நாவல்  றெக்கை– அத்தியாயம் 12

This entry is part 12 of 19 in the series றெக்கை

வைத்ய ரத்னா தங்கவேலு அய்யங்கார் கையில் ஏதோ தலகாணி புஸ்தகத்தோடு வலனாடு முனிசிபல் அலுவலத்துக்குள் அடியெடுத்து வைத்தபோது உச்சி வெய்யில் நேரம்.      

சித்திரம் : ஷங்கரா

நகரசபை கட்டிடமே காலியாக இருந்தது. அங்கத்தினர்கள் எல்லோரும் விஸ்தாரமான பின்னறையில் மதிய உணவு உண்டுகொண்டிருந்தார்கள். ஜெசிக்கா தான் அய்யங்காரை முதலில் பார்த்தது, எச்சில் கையோடு வெளியே வந்து அந்தப்படிக்கே வரவேற்று சுமாரான காலாட்டம் உள்ள மர நாற்காலியை இழுத்து வந்து அவரை உட்காரச் செய்தாள்.

உக்காருங்க தவக்கெ ரெண்டு வாய் அள்ளிப் போட்டுகிட்டு வந்திடறேன் –  சோற்று பருக்கைகள் உதிரும் முகவாயோடு  இருந்தாள்.

ஜெசி பொண்ணே உங்க தலைவர் எங்கே?

அவள் பின்னால் பார்த்து கேட்டாள் – எந்த தலைவர் தவக்கெ?வீட்டு மனுஷரா, வெளியே இங்கே மனுஷரா?

அவர் பதில் சொல்வதற்குள் பின்னறைக் கதவு சாத்தப்பட்டது.

மதிய உணவு இன்னும் முடிந்தமாதிரி இல்லை 

பேசிக் கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். தேசத்துரோகி சொன்னான் –

வைத்தியர் எல்லா சீக்குக்கும் மருந்து வச்சிருக்காறாம், மெலில்லா நகரம் போய் பெரிசா பந்து பந்தாக ஏழெட்டு கண்ணாடி போத்தல் வாங்கி மருந்து கலக்கி வச்சிருக்கார். ஒண்ணொண்ணும் ரூத்

அவன் சங்கடப்பட்டு மேலே பேசாமல் நிறுத்தி ஜெசிக்காவை பார்த்தான். அத்தனை அங்கத்தினர்களும் ஜெசிக்காவை பார்த்தார்கள். சொன்னாள் –

என் சிநேகிதி – எதிரி ரூத்துக்கு அமைஞ்ச மாதிரி அமைஞ்சதா?

ஏக காலத்தில் எல்லோரும் சிரிக்க, ஜெசிக்கா கொஞ்சம் லாஜிக்கோடு நாணி இருந்தாள். வெகு வேகமாக கதவு திறந்தது, வலநாடு நகராட்சி தலைவர்.

ஒரு லெக்குக்கு போக வேண்டியிருந்தது. அதுலே தாமதமாச்சு

மர அலமாரிக்குள் இருந்து அவரது சோற்று மூட்டையை எடுத்து வந்தார்.

அண்ணன், வைத்தியர் வந்திருக்கார். தேசத்துரோகி எச்சல் கையோடு மரியாதை செய்து, சொல்லியிருந்தான்

பார்த்தேன். ரெண்டு நாளாக கையில் பாம்பு பஞ்சாங்கத்தோடு என் பின்னாடியே வந்திட்டிருக்கார். என்னமோ கேட்கிறார் -ஒண்ணும் விளங்குவதில்லே.

அப்படியா? தேசத்துரோகி ஆர்வத்துடன் கேட்டான்.

அவர் பதில் சொல்வதற்குள் கதவை  தட்டும் ஓசை. வைத்தியர் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்.

அங்கே இருந்தவர்கள் தர்ம சங்கட முகபாவம் அணிந்து தரை நோக்கினார்கள். அறைக்கதவு மட்டமல்லாக்காக திறக்கப்பட்ட பெரிய படுக்கை அறைக்குள்  கிடந்து ஓய்வெடுப்பவர்கள் அணியும் குற்றம் இழைத்த பாவனை எதற்கு தயிர் சாதம் சாப்பிட?

நகரசபை தலைவர் இறுக்கமாக இருந்த அந்தப் பின்னறைச் சூழலை நெகிழ்த்தினார் – சாப்பிடறீங்களா அய்யா மீன் கொழம்பு கொண்ணாந்திருக்கேன்

நீங்க சாப்பிடுங்க. இந்த வைத்தியன் மீன், மாமிசம் தின்ன முடியாது.

நகரசபைத் தலைவர் கை அலம்பப் போனபோது பின்னாலேயே போனார் வைத்தியர்.

என்ன வேணும் ஐயா எனக்கு நீங்க சொல்றது காதில் விழுந்தாலும் வாயிலே நுழைய மாட்டேன்கறது.

திரிதினஸ்பிக்ஸ்.  

ஆமா அதே தான். இது  இந்த வருஷம் தமிழ் பாம்பு பஞ்சாங்கத்திலே ஆடி பதினெட்டு பத்தொன்பது தேதிக்கான  தகவல்களோடு அச்சடிச்சு வந்திருக்கு. அதனால் இது பொய்யாக இருக்காது. ஏதோ மத விசேஷம் இந்த திரிதினஸ்பிரிக். என்ன நினைக்கறீங்க?

வைத்தியரே, நான் இதுலே எங்கே வந்தேன்?

நீங்களா? நகரத்துக்கே தலைவர். எல்லாம் அறிந்தவர். எண்ணற்ற புத்தகங்களை படித்து மேதாவியானவர். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இல்லேன்னா தெரிந்த யாராவது சொல்லக் கேட்டு வருக,

வைத்தியரே, இதிலே நீங்க எங்கே வந்தீங்க?

வைத்தியம் செய்யறது சிரமமான வேலை. அஷ்டாவதானம் மாதிரி. ஒரே நேரத்துலே பல காரியங்கள் காரணங்கள் அவதானிச்சு போகவேண்டி இருக்கு. மருந்து கலக்க நாள் நட்சத்திரம், மூணாம் பிறை, சேர்ந்து துக்கம் கொண்டாடற வெள்ளிக்கிழமைக்கு முந்தைய வாரம் இப்படி வரும். 

இந்த திரிகுண பிஸ்கெட்?

அது பிஸ்கட் இல்லை. திரிதின ஸ்பிரிக் என்றார் வைத்தியர் நேசத்தோடு.

நாளைக்கு மெல்லிலா நகரம் போறேன். அங்கே லைபிரரியிலே. ஆர்வமாக இடைவெட்டினான், வேறே யார், 

அதெல்லாம் வேணாம். அங்கே மலையளவு புத்தகம் இருக்கு, நீங்க  எறும்பு கல்கண்டை புற்றுக்கு உருட்டிப்போக நினைச்சமாதிரி அத்தனை நூலும் உடனே படிச்சு சமாசாரம் சாராம்சம் என்னன்னு சொல்வீர்களோ. 

நகரசபை தலைவர் அவனை விலக்கினார். வைத்தியர் புன்சிரித்தார்,

நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன் என்று புறப்பட ஆயத்தமாக குடையை கக்கத்தில் இடுக்கிக் கொண்ட வைத்தியர் சட்டென்று சுத்த ஜோதி  தலையைச் சுற்றி சுழன்றதாக அ-காட்சி உணர்ந்தார்.

எவ்வளவு முக்கியமும் அவசரமுமான காரியம். அதை சொல்லாமல் பஞ்சாங்கம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்துட்டேன்

வைத்தியர் எதற்கோ நகராட்சி தலைவரோடு கை குலுக்கினார்.

ரொம்ப முக்கியமான விஷயம்னா அவங்களையும் இருக்கச் சொல்றேன். வீட்டுக்கு போய் பகல் தூக்கம் தானே போடப் போறாங்க 

-நகரசபை தலைவர் கூறினார்.

(கிழவன் இன்னிக்கு ஒரு முடிவோடு வந்திருக்கான். நான் தான் மாட்டிக்கணுமா, பயபுள்ளைங்களா, வீட்டுலே போய் பகல் தூக்கம்தானே போடப்போறீங்க. அதை இங்கேயே செய்யுங்கடா)

வைத்தியர் எழுந்து நின்று சபைக்கு வந்தனம் சொன்னார். தலைவர் அவருடைய வேலைப்பாடுகள் அமைந்த நாற்காலியில் இருந்தபடிக்கே சுருக்கமாக அவரை வரவேற்று பேசச் சொன்னார்.

(வைத்ய ரத்னா தங்கவேலு அய்யங்கார் வலனாடு நகரசபை தலைவர் மற்றும் அங்கத்தினர்களுக்கு நிகழ்த்திய பேருரையின் சுருக்கம் இது)

சென்ற ஆண்டு இதே மாதம் முதல் திங்கள்கிழமை நகரசபை தலைவரிடம் வலநாடு சிறுநகருக்கேயான கோவில் ஒன்று அமைக்க நகரசபை நிலம் நன்கொடையாகத் தர கோரிக்கை வைக்கப்பட்டது. நேரம் கடத்தாமல் அதனை ஏற்று சர்க்கார் தரிசில் ஒரு ஏக்கர் கோவிலுக்காக ஒதுக்கிய தலைவருக்கு எங்கள் நன்றி.

கோவில் வேலைகள் முன்னேறி வருகின்றன. மெயின்லேண்டில் மதறாஸ் பட்டணத்தில் உள்ள பெரிய சிற்பிகளிடம் கோவிலுக்கான விக்ரகங்கள் விலை விசாரித்து, மகாபுலிபுரம் ஊரில் வசிக்கும் பிரம்மநாராயண ஸ்தபதி அவர்களிடம் வாங்க தீர்மானிக்கப்பட்டது. 

நின்ற கோலத்தில் சுப்பிரமணியன் மற்றும் அமர்ந்த திருக்கோலத்தில் விநாயகர்,  சிவபெருமான், பராசக்தி இவர்களின் நான்கடி உயர விக்ரகங்கள் 
பெற்றுக்கொள்ளவும் தீர்மானமானது. இந்த விஷயமாக ஸ்தபதிக்கு பிரிட்டீஷ் பவுண்ட்கள் ஈராயிரத்து நூற்றொண்ணு தொகை அளிக்கப்பட்டது.  

அதிக காலம் எடுக்காமல்   கடல் மார்க்கமாக பாதுகாப்போடு விக்ரகங்கள் மெயின்லாண்ட் மதறாஸ் பட்டணத்திலிருந்து பத்திரமாக வலனாடு வந்து சேர்ந்தன. எடுத்து வைக்கும்போது தான் தெரிய வந்தது – நமக்கு அருள் பாலிக்க வந்தவர்கள் விநாயகர், சரஸ்வதி, சிவன், சுப்பிரமணியன்.  

பார்வதி வரவில்லை. பதிலாக வீணை மீட்டியபடி, சரஸ்வதி. எப்படி திட்டமிட்டபடி கோவிலை நிர்மாணிப்பது? கர்ப்பகிரஹத்தில் வீணையோடு சரஸ்வதியை எங்கே வைக்கலாம்? பாதி உடலை பார்வதிக்கு அன்பளித்த பரமசிவன் பக்கம் யாரை அமர்த்துவது?

அடுத்த மாதம் கட்டுமான வேலைகள் முடிந்து கோவில் வழிபாட்டுக்காக திறக்க திட்டம். அந்த தினம் அஷ்ட்மி, நவமி, வடக்கே சூலம் எதுவும் இல்லாமல் தூய்மையான நாள். அதை விட்டால் இன்னும் நான்கு மாதம் நல்ல நாள் வரக் காத்திருக்க வேண்டும். பராசக்தி இல்லாத சிவன் குடும்பத்தை என்ன செய்ய?

கோவில் அமைப்பு குழுவிடம் இந்தப் பிரச்சனையை சொன்னால் அவர்களுக்கு அதன் தன்மை புரியவில்லை. 

குழுவில் பத்துக்கு ஏழு பேர் இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளராக வலநாடும் மற்றும் ஃபிஜியும், மொரீஷியஸ்ஸும் வந்தவர்களுக்கு அடுத்த தலைமுறை தமிழர்கள். மதறாஸ், மதுரை, நெல்லை, கோவை என்று சுற்றுலாவாகக்கூட மெயின்லாண்ட் போனவர்கள் யாரும் இல்லை. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் அநேகமாக எல்லோரும் தட்டுத் தடுமாறி தாய்மொழி பேசக்கூடியவர்கள். இங்க்லீஷிலும் க்ரயோலிலும் பொழியக் கூடியவர்கள்.

என்ன உங்கள் பிரச்சனை டாக்டர் தாத்தா 

கோவில் நிர்வாக குழுவினர் சூயிங் கம் மென்றடி கேட்பார்கள் கேட்டதும் ’ . ’இதெல்லாம் பெரிய சமாசாரமில்லை’ என்ற தோரணையோடு  பதில் வரும் – 

பரமசிவன் உட்கார்ந்துக்கட்டும். அடுத்து மடியிலே வீணையோடு சரஸ்வதியை உட்கார வைக்கலாம். ரெண்டு பக்கத்திலும் கணபதியையும் முருகனையும் நிற்க வைத்தால் Bob’s your uncle.

என்   குடும்பத்தை சித்திரமாக  வரைய உத்தேசித்தால், என் பக்கத்தில் உட்கார  என்  பொண்டாட்டியை கூப்பிடுவேனா,அடுத்த வீட்டுக்காரியை அழைப்பேனா? 

என்னை கேட்டால்? 

அட அதில்லே’பா. செய்யறதிலே ஒரு இங்கிதம் இருக்க வேணாம்?

வைத்தியர் நகரசபை தலைவருக்கு சொன்னது அவ்வளவே.

ஈதிப்படி இருக்க, அடுத்த வாரம் கடல் அஞ்சலாக ஒரு கனமான பார்சல் வைத்தியர் முகவரிக்கு மதறாஸிலிருந்து வந்து சேர்ந்தது. பார்வதி.

பார்வதி தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சேர்ந்து விட்டாள். சரஸ்வதி ஒற்றைப்பட்டுப் போனாள். வைத்தியர் அவள் கணவன் பிரும்மதேவனை வலநாடு-க்கு வரவழைக்க முயன்று கொண்டிருக்கிறார்.

தொடரும்

றெக்கை

றெக்கை– அத்தியாயம் 11 றெக்கை – அத்தியாயம் 13

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.