- றெக்கை – அத்தியாயம் 1
- றெக்கை – அத்தியாயம் 2
- றெக்கை – அத்தியாயம் மூன்று
- றெக்கை – அத்தியாயம் 4
- றெக்கை– அத்தியாயம் 5
- றெக்கை– அத்தியாயம் 6
- றெக்கை– அத்தியாயம் 7
- றெக்கை– அத்தியாயம் 8
- றெக்கை– அத்தியாயம் 9
- றெக்கை அத்தியாயம் பத்து
- றெக்கை– அத்தியாயம் 11
- நாவல் றெக்கை– அத்தியாயம் 12
- றெக்கை – அத்தியாயம் 13
- றெக்கை – அத்தியாயம் 15
- றெக்கை அத்தியாயம் 16
- றெக்கை அத்தியாயம் 14
- றெக்கை – அத்தியாயம் 17
- றெக்கை – அத்தியாயம் 18
’டாக்டரம்மா’
. ஊர்ப் பெரியவர்களில் ஒருத்தர் அழைக்கிறார்.
”ராட்சச வண்டிக்காரி’ – குரல்கள் காத்திரமாகச் சேர்ந்து ஒலித்தன.
டாக்டர் நிர்மலா நின்றாள்.
எல்லா வீட்டுக் கூரை மேலும் சுரைக்காய் காய்த்துத் தொங்கியதை பார்த்தபடி நிர்மலா ஊர்ப் பெரியவர்களிடம் சொன்னாள் – நான் உள்ளே போய் மரியாதை செலுத்திட்டு வந்துடறேன்.
அவளை வரவேற்கலாமா அல்லது திருப்பி அனுப்பிவிடலாமா என்று முடிவுக்கு வர முடியாமல் அவர்கள் தவித்தது தெரிந்தது. சாவு வீட்டில் வந்தவர்களை வரவேற்பார்களா என்ன?
திரும்ப ‘டாக்டரம்மா’ கூவல். வாசல் கடந்து உள்ளேயும் போகாமல், வெளியேயும் வராமல் நிற்க, அவள் பின்னால் இருந்து தேவதை தேவதை என்று மனம் கவிந்து குரலில் ஏறி வழிய அத்தனை பேரும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். குலவையும் உச்ச சப்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அருகே நிர்மலாவின் மகள் வெண் சிறகுகள் தோளிலிருந்து கணுக்கால் வரை படிந்திருக்க, கைகால் முளைத்த அன்னமாக நின்று கொண்டிருந்தாள். அவர்கள் ஆச்சரியப்பட்டது சரிதான். பறந்து வந்த உயரமான தேவதை போல் சங்கோஜத்தோடு அசைந்திருந்தாள் அவள்.
அத்தனை பெரிய ஆள்கூட்டம் நோக்கி அதிர்ந்து நிற்கத் தனிப்பட்டுப் போனாள் அந்தச் சிறுமி. அழத் தொடங்கினாள்.
அம்மா அம்மா.
”ஒண்ணும் இல்லே விசி.. உன்னை எல்லோருக்கும் பிடிச்சிருக்கு, வா-ன்னு வரவேற்கறாங்க. கையை ஆட்டி அதை ஏத்துண்டு வா’

நிர்மலாவைத் தழுவிக்கொண்டு அவளுடைய மகள் விசி என்ற விசாலாட்சி விசும்ப ஆரம்பித்தாள். தவறு நிர்மலா மேல்தான். கடந்த இரண்டு மாதமாக இப்படி மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் திடீரென அந்தச் சிறுமிக்கு வெண்சிறகுகள் முளைத்து விடுகின்றன. லேசான சூட்டில் ஒரு கோப்பை வெந்நீர் குடிக்கக் கொடுத்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை உதிர்ந்து விடுகின்றன. விழுந்த வெண் இறகுக் குவியலைத் தலையணைக்குள் பஞ்சுக்குப் பதிலாக அடைத்தால் நேர்த்தியான தலையணை தயார். நல்ல உறக்கம் தரும்.
பிரயாணக் களைப்பில் விசியின் ஆரோக்கியம் பற்றி மறந்தே போயிருந்தாள் நிர்மலா.
’விசி நம்ம வீட்டிலே போய் இரு. அஞ்சே நிமிஷத்தில் நான் அங்கே வந்துடுவேன் கிட்டா எங்கே பாரு’ . சிறுமியிடம் சொல்லி விட்டு காரை எடுத்து பாதை ஓரமாக நிறுத்த நடந்தாள் நிர்மலா.
’நிம்மு.. எல்லோரும் கேட்கறாங்க அது என்ன நம்ம பசங்களுக்கு விசி, கிட்டான்னு வித்தியாசமான பேரு?
நிர்மலாவின் கணவன் அவளை ஒரு போக ராத்திரியில் கேட்டான். நல்ல கருப்பன் அவன். அதிசயமாக, கருப்பு யூதன். டாக்டர் லெவி கோஹன். அவளுடைய இரண்டாவது கணவன் அவன்.
’எங்க குட்டநாட்டிலே இப்படித்தான் பேர் வைக்கற வழக்கம்’ – .. யூதச்சி ஆகாத அவன் அழகுப் பெண்டாட்டி இறுக அவனை அணைத்துச் சொல்வாள்.
லெவி சொல்லித்தான் விசியோடும் கிட்டாவோடும் இப்போது வலனாடு வந்திருக்கிறாள் நிர்மலா. அதெல்லாம் அப்புறம். கைப்பையைத் திறந்து வீட்டு சாவியை எடுத்தாள். கொஞ்சம் அடம் பிடித்து விட்டு வாசல் கதவு அலுத்துக்கொண்டே திறந்தது.
‘விசி-ம்மாடி டியர்.. ரெண்டே மினிட். பக்கத்து வீட்டுக்கு ஓடிப் போய்ட்டு வந்துடறேன். இன்னும் எத்தனை காலம் நமக்கு அண்டை வீட்டாராக இருக்கப் போறாளோ. ரெண்டு நிமிஷம் அவாளை பார்த்து துக்கத்தை பகிர்ந்துண்டா நாகரீகமா இருக்கும், சம்ப்ரதாயம் அதான்.புரியறதா?
கைப்பையை விசியிடம் கொடுத்து விட்டு வெளியே ஓடினாள் நிர்மலா. அவள் வருகைக்காகக் காத்திருப்பது போல எல்லோரும் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள் அடுத்த வீட்டில்.
நிர்மலா அரை வெளிச்சத்தில் கண்களை இடுக்கிப் பார்த்தாள். உள்ளே மண் சுவரை ஒட்டி ஒரு கயிற்றுக் கட்டில் கிடந்தது. அதிலே படுத்திருந்தவன் கண்கள் மூடியிருந்தாலும் அவன் வலது கை ஆள்காட்டி விரல் வானம் நோக்கிச் சுற்றி ஏதோ சைகை செய்தபடி இருந்தது.
வாயில் கோகோ கொட்டையை அதக்கிக் கொண்டு கன்னத்தில் எச்சில் வடிய விட்டபடி நிர்மலாவுக்குப் பின்னால் வந்தவன் ’அம்மா செருப்பை வெளியே விட முடியுமா’ என்று அவளிடம் சன்னமான குரலில் வேண்டிக் கொண்டான்.
அவசர அவசரமாகக் காலணிகளை அகற்றியவள் அவற்றைக் கையில் எடுக்க, வாசலில் திரும்ப தேவதை தேவதை என்று ஊரே பாடியது. அங்கே விசி தான் நின்றிருந்தாள். சிறுமிகளுக்கே பிரத்தியோகமான புன்னகை. வயதுக்கு வந்த சின்னப் பெண்ணின் சிரிப்பு இல்லை அது.
அக்கச்சியின் கையைப் பற்றிக்கொண்டு கிட்டா தோளில் இருந்து வழியும் இறக்கைகளோடு நின்றான்.
’குட்ட்டீ உன்னை ஆத்துலே இருக்கச் சொன்னேனில்லயோ.’ குழந்தைப் பெண்ணை நிர்மலா செல்லமாகக் குறை கூறினாள். “ஏண்டா கிட்டா உன் அக்கச்சியை நீ தான் கவனிச்சுக்கணும்
’’அம்மா நான் தான் விசியை இங்கே வரச் சொன்னேன். எனக்கும் அவளுக்கும் ஹால் உத்தரத்துலே தலை இடிக்கலே. போய் நின்னு நடந்து பார்த்துட்டோம். சமையல்கட்டுலே தான் ரெண்டா உடம்பை மடிச்சு நுழையணும்.. போனாப் போறது போ’.
கிட்டா சொல்லி முடிப்பதற்குள் அடுத்த வீட்டுக்குள்ளும் வெளியில் மர பெஞ்சுகளிலும் இருந்தவர்கள் அசுரன் நல்லசுரன் என்று கை அசைத்து அந்தப் பையனை வரச் சொன்னார்கள்.
ஓய்ய்ய்ய்ய்ய்ய்
கட்டிலில் படுத்திருந்தவன் கூவியபடி நோய் அகன்றதாகக் கை அசைத்து எழுந்து உட்கார எங்கும் சிரிப்பு பரவியது.
’கிட்டா, வா, இருட்டிண்டு வருது, நம்மாத்துக்குப் போகலாமா?’
நிர்மலா குரல் உயர்த்திக் கேட்டது அவளது குடும்பம் குடியிருக்கத் தொடங்கிய தகவலைப் பொதுவில் வைத்தது. தூய வெண்நிறச் சிறகுகள் இடுப்பில் மடித்துத் தொங்க அந்தச் சிறுவன் வந்துட்டேனம்மா என்று இருகை உயர்த்தி நின்றான். அடுத்த வினாடி அவனை இங்கே காணோம். தன் வீட்டு வாசல்படி ஏறி நின்றபடி சிரித்தான். அம்மா வா பசிக்கறது.
அந்த வீட்டுக் கதவுகள் சாத்திக் கொண்ட ஒலிக்கு நடுவே விசி குழந்தைகளுக்கான பாடல் ஒன்றை இனிமையான கள்ளக் குரலில் பாடியது வெளியே கசிந்தது. ஜன்னலைச் சார்த்தியபடி நிர்மலா அவளை நிறுத்தச் சொன்னதோடு தேய்ந்து முடிந்தது.
“குட்டீம்மா சாப்பிட்டு படுத்துக்கலாம் டீ செல்லம்”
”அவ்வளவுதான் இப்போ நம்ம வேலையை பார்ப்போம்” – ஆகப் பெரிசு ஒருத்தர் டாக்டர் வீட்டுக்குள் பார்த்தபடி சொன்னார். படுத்தோன் சிரித்தான்.
“ஆமா, இன்னும் அஞ்சு நிமிஷம் நீ படுத்துக் கிடந்திருந்தா நாங்க எல்லோரும் உன் சாவுக்கான கொண்டாட்டமாக இன்னிக்கு மீதிப் பொழுதைக் கழித்திருப்போம்”. .
படுத்தோன் மனைவியாக தென்பட்ட இளம்பெண் சொன்னாள். பெண்டாட்டி இல்லை, மச்சினியாம். அவளை முத்தமிட்டுக் கலக்க ஆர்வம் எல்லை தாண்டிப் போக படுத்தோன் “ ஒண்ணு மட்டும்’’ என்று ஈயென இரந்தான்.
’சரி எழுந்து வா. அதைப் பார்க்கவும் ரசமாக இருக்கும், சாவு வரக் காத்திருந்து காத்திருந்து விருந்து தின்னு அலுத்துப் போனோம்’. சொன்னவளின் உடல் கருப்பு மின்ன, வடிவாகத் திரண்டு இருந்தது.
அவன் சங்கடத்தோடு சிரித்தான். ஓங்கு தாங்கான அவள் அசைந்து சற்றே நெஞ்சுயர்த்தி, வாவாவா என்று பசித்த உடலோடு அவனை எழுந்து வரச் சொன்னாள். ‘
”எனக்கு சிறகு முளைச்சா எப்படி இருக்கும்?’ வளமான மார்பை எவ்வி நிறுத்திக் கேட்டாள் மச்சினி
.”உனக்கு மூணாவதாக கொம்பு தான் நடுவிலே முளை விடும்”
பக்கத்தில் ஆர்வத்தோடு ஒட்டுக் கேட்டபடி பந்தலில் திருடிய சுரைக்காயோடு நின்ற குலவைக் கிழவி ஒருத்தி சத்தம் தாழ்த்தி உலுலுலுலு என்று சும்மா பேருக்குக் குரல் பிசிறடித்த தனிக் குலவை இட்டாள்.
கொஞ்ச நேரம் சும்மா தரையில் அமர்ந்து கால் நீட்டி இருந்த படுத்தோன் எல்லார் பார்வையும் தன்னில் நிலைக்க, முகம் முகமாகப் பார்த்தான்.
‘எவ்வளவு நேரம் பிரக்ஞை இல்லாம கிடந்தே?” விசாரித்த ஒப்புக்கு ஒலுலுலுலு போட்ட கிழவி வாயில் சவைத்துக் கொண்டிருந்த வாதாம்பருப்பை விழுங்கி வைக்க அடுத்த பத்து நிமிடம் அவளுக்குச் சிஷ்ருஷையில் போனது. ஆர்வக் கோளாறு காரணம்.
‘உள்ளே போய் மைத்துனி கோக்கோ கொட்டைகள் நிரம்பிய மரத்தட்டோடு வந்தாள். எல்லோரும் லாகிரி வஸ்து உபசாரத்தை அங்கீகரித்துத் படுத்தோன் சொல்வதைக் கேட்க ஆர்வமாக தரையில் உட்கார்ந்திருந்தார்கள். அவன் கரகரத்த குரலில் பேசத் தொடங்கினான்.
’எவ்வளவு நேரமாவா? சரியாகப் போச்சு எத்தனை தினம் அப்படீன்னு கேட்டிருக்கணும். மூணு முழு நாளும், இன்னிக்கு . கொஞ்ச நேரம் முன் வரைக்கும், முக்காலே அரைக்கால் நாளும் நான் இங்கே இல்லாமல் போனேன் எங்கே போனேன்னு கேட்டால் யெருபா தெய்வம் சிருஷ்டிச்ச உலகத்திலே, அதாவது எனக்காகாக் கட்டி நிறுத்திய பேருலகத்திலே அலைந்து திரிந்தபடி இருந்தேன். நான் வெண்கோபுரங்களும் நீல நிற நீர் பெருகி அலையடிக்கும் தடாகங்களும் பசுமை அடர்ந்து நிற்கும் வயல் பரப்புகளும் நிரம்பிய பெரும் வெளியில் திரிந்து கொண்டிருந்தேன்.
“போச்சுடா மறுபடியும் புரியாம பேச ஆரம்பிச்சுட்டான்,”
முகத்தை அஷ்ட கோணலாக்கி கடைவாயில் சிக்கிக்கொண்ட பருப்பின் துகளை நாக்கால் விடுவிக்க பிரயத்தனம் நடத்திக் கொண்டிருந்த பெரியோன் குறிப்பிட்டான். ஆடிக் கொண்டிருந்த கடைவாய்ப் பல்லைக் கெல்லி எடுத்துக் கொண்டு துகள் தரையில் விழ கூட்ட நகைப்புக்கு இடையே படுத்தோன் தொடர்ந்தான்.
’பெரிசு, போனா போகுதுன்னு நான் பார்த்தது, கேட்டது,தொட்டது, பயந்தது, அதிசயப்பட்டது, தின்னது, குடிச்சது எல்லாம் மனசுலே நிரம்பி இருக்கு. கஷ்டப்பட்டு அதை நினைச்சுப் பார்த்து என் நேரத்தையும் வீணாக்கிட்டிருக்கேன். பெரிய மனுஷாள் அடுத்த வீட்டுலே குடியேறியிருக்காங்க.விசாரிக்கப் போகக் கூட முடியலே’. படுத்தோன் அங்கலாய்த்தான்.
‘சாவை சந்திக்கப் போய் அதிர்ஷ்ட்ட வசமா உன்னைப் போல திரும்பி யாராவது வந்தா, கஷ்டமோ சுகமோ நீ அனுபவிச்சதை புரிஞ்சுக்கற மாதிரி ஊர்ப் பொதுவிலே விவரம் சொல்லணும். அப்போ உனக்கு யொரூபா தெய்வ கடாட்சம் பூரணமா வரும். நான் சொல்லித்தான் தெரியுமா?.
’’சரி சொல்றேன்’ வாசலுக்குப் போய்க்கொண்டிருந்த மச்சினியின் பின்னழகில் ஈடுபட்டபடி உரத்த குரலில் சொன்னான் படுத்தோன். குரல் காத்திரமாக ஒலிக்கப் பேசலானான்.
’நான் நேத்து இங்கே படுத்த படுக்கையா இருந்தபடி பயணம் போனபோது பச்சைப் பசேல்னுப் பயிர் செய்த வயகள் அடுத்தடுத்து கண்ணுக்கெட்டின தூரம் வரை இருந்ததை கண்டேன். வயல் ஓரம் வாய்க்காலோ இல்லேன்னா வாய்க்கால் கரையெல்லாம் வயலோ,நிரஞ்சிருந்தது. ஒத்தையடி நடைபாதையிலே கொஞ்சம் நடந்து ஒரு வயல்லே இறங்கினேன். பயிர் பண்ணியிருக்கற தானியம் என்னன்னு குனிஞ்சு கையிலே எடுத்துப் பார்த்தேன். ஏம்மான்னு ஏதோ பாஷையிலே சொல்லிக்கிட்டே யாரோ ஓடி வந்தாங்க.
அம்மா புண்ணியமா போறது. பயிர் அறுவடைக்குப் போகிற நேரம். இப்படி இங்கே பிடுங்கினா மனசுலே ரத்தம் வருது’
நிறைய மிகையாக அவன் ஏதோ சொல்வதாக அவனது கை அபிநயம் காட்டியது. போகட்டும் போ என்று திரும்ப ஒற்றையடிப் பாதையில் மறுபடி நடந்தேன். அதென்ன என்னை அம்மான்னு விளிக்கறான்.
“நிறைசூலியா இருந்துக்கிட்டு இம்மாந்தூரம் தனியா, பாதையில்லாத பாதையிலே போய்க்கிட்டிருக்கியே யாரு நீ?
அவன் என்னைப் பார்த்த பார்வையிலே நேசம் இருந்துச்சு.
.நிறைசூலியா? அடிவயிற்றைக் குனிஞ்சு பார்த்தேன். கர்ப்பஸ்திரி ஆகியிருந்தேன்.
கதை நின்றது. படுத்தோன் என்ற சாமு உறங்கி இருந்தான்.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
