத்தி உடலில் உயிர், கொஞ்சம் அடிப்படை இயக்கம் நிகழ்த்த வழிவகை செய்து தொடர்ந்து கடத்தி இருக்கலாம். மொராக்கோ எல்லையில் வளநாடு நகரில் போனால் அவன் எங்கே ஏற்றுமதி ஆகியிருக்கிறான் என்று தெரிய வரலாம், அவனுக்கு நினைவுகள் ஏதெங்கிலும்  உண்டு முடித்தபின் பொங்கல் பானையில் ஒட்டியிருக்கும் சோற்றுப் பருக்கைகள் போல் வெளிப்படலாம். உன் முயற்சியாலே அவன் ஸோம்பி நிலை மாறி உன்னைப் போல் முழு மனிதனாகி விடலாம். தயவு செய்து வளநாடு செல்.

கார்னிவல் கோலாகலங்கள் வெளியில் சேர்ந்தொலிக்க, லெவி குழைந்து விழுந்தான்.

(றெக்கை நாவல் – புத்தகம்  ஒன்று நிறைவு)

றெக்கை நாவல் – புத்தகம் இரண்டு வெகு விரைவில் தொடங்குகிறது.

றெக்கை

றெக்கை- அத்தியாயம் 27

Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.